பெரியார் சிலை உடைப்பு எதிர்ப்பு - படை நடைப் பாட்டு


எச்சிலையே!  
எச் சிலையை   
நீ உடைத்தாய் தெரியுமா?
     ----நா.முத்துநிலவன்----
தலையை எடுத்த தறுதலையே!
      தாழ்ந்து கிடந்த தலைமுறை
தலையெ டுக்கச் செய்தவரின்  
      தலையை எடுப்ப தாரடா?!
சிலையைஉடைத்து போட்டுவிட்டால்
      சிந்தை உடைந்து போகுமோ?!
அலையை உடைக்கப் பார்க்கிறாய்
      அறிவில் லாத மூடனே!
    
 
எச்சிலையே! எச் சிலையை
      நீஉடைத்தாய் தெரியுமா?
இச்சகத்துள் ளோரெலாம்
      எதிர்த்து நின்ற போதிலும் 
அச்ச மில்லை என்றெதிர்த்த
      அவரை உடைக்க முடியுமா?
எச்சில் துப்பும் நாய்களால்
      இமயச் சிகரம் சரியுமா?

எந்தத் தலையை நீஉடைத்தாய்
      எண்ணிப் பார்க்கத் தெரியுமா?
அந்தத் தலையின் சிந்தனையின்
      ஆழம் உனக்குப் புரியுமா?
நொந்து கிடந்த மக்களுக்கு
      சொந்த வரலாற்றினை
முந்தித் தந்து மான உணர்வை
      மூட்டிச் சென்ற நெருப்படா!

உரிமை உடமை பொதுமையாக
      உழைத்த பெரியார் அவர்!
வறுமை யாக அடிமையாக
      வருணமாகி வீழ்ந்தவரை
உரிமைப் போரில் வந்து சேர
      உணர வைத்த பெருமைக்கு
உரியார்,அவர் தான்பெரியார்!
      உணர் வறியா மூடனே!

மாறி மாறி வேட மிட்டும்
      மறத்தமிழர் நாட்டினை
வாரிச் சுருட்ட வழிகளின்றி
வத்தி வைக்கத் திரிகிறாய்!
சீறிப் பாயும் சிங்கத்தையே
      சீண்டிப் பார்க்கும் நரிகளே!
காறி உமிழ்ந்து விரட்டி யடிக்கும்
      காலம் வெகு தூரமில்லை!

தோழர்லெனின் சிலையைஉடைத்து
      தூங்கிக் கிடந்த சிங்கத்தின்
வாலைப் பிடித்து முறுக்கிவிட்டு
      வழிமொழிந்த நரிகளின்
வேலைத் திட்டம் தொடங்கியதா?
      வேடம் கலைந்து போனதே!
வாலில் நெருப்பு, ஊரை எரித்த
      வானரக் கதை ஆனதே!

ராம ரதம் என்னும்பேரில்
      ரத்த ரத ஊர்வலம்!
சாமி பேதம் இன்றி வாழும்
      சனத்தைப் பிரிக்கும் இழிவழி!
சாம பேத தான தருமச்
      சாத்திரக் கதை ஆகாது!
ஊமைச் சனங்கள் அல்ல நாங்கள்
      உன்பருப்பு இங்கு வேகாது!

பம்மிப் பதுங்கி ஓடிட யாம்
      பாச்சைப் பூச்சி அல்லடா!
மும்பை மக்கள் ஆதரவோடு
      முழக்க மிட்டது பாரடா!
அம்பை விட்டது யாரதென்று
   அறிந்தவர்தான் நாங்கடா!!
இங்கே உங்கள் திட்டமெதுவும்
      எடுபடாது போங்கடா!
       ----------------------------
நன்றி -தீக்கதிர் நாளிதழ் 22-03-2018    
         -------------------------------


உலகின் மிகப்பெரிய  பெரியார் சிலையின் முன்...  
சிலையைத் தனது சொந்தச் செலவில் அமைத்த
பெரம்பலூர் அய்யா முகுந்தன் அவர்களுடன்
---------------------------------------

11 கருத்துகள்:

  1. எச்சிலையே! எச் சிலையை நீஉடைத்தாய் தெரியுமா?!?
    Excellent Title and timely published...

    பதிலளிநீக்கு
  2. அழியும் காலம் அவர்க் கிதுவாம்
    அதனால் சிலைகளைச் சிதைக் கின்றார்
    அய்யா கைத்தடி நாம் எடுத்தால்
    அடங்கிப் போவார் வால் சுருட்டி.

    பதிலளிநீக்கு
  3. அப்படிச் சொல்லுங்க... சாட்டையடி வரிகள்...

    பதிலளிநீக்கு
  4. பெரியார் சிலை உடைத்த நாய்களுக்குச்
    சரியான பதிலடி!

    பதிலளிநீக்கு
  5. இங்கு உங்கள் திட்டமெல்லாம்
    எடுபடாது போங்கடா!

    உண்மை
    உண்மை ஐயா

    பதிலளிநீக்கு
  6. எச்சில் துப்பும் நாய்களால்
    இமயச் சிகரம் சரியுமா?
    நெத்தியடி ஐயா.

    பதிலளிநீக்கு
  7. எச்சிலையே...அனைத்தும் அதனுள் அடங்கிவிட்டது.

    பதிலளிநீக்கு
  8. முகநூலில் நிறைய பகிர்வுகள் பார்த்தேன்

    பதிலளிநீக்கு