ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கான சமூக ஆசிரியர்களாக மாறவேண்டும்!



நூல்வெளியீட்டில், கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரை
புதுக்கோட்டை, மே.29
புதுக்கோட்டையருகில் மதுரைச் சாலையில் உள்ள ரோட்டரி மகாலில்  நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கான சமூக ஆசிரியர்களாக மாறவேண்டும், தமிழ்நாட்டு ஆசிரியர்களில் சொந்தமாக சிந்தித்து நூல்எழுதுவோர் குறைந்து போனதே தமிழ்வளர்ச்சிக்குத் தடையானதுஎன்றார்.
புதுக்கோட்டை ரோட்டரி சங்க விழாவுக்கு ரோட்டரித் தலைவர் கே.திருப்பதி தலைமையேற்றார்.செயலர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்றார்.
மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் முனைவர் நா.விஜயரெகுநாதனும், இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் வி.ராஜசரோவும் இணைந்து எழுதியயோகாவும் உடல் நலமும்எனும் நூலை எழுத்தாளரும் பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்டார். அதே கல்லூரி முன்னாள் முதல்வரும் தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் தா.மணி முதல்பிரதியை பெற்றுக்கொண்டு  வாழ்த்துரை வழங்கினார்.
ஆயுள் காப்பீட்டுக் கழக வளர்ச்சி அதிகாரி நா.விஜயகுமார், ஆனந்த யோகா பவுண்டேசன் யோகா செல்வராஜ், மூத்த ரொட்டேரியன் திருப்பதி, பிஎஸ்கே பள்ளித் தாளாளர் பி.கருப்பையா ஆகியோர் நூலின் சிறப்புகளைக் குறித்து, உரையாற்றினர்.
நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றிய நா.முத்துநிலவன் பேசும்போது-
யோகா ஆசிரியர் ஒருவர், தனது பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றது, அவரது வழிகாட்டுதலில் பன்னிரண்டுபேர் முனைவர் பட்டம் பெற உதவியது, மட்டுமின்றி, ஏற்கெனவே தான் சார்ந்துள்ள உடற்கல்வித் துறையில் நான்கு நூல்களை வெளியிட்டு, தற்போது ஐந்தாவது நூலை எழுதி வெளியிடுவது பாராட்டுக்கு உரியது.
தமிழ், உலகப் புகழ்பெற்ற செம்மொழிகளில் இன்றும் தொடர்ச்சியான பயன்பாட்டுக்கு உரிய ஒரே மொழி எனும் பெருமை பெற்றதுதான் என்றாலும், தற்போது, சில நூற்றாண்டுகளாக தமிழ் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட முக்கியக் காரணம், பலதுறைகளில் படித்துப் பட்டம் பெற்றுப் பணியாற்றும் தமிழர் பலரும்முக்கியமாக ஆசிரியர்கள்- தம் துறையில் தாம்பெற்றிருக்கும் அறிவை, அடுத்த தலைமுறைகளுக்கு வழங்கும் ஆர்வத்துடன் நூல்களை எழுதாமல், தமிழ்சார்ந்த பல்துறை வளர்ச்சிக்கு உதவாமல் போனதுதான்.
வெறும் பழம்பெருமை பேசுவதால் யாதொரு பலனும் இல்லை! இன்று உள்ள இந்திய அளவிலான உயர் இலக்கிய விருதானஞானபீடம்விருதினை நம்அருகிலுள்ள கன்னட மொழியில் எட்டு முறையும், மலையாள மொழியில் ஐந்து முறையும், தெலுங்கில் கூட மும்முறையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ்மொழிக்கு ஞானபீட விருது இரண்டே முறைதான் கிடைத்திருக்கிறது! அதிலுள்ள அரசியலைத் தாண்டி ஆழ்ந்து யோசித்தால் இந்த அவலத்துக்கான காரணம் புரியும்.
பக்கத்திலுள்ள பெரியகோவிலை ஒரு தமிழ்மன்னன் கட்டியபோது, இங்கு ஆங்கில மொழியே வரவில்லை! பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிலியோவிற்குப் பிறகுதான் உலகம் வானியலை அறிவியல் வழியில் புரிந்துகொண்டது. ஆனால்  ஈராயிரம் ஆண்டுகளாக நம் புழக்கத்திலுள்ள திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு எனும் தனித்தமிழ்ச் சொற்களே பழந்தமிழர்களின் அறிவியல் அறிவைப் பறை சாற்றுகின்றன! இன்றுள்ள அறிவியலைப் படித்த தமிழர்கள் நமது பழந்தமிழ் அறிவியலைப் பற்றி ஏன் எழுதவில்லை? பெரியகோவிலைப் பார்த்தும் ஒரு தமிழ்ப்பொறியியலாளர் ஏன் அதுபற்றிய பொறியியல் நூலைத் தமிழில் எழுதவில்லை? இதுபோல் பலதுறை அறிவைப் பெற்றிருக்கும் தமிழர்கள், அதுபற்றி அடுத்த நம் தலைமுறைக்குப் பயன்படுவதுபோல நூல்கள் எழுதாதது பெரிய இழப்பாகும். வெகு சிலரே இவ்வகையில் நூல் எழுதிப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
அதிலும் ஆசிரியர்கள் படைப்பாளர்களாகவும் இருக்கவேண்டும். எந்தப் பாடமானாலும் கலைப்படைப்பாக அதனை மாணவர்க்குத் தரும் ஆசிரியரே மாணவர் மனம்கவர்ந்து தமது கற்பித்தலில் வெற்றிபெற முடியும்! பாடங்கள் தாண்டியும் படைப்பிலக்கிய உணர்வோடு நூல்கள் கொண்டுவரும் ஆசிரியர் பாட ஆசிரியராக மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்குமான சமூகத்தின் ஆசிரியர் எனும் பெருமையைப் பெறுகிறார். அது மிகவும் போற்றுதற்குரியது.
இவ்வகையில் தனது துறைசார்ந்த அறிவை எளிய முறையில் விளக்கி, எல்லார்க்கும் பயன்படத்தக்க நூலாக்கித்  தந்திருக்கும் முனைவர் நா. விஜய ரகுநாதன் மிகுந்த பாராட்டிற்குரியவர். அதோடு, யோகா என்பது ஏதோ ஒரேஒரு மதத்திற்கு மட்டுமே சொந்தமான கலை என்பது போன்ற தோற்றம் நம் நாட்டில் கட்டப்பட்டுள்ளது. அதை மீறி, இந்நூலாசிரியர் பௌத்த மதம், சமண மதம் சார்ந்த அறிஞர்களும் திருமூலர் போலும் சித்தர்களும் எப்படி யோகாவை வளர்த்துள்ளனர் என்பதை நூலில் விளக்கியிருப்பது சிறப்பானது.
மேற்கண்டவாறு எழுத்தாளர் நா.முத்துநிலவன் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னோடிகள் கதிரேசன், ஆர்ஏவி குமாரசாமி, ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் சிவசக்திவேல், பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி, எல்ஐசி இளவழகன், உடற் கல்வி இயக்குநர்கள் செல்வராஜ், ஜான்பார்த்திபன், ராஜேந்திரன், தொழிலதிபர் பழனிராஜன், டாக்டர் ஸ்ரீராம், அலுவலர் மன்றத்தைச் சேர்ந்த கோபி, பொறியாளர் முத்துக் கருப்பன், அக்ரி ராமமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலக அலுவலர் செல்வராஜ், ஜேசி பயிற்றுநர் கவிஞர் இளங்கோ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். நிறைவாக நூலாசிரியர் முனைவர் நா.விஜயரகுநாதன் நூலாக்கத்தில் உதவியோர்க்கும், விழாவில் கலந்துகொண்ட அனைவர்க்கும் நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்கினார்.
-------------------------------------------------------
புகைப்படத்திற்கு நன்றி – 
டீலக்ஸ் திரு. ஞானசேகரன், புதுக்கோட்டை
------------ செய்தி வெளியீட்டுக்கு நன்றி -----------
(1) தினமணி நாளிதழ் திருச்சிப்பதிப்பு 30-05-‘19 
செய்தியாளர் திரு ஜெயப்பிரகாஷ் அவர்கள்,
(2) தமிழக நியூஸ் மதுரை நாளிதழ் – 30-05-‘19 
செய்தியாளர் திரு தனபால் அவர்கள்,
(3) புதுகை வரலாறு நாளிதழ் - 29-5-2019 
திரு சிவசக்திவேல் அவர்கள்.
மற்றும் 
(4) தினமலர், (5) இந்தியன் எக்ஸ்பிரஸ் (6)தினசக்தி 
நாளிதழ்கள் - 31-05-209 மற்றும்
(7) தீக்கதிர் -01-6-2019 நாளிதழ்
----------------------------------------------------------------
தினமணி நாளிதழ்-30-5-2019 திருச்சிப்பதிப்பு
----------------------------------------------------- 

தமிழ் நியூஸ் நாளிதழ் மதுரை - 30-05-2019
-------------------------------------- 
நன்றி - தீக்கதிர்-01-6-2019
----------------------------------------------------------

3 கருத்துகள்:

  1. சென்றிடுவீர் எட்டுத் திக்கும்... செய்திடுவீர் அறிவேற்றும் அரும்பணியை.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான கருத்துகள். பழம்பெருமை பேசுவதால் பயனில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா.

    பதிலளிநீக்கு