தமிழ் இனிது -44, நன்றி-இந்துதமிழ் நாளிதழ்-22-4-2024.

 

'ஈ'  'தா'  'கொடு' சொற்களின் தமிழ் நுட்பம்

கொப்பூழா? தொப்புளா?

         தாய் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உணவைக் கொண்டு செல்லும் கொடி தொப்புள் கொடி. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளை, “தொப்புள் கொடி உறவுகள்” என்பர். இதைப் பழந்தமிழ் ‘கொப்பூழ்’ என்கிறது. “நீள்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்“ (பெரும்பாண்-402). கொப்பூழ் மருவி தொப்புழ்- தொப்பை –தொப்பு-உள்-கொடி –தொப்புள் கொடியானதோ! பாலூட்டிகள் அனைத்தும் தாயின் வயிற்றிலிருந்து வந்ததன் அடையாளக் குறியே தொப்புள்(Navel). மனிதர்க்கு மட்டுமே பளிச்சென்று தெரிகிறது.  

பரிணாமமும், பரிமாணமும்

            பரிணாம வளர்ச்சி பற்றி டார்வின் எழுதிய புகழ்பெற்ற நூல்- ‘உயிரினங்களின் தோற்றம்’(1859).  பரிணாமம் (Evolution) – படிப்படியாக வளர்ந்து மேம்படுவது. குரங்கிலிருந்து பரிணமித்ததே மனித இனம்.  தமிழில் இதைப் ‘படிவளர்ச்சி’ என்கிறார்கள்.

பரிமாணம் (Dimention) அளவு, கோணம்.  முப்பரிமாணம், எனும் சொல்லிலேயே அதன் விளக்கம் உள்ளது. முப்பரிமாண(3D) திரைப்படம் பார்க்க ஒரு சிறப்புக் கண்ணாடி அணிகிறோம் அல்லவா?  

ஈ, தா, கொடு

            ஆங்கிலத்தில் You எனும் சொல்லை, சொல்லும் முறையில் தான் மரியாதை அமையும். இதற்குத் தமிழில் நீ, நீர், நீயிர், நீவிர், நீங்கள் எனப் பல சொற்கள் உண்டு. இப்போது, ஒருமையில் ‘நீ’ யும், பன்மை மற்றும் மரியாதை ஒருமையில் ‘நீங்கள்’ என இரண்டு மட்டும் வழக்கில் உள்ளன. இதே போல give எனும் ஆங்கிலச் சொல்லைத் தமிழில் மூன்று வகையாகச் சொல்லலாம். மூன்றும் மூன்று நுட்பமான பொருளில் வரும்!

            ஈ-என்பது தாழ்மையுடன் கேட்பது. (இன்றைய தமிழில் “எனக்குக் கொஞ்சம் கொடுப்பா“ எனக் கெஞ்சிக் கேட்பது)

            தா-என்பது சம உரிமையுடன் கேட்பது (“மச்சான் உன் சட்டையைத் தா  டா“)

            கொடு-என்பது உயர்ந்த(?) இடத்தில் உள்ளவர்கள் அதிகாரமாகக் கேட்பது. “வரிகொடு“ என்பதுபோல. இந்த விளக்கத்தை, தொல்காப்பியரை வழிமொழிந்து நன்னூலார் சொல்கிறார். “ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும், இழிந்தோன் ஒப்போன், மிக்கோன் இரப்புரை” (நன்னூல்-பொது-407)  தமிழ்ச்சொற்கள் நுட்பமானவை!

ரயிலடியும் காரடியும்

            இலக்கிய, இலக்கணங்களை மொழியறிஞர் உருவாக்குகின்றனர். ஆனால் மொழிகள் சாதாரண மக்களால் தான் வாழ்கின்றன! சாதாரண மக்களுக்கான இலக்கியங்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் எழுந்தன. பாஞ்சாலி சபதத்தை, “ஓரிண்டு வருஷத்து நூல் பழக்கமுள்ள, சாதாரண மக்களுக்காக” எழுதியதாக அதன் முன்னுரையில்  சொல்கிறான் பாரதி.  

பேச்சு மொழியில் பிறசொல் கலப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நீரோடும் ஆற்றைத் தூர்வார மறந்தால் நாளடைவில் நீரோட்டமே  தடைப்படும் அல்லவா? அதுபோல, மொழியைத் தூர்வார இலக்கணம் அவசியம். அறிஞர்கள் உருவாக்கும் சொற்களை விட மக்களின் மொழி பொருத்தமாய் அமைந்து நிலைத்து விடுவதுண்டு!

            ரயிலடி(தஞ்சை), இடைப் பலகாரம்-சிற்றுண்டி- (செட்டிநாட்டுப் பகுதி), மெய்யாலுமா? செம(சிறப்பு), சகோ! (சென்னை)  போலும் புதிய சொற்களை மக்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனாலும் ‘ஜி’ போலும் பிறமொழி ஒட்டுச் சொற்களைத் தவிர்க்கலாம். மிதிவண்டி அழகான சொல்தான். அதற்குள் இருக்கும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறு பாகங்களில் ஒன்றுகூட தமிழில்லையே? சிந்தித்துப் பார்த்தால், புதிய கண்டு பிடிப்புகள் தமிழர் வழி வந்தால்தான் தமிழ்ப் பெயர்களை வைக்க முடியும் என்பது தனி ஆய்வுக்குரியது. 

------------------------------------- 

பின் குறிப்பு

தொப்புள் என்பதை ஆங்கிலத்தில் Navel என்பார்கள். நான் தவறுதலாக, “தொப்புள் கொடி“ என்னும் இடத்தில் அந்த ஆங்கிலச் சொல்லை இட்டுவிட்டேன். இதை நேற்று காலையில் (இந்து-தமிழ் நாளிதழில் படித்தவுடனே) எனக்குக் குறுஞ்செய்தி வழி தெரிவித்து தொப்புள்கொடிக்கும் விளக்கம் தந்தார்  

மேட்டுர் நண்பரும் எழுத்தாளருமான 

துணை மருத்துவப் பணிகள் பயிற்றுநருமான

 திரு குருநாதன் அவர்கள்.

பிறகு இந்த நமது வலைத்தளத்தில் திருத்தியதோடு, அச்சு நூலாக வரும்போதும் திருத்தி விடுவதாக நண்பருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். இவை ஆக்கபூர்வமான தகவல்கள். 

நாம் தவறு செய்து, திருத்தி, கற்றுக் கொள்ளலாம்!

தமிழில் தவறு நேர்ந்துவிடக் கூடாது!

எடுத்துரைத்த நண்பர்க்கு நன்றி.

-----------------------------------------

11 கருத்துகள்:

  1. பெர்லின் கனகராஜ்புதன், ஏப்ரல் 24, 2024

    அருமையான விளக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், ஏப்ரல் 24, 2024

      நன்றி தோழர்.
      (இந்த ஆண்டு சுற்றுலா இல்லையா?)

      நீக்கு
  2. பயனுடைய தகவல்கள். அறிந்தேன். தெளிவு பெற்றேன்.

    பதிலளிநீக்கு
  3. வழக்கம் போலவே சுவையான தகவல்கள் ஐயா!

    தாய் வயிற்றில் பிறப்பதால் வருவது தொப்புள். ஆனால் அந்தத் தொப்புள் எனும் சொல் கொப்பூழிலிருந்து எப்படிப் பிறந்தது என நீங்கள் விளக்கியிருக்கிறீர்கள் இங்கே! அருமை!

    பரிணாமத்துக்கும் பரிமாணத்துக்குமான மாறுபாட்டை எடுத்துரைத்ததோடு ‘பரிணாமம்’ தமிழ் இல்லை என்பதையும் சொல்லாமல் சொன்ன விதம் உங்களுக்கே உரிய நயம்!

    தருதலுக்கும் கொடுத்தலுக்கும் என்ன வேறுபாடு எனப் பல ஆண்டுகள் சிந்தித்து விடை கண்டுபிடிக்க இயலாதிருந்தேன். இதோ நீங்கள் இன்று சொல்லி விட்டீர்கள். மிக்க நன்றி!

    கட்டுரையின் இறுதிக் கருத்து சிந்திக்க வைத்தது. ‘இங்கிலீசுக்காரன்’ எனும் திரைப்படத்தில் நடிகர் சத்தியராசு சொல்வார், "பெரும்பாலான கண்டுபிடிப்புகள் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை. அவர்கள் தங்கள் மொழியில்தான் அவை எல்லாவற்றுக்கும் பெயர் வைத்திருக்கிறார்கள். எனவே எப்பொழுதும் பிறமொழிச் சொல் கலவாமல் பேசுவது என்பது இயலாது" என்று. ஆனால் என் கேள்வி என்னவென்றால், நம்மவர்களே கண்டுபிடித்தாலும் அதற்கு அவர்கள் தமிழில் பெயர் வைப்பார்களா என்பதே! நாம் அன்றாடம் இட்டலி மாவு அரைக்கப் பயன்படுத்தும் இயந்திரம் கோயம்புத்தூர் தமிழர் ஒருவர் புதுப்புனைந்ததுதானே? அதற்கு ஏன் அவர் தொடக்கத்திலேயே ‘மாவரைபொறி’ எனப் பெயரிடாமல் ‘Wet Grinder’ என வைத்தார்? எனில் கண்டுபிடிப்புகளின் (அல்லது புதுப்புனைவுகளின்) பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கக் காரணம் அவை ஆங்கிலேயர்களால் கண்டிபிடிக்கப்பட்டவை என்பது இல்லை; அவர்களது தாய்மொழிப் பற்றும் தாய்மொழி வழிக் கல்வியும் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் பணிவன்பான கருத்து. இது தவறாகவும் இருக்கலாம். அறிவியல் உலகத்தின் போக்கு பற்றி அறிந்தவர்களோடு ஆலோசித்தால் இதற்கான விடை நமக்கு உறுதிப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், ஏப்ரல் 24, 2024

      வழக்கம் போல ஆழமான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா! என் கருத்தில், ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே தமிழர்தம் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு, வழிபாட்டு நிலையில் தன்னிலை இழந்துவிட்டனர். அப்போதிருந்த பொறியியல் உலகை வியக்க வைத்ததே! பிறகு உலகத் தொடர்பு அரசியல் மாற்றம் புதிய கண்டுபிடிப்பு ஏதுமின்றி வந்தவற்றை வாங்கிப் பயன்படுத்தல்... அடுத்தடுத்து முதலாளியம், பன்னாட்டுப் பொருளியல், புதிய சிந்தனைக்கான கல்வியின்றி அலைக்கழிந்து, வணிகத்தில் வாழத்தொடங்கி.. தான் கண்டுபிடித்த “மாவரை பொறி”யைத் தமிழ்நாடு தாண்டி விற்பனை நோக்கில் ஆங்கிலத்தில் பெயர் வைத்து, மின்னஞ்சல் கண்டுபிடித்த அய்யாத்துரையும் அதில் தமிழில் பெயரிடத் தயங்கி (இன்று வரை தமிழில் மின்னஞ்சல் வைக்க முடியாமல்..?) புதிய சிந்தனை, புதிய கல்வி, புதிய தமிழ், புதிய பண்பாடு, புதிய அரசியல், புதிய சமூகம் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை அல்லவா? நம்மால் முடிந்த சிந்தனைத் தூண்டல் தான் நமது நோக்கம்.. சரியா நண்பா? தொடர்வோம்.

      நீக்கு
  4. தொப்புள்கொடி உறவுகள் அழகு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், ஏப்ரல் 24, 2024

      நன்றி. கொஞ்சம் முயன்று தங்கள் பெயரை உள்ளிட்டு வரலாமே?

      நீக்கு
  5. கொப்பூழ், படிவளர்ச்சி - சொற்கள் அறிந்து கொண்டேன் அண்ணா. இறுதி வரி அதிர்வேற்படுத்துகிறது!! - கிரேஸ் பிரதிபா

    பதிலளிநீக்கு
  6. நா.முத்துநிலவன்வியாழன், ஏப்ரல் 25, 2024

    அந்த அதிர்ச்சி, கடந்த ஆயிரம் ஆண்டுக்கும் மேலான தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவு குறித்து வந்தது. தோழர் இ.பு.ஞா. பின்னூட்டத்திற்கு நான் இட்ட பதிலைப் பார்க்க வேண்டுகிறேன். நன்றிம்மா

    பதிலளிநீக்கு