எனது புதிய அரசியல் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது புதிய அரசியல் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கிரிக்கெட் தோல்வி - காரணம் என்ன?


                  


 இந்திய கிரிக்கெட் அணிதான் தோல்வி
இந்தியா அல்ல!

         2023 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி! இந்தச் செய்தி, கிரிக்கெட் ரசிக  மகா உலகத்தையும் தாண்டி பெருவாரியான பொது மக்களையும், சமூக ஆர்வலர்களையும் பேச வைத்திருக்கிறது.

            இறுதிப்போட்டிக்கு பிரதமர் வருகிறார் என்றும் நரேந்திர மோடி திடலில் நரேந்திர மோடி அணி வெற்றி என்ற செய்தியை 2024 தேர்தலுக்குப் பயன்படுத்தப் பார்த்த அணி தோல்வியால் துவண்டு விட்டது உண்மைதான்! - 

      ஆனால் வருமானத்தில்...?

 பெரீய்யய வெற்றி மக்கா!

            இதில் எத்தனையோ திகிடு தத்தங்கள் –

0                                 திட்டமிட்டு இறுதிப் போட்டியை குஜராத் நமோ திடலில் வைத்தது ஒன்றும் எதேச்சையாகத் தெரியவில்லை

0                திட்டமிட்டு அஸ்வின்-“ஆல்-ரவுண்டரை”- கடைசிவரை களம் இறக்காமல் வைத்த  ரோகித்தின் “ஈகோ“

0                           சுழற்பந்து வீச்சாளர் இல்லாத நிலையில், ஆல்ரவுண்ட் வீரர் அர்திக் பாண்டியாவின் இயலாத நிலையிலும் முதல் மூன்று ஆட்டங்களில் ஷமியை இறக்கிவிடாமல் பார்த்துக் கொண்ட ஈகோ ரோகித்தின் ஈகோ..

0                           இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை 1983இல் வென்று தந்த கபில்தேவ், மல்யுத்த வீரர்களின் நியாயமான போராட்டத்தை வாழ்த்தி வரவேற்ற ஒரே காரணத்துக்காக அழைக்கப்படாத அரசியல்!

              பாஜகவில் சேரச் சொல்லி வந்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்ட காரணத்தினாலேயே, 2011இல் தன் இறுதி சிக்ஸரால் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றுதந்த மகேந்திரசிங் டோனி  இந்தப் போட்டிக்கு அழைக்கப்படாத அரசியல்..

0       சச்சினுடன் “நவராத்திரி ஆட்ட நாயகர்” சாமியாரை மற்றும் கிரிக்கெட்டுக்குத் தொடர்பே இல்லாமல் –அண்ணாமலை உள்ளிட்ட திரையிலும் வெளியிலும் நடிக்கும் நடிகர்களை அழைத்திருந்த அரசியல்..

0           இறுதிப்போட்டிக்கு 1,30,000 பேர் உட்காரக் கூடிய நமோ திடல் நிரம்பியதும், குறைந்த பட்ச கட்டணம் ரூ35,000 என்று அறிந்ததும் மில்லின் கணக்கிலான வருமானம் பற்றிய பிரமிப்புடன் கூடிய ஏமாற்று அரசியல் என்று எத்தனையோ விவாதப் பொருள் இருந்தும்,

0 பத்து ஆட்டங்களில் தோற்காத இந்தியா, இறுதிப் போட்டியில்

ஆஸ்திரேலியா அமைத்திருந்த (1) ஃபீல்டிங், (2) பேட்டிங், (3)

பௌலிங் என்ற மும்முனை வியூகத்தை எதிர்கொள்ளத் திட்டமிடாத

இந்திய அணி ஃபீல்டிங்  இயலாமை ஆல்ரவுண்டர் இல்லாமை 

காரணமாகவே தோல்வியைத் தழுவியது.

0 சச்சினின் சாதனைகளை முறியடித்த கோலியின் திறன்,

நான்காம் ஆட்டம் முதல் தெறிக்க விட்ட ஷமியின் திறன், 

எனப் பல தனிநபர் சாதனைகள் அணியின் தோல்வியால்

அடிபட்டுப் போயின.. வாழ்த்தும் அனுதாபமும்..

------------------------------------------------------------------------

        வருமானத்தில் கவனம் செலுத்தும் அளவிற்கு வெற்றிக்கு உரிய திட்டமிடாத, வீரர்களின் திறனைக் கண்டறிந்து பயன்படுத்தாத அரசியல் அமித்ஷா மகனின் தலைமை என ஆயிரம் ஓட்டைகள் எல்லாம் தோல்வியின் பின்னணி இதை அறியாமல் தற்கொலை செய்து கொள்ளும் ரசிகர்!

    இதுபற்றியெல்லாம் நிறையப் பேசலாம்.. ஆனாலும் இந்த “நல்லதோல்வி”பல கண்களைத் திறக்க உதவும் என்பதால் இந்தத் தோல்வியை நான் மனமார வரவேற்கிறேன்!

இதே போன்றதொரு தோல்வியை 

ஆஸ்திரேலிய அணியிடம்  

அரையிறுதியிலேயே கண்ட 

இந்திய அணி பற்றி 

2015 இல் நான் எழுதிய கட்டுரை கீழுள்ளது.

---------------------------------------------------------------------

அன்றைய படம் மாறியிருக்கிறது,

ஆனால்

அப்போது கற்க மறந்த

பாடம் இப்போதும் மாறவில்லை!

பழசென்று நினைக்காமல்

படித்துப் பாருங்கள் தெரியும்

------------------------------------------------------ 

https://valarumkavithai.blogspot.com/2015/03/blog-post_5.html 

------------------------------------- 

இந்தத் தோல்வி பற்றி

கவிஞர் செ தமிழ்ராஜ் எழுதி

தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டிருக்கும்

அற்புதமான கவிதையை

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில்

மகிழ்கிறேன்.

---------------------------------------

            உலகக் கோப்பை!

            ஜெய் ஸ்ரீ ராம் கோசமிட்ட 

            வானரங்கள்

            பரிசாக கிடைத்த தோல்வியை 

            எந்த முழக்கமிட்டு

            வரவேற்பார்கள்.

 

            மைதானங்களை கைப்பற்றி

            பெயர் சூட்டிக்கொண்டவர்கள்

            வெற்றியை

            விலைக்கு வாங்கமுடியாமல்

           தோற்றுப்போனார்கள்.

 

            அரசியல் சூதாட்டக்காரர்களால்

            மட்டைப்பந்தாட்ட  வீரர்கள்

            பலியானார்கள்.

 

            வான் சாகசங்களில்

            பூத்தூவி மகிழ்ந்த 

            காவி முகங்களில் 

            தோல்வி 

            காரி

            உமிழ்ந்திருக்கிறது.

 

             எல்லாவற்றிலும்

             மதங் கலந்தார்கள்

            விளையாட்டும் ஒரு

            வினைப்பயனாய்மாறி 

            பாடம் நடத்தியிருக்கிறது.

 

            இந்தியாவிலிருந்து வெளியேறி

            பாரதமென்று படையெடுத்தார்கள்

            மணிமுடி யெங்கும் 

            மண் பூசி நின்றார்கள்.

 

            தோற்றாலும்

            வீரன்

            வெற்றிக்கு கைகொடுப்பான்

            கோப்பையை கொடுத்த கோழை

            "கோ"வென்று

             அழுது ஓடுகிறான்.

 

            வெற்றியும் தோல்வியும்

            வீரர்களுக்கு மட்டுமே அழகு

            அழுகுணி

            அரசியல் ஊளைகளுக்கல்ல.

 

            எமது இந்திய வீரர்கள்

            மீண்டும் ஜெயிப்பார்கள்

            அப்போது 

            விளையாட்டரங்கம் 

            இந்திய மக்கள் வசம் இருக்கும் 

            அன்றெழுப்பும் 

            ஒற்றை முழக்கத்தில் 

            எந்த மதமும் கலந்திருக்காது.

                    --செ. தமிழ்ராஜ்

                       வண்டியூர் மதுரை

           --------நன்றி- தீக்கதிர்-21-11-2023--------

------------------------------------------------ 

கிரிக்கெட் பற்றியெல்லாம் எழுதி

 நேரத்தை வீணடிக்க வேண்டுமா?

எனில்,

இந்திய சமூகத்தைப் பாதிக்கும்

எதைப் பற்றியும் கவனிக்க வேண்டும்,

நாம் சரியாக கவனிக்க - கணிக்க- வில்லை எனில்,

தவறான கணிப்புகளே உண்மைபோல் பரவும்.

எனவே... 

நன்றி.

-----------------------------------------

படங்களுக்கு நன்றி - வழக்கம் போல- கூகுளார்

-----------------------------------


இலவசத் திட்டங்கள் - தமிழ்மரபு சொல்வது என்ன? - இன்றைய இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை

--நா.முத்துநிலவன் -- 

நாடு முழுவதும் இப்போது ஒரு பெரும் விவாதம் நடந்து வருகிறது. இது தமிழ்நாட்டு அரசியலைப் பற்றியும் பேசுவதால் நாமும் தமிழ் மரபோடு இந்த விவாதத்தை இணைத்து பார்த்துப் பேச வேண்டி உள்ளது.

இலவசங்கள் வழங்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கும் கட்சிகளுக்கு எதிராக பா...வின் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம்  பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறது.

இலவசங்கள் என்பது மிகவும் முக்கியமான பிரச்சினை. நாட்டின் நலன் கருதி, இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் தேவைஎன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் என்.வி.ரமணா கூறியுள்ளார்.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி ஏற்கனவே இணைந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக தரப்பும் இடையூட்டு மனுவைத் தாக்கல் செய்து எழுத்துப் பூவர்மான தனது வாதத்தை முன்வைத்து எங்களின் திட்டங்கள் இலவசங்கள் அல்ல. . மாறாக அவை சமூக, பொருளாதார சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கான கருவி. . தமிழக அரசு சமூக நீதியை நிலைநாட்டுவதில், சமூக நலத் திட்டங்களை அறிமுகப் படுத்துவதில் முன்னோடியாக இருக்கிறதுஎன்று வாதிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்சினை குறித்து பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என்பது உண்மைதான். ஆனால், “நாட்டின் நலன் கருதி இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் தேவைஎன்று நமது நீதியரசரே சொல்லியிருப்பதால் தமிழ்நாட்டின் மக்கள் நலம் சார்ந்த மரபு பற்றிய சில குறிப்புகளை இங்கே வைப்பது சரியாக இருக்கும்

தமிழ்நாட்டில் கடந்த 100ஆண்டாக இலவசத் திட்டங்கள் செயல் பாட்டில் உள்ளன. அது உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் கடந்த 50ஆண்டுதேர்தல் கால இலவச அறிவிப்புகள்பற்றிய விவாதங்களே  இப்போது பேசப்படுகின்றன என்றாலும், இதற்கொரு தமிழ்மரபு உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்மரபு இலவச சமூக நலத் திட்டங்கள்பற்றி என்ன சொல்கிறது? 

      உலகம் முழுவதும் பசி பற்றியும் அதைப் போக்க வேண்டிய சமூகக் கடமைகள் பற்றியும் கருத்துகள் உள்ளன. ஆனால், பசியின் கொடுமையை இலக்கியமாகவும் எதார்த்தமான முறையிலும்பசி என்னும் தீப்பிணிஎன்கிறது திருக்குறள்! இந்நோய் தீர்ப்பவர் யாராயினும் அவரைப்பசிப்பிணி மருத்துவர்என்று கொண்டாடச் சொல்கிறது புறநானூறு(173)

      ஒருவன் பிச்சையெடுத்துத்தான் வாழ வேண்டும் எனும் நிலைமை வந்தால் ஆண்டவனோ, ஆள்பவனோ, அவன் அழிந்து போகட்டும்எனும் குறளின் குரலும்(1062),  “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎனும் மணிமேகலையின் குரலும், பசிக்கு எதிரான சமூக அறைகூவல் அல்லோ! இது பற்றிய பெரும் இலக்கியச் சான்றுகள் தமிழில் ஏராளமுள்ளன.

      இது ஏதோ இரண்டாயிரம் ஆண்டுப் பழங்கதை என்பீராகில், கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியும் இதன் தொடர்ச்சியாகதனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்என்று கொந்தளிக்கிறார்!

      ஏறத்தாழ பாரதி இந்தப் பாடலை எழுதிய ஆண்டிலேயே (1920இல்) மதராஸ் மாகாணத்தில் ஆட்சிக்கு வந்த நீதிக் கட்சி அரசு, சென்னை மாநகராட்சிப் பள்ளியில் இலவச மதியஉணவுத் திட்டம் கொண்டு வந்தது! (“தெற்கிலிருந்து ஒரு சூரியன்” இந்து தமிழ் திசை வெளியீடு பக்கம்-11). 

இதே வழியிலேயே பின்னர் முதல்வராக வந்த காமராசர், மதிய உணவுத் திட்டத்தை (1955இல்) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவு படுத்தியபோது, முதன் முதலாக பாரதி பிறந்த எட்டயபுரத்தில் போய்த் தொடங்கி வைத்தது தமிழ் மரபின் தொடர்ச்சிதானே?!

மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்த காமராசர், “அன்ன தானம் நமக்குப் புதிதல்ல, இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச் சென்று சோறு போடும் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட எனக்கு முக்கியமான  வேலை வேறு இல்லை! எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல்உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கிறேன்என்று பேசினார்! இதுவும்கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றேஎன்ற தமிழ் மரபின் தொடர்ச்சிதானே?

1920இல் மாநகராட்சிப் பள்ளியில், 1955இல் மாநிலம் முழுதுமுள்ள பள்ளிகளில், என்று தொடர்ந்த இலவச மதிய உணவுத்திட்டம், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் காலத்தில்இலவச சத்துணவுத் திட்டம்என்றானது. அடுத்து ஆட்சிக்கு வந்த கலைஞர் மு.கருணாநிதி சத்துணவில் முட்டை சேர்த்தார், ஜெயலலிதா அம்மையார் பயிறு, பருப்பு என சத்துப் பொருள்களைச் சேர்த்து வழங்கினார்கள்.

காமராசர் மதிய உணவு தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் பள்ளி செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சமாகஇரு மடங்காகஉயர்ந்தது ஒன்றும் சாதாரண விஷயமல்ல!

அவருக்குப் பிறகும் பள்ளிப் பிள்ளைகளுக்கான இலவசங்கள் தொடர்ந்து இப்போது பாடநூல்கள் மட்டுமின்றி, மாணவர் சீருடை, எழுதுபொருள், புத்தகப் பை, மடிக்கணினி, மிதிவண்டி இலவசப் பேருந்துப் பயணம் என 14விதப் பொருளாகத் தொடர்வதால் என்ன லாபம் தெரியுமா?

தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப் படுத்தும் ஒன்றிய அரசின் நோக்கம்பள்ளிப் படிப்பைத் முடிப்போர் சதவீதத்தை இன்னும் பத்தாண்டுகளில் 50ஆக உயர்த்துவதுஎன்கிறது. அதை இப்போதே எட்டிவிட்டது தமிழ்நாடு! இதுதான் தமிழ்ச் சமுதாயம் பெற்ற லாபம்!

கலைஞர் மு.கருணாநிதி தமிழக முதல்வரான பிறகு, 1972இல் பொது விநியோக கழகம் (சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்) தொடங்கப்பட்டது. 1975இல் அனைத்துக் குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டன. அரசின் நலத் திட்டங்கள் இந்த அட்டையின் மூலம் செயல்படுத்தப் படுகின்றன . மேலும் வருவாய்த்துறையின் அனைத்து சான்றுகளும் இந்த குடும்ப அடையாள அட்டையைக் கொண்டே பெற முடிகிறது. அரசு மானியத்தால் குறைந்த விலையில் ஏழை மக்கள் பயனடையும் விதத்தில் அரிசி எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்குவதும் ஒருவகையில் இலவசம் சார்ந்த மக்கள் நலத்திட்டமன்றி வேறென்ன?

இந்த இடத்தில், நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென் குறிப்பிடுவதை ஒப்பிடலாம் – “தமிழ்நாடு துணிச்சலான சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்தது. தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவு, சுகாதார மையங்கள், சாலைவசதிகள், பொதுப் போக்குவரத்து, குடிநீர் வழங்கல், மின் இணைப்பு வழங்கல் என்று இன்னும் நிறைய திட்டங்களைக் குறிப்பிடலாம். இவற்றில் பலவற்றையும் பெரும்பாலான பொருளாதார மேதைகள் விரும்பவில்லை! ஆனால், அவர்களின் எதிர் பார்ப்புக்கு மாறாக, தமிழகம் இந்தத் திட்டங்களில் பெருவெற்றி பெற்றது. என்றவர், தொடர்ந்து- பெரும்பாலான இந்திய மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானமும் அதிகம், வறுமை நிலையும் ஒப்பீட்டளவில் குறைவு. இந்தப் பொருளாதார வளர்ச்சியானது சமூகநலத் திட்டங்களைச் சாத்தியப் படுத்தி உள்ளது என்கிறார்!  இது ஒரு பாராட்டுச் சான்றிதழ் அல்ல! தமிழ்நாட்டின் சமூகநல மரபை, பிற மாநிலங்கள் எடுத்துப் பின்பற்றிக் கொள்வதற்கான வேண்டுகோள்!

மானியங்களாக வழங்கப்படும் இலவசங்கள், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை அத்தகைய மானியங்கள், உற்பத்தியைப் பாதித்து, மறைமுக செலவை அதிகரிக்கின்றனஎன்று இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்குழு உறுப்பனர் அசிமா கோயல் பேசியிருக்கிறார் (21-08-2022 செய்தி)

இவர், ஒரு நிமிடம், இந்தியாவின் ஆகப்பெரும் பணக்காரர்களுக்கு சில ஆண்டுகளில் தள்ளுபடி செய்து உதவிய பெரும் தொகையை விட இந்த மக்கள் நலத்திட்டங்களுக்கான தொகை குறைவுதான் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் நல்லது. இதற்குப் பெரும் விளக்கம் தேவையில்லை

இலவச சத்துணவுத் திட்டத்தால் அடுத்த தலைமுறையினரின் கல்வியை எடுத்துச் செல்வது போலவே, இலவச வேட்டி,சேலை அடிப்படையானதும் உணவுக்கடுத்து அவசியமானதுமாகும் இதையும் தமிழ்மரபு சொல்கிறது-

ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை (கலித்தொகை-18)

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே (புறநானூறு-189)

      இதேபோல, யுகம்யுகமாக அடுப்பங்கரையில் கிடக்கும் சரிபாதி மனித இனமான பெண்களை முன்னேற்ற, இங்கிலாந்துக்கும் முன்பாகவே வாக்குரிமை வழங்கியது(1921)அன்றைய மதராஸ் மாகாணம்தான். அதன் நீட்சியாகவே இன்றைய அரசின்பெண்களுக்கு இலவசப பேருந்துப் பயண சலுகை. இதனை 1990-91இல் புதுக்கோட்டையில் நடந்த அறிவொளி இயக்கத்தில்வேறெந்த மாவட்டத்திலும் சேர்க்காத நிலையிலும்- சேர்த்தபெண்கள் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொள்வதோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அப்போது நான் எழுதியசைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சிஎனும் பாடல் வெறும் சைக்கிள் ஓட்டுவதோடு முடிவதில்லை, அது பெண்களின் சுயமாக இயங்கி சமூகத் தொடர்போடு முன்னேறுவது என்று புரிந்துதான் இயங்கினோம். அது தான் பேருந்துப் பயண நீட்சி! 8ஆம் வகுப்பு முடித்தால் திருமண உதவித் திட்டம், அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி வந்தால் மாதம் ஆயிரம் என்பதும் இதுதானே? “பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர்என்ற நமது பாரதியின் தமிழ்க்கனவு நிறைவேற இது உதவும் தானே?

இந்தியாவிலேயே முன்னோடியாக விவசாயிகளுக்கு இலவச மின் சாரம் என்பதன் கூட்டுப் பலனை இந்த ஆண்டுஎந்த ஆண்டையும் விட- அதிக விளைச்சல் எனும் செய்தியில் பார்க்கிறோமே? மற்ற மாநிலங்கள் நீர்,இடுபொருள்,மின்வசதி அற்ற நிலையில் விவசாயிகள் வெளியேற்றம் என்பதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இப்படி தமிழ்நாட்டு மக்கள் நலத்திட்டங்களின் பின்புலத்தை விளக்கிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொன்றும் தமிழ்மரபின் நீட்சி என்பதும் வளமான மாநிலத்தில் மகாராட்டிரத்திற்கு அடுத்த நிலையில் தமிழ்நாடு இருந்தாலும் அங்குள்ள பணக்காரர் ஏழை இடைவெளியை விடவும் தமிழ்நாட்டில் குறைவு என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இதன் சமூக வளர்ச்சி புரியும்.

 வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைஎன்னும் திருக்குறளைப் புரிந்து கொண்டால், இட ஒதுக்கீடும் புரியும்! மக்கள் நலத்திட்டங்களும் புரியும்! இந்தத் தமிழ்மரபுதான் தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறது என்பதும் புரியும். தமிழ் மரபு சொல்வதைத்தான் தந்தை பெரியாரும், அம்பேத்காரும், கார்ல் மார்க்சும் சொல்லியிருக்கிறார்கள் எனும் சமத்துவ சமூக நீதியும் புரியும்.

-------------------------------------------------------------

கட்டுரை ஆசிரியர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்.

------------------------------------------------------------------ 

வெளியீட்டுக்கு நன்றி - இந்து தமிழ் நாளிதழ் -08-09-2022

செய்தி இதழில் கட்டுரைக்கான இடம் குறித்து, எனது அனுமதி பெற்று சுருக்கப்பட்ட கட்டுரையின் நீட்சி இது.

-----------------------------------------------------------------