தினமணியில் வெளிவந்த எனது கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமணியில் வெளிவந்த எனது கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சாகித்ய அகாதெமி எழுதிய முதல் கவிதை!


சாகித்ய அகாதெமி எழுதிய முதல் கவிதை!
      இதற்கு முன்னரும் இருமுறை தமிழ்க் கவிஞர்கள் சாகித்ய அகாதெமி விருது பெற்றிருந்தாலும் அவர்களுக்கே அது நிறைவளித்திருக்காது என்பது நிச்சயம்! புரட்சிக்கவிஞன் என்று அறியப்பட்ட பாரதிதாசனை நாடகத்திற்காகப் பாராட்டியதை நாம் பாராட்ட முடியுமா என்ன அதைவிடவும் வெங்கொடுமை! தமிழறிஞராகவே அறியப்பட்ட அ.சீனிவாசராகவனை (அசீரா) அவரது  கவிதைகளுக்காகப் பாராட்டியதுதான்!
      இதே போலத்தான் ஜெயகாந்தன் தி.ஜானகிராமன் க.நா.சுப்ரமணியம் கி.ராஜநாரயணன் பொன்னீலன் போலும் சிறந்த படைப்பாளிகள் விருதளிக்கப்;பட்ட போது அவர்களின் மிகச் சிறந்த (Master Piece) படைப்புகளுக்காக அகாதெமி பரிசளித்துவிடவில்லை என்பதையும் நாம் மறக்க வில்லை.  
      அதேநேரத்தில் ரகுநாதன் ராஜம் கிருஷ்ணன் சு.சமுத்திரம் பிரபஞ்சன் போன்றோருக்கு தகுதியானவர்களின் தகுதியான படைப்புக்கே பரிசு என்று அறிவித்து இற்றுப்போன நமது நம்பிக்கையை ஒட்டவைத்துக்கொண்டே வந்த வேலையையும் மறந்துவிட முடியாது.
      இப்படியான சூழலில் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்திருப்பது சரியான பரிசாகவே படுகிறது!
      உண்மையில் இது சாகித்ய அகாதெமி எழுதியிருக்கும் முதல் கவிதை!
      1976-இல் -அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரியில்- நடந்த அனைத்துக் கல்லுரிக் கவிதைப் போட்டியில் அவரிடம் முதல் பரிசுக் கோப்பைணைப் பெற்ற என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள்-புதிய மரபுக் கவிஞர்கள்- நாங்களே பரிசு பெற்றது போலப் பெருமைப்படுகிறோம்!
      இந்த வகையில் 1955-ல் தமிழ் இன்பம் கட்டுரைத் தொகுப்புக்காக ரா.பி சேதுப்பிள்ளை தொடங்கி முதல் 10 ஆண்டுகள் தமிழறிஞர்களே பெற்ற விருதை 1999இல் அப்துல் ரகுமான் - புதுக்கவிதைப் படைப்புக்காகப் பெற்றிருப்பது மிக அருமையான முன்னேற்றம். 
         இது தொடர வேண்டும் என்பதே தமிழகக் கலை இலக்கியவாதிகளின் விருப்பம்! 
      பாராட்டு ரகுமானுக்கு மட்டுமல்ல  விருதுதந்த சாகித்திய அகாதெமிக்கும் தான்!
------- தினமணியில் நான் எழுதிய கடிதம்.  நாள்: 07.01.2000 தினமணி நாளிதழ். -------

‘சாதிச் சார்பற்ற’ தலைவர்கள் தேவை!


‘சாதிச் சார்பற்ற’ தலைவர்கள் தேவை!

                   அறிஞரும் சீர்திருத்தச் சிந்தனையாளருமான வா.செ.குழந்தைசாமியின், காலத்தின் தேவையுணர்ந்த கட்டுரைகள் கண்டேன்.
தமிழகத்தின் எரியும் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வும் இக்கட்டுரைகளில் புதைந்துள்ளது. இந்த அரிய யோசனைகளைத் தமிழக முதல்வர் அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் வைத்து உடனடியாகச் சட்டமாக்கவும் முன்வர வேண்டும்.

                 பூங்குன்றனில் துவங்கி திருவள்ளுவா,; சித்தர்கள், வள்ளலார், பெரியார், பாரதி பாரதிதாசன் என நீளும் மேதைகளுக்கு எவ்வளவு பெரிய அவமானம் இது! ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகம் முழுவதையும் உறவினராப் பார்த்த தமிழன் எங்கே…உள்ளுர்க்காரனையே ஒடஒட விரட்டி வெட்டும் இன்றைய சாதிய மோதல்கள் எங்கே?

              ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும’ என்ற திருவள்ளுவரையும் சாதி பேதம் ஓதுகின்ற தன்மையென்ன தன்மையோ’ என்ற சிவவாக்கியரையும் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’என்ற வள்ளலாரையும் எடுத்தெடுத்துப் பேசிப்பேசித் ‘தலைமுறைகள் பல கழிந்தோம் குறை களைந்தோமில்லை!’
              கணியன் பூங்குன்றனின் வாசகத்தை ஐ.நா.வாசலில் எழுதியதிருக்கட்டும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் எழுத வேண்டி வந்துவிட்டதே!

              இந்த நிலையை மாற்ற கலப்புமணத் தம்பதியரின் குழந்தைகளை ‘சாதி-மறுப்பாளர்’ என்று எதிர்மறையாகவோ ‘இந்தியர்-தமிழர்’ என உடன்பாடாகவோ எழுத உடனடிச் சட்டம் தேவை. அதோடு பிற்;பட்டவர்க்கான ஒதுக்கீடும் நிரந்தரமானதல்ல என்பதை உணர்த்துவதோடு முதல் தலைமுறைக்குக் கிடைக்கும் சதவீதத்தில் பாதியே அடுத்த தலைமுறைக்கு என அறிவிக்க வேண்டும். பொருளாதாரப் பின்னணி சிறிதளவு கவனத்துக்காவது வருவது நிரந்தரப் பயன்பாட்டுக்கு உதவும்.

               அரசியல்வாதி தேர்தலில் நிற்கவும் அரசு ஊழியர்-ஆசிரியர் பணியிற் சேரும்போது ‘எந்தச் சாதிச் சங்கத்திலும் உறுப்பினர் இல்லை’ என உறுதி மொழி பெற்று அவ்வாறே தொடர்கிறாரா எனக் கண்காணிக்கவும் வேண்டும்.

                 சாதி மத எதிர்ப்புப் பிரசாரத்தை அரசே திட்டமிட்டு நடத்த வேண்டும். ‘மதச்சார்பற்ற’ மட்டுமல்ல ‘சாதிச் சார்பற்ற’ தலைவர்களாகவும் மனிதர்களாகவும் உருவாக கல்வி பொருளாதார அரசியல் சூழலை உருவாக்க வேண்டும்.
--- தினமணியில் வெளிவந்த எனது கடிதம்
     03.06.1997