எனது 'புதிய மரபுகள்' கவிதைத் தொகுப்பிலிருந்து...

'ஐஸ்!'

சொறிந்துவிடு! 
சொறிந்துவிடு!

உன் நகங்களில் 
அழுக்குச் சேர 
அவன் முதுகு ரணமாக -
சுகமாக சொறிந்துவிடு!

சொல்லித் தெரிவதில்லை 
சொறிதல்!
மன்மதக் கலையை விடவும் 
ரகசியமானது!
மதுவை விடவும் 
போதையானது!

விரகதாபத்தை விடவும்,
இந்த விரல்களின் தாபம் 
வேகமானது!

நீ கொடுக்கும் 
சுக வெறியில் 
வருகிறவனின்
முகத்தை விடவும்
நகத்தையே எதிர்பார்த்து 
அதோ.. அவன் 
நரங்கிப்போய்விட்டான் பார்!

உனது 
தடவலுக்காய்த் 
தாக வெறி கொண்டு   
மனசெல்லாம் சொறிபிடித்து
சாபம் வேண்டி 
தவமிருக்கிறான் பார்!

இதில் 
பாவம் எது?
பாவி யார்?
அதைப்பற்றி 
நமக்கென்ன? 
சொறிந்துவிடு !
சொறிந்துவிடு!!

என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள்:- – 3


மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளரும் நல்ல கவிஞருமான மும்பையைச் சேர்ந்த புதிய மாதவி... 

 

தனது பிரச்சினைகளையே சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய பெண்கள் 
மிகவும் குறைவு!
அதிலும், சமூகத்தின் பிரச்சினைகளைச் சரியாகப்புரிந்துகொள்ளக்கூடிய பெண்கள் மிகமிகவும் குறைவு!
சமூகத்தின் பிரச்சினைகளை அரசியலாகப் புரிந்துகொள்ளக்  கூடியபெண்கள் மிக மிகமிகவும்குறைவு!
அதையும் கலைஇலக்கியத்தில் சரியாகக் கொண்டுதரக்கூடிய  பெண்கள் மிகமிக மிகமிகவும் குறைவு!
 
கவிஞர் புதிய மாதவி அந்த மிகமிக மிகமிகவும் குறைவான பகுதியின் -மிகவும் அரிதான-ஒரு தோழி.
 
சுமார் ஓராண்டுக்கு முன்பு, இவரது முதல் கவிதைத் தொகுப்பான"சூரியப் பயணம்"பார்த்து,முதன் முறையாக ஒரு பெண்கவிஞரின் அரசியல்-சமூகக் கவிதைகளைப் பார்த்து, அசந்துபோனேன். அவர்களின் வலைப்பூவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெருமைப் படுகிறேன்.. அவசியம் தொடர்ந்து படிக்க வேண்டிய அவரது வலைப்பக்கம்: 

 

எனக்குப் பிடித்த வலைப்பூ படைப்புகள்… 3


அன்புள்ள மாணவிக்கு ..

நன்றி: பூவரசி.காம் 

அன்புள்ள ஹெலன்,

நலமே. நலமாகவே இருப்பாய் என நம்புகிறேன். அதிசயமாக நம் ஆசிரியர் நமக்குக் கடிதம் எழுதுகிறாரே என்று உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். பலநாள் ஆதங்கமே இன்று கடித வடிகால் தேடிக் கொள்கிறது என்பதுதான் உண்மை. வேறு யாரிடமோ சென்று புலம்புவதை விடவும் என் மாணவர்களிடமே நான் என் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

நீ உன்னுடைய மேல்நிலைத் தேர்வுகளை முடித்து விட்ட களைப்பில் அயர்ந்திருப்பாய். கடைசித் தேர்வினை எழுதி முடிக்கையில் உன் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது மகளே. நான் தேர்வுப்பணியில் இருக்கையில் தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவிகள் கடைசி நேரத்தில் எழுந்து ஓடும் யத்தனிப்பிலேயே இருந்தார்கள். தேர்வின் இறுதி மணி அடிக்கப்பட்ட உடன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பெனத் தம் இருக்கையிலிருந்து எழுந்து ஓடிய பெண்கள், சற்று நேரத்துக்கும் பின் தங்கள் சக தோழிகளைப் பார்த்த பிறகுதான் வேகம் மட்டுப்பட்டு நின்றனர். ஒரு சிலர் பேனாவில் மிச்சமிருக்கும் நீல மையினை மற்றவர்கள் மீது தெளித்துத் தங்கள் விடுமுறை தொடங்கிய ஆனந்தத்தை வெளிப்படுத்தினர். ஓ... வென்ற காதைப் பிளக்கும் ஆரவாரம் எனக்குள்ளும் மகிழ்ச்சியின் சாறைக் கொஞ்சம் ஊற்றியது பெண்ணே.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா ஹெலன்? பதினொன்றாம் வகுப்பின் முதல் நாளில் நம் வகுப்பில் ஆசிரியராய் நானும் மாணவர்களாகிய நீங்களும் கலந்து பேசிய அந்தத் தருணம்? நான் எப்போதும் என்னை ஆசிரியராக மட்டும் உணர்ந்ததில்லை மா. உங்கள் எல்லோருக்கும் நல்ல தோழியாகவும் இருக்க விரும்புவேன். அப்படி இருப்பதால் தானே என்னிடம் உங்கள் துயரங்களை, மகிழ்ச்சிகளை, வாழ்வைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்களிடமிருந்து நான் ஒவ்வொரு நாளும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதால் நீங்கள் எனக்கு குருவாகவும் ஆகிறீர்கள். 

ஒவ்வொரு நாளும் பாடம் பற்றிப் பேசியதோடு அன்றாட நிகழ்வுகளையும் பாடத்தோடு தொடர்புடைய பிற செய்திகளையும் நாம் கலந்து பேசியிருக்கிறோம் தானே. இது மொழி ஆசிரியருக்கே கிடைக்கக் கூடிய பெரும் பேறன்றோ! எத்தனை கதைகள்? எத்தனை நகைச்சுவை? நீங்கள் கவிதை என்று கொண்டு வரும் உங்கள் கிறுக்கல்கள்? ஆனால் போட்டி என்று வந்தால் தலை தெறிக்க ஓடுவீர்களே.. அப்போது பார்க்க வேண்டும் உங்கள் ஓட்டத்தை. சிரிப்பாணிதான். சரி, இப்படிக் கலந்து பேசும்போதெல்லாம் கொண்டாட்டம்தான் உங்களுக்கு. ஆனால் உங்களில் எவரையேனும் எழுப்பிப் படிக்கச் சொன்னால், கேள்வி கேட்டால் திரு திருவென்று விழிப்பீர்களே பார்க்கணும். அதிலும் படிக்கச் சொன்னால் வேண்டாம் மிஸ். கேர்ள்ஸ் இருக்காங்க என்று மாணவர்கள் வழிவதைப் பார்க்கணுமே.

உன் அப்பா அடிப்பதை, திட்டுவதை நீ தயங்கிக் கொண்டே ஒரு நாள் சொன்னாயே, நினைவிருக்கிறதாடா? அருணாவின் தந்தை இறந்து போனவுடன் எனக்குத் தொலைபேசி அழுதாயே. ரசாக்கும் வெற்றிவேலும் அடிக்கடி சண்டையிடுவதைக் கவலையுடன் என்னிடம் முறையிட்டாயே. உன்னைத் தொடர்ந்து உன் தோழமைகளும் என்னுடன் தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றில் ஒரு சிலவற்றிற்கேனும் என்னால் சில தீர்வுகளை, ஆறுதல்களை அளிக்க முடிந்ததே அம்மா. ஒரு ஆசிரியராய் நான் பெருமை கொள்ளும் தருணங்கள் அவைதான்.

என்னைப் பொறுத்த வரையில் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவரை மேலும் படிக்கச் செய்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமில்லை. படிப்பில் சிக்கல் இருக்கக் கூடிய மாணவர்களைப் படிக்கத் தூண்டுவது, அதன் உளவியல் காரணங்களைச் சந்திப்பது இவையே என் முன்னால் இருக்கக் கூடிய சவால்கள். அப்படித் தேடியபோது தானே நன்றாகப் படித்தும் சட்டெனப் பரபரப்பாகி, படித்ததையெல்லாம் மறந்து விடக் கூடிய, எந்நேரமும் பதட்டமான கிரிதரனைக் கண்டேன். அதைப் பற்றிக் கேட்டபோது சிறுபிள்ளை போல் அவன் அழுதது இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது. பதறிப்போன என்னிடம் வீட்டு சூழலைச் சொல்லியபோது அதைக் கடக்கச் சில உத்திகளையாவது என்னால் கற்பிக்க முடிந்ததில் மகிழ்ச்சிதான்.

என் மாணவர்களைப் பற்றிப் பேசத்தொடங்கினால் எவ்வளவு நாட்களானாலும் தீராது. தேர்வுகளை நீ நல்ல முறையில் எழுதியிருப்பாய் என்பதில் எனக்கு ஐயம் எதுவுமில்லை. நீ எது குறித்தும் பதட்டமடையும் பெண்ணல்ல. உன் சிரித்த முகமும், டீச்சர் என்னும் உன் அழைப்பும் இன்னும் என் காதில் ஒலித்தபடி. சில சமயங்களில் எம் எதிர்பார்ப்புகளை உங்கள் மீது திணித்தபோதும் எங்கள் மீதுள்ள் அன்பின் காரணமாகப் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் உங்கள் நன்மைக்குத்தானே செய்கிறோம் என்ற முழக்கத்துடனே எங்கள் குற்ற உணர்வை ஒவ்வொரு வருடமும் கடந்து செல்கிறோம்.

இலக்கணப் பாடத்தை நான் ரசித்து, ருசித்துக் கற்பிக்க, மதிய உணவின் முட்டத்தில் நீங்கள் கண்கள் கிறங்க அரை மயக்கத்தில் இருக்க, கோபமும் சிரிப்புமாக வரும் எனக்கு. என் செய்வேன் பராபரமே! உங்கள் குழந்தைத்தனம் கொடுக்கும் மகிழ்ச்சியைப் போலவே உங்கள் வேகம் எனக்குச் சில சமயம் பயத்தைக் கொடுக்கும் மகளே. உடற்கவர்ச்சியில் காதலுறுவது, படிப்பை இழப்பது, வீட்டின் வசவுகளில் சட்டென்று அதிர்ச்சிகரமாக முடிவெடுப்பது என எத்தனை சம்பவங்கள்?

இங்கு தேர்வெழுதும் மாணவர்கள் கூட, வினாத்தாள் மிகச் சுலபமாகவே இருந்தும் சரியாக எழுதாமல் அடுத்தவர் விடைத்தாட்களைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வருத்தமாக இருந்தது. வருடம் முழுதும் உயிரைக் கொடுத்துக் கற்பித்தும் கூட இன்றைய மாணவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வி உள்ளுக்குள் என்னைக் குத்திக் கிளறியது. ஹெலன், மாணவர்களை மட்டும் குற்றம் சாட்டுகிறேனென்று நினைக்காதே. எங்கள் பக்கத்திலும் தவறுகள் இருக்கின்றன என்றாலும் இன்று பொதுவாகவே பார்த்தால், ஊடகங்களின் தாக்கத்தால் மாணவர் கல்வியின்பால் கவனம் செலுத்துவது குறைந்தது போலவே எனக்குத் தோன்றுகிறது. சமூகம், அரசு, கல்வி நிறுவனங்கள் என எல்லோருக்கும் இதில் பங்குண்டு என்பதை உணர்ந்தே இருக்கிறேன். ஒரு பக்கம் மாணவர்கள் மதிப்பெண்ணைத் துரத்திக் கொண்டு இயந்திரங்களைப் போல ஓடுவதைப் பரிதாபத்துடன் பார்ப்பது போலவே, படிப்பை அலட்சியத்துடன் அணுகும் மக்களையும் கவனிக்கிறேன். 

அறிவுரைகள் கசக்கும் பருவமிது. நாவைத் திறந்தால் பொய் தாராளமாகப் புழங்கும். சில நேரம் எங்களுக்காகக் கேட்டுக் கொள்வதே உங்கள் மனதில் ஏதோ ரசவாதம் செய்து உள்நுழைந்து வேலையும் செய்யத் தொடங்கும். போனாப் போகுதுன்னு உங்களுக்காகப் படிக்கிறேன் டீச்சர் என்று சொன்ன தியாகராஜனை, அவன் சொன்ன தோரணையை அவ்வப்போது நினைத்துச் சிரித்துக் கொள்வேன். அக்கறை, முயற்சி இதெல்லாம் குறைந்துகொண்டு வருகிறதோ எனத் தோன்றும். தேவையற்று உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கிறீர்களோ என்ற பயம் வரும். அதிகம் யோசித்தால் எனக்குத் தான் வயதாகிக் கொண்டிருக்கிறதென்றும் நினைத்துக் கொள்வேன்.

என்ன செய்வேன் மா? தம்பி நான் ஏது செய்வேனடா என்று பாரதி கையறு நிலையில் புலம்பியதைப் போலவே எங்களில் பலரும் உங்களை நினைத்துப் புலம்புகின்றனர். உங்கள் மன நிலையில், சூழலில் நின்று பார்க்கையில் உங்களில் பலரை நினைத்தாலும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. என் செய்ய.

சரிம்மா. இன்றைய சூழலில் ஆண், பெண் இருவருக்குமே கல்வி அவசியம்தான். இவையெல்லாம் நாம் வகுப்பில் பேசியவைதான். கோபிதான் டீச்சர் நீங்க எப்பவுமே கேர்ள்ஸுக்குத் தான் சப்போர்ட் பண்றீங்க ன்னு சண்டைக்கு வருவான் இல்லையா? அதனால், மேலே உயர்கல்வி வாய்ப்பு பற்றி யோசித்து வைத்துக் கொள். உன் வகுப்புப் பெண்களிடமும் அது பற்றிப் பேசு. தெளிவாக முடிவெடுங்கள். அதில் உங்களுக்கு என்ன சந்தேகமென்றாலும் எப்போதும் நான் காத்திருக்கிறேன். எனக்குத் தொலைபேசுங்கள். நன்றாகப் படியுங்கள்.
என்றும் உங்கள் நலம் நாடும்

உங்கள் ஆசிரியை.

http://tparameshwari.blogspot.com/2011/04/blog-post.html

‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’–காப்புப் பருவம் :

பாடல் எண்: 2 தொல்காப்பியர்

முன்னைப் பிறந்த மொழிபலவுள்
மூத்துச் சிறந்த மொழித்தமிழை,
முதிரா மொழியார் முனையுமுன்னே
முனைந்து காத்த காப்பியனே!
அன்னைத் தமிழின் அணையாக
அயல்எம் மொழிக்கும் அமையாத
அகமாய்ப் புறமாய்ப் பொருள்பிரிவை
அமைத்த புலமை தேர்பெரும!
பின்னைப் புலவர் பெறத்தமிழை
பேரார் எண்ணூற் றைந்திரட்டும்
பிழைதீர் நூற்பா, இயல்மூன்றில்
பிழிந்து தந்த பெரும்புலவ!
உன்னை அழைத்தேன், உனதுமொழி
உயர்வைக் காக்க உதவென்றே!
ஒருசேய் வடிவாம் மறைமலையை
உணர்ந்து காக்க உழைநின்றே!
----------------------------------------------------------------------

‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’ – காப்புப் பருவம் :
பாடல் எண்: 3 திருவள்ளுவர்

அளந்த சொல்லில் அளவின்றி
அரிய பொருளை அழுத்தி,உல(கு)
அனைத்தும் ஏற்க வாழ்வியலை
ஐந்நால் நூற்றாண் டதன்முன்னே
கிளந்த உண்மைக் கிளர்குறளை
‘கிளருந் தோறும் அறியாமை
கிளம்பும் வண்ணம்’ கிட்டித்து,
கீழோர் செயலால் மேலோரின்
தளர்ந்த மனக்குத் தாங்கியென
‘தமிழ்’என் சொல்லே தாராமல்,
தனித்தே இன்றும் நின்றோனே!
தமிழால் உலகை வென்றோனே!
வளர்ந்த தமிழை வழக்கொழியா
வண்ணம் காக்கக் காப்பாயே!
வள்ளுவ னே!உன் மறைமலையாம்
வடிவார் சேயைக் காப்பாயே!

எனது ‘புதிய மரபுகள்’ கவிதைத் தொகுப்பில் இருந்து…


                  விழி! எழு!! தாயே!!!

இமயத் தலைமுடி நரைத்தஎன் தாயே!
எத்தனை புகழ்வளர்த் தாயே! – உன்
குமரிக் கால்களில் கொஞ்சும் அலைகளில்
நெஞ்சினைக் கொள்ளைகொண் டாயே!- மன
அமைதியும் அழகும் எங்கு தொலைத்தனை?
           அய்யகோ இன்றைய நிலவரம்! -மனச்
சுமையினை எங்குபோய்ச் சொல்லுவேன் அடடா!
சூழ்ந்ததே இனமதக் கலவரம்?

புத்தரும் சித்தரும் போலப் பெரும்புகழ்ப்
புத்திரர் உனக்கென்ன குறையா? - இனி
இத்தனைப் பெருமைகள் இருந்தும்உன் பிள்ளைகள்
இன்றிங்கு நலிவது முறையா? – மத
யுத்தமும் சாதியால் ரத்தக் களரியால்
உயிர்ப்பலி யாவதும் சரியா? - இவை
அத்தனைக் குள்ளும்ஓர் சுயநலப் பேய்பிடித்(து)
ஆடுதல் இனியும் காண்கிலையா?

ஜீவ நதியெனும் ரத்தநாளங்களால்
செழும்பயிர்க் கூச்செரிந் தாயே! – தளிர்
பூவும் பிஞ்சுமாய்க் கனியும் கிழங்குமாய்ப்
பொன்னுடல் புல்லரித் தாயே! – வளம்
மேவும் அழகெலாம் தீயவாய் தின்றதோ?
மேனியும் புண்மலிந் தாயே! - இவை
யாவும் சுயநல அரசியல் திருவிளை
யாடல் இதை மறந்தாயோ?

‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’ – காப்புப் பருவம் - பாடல் :1


ஒளிதோன்ற ஒளியிலிருந்து
     யிர்தோன்ற (1) உயிருடம்பில்
             உணர்வும் தோன்ற
உணர்வொன்றி உயர்-இழிவும்
                    ஒன்றின்றி உளம்ஒன்றி
                          உரையா உண்மைக்
களிதோன்ற களிமாறிக்
கவல்தோன்றக் கணக்கின்றிக்
கறங்கி நின்ற
கருத்தில்லா முன்னோரின்
கருத்தறிய முதன்முதலில்
கடுநா நின்றும்
விளிதோன்ற விளியுணர்த்தும்
மொழிதோன்ற தமிழின்வழி (2)
விளக்கம் தோன்ற
விளங்கியபின் மாந்தர்உளம்
விலங்கிலிருந்து உயர்ந்தோங்கி
வேறாய்த் தோன்றும்
அளிதோன்ற அனைத்துயிரின்
அகத்திருளை அகற்றுதமிழ்
அறிவை வேண்டி
அழகுதமிழ்ப் பழகுமறை
                     மலையடிகள் தமைக்காக்க
அழைப்பாம் அன்றே!

------------------------------------------------------------------------
(1)- இக்கருத்து அடிகளின் கருத்தே :
‘ஒளியுருவில் ஒலியுருவுதோற்றுவித்த தொன்னாளில்’:
 ‘அம்பிகாபதி அமராவதி’ நாடகக்கடவுள் வாழ்த்து -வரி:6
(2)- ‘தமிழ் இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று கட்டுரைத்துச் சொல்ல இயலாது’ என்று அடிகள்தம் ‘உரைமணிக் கோவை’ (பக்கம் 64) கூறியதால்,
தமிழின் தோற்றக் காலத்தைக் குறிப்பிடக் கூடவில்லை
------------------------------------------------------------------------



‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’


முன்னுரை : (2)


அரசர்கல் லூரியில்யான் 
     பயின்றக்கால் ‘பிழையில்லா
         அருந்த மிழ்ப்பா  
வரைதற்கே இனியாரும்
     வாராரோ?’ எனயெண்ணி  
         வருந்தி யக்கால் 
முருகமர்ந்த பாநெஞ்சின்
     முதுக்குறைவால் எமைத்தொடர  
         முதலா மாண்டில்
இருவரவண் எழுந்திட்டார்  
     ‘நா.முத்து நிலவன’; ‘துரை’  
          என்போர் அன்னோர்!  
-- புலவர் செந்தலை ந.கவுதமன்



மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் - நா.முத்துநிலவன்

‘முத்துநிலவன்’ “பிறந்த” கதையும் 
‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’ 
எழுந்த கதையும்...

                   திருவையாறு அரசர் கல்லூரியில் நான் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்தபோது,-(19வயது) ‘தமிழ் இலக்கிய - இலக்கணக் கடல் அய்யா தி.வே.கோபாலர் அவர்கள் முதல்வராக இருந்தார்கள்.
                 அவர் ஏற்றியிருந்த பழந்தமிழ் வெறி வேறொரு முனையில் ‘தமிழியக்கம்’ என்னோடு நெருங்கக் காரணமானது. தற்போது கோவை அருகில் உள்ள சூலூர் பாவேந்தர் பேரவையின் செயலர் புலவர் செந்தலை ந.கவுதமன் அண்ணா அப்போது அதே கல்லூpயில் இறுதியாண்டு படித்துவந்தார் அவர்தான் எனது இயற்பெயரை  மாற்றி ‘முத்து நிலவன்’ எனப் பெயர் சூட்டினார். 
                  அப்போது தமிழியக்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தவர் பின்னாளில் தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த பேரா. தமிழ்க்குடிமகன் அவர்கள்.  பொதுச்செயலராகத் தஞ்சைப் பேரா.இரா.இளவரசு அவர்களும், மாநில நிர்வாகக் குழுவில் திருச்சி ஈவெரா கல்லூரிப் பேராசிரியர் கு.திருமாறன் அவர்களும் தற்போது ‘முதன்மொழி’ இதழாசிரியராக இருக்கும் திரு அரணமுறுவல் அவர்களும் இருந்தார்கள்.
                   எனக்கு நெருக்கமான திருக்காட்டுப்பள்ளித் தோழர் ஞானசேகரன் ‘அறிவுறுவோன்’ ஆகவும், தோழர் பெ.மணிராஜ் ‘மணியரசன்’ஆகவும், திருவையாறு நீதிமன்றத்தில் பணியாற்றிய தோழர் நா.விஜயரங்கன் ‘மன்னைமறவன்’ ஆகவும், செந்தலை ந.கவுதமன் அவர்களுடன் அப்போது படித்து -தற்போது கரந்தைக் கல்லூரியில் பணியாற்றும் - பாலசுப்பிரமணியன் ‘இளமுருகன்’ ஆகவும் என் கூடப் படித்த சு.துரை ‘கோவை வாணன்’ ஆகவும், சீ.விஜயகுமார் வெற்றிச்செல்வனாகவும், செந்தலையாருக்கும் முன்னே அதே கல்லூரியல் படித்த ஜெயபால் -தற்போது சென்னையில் ‘பொன்னி பதிப்பகம்’ நடத்திவரும் - ‘வைகறை வாணன்’ ஆகவும்  என, பற்பலரும்; இவ்வாறே பெயர் மாற்றம் பெற்றனர்.
                    சூழலே தனித் தமிழ்மயமாக இருந்த நேரம் அது. ‘தனித்தமிழ், பகுத்தறிவு பொதுவுடமை’ எனும் முப்பெரும் கொள்கை முழக்கோடு தமிழ் மறவர்களாய்த் திரிந்த காலம்!

                  கண்டஇடத்திலும் வெண்பா ஈற்றடி கொடுத்து விரைந்து முடிப்பவர் பாராட்டப்படும் இனிய சூழல் ! (திருவையாறு காவிரியாற்றில் ஆடிப்பெருக்கின் பெருவெள்ளத்தில் நட்டாற்றில் குதித்து -பெண்கள் விடுதிப்பக்கமாக- முழுகி நீந்திக் கொண்டிருக்கும் போது,  வந்த ‘வசமாக மாட்டினேன் வந்து’ எனும் ஈற்றடியை நான். ‘நிசமாகச் சொல்கிறேன், நீச்சலறி யாமல் வசமாக மாட்டினேன் வந்து’ என வெகுவிரைவில் முடித்து காவிரியோடு தமிழில் நீச்சலடித்த பருவம்! 
  அதே ஆண்டில் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப்படும்  ‘மறைமலையடிகள்’ அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கான ‘மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்ப் போட்டி அறிவிப்பும் வந்தது. 
                  அப்போது– எனது பத்தொன்பதாம் வயதில், இரண்டாமாண்டுக் கல்லூரி விடுமுறையில்- எழுதிய நூல்தான் ‘மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்’

இதில், இப்போதைய முத்துநிலவனைத் தேடாதீர்கள்!!!

இது எனது ‘பழைய பனையோலை’!

இனி ஒவ்வொரு பாடலாகப் பார்ப்போம்…

உங்கள் கருத்தை அறிந்து தொடர எண்ணம் …
அன்புடன், 
நா.முத்துநிலவன், 
30-03-2011

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு


1. சு.சமுத்திரம் நினைவுப் பரிசு -
    விளிம்பு நிலை மக்களைப் பற்றிய படைப்புக்கு -      
-ரூ.10,000
2. கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர்கள்
    பெருமாயி-குப்பண்ணன் நினைவுப் பரிசு – நாவலுக்கு
-ரூ5,000
3. எழுத்தாளர் புதுமைப் பித்தன் நினைவுப் பரிசு – சிறுகதை நூலுக்கு -      
           -ரூ.4,000
4. அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப் பரிசு – குழந்தைகள் நூலுக்கு
            ரூ.2,500
5. குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு – தமிழ் வளர்ச்சிக்கான நூலுக்கு-
            ரூ.4,000
6. செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு – கவிதை நூலுக்கு
            ரூ.2,000
7. வ.சுப.மாணிக்கனார் நினைவுப் பரிசு – மொழிபெயர்ப்பு நூலுக்கு-
            ரூ.2,000
8. ப.ராமச்சந்திரன் நினைவு குறும்படம்2- ஆவணப்படம்2க்கான பரிசுகள் -
            ரூ.2,500 வீதம் 4 பரிசுகள்

படைப்புகள் ஒவ்வொன்றிலும் 4 படிகளை  அனுப்ப வேண்டும்


 கடைசி நாள்: 30-04-2011
அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர்-தமுஎகச.,
மாநிலக்குழு அலுவலகம்,
28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-600 018
----------------------------------------------------------------

நா.முத்து நிலவன் பேச்சு!

இளைஞர்களுக்கு உரிமையும் உண்டு! கடமையும் உண்டு!
கல்லூரி விழாவில் கவிஞர் நா.முத்து நிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-மார்ச் 17
 இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர்களுக்கு, உரிமையும் உண்டு கடமையும் உண்டு இந்த இரண்டையும் உணர்ந்து தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோரே தன்முன்னேற்றத்தில் மட்டுமல்ல இந்தியமுன்னேற்றத்திலும் வெற்றிபெறப் போகிறார்கள் என்று கவிஞர் முத்து நிலவன் கூறினார்.
 இங்குள்ள மாமன்னர் கல்லூரியின் ‘குடிமக்கள் நுகர்வோர்மன்ற’ துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்; சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் பிரபல பேச்சாளருமான கவிஞர் நா.முத்துநிலவன் மேற்கண்டவாறு பேசினார்.
வுpழாவிற்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் பெ.சேதுராமன் தலைமையேற்றார். மாவட்ட வழங்கல் அலுவலரும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான அ.ராஜசேகரன் ‘குடிமக்கள் நுகர்வோர்மன்ற’ கல்லூரிக் கிளையின் பெயர்ப்பலகையைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். கவிதை, கட்டுரை பேச்சு, பாடல் மற்றும் கோலப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்க்குப் பரிசளித்து ‘நல்லாசிரியர்’ மு.மெய்யர் வாழ்த்துரை யாற்றினார். வழக்குரைஞர் மு.ரெங்கசாமி, பேராசிரியர்கள் சா.விஸ்வநாதன், ச.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இவ்விழாவில் பேசிய கவிஞர் முத்து நிலவன் மேலும் கூறியதாவது:
‘இன்றைய இளைஞர்- மாணவர்களுக்குப் பொறுப்பே கிடையாது’ என்பது போலப் பலரும்; நினைக்கிறார்கள்.. ஒரு சிலர் அப்படி இருந்தாலும் பெரும்பாலான மாணவர் அப்படிஇல்லை என்பதே உண்மை! சமுதாயம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் இளைய-மாணவர் சமுதாயமும் இருக்கும்
இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், உலகில் நடந்த சமுதாய-அரசியல் புரட்சிகளிலும் அந்தந்த நாட்டின் அத்தனை பேரும் பங்கேற்றதில்லை. மூன்று முதல் ஐந்து விழுக்காடு மக்களே அதுபோன்ற போராட்டங்களில் நேரடியாக பங்கேற்றதாகத்தான் வரலாறு சொல்கிறது. மற்றவர்கள் அந்த முன்னணி வீரர்களை நம்பி பின்னால் சென்றார்கள். நீங்கள் அந்த பின்னணி வீரர்களாக இருப்பதும், நேரடிக் களம் காணும் வெற்றி வீரர்களாக இருப்பதும் உங்கள் உரிமைகளையும் கடமைகளையும் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.
நுகர்வோர் உரிமை இரண்டு தன்மைகளைக் கொண்டது. ஒன்று தன்னலம் சார்ந்தது, இரண்டாவது நம் தேசநலம் சார்ந்தது. ஒரு பொருளை வாங்கும்போது நட்;டம் அடைவதும், பொருள் இழப்பு நேர்வதும் தன்னலம் சார்ந்தது என்றாலும் அந்தப் பொருளின் தன்மை சார்ந்து தேச நலமும் அதற்குள் அடங்கியிருக்கும். இந்த இரண்டையும் நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களிடம் ‘நாம் கருப்பாக இருக்கிறோம் அதனால் அழகாக இல்லை’ என்னும் தாழ்வு மனப்பான்மையை விளம்பரங்கள் விதைக்கின்றன. அழகுசாதனப் பொருளால் கருப்பான நிறம் சிவப்பாக முடியுமா என்பதை சிந்திப்பதோடு, உழைப்பின் நிறமே கருப்புத்தான் என்பதையும் சேர்த்து சிந்தித்துப் பார்க்கவேண்டும். பன்னாட்டு வியாபாரிகள் நம் மனநிலையை மாற்றுவதற்காகச் செலவழிக்கும் தந்திரமே இதுபோன்ற விளம்பரங்கள். இதுபோலவே ஐம்பது காசு மிட்டாய் விளம்பரம் ஒன்றும், ஒரு பற்பசை விளம்பரமும் பெண்களைக் கேவலப்படுத்துவதை புரிந்துகொண்டு, அதுபோலும் பொருள்களை பயனற்ற பொருள் என்பதால் மட்டுமல்ல மட்டமான விளம்பரத்தின் காரணமாகவும் ஒதுக்கித் தள்ளவேண்டும்.
அதேபோல, இளநீரையும், பதநீரையும், கம்பங்கூழையும், நீராகாரத்தையுமே பருகிப் பல்லாண்டுகள் வாழ்ந்த நம் முன்னோர்களிலிருந்து விலகி, ‘கோலா’ குடிப்பதை ஒரு நாகரிகம் போல மாற்றிய வியாபாரத் தந்திரத்தையும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த விளம்பரங்களில் நடிக்கும் ‘பிரபலங்கள்’ பல லட்சம் வாங்கிக் கொண்டு, நம்மைக் குடிக்கச் சொல்லி ஆடிப்பாடிச் சிரிக்கிறார்கள்.
கோலிசோடா, குண்டுசோடாக்களை கிட்டத்தட்ட விழுங்கி ஏப்பமிட்டு விட்;ட ‘கோலா’ பானங்களைக் குடிக்கிறபோது நமது பண்பாடும் கேவலப்படுத்தப் படுகின்றது. புhரம்பரிய உணவுப்பழக்க மாற்றத்தால் நம் உடல் நலக்கேடும் உடன் நிகழ்வாகிறது. இதுபோன்ற பன்னாட்டுக் கொள்ளை வியாபார உத்திக்குள்; நம் நாட்டு சிறுதொழில் நசிவு போன்ற பொருளாதாரச் சிக்கலும் இருக்கிறது.
நாகரிகம் எனும் பெயரில் இந்த வியாபார விளம்பரங்களுக்கு நாம் விலைபோனால், நாளை நம் நாடே பொருளாதார அடிமைத் தனத்தில் வீழ்ந்து விடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல உணவு, நல்லநீர், நல்ல சுற்றுச்சூழல் போல நல்ல பண்பாடும், நல்ல அரசியலும் கூட நம் ஒவ்வொருவரின் உரிமை. அதற்காகத்தான் நம் தலைவர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்து சுதந்திரப் போரில் குதித்தார்கள், தம் இன்னுயிர்களைப் பலியிட்டார்கள்.
தியாகிகள் விட்டுச் சென்ற நம் தேசத்தாயைக் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் -குறிப்பாக இளைஞர்களின்- உரிமை. அதற்கான பணியில் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதும், மக்களைத் தயார்ப் படுத்துவதும் நம் கடமை. இதுதான் நுகர்வோர் மன்றத்தின் நுட்பமான பணியாக இருக்க வேண்டும்’
இவ்வாறு பேசிய முத்துநிலவன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்ததோடு, அனைத்துத் துறை மாணவ உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்த மன்ற ஒருங்கிணைப்பாளர் பேரா.சு.மாதவன் செயல்திட்டங்களையும் வெளியிட்டுப் பேசினார்.
சேகர்,மு.பழனியப்பன், கா.காளிதாஸ், லூகாஸ் உள்ளிட்ட பேராசிரியர்களுடன் அனைத்துத் துறைகளையும் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும் விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவர்தலைவர் மா.சுந்தரராஜ் வரவேற்க, முனைவர் பட்ட ஆய்வுமாணவரும் மன்றச் செயலாளருமாகிய கி.கோவிந்தன் நன்றி கூற, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவெய்தியது.
-----------------------------------------------------------------------
நன்றி: ‘தினமணி’ – நாளிதழ் 17-03-2011-வியாழன் (திருச்சி பதிப்பு) பக்கம்-2.