தமுஎகச – 16ஆவது மாநில மாநாடு தஞ்சை அழைக்கிறது, வருக நண்பர்களே!

இதோ ஒரு பண்பாட்டுத் திருவிழா!








மாநாட்டு மைய முழக்கம் -
வெறுப்பின் கொற்றம் வீழ்க
அன்பே அறமென எழுக!
-----------------------------------------

எம்.ஜி.ஆர்.படங்களில் நானறிய ஒரே ஒருபடத்தில் 

ஒரே ஒரு பாடலுக்குத்தான் அவரது இயல்பை மீறி,  

ஒரே இடத்தில் உட்கார்ந்தும், நின்று கொண்டும் பாடுவார்.

ஏனெனில் அந்தப் பாடல் வரிகளின் கனம் 

தனது - கைகளை மேலே தூக்கி, ஓடி ஆடும் நடிப்பால்

 கவனிக்கப்படாமல் போய்விடும் 

என்று நினைத்திருப்பார் போல! (என்ன கவனம்!)

அந்தப் படம் – படகோட்டி

அந்தப் பாடல் – தரைமேல் பிறக்க வைத்தான்

வாலி எழுதிய இன்றும் வாழும் வரிகளுக்கு,  

இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி

அதுபோல

வழக்கமாக ஏதாவது எழுதியபின் பதிவிடும் நான்

எதுவுமே எழுதாமல் பதிவிடுவது இந்த நிகழ்வின்

கனம் குறைந்துவிடக் கூடாது என்பதால்தான்

வருக நண்பர்களே!

மாநாடு – தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மட்டும்தான் அரங்கில் இருக்க முடியும் எனினும் நாள்முழுவதும் பார்க்க, ரசிக்க, குறிப்பெடுக்க, மாலையில் தினமும் நடக்கும் கலை-நிகழ்வுகளைக் காண நீங்கள் அனைவரும் வரலாம். 

அரங்கிலும் சில நிகழ்வுகள் 

பொதுவாக அனைவரும் அரங்கில் வந்து 

பார்க்குமாறும் உள்ளன 

தினமும் மாலை நிகழ்ச்சிகள் 

வெளி அரங்கில்தான்!

மேலே உள்ள அழைப்பிதழில் 

அந்த விவரம் காண்க.

விழாவில் - மாநாட்டு சிறப்பு மலர் வெளியீடும் உண்டு!

 முக்கியமாக 6-12-2025 அன்று என் தலைமையில் நீதியரசர் சந்துரு அவர்கள் பேசும் நிகழ்வும், அன்றிரவு பிரளயன் இயக்கத்தில் திரைக் கலைஞர் ரோகிணி அவர்கள் நடித்து அண்மையில் வந்த வனப்பேச்சி பேரண்டச்சிஎனும் “புதுமையான மிகச்சிறப்பான நாடகம்” என்று       ஊடகங்களால் பாராட்டுப் பெற்ற நாடகம் பார்க்க -                        

வருக வருக என அன்போடு அழைக்கிறேன். வணக்கம்

 (தேவைப்படுவோர் தெரிவித்தால் புலன -வாட்சாப்- வழி

அழைப்பிதழை அனுப்புவேன். நன்றி) 

மற்றவை நேரில்

-----------------------------------------

“உண்மை” இதழில் எனது தொடர் ' வாழ்வியல் தமிழ்'

     

        உலகளவில் சமத்துவ (Socialist) கருத்துகளைப் பரப்புவதற்கென நிறைய இதழ்கள் பொதுவுடைமைக் கட்சிகளால் நடத்தப் படுகின்றன. அதில் நாத்திக (Athiest) கருத்துகளும் அவ்வப்போது வரும்.

ஆனால், உலகிலேயே நாத்திகக் கருத்துகளுக்கு முதலிடம் தந்து சமத்துவக் கருத்துகளையும் பரப்புவதற்கென ஒருசில நாளிதழ்களே வருவதாக நினைக்கிறேன். அய்யா கி.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு, பல்லாண்டுகளாக வரும் நாளிதழ் விடுதலை நாளிதழாகும்.

உலகில் சமத்துவ அரசியல் கொண்ட நாடுகள் பல உள்ளன. சீனா, வடகொரியா, லாவோஸ், கியூபா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அப்படி சமத்துவ அரசியல் கொண்ட நாடுகளாகும்.

இவை தவிர நாத்திகக் கருத்துக் கொண்ட மக்கள் உலகெங்கும் – முதலாளித்துவ ஆட்சியிலும் கூட – வாழ்கிறார்கள். அப்படியான சில நாடுகளின் பட்டியலைப் பார்க்கலாம்-                                    

நாடுகளின் பெயர், அங்கு வாழும் நாத்திகர் விழுக்காடு

சீனா

91%

ஜப்பான்

86%

ஸ்வீடன்

78%

செக் குடியரசு

75%

இங்கிலாந்து (UK)

72%

பெல்ஜியம்

72%

எஸ்டோனியா

72%

ஆஸ்திரேலியா

70%

நார்வே

70%

கூடுதலாக, வட கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அதிகாரப்பூர்வமான நாத்திக அரசுகளாகும்.

“இந்த நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கைகளை கொண்டிருக்கவில்லை அல்லது மதம் தங்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்று கருதவில்லை என்று கூகுளார் கூறுகிறார். உண்மையில் இவற்றைவிடவும் பொதுவுடமைக் கருத்துக் கொண்டோரும் நாத்திகக் கருத்துக் கொண்டோரும் வாழும் முதலாளித்துவ நாடுகள் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்பது என் கருத்து, நாம் வாழும் இந்தியாவைப் போல!

திராவிடர் கழகத் தலைவர்களில் ஒருவரான நமது மதிப்பிற்குரிய வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் ஒரு விவாதத்தில் சொன்னது எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் தந்தது –

அவர் சொன்னார், ‘நாத்திகர்களை நீங்கள் சிறுபான்மையினர் தானே என்று சொன்னீர்கள்! உண்மையில் நாம் வாழும் உலகில் நாத்திகர்கள்தான் அதிகம்” என்றார்! கேள்வி கேட்டவரும், நிகழ்ச்சியின் பார்வையாளரும் உண்மையில் வியந்துபோய்ப் பார்த்தோம். 

அவரே தொடர்ந்து சொன்னார் – அல்லாவை நம்புகிறவர்கள் மற்ற கடவுளை நம்புவதில்லை, கிறிஸ்துவை வணங்குகிறவர்கள் மற்ற கடவுள்களை வணங்குவதில்லை. இந்து மதத்தைத் தீவிரமாக நம்புவோரும் மற்ற மதத் தெய்வங்களை ஏற்பதில்லை. இப்படி ஒரு மதநம்பிக்கை உள்ளவரும் மற்ற மதக் கடவுளை வணங்காத நாத்திகர்தானே?” என்று கேட்டார்! உண்மைதானே? அப்படிப் பார்த்தால் அனைவரும் நாத்திகர்தானே? எனவே நாத்திகர்களை அதிகம்  கொண்ட உலகில், அதைப் பரப்ப நாம் அனைவருமே கடமைப்பட்டவர் தானே

அடடா! என்ன அருமையான மறுக்க முடியாத விளக்கம்?!

இது நிற்க.

தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு, திராவிடர் கழகத்தால் தொடர்ந்து நடத்தப்படுவது விடுதலை நாளிதழ். மற்றும் உண்மை இதழ். இது நாத்திகர்களால் நாத்திகத்தைப் பரப்புவதற்காகவே நடத்தப் படும் மாதம் இருமுறை இதழ்.

நானும் ஒரு நாத்திகன் மற்றும் சமத்துவன் என்பதால், உண்மை இதழில் எழுதச்சொல்லி, திருச்சி தோழர் வி.சி.வில்வம் அவர்கள் கேட்டதும் ஒப்புக் கொண்டு, வாழ்வியல் தமிழ் எனும் தொடரை, கடந்த நவம்பர்-1-15 முதல் உண்மை இதழில் எழுதி வருகிறேன்.

இப்போது வாருங்கள் வாழ்வியல் தமிழ்படிப்போம் –





நண்பர்கள் தொடர்ந்து இதழை வாங்கிப் படித்து, எனது தொடர் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதோடு தொடரில் என்னென்ன எழுதலாம் என்றும் எனக்கு யோசனை சொல்ல வேண்டுகிறேன். நல்ல யோசனைகளை அவரவர் பெயரிட்டே எழுதுவேன் என்பது இந்து தமிழ் நாளிதழில் நானெழுதிய “தமிழ் இனிது”தொடர் படித்தவர்க்குத் தெரியும்.

நன்றி

----------------------------------------- 

கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் அற்புதமான சுழலும் கவியரங்கம்

  

புதுக்கோட்டை

எட்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவின்

சிறப்பான வரவேற்பைப் பெற்ற

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத் தலைவர்

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்

தலைமையில்

சுழலும் கவியரங்கம்


கவிஞர்கள்:

காசாவயல் கண்ணன்,

ஆலங்குடி நேசன் மகதி,

கறம்பக்குடி சாமி.கிரிஷ்,

புதுகை ரேவதிராம்,

புதுகை மைதிலி கஸ்தூரிரங்கன்,

புதுகை சு.பீர்முகம்மது.

(அடுத்தடுத்த சுழற்சியில் 

வரிசை மாறி வருவார்கள்!)

  காணொலி காண அடுத்த 

வரியைச் சொடுக்குக:

https://youtu.be/WhR0I5lKVBk

இது ஒரு புதுமையான நிகழ்ச்சி!

பார்ப்பவர், கேட்பவர் அசந்து போவது உறுதி!

'வழவழா குழகுழா' கவிதைகளுக்கு மத்தியில்

மின்னலாய்ச் சுடரும் ஓரிரு வரிகள்

அப்படி ஐந்து சுற்று!

பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைச் 

சொல்ல வேண்டுகிறேன்

கவியரங்கில் மின்னல் கவிதைகள் தந்த

எல்லாரும் புதுக்கோட்டை மாவட்டம் தான்

என்பது கூடுதல் சிறப்பு!!

-----------------------------------

நிகழ்வை இணைந்து நடத்தியமைக்கு நன்றி-

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்,

புதுக்கோட்டை மாவட்ட அறிவியல் இயக்கம்

----------------------------------------

ஒலி,ஒளிப்பதிவுக்கு நன்றி –

புதுகை வரலாறு

நாளிதழ்க் குழுவினர்

-----------------------------------------------

அன்னைத் தமிழின் அடையாளம் யார்? காணொலி இணைப்பு

 புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

எட்டாவது ஆண்டு,

பத்தாம் - நிறைவு - நாள் நிகழ்ச்சி:

காணொலிக்குச் செல்ல,

சொடுக்குக:

https://youtu.be/fEAU_xwNCvo?si=1MVSJjchjZGlJ-Nn  


பேசிய நேர விவரம்

நடுவர் முன்னுரை : முதல் 13நிமிடம்

தொல்காப்பியரே :  

முனைவர் மு.பாலசுப்பிரமணியன்-13நிமிடம்

வள்ளுவரே : 

புலவர் கும.திருப்பதி-14நிமிடம்,

ஔவையாரே : 

புலவர் இரா.ராமதிலகம்-15நிமிடம்

கம்பரே :

முனைவர் மகா.சுந்தர் -18நிமிடம்,

பாரதியாரே: 

கவிஞர் மு.கீதா -13நிமிடம்

... இரண்டாம் சுற்றுக்குப் பிறகு ...

நடுவர் நிறைவுரை : நிறைவான 25 நிமிடம்

பார்த்து கேட்டு

 உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்

நண்பர்களே

(அப்படியே மறக்காமல் உங்கள்

நட்புக் குழுக்களிலும்

பகிர்ந்து விடுங்கள்)

--------------------------------- 

நன்றி

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

புத்தக விழாக் குழுவினர்

-----------------------------------------

ஒளி, ஒலிப்பதிவுக்கு நன்றி

'புதுகை வரலாறு நாளிதழ்"

நட்புக் குழுவினர்

ஆசிரியர் - திரு சிவசக்திவேல், புதுக்கோட்டை

------------------------------------------------------- 

உலகளவில் முதற்பரிசு பெற்ற எனது கவிதை


பாரதிதாசன் வைய விரி அவை 

எனும் இணையம் வழியாக

பொ.ஆ.2002இல் நடத்தப்பட்ட

உலகளாவிய கவிதைப்போட்டியில் 

பரிசுபெற்றோர் விவரத்தை

முதலில் சொல்லிவிடுகிறேன் -

முதற்பரிசு - 

நா.முத்துநிலவன், தமிழ்நாடு இந்தியா 

இரண்டாம் பரிசு -  புகாரிஅசன், கனடா. 

மூன்றாம் பரிசு - ஜோசப் சேவியர், அமெரிக்கா.

----------------------------- 

நடத்தியவர் போலும் விவரங்களை, 

இணைந்துள்ள 

செய்திகளில் காண்க

நன்றி - இணையச் சான்றோர்க்கு

------------------------------

பொ.ஆ.2000 நான் மேசைக்கணினி (டெஸ்க்டாப்) வாங்கிய ஆண்டு (அதாகப்பட்டது 25ஆண்டுக்கு முன்! அப்படின்னா எனது கணினிஅறிவு(?)க்கு வெள்ளி விழா!) அப்போது, இணைய இணைப்பை அவ்வப்போது குறுவட்டு (சிடி)களில்தான் வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும். விலையும் அதிகம். எனவே தொடர்ந்து இணையத் தொடர்புகளில் எழுதுவதில்லை. பேனா நட்பு போல இணைய மடற்குழுக்கள் அப்போது இருந்தன.  அதில் நண்பர்களைத் தேடித் தேடிச் சென்று இணைந்து பேசி, எழுதுவதே வழக்கமாக இருந்தது.

அப்போதைய எழுத்துரு மலேசிய இணையத் தமிழறிஞர் முரசு நெடுமாறன் அவர்கள் கண்டு தந்த டிஸ்கி”தான். அதை முரசு அஞ்சல்” எனும் செயலியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்வோம்! ஆனால், செய்தித் தாள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எழுத்துருவில் எழுதின! எனவே, பதிவிறக்கம் செய்வதும் பதிவைக் காப்பதும் குழப்பம்தான்.

2010ஆம் ஆண்டின் பின் தமிழ்நாடு அரசு ஒருங்குறி” என்னும் (யுனிகோடு) எழுத்துருவை ஏற்றபின்தான் எல்லாம் எளிதானது! (இதற்குத் தமது குழு பட்ட சிரமங்களை அய்யா த.உதயசந்திரன் எழுதியதைப் படித்த பிறகே இதெல்லாம் புரிந்தது)  இதன் பின் 2011ஆம் ஆண்டில் நமது வலைப்பக்கம் தொடங்கப்பட்டது. அப்போது, புதுக்கோட்டைக்கு முதன்மைக் கல்வி அலுவலராக வந்த அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் தொடர் தூண்டுதலால், கணினித் தமிழ்ச்சங்கம், வீதி கலை-இலக்கியக் களம் தொடங்கியதும் கவிஞர்கள் மு.கீதா, இரா.ஜெயலட்சுமி, மைதிலி கஸ்தூரிரங்கன், கும.திருப்பதி, மகா.சுந்தர் மணப்பாறை அ.பாண்டியன், சுவாதி, செல்வா என  ஏராளமான ஆசிரியப் படைப்பாளிகள் வலைப்பக்கம் தொடங்க அதையே ஒரு பெரும் இயக்கமாக செய்தோம். (கஸ்தூரிரங்கனும் ரேவதியும் முன்னரே வலைப்பக்கம் வைத்திருந்தனர்) இதில் பலரும் தொடரவில்லை என்பது பெரிய சோகம்! தங்கை மு.கீதா தொடர்கிறார் என்பதறிந்து மகிழ்கிறேன்.  https://velunatchiyar.blogspot.com/ நண்பர்கள் தொடர்க! 

அப்போதைய எனது இணைய மடற்குழு நண்பர்களில் ஒருவர் - எனக்கு வலைப்பக்கம் அமைத்துத் தந்த மேலைச்சிவபுரி முனைவர் மு.பழனியப்பன் என்பதை என்றும் மறவேன்! இவரோடு புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன், கவிஞர் திலகபாமா, கவிஞர் புதியமாதவி இப்போதும்  தொடர்பில் இருக்கின்றனர் என்பதும் மகிழ்ச்சி.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் புகுமுக வகுப்புப் படித்த போது (1973-74)வடக்கு ராச வீதியிலிருந்த வாசவி தட்டெழுத்துப் பயிலகத்தில்தட்டச்சுப் படித்திருந்த நினைவில்,  வாங்கிய கணினியில் தட்டிப்பார்த்தேன். என்ன வியப்பு! தட்டச்சு நினைவிருக்காது புதிதாகத்தான் பயில வேண்டும் என்று நினைத்ததற்கு மாறாக, ஒரே வாரத்தில் தட்டச்சுவதில் தேவையான வேகம் வந்துவிட்டது. மூளைதான் நினைவகம் என்றாலும், விரல்களுக்கும்  நினைவாற்றல் சக்தி உண்டு போல!! என்று மகிழ்ந்து போனேன். இது நடந்து 25ஆண்டுகள் ஆகிறது! வாழ்க விரல்நுட்ப அறிவு!

அதிலிருந்து கையெழுத்துக் குறைந்து தட்டச்சே வழக்கமானது.

அப்போது இணைய மடற் குழுக்களில் கவிதை, தமிழிலக்கியம்  பற்றிய உரையாடலும் காரசாரமாக நடக்கும். உலகளவில் தொடர்பிலிருந்த தமிழறிஞர்கள் கலந்து கொண்டு விவாதிப்பார்கள். அப்போது கிடைத்த செய்தி – பாரதிதாசன் வைய விரி அவை” எனும் மடற்குழுவினர் நடத்திய கவிதைப் போட்டி! அதில் நானும் கலந்து கொண்டு முதற்பரிசு பெற்றேன்!

இணையம் அதிகமில்லாத காரணத்தாலும், முகநூல், வலைப்பக்கம் ஏதும்  அப்போது இல்லாத காரணத்தாலும், எனது கவனக் குறைவாலும் இந்தக் கவிதையையே தொலைத்துவிட்டேன் – நம்வீட்டுப் புத்தகக் குவியல் இடையே எங்கோ சிக்கிவிட்டது என்று நானும் இதை மறந்துவிட்டேன்! என் புதியமரபுகள்நூலின் இரண்டாம் பதிப்பில் சேர்த்துவிட எவ்வளவோ தேடிப் பார்த்தும் கிடைக்காத புதையல் இன்று கிடைத்தது!

எதையோ தேட எதையோ கண்டுபிடிப்போம் அல்லவா?

அப்படிக் கிடைத்த மகிழ்ச்சியை 

உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்-

இதோ அந்தக் கவிதை:

(கவிதையின் சரியான வடிவத்தைக் காண, செல்பேசியைக் கிடை மட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். இல்லையெனில் கவிதை உடைந்து உடைந்து வடிவம் சிதைந்தே காணப்படும்!)

திசைகளைத் தின்போம்!

(பாரதிதாசன் நினைவுக் கவிதைப்போட்டி)

பிறந்ததும் சிறந்ததும் ஒருமாதம் –உன்

       பேச்சிலும் எழுத்திலும் ஒருமொழிதான்

சிறந்ததும் இறந்ததும் ஒருநாடே –இன்று

       சிங்கைமுதல் தமிழுலகமெலாம்

நிறைந்ததும் சிறந்ததும் தமிழாலே –உன்

       நினைவினில் இணையத் தமிழ்வளரும்

இறந்ததும் பொய்!உனக்(கு) இறப்பில்லை –

       நிரந்தரம், சரித்திர வரம்தருமே!          ----------------(1)

 

“தணிப்பரிதாம் துன்பமிது 

    தமிழகத்தின் தமிழ்த்தெருவில்

       தமிழ்தான் இல்லை”

எனப்பெரிதாய்க் கவலையுற்ற 

    எம்கவிஞ! பார்த்தாயா,

       எந்நா டெல்லாம்

மணித்தமிழர் வாழ்கின்றார், 

    அங்கெல்லாம் நல்லதமிழ்

       மணப்ப தைப்பார்!

இனித்தமிழர் நாட்டினிலும் 

    இந்தநிலை வந்துவிடும்

       இணையச் செய்வோம்!                   ----------------(2)

 

பாடம் படித்து நிமிர்ந்த விழி – தனில்

       பட்டுத் தெறித்தது ஆணின் விழி

ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் –இவன்

       ஆயிரம் ஏடு புரட்டுகின்றான் –எனப்

பாடிய உன்கவிக் காதல்மொழி – என்றும்

       பைந்தமிழர் நெஞ்சில் வாழும்மொழி- கவி

சூடிய கவிஞ!நீ மறைந்து விட்டாய் – தமிழ்க்

       காதலர் நெஞ்சில் நிறைந்து விட்டாய்! ----------------(3)

 

இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி

       இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே?

மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின் றாரே?

       வாயடியும் கையடியும் மறையும் என்றே

விரட்டிய நீ போய்விட்டாய் எனும் நினைப்பால்

       விரைந்துவந்தார் நாட்டைக்கா(டு) ஆக்கப் பார்ப்பார்!

உரக்கஉன்றன் தமிழ்ப்பாட்டைப் பாடிப் பாடி

       உலகம்ஒரே சாதிஎன்போம், திசையைத் தின்போம்! –(4)


-------------------------------------------------

இதற்கெனத் தரப்பட்ட சான்றிதழ் :


இந்தச் செய்தி வந்த அப்போதைய செய்தித்தாள்கள்-


 

 எந்தப் புதையல்

யாருக்கு

எப்போது கிடைக்குமோ

தெரியாது!

-------------------------------------

ரஜினியின் 

பெரும்பாலான படங்களின் கரு

ஒன்றாகவே இருக்கும்!

அதாவது அவர்

மிகப் பெரிய ஆளாக இருந்தவர்

ஆனால் இப்போது 

எளிமையாக இருக்கிறார்,

முடிவில்தான் தெரியும் அவர்

மிகப்பெரியவர் என்று!

(என்னென்ன படங்கள்னு நீங்களே 

நினைச்சிப் பார்த்துக் கோங்க மக்களே!

வேலைக்காரன், முத்து, அருணாச்சலம், பாட்ஷா இன்ன பிற )

--------------------------------

அது மாதிரி நாம ஒன்னும் இல்லையென்றாலும்

சில பழைய செய்திகள் கிடைக்கும்போது

மகிழ்ச்சியாகத் தானே இருக்கிறது!

அடுத்த நமது கவிதைத் தொகுப்புக்கு 

ஒரு கவிதை சேர்ந்தாச்சு! 

 --------------------------------------------------