நூல் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாஸ்கர் கோபால் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவும் எனது அணிந்துரையும்

 



வெளியீட்டு விழா - அழைப்பிதழ்

வெளியீட்டு விழாப் படங்கள்:






இனி இந்த நூலுக்கு நான் எழுதிய 

அணிந்துரை – 

காதலும் சமூகக் கோபமும் 

சரிவிகிதத்தில் கலந்திருக்கும்     

ஐக்கூ நிறைந்த அழகான தொகுப்பு!

--நா.முத்துநிலவன்--

செய்தித்தாளுக்குள் மறைந்தே
வீடுவர வேண்டியுள்ளது                                                                   
அணையாடை
(நாப்கின்) – என்னும் கவிதையில்  

சிக்கிக் கொண்டேன்! காரணம், அதன் சமூக விமர்சனமும், அதில் கிடந்த ஒரு புதிய சொல்லும்! புதியவை காணும் முயற்சிதான் சிலரை விஞ்ஞானி ஆக்குகிறது. வேறு சிலரைக் கவிஞராக்குகிறது. பாஸ்கர் கோபால் இதில் இரண்டாவது ரகம்!

‘அணையாடை’ என ஒரு புதுச்சொல்லை எழுதிப் பார்த்திருக்கிறார். சரிதான். பாரதி ‘மெம்பர்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘அவையவி’ ‘அங்கத்தான்’, ‘உறுப்பாளி’ என்ற சொற்களை முயற்சி செய்தாராம்! அவர் கண்டு சொன்னதுதான் புரட்சி, பொதுவுடைமை என்னும் புதிய தமிழ்ச் சொற்கள்! (“ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி”, “முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை” - பாரதி)

ஊடகம், திரைப்படம், நடைமுறை வாழ்வில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் முழுகி மூச்சுத் திணறிக் கிடக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில் இன்றைய கவிகள் பலரும் தயங்காமல் ஆங்கிலத்தைக் கலந்து எழுதிவர, பாஸ்கர் கோபாலின் இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

நல்ல கவிதைக்குள் நல்ல கருவும் நல்ல சொல்லும் பிரிக்க முடியாமல் கலந்து கிடக்கும். “மாத விலக்கு” என்னும் சொல்லுக்குள் சமூக ஒதுக்கம் இருக்கிறது! ‘விலக்கு’ எனும் சொல், ஆண்டாண்டுக் காலமாக நம் அம்மாக்களை, சகோதரியரை, இணையரை, மகள்களை அவர்கள் அடிமைப் பட்டுக்கிடந்த சமையற் கட்டுக்குள் கூட வர விடாமல் ‘ஒதுக்கி’ வைத்த சொல்! எவ்வளவு கற்றாலும் ஆண் மையச் சமூகத்தில் பாலினப் பாகுபாடு தொடர்வதைக் காட்டும் சொல் தானே இது?

கேட்டால், “சாதி, மாதவிலக்கு மற்றும் அசைவம் எல்லாம் சுத்தம் சுகாதாரம் சம்பந்தப் பட்டது, தீண்டாமையல்ல” என்று சமாளிப்பார்கள்! ஆனால் இது ஒரு சாமர்த்தியமான மற்றும் தவறான பதில்தான்!

இந்தியாவின் முதல் குடிமகனும், செயற்கைக் காலைக் கண்டு தந்த அறிவியல் அறிஞருமான அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களையே, வெறுந்   தரையில் உட்கார வைத்துத்தான் ‘ஆசி’ வழங்கினார், சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சங்கராச்சாரி! அந்த இருவரில் அசுத்தமானவர் யார்?

‘"குளித்து விட்டுக் கோவிலுக்குள் வரச்சொன்னார்கள்...

    நான் குளித்துவிட்டுத்தான் வந்தேன்...
                
ஆனால்,
               
அவர்கள் குளத்தில் அல்லவா தீண்டாமை கலந்திருந்தது!" என்று  நா.காமராசன் கேட்டது, திரவுபதி முர்மு காலத்திலும் பொருந்துகிறதே!

‘கரித்துணி’களில் இருந்து நம் பெண்களைக் காப்பாற்றிய ஒரு சொல்- ‘நாப்கின்’ என்பது. இதைச் சொல்லவும், கடைகளில் போய் வாங்கவும் வெட்கப்பட வேண்டியதில்லை. ஆனாலும் அர்த்தம் கெட்ட தனமாக இதை, ‘ரகசியமாக’ கேட்கவும் வாங்கியதை மறைத்து எடுத்துக் கொண்டு வரவும் செய்திருக்கிறது நம் சமூகம். இதைச் சொல்லாலும் பொருளாலும் இரண்டு முனைகளில் தாக்கி உடைக்கிறார் கவிஞர்!

பால் வேற்றுமை பாராட்டும் சொற்களில் இன்னும் பெண்ணடிமைத்  தனம் வளர்ந்து கொண்டிருப்பதை அரசியலாகவும் பார்க்க வேண்டும். கவிதை, கதை படைப்புகளாகவும் எடுத்துக் காட்ட வேண்டும்! கன்னி, விதவை (கைம்மனையாட்டி -கம்மனாட்டி), பத்தினி, பரத்தை, கற்புக்கரசி, தேவ(ர்)அடியாள், கற்பின் கனலி முதலான தமிழ்ச் சொற்கள் பெண்ணடிமைத் தனத்தைப் காலம் காலமாகக் காப்பாற்றி வரும் கழிசடைச் சொற்கள்! இவை பற்றிய புராணங்கள் வரலாறல்ல, புனைவுகள்.

சமூகம் மாறியும் பழமையைப் பிடித்துக் கொண்டு விடாமல் பின் பற்றும் சில பழக்கவழக்கங்களை இடித்துரைக்கும் புரட்சிக் கவிஞர் –


வழக்கம் என்பதில் 

ஒழுக்கம் இல்லையேல்                                  

கழுத்துப் போயினும் 

கைக்கொள வேண்டா என்பார்.


இதை நமது கவிஞர்,


இன்னும் மாறவில்லை
சிறுமிகளுக்கான பரிசுகள்

சமையல் சாமான்கள் –என்பது 

மிகச் சரியான பார்வை! பெண்களைப் பற்றிய பார்வையைச் சரியாக முன்வைக்கிறார். பொதுவாக ஒருவர் சரியானவரா இல்லையா என்பதை பெண்களைப் பற்றிய அவரது பார்வையைக் கொண்டே அறிந்து கொள்ளலாம்! பாஸ்கர் சரியானவர்தான்!

சமூக அக்கறையுள்ள கவிதைகளே புதிய சமூகம் எழுச்சி பெற உதவும் என்று நம்புகிறவன் நான். சமூகக் கவலைகளை, அழகும் அர்த்தமுமாய்ச் செதுக்கிய சொற்களில், இளமைக்கே உரிய காதல் துள்ளலுடன் பாஸ்கர் கோபால் எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.


குளத்தில் இசைக்குறிப்பு

வரைகிறது

காற்று

இது போலும் அழகான கவிதைகள் தொகுப்பு முழுவதும் உள்ளன.

“ஒரு கட்டுரையைக் கொஞ்சம் சுருக்கித் தர முடியுமா?” என்றால், அதைக் கவிதையாக்கித் தந்து விடலாம்! என்பதே சரியான பதில்

இதோ பாருங்கள் ஒரு கவிதை:

கடிதம் கேட்கிறது

நிரந்தர முகவரி,

மூன்றாம் பாலினம் - 

இந்தக் கவிதையின் கரு, புரிந்தவர்களைத் தூங்க விடாது! யுகம் யுகமாகப் பிறர் உணர முடியாத வலி! பலபக்க விளக்கம் கோரும் ஒரு சிறு கவிதை. மகாபாரதப் புராணப் புனைகதையில் ‘சிகண்டி’  என்றொரு பாத்திரம் வரும். இருந்தும் என்னென்னவோ பெயர்களால் சொல்லப்படும் வலிகளின் வரலாற்றை சின்னஞ்சிறு கவிதையில் சொல்ல முடியும் என்றால் அதுதானே சிறந்த கவிதை!

 ஒரு கவிதையிலிருந்து எடுத்த தலைப்பு என்பதோடு, இந்தக் கவிதைத் தொகுப்பு முழுவதுமே விளக்கிவிட முடியாத வலியைப் படிப்பவர்க்குக் கடத்துகிறது. இது எந்திரப் பொறியியல் (B.E. Mechanical Engineering) படித்த ஒரு கவிஞனின் படைப்பு என்பதை நினைத்து நான் வியந்து போகிறேன்! மகிழ்ந்து போகிறேன்! வாழ்த்தி மகிழ்கிறேன்.

தமிழின் ஆரம்ப கால ஐக்கூக்கள் –ஜப்பானிய ஐக்கூ இலக்கணப்படி– அரசியலே இல்லாமல்தான் இருந்தன! ஆனால் தமிழில் இவை பரவலாக அறியப் படும்போது அரசியல் பேசத் தொடங்கி விட்டன! இப்போது தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த கவிஞர் மு.முருகேஷ் அவர்களின் முதல் ஐக்கூ தொகுப்பு ‘விரல் நுனியில் வானம்”. எனும் நூல். ‘ஐக்கூ’ போலவே கையடக்க அளவில் 1993இல் வந்த அதற்கு நான் ஒரு முன்னுரை எழுதியிருந்தேன். அதில் இந்த விவரங்கள் சற்றுக் கூடுதலாக இருக்கும் அதனால்தானோ என்னவோ மதுரைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் இந்த முன்னுரையும் பாடமாக இருந்தது! நன்றி: முனைவர் இரா.மோகன்)

இப்போது பெரும்பாலான ஐக்கூக்கள் அரசியலை அழகியலோடு பேசி வருகின்றன என்பதோடு, தமிழின் மரபுக்கவிதை புதுக்கவிதையை அடுத்து ஏற்கப்பட்ட கவிதை வடிவமாக ஐக்கூ கவிதை நிலை நின்றுவிட்டது!

அரசியலை அது அரசியல் என்றுகூடப் பலரும் அறியாதபடி அழகியலோடு எழுதி வெற்றிபெறும் கவிதை பலவற்றை பாஸ்கர் கோபால் எழுதியிருக்கிறார் இந்தத் தொகுப்பில்.

இதோ பாருங்கள், விவசாயிகளின் வேதனையையும் நமது அரசுகளின் அலட்சியத்தையும் மூன்று வரிகளில் முடிந்து விட்டார்-   

நாற்று நடாமலே
முளைக்கிறது நெல்-
அரசுக் கிடங்கில்.

ஒரு வகையில் ஐக்கூவின் வேலையே அதுதானே? முதல் அடியில் ஒரு முடிச்சுப் போடுவது. இரண்டாவது அடியில் அதை இறுக்கி விடுவது, மூன்றாவது அடியில் அந்த முடிச்சு அவிழ்க்கப் படும் போது, அப்படி அவிழ்ந்த முடிச்சு, கண்ணகியின் அவிழ்ந்த கூந்தலாகவும், எரிதவழும் வரிகளாகவும் எழுவதுண்டு! எவன் தலையிலாவது வைத்த நெருப்பாகவும் விழுவதுண்டு!. அடுத்த கவிதை அப்படி ஒரு கொடுமைக்குத் திதி கொடுக்கும் கவிதையாக வந்து விழுகிறது பாருங்கள் -


ஆறுகளுக்கு

திதி கொடுக்கிறது

            மணல் லாரி.

நூறுபேர் செய்யும் வேலையை ஒற்றையாகச் செய்ய முடிந்த யானையை நாம் பிச்சையெடுக்கத் தானே பெரும்பாலும் வைத்திருக்கிறோம் – அது கோவிலில் ஆசீர் வாதம் செய்யவும் கூட, காசு கேட்க வைத்த புனிதர் நம் மனிதர் அல்லவோ?! அந்த ஈனத்தனத்தை இப்படி எழுதுகிறார் கவிஞர் -


சில்லறை தராதவனை

ஆசீர்வதிக்க மறுக்கிறது

கோவில் யானை  - 

ஆசி பெற முடியாத இந்தப் பாவம் யாருக்கு? ஏழைக்கா? யானைக்கா? இல்லை யானை ‘ஓன’ருக்கா? என்னமோ போடா கணேசா! இதை எந்தப் பிள்ளையாரிடம் போய்ச் சொல்ல? என்னும் பற்பல கேள்விகளைப் படிப்பவர் மனத்தில் அலைஅலையாக எழுப்புகிறது கவிதை!

வள்ளுவர் ஒரு வியப்பான தீயைச் சொல்லுவார். பொதுவாக “கிட்டப் போனா சுடும், எட்டிப் போனா குளிரும்” என்பது தானே தீயின் இயல்பு? ஆனால் வள்ளுவர் சொல்லும் காதல் தீ, ‘உல்டா’வாக இருக்கிறது! ஆம்! எட்டிப் போனா சுடுமாம், கிட்ட இருந்தா குளுகுளுனு இருக்குமாம் – இதோ


நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்என்னும்                               தீயாண்டுப் பெற்றாள் இவள்? -என்பார் நம் வள்ளுவத் தாத்தன்!  இதை நம் சிந்துவெளி ஆய்வாளரும் நல்ல கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் ‘இப்படி ஒரு தீயா? என ஒரு கவிதை நூலாக எழுத அதை நம் கவிஞர் மைதிலி கஸ்தூரி ரெங்கன் முகநூலில் தொடர்ந்ருது ஓவியமாகப் பதிவிட்டு வருவது தனி அழகு!

பாஸ்கர் கோபால் சொல்லும் இந்தத் தீ, உலகின் மிகப் பழைய தீ! ஆனால் பலரும் இனம் காணாத கோணம்! இதைப் படித்த பிறகு, நம்மில் பலர் பள்ளிப் பருவத்தில் – இன்றைய காலை மதிய உணவு வழங்கப்படாத காலத்தில் படித்தவர்கள் – அனுபவபூர்வமாக அறிந்திருப்பர். எனினும் இந்த ‘தீயால் வாடும் பூக்கள்’ இன்றும் இருக்கிறார்கள் என்னும் உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது என்பதை நினைவூட்டுவதாகக் கவிதை உள்ளது 


நீர் கொண்டு அணைத்தும்  

அணையவில்லை

பசித்தீ.

இது, மணிமேகலையின் அமுதசுரபிகளுக்கு மசியாது! காரல் மார்க்சின் வள்ளுவரின் ‘கொடிறு உடைக்கும் கூர்ங்கையர் அல்லார்க்கு ஈர்ங்கை விதிரார் கயவர்’ எனும் வழி ஒன்றுதான் தீர்வு என்பதை நினைவூட்டுகிறது.

      இதுபோலவே, ‘அரசியல் சரியாகாமல் சமூகம் சரியாகாது’ என்பதை தொடர்ந்து சொல்லும் கவிதைகளால் நிறைந்திருக்கிறது இத் தொகுப்பு.


சின்னத்தில்

மறைகிறது

குற்றப் பின்னணி.

 

காலியாகவே இருக்கிறது

முதல் வகுப்பு

சிறையில்


தள்ளினேன் திறந்தது

கோப்புகளின் கதவு

சிரிக்கிறார் காந்தி – 


போலும் நெற்றிப் பொட்டில் அடிக்கும் நல்ல கவிதைகளை விளக்கிச் சொல்ல  வேண்டாம் என்று விடுகிறேன்.


கிழிந்த ரூபாய் நோட்டாய்

பெண்கள்

இலவசப் பேருந்தில் – 

இன்னும் யோசித்தால் இலவசத்தைக் காயப் படுத்தாமலே பெண்களுக்காகப் பேச முடியும் என்று  நினைக்கிறேன்.  

பொதுவாக, இலைமறை காயாகக் கிடந்து, இளமையில் புரிந்து கொள்ள முடியாத பெற்றோரின் பாசத்தைத் தானும் ஒரு தாய் தந்தையாக வரும்போதுதான் பிள்ளைகள் புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றாலும் தொகுப்பில் இவர் காட்டும் தந்தைப் பாசம் மகிழ்ச்சியளிக்கிறது. இவர் தாய் தந்தையர் உண்மையிலேயே மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடையலாம்! அவர்களைப் பெருமைப் படுத்தும் பல கவிதைகள் தொகுப்பில் உள்ளன.


மாதாமாதமும் மாறியசெருப்பு

வருடக்கணக்கிலும் மாறவில்லை

அப்பாவானவுடன் -

 ஆசையை விட்டுவிட ஆசைப் படுவோர்தான் துறவியாம்! ஆனால் புத்தர் அப்படிப் பட்ட துறவி அல்ல என்பதால் அவரை வெற்றிகொள்ள முடியாத வைதீகம் அவரைத் தின்று செரிக்க, அவரையே கடவுளாக்கி விட்டது!  இதை -

பலரின் ஆசைக்கு

பரிசுப் பொருளானார்-

              புத்தர் – 

கவிதையில் வரலாற்றையே சொல்லி விடுகிறார்!

பிறகு, வழக்கம் போலக் காதல் கவிதைகள் ஆங்காங்கே உள்ளன! காதலைப் பாடாத கவிஞர் உண்டா என்ன? அதை கவிஞர் மீராவைப் போல் வித்தியாசமாகச் சொல்லி நம் மனதிலும் இடம்பிடிக்கிறார் கவிஞர்: இதில் சிறப்பு என்னவென்றால், ஆணாக மட்டுமல்ல, பெண்ணாகவும் ஒரு கவிஞனால் மாறி அவள் சார்பாக யோசிக்க முடியும் என்பதுதான்!


ஆழமாகத் தேடிப் பார்க்கிறேன்.

எல்லோரின் அவன்களும் இருக்கிறார்கள்

என்னவனைத் தவிர

 

வானவில்லாய் மிளிர்ந்தது!

கருப்பு மையில் எழுதிய

உன் பெயர்.

 

தள்ளுவதா? இழுப்பதா?

திறக்கத் தெரியவில்லை

அவளின் கண்ணாடி கதவை.

நிறைவாக வந்திருக்கும் இத்தொகுப்பின் ஒரே குறை – கவிதைகளின் எண்ணிக்கைக் குறைதான். ஆயினும் குறளின் சீர் குறைவாகவே இருந்தாலும் நிறைவான கருத்துகள் இருப்பதால் குறளின் பெருமை ஒன்றும் குறைந்து விட வில்லையே!

எனது அணிந்துரையின் நிறைவாக ,


மேலத்தெருவும் கீழத்தெருவும்

ஒன்றாகிறது

தெருவிளக்கில் – 

என்று கவிஞர் எதார்த்தமாகச் சொல்லியிருப்பது உண்மை என்றாலும், அகவெளிச்சம் கிடைக்க “அம்பேத்கர் என்னும் தெருவிளக்கு” என்பதை நாம் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் நமது தமிழ்ச் சமூகத்தின் உயர்வை, இழுத்துக் கீழே தள்ளி மிதித்துக் கொண்டே இருப்பது இங்கே புரையோடிப் போயிருக்கும் சாதி தான்!

அதனால்தான் –

“சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று

பாதியை நாடு மறந்தால் – மற்ற பாதி துலங்குதல் இல்லை” என பாரதி தன்னிடம் சொன்னதாகப் பாரதிதாசன் சொல்வார்.

நாமும் இதைத் தொடர்ந்து சொல்வதோடு செயல்பாட்டுக்கும் வரச் செய்ய வேண்டும். அந்த வகையில் அழகாகவும் அர்த்த நிறைவோடும் நறுக்கென்று சொல்லத் தெரிந்த பாஸ்கர் கோபால், நல்ல கவிஞராகப் பெயரும புகழும் பெற்றுத் திகழ்வார் என்று நான் திடமாக நம்புகிறேன்.

இருகரம் பற்றி இதயம் நிறைய வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்புடன்,

நா.முத்துநிலவன்,

மாநிலத் துணைத் தலைவர் –

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,

புதுக்கோட்டை – 622 004


10-8-2026 திங்கள்

 ---------------------------------------------------------------------------------------------------------------- 

நன்றி : கவிஞர் தங்கம் மூர்த்தி, 

 புலவர் கும.திருப்பதி

அன்புத் தங்கையர் 

இரா.ஜெயா, மைதிலி, 

தோழர் சோலச்சி 

'வீதி' கலை-இலக்கியக் களம்  

ஒருங்கிணைப்பாளர் தங்கை மு.கீதா, 

"விதைக்கலாம்" ஸ்ரீமலையப்பன் உள்ளிட்ட  

நம்பிக்கை நட்சத்திர  நண்பர்கள் , 

சிறப்பு நன்றி : 

பாஸ்கரின் தந்தை 

திரு கோபால் அவர்களுக்கும் 

தாயார்க்கும், பாஸ்கர் கோபாலின் இணையர் 

அன்பு மகள் சீத்தாவுக்கும், 

அன்புக் குழந்தைகள்                  

ரிஷிகேசவ், ஆதிரன் இருவர்க்கும்

                                    எப்போதும் போல நிகழ்வுக்கு வந்திருந்த                                                      புதுக்கோட்டை நண்பர்கள் அனைவர்க்கும்

----------------------------------------------------------------------------------- 

நூல் விலை ரூ.150.

நூல் பெற  - பேசுக

ஜி.பே. எண்-+91 90033 82990

(அஞ்சல் செலவு தனி)

--------------------------------------------------------------

ஆர்.நீலா எழுதிய இரண்டு நூல்கள் வெளியீடு


ஏற்கெனவே

'வீணையல்ல நான் உனக்கு'

(கவிதைகள்)

'பாமர தரிசனம்'

(அறிவொளி கள அனுபவங்கள்)

'கற்றது சிறையளவு'

(சிறைவாசிகளுக்கு எழுத்தறிவு கற்பித்த அனுபவங்கள்)

முதலான, 

எட்டுநூல்களை எழுதியிருக்கும்

கவிஞரும் எழுத்தாளருமான ஆர்.நீலா

இப்போது எழுதியுள்ள 

இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா

நேற்று -22-7-2025 – ஆலங்குடியில் நடந்தது.

தமிழ்நாடு அரசின்

மாண்புமிகு பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர்

சிவ.வீ.மெய்யநாதன் அவர்களும்

பன்மொழித் திரைக்கலைஞர்

தோழர் ரோகிணி அவர்களும்

கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டுப் பேசினார்கள்



விழாப்படங்களும் அழைப்பிதழும்


படத்தில் இடமிருந்து வலமாக
நா.முத்துநிலவன், ராசி பன்னீர் செல்வன், தங்கம் மூர்த்தி,
ரோகிணி, ஆர்.நீலா, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,
'பறம்புத் தேக்கன்' திருப்பதி வாசகன்,
நீலாவின் இணையர் சுபி, ஸ்டாலின் சரவணன், மு.கீதா
----------------------------------

நூல்கள் வாங்க –

(இரண்டு நூல்களும் சேர்த்து ரூ.240

ரூ.250 அனுப்பினால் உங்களை வந்தடையும்)

தொடர்புக்கு -

கவிஞர் ஆர்.நீலா – செல்பேசி எண் - 63827 81951 

------------------------------------ 

'அழகனும் அழகிகளும்' 

நூலுக்கு நான் எழுதிய முன்னுரை 

--------------------------------------------  

இருளில் கிடக்கும் வைரங்களின் மீது 

ஒளிபாய்ச்சும் கலை - களப்பணி 

-- நா.முத்துநிலவன் -

நம் தமிழைப் பழங்காலத்திலிருந்தே முத்தமிழ் என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப் படுகிறோம்! பன்னாட்டு வணிகப் பண்பாட்டுச் சூழலில் வாழப் பழகிவிட்ட இன்றைய இளைஞர் பலர், இதன் பொருளை அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்!

தமிழை, இயல்-இசை-நாடகம் என முத்தமிழ் என்கிறது தமிழ் மரபு! இயல் என்பது கவிதையும் உரையாடலும்.                                                                                                         இசை என்பது அதையே உரிய இசையோடு பாடுவது.                     நாடகம் என்பது உரையாடலுடன், இசையும், நடிப்பும் சேர்ந்தது. 

இப்போது முத்தமிழுடன் அறிவியல் தமிழ், இணையத் தமிழ் என்று ஐந்தமிழ் வரை தமிழ் வளர்ந்திருப்பதும் உண்மைதான்...ஆனால்... 

ஆனால், முத்தமிழின் நுட்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோமோ? என்னும் கவலை, என்னைப் போலப் பலருக்கும் உண்டு! மரபுக் கவிதை, புதுக்கவிதையாகக் கால ஓட்டத்தில் பரிணமித்தது போல, மரபுக் கவிதையின் நுட்பங்களான, வரகவி, ஆசுகவி, சித்திரக்கவி, வித்தார கவி என்பதெல்லாம் அனேகமாக அழிந்து வரும் பட்டியலில் உள்ளன! இந்தக் கவிதைகளுடன் நீண்ட காலத் தொடர்பில் இருந்த தமிழிசை நுட்பமும், நடன நுட்பங்களும் கூட அழிந்துவரும் பட்டியலில் இருப்பது பற்றிக் கவலைப் படுவோர் யாரிருக்கிறார்?

ஆனால் சிறுபான்மையோர் பக்கமே எப்போதும் இருக்கும் கலை – இலக்கிய வாதிகள் இதுபற்றிக் கவலைப்படுவது இப்போது வளர்ந்துள்ளது. அதுவும் சமூக மாற்றத்தோடு கலை-இலக்கியத்தைப் பொருத்திப் பார்த்து சமூக முன்னேற்றத்திற்காகவே எழுதி இயங்கி வரும் முற்போக்குக் கலை இலக்கிய வாதிகள் கவலைப்படுவது இந்த நிலையில் மாற்றம் நிகழ்த்தும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராகவும் கலை-இலக்கியக் களப்பணியாளராகவும் உள்ள எழுத்தாளர் ஆர்.நீலா இந்த நூலில் தந்திருக்கும் நடனக் கலைக்காகவே வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்ட தேவரடியார்களின் அரிய கலையை நேரிடையாகச் சென்று அவர்களுடன் கலந்து பேசி, அழிந்துவரும் சதிராட்ட நிகழ்வுகளைப் பார்த்து அது பற்றிய தனது அனுபவத்தை எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. 

ஆர்.நீலா, 35ஆண்டுகளுக்கு முன்பே, அறிவொளி இயக்கத்தில் களப் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களைக் கதைகளாக, கட்டுரையாக எழுதியவர்தான். ‘அறிவொளி முத்தம்மா’ இவரது அறிமுகக் கவிதையாக வர, பிறகு, கிராமங்களில் பெற்ற அறிவொளி அனுபவங்களை, ‘பாமர தரிசனம்” என்ற நூலாகத் தந்ததும், சிறைவாசிகளுக்கு எழுத்தறிவு கற்பிக்கப் போன அனுபவத்தைக் ‘கற்றது சிறையளவு” என்ற நூலாகத் தந்ததும், மறக்க முடியாத அனுபவப் படைப்புகள் என்றால், இந்த நூல் படிப்போரை நெகிழ வைக்கும் அனுபவத் தொகுப்பு என்று சொல்லலாம்.

 தனது தேடலில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் ‘தேவதாசி’ பெண்களின் வாழ்க்கையைப் பற்றி, -சுமார் 35ஆண்டுகளுக்கு முன்- அறிவொளி இயக்கக் காலத்திலேயே கேள்விப்பட்ட நீலா, அப்போது ஆட்சியராகவும், அறிவொளி இயக்கத் தலைவராகவும் மக்கள் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட எங்கள் அன்பின் சகோதரி ஷீலாராணி சுங்கத் இஆப அவர்களின் உதவியோடு ‘தேவதாசி’ பெண்களை அந்த அவப்பெயரிலிருந்து மீட்கப் பாடுபட்டு, இத்தனை ஆண்டு கழிந்தும் அவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களை அந்தத் தொழிலில் இருந்து மீட்கத் தன்னாலான பணிகளைச் செய்ய நினைத்தவர் அவர்களோடு பேசிக் கொண்டே இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.

அந்தப் பேச்சில், இவருக்குப் பிடித்த நுண்கலையும் ஒன்று சேர, வேறு எந்தப் பணியில் இருந்தாலும் ஆண்டுகள் பல கழிந்தாலும், இவர்களுடனான தொடர்பு அற்றுப் போகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது முதலில் கவனம் பெறுகிறது. 

அடுத்து அவர்களின் இசை-நடனத்துடன் பாடல் இயற்றும் ஆற்றலும் இப்போதிருக்கும் கலைஞர்களிடம் இல்லை எனும் ஆதங்கம் நூல்முழுதும் தெரிகிறது. தமிழ்த் திரைப்படங்களும் இப்படித்தானே இருந்தன? எம்.கே.டி. என்ற தியாகராஜ பாகவதர், புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா என்ற இருவருமே முதல் சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்டதன் காரணம் இவர்கள் இருவருமே இசைக்கலைஞர்கள் என்பதுதானே? இப்போது தமிழை உரிய முறையில் உச்சரிக்கத் தெரியாதவ பலர் பாடவும் நடிக்கவும் வந்தது பெரிய சோகம்தானே?

நீலா சொல்கிறார் – “தேவதாசி என்ற சொல்லுக்கு இறைவனின் ஊழியர் என்பது பொதுவான பொருளாகும். இதில் கடவுள் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், பிறரால் தேவதாசி ஆக்கப்பட்டவர் என இரு தரப்பும் அடங்கும்” இந்த ஆய்வு முறை மிகச் சரியானது. இவர் பாலிமொழியிலும், சமஸ்கிருதத்திலும் தமிழிலும் இப்பெயர் பெற்றவர்கள் பற்றிய விவரம் வியப்பளிக்கிறது.

எழுத்தாளர் ஆர்.நீலாவின் பார்வை தேவதாசியரின் கலையைத் தாண்டி, தனிவாழ்விலும் நீள்கிறது, சொல்கிறார் ‘இந்நிலைக்கு அவர்களைத் தள்ளியது யார்? என்ற கேள்வியை முதலில் வைக்க வேண்டும். அவர்கள் ஆற்றிய தொண்டுகள் கலை-இலக்கியச் சேவைகள் முறையாகப் பதிவு செய்ய வேண்டும். அதை நோக்கிய என் பயணங்களே இந்நூல்” அரசுகள் விரிவாகக் களப்பணி செய்து தொகுக்க வேண்டிய பணிகளை இவர் தொடங்கியிருக்கிறார்! இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலைப் பகுதியின் தகவல்களே  இவ்வளவு என்றால், மாநிலம் முழுதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இந்நூல் தூண்டுகிறது. இதுவே இச்சிறு நூலின் வெற்றி! எழுத்தாளர் ஆர்.நீலாவின் தொடக்கத்தை அரசுகளும் பிறரும் தொடரவேண்டும்.

தொல்காப்பியம் இலக்கண நூல்தான் எனினும் வாழ்வியல் சார்ந்த கருத்துகள் மிகுந்த நூல். அதில் வரும் ஒரு நூற்பா, எண்வகை மெய்ப்பாடுகளைச் சொல்லும் –

‘நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப” (தொல்-மெய்ப்பாட்டியல்-247) இதில் உள்ள ஒவ்வொரு மெய்ப்பாட்டிற்கும் தனித்தனியே விரிவான விளக்கமும் தருவார் தொல்காப்பியர், இது செய்யுளுக்கே உரியதாக அவர் சொன்னாலும் பின்னர் கூத்துக் கலைக்கும் பொருந்தி வரக் காணலாம்.  இந்த எண்வகை மெய்ப்பாடுகளோடு அமைதி அல்லது சாந்த நிலையைச் சேர்த்து ‘நவரசம்’ என்றனர் பின்னோர். இதே பொருளில் குறுந்தொகை உள்ளிட்ட சங்க இலக்கியங்களும் சொல்வதைக் காணலாம். நவரச வளர்ச்சியில் இவற்றையே நடன பாவங்களாகவும், நடன அசைவு, அடவுகளில் பயன்படுத்துவர் பரத நாட்டியக் கலைஞர்கள்.

இந்த பரதக் கலையே சதுர் ஆட்டம் –சதிராட்டம்- எனும் ஆட்டக் கலையின் விரிவு என்பதையும் சுருக்கமாகச் சொல்கிறார் ஆர்.நீலா. கோவிலில் நடுவில் உள்ள மண்டபத்தில் நான்கு திசையும் பார்க்க நடு நின்று ஆடியதால் சதுராட்டம் பிறகு சதிராட்டம் ஆகியிருக்கலாம்.

‘சதிர்க் கச்சேரி, கோயில்களில் மட்டுமே ஆடப் பட்டது. பிற்காலங்களில் அரசவையில் ஆடும்போது, அதன் தரம் தாழ்ந்தது, கோயிலில் ஆடுபவர் தேவதாசி, அரசவையில் ஆடுபவர் ராஜதாசி” என்று இதை விளக்குகிறார் நீலா. அப்போது தேவதாசிகள் கௌரவமாக நடத்தப்பட்டதையும் சொல்கிறார். மேலும் அவர், ‘பொதுவாக தேவதாசி ஆடும் பாடும் வடிவங்கள் அன்றைய சமஸ்கிருத மயமாக்கப்பட்டது’ விராலிமலையில் மட்டுமே தமிழ் முதன்மையானது என்கிறார்!

விராலிமலைக்கு வந்த அருணகிரிநாதர், அவரது சீடர் பாம்பன் அடிகள், பின்னர் அவர்களின் சீடர்களாக வழி வழிவந்தோர் சொன்ன கதைகள் பாடல்கள் வாழ்வியலின் தொகுப்பே இந்நூல். அருணகிரிநாதரும் பாம்பன் அடிகளும் எழுதிய, சிக்கலான செய்யுள் வடிவங்களான ஆசுகவி, சித்திரக் கவி, மதுரகவி, வித்தாரக்கவி ஆகிய அனைத்து வடிவங்களையும் ஆடல்,பாடல், ஓவியங்களாக வளர்த்து வந்த தேவதாசிகளின் கடைசி தேவதாசியைச் சந்தித்து எழுதியுள்ளார் என்பது இந்நூலின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாக இருக்கிறது.

இதில் வரும் ‘பிந்துமதியின் கதை’, விக்கிரமாதித்தன், காளிதாசன் கதைகளில் வரும் அறிவும் அழகுமான தேவதாசிகள் தமிழகத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பதாகவும் மிகவும் வியப்பான வடிவிலும் உள்ளது. கதைக்குப் பொருத்தமான வெண்பா இரண்டைக் கவிஞர் ஆலங்குடி சிவகுமாரிடம் வாங்கிப் போட்டிருப்பது நீலாவின் உழைப்பு, அக்கறை மற்றும் நேர்மையைக் காட்டுவதாக உள்ளது. இதில் சிலப்பதிகார மாதவியை ஒப்பிட்டிருப்பதும் சிறப்பு. இதில் வரும் ‘தலைக்கோலம்’ என்பது, அன்றைய அரசர்கள் மிகச்சிறந்த நடனப் பெண்ணுக்கு வழங்கும் சிறப்பு விருது என்பது கூடுதல் செய்தியாகும். (‘ஆட்கொண்டு காட்டு அருள்’ எனும் வெண்பா ஈற்றடி, குற்றியலுகரச் சிக்கலோடு உள்ளது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்)

‘தமிழகத்தைப் பொறுத்தவரை ஐந்தாம் நூற்றாண்டு வரை வள்ளி மட்டுமே முருகனின் காதல் மனைவியாக இருந்ததை, பிள்ளையார் வருகையோடும் ஒப்பிட்டுக் கொள்ளலாம். வாதாபியை ஆண்ட -இன்றைய கர்நாடகப் பகுதி- இரண்டாம் புலிகேசியை வெற்றிகொண்ட இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவ மன்னன், பொ.ஆ.பி.-642இல் நடந்த போரின் வெற்றிக்கு அடையாளமாக வாதாபியிலிருந்து கொண்டு வந்ததுதான் பிள்ளையார் வடிவம் என்பது வரலாறு தரும் செய்தி. ‘வாதாபி கணபதிம் பஜே” பாடல் தரும் செய்தி.

பின்னால் வந்த கணபதி, முன்னால் இருந்த முருகனுக்கு அண்ணன் என்றும், சிவபெருமானின் குடும்ப உறுப்பினர்களாக பார்வதி, கணபதி, முருகன் கதைகள் புராணமாகக் கட்டப்பட்டதுமான தகவல்கள் முருகன் மீது தேவதாசிகள் கட்டிப் பாடிய பிற்காலப் பாடல்களில் இருந்து தமிழ் வரலாற்றில் வடபுலப் புராணக் கலப்பை அறியலாம்.

இப்படி, நூல் முழுவதும் சுவையான தகவல்கள், வராற்றுக் குறிப்புகள், தேவதாசிகளின் கலை-இலக்கியப் பங்களிப்பின் நுட்பங்கள், அவர்கள் வாழ்வின் அவலங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

கோயில்கள் கலைகளின் இருப்பிடமாக இருந்ததோடு, தேவதாசி பெண்களின் சமூக நிலைகளின் அடையாளமாகவும் இருந்திருக்கின்றன என்பதை நூலின் ஊடுபாவாகச் சொல்கிறார் நீலா.

இந்தக் களப்பணி ஆய்வுகள் தொடர வேண்டும்.

‘மற்ற பகுதிகளில் உள்ள தொன்மக் கதைகளுக்கும், நம் தமிழரின் தொன்மக் கதைகளுக்கும் ஒரு முக்கியமான வேறு பாடு உண்டு” எனும் நீலா, முருகன், சுப்பிரமணியன் என்று ஆக்கப்பட்ட கதையையும் மிகச் சுருக்கமாகச் சொல்லி விட்டார். இது விரிவாக எழுதப்பட வேண்டிய மிக முக்கியமான சமூகவியல் வரலாற்றுக் குறிப்பு மட்டுமல்ல, தமிழர் சிறு தெய்வ வழிபாட்டிலிருந்து, பெருந்தெய்வ வழிபாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட அடிமைஉணர்வின் வரலாறும் கூட.

‘கல்லே பரவின் அல்லது நெல்லுகுத்துப் பரவுமோர் கடவுளும் இலவே” என்பது புறநானூறு 355ஆம் பாடல், மாங்குடி கிழார் பாடியது. இந்தக் கல்லும் இனக்குழு மக்கள் காலத்தில் தமது இனக்குழுவுக்காகப் போரில் உயிர் துறந்த வீரனுக்கான நடுகல் என்கிறது திருக்குறள்-771.

இந்த மக்கள் பெருந்தெய்வ வழிபாட்டுக்குள் இழுக்கப்பட்டதும், சாதிகள் நிலைப்பட்டதும், உழைப்பாளிகள் தாழ்த்தப்பட்டவர் ஆனதும், பெண்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டதுமான சமூக நிலைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

இவையும் தேவதாசிகளின் கதைகளில் இணைந்திருக்கின்றன. இவற்றையும் தேடித் தொகுக்க வேண்டும். சுவையும் நுட்பமும் மிக்க இவர்களின் கதைகளையும் தனியே தொகுக்க வேண்டும்.

இப்படி ஏராளமான செய்திகளைக் கொண்ட ஒரு தொடக்கமாக இந்நூல் திகழ்கிறது. இதை எழுத – நூலில் ஓரிடத்தில் நீலாவே சொல்வது போல பல ஆயிரம் மைல் பயணமும், பல ஆயிரம் ரூபாய் செலவும் பிடிக்கும் என்பது உண்மை.

இருளில் கிடக்கும் இந்த மாணிக்க மணிகளின் வாழ்வு மேம்பட அன்னை முத்துலட்சுமி போல, 1990-91களில் இங்கு மாவட்ட ஆட்சியராக இருந்த எங்கள் பாசத்திற்குரிய ஷீலாராணி சுங்கத் இஆப. அவர்கள், அறிவொளியோடு இவர்களையும் அரவணைத்ததில் தொடங்கியது நீலாவின் இந்தக் களப்பணி. அண்மையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பரதக் கலைஞராகவும் திகழ்ந்த கவிதா ராமு இஆப., அவர்களின் உதவியும் மற்றொரு வகையில் இந்நூலாக்கத்திற்குக் காரணம் என்று சொல்லவேண்டும்.

இந்தப் பயணத்தைத் தொடருங்கள் நீலா, அரசு ஆதரவு மற்றும் தோழர் உதவிகளையும் கேட்டுப் பெற வேண்டும் களப்பணி இது.

எனது அன்பான வாழ்த்துகள் நீலா, 

உங்கள் படைப்புகளில்  தொடர் பணிகளைக் கோரும் 

ஒரு தனிச் சிறப்பு இந்நூலுக்கு உண்டு.

சிறு பொறி பெருந் தீயாக மாறட்டும். 

இருட்டில் கிடக்கும் 

இந்த மாணிக்க மணிகளின் வாரிசுகளாவது 

பேரொளி பரப்பி வாழ்வில் உயரட்டும்.


தோழமை வாழ்த்துகளோடு,

நா.முத்துநிலவன், 

மாநிலத் துணைத்தலைவர்- தமுஎகச

15-07-2025           செல்பேசி – 94431 93293

 புதுக்கோட்டை – 622 004

---------------------------------------

நூல்கள் வாங்க –

(இரண்டு நூல்களும் சேர்த்து ரூ.240

அஞ்சல் செலவையும் உள்ளடக்கி

ரூ.250 அனுப்பினால் உங்களை வந்தடையும்

தொடர்புக்கு -

கவிஞர் ஆர்.நீலா – செல்பேசி எண் - 63827 81951 

----------------------- 

எழுத்தாளருக்குச் செய்யும் ஆகப்பெரிய மரியாதை

அவரது நூல்களை விலைகொடுத்து வாங்கி

படித்து, விமர்சனம் செய்வதுதான் அல்லவா?

------------------------

இரண்டு நூல்களிலம் இரண்டு மூன்று செட் வாங்கி 

உங்கள் நண்பர்களுக்கும் தந்து மகிழ வேண்டுகிறேன்.

நீலாவை அறிந்தவர்கள், தமுஎகச தோழர்கள்

ஆங்காங்கே அறிமுகக் கூட்டங்கள் நடத்தலாம்

நூல் விமர்சனமும் எழுதலாம்.

---------------------