எனது புதிய கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது புதிய கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டவுசர் கிழியட்டும்!

தெளிவாகச் சொல்லுங்கள்-
“நீட்“டாகப் போன எங்கள் பிள்ளைகளின்
சட்டையைக் கிழித்த
மோடி அரசின்
“டவுசர்” கிழியும்வரை
போராட்டங்கள் தொடரட்டும்!
----நா.முத்துநிலவன்.
------------------------------------------------- 
செய்தி,படத்துக்கு நன்றி - 
தினமணி நாளிதழ்-08-5-2017

ஆடை களைந்தனர் தந்தையரே! அம்மண மாயினம் இந்தியரே!!

ஆடை களைந்தனர் தந்தையரே!
      அம்மண மாயினம் இந்தியரே!!
கோடை வெயிலினும் கொள்ளியடா
      கொளுத்திப் போட்டது டெல்லியடா!



எத்தனை எத்தனை போர்முறைகள்!
      இம்மியும் அசையாக் கல்நெஞ்சா?
அத்தனைக் கும்,இனித் தாக்கமெழும்
      அமைதிப் போரின் நோக்கமிதே

எனது புதிய கவிதை - என்னைக் கைது செய்யுங்கள் அரசே!

கைது செய்யுங்கள்! அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

ஆசிரியரை வகுப்பறையில்
குத்திக் கொன்ற வழக்கில் –
அரசே! என்னைக் கைது செய்யுங்கள்!

நான் என்ன செய்தேன் என்றா
கேட்கிறீர்கள்?
மௌனமாக இருந்தேனே?
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே?

வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்க
வழியில்லாமல்,
மனப்பாடம் செய்யும்
மதிப்பெண்ணுக்கே மதிப்புக் கொடுத்து,
அவன் நெஞ்சை
நஞ்சாக மாற்றியதில்
ஆசிரியர்க்குப் பங்கில்லையா?
என்னைக் கைது செய்யுங்கள்!  அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

முப்பது ரூபாய் கொடுத்து
வாங்க வேண்டிய சீட்டுக்கு
முந்நூறு ரூபாய் கொடுத்து
லஞ்ச ஒழிப்புப் படத்தைக்
குடும்பத்தோடு பார்த்தேனே? -
அநீதிக்கு எதிராகப் போராடாமல்,
அநீதியையே வாழ்க்கை முறையாக
அவனுக்குக் கற்பித்ததில்
தந்தைக்கும் பங்குண்டுதானே!
என்னைக் கைது செய்யுங்கள் அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

ஒருவரை ஒருவர்
அடுதலும் கெடுதலுமே வாழ்க்கை எனும்
நெடுந்தொடர்களில் மூழ்கி,
பிள்ளைகளின் உணர்வுகளை
நல்லவிதம் நடத்தாமல்
பாசத்திற்கு அந்தப்
பச்சை மண்ணை ஏங்கவிட்டுப்
பார்த்திருக்கும் தாய்க்கும்
கொலையில் பங்குண்டு தானே?
என்னைக் கைது செய்யுங்கள் அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

ஒன்றைப் பத்தாக்கி
நன்றைப் புறந்தள்ளி –
பரபரப்புத் தேடியே
பதரைக் கதிராக்கி
வழிகாட்டு மரமே
வழிகெட்டுக் கிடக்கின்ற
ஊடகக் காரருக்கும்
உண்டல்லோ கொலைப்பங்கு!
என்னைக் கைது செய்யுங்கள்! அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

வாருங்கள்!
வந்துவிட்டீர்களா?
கைதுசெய்யுங்கள் –

ஒரு நிமிடம்!

எங்களையெல்லாம்
ஆட்டிவைத்துப் பார்த்திருக்கும்
அரசு மட்டும் விதிவிலக்கா?

நெஞ்சில் கைவைத்து
நேர்மையாகச் சொல்லுங்கள்!
எங்களின் குற்றத்தில்
உங்களுக்கும் பங்கில்லை?

அதனால் அரசே!
கைது செய்யுங்கள்! அரசே!
உங்களையும் நீங்களே கைதுசெய்யுங்கள்!

செத்துப் போனதும் உமா அல்ல!
நம் அனைவராலும்
அன்றாடம்
பதறப் பதறக்
குத்துப் பட்டுக் கிடக்கும்
சுயநலக் கல்வி முறை!

இர்பான் எனும் அம்பை
ஏவிவிட்ட நமக்கெல்லாம் -
உமா -


ரத்தம் பீறிடக்
கத்திக் கதறிய நேரத்தை
ஒரு கணமேனும் -
உணர்ந்தால்தான் விடுதலை!
-----------------------------
( சென்னை - பாரிமுனை - அரண்மனைக்காரன் தெருவில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்தி மற்றும் வேதியியல் ஆசிரியராக வேலைபார்த்தவர் உமா மகேஸ்வரி. இரண்டு பெண் குழந்தைகளின் தாய். 39 வயது. பி.எச்.டி.படித்த இவருக்கு வங்கியில் வேலைகிடைத்தும் அதைப் புறந்தள்ளிவிட்டு, ஆசிரியப் பணியை விரும்பி ஏற்று, ஈடுபாட்டுடன் செய்துவந்த இவர்,  கடந்த 09-02-2012 வியாழன் அன்று காலை 10.30மணியளவில் அவரிடம் 9ஆம் வகுப்புப் படித்துவந்த இர்பான் எனும் மாணவனால், வகுப்பு அறையிலேயே -நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே- கதறக் கதற 14 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட செய்தியின் பின்னணியில், அழுதுகொண்டே எழுதிய கவிதை இது. 
இதே ஆசிரியர் உமா கொலைதொடர்பான எனது கட்டுரையைப் படிக்கச் சொடுக்குக -
http://valarumkavithai.blogspot.com/2012/03/blog-post_10.html 
– நா.முத்துநிலவன், 19-02-2012) 


           நமது வலையில் வந்த இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, இதனைத் தமது “தொலைத் தொடர்புத் தோழன்” மாத இதழில் எடுத்து வெளியிட்டுக் கொள்ள அனுமதியும் கேட்டு, மார்ச்-2012 இதழின் கடைசி முழுப்பக்கக் கவிதையாக எனக்கு “நன்றி“ தெரிவித்து வெளியிட்ட அந்த இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளவரும் அவர்களின் -- பி.எஸ்.என்.எல்.இ.யு. சங்கத்தின்-- மாநில நிர்வாகிகளில் ஒருவருமான தோழர் பாபு ராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் இதழாசிரியர்களுக்கும் நானல்லவா நன்றி தெரிவிக்கவேண்டும்? நன்றி நண்பர்களே!
          இதில் ஒரு சிறப்பு என்ன வெனில், கல்வியுடன் நேரடித் தொடர்புடைய ஆசிரிய அமைப்புகள் எதுவும் இதுவரை இதுபற்றி என்னிடம் வாய் திறக்காத போது, ஒரு பொதுத்துறை அமைப்பு எடுத்து வெளியிட்டதுதான்! மீண்டும் நன்றி நண்பர்களே!
 - நா.முத்து நிலவன் - 11-03-2012)