தினமணியில் வெளிவந்த எனது கட்டுரைகள்


எழுதுகோல் தெய்வம்! எழுத்தும் தெய்வம்!
தினமணி -- அக்12.10.1995

நா.முத்துநிலவன்

எழுதுபவர்கள் மூன்று வகையினர் முதல் வகையினர் மிகப் பெரும்பான்மையோர்-கணக்கெழுதுபவர் அல்லது  கடிதம் எழுதுபவர். இவர்களது எழுத்தால் சமுதாயம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதி;லை. ஆதனால் ஏற்படும் லாப நஷ்டம் இவர்களையே பொருத்தது.
இரண்டாம் வகையினர்-மிகச் சிறுபான்மையோர் தம் அளவில் ஆத்ம திருப்திக்காக எழுதி வெளிப்படுத்தாமலே விட்டு விடுவோர். ;டைரி எழுத்தாளர் போன்ற இவர்களாலும் மற்றவர்களுக்குப் பாதிப்பில்லை.
மூன்றாம் வகைதான் முக்கியமானது இலக்கியமாகவோ தொழிலாகவோ இருப்பது இந்த வகை எழுத்துதான். இந்த இரண்டுமே அவர்களுடைய அளவில் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் பேசப்படுவதாகவும் பின்பற்றப் படுவதாகவும் இருப்பதால் இந்த வகை எழுத்துதான் கவனம் மிகுந்ததாகவும் அமைகிறது.
அதுவும் அழகான கலைநயத்தோடு கூடிய கதையாக, நாவலாக, கவிதையாக, துணுக்காக ஜோக் ஆக எழுதக் கைவந்தர்கள் எப்படியும் அடுத்தவரை பாதிக்காமல் விடுவதில்லை. அவர்கள் கவனமாக எழுதுகிறார்களோ இல்லையோ அவர் தம் எழுத்துகளில் சமுதாயம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
எழுத்தாளனுக்கு என்ன சமூகப் பொறுப்பு?  ‘அது என் தொழில்’ அவரவர் தொழிலை அவரவரும் ஒழுக்கமாக பார்ப்பது தானே சரி ‘‘எனக்குக் காசு வருகிறது எழுதுகிறேன். இதில் என்ன சமூகப் பொறுப்பு?” என்று ஒருவர் கேட்கக் கூடும். “வையகம் காப்பவரேனும் - சிறு – வாழைப்பழக் கடை வைப்பரேனும்…” எந்த ஒரு தனி மனிதனுக்கும் கூட சமூகப் பொறுப்பு உண்டு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.  எழுத்தைத் தொழிலாகக் கொண்டவனுக்குப் பல மடங்கு பொறுப்பு உண்டு என்பது தான் உண்மை.
பேனா விற்பவனுக்கும் பேனாவைப்  பயன்படுத்துவோனுக்குமான வேறுபாட்டை மறைத்துவிடலாகாது.  மோசமான எழுத்து மக்கள் மனத்தில் நிலைத்து நிற்காது விரைவில்  மறந்து மறைந்து போகும் என்பது உண்மைதான் என்றாலும் பல நூறு ஆண்டுகளாகக் கட்டிக் காத்துவந்த மரபுகளை எளிதில் உடைத்து நல்ல வளர்ச்சியைப் குழப்பி சமூக மாற்றங்களைத் தள்ளிப் போடும் சக்தி, மோசமான பிற்போக்கான எழுத்து என்னும் கலைத்தன்மையால் வெற்றிபெறக்கூடிய எழுத்துக்கும் உண்டு என்பது தானே நமது கவலை.
வார மாத இதழ்கள் இலக்கியப் பகுதியுடன்  வந்தால் இரண்டொரு சிறுகதை நிச்சயம் உண்டு. தமிழின் வார-இருவார-மாத இதழ்களில் மாதாமாதமும் சுமார் 200சிறுகதைகள் வருகின்றன.
இதிலும் மர்மக்கதை துப்பறியும் கதை 'ஃபிக்ஷன்" கதை போன்றவற்றை விட்டுவிட்டாலும் சமூகக் கதைகள் சுமார்100 வரும் இதில் எத்தனை கதைகள் நம் நெஞசில் பலகாலம் நிற்கக் கூடியதாக இருக்கின்றனா?
ஒரு நாற்காலியைச் செய்யும் தச்சுத் தொழிலாளி அதற்கான தேவையும் அழகும் பொருந்திவரும்படி செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் உழைப்பும் சிந்தனையும் கூட சில கதாசிரியர்கள் எடுத்துக் கொள்வதி;ல்லையே! நோயைத் தீர்க்காத மருந்து என்பதை விடவும் நோயை வளர்த்து விடும் மருந்தைக் கொடுத்து விடுவதுபோல ஏற்கெனவே இருக்கும் சமூகச் சிக்கலை மேலும் சிக்கலாக்கும் கதாசிரியர்கள் போலி மருத்துவர்களின் ரகத்தை விடவும் ஆபத்தானவர்கள். சமீபத்திய இதழ் ஒன்றில் ஒரு கதை:
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ எனும் பாடத்தை ஆசிரியர்  நடத்த மறுத்து வேலையை விட்டே போய்விடுகிறார் ஏனெனில் மாணவனிடம் பள்ளியில் சேரும்போதே சாதியைக் கேட்டுக் கொண்டு சாதிகள் இல்லை  என்று பொய் சொல்ல அவரால் முடியாதாம்.
சமத்துவ உணர்வு சரிதான். தராசின் எடைக் குறைவைப் ‘பார்த்து’ சரி செய்யும் நோக்கத்தையே இந்தக் கதாசிரியர் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதும் அதை எழுதிப் பிரசாரம் செய்வதும்… என்ன பொறுப்பற்ற தன்மை இது?
இதே போல நாவல்களிலும் தொடர்கதைகளிலும் கூட உண்டு.
பெரும்பாலான தொடர்கதைகள் காதல் எனும் பெயரில் வரும் சதைக் கதைகள்தான் ஒரு பெண்ணை ஒருவர் அல்லது இரண்டு மூன்று பேர் வெற்றி கொள்வதில் பல கதைகள் முடிந்து போகும் உண்மையில் வாழ்க்கை அதன் பிறகுதான் தொடங்கும் என்பதையே இவரகள் மறைத்து விடுவது ஒரு பக்கம் எனில் மறு பக்கம் குழப்படி வேலைகள்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு வரலாற்றுக் கொடுமையை திசைதிருப்பி நாவல் எழுதி பரிசும் பெற்ற கூத்துகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு. இப்போதும் உண்டு. கவிஞர் வைரமுத்து சொல்வது  போல ‘காலத்தின் விமர்சனம் இவர்களின் பிணங்களைக் கூட தோண்டி எடுத்து வந்து தூக்கில் போடும’;  என்பது  மட்டும் நிச்சயம். வேறென்ன சொல்லா!
அற்புதமான கலைத்தன்மையோடும் சமூகப் பொறுப்போடும் ஆரம்பத்தில் அறியப்பட்ட கவிஞர் வைரமுது;து இப்போது விடலைக் குரல் பாட்டுக்காக ‘சமூகப் பிரச்சனைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே டேக் இட் ஈஸி’ என்பது நியாயம்தானா? அதுவும் அவரது ‘சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை ப+மி போராடும் வரை மனிதன்’ எனும் உன்னதக் கவிதை ஒரு சிலருக்கே தெரிந்திருக்க இந்த ‘ஈஸிபாலிஸி’ பாடல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் தெரிந்த குஞ்சு குளுவானுக்கும் போய்ச் சேரக்கூடிய ‘மீடியா’ வில் போய்ச்சேர்ந்து விட்டதே!  ‘அது திருப்திக்கு இது தொழிலுக்கு’  என்று அவர் கூறினாலும் எத்தனை ‘ஈஸி கோயிங்’ இளசுகள் அவரே சொன்ன போராடும் வரை மனிதன் என்பதைப் புறந்தள்ளி விட்டார்கள் என்பது அவருக்கும் நமக்கும் கவலை கருவது அல்லவா?
‘தரைமேல் பிறக்க வைத்தான் -எங்களை
 தண்ணீரில் பிழைக்க வைத்தான்
 கரைமேல் இருக்க வைத்தான் -பெண்களை
 கண்ணீரில் குளிக்க வைத்தான்’ -- என்று மீனவர்களின் மிகுந்த பிரச்சனைகளை ‘கருக்’ கென்று தைக்ககும்படி வளமான தமிழில் சொல்லத் தெரிந்த வாலி அப்போது ‘எப்படி… எப்படி…’ என்று எப்படி எழுதலாம்?’ அந்த ‘அவதார புருஷ’னுக்கு இப்படி அவமாரியாதை வரலாமா?
‘கேட்கிறார்கள் கொடுக்கிறேன் என்பதற்கு இது என்ன அவர்கள் வீட்டுப் பழைய குழம்பா? 
எழுத்து! எரிமலைக் குழம்பல்லவா?
வள்ளுவர் சொன்னபடி ‘கசடறக் கற்று’முடித்து வேலை வாய்ப்பக வாசலில் ‘அதற்குத் தக நிற்கும்’ இளையவர்களாகட்டும் வீடு உண்டு குழந்தைகள் உண்டு என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டும் நடுத்தர வர்க்கத்தினராகட்டும் கைகளில் ஏந்திக் கிடப்பது வார-மாத நாவல் இலக்கியங்களைத்தான்.
லட்சக்கணக்கில் உற்பத்தியாகி ஒரு வாரம் கடைக்கம்பிகளில் தொங்கி அடுத்த வாரமே பழைய புத்தகக் கடைக்கு அடிமாட்டு விலைக்கு வந்தாலும் கூட அந்தக் குறுகிய காலத்தில் அவற்றால் ஏற்படும் காலக் கொலையும் கனவுத்திருட்டுகளும் மிக  அதிகம் 
பினாமி  எழுத்தாளர்களை கூலிக்கு வைத்து கொண்டு  குப்பைகளையே கிளறிக்கிளறி எழுதி அட்டை மாற்றி ஊர் மாற்றி பேர் மாற்றி ஒரே கதையை ஒன்பது முறை மாற்றி இவர்கள் எழுதி விற்பதும் எழுத்தாமோ?  ‘நாவல்’ உனும் பெயரில் நாலைந்து ரூபாயில் இவர்கள் தருவது நாசத்தை அல்லவா? இவர்களின் கதைக்கருவே திருட்டு கொலை எனில் இவர்கள் செய்வதும் அதுதானே? கதைத்  திருட்டும் கலாச்சாரக் கொலையும்!
‘நில் கவனி  கொல்’,‘டெட்மார்னிங்’, மை டியர் மர்டரர்’ என்பன போன்ற ‘ரெண்டுங்கெட்டான்’ தமிழில்  எழுதும் இவர்களுக்கும் எழுத்தாளர் எனும் மதிப்பும் மரியாதையும் கிடைப்பது தமிழர்கள் விஞ்ஞாகத் தவமிருந்து பெற்ற  சாபமின்றி வேறென்ன?
‘டிட் பிட்ஸ்’ எனும் நொறுக்குத்தீனி இலக்கிய வகை சத்தமில்லாமல் தமிழிலும் பிரபலமடைந்து வருகிறது. இதில் அரிய தகவலாகவோ உலக அறிவுச்செய்திகளாகவோ வருவன உண்மையில் பயன்மிகுந்தவைதாம். பெரும்பாலானவர்கள் வார இருவார இதழ்களில் முதலில் இவற்றைப் படிப்பதும் இவற்றின் சுவைப் பயன் கருதித்தான்.
ஆனால் பெரும்பாலான துணுக்குகள் சினிமா அல்லது அரசியல் பிரமுகர்களின் தனிவாழ்க்கையில் மூக்கை நுழைத்து எடுத்துச் சிந்தும் செய்திகளாகவே இருப்பது என்ன சிந்தனையோ?
‘அந்த நடிகையின் காலை டிபன் ஒரேஓரு இட்லிதானாம்’ ஏன்? சட்னிகூட கிடைக்கவில்லையாமா?  ‘இந்த’ அமைச்சரின் சின்ன வீட்டுக்கும் பெரிய வீட்டுக்குமான தகராறில் இவர் இந்த நடிகையை முன்றாவது வீடாக்கிவிட்டாராம்’ என்பது போன்ற கொள்ளைப் படிப்பு உள்ள துணுக்குகள் ரொம்ப அவசியம் பாருங்கள்?
இதில் ‘கிசு கிசு ; இன்னும் கேவலமானது, உண்மையில் சம்பந்தப்பட்டவர்களையும் படிப்பவரையும் ‘கிச்சு கிச்சு’ மூட்டும் வேலையின்றி அடுத்த வீட்டுக்காரர்களையும் பற்றிக்கூட நல்ல விஷயங்களை விட்டுவிட்டு வேறு மாதிரி விஷயங்களையே பேசிப்பேசி அதில் ஒரு ருசி காணும் ‘வக்ர’ உணர்வுக்குத் தீனி போடும் மகத்தான இலக்கியப் பணி இது! கிசுகிசுக்களில் பெரும்பாலும் உண்மை இருக்காது என்பது எழுதுபவர்க்கும் படிப்பவர்க்கும் கூடப் பெரும்பாலும் தெரிந்ததுதான். என்றாலும் அதை ஒருவர் எழுத பலரும் படித்து அடுத்தவரிடம் எடுத்துச் சொல்ல… என்ன ஒருரசனை வளர்ச்சி! அடடா!
சிரிக்கக் கூடியவர்கள் ஆரோக்கியமானவர்கள். உடலும் அறிவும் ஆரோக்கியமாயிருப்பதன் அடையாளமே நல்ல நகைச்சுவைக்கு உடனடியாகச் சிரித்துவிடுவதுதான். அப்புறமாகச் சிரிப்பது ஆபத்தானது! சிரிக்காமலே இருப்பது சிக்கலானது.
உயர்ந்த ரசனையோடு சிரிக்கும்படியாக எழுதவும் பேசவும் கூடியவர்கள் பாக்கியவான்கள் எனக்குத் தெரிந்து உ.ராஜாஜி போல உடல்நிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளான நிலையிலும் தொடர்ந்து சமூகப் பொறுப்பு மிகுந்த நகைச்சுவைத் துணுக்குகளை எழுதக் கூடியவர்களும் இருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியது.
ஆனால் பெரும்பாலான ஜோக் எழுத்தாளர்களின்  ஊற்றுக்கண்ணே வீட்டில் அடிமைப்பட்டிருக்கும் ஆண் ஆபீஸில் தூங்கும் ஊழியர்கள் ஜொள்ளு விட மட்டுமே தெரிந்த இளைய சமூகம்- இவைதான். இதில் உண்மையான நகைச்சுவை என்னவெனில்  நடைமுறையில் இது பெரும்பாலும் தலைகீழாக இருப்பதுதான்.
இதில் யு கிளாஸ் சிரிப்பு அக்கரைப் பச்சை சிரிப்பு நீலம் பச்சை ஜோக்குகள் ‘படிக்கக் கூடாத ஜோக்குகள்’ வேறு ‘அதான் படிக்கக் கூடாதுல்ல அப்புறம் ஏன் போடுற?’ன்னு யாரும் கேட்கிறதில்லை இதுவும் ஒர் அடையாளமாம்!
‘எழுதுகோல் தெய்வம்! எழுத்தும் தெய்வம்’  என்றாயே பாரதி நீ வளர்த்த நெருப்புத் தமிழில் எச்சில் உமிழும் எழுத்தாளர்களை நீ என்ன சொல்வாயோ தெரியாது. எழுதினவன் இன்று ஏட்டைக் கெடுத்தான் நாளை நாட்டைக் கெடுத்தான் என்பதைப் புரிந்து கொண்டால் மனச்சாட்சி உள்ளவர்கள் மனம்மாறக் கூடும். இல்லையேல் மக்கள் மாற்றுவார்கள். மக்கள் என்றுமே அசிங்க விரும்பிகள் அல்லரே? பொறுப்பான பத்திரிக்கையாளர்களும் இதைப் புரிந்துதான் எதை வெளிப்படுவது என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள் எழுதுவது எல்லாமே எழுத்தல்ல. எழுப்புவதே மிகச் சிறந்த எழுத்து. இதை உணர்ந்தவனே மிகச் சிறந்த எழுத்தாளன்.


என்னதான் செய்கிறான் முத்து நிலவன்? - 2


வந்துவிட்டேன் நண்பர்களே 
வேலைகள் பல... வேதனைகளும் சில உள.
என்ன இருந்தாலும் நம் வேலைகளையும் சேர்த்துத்தானே செய்ய வேண்டியிருக்கிறது... வந்துவிட்டேன்...
இனி தினமும் அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது வருவேன்...

உங்களுக்கு மகிழ்ச்சியோ... என்னவோ... 
இன்று முதல் மீண்டும் எனது படைப்புகள் சிலவற்றை வலையேற்றுகிறேன்...
அன்புடன்,
நா.முத்து நிலவன்.
06-12-2012

என்னதான் செய்கிறான் முத்து நிலவன்?


என்னதான் செய்கிறான் முத்து நிலவன்?

                “வலைப்பூ ஆரம்பித்து விட்டான் முத்துநிலவன்என்பதோடு ஆரம்பித்து விட்டுவிட்டான் நிலவன்”  என்று யாரேனும் சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சிக் கொண்டேதான் ஒவ்வொரு நாளும் ஓடுகிறது. நம் வேலைகளை நாமே திட்டமிடக் கூடிய அளவிற்கு நான் பெரிய மனிதனும் இல்லை, திட்டமிடாமலே வேலை செய்யும் அளவிற்குத் தாழ்ந்த மனிதனும் (மினிதன்?) இல்லை நான்.
       ஏற்கெனவே எழுதிய நூல்கள், “மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்”, க.நா.சு., ஜெ.கா. பற்றிய முழுவிமர்சனம், “புதிய மரபுகள்கவிதைத் தொகுப்பு, “நல்ல தமிழில் --பிழையின்றி-- எழுதுவோம், பேசுவோம்மற்றும் -தினமணி, கணையாழி, செம்மலர், தீக்கதிர், ஜனசக்தி, புதியஆசிரியன், மற்றும் பல்வேறு மலர்களில் எழுதிய கட்டுரைகள் இவற்றோடு கல்கிசிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற இரண்டு சிறுகதைகள் உள்ளிட்ட எனது படைப்புகளை இந்த எனது வலைப்பூவில் இட வேண்டும் என்றும் ஆசைதான்.
        கையில் இருக்கும் இவற்றை தட்டெழுதி வெளியிட நேரம் கிடைக்காமல் நான் விரும்பாமலே நாடுமுழுவதும் --நாவால் நடந்துதிரிவது எனக்கே பிடிக்கவில்லை.
       ஆனால், ‘ஊடக வெளிச்சத்தில்நான் பேசும் பேச்சு சிலர் பலரைக் கவர்ந்து ஏதோ செய்து வருவதையும் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
        இதோ நேற்றைய தினம் -ஒரே நாளில் நான் கலந்து கொண்ட- மூன்று நிகழ்ச்சிகளையும் நேரில் கண்ட நல்ல ஆசரியரும்தாமே எழுதிய இசையமைத்த பாடல்களைத் தாமே எடுப்பான குரலில் பாட வல்லவரும், அதைவிட முற்போக்கான --வார்த்தைகளால் அல்ல வாழ்க்கையால் என்னைக் கவர்ந்தவருமான என் அருமைத் தோழர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் இன்று எனக்கு எழுதிய மின்னஞ்சல் எனது நிறைவற்ற மனதிற்கு’ ‘நாமும் ஏதோ செய்துகொண்டுதான் இருக்கிறோம்எனும் ஆறுதலைத் தந்தது. 
அதனை ஆவனப் படுத்த வேண்டும் என்பதற்காகவே நம் வலைப்பூவில் இடுகிறேன்….
---------------------------------------------------------------------------------------------------------------------

தோழமைமிகு நிலவன் அவர்களுக்கு.
வணக்கம்.  
செப்தம்பர் 25ல் தங்களுடன் கலந்து கொண்ட மூன்று நிகழ்வுகள் மனதிற்கு மிக இதமாக இருந்தது.
ஆலங்குடியில் கவிஞர் நீலாவின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் நமது அறிவொளி நாயகி திருமதி ஷீலாராணி சுங்கத் அவர்களை வரவழைத்து, தங்கள் தலைமையில்  நூல்கள் வெளியிட வைத்து, அறிவொளிக் குடும்பத்தினரை ஒருங்கிணைத்து அறிவொளிப் பாடல்கள், மனதில் நீங்கா நிகழ்வுகள் ஆகியவற்றை மீட்டுறுத்தியது மனதிற்குள் மலரும் நினைவுகளாக மலர்ந்தது.
அடுத்து அன்று பிற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் அம்மையாரோடு, பழைய அறிவொளித் தொண்டர்களும் புதிய சமூக ஆர்வலர்களும் சந்தித்த வேளையில், அறிவொளி வெற்றிவிழாவின் இருபதாம் ஆண்டினைக் கொண்டாடத் தாங்கள் முன்வைத்த ஆலோசனைகள் மனதைஅசைபோட வைத்தது.
நிறைவாக, அன்று மாலை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை நடத்திய எழில்மிகு ஏழு நூல்கள் வெளியீட்டில்,கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதை வெளியினிலேநூல் மதிப்பீட்டுரை அவ்விழாவிற்கே மகுடம் சூட்டியதாக அமைந்திருந்தது.
கவிஞர் பாலாவின் முற்போக்குச் சிந்தனைகளை த.மூ பதிவுகளிலில் இருந்ததிலும் பன்மடங்கு பகுத்துப் பாங்குற வீசிய உரத்தசிந்தனைகள்சுவைஞர்களை உணர்ச்சிப் பெருவெள்ளத்தில் மூழ்கடித்ததை அரங்கை அதிரவைத்த கரவொளிகளே சான்று பகர்ந்தது.
முத்தாய்ப்பாகத்  தங்களுக்கு முன்னதாக வரலாறு படைத்த வைரமங்கையர் நூலுக்குக் கருத்துரை வழங்கிய இரா.சம்பத்குமார், பெரியார் நாகம்மையின் கூற்றினைத் தவறாகப் புரிந்துகொண்டு மனிதர்களில் 99.9 சதம் ஆன்மீக வாதிகள்தான், வெறும் எழுத்துகளில் வேண்டுமானால் பகுத்தறிவு,நாத்திகம் காணப்படலாம் என்ற கொச்சைக் கூற்றுக்குத் தாங்கள் நான் 100 சதம் நாத்திகவாதி, பகுத்தறிவுப் பதிவுகள் முற்போக்கிற்கு வழிவகுக்கும் முனைப்பான பாதை என நெஞ்சுயர்த்தி பதிலடி கொடுத்தது என் போன்று அவையில் இருந்த 99.9 விழுக்காட்டினருக்கு பெருமையாயிருந்தது.
மெய்ப்பொருள் காணின் பொய்யுரை பொசுக்கும் போக்கினில் தயங்காதே என்னும் அய்யாவின் கூற்று தங்களால் செயலாக்கம் பெற்றது கண்டு பெருமிதம் கொள்கிறேன்.
தோழமையுடன்
பாவலர் பொன்.க
புதுக்கோட்டை
26-09-2011
-------------------------------------------------------------------------------------------------------------------------------

முத்துநிலவன் பேச்சு


ஆசிரியருக்கும், பெற்றோருக்குமான கடமை எழுத்தாளருக்கும் உண்டு

புதுக்கோட்டை, ஆக. 16: ஆசிரியர், பெற்றோர் ஆகிய இருவர்களுக்குமான கடமை எழுத்தாளருக்கும் உண்டு என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நா. முத்துநிலவன்.
புதுக்கோட்டையில் அந்தச் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற 10-வது மாவட்ட மாநாட்டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
மாணவர்களின் எதிர்காலத்தை மதிப்பெண்களே தீர்மானிப்பதாக கல்வி நிறுவனங்கள் கருதுவதால்தான், பாடப் புத்தகத்தையே கதியாகக் கொண்டுள்ள அவர்களிடம் கலை, கலாசாரப் பண்புகள் காணாமல்போய்விட்டன. இதனால், சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளைக்கூட மாணவர்களால் அறிந்து கொள்ள முடியாமல், சமுதாயத்திலிருந்து விலகிவிடுகின்றனர்.
கலை, இலக்கியமற்ற கல்வி உருத்தேறாது. ஆகையால், பொதுப் பாடத் திட்டத்தைக் கொண்டுள்ள சமச்சீர் கல்வி இதைத் தடுத்து நிறுத்தும்.
உயர் கல்வியை அரசு அனைவருக்கும் இலவசமாக அளிக்க வேண்டும்.
கலையில்கூட மக்கள் இழிவான பார்வை கொள்கிறார்கள். ஆனால், அதையும் கடந்து அனைவரது திறமைகளையும் தமுஎகச அங்கீகரிக்கிறது என்றார் முத்துநிலவன். மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கா. பிரகதீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ரமா. ராமநாதன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சு. மதியழகன் அறிக்கை வாசித்தார். மாநிலத் துணைச் செயலர் மதுக்கூர் ராமலிங்கம் தொடக்கவுரையாற்றினார்.
கவிஞர்கள் எல். வடிவேல், ஆர். வெள்ளைச்சாமி, பொன். கருப்பையா, களக்கமங்கலம் சக்திவேல், சரவணன், சுதாகர் ஆகியோர் பாடினர்.
விழாவில் பல்வேறு பரிசுகளைப் பெற்ற கவிஞர்கள் ஜீவி, தங்கம்மூர்த்தி, அ. செல்வராசு, சு.மதியழகன், சு. பீர்முகம்மது, ராசி. பன்னீர்செல்வம், ஆர். நீலா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
கவிஞர்கள் இளையமனோகரன், ஸ்டாலின், எஸ்.எ. கருப்பையா, சிவக்குமார், பூபாளம் செந்தில்குமார், தனிக்கொடி, எஸ். இளங்கோ உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நாகஸ்சுர நளாயினியுடன் திண்டுக்கல் மாரிமுத்துவின் கட்டைக்கால் தவில் இசைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

First Published : 17 Aug 2011 08:00:58 PM IST – DINAMANI-Trichy Edition  

முத்துநிலவன் பேச்சு!



தொழில்நுட்ப அறிவில் மனித நேயம் தேவை!
தொழில்நுட்ப மாநிலக் கருத்தரங்கில் கவிஞர் முத்துநிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-ஆகஸ்ட்-06
         புதுக்கோட்டை அருகில் உள்ள கல்லூரியில் நடந்த ‘மாநிலம் தழுவிய தொழில்நுட்பக் கருத்தரங்கில்’ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நா.முத்து நிலவன், ‘தொழில் நுட்ப அறிவோடு மனித நேயம் கலந்து வரும்போதுதான் சமுதாய முன்னேற்றம் சாத்தியமாகும்’ என்று குறிப்பிட்டார்.
           மாநிலத் தொழில் நுட்பக் கருத்தரங்கு:
         புதுக்கோட்டை அருகில் உள்ள கைக்குறிச்சி; வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு முழுவதும்உள்ள தொழில்நுட்பக்கல்லூரிகள் பங்கேற்ற ‘மாநிலத்தொழில்நுட்பக் கருத்தாய்வு-2011’ எனும் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரித் தாளாளர் ஆர்.எம்.வீ.கதிரேசன் தலைமை தாங்கினார். தாளாளர்கள் பி.கருப்பையா, ஆர்.ஏ.குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
           விழா மலர் வெளியீடு: கருத்தரங்கில், கோவை, மதுரை, திருச்சி, சேலம், மேல்மருவத்தூர், ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி, கும்பகோணம், திருச்செங்கோடு, பட்டுக்கோட்டை, பெருந்துறை, குடியாத்தம், காரைக்குடி, உள்ளிட்ட 44 தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து தலா இரண்டிரண்டு மாணவர்களின் தேர்வு செய்யப்பட்ட  ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய விழா மலர் வெளியிடப்பட்டது.
          விழா மலரை புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதுநிலை மேலாளர் கே.கிருஷ்ணக் குமார் வெளியிட கவிஞர் நா.முத்து நிலவன் முதல் மலரைப் பெற்றுக்கொண்டு மேலும் பேசியதாவது:
          ‘அறிவியல் தொழில் நுட்பம் வளர வளரத்தான் மனித சமுதாயம் மென்மேலும் முன்னேறும். கடந்த தலைமுறையை விடவும் இந்தத் தலைமுறை இளைஞர்கள் தொழில் நுட்ப அறிவில் மிகவும் ஆர்வம் காட்டிவருவதால் உலகம் முழுவதும் செல்லக்கூடிய வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்கள். ஒருகாலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து நிலத்தில் கிடந்த தமிழர்கள் இப்போது உலகின் ஐந்து கண்டங்களுக்கும் செல்வது தொழில் நுட்ப அறிவினால்தான். உலகின் முதல்தரப் பணக்காரராகப் பத்தாண்டுகளுக்குமேல் இருந்த பில்கேட்ஸின் முந்நூறுக்கும் மேற்பட்ட நாடுகளின் தொழிலகங்களில் முக்கியப் பொறுப்பில் இருப்பது இந்திய இளைஞர்கள்- அதிலும் குறிப்பாகத் தமிழ் இளைஞர்கள்- என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியது உண்மை!
            ஆனால், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் அவர்களின் சிறந்த மௌனப் படமான ‘மாடர்ன் டைம்ஸ்’ படத்தில், வருவதுபோல மனிதன் ‘எந்திரங்களோடு பழகிப் பழகி, மனிதத் தன்மையை இழந்து தானும் ஒரு எந்திரமாகி வருவது’ சாப்ளின் காலத்தை விடவும் இப்போது அதிகரித்துவிட்டது.
            நூறாண்டுகளுக்கும் முன்னர், புகை வண்டி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்தில் முதன் முதலாகப் பயணத்திற்கு விடப்பட்ட சிறிது நாளில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். அதாவது, ‘‘புதிதாக வந்திருக்கும் புகைவண்டி எனும் போக்குவரத்து எந்திரமானது பயங்கரமான ஓசை, மற்றும் புகையுடன் ஒரு பிசாசைப்போல ஓடிவருவதைப் பார்க்கும் ஆடு-மாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. மனிதர்களும் கூட அதிர்ச்சி அடைகிறார்கள். எனவே நமது பார்லிமெண்டானது புகைவண்டியின் வேகத்தை மணிக்கு 10கி.மீ வேகம் என்பதை 8கி.மீ. ஆகக் குறைக்க வேண்டும்!’’ பாருங்கள்! மணிக்குப் பத்து கி.மீ. வேகத்திற்கே அதிர்ச்சி அடைந்த காலம் போய் இப்போது மின்னல்வேக விமானங்களும் மணிக்கு ஆயிரக்கணக்கான கி.மீ. பாயும் ஏவுகணைகளும் வந்தது எப்படி? தொழில்நுட்ப வளர்ச்சிதான்! பாய்ச்சல் வேகத்தில் வளர்கிறோம் நாம்!
              ஆனால், ‘அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பில்லா தவர்’ எனும் குறளுக்கு ஏற்ப தொழில் நுட்ப அறிவோடு மனிதநேயப் பண்பையும் வளர்க்காவிட்டால் அறிவியல் அழிவிற்கே நம்மை இட்டுச் செல்லும் ஆபத்தைத் தவிர்க்க முடியாது.
              கணினி விசைப்பலகை, கணிப்பான், மற்றும் கைபேசி, தொலைபேசி அனைத்தும் அறிவியல் கண்டுபிடிப்பே என்றாலும் இவை அனைத்திலும் 5 எனும் எழுத்தருகில் அல்லது இவ்வெழுத்துகளின் நடு மையத்தில் உள்ள விசைப் பொத்தானில் இரண்டு பக்கமும் இரண்டு புள்ளி அல்லது கோடு இருப்பதைப் பார்த்திருக்கலாம். அது கண்தெரியாதவர்களும் இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் ஓர் உயரிய நல்ல நோக்கத்துடன் உலகம் முழுவதும் இவ்வாறே இக்கருவிகளின் புழக்கம் உள்ளது!
இதுபோலத்தான், அறிவியல் தொழில் நுட்பம் உலகப் பார்வையோடு, மனிதகுலம் முழுவதும் பயன்படுத்தும்படியானதாக உயர வேண்டும். அதுதான் மனித நேய வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்”
             மேற்கண்டவாறு கவிஞர் நா.முத்து நிலவன் பேசினார். கருத்தரங்கில் புதுக்கோட்டையைச் சுற்றிலும் உள்ள தொழில் நுட்பக் கல்லூரிகள் பலவற்றின் முதல்வர், பேராசிரியர்களுடன் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும் கலந்து கொண்டனர்.  முன்னதாகக் கல்லூரி முதல்வர் ஏ.வெங்கடேஷ் வரவேற்புரையாற்ற, துணை முதல்வர் எஸ்.கலியபெருமாள் நன்றி கூறினார்.
                             -----------------------------------------------
சற்றே சிலபல வரிகள் மாற்றங்களுடனும், சிலவற்றைச் சுருக்கியும் வெளியிட்டிருந்த நாளிதழ்களுக்கு நன்றி: தினமணி, தினமலர் தீக்கதிர் -06-8-2011
                             ---------------------------------------------


‘நல்லாசிரியர்’ விருது

தினமணியில் வெளிவந்த எனது கட்டுரை - நா.மு.

விண்ணப்பித்து 
வாங்குவதா விருது? (தினமணி-02-8-2011)
                       
தமிழக அரசு தரும்  நல்லாசிரியர்’ விருது ஒவ்வோராண்டும் செப்டம்பர்-5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த விருது மட்டுமன்றி, ‘கலைமாமணி’; விருது பற்றிய செய்திகளும் வரும்போதெல்லாம் அட இவருக்கா இந்த விருது?’ எனச் சிலர் பெயர்களைப் பார்த்து ஆச்சரியப் படுவதும்சில பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவதும் தொடர்கதையாகிவிட்டது! இதனால்இவ்விருதுகள் வரவர கேலிக்கூத்தாகிவிருது பெற்றவர்க்கும்,-ஏன்விருதுக்குமே கூட- மரியாதையற்ற நிலை உருவாகி வருகிறது! அரசுகள் மாறலாம்கட்சி-அரசியல் மாறலாம்ஆனால் மரபுசார்ந்த சிலமாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு.
                       சொல்லப்போனால்திரைக் கலைஞர்க்கும் ஆசிரியர்க்கும் அரசு விருது தருவதுபோலஎடுத்துக்காட்டான உழவர்களுக்;கும்,பொதுநோக்கில் சேவைபுரியும் அரசு ஊழியர்-மருத்துவர்க்கும்,புதுமைசெய்யும் இளைஞர்க்கும்நல்லவற்றைத் தரும் இதழ் மற்றும் செய்தியாளர்க்கும் நமது அரசு விருது வழங்கி கௌரவம் செய்தால் பல துறைகளிலும் உற்சாக ஊற்றுக் கிளம்பாதா என்ன
                       அரசியல்கடந்துமக்களால் மதிக்கப்படும் சான்றோர்புனிதமான பணிகளில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டோர் ஆகிய பெருமக்களைஅரசு தானே முயன்று தகவல் சேகரித்து,தகுதியானவரை அடையாளம்கண்டுஅழைத்துப்பாராட்டிவிருதுபெறும் அவரது தகுதிகளை அனைவரும் அறியச்சொல்லிஅவரது பணிதொடர வாழ்த்தி பின்னர் விருது தந்து அனுப்ப வேண்டும்.
                          ஆனால் இன்றுள்ள நிலை? ‘நல்லாசிரியரோ, ‘கலைமாமணியோ அவரே தனது தகுதிகளை எடுத்து விளம்பி --அவற்றுக்கான சான்றுகளையும் இணைத்து-- விண்ணப்பித்த பிறகு, ‘சிபாரிசுகளின் அடிப்படையில் தேர்வுசெய்துநூற்றுக் கணக்கானோரை வரிசையாக வரச்சொல்லி இலவச விநியோகம் போல விருது’ கொடுத்து அனுப்புவதில் என்ன கௌரவம் இருக்கிறதுஇதன் பலன்தான் என்ன?
             கடந்த ஆண்டு தமிழே தெரியாத தமன்னாவுக்கும்ஸ்ரேயாவுக்கும் தமிழ்நாடு அரசு கலைமாமணி’ விருது தந்தது நகைப்புக்கு இடமானது. கலைக்கு மொழிகிடையாது எனும் பொத்தாம் பொதுவான விளக்கம் போதாது. மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் தகுதி’ என்றால்,சர்க்கஸ் கோமாளிகளுக்குக் கொடுப்பதுதான் சரியானது! அவர்கள்படும் பாட்டுக்கு அங்கீகாரமாவது கிடைக்கும்!
           சிலர்-பலரின் சிபாரிசுகளால்தகுதியற்றவர்க்கும் வாரிவழங்கப்படும் விருதுகளால்சான்றோர் பலரும் விருதுகளைப் பார்த்து எள்ளி நகைப்பதும் சற்றே தள்ளி நடப்பதும் நடக்கும் தானே
முதலில் ஒரு கேள்வி: எனக்குக் கடன் வேண்டும்உரியமுறையில் திரும்பக் கட்டிவிடுவேன்“ என்று ஆசிரியர் அரசிடம் விண்ணப்பம் செய்யலாம், “எனக்குப் பணிஇடமாறுதல் வேண்டும் இந்தஇடம் கிடைத்தால் நல்லது” என்று அரசிடம் விண்ணப்பிக்கலாம். இவற்றை விட்டு, ‘எனக்கு விருது கொடுங்கள்’ என்று சுயமரியாதை உள்ள யாரும் விண்ணப்பம்’ போடுவார்களா என்னஏன் இது நமது அரசுகளுக்குப் புரிவதில்லை?
இப்போதுஇந்த விருதுகளைப் பெற விண்ணப்பம் போடும் பலரும்,அதை எப்படியாவது வாங்கிவிடச் செய்யும் செலவு-உள்ளிட்ட செயல்கள்’ விருதுகளே வெட்கப்படும்படியல்லவா உள்ளன?
          அப்படியானால், “இதுவரை விருதுபெற்ற யாருக்கும் சுயமரியாதை கிடையாதா?” என்றுகேள்வியைத் திருப்பினால்அப்படி எல்லாரையும் சொல்லிவிட முடியாது. பெரும்பாலோர் அப்படி இருந்தாலும்,சுயமரியாரை உள்ள சிலர்தம் மீது அன்பு கொண்டவர்களின் தொந்தரவு தாங்காமல்கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டு விருதுவாங்க மட்டுமே மேடைக்கு வந்ததும் உண்டு! இப்படியான விருதை அவர்கள் பெரிதுபடுத்தாமல் நண்பர்களின் மகிழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. அப்படியானவர்களைச் சந்திக்கும்போது --விருதாளர்களைத் தேர்வுசெய்யும் முறை மற்றும் விருதுவழங்கும்-- முறை சரியல்ல என்றே அவர்களும் மனம் கசந்து சொல்கிறார்கள்.
           இலக்கியத்தில் இன்றும் எல்லாராலும் மதிக்கப்படும் -இந்தியஅரசின் கௌரவம் மிகுந்த இலக்கிய விருதான-- சாகித்திய அகாதெமிவிருதுக்கான தேர்வுக் குழுவில் நான் சில முறை இருந்திருக்கிறேன். அவர்கள் பல படிகளை வைத்திருக்கிறார்கள். முதல்கட்டத் தேர்வின் போதுபத்துப்பேர்களைக் கேட்பார்கள். பரிந்துரைக்கான புத்தகங்களை அனுப்பிவைப்பதோடு, ‘இந்த நூல்கள் தவிரவும்உங்கள் பார்வையில் பட்டவிருதுக்குத் தகுதியான நூல் என்று கருதுவதை நீங்களே வாங்கிக்கொண்டுஅந்த நூலின் தகுதிகளை எங்களுக்குத் தெரிவியுங்கள் அந்த விலையை நாங்கள் தந்துவிடுவோம்’ என்றும் நடுவர்களுக்குத் தெரிவிக்கப்படும். அறிவிக்கப்படும் வரை எழுத்தாளருக்குத் தெரியாமலே இது நடக்கும்! பலகட்டத் தேர்வு செய்தோரை அவர்களுக்குத் தெரிய வழியுமில்லை!
          இதேமுறையில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் என் தலைமையி லான தேர்வுக்குழு, 1997ஆம் ஆண்டின் சிறந்தநாவலாக சாய்வு நாற்காலி’ நாவலைத் தேர்வுசெய்தது. மதுரை - திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட விழாவில் நானே என் கையால் அந்த விருதை எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவர்களுக்கு வழங்கியபோது விருதுபெற்றவரைப் போலவே விருது தந்தவர்களும் மகிழ்ந்தோம். ஆதன்பின்னரே சாகித்திய அகாதெமி விருதும் அதே நாவலுக்காகக் கிடைத்ததை மதிப்பிற்குரிய படைப்பாளியான அவரே கூறி மகிழ்ந்தார்!
          இதேபோல 1993இல் வெளிவந்த எனது புதிய மரபுகள்’ கவிதை நூலுக்கு அந்த ஆண்டின் சிறந்த கவிதைத்தொகுப்புக்கான விருதை வழங்கிய தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றம் என்னிடம் எந்தவிதமான விண்ணப்பத்தையும் கேட்கவில்லை. அவர்களாகவே அழைத்துத் தந்தார்கள்.
தனி அமைப்புகளே தகுதியானநூல்தகுதியான ஆசிரியர்தகுதியான இலக்கியவாதிமுதலான பல விருதுக்குரிய தகவல்களைத் திரட்டிவிடும்போதுநமது அரசால் திரட்ட முடியாதா என்ன?நிச்சயமாக முடியும்.. தேர்வுக்குழுவினர் கொஞ்சம் விவரமானவர்களாகவும்சிரமம் பாராத வராகவும் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவராகவும்’ இருக்கவேண்டும். அவ்வளவே! விருதுக்குத் தேர்வுசெய்யும் குழுவை முதலில் சரியாகத் தேர்வு செய்துவிட்டால் எல்லாம் சரியாக நடக்க வழியண்டு
இன்னொன்று விருதுபெறுவோரின் வயது சார்ந்தது
           ஆசிரியப் பணியில் ஓய்வுபெற ஒன்றிரண்டு ஆண்டுகளே உள்ள,அல்லது ஓய்வு பெற்றுப் பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கே பெரும்பாலும் நல்லாசிரியர்விருது என்று புகழ்பெற்றுவிட்ட மாநில அரசின் சிறந்த ஆசிரியர்க்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுவிண்ணப்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது. இந்த விருதை நாற்பது வயதுக்கும் முன்னதாகத் தர முடிந்தால்அவரதுநல்லாசிரியப் பணியை’ மீதமுள்ள ஆண்டுகளில் பள்ளிக்குழந்தைகளும் பயன்பெற உதவியிருக்காதா என்ன?  நிச்சயம் அதற்கொரு பாதிப்பு அவர்களிடம் இருக்கும். இதைவிட்டு முதியோர் உதவித்தொகை’ போல விருதுகளை ஓய்வுபெறும் வயதில் தந்து வீட்டுக்கு அனுப்புவதால்அவர்வேண்டுமானால், ‘ஓய்வுபெற்ற-மற்றும்-விருதுபெற்’ என்று சாகும்வரை போட்டுக் கொள்ளலாமே தவிர,விருதுபெற்ற முதியவரால் சமுதாயத்துக்கு -பணிபுரிந்த துறைக்கு- என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?
             பொள்ளாச்சியில் இருந்துகொண்டுகவிஞர் சிற்பிஅவர்கள்மூத்தபடைப்பாளி ஒருவருக்கும் இளைய படைப்பாளி ஒருவருக்குமாக -இரு பிரிவுகளாக- விருதுடன் கூடிய ரொக்கப்பரிசுகளை ஆண்டுதோறும் தந்து கௌரவிப்பது போல தமிழகஅரசும் கலைமாமணிநல்லாசிரியர் விருதுகளை இளையவர்க்குத் தனியாகவும்மூத்தவர்க்குத் தனியாகவும் கூட வழங்கலாமே
             சான்றோரை கௌரவிப்பது தேவை அதைவிடவும் அவரதுபணி விருதுபெற்;ற பின்னரும் சமூகத்திற்கும் பள்ளிக்குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு அரசு யோசிக்கவேண்டாமாஇளைஞர்க்குக் கொடுத்து,ஒருவேளை அவர் தவறு செய்துவிட்டால்...விருதுக்கு அவமரியாதையாகிவிடுமே! என்றால்இப்போது விருதுபெற்றோரில் -விருதுபெற்ற பிறகும்-- தவறுசெய்து தண்டனை பெற்றவர்களும் உண்டே! குற்றப் பட்டியலில் பெயர் இடம்பெற்ற ஒருவருக்கு மத்திய அரசுபத்மஸ்ரீ’ விருது தந்ததும் நடந்ததே!
            அதோடுஅரசு விருதுபெற்றோர் காலமாகும் போதுஅந்தந்தத் துறைசார்நத அரசு உயர் அலுவலர்கள்-- ஏன் மாவட்ட ஆட்சியரே கூட-- வந்துஅஞ்சலி செலுத்திஅரசின் சார்பாக கௌரவிப்பது,அல்லது அரசின் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடுவது விருதுபெற்றவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல விருதுக்கே கௌரவமாக இருக்குமே! இதையும் அரசு யோசிக்கலாமே?
           பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனைத் தொடர்ந்து எஸ்.பி.பால சுப்பிரமணியனும் பத்மஸ்ரீ விருது பெற்றுவிட்டார். சுசிலாம்மா பத்மப+ஷன் விருதே பெற்றுவிட்டார். இவர்களின் தகுதியறிந்து அந்த விருதுகளைத் தந்த மத்தியஅரசுஇவர்களுக்கு முன்னோடியான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஏன் இன்னும் பத்மஸ்ரீ விருதுகூடத் தரவில்லை எனும் கேள்வி எழுவது நியாயம் தானேபாவம், அவர் இந்த விருது வாங்கும்“ தொழில் நுட்பம் தெரியாதவரோ என்னவோ?
            அரசுவிழாக்களில் பாடப்படும் நீராரும் கடலுடுத்த’ எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மட்டுமல்லாமல் பல்லாயிரம் திரைப்பாடல்களுக்கு இசையமைத்துத் தந்த இசைமேதை ஏம்.எஸ்.வி. போலும் எண்ணற்ற மேதைகளும்நல்ல ஆசிரியர்களும் மட்டுமல்ல,விருதுக்கத் தகுதிவாய்ந்த உழவர்களும்;, அரசு ஊழியர்-மருத்துவர்களும்எடுத்துக்காட்டான இளைஞர்களும்இதழாளர் மற்றும் செய்தியாளர்களுமாய்ப் பற்பலர் விளம்பர வெளிச்சமே இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்விருதுகளுக்காக ஏங்கி அல்ல,விருதுகளை அலட்சியப்படுத்தி விட்டு!
           தான் தரும் விருதுகளின் கௌரவத்தைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை!அரசின் கடமையை உரிமையோடு எடுத்துச்சொல்ல வேண்டியது நம் கடமை! 
-------------------------------------
நன்றி : தினமணி – நாளிதழ் - 02-8-2011  
---------------------------------