ஐந்தாம் வகுப்பு மாணவர்க்கு அரசுத் தேர்வா?!

ஆண்டைகளுக்கு நம்பிள்ளைகளை

 அடிமைகளாக்கி அனுப்ப    
ஐந்தாம்வகுப்பில் அரசுத் தேர்வா?!

---நா.முத்துநிலவன்---

அரசு ஆணை வந்துவிட்டது! 5, 8ஆம் வகுப்பு தமிழ்நாட்டு மாணவர்கள் அரசுப் பொதுத்தேர்வு எழுதத் தயாராக வேண்டுமாம்! தமிழ்நாடு அரசுத் தேர்வுகள்இயக்குநரின் (ந.க.எண்-077171/எச்-1/2019 நாள்-28.11.2019) அனைத்துப் பள்ளிகள் மற்றும் ஊடகங்களுக்கு வந்துவிட்டது. “ஏற்கெனவே வாய் கோணலாம், இதுல கொட்டாவி வேறயா” எனும் பழமொழிதான் எனது நினைவிற்கு வருகிறது! இந்தக் கொடுமை உலகில் எங்காவது உண்டா?
பரிட்சை வச்சாத்தானே பசங்க படிக்கிறாய்ங்கெ” என்பது பொதுவான மற்றும் பிழையான கருத்துஇது நமது கல்விமுறையைக் குழப்பியவர்களின் அரிய கண்டுபிடிப்புஇன்னொரு பக்கம், “தேர்வு அச்சம்” (எக்சாம் ஃபீவர்என்னும் பொதுக் கருத்தும் உண்டுஎனில் இரண்டுக்கும் காரணம் இருக்கிறதல்லவா? இதுபற்றி விரிவாக விவாதிக்க வேண்டும்.
உலகில் முன்னேறிய நாடுகளின் பள்ளிக்கூடங்களில் தேர்வோவெற்றி-தோல்வியோ இல்லை! எனவே   தேர்வு அச்சல்லாமல்தான்  குழந்தை களைஅவர்தம் படைப்பாக்கத்தைஉலகியல் அறிவைத் தூண்டிவிடும் வேலையை மட்டும் அந்த அரசுகள் செய்கின்றன!  
அதனாலேயே அந்நாட்டுக் குழந்தைகள் அச்சமின்றிப் படிப்பது மட்டுமல்லாமல் தமக்கு ஆர்வமான துறைகளில் உழைப்பைச் செலுத்தி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். அவர்தம் நாடும் முன்னேறுகிறது!
மேற்படிப்பில் அவர்கள் எந்தத் துறையில் ஆர்வம் காட்டுகிறார்களோஅந்தத் துறையில் அவர்கள் பயணிக்கநாம் வழிகாட்டும் வேலையை மட்டும் பார்த்தால் போதும்ஆசிரியர்கள் வழிகாட்டிகள் தானேகுச்சியை எடுத்துக் கொண்டு ஆடுகளின் கூடவே திரியும் மேய்ப்பர்களல்லவே?
குருவி தலையிலே பனங்காயா?
“ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்தும்போதுதான் மாணவர்கள் மத்தியில் படித்தாகவேண்டும் என்கிற கட்டாயமும், பொறுப்புணர்வும் வரும் என்பதும், அப்போதுதான் ஆசிரியர்களும் தேர்ச்சி விகிதத்தை உறுதிப்படுத்துவதங்காக அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படுவர் என்பதும், தனது முடிவுக்கு பள்ளிக் கல்வித்துறை முன்மொழியும் காரணங்கள். ஆசிரியர்களைத் தூண்டுவதற்காக, பிஞ்சுகளைப் பொதுத் தேர்வுக்கு ஆட்படுத்த முற்படுவது, மனிதாபிமானமற்ற செயல்”  என்கிறார் மூத்தகல்வியாளர் -முன்னாள் துணைவேந்தர்- வே.வசந்திதேவி அவர்கள்.  
தமிழகத்தில் உள்ள 34ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு,  மற்றும்  அரசுவி பெறும் துவக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இவற்றில் இதுவரை தேர்வுகள் நடத்தப்பட்டுத்தான் வருகின்றன. ஆனால், மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் எனும் பொதுத்தேர்வு இப்போது திணிக்கப்பட உள்ளது. இதுதான் மிகப்பெரும் சமூகப் பின்னடைவிற்கு இட்டுச் செல்லப்போகிறது! இது மாணவர் மனச்சிக்கலை ஏற்படுத்தி, பள்ளியிலிருந்து விலகும் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிடும்ம் என அச்சம் எழுகிறது.
இதற்குக் காரணம் உண்டு! கடந்த சில ஆண்டுகளில் 10, 11, 12 வகுப்புகள் மூன்றிற்கும் அடுத்தடுத்து அரசுப் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம், 11ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தாமலே 12ஆம் வகுப்புப் பாடங்களையே இரண்டு வருடம் நடத்துகிறார்கள் என்பதால், இந்த மாணவர்கள் மேற்கல்வியில் தடுமாறுகிறார்கள் என்பதைத் தவிர்க்கவே ஆனால், நோக்கம் நல்லதே எனினும் நடைமுறை தவறாகிவிட்டது. என்ன ஆனது தெரியுமோ? 11ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வைத்த இரண்டே ஆண்டுகளில் நம் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சுமார் ஒருலட்சம் மாணவர்கள் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் படிப்பு அவ்வளவுதான்! அய்யா உதயசந்திரன் இஆப அவர்கள், நல்ல நோக்கத்துடனே இதனைச் செய்யப் போக, நிலைமை தவறாகிவிட்டது கண்டு கல்வியாளர்களின் இதுதொடர்பான கவலை மேலும் தொடர்கிறது!
இதுபோலும் தேர்வு அச்சம் மட்டுமல்ல, தேர்வுகளால் ஏற்படும் மாணவர் பாதிப்பு ஒருபுறமிருக்க, பள்ளித் தேர்வு தோல்விகளின் சமூகவிளைவுதான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். இதுபற்றி அரசு கவலைப்படுகிறதா
ஐந்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோல்வியடைந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. வேறென்ன? அந்தப் பிஞ்சு வயதில் வீட்டு வேலைகளை, அல்லது தாய்தந்தை பார்க்கும் கூலி வேலைகளைப் பார்க்கப்போகும் நிலை ஏற்படும். அதுவும் எட்டாம் வகுப்பில் தோல்வியடையும் பெண்குழந்தைகள் இரண்டு வகை ஆபத்துகளை  நம் நாட்டில் எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியாது! “வயதுக்கு வந்த பொம்பளப் புள்ளைய எப்புடி வெளிய அனுப்புறது?” எனும் அப்பாவித்தனமான கேள்விக்கு அந்தப் பிள்ளை தோல்வி துணையாக வந்து படிப்பை நிறுத்திவிடும் ஆபத்து எத்தனை பேருக்குப் புரிகிறது?

“அதுதான் ஃபெயிலாப் போயிருச்சே! வயசு 12தான் ஆவுதுன்னு பாக்கேன், ஒன்னு ரெண்டு வருசத்துல ஒருத்தன் கையில புடிச்சுக் குடுத்து, ஒன் பொழப்ப்ப் பாத்துக்கன்னு அனுப்பி வைக்க வேண்டியதுதான்!” எனும் நமது கிராமத்து கேடுகெட்ட சமூக எதார்த்தம் இன்றும் உள்ளதா? இல்லையா?
இதை மாற்றி, பெண்பிள்ளைகள் எட்டாம் வகுப்பைத் தாண்டி பத்தாம் வகுப்பு வந்தால்தான் அரசுதரும் கல்வி உதவித் தொகை கிடைக்கும், அது அவர்களின் திருமணத்திற்கு உதவும் என்னும் நோக்கத்துடன் தானே “மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண் திருமண உதவித்திட்டம்” பட்டதாரி ஏழைப் பெண்பிள்ளைகளுக்கு ரூ.50,000 தமிழகத்தில் திமுக அரசால் 1989முதல் வழங்கப்பட்டு இன்னும் நடைமுறையில உள்ளது
பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தால் (வெற்றிபெறத் தேவையில்லை), ரூ.25,000 உடன், 4சவரன் தங்கமும் வழங்கப்படுகிறது. “இதற்காகவாவது நமது கிராமத்து, ஏழைப் பெண் பிள்ளைகள் பத்தாம் வகுப்புவரை படிக்கட்டும்” எனும் சமூகநீதி உணர்வு எங்கே? அவர்களைத் தோல்வி எனும் பெயரில் பள்ளியை விட்டு விரட்டி, பண்ணைகளிலோ, நகரப் பெரு முதலாளிகளின் பெரிய கடைகளிலோ அடிமை வேலை செய்யட்டும் என விரட்டும் இன்றைய மத்திய மாநில அரசுகள் எங்கே?
ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப் பட்டால், அது, நமது உள்நாட்டு வெளிநாட்டு ஆண்டை களுக்கு, படிக்காத அடிமைகளை அனுப்பத்தான் உதவும்! இதுதான் நமது நாட்டு முன்னேற்றத்திற்காக திட்டமா? அல்லது காவி+கார்ப்பரேட்டுகளின் ஆதரவுக் கொட்டமா?
உலகில் எந்த நாட்டிலும் இப்படி பள்ளி மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் மாநிலஅளவில் அரசுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படுவதில்லை என்பதை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.


“10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வோடு கூடுதலாக 3, 5, 8 வகுப்புகளில் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு கல்வி திறன்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். அடுத்த வகுப்புக்குச் செல்ல இத்தேர்வுகள் அவசியம். குறிப்பாக, 3-ம் வகுப்பில் நடத்தப்படும் தேர்வு அடிப்படைக் கல்வி அறிவுக் கணக்கீட்டுத் திறன் மற்றும் ஏனைய கல்வித் திறன்களைப் பரிசோதிக்க உதவும் (பக்கம் 107, பி4.9.4) என்கிறது மற்றொரு பரிந்துரை. தேசிய அளவில் 6 வயது முதல் 18 வயது வரையில் ஒட்டுமொத்தப் பள்ளி சேர்ப்பு விகிதம் ஆரம்ப வகுப்பில் 95.1% ஆக இருப்பது 2017 கணக்கீட்டின்படி 9, 10 வகுப்புகளில் 79.3% ஆகக் குறைந்து 11, 12 வகுப்புகளில் வெறும் 51% ஆகி விடுகிறது. கல்விக் குழு அறிக்கையின்படி இன்றும் (பக்கம் 65) 6.5 கோடிக் குழந்தைகள் பள்ளி செல்வது இல்லை. மேற்கண்ட (மிரட்டல்) தேர்வுகள் மேலும் குழந்தைகளை வடிகட்டினால், வசதியும் வாய்ப்பும் உள்ளவர்களை மட்டுமே உயர் நிலைக் கல்வி நோக்கிச் செல்லவைக்கும் அபாயம் உள்ளதே. இது கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது இல்லையா?எனும் தமிழ்நாடு உளவியல் நிபுணர்கள் சங்கத்தின் அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் படுகிறது. அரசு இதைக்கவனித்து இந்தத் தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும். சும்மா பரிட்சை வைப்போம், பாஸ் ஃபெயில் எல்லாம் கிடையாது என்பதெல்லாம் உதவாத சமாதானம்! 
உலக நாடுகளில் பள்ளிப் பருவத் தேர்வுகள்-
      இன்றைய மத்திய, மாநில அரசுகள் 3, 5, 8, 9, 10, 11, 12ஆம் வகுப்புகள் அனைத்திலும் அரசுப் பொதுத் தேர்வுகளை நடத்துவது, குழந்தைகளின் மீது நடத்தப்படும் வன்முறை” என்கிறார்கள் உளவியலார்! இதனால்தான் உலகின் முன்னேறிய நாடுகளில்  இந்த வன்முறை தவிர்க்கப்பட்டுள்ளது.
பின்வரும் இணையத்தில் பாருங்கள். ஃபின்லாந்து, ஃபிரான்சு, ஜப்பான், கொரியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, சிங்கப்பூர், அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகள், தமது பள்ளி மாணவர்க்கு 15வயதிற்கு முன் அரசுத் தேர்வே கிடையாது  என்பதை நடைமுறைப் படுத்தி வருகின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்
நன்றி
ஆனால், நம் நாட்டில்? 
இன்னும் பற்பலகோடிப் பிள்ளைகளின் கல்விக் கனவைப் பொசுக்க வரும் இந்த 5,8ஆம்வகுப்புக்கு அரசுத் தேர்வு என்னும் கொடுமையை அனுமதிக்கப் போகிறோமா? சட்ட ரீதியாக மட்டுமின்றி சமூகரீதியாகவும் எதிர்த்து களம் காணப் போகிறோமா?  
கல்வியாளர் மட்டுமல்ல, அரசியலாளர், சமூக ஆர்வலர் ஆசிரியர் அரசுஊழியர் என அனைவர் முன் நிற்கும் அவசரக் கேள்வியிது. வேறு வழியில்லை! போராடித்தான் இந்த முறைகெட்ட ஆட்சியைத் திருத்த முடியும்!
எல்லாக் குழந்தைகளும் பள்ளிக் கூடம் போகணும்,
பத்தாண்டுக் கல்வியினை நிச்சயம் படிச்சு ஆகணும்
ஓட்டலிலே மேசை துடைக்கும் சின்ன அரும்பைப் பாரு! நீ
கொஞ்சுகிற பிஞ்சுமுகம் போலில்லையா கூறு!
முல்லை அரும்பாகி முழுப்பூவாய் மாறும் முன்னே
தொல்லை துரத்துதம்மா வளர்பிறையே தேயுதம்மா”
------- ( பேரா. ரவிச்சந்திரன் எழுதிய அறிவொளிப்பாடல்)
--------------------------------------------------------------------------------- 
 தகவல் தந்து உதவிய 
நண்பர் திரு நிர்மல்குமார் 
அவர்களுக்கு நன்றி
மற்றும்
இந்தக் கட்டுரையை வெளியிட்டு உதவிய
நாளிதழ்களின் ஆசிரியர் குழுத் தோழர்களுக்கும் நன்றி
-----------------------------------------------------------
புதுகை வரலாறு நாளிதழ் (இணையப்பதிப்பு)

தீக்கதிர் நாளிதழ் (01-12-2019 ஞாயிறு) மதுரைப் பதிப்பு
---------------------------------------------------------------------------------------------------------- 

பட்டுக் குழந்தைகள் பாவமில்லையா?
பல பிள்ளைகள் பள்ளியை விட்டு நிற்கவும், அதன்காரணமாகவே அதன் வாழ்நாள் முழுவதும் இருள்சூழவுமான இத்தேர்வுகளை, அரசு உடனடியாகக் கைவிட வற்புறுத்திக் கேட்டு, இயக்கங்கள நடத்தப்படவேண்டும்.
சுயநலமாக யோசித்தால் கூட ஆசிரியர்களின் அமைப்புகள் இதனைத் தமது முதற்பணியாகக் கொண்டு போராட முன்வரவேண்டும்.
ஊடகங்களும் இதன் தலைமுறைக் கொடுமையை உணர்ந்து மக்கள் விழித்தெழ, விழிப்புணர்வுப் படைப்புகளை வெளியிட முன்வரவேண்டும்.
அப்போதுதான் அரசு இந்தத் தேர்வுகளை ரத்து செய்யும்.
 நண்பர்கள் பலரும் இக்கட்டுரையைத் 
தமக்குத் தொடர்புள்ள சமூகத் தளங்களில் பகிர்வதாக உறுதியளித்திருக்கிறார்கள்.
இதனைப் படிக்கும் உங்களையும் 
அன்புடன் பகிர அழைக்கிறேன்

நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக 
இதனைச் செய்யவேண்டுகிறேன்.
வணக்கம்
----------------------------------------------------------------

9 கருத்துகள்:

  1. சுப.சுந்தரவள்ளிதிங்கள், டிசம்பர் 02, 2019

    இந்த தேர்வு முறைகளால் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் இருப்பதோடு சிறுவயதிலேயே ஏற்படும் தோல்வியால் அந்த சின்னக்குழந்தைகளின் மனம் உடைந்துவிடும் அவர்களுக்கு வாழ்க்கையை எதிர்கொள்வது என்பது கடினமான செயலாக மாறிவிடும்

    பதிலளிநீக்கு
  2. இனி ஒரு போராட்டம் நடந்தால் தான் மாறுமா...?

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி ஐயா... தங்கள் விழிப்புணர்வு பதிவை அனைவரும் படித்து எதிர்கால பள்ளிக்கல்வியை சரியான பாதையில் பயணிக்க முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பிஞ்சுக் குழந்தைகளை மன உளைச்சலுக்கும் அச்சத்திற்கும் ஆளாக்கும் இத்திட்டத்தை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும். இதன் தீமைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும்வண்ணம் தங்களின் எழுத்தில் விழிப்புணர்வு உருவாக்கியிருக்கிறது இக்கட்டுரை. தொடர்ந்து முன்னெடுப்போம் ரௌத்திரத்தை...

    பதிலளிநீக்கு
  5. இதை விடச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இதை எழுதி விட முடியாது. இந்தப் புதிய பொதுத் தேர்வு முறையால் ஏற்படவிருக்கும் ஆபத்துகள் அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்து விட்டீர்கள். ஆசிரியர் சங்கம் மட்டுமில்லை, ஆசிரியர்-பெற்றோர் கூட்டமைப்பும், மாணவர் இயக்கங்களும் கூட இதற்கு எதிராகப் போராட வேண்டும். நேற்றுக் கூட இது பற்றி நண்பர் ஒருவரிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். எல்லாருக்கும் இது தவறு, கொடுமை, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கக்கூடியது என்பது தெரிகிறது. ஆனால் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை. நீங்கள் முன்னெடுங்கள் ஐயா! நாங்கள் பின்னால் அணிவகுக்கிறோம்! இதை விடக்கூடாது! விடவே கூடாது!

    பதிலளிநீக்கு
  6. உங்களின் கருத்துக்கள் மிகச்சரியானது.சிறு பிள்ளைகள் மீது பெரும் சுமை ஏற்றப்படுகிறது. பின் தங்கிய மாணவர்களை இது மிகவும் பாதிக்கும்.

    பதிலளிநீக்கு
  7. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்
    ஐந்தாம் வகுப்பில் இடிகுண்டு வேண்டாம்
    படித்துப் பத்தில தேர்வு எழுதலாமே!
    அறிஞர்களே! தீர்மானியுங்கள்!

    பதிலளிநீக்கு
  8. எங்களைப் போன்றவர்கள் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  9. தலைப்பே தலையில் கொட்டுவது போல் உள்ளது.தலையில் உரைக்குமா என்ற நெருடும் நெருடலும் இருக்கத்தான் செய்கிறது... மாற்றம் நிகழ்ந்தால் நன்று...

    பதிலளிநீக்கு