“வலைப்பதிவர் திருவிழா-2015“

“வலைப் பதிவர் திருவிழா-2015“
பயணச்சீட்டு
முன்பதிவு செய்துவிட்டீர்களா?
புதுக்கோட்டை அழைக்கிறது.
விரைவில் மாதிரி அழைப்பிதழும்,
பதிவர் முன்பதிவுப்படிவமும் வெளிவரும்.
புத்தகம், குறும்படம் வெளியிடத் தயாராகி வருவோர்
ஒருவார்த்தை முன்கூட்டியே சொல்லி வையுங்கள்..

நாள் 11-10-2015 ஞாயிற்றுக் கிழமை
--------------------------------------------------------------- 
வலைப்பதிவர் அறிமுகம்,
புத்தக வெளியீடுகள்
குறும்பட வெளியீடுகள்
ஓவிய-கவிதைக் கண்காட்சி
தமிழிசைப்பாடல்கள்
சிறப்புரை
வருகை தரும் பதிவர்களுக்கான 
இருபது பரிசுகள்! விருதுகள்! பாராட்டுகள்!
மற்றும் 
உங்கள் அன்பான வருகை
இன்றைய மாவட்ட ஆட்சியரகம்
தமிழ்நாட்டின் மிகப்பெரிய தனியார் நூலகம் “ஞானாலயா“

உலகப் புகழ்பெற்ற “கொடுங்கை“ உள்ள
ஆவுடையார் கோவில்


ஓவியங்களால் 
உலகப்புகழ் பெற்ற சித்தன்ன வாசல்
 
ராசராச சோழன் பெண் எடுத்த,
கொடும்பாளுர் பழைய கோவில்
தமிழகத்தின் இரண்டாவது பெரிய
அருங்காட்சியகம்

உலகப் புகழ்பெற்ற செங்கல் அரண்மனை
(தற்போதைய பொது அலுவலகம்)

ஊமையன் கோட்டை (எ)
திருமயம் கோட்டை
(அய்யா அருள்முருகன் கண்டுபிடித்த
சுமார் 5000 ஆண்டுப் பழைய ஓவியப்பாறையுடன்)
----------------------------------------------- 

வடக்கே தஞ்சை இடையே கந்தர்வக்கோட்டை,
தெற்கே சிவகங்கை வேலுநாச்சியின் வீரக்கோட்டை
மேற்கே திருச்சியின் அழகான மலைக்கோட்டை,
இடையில் கலைக்கோட்டையாம் புதுக்கோட்டை.
வருக! வருக!
விரைவில் முழுவிவரத்துடன் மாதிரி அழைப்பிதழ்!

நெடுந்தூர வலைஞர்கள் இப்போதே பயண ஏற்பாடுகளைச் செய்க!

“வலைப்பதிவர் திருவிழா -2015“ புதுக்கோட்டை வருக!

“வலைப்பதிவர் திருவிழா -2015“ 

புதுக்கோட்டை வருக!


வலை நண்பர்கள் அனைவர்க்கும் 
ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிப்பதில் 
புதுக்கோட்டை நண்பர்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

2012,13ஆம் ஆண்டுகளில் சென்னையில் 
இரண்டு முறையும், 
2014 இல் மதுரையில் ஒரு முறையுமாக 
நடந்துள்ள நம் தமிழ்வலைப்பதிவர் சந்திப்பு, 
இந்த 2015ஆம் ஆண்டு, 
புதுக்கோட்டையில் நடக்கும் என, 
மதுரையில் முடிவு செய்தோம். 
அந்த நண்பர்களுக்கு நன்றி.

அதன்படி,
“புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க“ நண்பர்கள் ஒன்றுகூடி 
பணிகளைத் துவங்கியுள்ளோம்.

ஏற்கெனவே 
இந்த விழாக்களை நடத்திய 
அனுபவம் மிக்க 
நம் வலை நண்பர்களையும் 
தொடர்புகொண்டு, 
கலந்து பேசி  முடிவு செய்தோம்.
அந்த நாள்

11-10-2015 ஞாயிற்றுக் கிழமை!

அதன் பிறகு 
புதுக்கோட்டையில் நல்ல மண்டபமாகத் தேடி, 
கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் 
இன்று காலை சந்தித்து இடம் பார்த்தோம்.

இந்த இடம் புதுக்கோட்டையின் நகர் நடுவில், 
பழைய பேருந்து நிலைய நிறுத்தத்திலிருந்து 
சுமார் 100மீட்டர் தொலைவில், ஆலங்குடிச் சாலையில், 
(பீ வெல் மருத்துவ மனை எதிரில்) அமைந்துள்ளது.

அந்த இடம்

ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்

(ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை)

காற்றோட்டமான, 
கழிவறைகள் உள்ள, 
மேலே விருந்துமண்டபத்துடன் கூடிய, 
வெளியில் வாகன நிறுத்த வசதி உள்ள 
அழகான மண்டபம்.

நம் புதுகை மழலையர் பள்ளி உதவிக்கல்வி அலுவலரும் 
(Dt. Nursery AEEO), “கற்க கசடற“ வலைப் பதிவரும், 
கணினித் தமிழ்ச்சங்கத் தலைவர்களில் ஒருவருமான 
சகோதரி இரா.ஜெயலட்சுமி அவர்களின் அன்பினால் 
குறைந்த வாடகையில்- கிடைத்துள்ளது.

விழா வேலைகளைத் தொடங்கிவிட வேண்டியதுதான்.
உங்களின் நல்ல ஆலோசனைகளை 
உடனே தெரிவிக்க வேண்டுகிறோம்!

அழைப்பிதழ் வடிவமைப்பு, 
வருவோர் முன்பதிவு, 
புத்தக வெளியீடு- குறும்பட வெளியீடு 
வருகை தருவோரில்
சிறந்த பதிவர்களுக்கும்,
வயதில் மூத்த மற்றும் இளைய பதிவர்களுக்கும்
தவிர வெளிநாடு வாழ் வலைப்பதிவர்களுக்கும்
விருதுகள் தருவது தொடர்பாக
இறுதி முடிவெடுத்து, 
சென்னை, மதுரை மற்றுமுள்ள
மூத்த வலைநண்பர்கள் 
குறிப்பாக 
நம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் 
அவர்களோடும் கலந்து பேசி 
அழைப்பிதழ் விரைவில் வரும்.

11-10-2015 ஞாயிறு நாளைக் குறித்துக் கொள்ளுங்கள்
பயண முன்பதிவு செய்வோர் செய்து விடுங்கள்

விழா நிகழ்ச்சி நிரல் 
விரைவில் வரும்!

அனைவரின் ஒத்துழைப்புடனும் 
புதுமையான முறைகளிலும் 
நம் “வலைப்பதிவர் திருவிழா-2015“ 
சிறப்பாக நடைபெற 
அனைவரின் ஒத்துழைப்பையும் 
அன்போடு வேண்டுகிறோம்!
ஆலோசனை, ஸ்பான்சர், நிதி உதவி, 
அனைத்திலும்தான்!

வருக வருக! 
விழாச்சிறக்க ஒத்துழைப்புத் தருக தருக!
அன்புடன் அழைப்பது,
கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் –
புதுக்கோட்டை
(இது ஒரு பெரும் படை, 
பெயர்ப்பட்டியல் 
அழைப்பிதழோடு வரும்) 

“ஞானாலயா“ பவளவிழா அழைப்பிதழ், வருக!

காலம் - ஆகஸ்டு16 ஞாயிறு, மாலை 5 மணி
களம் -பி.வி.ஆர். மண்டபம்,  புதுக்கோட்டை



தனிநபர் முயற்சியினால் விளைந்த நூலகம்
அதிலும் பெரும்பான்மை மூலவடிவிலான முதல்பதிப்பு நூல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இந்த முயற்சி 
கடந்த 60 ஆண்டுகால சேமிப்பாகும்..

அவரது 75 வது வயதினை ஒட்டி பவளவிழா கொண்டாட்டம் நிகழ இருக்கின்றது. அப்போது விழாமலர் வெளியீடு மற்றும் நூல்கள் வெளியீடு , கூடுதலாக தனது வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் நூலகத்திற்கு விருப்பத்துடன் இன்றும் செலவிட்டுக்கொண்டிருக்கின்ற அவரைப் பாராட்டும்விதமாக நூலகவளர்ச்சி நிதி வழங்கல் என சிறப்பாக விழா நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு நடக்கவிருக்கின்றன.

வாசிப்பில் ஆர்வமுடையோர் அனைவரோடும் இந்த தகவலை பகிர்ந்து கொள்வதோடு ஆகஸ்டு 16, 2015 அன்று மாலை இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

தங்களின் பார்வைக்கு, கீழே அழைப்பிதழ்
தொடர்பிற்கு –
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி
ஞானாலயா ஆய்வு நூலகம்,
6,
பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு, இந்தியா.
தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

-------------------------------------------------------- 
ஞானாலயா இணைய அழைப்பு - இணைப்பிற்கு - 
http://www.gnanalaya-tamil.com/2015/08/16.html
----------------------------------------  
(வழித்தடம் - பி.வி.ஆர்.திருமண மண்டபம்,  திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அருகில் 
புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலை, திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் பேருந்து நிறுத்தம் அருகில்)

அவசியம் பார்க்க வேண்டிய குறும்படம் “அகல்யா”

அன்று கல்லாய்ப் போனவள்,
இன்று பழிவாங்குகிறாள்?
பரபரப்பான குறும்படம் “அகல்யா“ !
ராமாயணக் கதையில் கல்லாய்ப்போகும்படி சபிக்கப்பட்ட, (முனிவரின் மனைவி) அகல்யாவின் கதையை, தன்பார்வையில், 
14 நிமிடக் குறும்படமாக அகல்யாஎடுத்திருக்கிறார் சுஜாய் கோஷ். 

மூலக் கதையை இராமாயணத்திலிருந்து எடுத்த இயக்குநர், திரைக்கதை மற்றும் வசனத்தை மிகவும் கூர்மையாகச் செய்திருக்கிறார்.. கதையின் பாத்திரங்களின் பெயர்களைக் கவனியுங்களேன்.. அகல்யா, இந்திரன், அர்ஜூன்.. என்னவோ செய்துவிட்டார் போங்கள்...

அகல்யாவாக நடித்திருக்கும் ராதிகாவை எங்கோ பார்த்தது போலிருக்கே என்று யோசித்தால் அட... ஆமாம்... நம்ம பிரகாஷ்ராஜின் “தோனி“ படத்தில் வந்தவராச்சே... கலைக்கு மொழியில்லை தானே? அருமை!

யூட்யூபில் பார்த்தவர்கள் வியக்க, நண்பர்களைப் பார்க்கத் தூண்ட, நான் பார்த்த வரை 4,279,405 பேரைக் கல்லாக்கியிருக்கிறாள் அகல்யா’.
(இது 03-08-2015 நள்ளிரவு வரை) 
அடுத்தது நீங்கள்தான்... வாருங்கள் !

கவனம் - இராமாயணத்தில் வரும் அகலிகை கதையில் வரும் கௌதம முனிவரின் பெயரே இங்கும்! மற்றும் இந்திரன், அர்ஜூன் பெயர்ப்பயன்பாடுகளையும் சற்றே யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன்! என்ன நுட்பம்!

இன்றும் விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண் தண்டனை பெறுவதில்லை, காவலர்களால் விரட்டியடிப்பதோடு சரி!
“விபச்சார அழகிகள் கைது!” அடுத்தநாள் தினத்தந்தியில் வருவது பெண்களின் படம் மட்டுமே!

ஆனால் இந்த அகல்யா- தன்னைத் தீண்ட நினைத்த அனைவரையும் கல்லாக்குகிறாள்! இதுதான் மாற்று!
பாருங்கள்...

இந்தவார ஆனந்தவிகடனிலிருந்து 
இங்கே வந்தேன், நன்றி விகடனாரே!

-----------------------------------
தொடர்வது தமிழ் இந்துவின் மதிப்புரை - (படத்திற்கும் நன்றி)

பணக்கார ஓவியரும் முதியவருமான கௌதம சாதுவின் (சௌமித்ர சட்டர்ஜி) கொல்கத்தா பங்களாவுக்கு அவரது சிற்பத்துக்கான மாடலாக வந்து காணாமல் போன இளஞனைத் தேடி இன்ஸ்பெக்டர் இந்திர சென் அழைப்பு மணியை அழுத்துகிறார். 
கதவைத் திறந்தவுடன் அழகும் கவர்ச்சியும் ததும்பும் உடையில் இளம் மனைவி அகல்யா (ராதிகா ஆப்தே) கதவைத் திறக்கிறார்.

வரவேற்பறையில் நான்கு பொம்மைகள் இன்ஸ்பெக்டரின் கவனத்தை ஈர்க்கின்றன. பொம்மைகள் எந்தக் காரணமுமின்றி விழுந்துகொண்டே யிருக்கின்றன. இன்ஸ்பெக்டர் அகல்யாவால் ஈர்க்கப்படுகிறான்.

14 நிமிடங்களில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று நம்மால் ஊகிக்க முடிந்தாலும், சுவாரசியமாகவும் திடுக்கிடும் தன்மையைத் தக்கவைத்தபடி போகிறது படம்.
வங்காள வீடுகளின் அழகு,
ராதிகா ஆப்தேயின் மயக்கும் கவர்ச்சி,
குறும்புக்காரக் கிழட்டு ஓவியராக வரும் சௌமித்ரா சாட்டர்ஜி பேசும் துடுக்கான வசனங்கள்,
இன்ஸ்பெக்டராக நடிக்கும் டாடா ராயின் நுட்பமான வெளிப்பாடுகள்

எல்லாம் சேர்ந்து அகல்யாவை 
ஒரு நவீன கிளாசிக்காக மாற்றுகின்றன.
ராமாயண அகல்யை தவறு செய்யாமலேயே 
கணவனால் தண்டிக்கப்பட்டவள். 
அந்தக் கதைக்குப் புதிய திருப்பத்தைக் கொடுத்து 
நவீன அகல்யாவாக மாற்றியுள்ளதோடு 
அதை நல்ல அனுபவமாகவும் மாற்றியுள்ளார் 
சுஜாய் கோஷ்.
---------------------------------------
நீங்களும் பாருங்கள்... 
கதை முடிவில் இது படமல்ல கவிதை என்பீர்கள்!

பாரதியின் குயில் பாட்டுப் படித்தவர்களுக்கு, 
அதில் வரும் கடைசி வரிகள் நினைவுக்கு வருவது உறுதி –
வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க 
  யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?

இனி, படத்தைப் பாருங்கள் – 14நிமிடம்தான்!

இணைப்பைச் சொடுக்குக--

https://youtu.be/Ff82XtV78xo 
------------------------------------------------------------------------ 

“திண்ணை“ இணைய இதழில் நமது நூல் விமர்சனம் மற்றும் ஒரு பி.கு


நாளிதழகள், இணைய இதழ்களில் வந்த ஆசிரியரின் காலத்திற்கேற்ற கட்டுரைகளே முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!என்ற கட்டுரைத் தொகுப்பாக வந்துள்ளது. இத் தொகுப்பின் ஆசிரியரான நா.முத்துநிலவன் உலகறிந்த பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர், கவிஞர், கட்டுரையாளர், சமூகச் சிந்தனையாளர், வலைப்பதிவாளர், கருத்தரங்குகளில் மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் முழங்குபவர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தாலும் பள்ளி ஆசிரியர் என்ற அவரின் தகுதி தான் இந்த நூலை இன்னும் வேகமெடுத்து உண்மை நிலையை உரக்கப் பேச வைக்கிறது.
பொதுவாக மதிப்பெண்களை நோக்கி ஓடவைக்கும் பற்சக்கரங்களாக இருக்கும் ஆசிரிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் என்று வந்த குரல் தான் இத்தொகுப்பை நோக்கி என்னை நகர்த்திப் போனது.
குறை சொல்பவர்களும், பிறர் மீது குற்றச்சாட்டுகளை விசிறி அடிப்பவர்களும் எப்பொழுதும் தங்களை நல்லவர்களாக அல்லது அப்படியான நிகழ்வுகளுக்குச் சம்பந்தம் இல்லாதவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். இந்தப் பொதுப் புத்தியை தன் கட்டுரைகளில் நா.முத்து நிலவன் பிடரியில் அடித்துச் சாய்த்திருக்கிறார். ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்?” என்ற முதல் கட்டுரையில் போராடக் கற்றுத்தந்த சங்கம் பாடம் நடத்தவும், பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நம் சொந்தப்பிள்ளை போல பார்த்துக் கொள்ளவும் கற்றுத் தரவில்லைஎன்ற உண்மையைப் உரக்கச் சொல்கிறார்.
பாடங்கள் பிள்ளைகளுக்கு வேம்பாகவும், பள்ளிக்கூடங்கள் சிறைக்கூடங்களாகவும், ஆசிரியர்கள் அன்னியன்களாகவும் மாறிப் போனதற்கு கல்வியைத் திகட்ட,த் திகட்ட அவனுக்கு கொடுப்பதே காரணம் என வாதிடுவதோடு மட்டும் நின்றிருந்தால் இத்தொகுப்பின் ஆசிரியரும் சராசரி ஆசிரியராகத்தான் நம் முன் இருந்திருப்பார். மாறாக, காரணம் சொல்லி விட்டு மட்டும் போகாமல் காரியம் செய்யும் வழிமுறைகளையும் சொல்கிறார். கல்வி புகட்டப்படுவதல்ல! பூக்க வைப்பதுஎன்கிறார். எத்தனை பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களும் அதை நிகழ்த்திக் காட்டுகிறார்கள்? யோசித்தால் வெறும் ஆற்றாமை தான் மிஞ்சுகிறது.
சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதில் இருந்த சிக்கல்கள், வந்த பின் அதில் நிகழ்ந்த குழப்பங்கள், குளறுபடிகள் ஆகியவைகளுக்கான காரணங்களையும், அதற்குப் பொறுப்பானவர்களையும் தன் கூரிய கருத்துக்களால் சாடும் நா.முத்துநிலவனின் விண்ணப்பித்து வாங்குவதா விருது?” என்ற கட்டுரை ஆசிரியர் துறையில் இருப்பவர்கள் மட்டுமல்ல விருதுகளுக்காக கண்ணி வைத்துக் காத்திருப்பவர்களும் வாசித்து சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று! விருது வழங்குவதில் இருக்கும் அடிப்படைத் தவறை அழகான சொல்லாடல்கள் வழி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றித் தரும் அதே சமயம் மாணவர் தேர்வு முறையைப் போல விருதுகளுக்குத் தேர்வு செய்யப்படும் முறைகளும் மாற வேண்டும் என்கிறார். ஒருமுறை கலைமாமணி விருது அறிவிப்புச் சமயத்தில் கார்டூனிஸ்ட் மதி வரைந்திருந்த கார்டூன் தான் இந்தக் கட்டுரைய படித்த போது என் நினைவுக்கு வந்தது. விருதுகளுக்கு தேர்வு செய்யும், பரிந்துரைக்கும் முறைகள் பற்றி இத்தொகுப்பில் சொல்லி இருக்கும் யோசனைகளை அலட்சியம் செய்யாமல் அரசாங்கமும், அமைப்புகளும் பரிசீலணை செய்தால் எந்த ஒரு விருதும் அதைப் பெறுபவர்களால் நிச்சயம் பெருமை கொள்ளும் என நம்பலாம்.
தொகுப்பின் தலைப்பாய் அலங்கரிக்கும் கட்டுரை பெற்றோர்கள் எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை, பாடங்களைச் செரிக்க வைக்கும் இயந்திரங்களாக பிள்ளைகளை மாற்ற வைப்பதற்கு ஆசிரியர் பிரயாசைப் படுகிறார் என்றால் அது அவர் வாங்கும் சம்பளத்திற்காக! பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு சிறக்கப் பாடுபடும் பெற்றோர்கள் அவரைப் போல பிரயாசைப்படக் கூடாது. அந்தப் பிரயாசை என்னும் பேராசை குழந்தைகள் பெற வேண்டிய பல விசயங்களை அவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்து விடுகிறது என்பதை கடிதமாகவே கட்டுரை பேசுகிறது. வாய்ப்பிருக்கும் குழந்தை நல அமைப்புகள் இந்தக் கட்டுரையை மட்டுமாவது பிரதி எடுத்து பொற்றோர்களுக்கு இலவசமாக வழங்கலாம்.
தனியார் பள்ளிகள் முதல் நிலையில் தங்களின் பெயரைத் தக்க வைப்ப தற்காக நிகழ்த்தும் திகிடுதத்தங்கள், அவர்களோடு அரசுப் பள்ளிகள் போட்டியில் நிற்க முடியாமல் போவதற்கான காரணங்கள், அதை முற்றாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு களையச் செய்ய வேண்டிய முன்முயற்சிகள் ஆகியவைகளைத் தன் 34 ஆண்டுகால ஆசிரிய அனுபவத்தை முன் வைத்துப் பேசும் ஆசிரியரின் கட்டுரைகள் கல்விமுறையில் அரசாங்கத்தின் பாரா முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. தோலுரித்துத் தொங்க விடுகின்றன.
கற்பிக்கும் ஆசிரியர் தன் கற்பித்தல் முறையில் முன்னேற்றம் பெறாதவரை அவரிடம் கற்கும் மாணவன் கரை சேரத் தனக்கொரு படகைத் தேடிக் கொண்டு தான் இருப்பான் என்ற உண்மையை உணர்ந்து அதை நீக்கத் தயாராகுங்கள் என தன் ஆசிரியத் தோழமைகளுக்கு வெளிப்படையாகவே அறை கூவல் விடுக்கிறார்.
சமீபத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்கள் பேசும் போது மருத்துவக்கல்விக்கான திசுவியல் பாடத்தில் பல மாணவர்கள் தோல்வியடைந்ததற்கான காரணத்தை அவர்களிடமே விசாரித்த போது 11 ஆம் வகுப்பில் தங்களுக்கு 12 ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தியதால் 11 ஆம் வகுப்பிற்கான பாடநூலில் இருக்கும் திசுவியல் பாடத்தைப் பற்றி அதிகம் படிக்க முடியாமல் போய்விட்டது என்று சொன்னதாகக் கூறி தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார். அதே ஆதங்கத்தை 2007 லேயே “9,11 ஆம் வகுப்புகள் தேவையில்லையா?” என்ற தலைப்பில் ஆசிரியர் கட்டுரையாக எழுதி இருப்பதை வாசித்த போது ஆச்சர்யமாக இருந்தது. ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக இந்த நிலை மாறாமல் இன்றும் தொடரும் அவலத்தை என்னவென்பது?
எனது ஆசிரியப்பணியில் சில நல்ல நாள்கள்என்ற கட்டுரை சொல்லும் அனுபவத்தைப் பெறாத ஆசிரியர்கள் துரதிருஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். இந்த விசயத்தில் அதிர்ஷ்டசாலி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்கத் தான் ஆசிரியர் மாணவர் உறவின் தன்மை இளகும். நெகிழ்ச்சியாக மாறும். அந்த இளகலும், மாற்றமும் நிகழ்ந்து கொண்டே இருந்தால் மட்டுமே ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்? என்ற கேள்வி எதிர்காலத்தில் எழ வாய்ப்பில்லாது போகும்.

வறண்டு போன மெக்காலே பாடத் திட்டத்தை கைவிடத் தயங்கும் கல்வித்துறை, ஆட்சியாளர்களுக்கேற்ப எழுதப்படும் வரைமுறையற்ற பாடத் திட்டங்கள், தமிழ், தமிழ் என வாய் கிழியப் பேசுபவர்கள் கொல்லைப் புற வேலையாக தமிழ் மொழிக் கல்விக்குச் செய்யும் மறைமுகத் தடைகள், பாடநூல் தயாரிப்புக் குழுவினரின் எதேச்சாதிகார, பொறுப்பற்ற போக்கு, மாணவர்களுக்குத் தர வேண்டிய அடிப்படை விசயங்கள் குறித்து தெளிவில்லாத பாடத்திட்ட தயாரிப்புகள், மாணவ சமுதாயத்தை திசை திருப்புவதில் ஊடகங்களின் பங்கு, கற்றல் கற்பித்தலில் நிகழும் குறைபாடுகள், மக்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் புறக்கணிப்பிற்கான காரணங்கள் என ஒரு அரசாங்கமும், கல்வித்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டிய பல விசயங்களை ஆசிரியர் நிறைய முன் தயாரிப்புகளோடும், தன் அனுபவம் கொண்டும் 18 கட்டுரைகளால் தொகுத்து தந்திருக்கும் இந்நூல் ஒவ்வொரு ஆசிரியரும் ஆசிரியராகப் பணி செய்ய விரும்புபவரும் பெற்றோரும் வாசிக்க வேண்டிய நூல்.
வருங்காலப் பாடத்திட்ட தயாரிப்புகளிலும், கல்விமுறை மேம்பாடுகளிலும் செய்ய வேண்டியவைகள் குறித்து ஆசிரியர்களுக்கு, பெற்றோர்களுக்கு, கல்வித்துறைக்கு என ஒரு முக்கோணமாய் அமைந்து இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பேசும் கருத்துக்களில் கவனம் கொண்டால் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்ற வாசகம் இன்னும் நன்றாகவே வேர் பிடித்துச் செழிக்கும் என்பதில் ஐயமில்லை.
வெளியீட்டுக்கு நன்றி
ஆகஸ்ட்-02, 2015  “திண்ணை“ இணையஇதழ்

-------------------------------------------
பி.கு - நமது நூலுக்கு சென்னை திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களின் “கவிதை உறவு” அமைப்பின் முதல்பரிசு கிடைத்த செய்தியை, ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
இப்போது தேனி மாவட்டம் கம்பம் நகரிலிருந்து கவிஞர் பாரதன் பேசினார்- நமது இந்த நூலுக்கு அவர்களின் முதல்பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
வரும் 15-08-2015 அன்று மாலை கம்பத்தில் பரிசு பெறும் நூலாசிரியரை யானைமேல் ஏற்றி(?), மாலைபோட்டு(?) ஊர்வலமாக அழைத்துப்போய் பரிசு தருவார்களாம்!
(அப்பாடா சின்னப்பிள்ளையிலிருந்தே, எனக்கு யானை மேல் ஏறி சவாரி போகவேண்டும் என்று ஆசை! ஆனால் ஏனோ அந்த ஆசை நிறைவேறவே இல்லை! இந்த 60வயதில் ஆசைப்பட்டால் என் பேரனும், பேத்தியுமே கெக்கே பிக்கே என்று சிரிப்பார்கள் என்று இருந்துவிட்டேன்.
ஆனால்... இப்ப ஒரு வாய்ப்பு! யானை சவாரி! அட!
அந்தப் பகுதி நண்பர்கள் இயலுமேல் வருக!
-----------------------------------