தமிழ்இனிது-38 - நன்றி - இந்துதமிழ் 12-03-2024 .

 


வாழைத்தார் – வாழைத்தாறு

            அடையாறு, அடையார் ஆனது! வாழைத்தாறு வாழைத்தார் ஆகிவிட்டது! ‘தாறு’, யானையை ஏவும் கைக்கருவி(படம்), குறிஞ்சிப் பாட்டு-150. இதை இப்போது ‘அங்குசம்’ என்பர். யானையை வேலை வாங்குவது குறைந்து, மாட்டைப் பயன்படுத்தும் இக்காலத்தில், உலோகத் தாறு, மரத்‘தாறு’ ஆகி, ‘தார்க்கோல்’ – ‘தார்க்குச்சி’  ஆகிவிட்டது! ‘தாறு’, ஒழுங்கான  வடிவம் கொண்டது. முறையற்ற பேச்சைத் “தாறு மாறாக” பேசுவதாகச் சொல்வதில் இச்சொல் புரியும். வாழைத் தாறும் ஓர் ஒழுங்கில், அழகிய வடிவில் ஆனது தானே?

சொற்களைப் பிரிப்பது  

தாறுமாறாகச் சொற்களைப் பிரிப்பதும், நிறுத்தக் குறிகளைத் தேவையின்றி இடுவதும், சொல்ல வருவதைப் புரியவிடாமல் செய்துவிடும். இவையற்ற ஓலைச் சுவடியிலிருந்து அச்சில் பதிப்பித்த தமிழறிஞர்கள், எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டு நமக்குத் தந்திருக்கிறார்கள்! புரிந்து – புரியும்படி – எழுத வேண்டும்  அல்லவா? 

‘’கட்டுண்டோம்‌, பொறுத்திருப்போம்என்பதைக்கட்டு உண்டோம்‌, பொறுத்து இருப்போம்எனப்பிரிப்பது பிழையாகி விடும்‌. 'பன்மணிமாலை' என்பது ஒரு நூல்வகை. அதைப்‌ 'பல்மணி மாலை' என்று சொல்லிப் பாருங்கள்‌. சிரிப்புக்கு இடமாகும்‌” என்கிறார் தமிழண்ணல். கணினியில் வடிவமைப்போர் (page maker) அச்சில் சமன் செய்து காட்டுவதில் (Left, Centre, Right and Justify)  இந்தச் சிக்கல் வரும்.

‘காலச்சுவடு’ வெளியிட்டுள்ள “பாரதி கவிதைகள்“ நூலை, பதம்(சொல்) பிரித்து, தந்திருக்கிறார் பழ.அதியமான். “பதம் பிரிக்கும் போது, ஓசை இன்பம் தடைபடும். எனினும் பொருள் உணர அப்படிப் பிரிப்பது தவறாகாது” என்னும் இவரது முன்னுரையை இன்றைய எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறையும், பாடநூல் கழகமும் இணைந்து வெளியிட்டுள்ள “செவ்வியல் நூல்கள் -உரை வரிசை“ பயன் தரும் தொகுப்பு. இலக்கிய வாசிப்பு, சொற்களைப் பிரித்துப் பயன்படுத்தும் முறை என இரண்டு பயன் கிடைக்கும்.

ஔ – துணையெழுத்து சரிதானா?

ஓவிய எழுத்து, ஒலியெழுத்து, வட்டெழுத்து, பிராமி (எ) தமிழி எழுத்து என தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் மாறி மாறி வந்துள்ளது. இதை வேடிக்கையாக, “இன்றைய திருக்குறளை, வள்ளுவருக்கே படிக்கத் தெரியாது!” என்பார்கள். 

17ஆம் நூற்றாண்டு வரை, எ ஒ தலையில் புள்ளி வைத்து குறில் என்றும், புள்ளியில்லாத எ ஒ எழுத்துகளே நெடில் என்றும் இருந்தன.  இவற்றை மாற்றி, இப்போதைய - எ(குறில்), ஏ(நெடில்), ஒ(குறில்), ஓ(நெடில்) எழுத்து வடிவ மாற்றத்தை நமக்குத் தந்தவர் இத்தாலியப் பாதிரியார், வீரமாமுனிவர் எனும் தமிழறிஞர்!  

            எனினும் தமிழின் துணையெழுத்துகளில் இன்னும் தெளிவு தேவை. ளகர வர்க்கத்திலுள்ள ள எழுத்து  ஊ, ஓள எனும் கூட்டெழுத்துகளிலும் உள்ளது. ஆனால், கூட்டெழுத்தில் வரும் ள எழுத்து தன் ஒலியை இழப்பதன் அடையாளமாக, சிறிதாகப் போட வேண்டும். கணினி, செல்பேசி  எழுத்துருக்களில்,  ஊ வசதி,  ஔ எழுத்துக்கு இல்லை! எனவே, ஆரம்பப் பள்ளி மாணவர், ஔவையாரை, ஒ-ள-வை-யா-ர் என்றே படிக்கிறார்கள்! 

       கையால் எழுதும் போது ஊ, ஔ எழுத்தில் வரும் ள எழுத்தைச் சிறிதாக எழுதிப் பழ(க்)க, வேண்டும். வீரமாமுனிவரின் ‘ர’, ர் இன்னும் -ஒருங்குறி தவிர்த்த- பல எழுத்துருக்களில் துணைக் காலாகவே உள்ளதும் கவலைக்குரியது.

-----------------------------------------------------------------------------------   

19 கருத்துகள்:

  1. நல்ல விளக்கம்.எளிமையாகப் புரியும்படி உள்ளது.வாழ்த்துகள் தோழர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், மார்ச் 12, 2024

      சரி.. சிந்தனையாளரும் எழுத்தாளருமான தங்களிடம் இதுபோலும் நடைமுறைக் குழப்பத்தில் உள்ள சொற்களின் பட்டியலை எதிர்பார்க்கிறேன் தோழர்.அனுப்புங்கள்

      நீக்கு
  2. பல்நோக்கு மருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனை விவரம் அறிந்தேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. அருமையான தொகுப்பு 🙏🙏🙏

    பதிலளிநீக்கு
  4. தாறுமாறாய் கிடக்கும் தமிழைஆற்றுப்படுத்தும் முத்துநிலவன்ஐயாவின் நுண்ணிய நோக்கு பாராட்டுக்குஉரியதாகும்.அ.இருளப்பன்/தலைவர்/தொல்காப்பியர் மன்றம்-மதுரை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், மார்ச் 12, 2024

      நன்றி அய்யா. தங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். அனுப்புங்கள் அய்யா.

      நீக்கு
  5. சிறந்த சிந்தனைகள் கவிஞருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், மார்ச் 13, 2024

      நன்றி நண்பரே. தொடர்ந்து பெயருடன் கருத்திட வேண்டுகிறேன்.

      நீக்கு
  6. இந்த வாரம் அனைத்துமே சுவையான தகவல்கள் ஐயா!

    தாறு எனும் சொல்லின் பொருள் பற்றி இப்பொழுதுதான் அறிகிறேன். வாழைத்‘தார்’ பற்றிய பல ஆண்டு ஐயத்துக்கு விடை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி!

    சொற்பிரிப்பு தவறானால் பொருளும் மாறிப் போகும் என்பதை நகைச்சுவையான எடுத்துக்காட்டுகளால் விளக்கிய விதம் அருமை! இப்படி எழுதுபவர்கள் பலர் உண்டு. வைத்து இருந்தான், பயன்படுத்தி இருந்தேன் என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஒரு சொல்லை எழுதும் முன் அதை வாயால் சொல்லிப் பார்த்தாலே இத்தகைய பிழைகளைத் தவிர்க்கலாம். இலக்கணம் தெரியாது என்று சொல்லிக் கொண்டு, இப்படி உச்சரித்துப் பார்த்தே பிழையின்றி எழுதும் சூரர்களும் உண்டு!

    பன்மணிமாலையைப் ‘பல்மணிமாலை’ என்றால் சிரிப்பு இடமாகும் என்றீர்கள். ஆனால் இன்று பலரும் இப்படித்தான் எழுதுகிறார்கள் ஐயா! பல்பொருள் அங்காடி, பல்நோக்கு மருத்துவனை என்றுதான் செய்திகளிலேயே சொல்கிறார்கள். என்ன செய்வது!!

    ஊ, ஔ ஆகிய எழுத்துக்களில் உள்ள ‘ள’ பற்றிச் சொன்னமைக்கு நெஞ்சார்ந்த நன்றி! பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாத தகவல் இது. எனக்கும் அண்மையில் திருவள்ளுவன் இலக்குவனார் ஐயா சொல்லித்தான் தெரியும். பொதுவாக எழுத்துக்களையும் துணையெழுத்துக்களையும் ஒரே அளவிலேயே நாம் எழுதிப் பழகி விட்டதால் இதுவும் அப்படி ஆகி விட்டது போலும். ‘சுந்தரம்’ எழுத்துருக்களில் இந்த எழுத்தளவு சரியாக இருப்பதை நாம் காணலாம்.

    ரகரத்தின் எழுத்து வடிவத்தில் இருக்கும் குறை பற்றிய உங்கள் கவலையை மீண்டும் பதிவு செய்திருக்கிறீர்கள். அரசு கவனித்தால் நல்லது! ‘உத்தமம்’ மாநாடு போன்ற தமிழ்த் தொழில்நுட்பர்கள் கூட்டத்தில் ஒருமுறை நீங்கள் இதை எடுத்துரைப்பது பலனளிக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. மிகவும் சிறப்பான கட்டுரை. "ஊ, ஔ" எவ்வாறு எழுதுவது என்று தெரிந்துகொண்டேன். தாறுமாறு என்ற சொல்லின் பொருள் அறிந்து வியந்தேன். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு