கடிதம்

‘சாதிச் சார்பற்ற’ தலைவர்கள் தேவை!


‘சாதிச் சார்பற்ற’ தலைவர்கள் தேவை!

                   அறிஞரும் சீர்திருத்தச் சிந்தனையாளருமான வா.செ.குழந்தைசாமியின், காலத்தின் தேவையுணர்ந்த கட்டுரைகள் கண்டேன்.
தமிழகத்தின் எரியும் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வும் இக்கட்டுரைகளில் புதைந்துள்ளது. இந்த அரிய யோசனைகளைத் தமிழக முதல்வர் அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் வைத்து உடனடியாகச் சட்டமாக்கவும் முன்வர வேண்டும்.

                 பூங்குன்றனில் துவங்கி திருவள்ளுவா,; சித்தர்கள், வள்ளலார், பெரியார், பாரதி பாரதிதாசன் என நீளும் மேதைகளுக்கு எவ்வளவு பெரிய அவமானம் இது! ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகம் முழுவதையும் உறவினராப் பார்த்த தமிழன் எங்கே…உள்ளுர்க்காரனையே ஒடஒட விரட்டி வெட்டும் இன்றைய சாதிய மோதல்கள் எங்கே?

              ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும’ என்ற திருவள்ளுவரையும் சாதி பேதம் ஓதுகின்ற தன்மையென்ன தன்மையோ’ என்ற சிவவாக்கியரையும் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’என்ற வள்ளலாரையும் எடுத்தெடுத்துப் பேசிப்பேசித் ‘தலைமுறைகள் பல கழிந்தோம் குறை களைந்தோமில்லை!’
              கணியன் பூங்குன்றனின் வாசகத்தை ஐ.நா.வாசலில் எழுதியதிருக்கட்டும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் எழுத வேண்டி வந்துவிட்டதே!

              இந்த நிலையை மாற்ற கலப்புமணத் தம்பதியரின் குழந்தைகளை ‘சாதி-மறுப்பாளர்’ என்று எதிர்மறையாகவோ ‘இந்தியர்-தமிழர்’ என உடன்பாடாகவோ எழுத உடனடிச் சட்டம் தேவை. அதோடு பிற்;பட்டவர்க்கான ஒதுக்கீடும் நிரந்தரமானதல்ல என்பதை உணர்த்துவதோடு முதல் தலைமுறைக்குக் கிடைக்கும் சதவீதத்தில் பாதியே அடுத்த தலைமுறைக்கு என அறிவிக்க வேண்டும். பொருளாதாரப் பின்னணி சிறிதளவு கவனத்துக்காவது வருவது நிரந்தரப் பயன்பாட்டுக்கு உதவும்.

               அரசியல்வாதி தேர்தலில் நிற்கவும் அரசு ஊழியர்-ஆசிரியர் பணியிற் சேரும்போது ‘எந்தச் சாதிச் சங்கத்திலும் உறுப்பினர் இல்லை’ என உறுதி மொழி பெற்று அவ்வாறே தொடர்கிறாரா எனக் கண்காணிக்கவும் வேண்டும்.

                 சாதி மத எதிர்ப்புப் பிரசாரத்தை அரசே திட்டமிட்டு நடத்த வேண்டும். ‘மதச்சார்பற்ற’ மட்டுமல்ல ‘சாதிச் சார்பற்ற’ தலைவர்களாகவும் மனிதர்களாகவும் உருவாக கல்வி பொருளாதார அரசியல் சூழலை உருவாக்க வேண்டும்.
--- தினமணியில் வெளிவந்த எனது கடிதம்
     03.06.1997