உணர்ச்சிமிகு விதைக்‘கலாம்’-150ஆவது வாரவிழா!

    புதுக்கோட்டை நகரில் செயல்பட்டுவரும் “விதைக்கலாம்“அமைப்பின் 150ஆவது வாரவிழா, நேற்றுமுன்தினம் 08-07-2018–ஞாயிறு- மாலை, புதுக்கோட்டை வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் சிறப்பாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் நடந்தது.
இந்திய இளைஞர்களின் நெஞ்சம் கவர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ.அப்துல்கலாம் மறைவை ஒட்டி, அவர்பெயரால் ஆக்கபூர்வமாகப் பணியாற்ற எண்ணிய இளைஞர்கள் “விதைக்கலாம்” என்றொரு அமைப்பைத் தொடங்கி, வாரந்தோறும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் அரியபணியைச் செய்து வருகிறார்கள். அதன் 150ஆவது விழாவில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆசிரியர் ஸ்ரீமலையப்பன் வரவேற்றுப் பேசினார். நாகபாலாஜி நன்றியுரை நல்கினார்


நிகழ்வுகளை ஆசிரியர் மு.கீதா தொகுத்து வழங்கினார். 150வாரமும் மரக்கன்று நட்ட, உடலுழைப்பில் உதவிய, நிதிஉதவி செய்த நன்மனச் சான்றோர், இடங்கள் பற்றிய பட்டியல் அறிக்கையை ஆசிரியர் கஸ்தூரிரெங்கன் படித்தார். இவற்றைத் துல்லியமாகத் தெரிவிக்கும் குறும்படங்களுடன், ஒளிப்படக் கண்காட்சியும் விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 விழாத் தலைமை யேற்றுப்பேசியகவிஞர்   நா. முத்துநிலவன் பேசும்போது, “இது ஒரு மௌனப் புரட்சி! இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களைப் பட்டியலிடும்போது, அண்ணல் காந்தியை முதல்பெயராக இட்டு எழுதுகிறோம். வடக்கே நேரு, திலகர், சுபாஷ் சந்திரபோஸ், பட்டேல், விபின் சந்திர பால், லாலா லஜபதிராய் என்றும் தெற்கில் பாரதி, வஉசி, வ.வே.சு., சிவா, சத்தியமூர்த்தி, காமராசர், எனவும் ஒரு பட்டியல் எடுத்தால் 50பேரை எழுதலாம், வரலாற்று ஆய்வாளர்களிடம் இந்தப் பட்டியலை எழுதச் சொன்னால் இன்னும் ஒரு 100பேரை எழுதுவார்கள்.. ஆனால் இந்தப் பட்டியலில் இடம்பெறாத --பெயரையும் சேர்த்து தியாகம் செய்த-- தொண்டர் எண்ணிக்கையும், தியாகமும்தான் உண்மையில் மிகப்பெரியது!  பெயரையும் சேர்த்து தியாகம் செய்த அந்தத் தியாகிகளால்தான் நாம் சுதந்திரத்தை இப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்! 
அந்தப் பாரம்பரியம் இந்த இளைஞர்கள் கண்களில் செயல்களில் எனக்குத் தெரிகிறது! சிறிய நிதிக்கொடை செய்கிறவர்கள் கூட அதைவிடப் பெரிய தொகைக்கு விளம்பரம் செய்து பெயர்வாங்கவே அலைகின்ற இந்தக் காலத்தில், இந்த இளைஞர்கள் தமது பெயரைக் கூட வெளிப்படுத்திக் கொள்ளாமல் வாராவாரமும் குறிப்பிட்ட இடங்களில் 10, 20 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருவதையும் அதிலும் இடைவிடாமல் இப்படி 150வாரத்தில் சுமார் 4000க்கு மேற்பட்ட மரக் கன்றுகளை வளர்த்து, அப்படிக் கன்றுகளை நடவும், வளர்க்கவும் உதவியவர்களைப் பாராட்ட ஒரு விழா எடுத்திருப்பது, எனக்கு நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளையே நினைவு படுத்துகிறது. இதில் 15வயது பள்ளிச் சிறுமி முதல் 70வயதைக் கடந்த மணிசங்கரர் வரை ஈடுபடுவது பாராட்டத்தக்கது.
உலகில் வேறெங்கும் இல்லாத மாதிரி வாழ்க்கைக்கு இலக்கணம் செய்து, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைஎன அக வாழ்க்கையை இயற்கையோடு அமைத்தவர் தமிழர்! தாவரத்திற்கும் உயிர் உண்டு என்று முதலில் சொன்னவர் தொல்காப்பியர்! தாவரங்களின் மனிதப் பயன்பாட்டைச் சொல்லில் அடக்க முடியாது! ஆனால், அந்த தாவரத்திற்கு முதல் எதிரியாகவும் மனிதர்களே மாறிப்போனார்கள்! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கை வசதிக்காக, சுமார் 1000 மரங்களை வெட்டும்படி நேர்கிறது, ஆனால் ஒரு மரத்தைக்கூட நட்டு வளர்க்காமல் கடைசிவரை “கடன்காரனாகவே“ செத்துப் போகும் மனிதர்களே அதிகம்!
எனவே, அடுத்த தலைமுறைக்கான பணியை எந்த விளம்பரமும் இல்லாமல், தம் உடலுழைப்பால் செய்துவரும் இந்த இளைஞர்களின் பணி வரலாற்றில் இடம்பெறும், இவர்களின் பணிக்கு அனைவரும் உதவுவோம்” என்று தலைமை உரையை நிறைவு செய்தார் கவிஞர் நா.முத்துநிலவன், 

“இந்த விழாவிற்கு வாழ்த்துரையாற்றக் கூட தகுதியான பெருமக்கள்தான் அழைக்கப் பட்டிருக்கிறார்கள் என்றதோடு, கல்விப்பணியோடு கலை-இலக்கிய சமூகப்பணிகளையும் செய்துவரும் கவிஞர் தங்கம் மூர்த்தி, குழந்தைகளுக்கான மருத்துவப்பணிகளோடு,  கல்விப்பணியும் செய்து, 500க்கு மேற்பட்ட அனாதைப் பிணங்களை எடுத்து, விளம்பரமில்லாமல் தமது சொந்தச் செலவில் அடக்கம் செய்துவரும் மருத்துவர் ராமதாஸ், 
குழந்தை இலக்கியம் படைப்பதுடன், நல்ல கல்விக்கான இதழான “புதியதலைமுறைக் கல்வி” இதழின் முதுநிலை உதவி ஆசிரியராகவும் பணியாற்றி வரும் எழுத்தாளர் மோ.கணேசன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பேராசிரியர் பணியை நிறைவு செய்த பின்னரும் கல்லூரி வளாகத்தில் ஏராளமான கன்று நட்டு, இளைஞர்களுக்கு இலவசப் ோட்ித் தேர்வு வகுப்புகளை நடத்திவரும் வாசகர் வட்டத் தலைவர் விசுவநாதன், 
புகழ்பெற்ற வழக்கறிஞரான சொக்கலிங்கம், மற்றும் சில மருத்துவர் பெருமக்கள் ஆகிய சான்றோர்களை அழைத்து வாழ்த்துரை வழங்கச் செய்திருப்பதும் இந்த இளைஞர்களின் நுட்பமான அறிவாகும் என்று பேசி அவர்களைப் பேச அழைத்தார்.
நிறைவாக, சிறப்புரையாற்றிய ஞானாலயா நூலக நிறுவுநரும் தமிழ் அறிஞருமான பா.கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, 
”இந்தியா முழுவதும் இன்று நடைமுறையில் இருந்துவரும் அலுவலக கோப்பு நடைமுறை களை உருவாக்கித் தந்தவர் புதுக்கோட்டை திவான் டாட்டன் ாம், அதோடு, இந்தப் புதுக்கோட்டை நகர் முழுவதும் மரம் நட்டு வளர்க்கச் சட்டம்போட்டு, ஒரு சோலைபோலாக்கினார். பின்னர் வந்த அரசுகள் அந்த மரங்களின் அருமை தெரியாமல் அழித்து விட்டனர். வடஇந்தியாவில் பஞ்சாப், ராஜஸ்தான், சண்டிகரில் மரங்களைக் காக்க நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் தியாகங்களைப் பத்திரிகைச் செய்தி, மற்றும் புத்தகங்கள் வழியாக அறிந்து வியக்காமல் இருக்க முடியவில்லை! நகர் மயமாதலில் மரங்களை அழிக்க வந்த மன்னர் படைகளை எதிர்த்து, மரங்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டு காப்பாற்றிய வரலாறு நமக்குண்டு.
அதோடு, பூச்சிக்கொல்லி மருந்துகளால், பூச்சிகளோடு நல்லநல்ல தாவரங்கள் எப்படி அழிகின்றன என்பதை ஒரு பெண்மணி சிறுநூலாக எழுத, மருந்து தயாரிக்கும் முதலாளிகள் அமெரிக்க அரசாங்கத்தை நிர்ப்பந்தம் செய்து அந்த நூலையே தடைசெய்யச் சொன்னபோதும். 50ஆண்டுக்கழித்து அந்த நூலின் உண்மைத் தன்மையை உணர்ந்த அமெரிக்க அரசு இப்போது அந்த நூலைப் பாராட்டி வருகிறது என்பது போன்ற வரலாற்றுக் குறிப்புகளை எடுத்து வைத்து நெகிழச்செய்தார்.
வாழ்த்துரைகளின் பிறகு, 150வாரங்களாக மரக்கன்றுகளை நட்டுவர உடலுழைப்புத் தியாகம் செய்த இளைஞர்கள் சுமார் 30பேருடன், அந்தந்த மரக்கன்றுகளை ஆங்காங்கே பாதுகாத்து சுமார் 4000 மரங்கள் வளர்ந்துவர உதவியாக இருந்த சுமார் 65பேர்களுடன், இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு மற்றும் நிதி உதவிசெய்த பெருமக்களையும் மேடையேற்றி நினைவுப் பரிசு தந்து பாராட்டும் நிகழ்வும் நடந்தது. 
விழாவுக்கு வந்திருந்த சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட அனைவருக்கும், ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பாக, அதன் தாளாளரும் கவிஞருமான தங்கம்மூர்த்தி, “விதைப்பேனா” வழங்கியது வந்திருந்தோரை மகிழ்விலும் நெகிழ்விலும் ஆழ்த்தியது! 


திருமணத்தின்போது, விதைக்கலாம் அமைப்பினர் மரக்கன்றுகள் நடுவதற்கான ஆறுமாதகாலச் செலவினம் மொத்தத்தையும் ஏற்றுத் தந்த ஒரு தம்பதியினர் உட்படப் பாராட்டப்பட்டவர்களடன் விதைக்கலாம் இளைஞர்கள் மேடையேறியபோது பார்வையாளர்கள் உணர்ச்சி வசப்பட்டு எழுந்து நின்று கையொலி எழுப்பிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது!

நிகழ்ச்சியில், தமிழாசிரியர் கழகத் தலைவர் கும.திருப்பதி, சமூகஆர்வலர் சுதந்திரராஜன், பாவலர் பொன்.க., ஒளிஓவியர் செல்வா, கவிஞர்கள் பீர்முகமது, சூர்யாசுரேஷ், ஆசிரியர்களும் எழுத்தாளர்களுமான சோலச்சி, இந்துமதி, அமிர்தா, மீனாட்சி, தலைமைஆசிரியர் பாபு உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்துகொண்டனர்
நிறைவாக, ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நாகபாலாஜி நன்றியுரையாற்ற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவேறியது. 
-------------------------------
விதைக்"கலாம்" அமைப்பில் 
இணைந்து செயல்பட, 
உதவி செய்ய 
பின்வரும் செல்பேசி எண்களில் தொடர்பு கொள்க-
ஸ்ரீமலையப்பன்-7639972504, நாகபாலாஜி-8344550036, கார்த்தி-9092091239
    ---------------------------------

செய்தி வெளியீட்டுக்கு 
நன்றி
தீக்கதிர், இந்து தமிழ் - நாளிதழ்கள்- 10-7-2018 

புதுகை வரலாறு நாளிதழ் -11-07-2018
 

ஒளிப்படங்கள் – “டீலக்ஸ்” ஞானசேகர், புதுக்கோட்டை

மற்றும் விதைக்“கலாம்“ நண்பர்கள்
 
------------------------------ 
-----------------------------------  
 ----------------------------------------

7 கருத்துகள்:

  1. அருமை அண்ணா..... நெகிழ்வான நிகழ்வு....

    பதிலளிநீக்கு
  2. நீங்க கூட இருந்தாலே போதுங்க அய்யா!!! என்ன வேணா செய்யலாம்!!! மகிழ்ச்சியா இருக்கேன்...

    பதிலளிநீக்கு
  3. என் மனதிற்கு நெருக்கமானவர்கள் பங்குகொண்ட விழா. விதைக்கலாம் நண்பர்கள் நிச்சயமாக வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்.ஒருவாரம் என்னையும் அழைத்து மரக்கன்றுகள் நட சொன்ன நினைவு வந்து போகிறது. எனது திருமணத்தில் மரக்கன்று கொடுத்தது நினைவிருக்கின்றதா அய்யா? இன்று மரங்களாக வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது பெற்றெடுத்த குழந்தையைப் பார்ப்பது போன்ற உணர்வு உள்ளூற ஏற்படும். சிறு செயலுக்கே இந்த உணர்வு என்றால் நம் விதைக்கலாம் நண்பர்கள் நட்ட மரக்கன்றுகளைக் காணும்போது அவர்களது எண்ண ஓட்டம் எப்படியிருக்கும் என்பதை உணரமுடிகிறது. அனைவருக்கும் வாழ்த்துகளும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.

    பதிலளிநீக்கு
  4. அப்துல்கலாம்

    ஒரு இலங்கைத்தமிழனாக நான் நிஜத்தைச்சொன்னேன்னா எனக்கு அப்துல்கலாம் அவர்கள்மீது அவர் விளிம்புநிலைக் குடும்பத்தில் பிறந்து விண்வெளியில் வியத்தகு சாதனை படைத்தாரே என்பது தவிர்த்து அவர்மீது எந்தவொரு வியப்போ பெருமரியாதையோ கிடையாது.
    அவரது அறிவின் முதிர்ச்சியையும், தனக்கிருந்த பலத்தையும் அவர் சூழ்ந்த சமூகத்துக்காகவோ அவர் பிரயோகிக்க முயன்றதில்லை. அதனால் அவர் பெரும்பதவியில் இருந்தகாலத்தில் செய்தவற்றைவிட செய்யாமற்போனது அதிகம்.
    அவர் தான் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கே சரியான மின்சாரவசதிகளைச் செய்துகொடுக்கவில்லை என்பார்கள் அவர் ஊர்க்காரர்கள். அவர் குடியரசின் தலைவராக இருந்தார் இதையெல்லாம் இறங்கிவந்து கவனிக்கமுடியாதென்பது சிறுபிள்ளைத்தனமான விவாதம். அவர் தலைவராக இருந்தபொழுதில்த்தான் இத்தனை நூறு (புள்ளிவிவரங்களை உள்களிடம் விட்டுவிடுகிறேன்) மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுகின்றார்கள். இலங்கை அரசைக் குறைந்தபட்சம் கண்டித்துவைக்கவாவது அவரால் முடியாமற்போனது.
    ஒரு தமிழ்க்குடியரசுத்தலைவராக இருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ராஜீவ்காந்தியின் கொலைவழக்கோடு சம்பந்தப்படுத்தப்பட்டு வாழ்வின் பாதிக்காலத்தைச் சிறைக்கொட்டுகளில் கழித்துவிட்ட பாவிகளை விடுதலை செய்திருக்கலாம். எவரும் ஏனென்று கேள்வி கேட்டிருக்கமாட்டார்கள். செய்யவில்லை.
    போரினால் ரணகளப்படுத்தப்பட்டு இருக்கும் தமிழ்மக்களிடையேபோய் ஒரு ஆறுதல்வார்த்தை சொன்னாரில்லை. அதாவது பட்டினியில் வாடிக்கொண்டிருப்பவர்களிடம் சென்று சமையற்கலை வகுப்புக்கள் எடுத்துவிட்டு வந்த மனிதர்தான் அப்துல்கலாம். தன்னைச்சூழவுள்ள அரசியலைக்கவனிக்க அவர் உதவியாளர்களையோ ஆலோசனையாளர்களையோ வைத்துக்கொள்ளவில்லை. 40 பேர்வரையில் அப்பாவி குடிமுறைசார்ந்தவரை (சிவிலியன்ஸ்) கொதிக்கும் தார்வீதியில் படுக்கவைத்து டாங்கரை ஏற்றி அரைத்துக்கொன்ற இந்திய அமைதிகாக்கும் படையின் காட்டுமிராண்டித்தனத்துக்காக எம்மிடம் ஒரு சிறு மன்னிப்போ வருத்தமோ தெரிவித்தாரில்லை. அப்துல்கலாம் என்கிறபெயர் எனக்கு அருவருப்பாவுள்ளது. பொறுத்தாற்றுக நட்புக்களே.

    பதிலளிநீக்கு
  5. நல்ல நட்பு வட்டம். உண்மையான ஈடுபாடு. வழிகாட்ட உங்களைப் போன்ற பெரியோர். சாதிக்கவேண்டும் என்ற உறுதி. தன்னலம் கருதா மாண்பு. அனைத்துமே கைகொடுக்க விதைக்கலாம் சாதித்துக்கொண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

    பதிலளிநீக்கு