தமிழ்இனிது -(8)- 25-7-2023
அக நக முக நக – பாடல் உச்சரிப்பு சரியா?
![]() |
| ( நன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 25-7-2023 செவ்வாய்) ------------------------------------------------------------------------------ |
புகழ்பெற்ற, ”முகத்தில்
முகம் பார்க்கலாம்” (படம்-தங்கப்பதுமை-1959), “நறுமுகையே” (படம்-இருவர்-1997) போன்றவற்றில் இல்லாத க
(ga) ஒலி, இதில் எப்படி வந்தது? (‘தமிங்கில’ மொழி பெயர்ப்பை விட்டு விடுவோம்!)
இந்தியில் Khana–உணவு, Ghana–பாடல்!
தெலுங்கில் Muggu–கோலம் Mukku–மூக்கு! என ஒலி மாறினால் பொருள் மாறுவதே அதிகம். தமிழ்ச்சொல், உச்சரிப்பு வேறுபட்டும் பொருள் மாறுவதில்லை. அதனால், “அகநக முகநக” உச்சரிப்பு மாறினாலும் பொருள் மாறவில்லை.
எனினும் கலை சொல்லித் தரும் ஆசாரம்தானே கலாசாரமாகும்? (பாவம், பாவம் போலும் சில சொற்களில் வடமொழி, ஆங்கிலத் தாக்கமே இங்கு தமிழ் உச்சரிப்பைத்
தாக்குகிறது! இதில்தான் கவனம் தேவை)
க எழுத்து -
gha என ஒலிப்பது – தங்கம், (ங்க-இன எழுத்தை அடுத்து),
ha என ஒலிப்பது – காகம், (நெடிலை அடுத்து)
kha என ஒலிப்பது – பக்கம் (அதே ஒற்றை அடுத்து)
ka என ஒலிப்பது – கலை, காலை,
அகம், முகம் (சொல்லின் முதலில் வரும்போது அழுத்தமாகவும், இடையில் வரும்போது நெகிழ்வோடும் – முகத்தில்
முகம் பார்க்கலாம் பாடல் போல)
அடுத்த எழுத்தால் ஒலி மாறுவது சரியா எனில், தாய்க்கு மகனாக இருப்பவனே, தன் மகளுக்குத் தந்தை, மாப்பிள்ளைக்கு மாமா,
இணையருக்கு கணவர் எனில், ஒருவருக்கே இத்தனை பெயரா? என்று கேட்பதில்லையே! இதுதான் வாழ்வியல் முறை!
தியாகம், ரட்சகன் போல வடசொல்லைத் தமிழில் சொல்லும் போது, க எழுத்தை Ga என்று ஒலிப்பதே தவறான வழக்கு. அந்த பாதிப்பில் தமிழ்ச் சொல்லையும்
க (ga) என்பது தமிழ்மரபு அல்லவே! கிரந்த எழுத்து உச்சரிப்புப் பற்றித் தனியாக விரிவாகப் பேச வேண்டும்.
சிறப்பு-அழுத்தம் தந்து, “ஷிரப்பாக” சொல்வது சிரிப்பாகிவிடும்!
உடல்சூட்டை, காய்ச்சல் சுரம் (சுர்-வெப்பம்) என்று சரியாகச் சொல்வர் படிக்காதவர்! அதை ஜூரம் என்றும், சீன நாட்டிலிருந்து வந்த சீனியைக் கூட ஜீனி என்றும் படித்தவர்கள் சொல்கிறோம்!
“க(ka) எழுத்து, அடி நா, அடி
அண்ணத்தைப் பொருந்த” உருவாகும் என்கிறது தொல்காப்பியம் (எழுத்து-பிறப்பியல்-89)
சரியான
உச்சரிப்பை, பள்ளி ஆசிரியரை அடுத்து, காட்சி ஊடகமே கற்றுத்தர முடியும்! இன்றைய காட்சி ஊடகர், இதில் கவனமாக இருந்தால் நல்லது.
வாருங்கள், “அகநக முகநக” அழகாகப் பாடுவோம்! தமிழ் இனிது!
![]() | |
|
தமிழ் இனிது –(7)–
|
தமிழில் எழுதிப் பழகுவோம்! தொலைக்காட்சி
விளம்பரங்களின் கீழே, ‘சித்தரிக்கப்பட்டது’ என்று ஒரு வரியைப் பார்க்கலாம். சித்திரம் ‘சித்திரிக்கப்படும்’ என்பதே சரியானது. ‘கத்திரிக்கோல்’ வேறு, ‘கத்தரிக்காய்’ வேறு தானே? அகராதிகள் இவ்விரண்டு சொற்களையும்
இரண்டு மாதிரியும் சொல்கின்றன! ஒருவேளை, இந்தக் குழப்பத்தில்தான் அந்தச் சொல் ‘சித்தரிக்க’ப் பட்டிருக்குமோ!? ‘வணக்கத்தை முதற்கண்’ தெரிவிக்க வேண்டியவர், ‘முதற்கண் வணக்கம்’ ‘இரண்டாம்கண் வணக்கம்’(?) என்றால், மூன்றாம் கண் திறக்குமா? ‘முயல்கிறேன்’
என்பதை ‘முயற்சிக்கிறேன்’ என்று பிழையில் ‘சிக்’குவது ஏன்?! முக்காலமும் நடக்காது என்பதைச்சொல்ல வருபவர், ‘ஒருகால்’ என்பதை, ‘ஒருக்காலும் நடக்காது’ என்கிறார்! மறு கால் மட்டும் நடக்குமோ? ‘பிழை
திருத்தம்’ செய்பவரே, ‘பிழைத் திருத்தம்’
என்று பிழை செய்தால் அவரைத்தான் திருத்த வேண்டும். இது ஒரு சிறு ‘குறை’தான்,
ஆனால், திருத்தாமல் விட்டால் அதுவே ‘குற்றம்’ஆகிவிடும்! ஏனெனில்,
தெரியாமல் செய்வது ‘தவறு’, தெரிந்தே செய்வதுதான் ‘தப்பு’! சிகப்பா? சிவப்பா? ‘வறுமையின்
நிறம் சிவப்பு’(1980), ‘சிவப்பு மல்லி’(1981) திரைப்படங்கள் வந்த பின்னும், ‘நான் சிகப்பு மனிதன்’(1985)
என்றொரு படம் வந்து, அதிக கவனம் பெற்றது!
‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள, நிறத்துரு
உணர்த்தற்கும் உரிய என்ப’’ என்னும் (தொல்காப்பியம்-855) இலக்கணத்தை விடவும், கல்வித் துறையை விடவும், ஊடகங்களுக்கே பரவு திறன் அதிகம்
என்பதால் ஊடகங்களின் பொறுப்புக் கூடுகிறது அல்லவா? ‘பத்திரிகை’
‘பத்திரிகையாளர்’களை, ‘பத்திரிக்கை’
‘பத்திரிக்கையாளர்’ என்றே எழுதுகிறார்கள்! நல்ல
தமிழில் ‘செய்தித்தாள்’, ‘செய்தியாளர்’
என்பது இன்னும் சிறப்பல்லவா? ‘கல்யாணப் பத்திரிக்கை’
என்றால், ‘திருமண அழைப்பிதழ்’ என்பது இன்னும் அழகல்லவா! பாராளுமன்றமா? நாடாளுமன்றமா? ‘பாராளுமன்றம்’
பழைய வழக்கு! ‘உலகை ஆள்வது’ என்று பொருள்! நாடாள்வது ‘நாடாளுமன்றம்’
தானே? சொல்லின் பொருள் அறிவதும், அது சரியெனில் ஏற்பதும் தானே சரி? ‘ப்ளாட்ஃபாம்’
‘நடைமேடை’ ஆனதும், ‘சீரியல்’
‘நெடுந்தொடர்’ ஆனதும் அப்படி வந்த அழகு தமிழ்தான்! நம்மைச் சுழற்றியடிக்கும்
காற்று, நம் தலையில் குப்பையைக் கொட்டி விட்டுப் போவது இயல்பு!
பிறகு நம்மை நாமே தூய்மை செய்து கொள்கிறோம் அல்லவா? அதுபோல, அரசியல், பொருளியல் பண்பாட்டு,
வாழ்க்கை மாற்றம் காரணமாக நம் கண், காதுகளில் தானே
வந்து விழும் தவறான தமிழ்ச் சொற்களைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தவறாகவே எழுதினாலும் தவறில்லை!
‘Tq’, ‘Nandri’ Gd-n8 என்று ‘தமிங்கில’
எழுத்தில் எழுதுவதை
விடவும், தமிழில் முயன்று, தவறாக எழுதி, திருத்திக் கொள்வது நல்லது! புரிந்து எழுதினால் தவறு நேர வாய்ப்பில்லை! தீர்ப்புகளே திருத்தப் படும் போது, தவறுகளைத் திருத்த முடியாதா என்ன? கணினித் தமிழ்ப்
பிழைகளைத் திருத்த, தமிழ்நாடு அரசு விருது பெற்ற நீச்சல்காரனின்
இணையத்தளம் (http://www.neechalkaran.com/) பேருதவி செய்கிறது. எதையுமே ‘பதட்ட’த்துடன் செய்வது தவறு! பதறுதல்-‘பதற்றம்’ என்பதே சரி! அதற்காகப்
பதற்றமாகவே இருக்கவும் தேவையில்லை! ஏனெனில் தமிழ், படிக்கப் படிக்க
எளிது! பருகப் பருக இனிது! ---------------------------------------------------------------------------------------------
|


