இனிய நண்பர் “மின்சாரக்கவி“ இன்று காலை வீட்டுக்கு
வந்திருந்தார். ‘தொலைந்து
போன எனது “காதல்கடிதம்“ குறுந்தொடரை மீட்டுத் தந்தவர் என்று எனது “புதிய மரபுகள்“
கவிதைத் தொகுப்பின் பின்னுரையில் நன்றி தெரிவித்திருப்பேனே? அவர்தான்.
பேசிக்கொண்டே அவரைக் கவனித்தேன்.
வாழ்க்கைச் சிக்கல்களில் நலிந்து மெலிந்து ஆளே மாறிப்போயிருந்தார்.
முன்பே அவர் ஒன்றும் ‘குண்டர்’ அல்ல
எனினும், இது, வாழ்க்கைச் சோர்வுகள் தந்த மெலிவு! என்றாலும் கவிதை மீதான காதலை
இப்போதும் அவர்கண்களில் கண்டேன். உயிர்வாழ உபசரிக்கும் இலக்கியக்காதல்!
மின்சாரக்கவி (எ) கிருஷ்ணமூர்த்தி, காபியை வாங்கிக் கொண்டு,
ஒரு நோட்டைத் தந்தார். ஒருகுயர் பெரிய நோட்டு! அவ்வளவும் கவிதைகள்!
படித்துப் பார்த்து, “பத்திரிகைகளுக்கு அனுப்பலாமா?, அனுப்பறதுன்னா
எதை எதை அனுப்பலாம்“ என்று சொல்லும்படி என்னைக்
கேட்பதற்காகவே வந்ததாகவும் சொன்னார். வந்ததிலிருந்து, அவரைப் படித்துக்கொண்டிருந்த
நான், பிறகு கவிதைகளைப் படித்துக்கொண்டே சொன்னேன் –
“கவிஞனுக்கு முதலில் தன்மீது நம்பிக்கை இருக்கணும். பத்திரிகைக்கு
அனுப்பினால் பிரசுரமாகும்னு முதலில் தன்னை நம்பணும். பிறகு எந்தக் கவிதையை எங்கே
அனுப்பலாம் எனும் தெளிவும் படைப்பாளிக்கு அவசியம்”
என்று சொல்லிக்கொண்டே வந்தபோது, சில கவிதைகள் தன்னைப்
படிக்க மீண்டும் என்னை அழைத்ததைக் கேட்டேன், கண்டேன் –
“காடு
வளர்க்க ஆள்போட்டது
காடு
வளரவில்லை,
ஆள்
மட்டுமே வளர்ந்தது”
படித்துக்கொண்டே சொன்னேன் ‘நல்லா இருக்கு, இதை இன்னும்
செதுக்கலாமே? என்னென்ன கவிதைத் தொகுப்புகளை அண்மையில் படிச்சீங்க“ என்று கேட்டேன்.
அவர் ஆயாசத்தோடு,
சலித்துக்கொண்டே “எங்கய்யா படிக்க நேரம் இருக்கு? ஆலாப்பறக்குற வாழ்க்கை“ என்றார்.
கவிதையைச்
செதுக்குவது என்றால் என்ன?
எனக்கு ஒருபக்கம் அவரிடம் சொல்லத் தயக்கமாக இருந்தாலும்,
“இந்த அளவுக்கு எழுத்தின்மீது காதல்கொண்டவரிடம் சொல்லாமல் இருப்பதுதான் தவறு“
என்று நினைத்துத் தொடர்ந்தேன் – “இதுதான் தப்பு. உங்களுக்குக் கவிதை வருது, பிறகு
அதை இன்னும் நேர்த்தியா எழுதணும்கிற பொறுப்பு வேண்டாமா? “நமக்குத் தொழில்
கவிதை“ன்னான் பாரதி. எந்தத் தொழிலில் நமக்கு ஈடுபாடு இருக்கோ அந்தத் தொழிலில் பயிற்சி
அவசியமில்லையா?
தெருவோரத்தில் நின்று இளநி விற்கிறவர்,
பளபளவென்று தீட்டப்பட்ட அரிவாளைக் கொண்டு அப்படி இப்படி என நாலே நாலு வீச்சில்,
ஒரு சின்ன “மட்டைக்கரண்டி“யையும் அதிலிருந்தே செதுக்கி எடுத்து நம் கையில் தருகிற
லாவகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதற்கு எவ்வளவு பயிற்சி வேண்டும்? அசந்தால் அந்த
வேக வீச்சுக்குக் கையே போய்விடும், இல்லையெனில் பல வீச்சு வீசியும் இளநீர் சீவி முடியாது,
வியாபாரமும் கெட்டுப்போய்விடும் இல்லையா?” என்று சொல்லி, “அதே
கவிதையில் மட்டுமே என்பதை முதலில் எடுத்துவிடலாம். ஆள்வளர்ந்தது என்பதைச் சற்றே மாற்றி –எதுகை மோனை நயத்துடன்-
ஆடு என்று சேர்த்துக் கொள்வோம். எதுகை மோனையை வலிந்து
போட்டால் டி.ஆர்.மாதிரி சம்பந்த மில்லாமல் துருத்திக்கொண்டு நின்று, கவிதையைக் கேலிக்குரியதாககி
விடும் எனும் கவனம் கவிஞர்க்கு ரொம்ப ரொம்ப முக்கியம். இயல்பா வந்தா, அதுல
அர்த்தமும் கூடுதலாக் கிடைச்சாப் போடலாம் அவ்ளோதான்)
“காடுவளர்க்கச்
செடிநட்டது அரசு
ஆடு வளர்ந்தது“ - என்றோ,
“அரசுத்திட்டம்
காடுவளர்ப்பு,
ஆடு வளர்ந்தது“ - என்றோ,
“காடுவளர்க்கத்
திட்டம்
போட்டார்கள்
ஆடு
வளர்ந்தது“ - என்றோ, முதலில் எழுதிய வரிகளிலேயே திருப்தியடைந்து விடாமல்,
வரிகளை மாற்றி மாற்றிப் போட்டு
எதுகை மோனைக்குள் ஒரு நயம் வைத்து
அதன்படி என்னபொருள் வருகிறது என்பதைச்
சொல்லிச் சொல்லி மீண்டும் மீண்டும் எழுதிப் பாருங்கள் திருப்தி தரும்படி
எழுதுங்கள் அதுதான் செதுக்குவது“
என்றேன். எல்லாக் கவிதைக்கும் இப்படித் தேவையிருக்கும் என்று சொல்லமுடியாது. திருப்தி
அடையும் வரை கவிஞனின் தாகம் குறையக் கூடாது. எழுதும்வரைதான்
கவிஞன், எழுதிமுடித்து வெளியிடும்போது கவிஞனே தன்னை ஒரு இதழின் ஆசிரியராக
நினைத்துக் கொள்ள வேண்டும். பக்க அளவு, அந்தக் கவிதையின் உருவ-உள்ளடக்க அழகு
சரிதானா, என்பதைச் சிந்தித்து பட்டுக்கத்திரிச்சது போல –தேவையெனில்- மீண்டும்
திருத்த்த் தயங்கக் கூடாது. பயிற்சி இது“
“அப்பாடா கற்கண்டுப் போலப் புரியும்படிச்
சொல்லிவிட்டோம்“ என்று நினைத்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து சொற்குண்டை
வீசிச் சுக்குநூறாக்கிய மின்சாரக்கவி
கேட்டார் -
“எல்லாம் சரிங்கய்யா.. நேரம்
கிடைக்கிறப்ப தோணுறத எழுதி வச்சு பின்னாடி எடுத்துப் படிச்சுக்குவேன்... நீங்கதான்
நம்ம கூட்டத்துல அத நா வாசிக்கக் கேட்டு கவிதை நல்லாருக்கு தொடர்ந்து எழுதுங்கனு
சொன்னீங்க.. இப்ப இன்னும் செதுக்கணும்ங்கிறீங்க”
இப்போது என் முறை!
உரையாடலின்போது தன்னை விட்டுக் கொடுக்க யார்தான்
முன்வருவார்கள்? அவர் தன்னை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பது புரிந்தது.
நானும் இப்படி இருந்தவன்தானே? இப்போது நிறைய அனுபவங்களால் கொஞ்சம் மாறியிருக்கிறேன்.
“இந்த
உரையாடலில் தோற்பது, எதிர்கால நட்புக்கும், இவரைத் தொடர்ந்து எழுதத்
தூண்டுவதற்கும் பயன்படுமென்றால் நான் தோற்றுப்போகத் தயார்“ என்னும் புதிய மனநிலையோடு தொடர்ந்தேன்.
“ஆங்.... சொல்லியிருக்கலாம்.. ஆனா அது எந்தக் கவிதைனு
நினைவில்ல, ஒன்னுமே இல்லாதத நல்லாருக்குனு சொல்லி உசுப்பேத்தி உடுறது தப்புத்தான்.
ஏதோ ஒரு ஆர்வத்தோட எழுதுறவங்கள அப்படி நா சொல்றதில்ல... நீங்க வாசிச்ச கவிதைகளில்
ஏதோ ஒரு பொறி இருந்திச்சு. நல்லாருக்குனு சொல்லி உங்களை இன்னும் எழுத
வைக்கணும்கிறதுக்காக சொன்னது அது...“ என்று மென்று விழுங்கி, மேலும் தொடர்ந்தேன். அவரது
குண்டுவீச்சில் நொறுங்கி விழுந்துகிடந்த நான் மெதுவாக எழுந்து நிமிர்ந்தேன்.
கவிதைக்குப்
பயிற்சி அவசியமா? அல்லது
சிலையைச் செதுக்கப் பயிற்சி வேண்டுமா?
“இப்ப நீங்க ஒரு மின்துறை ஊழியர். எங்க வீட்டுல ஒரு பல்பு
மாத்தணும்னா கடையில வாங்கி நானே மாத்திடுவேன். பல்பு போட்டும் எரியலன்னா, பாசிடிவ்
நெகடிவ் தெரிஞ்சு எந்த இணைப்புல என்ன சிக்கல்னு சரிபண்ண எனக்குத் தெரியுமா?“ நான்
விரித்த வலையில் தானாக வந்து விழுந்தார்.
“அது எப்படி உங்களுக்குத் தெரியும்? அதுக்குத்தானே நாங்க
படிச்சு, மேலும் அனுபவத்துல கத்துக்கிட்டு பாக்கெட்டுல “டெஸ்ட்டர்“ குத்தி வச்சிக்கிட்டு
திரியிறோம். இல்லனா எங்க பொழப்பு என்னாகுறது?”
இப்போது என் நிலை உறுதியாகிவிட அம்புகளை வீசினேன்.
“உங்கள மாதிரி அததுல அனுபவம் உள்ளவங்கதான் அதுதெரிஞ்சு
சரிபண்ணுவீங்க இல்லையா? சரிதான். பல்பு மாத்துற மாதரியும் ஃபியூஸ் போடுற
மாதிரியும் சில வேலைகளை எல்லாரும் செய்ற மாதிரி, எல்லாரும் நல்ல அல்லது கெட்ட
விஷயம் மனசுக்குப் படுறத சுருக்னு சின்னச்சின்ன சொற்களில் சொல்வது கவனிக்க
வைக்கும், அது கவிதை மாதிரி இருக்கும். அதுவே தொடர் பயிற்சி மற்றும் படிப்பின்
வழியாகவே கூர்மையான திறமையை வளர்த்துக்க முடியும். தான் உணர்ந்ததையே
படிப்பவரும் உணரும்படிச் செய்ய கொஞ்சம் பயிற்சி தேவை.
மிதிவண்டி
ஓட்டத் தெரிஞ்சவுங்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டப் பழகுவது எளிது. கியர் வண்டி
ஓட்டத் தெரிஞ்சவுங்களுக்கு மகிழ்வுந்து (கார்) ஓட்டக் கற்றுக்கொள்வது எளிது அல்லவா
அதுபோலத்தான் முந்திய நம் தமிழ்க் கவிதையின் வகை மற்றும் அழகியல் நுணுக்கங்களைத்
தெரிந்து வைத்திருப்பவர்கள் நுணுக்கங்களைத் தன்கவிதையில் ஆள்வது எளிதாகக் கைவரும்
அதோடு, கவிதையில் ஆழமும் அழகும் கூடும். எதை எப்படிச் சொல்லலாம் என்பதும்
அத்துப்படியாகும்.
அதுக்காக, விமானம் ஓட்டத் தெரிஞ்சவுங்களுக்கு மிதிவண்டி
ஓட்டத் தெரிஞ்சிருக்கணும்னு நான் வறட்டுவாதமும் செய்யலை. ஆர்வமும், பயிற்சியுமே
அடிப்படை. எந்தப் பயிற்சியுமில்லாமல் எந்த நுணுக்கமும்
கைவராது. இல்லியா?
தீட்டத் தீட்டத்தானே கத்தி கூர்மையாகும். மொன்னைக் கத்தி
எப்படி வெட்டும்?”
என் ஆயுதம் சரியாக அவரைத் தாக்கிவிட, அமைதி காத்தார்.
பலவீனமானவரை மேலும் தாக்க நான் விருமபவில்லை. (ஆமா இவுரு
பெரிய அர்ச்சுன மகாராசரு..னு யாருப்பா அங்க மைண்ட் வாய்சுல மொணகுறது? மைதிலியா?
இருடா கொஞ்சம் நானும் ஒன்னமாதிரி நடைமுறைத் தமிழ்ல சொல்லிப் பாக்குறனே? சரி ஒரு
இளநி குடிச்சுக்கிறேன்.. நோ கோலா! சரியா?)
இப்போது அவரது அடுத்த கவிதையைக் கையிலெடுத்தேன் –
“நெடுநெல் வயல்களில்
செந்நெல் செழித்தோங்கியது
வீடுவந்து சேரும்முன்னே
கடன்வந்து அறுவடை செய்தது”
இந்தக் கவிதையில், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் எழுதிய
வரிகளின் சாயல் இருந்தாலும், “கடன்காரன் வயலுக்கே வந்து அறுவடை செய்வான்“ என்கிற
புதிய அர்த்தம் கிடைப்பது கூடுதல் ஆழமுடையது என்பதால் நல்லதுதான். ஆனால் வரிகள்
அதிகமாய், இன்னும் சுருக்கலாம் பாலை சுண்டச் சுண்டக் காய்ச்சக்
காய்ச்ச ருசி தானே? அதுக்காக சட்டி புடுச்சிக் கருகிடாமயும் பாத்துக்கணும். ஏதோ ஒரு
படத்துல வர்ர “இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்“ வடிவேலு மாதிரியும் ஆகிடக்கூடாது.
சரி.. அப்ப, எப்படிச் சுருக்கலாம்? இப்ப பாருங்களேன் –
வயல்
விளைந்தது
வீட்டுக்கு
வருமுன்னே
கடன்
அறுவடை செய்தது. சரியாக இருக்குமா? அல்லது,
நல்ல
விளைச்சல்
விவசாயியை
முந்திக்கொண்டு
கடன்
அறுவடை செய்தது. சரியாக இருக்குமா? அல்லது,
வயல் விளைந்தது.
கடன் அறுத்தது. – என்பதே
போதும்போல இருக்கிறதே! யோசிக்கலாம். திருக்குறளில் அசைச்சொல் கூட ஏதோ ஒரு
தொனிப்பொருளை உணர்த்தும் என்று சொல்வாருண்டு.
ஒருசொல் அல்ல, ஓர் எழுத்துக்கூடக்
கவிதையில் வீணாக இருக்கக்கூடாது.ஒரு சொல்லை எடுத்தால் ஒன்று அர்த்தம் போகும்
அல்லது இலக்கணம் போகும் அல்லது அழகு போகும் என்று ஆகப் பொருத்தமான (APT WORD) சொல்லாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.
வரிகளை மடக்குவதற்கும் அர்த்தம் உண்டு. கூடுதல் அர்த்தம்
கொடுக்கவே வரிகளை மடக்கிப் போடவேண்டுமே அன்றி பெரியவரி சின்னவரி என்பதால் அல்ல.
இந்தப் பயிற்சியைத்தான் மரபுக்கவிதைப் பயிற்சி நமக்கு மிக எளிதாக்கும்.
ஆக, ஓவியம் வேண்டுமானால் வண்ணங்களை எடுத்துப் பூசிப்பூசி
சேர்ப்பது எனும் அரிய கலையாக இருக்கலாம். கவிதை, சிற்பம் போல. வேண்டாத கல்லு சில்லு களையெல்லாம் தன் உளியால்
செதுக்கிச்செதுக்கி எடுத்துத் தூர எறிந்து உள்ளே ஒளிந்திருக்கும் அழகுச் சிலையை
வெளிக்கொண்டு வரும் சிற்பியைப் போலத்தான் கவிஞன். சிரமம் பாராமல் கவனம் மாறாமல் உழைக்க
வேண்டும். சிலை உடைந்துவிடக்கூடாதல்லவா? சிற்பி கடைசியில்தான் சிற்பத்தின் கண்ணைத்
திறப்பானாம். அதுமாதிரி கவிஞனும் கடைசியில் தன் கவிதைச் சிற்பத்திற்குக் கண் திறப்பது போல கவிதைக்கான தலைப்பை
வைக்க வேண்டும். தலைப்பு இல்லாமலும் கவிதை
தனியே புரியவேண்டும். தலைப்பே கவிதையின் பொருள் என்ன என்பதைச் சுருக்காய்ச்
சொல்லிவிட வேண்டும். ஜெயகாந்தன்
சொல்வார் கதை முகம் என்றால் தலைப்பு திலகம் மாதிரி இருக்கவேண்டும் என்று. இப்போதைய
பெண்கள் –மதம் பற்றிய கவலை இல்லாமல் பொட்டுவைத்துக் கொள்ளாமலே இருப்பது போல- தலைப்பு
இல்லாத கவிதைகள் பெருகி வருகின்றன. அது அவரவர் விருப்பம். பொட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும்
முகமும் அகமும் நல்லா இருந்தாச் சரிதானே?
நிறைவாக ஒன்று –
எதையும் நேரிடையாகச் சொல்வதைவிட, படிமமாக, புரியக்கூடிய
குறியீடாகத் தருவது கூடுதல் ஆழம்காட்டும். (பழந்தமிழில் இதனை இறைச்சி, தொனி என்று இலக்கணமாக்கி வைத்திருக்கிறார்கள்) கற்பனைதானே கவிஞனின் அடையாளம்?
எ.கா. கவிக்கோ அப்துல் ரகுமானின்
புறத்திணைச் சுயம்வர
மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்.
கையில் மாலையோடு
குருட்டுத் தமயந்தி
இது நம்நாட்டுத் தேர்தல் பற்றி அவர் எழுதிப் புகழ்பெற்ற
கவிதை.
ஒவ்வொரு வரியும் எப்படி ஈட்டிபோலக் கூர்மையாக குத்துகிறது
பாருங்கள்.
ஈட்டி எறிதல் (ஜாவ்லிங் த்ரோ) மாதிரி... வெகுதூரம்
போகவேண்டும். குறியை விட்டு விலகி ஃபவுல் ஆகிவிடாமல் குத்தி நிற்கவும் வேண்டும்.
அதுதான் நல்ல கவிதை.
சரியா கவிஞரே? நம் நாட்டு வயலுக்கு ரசாயன உரங்களைவிடவும், இலை-தழை மக்கிய குப்பைபோல இயற்கை உரம்தான் நல்லது. புரியுதா? வாழ்த்துகள்.
---------------------------------