பொறியியல் வகுப்புத் தொடக்கவிழா - நா.முத்துநிலவன் உரை

வித்தியாசமான உழைப்பும் 
வேறுபட்ட சிந்தனையும் தேவை! 

பொறியியல் வகுப்புத் தொடக்கவிழாவில் 
நா.முத்துநிலவன் உரை 

புதுக்கோட்டை-செப்.12 கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் பாரதி நினைவுநாளன்று -11-9-2023- நடந்த முதலாண்டு வகுப்புகள் தொடங்கி வைத்து, மாணவிகளிடம் உரையாற்றும்போது பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “வெறும் உழைப்பால் பயனில்லை, வித்தியாசமான உழைப்புடன் கூடிய வேறுபட்ட சிந்தனையே இப்போதைய தேவை” என்று பேசினார் 
              பாரதி பொறியியல் கல்லூரியின் பதினைந்தாம் ஆண்டு நிகழ்வாக, முதலாண்டு பொறியியல் வகுப்புகளைத் தொடங்கி வைத்துப் பேசிய எழுத்தாளர் நா.முத்துநிலவன் மேலும் பேசியதாவது- “உழைப்பே உயர்வு தரும் என்பது உண்மைதான் என்றாலும், வெறும் கடின உழைப்பால் மட்டும் பலன் கிடைக்காது. வித்தியாசமான உழைப்போடு, வேறுபட்ட சிந்தனைகளும் சேரும்போதுதான் அதன் பலன் வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன் தரும். இன்று உலகம் முழுவதும் நம் நாட்டு இளைஞர்கள் உலகப் பெரும் நிறுவனங்களின் முக்கியமான பொறுப்புகளில் இருப்பதன் ரகசியம் இதுதான்! ஒரு நாட்டின் அடையாளமாக அந்த நாட்டின் பெருநகரக் கட்டுமான வளர்ச்சியே முன்னிற்கிறது. சிங்கப்பூர், அரபு நாடுகளின் அடையாளம் அங்குள்ள வானளாவிய கட்டடங்களே கண்ணையும் கருத்ததையும் கவர்ந்து நெஞ்சில் நிற்கின்றன. வளரும் நாடுகளில் இவை போலும் பெரும் கட்டுமானப் பணிகள் நிறைய உருவாகின்றன. 
        ஏட்டளவில் படித்துப் பட்டம் பெற்றால் அதற்குப் பலனிருக்காது. மாறாக, படிப்போடு, கற்பனை ஆற்றலையும் கலந்து புதிய புதிய மென்- பொருள்களை உருவாக்கி, “கற்பனையைக் கருவியாக்கி விற்பனை செய்த ஆற்றல்”தான் பில்கேட்ஸை உலகப் பணக்காரர் வரிசையில் பல ஆண்டுகள் உட்கார வைத்தது. இப்போதும் உலகம் முழுவதும் கணினி மென்பொருள் வன்பொருள் பொறியாளர்க்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வேலைக்குப் போன பிறகும் மக்களுக்கான பணிகளைத் தொடரும் யாரையும் மக்கள் மறப்பதில்லை. அப்துல் கலாம், கல்பனா சாவ்லா, தாமஸ் ஆல்வா எடிசன், கலிலியோ என மறைந்த பிறகும் வாழ்பவராக மக்கள் பயன்பாட்டுக்கான அறிவியலைக் கண்டுபிடித்துத் தந்தவர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.        
            பாரதியும் அப்படித்தான் “நான் வீழ்வேன் என நினைத்தாயோ?” என்று கேட்டதுபோல இந்த 103ஆவது நினைவு நாள் அன்றும் நினைக்கப் படுகிறான். தான்பெற்ற கல்வியால் வீடும், நாடும், உலகமும் பயனடையும்படி, இன்று தொடங்கும் உங்கள் கல்வி அமையவேண்டும் அதிலும் குறிப்பாகப் பெண்கள் படிப்பதே அவர்கள் வாழ்க்கையை முன்னேற்றும். பெற்றோர்கள் தம் பெண்களுக்கு வேறு சொத்து ஏதும் சேர்த்து வைக்க வேண்டியதில்லை, கல்வி தந்தால் அதுவே மிகப் பெரிய திருமணச் சீராக இருக்கும் எனவே இங்குள்ள பெற்றோரை இடையில் “பொருந்தி வருகிறது” என்று, படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் செய்து, படிப்பை நிறுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு எழுத்தாளர் நா.முத்துநிலவன் உரையாற்றினார். 
        வகுப்புகள் தொடக்கவிழாவுக்கு, ஸ்ரீ பாரதி கல்விக் குழுமங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை ஏற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ச.திலகவதி வரவேற்புரையாற்றினார். தாளாளர் கனகராஜன், அறங்காவலர் கிருஷ்ண மூர்த்தி, பஷீர் முகமது வாழ்த்துரையாற்றினர். கல்லூரி மாணவியரின் கலை-நிகழ்ச்சி நடனமும் நடைபெற்றது. விழாவில் முதலாண்டு மாணவியர், அவர்களின் பெற்றோர் உட்பட சுமார் 400பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது. 
    மகாகவி பாரதியின் 103ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கல்லூரி வளாகத்திலிருந்த பாரதியின் உருவச் சிலைக்கு கல்லூரித் தலைவர், தாளாளர்கள், முதல்வர்கள், பணியாளர்கள், மாணவியர் முன்னிலையில் எழுத்தாளர் நா.முத்துநிலவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தியபின் விழா தொடங்கியது. 
------------------------------------------------ 




நன்றி - தீக்கதிர் நாளிதழ் -12-9-2023


புகைப்படங்கள் - நன்றி அருண் ஸ்டுடியோ, புதுக்கோட்டை


நன்றி - புதுகை வரலாறு நாளிதழ் -13-9-2023

5 கருத்துகள்:

  1. வித்தியாசாமான உழைப்புதான் பயன்தரும் என்பது
    உண்மையான கருத்து

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு அண்ணா. மகிழ்வும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  3. தங்களின் அரசுப் பணிநினைவுக்குள் பின், இளைய தலைமுறையினருக்கு இலக்கியம், சமூக முன்னேற்றம் போன்ற பலதுறைகளில் சிந்தனையைக் தூண்டும் அறிவார்ந்த உரைகள், கட்டுரைகள் வாயிலாக ஆற்றிவரும் பணி போற்றுதலுக்குரியது.
    தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.!
    நன்றி..!!

    பதிலளிநீக்கு
  4. உண்மையான கருத்தை கூறியிருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி

    பதிலளிநீக்கு
  5. அருமையான உரை ஐயா, உங்கள் வழக்கம் போலவே! கண்டிப்பாகப் பிள்ளைகள் உரையைக் கவனித்திருப்பார்கள் என நம்புகிறேன். இதை மனதில் கொண்டு படித்தால், செயல்பட்டால் அவர்களுக்குச் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு