தமுஎகச 14ஆவது மாநில மாநாடு! உணர்ச்சியும்! எழுச்சியும்!!


புதுச்சேரியில் ஒரு புதிய பண்பாட்டுத் திருவிழா!

      இந்திய நாடு முழுவதும்இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்என்றுஅவசரநிலைஇருள் கவிழ்ந்திருந்த 1975இல், அந்த இருளைக் கிழித்தெழுந்த சிறு பொறியாய் எழுந்ததுதான், அன்றைய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்! இப்போது தமுஎகச என்கின்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்!
இன்றும் அப்படியொரு சூழல்தான் நிலவுகிறது! எழுத்தும், கருத்தும் என்ன சொல்கிறதோ அதற்கு உரிய பதிலை நேர்மையாகச் சொல்ல முடியாத நவீன அவசரக்காரர்கள், எதார்த்தத்தை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனை அசிங்கப்படுத்தினர், ஓர் ஆய்வுக்கருத்தை எடுத்தாண்டதற்கு, கவிஞர் வைரமுத்துவின் கட்டுரையை இணையப் பக்கத்திலிருந்து மறைத்ததோடு, மேடைகளிலும் தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்தினர், எங்கள் சுவாசத்தைச் சுரண்டாதே என்று போராடிய வர்களின் வாயில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன! தமிழகத்தின் உரிமை கல்வி, மொழி, அரசியல் எனப் பலவகையிலும் கேள்விக்கு உள்ளாகிய இந்தக் கந்தகச் சூழலில்தான் புதுச்சேரி மண்ணில் தமுஎகசவின் 14ஆவது மாநில மாநாடு எழுச்சியோடும் உணர்ச்சியோடும் நடந்து முடிந்துள்ளது!
ஒரு படைப்பாளி எப்படிப் படைக்கவேண்டும் என்பதில் பாரதியின் பாஞ்சாலி சபதக் குறுங்காவிய முன்னுரை, கிட்டத்தட்ட தமுஎகசவின் கொள்கைப் பிரகடனம் போலவே இருக்கிறது, பாருங்களேன்-
எளிய பதம், எளிய சொற்கள், பொதுமக்கள் விரும்பக்கூடிய மெட்டு இவற்றாலாகிய காவியம் ஒன்றை எழுதுகிறவர், தமிழன்னைக்குப் புதிய அணிகலன் சூட்டியவனாகிறார். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கம் உள்ளவர்க்கும் புரிய வேண்டுவதோடு, காவியத்துக்கு உள்ள நயங்கள் குறையாமலும் படைத்தல் வேண்டும்”-எனும் பொருளில் முன்னுரை இருந்ததை எனது நினைவிலிருந்தே எழுதுகிறேன்!
அந்த பாரதி நடந்து திரிந்த புதுவை மண்ணில்,
கிட்டத்தட்ட இதைப் பாரதி எழுதி நூறாண்டுகள் கடந்த நிலையில்,
அவனது வழியில் பாரதிதாசனும், தமிழ்ஒளியும் புதிய தமிழைப் புதுக்கிய மண்ணில்மாநில மாநாடு என்பதால் தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடந்தது!
அந்த எதிர்பார்ப்பைச் சற்றும் குறையின்றி நிறைவேற்றினர் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர்கள்! எழுத்தாளர் பிரபஞ்சன் தலைவராக, .இராமச்சந்திரன் செயலாளராக, கலியமூர்த்தி பொருளராகத் தேர்வு செய்யப்பட்டுப் பணிகள் தொடங்கின! இதில் புதுச்சேரி மாநிலத் தலைவர் வீர.அரிகிருஷ்ணன், செயலர் உமாவும் இணைந்தனர்

இடையில், எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது வழிகாட்டுதலில் ஏனைய தோழர்கள் இயங்கினர்.
கலைக்குழுக்கள் ஒருபக்கம் கலக்க, விளம்பரப் பணிகள் ஒருபக்கம் நிறக்க, நிதிவசூல் தொடர்ந்து நடக்க, கடந்த மே-12,13இல் திருப்பூரில் கூடிய தமுஎகச மாநிலச் செயற்குழு-பொதுக்குழு, மாநாட்டு நிகழ்ச்சி நிரலை இறுதிப்படுத்தி அழைப்பிதழை சிறப்பாக அச்சிட்டு மாநிலம் முழுவதும் வழங்க.. பணிகள் தொடங்கின...
21-6-2018 வியாழன் காலையில், பாரதி, பாரதிதாசன், ஜீவா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்ஒளி ஆகிய நவீன தமிழின் முன்னோடிகளின் சிலைகளுக்கு மாலையணிவித்து மாநாட்டு நிகழ்ச்சிகளைத் தொடங்கினர்.
---------------------------------------------------------

மாநாட்டு அழைப்பிதழ் மற்றும்

முழுமையான நிகழ்ச்சி நிரலைப் பார்க்க –


------------------------------------------------------------- 
கலைப் பேரணி... ஜீவா சிலைக்கு  சு. வெங்கடேசன் மலர் மாலை அணிவித்ததும் கலைப் பேரணி தொடங்கியது. இந்த பேரணியில் திருவண்ணாமலை பாப்பம்பாடி ஜமா குழுவின் பறை இசை, காஞ்சி பெண்கள் தப்பாட்டக்குழு, புதுச்சேரி தெருக்கூத்து கலைஞர்களின் ஆட்டத்துடன், இசைக் கலைஞர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட முற்போக்கு மக்கள் கலைஞர்கள் பங்கேற்றனர். பச்சை சட்டைகளுடன் பாப்பாம்பாடி பெரிய மேளம், இளஞ்சிவப்பு வண்ண சேலைகளில் காஞ்சிபுரம் புதுவினை, புதுவை சப்தர் ஹஷ்மி தவில், பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து நாதஸ்வர இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைக்குழுக்கள் பேரணியில் நிகழ்ச்சிகளை எழுச்சியோடும் வண்ணமயமாகவும் நடத்திக் கொண்டு மாநாட்டு அரங்கை வந்தடைந்தனர்.வழியெங்கும் புதுவை மக்கள் இப்புதுமையான நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். முன்னதாக பேரணியை தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கி.அன்பரசன் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பேரணியை புதுச்சேரி மாநில கலைஇலக்கிய பெரு மன்றத்தின் சார்பில் மலர் தூவி வாழ்த்து முழக்கமிட்டனர்.பேரணியை முன்னாள் அமைச்சர் ஆர்.விஸ்வ நாதன் தொடங்கி வைத்தார்.
 வரலாற்றுக் கண்காட்சி கீழடி வரலாற்றுக் கண்காட்சியை மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜனும், தமிழ்ச்சினிமா நூற்றாண்டுக் கண்காட்சியை எடிட்டர் பி. லெனினும், புதுவை இளவேனிலின் புகைப்படக் கண்காட்சியை முனைவர் க.பஞ்சாங்கமும் புத்தகக் கண்காட்சியை எழுத்தாளர் இரவிக்குமாரும் திறந்து வைத்தனர்.
கலைநயத்துடன் ஒரு கண்காட்சி! மாநாடு நடைபெற்ற ஜெயராம் திருமண மண்டபத்தை தங்களது கைவண்ணத்தால், நாட்டின் நடப்பு களை எளிய மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ண(ம்)மாக மாற்றி அமைத்திருந்தனர் மாநாட்டு வரவேற்புக்குழுவினர். நுழைந்தவுடன் முற்போக்கு கருத்தாளர்கள் நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த்பன்சாரே, கவுரிலங்கேஷ் ஆகியோரை கருத்தால் எதிர் கொள்ள முடியாமல் வன்முறை ஆயுதத்தால் கொன்றழித்த இந்துத்வா வகுப்புவாத வெறியை அம்பலப்படுத்தும் வகையில் மூவரின் மீதும் காவித் துப்பாக்கியால் சுட்டு சூலாயுதத்தால் அழிக்கும் வண்ண ஓவியம் வைக்கப்பட்டிருந்தது அனைத்தையும் பேசாமல் பேசியது.

----------------------------------------------------

இந்திக் கவிஞர் 
ஜாவேத் அக்தர் மாநாட்டுத் துவக்கவுரை-
இம் மாநாட்டை வெள்ளியன்று (ஜூன் 22)காலை தொடங்கி வைத்து,“ஷோலே”
உள்ளிட்ட பிரபல இந்திப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிய கவிஞரும், சாகித்ய அகாதெமி, பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவருமான ஜாவேத் அக்தர் பேசியதாவது:
கலை, இலக்கியம் என்பது பொழுதுபோக்கு அல்ல. அது அடித்தட்டு மக்களின் வாழ்க்கை ஆவணமாகும். தற்போது கலை கலைக்காகவே என்று மிக நுட்பமாக முன் வைக்கப்படுகிறது. ஆனால் இது வாழ்வியல் தொடர்புடையது. முற்போக்கு கலை இலக்கியவாதிகளின் முதல் மாநாடு 1936 ஏப்ரல் 13 இல் லக்னோவில் நடந்தது. இதில் பங்கேற்ற ரவீந்திரநாத்தாகூர் பேசும்போது இந்தியாவின் விடுதலைக்கு போராட மக்களை அணிதிரட்ட வேண்டிய கடமை எழுத்தாளர்களுக்கு உள்ளது எனக் கூறினார். இம்மாநாட்டில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அது இந்தியாவில் ஏற்படும் மாற்றங்களை அறிவியல் பூர்வமாக முழுமைப்படுத்தவும், பழமைவாத சிந்தனைகளை எதிர்த்தும் படைப்பாளிகள் செயல்பட வேண்டும் என்ற தீர்மானம். ஆனால் அந்த தீர்மானம் இன்றைக்கும் பொருந்துகிறது என நான் கருதுகிறேன்.


எந்தவிலையும் கொடுப்போம்
நம் அரசியலமைப்பு சாசனம் சாதி, மதம், இனம் எதுவாக இருந்தாலும் சமம் என்கிறது. இதனை ஏற்பவர்களை தேசத் துரோகி என்கிறது பாஜக. அரசமைப்பு சாசனத்தையே தேசத்துரோக சாசனம் எனவும் பாஜக கூறும். இதனை தடுத்து இச்சாசனத்தை பாதுகாத்திட படைப்பாளிகளான நாம் போராட வேண்டும். என்னவிலை கொடுத்தாவது நம்மை தடுக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. நாம் அவர்களுக்கு சொல்லுவோம் என்ன விலை கொடுத்தாலும் இந்திய அரசமைப்பு சாசனத்தை நாங்கள் பாதுகாப்போம்.இவ்வாறு ஜாவேத் அக்தர் பேசினார். அவரது ஆங்கில உரையை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் தமிழாக்கம் செய்தார்.
--------------------------------------------------------------
சிலைகளுக்கு மரணமில்லை,  
சிந்தனைகளுக்கு வீழ்ச்சியில்லை 
 காவி மதவெறியர்களால் அம்பேத்கர், பெரியார், லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதற்கு எதிராக ஓராயிரம் சிலைகள் வடிப்போம். சனிக்கிழமையன்று ஜூன்23 பொன்மாலைப்பொழுதில் மாநாட்டு அரங்க வளாகத்தில் ஆதவன் தீட்சண்யா தலைமையில் நடைபெற்ற சிலைகளுக்கு மரணமில்லை, சிந்தனைகளுக்கு வீழ்ச்சியில்லைநிகழ்ச்சியில் இயக்கக் கலைஞர்களின் பாடல், ஸ்னோலின் நூல்வெளியீடு, “எங்கள் கனவு’’ என்ற திரைத் தொகுப்பு குறுந்தகடு வெளியீடு, கவிதைவாசிப்பு நிகழ்வுகளுக்கு இடையே சிற்பி ஜெயராமன் தலைமையிலான குழுவினர் அம்பேத்கர், பெரியார், லெனின் சிலைகளை வடித்தனர். ஓவியர் ஸ்ரீரசா உடனிருந்தார்
யவனிகா ஸ்ரீராம்,வெயில், மனுஷி,நவகவி, ஜீவி, கலைஇலக்கியா, உமாமகேஸ்வரி, ஏகாதசி, லட்சுமிகாந்தன், வெண்புறா, நா.அருள.வே , வல்லம் தாஜ்பால், தனிக்கொடி, --ஸ்டாலின்சரவணன், இனியன், .சண்முகசுந்தரம், தி.கோவிந்தராசு ஆகிய தமிழக, புதுச்சேரி கவிஞர்கள் கவிதை வாசித்தனர். எஸ்.கருணா, .பிரகதீஸ்வரன் தொகுத்து வழங்கினர்.
-------------------------------------------------------------------------------
மனுவை எரிக்கும் அம்பேத்கர் சிலையை அமைப்போம்
ஆதவன் தீட்சண்யா பேசுகையில், மதவெறியர்கள் அம்பேத்கர், லெனின், பெரியார் சிலைகளை மாற்றுத்தத்துவமாக பார்த்து அஞ்சி சகிப்பின்மையால் அவற்றை இடிக்கிறார்கள். அம்பேத்கர் அரசியல் சட்ட புத்தகத்தைகையில் வைத்திருப்பது போலவே சிலைகள் இருப்பதில் நுட்பமான முதலாளித்துவ அரசியல் உள்ளது. ஒடுக்கப்பட்டோர் தமக்கு எதிராக போராடினால் ‘ “அரசியல் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர்தான் எழுதினார். எனவே அவற்றின் மூலம் நாம் தீர்வு காணலாம்’’’ என நம்மை அமைதிப்படுத்த அந்த சிலைகளை பயன்படுத்துகிறார்கள். இந்து வகுப்புவாதிகளோ பெரியார் காலம் முழுவதும் இந்துமதகுறைகளை போக்கத்தான் விமர்சித்தார். அதனால் அவரை இன்னொரு நாயன்மாராக நாம் ஏற்றுக் கொள்ளலாம்எனவும், அவர்கள் போற்றும் தலைவர்கள் வரிசையில் தற்போது அம்பேத்கரையும் வைத்து திசை திருப்புகின்றனர். எனவே பீப்பிள் டெமாக்ரசியில் பி.வி.ராகவலு எழுதியுள்ளதை உள்வாங்கி மனுஸ்மிருதியை எரிக்கும் அம்பேத்கர் சிலையை வடிவமைப்போம்.
----------------------------------------------
     மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 
      அரசுப்பள்ளிகள் மற்றும் தனியார்பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள், மத அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்குத் தடைவிதிக்க வேண்டும். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மணவாளமா முனிகள் சன்னதியில் பிராமணர் அல்லாதார் தலைவாசலுக்கு வெளியே நிறுத்தப்படுவதும், தமிழ் திவ்யப்பிரபந்தம் பாட அனுமதி மறுக்கப்படுவதும் இன்றளவும் தொடர்கிறது. இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. ஆலய வாயிலில் இந்த அப்பட்டமான சாதியப்பாகுபாடு, தமிழ்புறக்கணிப்பு இரண்டையும் மாநாடு கண்டிக்கிறது.
    அரசு நூலகங்களை வலுப்படுத்தி அரசியல் உள்ளிட்ட அனைத்து நூல்களும் வாங்கப்பட வேண்டும்; இதுவெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும். 
     1897ல்முதல் சலனப்படம் திரையிடப்பட்ட சென்னை விக்டோரியாஹால், தமிழ்சினிமா நூற்றாண்டை யொட்டி தமிழ்சினிமா ஆவணக்காப்ப கமாக்கிடவேண்டும். கலை இலக்கிய நிகழ்ச்சிகளுக்குத் திறந்துவிட வேண்டும். 
   அனைத்து நகரங்கள், ஊர்களிலும் அரசு மன்றங்கள் குறைந்த கட்டணத்தில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
     கலை இரவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நேரக்கட்டுப்பாடு என்றபெயரில் காவல் துறை தலையிடுகிறது. அரங்க நிகழ்ச்சிகளுக்குகூட ஒப்புதல் பெறவற்புறுத்தப்படுகிறது. இதை அரசு கைவிடவேண்டும். 
  அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராக சட்டம் கொண்டு வந்து செயல்படுத்துகிற கேரள இடதுஜனநாயக முன்னணி அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசும் இதைச் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மூடநம்பிக்கைகள் மனித சுய மரியாதையை இழிவுபடுத்தும் சடங்குகள் தடைச்சட்டம் கொண்டுவந்து சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
      சாதிஆணவக் கொலைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். மேலாண்மை ொன்னச்சாமி நூல்கள் தேசவுடைமை யாக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு மாநாடு நன்றிதெரிவித்துக் கொள்கிறது. அவரது நூல்கள் எங்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளக்கோருகிறது.  
   தமிழ் வழிக் கல்வி, தமிழ் வழிபயின்றோருக்கு பணிவாய்ப்பில் முன்னுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக உள்ள சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். 
     உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் ஏற்கப்படவேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் இந்தித்திணிப்பை ஏற்பதற்கில்லை. ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பதில் நமக்கு மறுப்பில்லை. ஆனால் அதுவே வாழ்வின் ஆதாரமாக்கப்படுவது எதிர்க்கப்படவேண்டியது. 
    தமிழ்வழி கல்வி, வாய்ப்புகளை, ஏற்ற சூழலை அரசு உருவாக்கவேண்டும்.   
 இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை அ.குமரேசன் முன்மொழிந்தார். அதனை தேனி வசந்தன் வழிமொழிந்தார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு:
தமிழகம், புதுச்சேரியிலிருந்து 540 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  
21பேர் கொண்ட மாநில நிர்வாகிகள், 41பேர் கொண்ட புதிய மாநிலச் செயற்குழு, இவர்களை உள்ளிட்ட  137 பேர் கொண்ட புதிய மாநிலக் குழுவும் மாநாட்டில் பிரதிநிதிகள் வாக்களிக்க, தேர்வு செய்யப்பட்டது.    சங்கத்தின் கௌரவத் தலைவராக ச.தமிழ்ச்செல்வன்,  
தலைவராக  சு.வெங்கடேசன், பொதுச் செயலராக ஆதவன் தீட்சண்யா,  
பொருளராக சு.ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
படத்தில் இடமிருந்து வலமாக-

ஆதவன் தீட்சண்யா,இராமச்சந்திரன்,

ச.தமிழ்ச்செல்வன்,சு.வெங்கடேசன்
துணைத் தலைவர்கள் - .செந்தில்நாதன், என்.நன்மாறன், மதுக்கூர் ராமலிங்கம், நந்தலாலா, ரோகிணி, ரா.தெ.முத்து.,  
துணை பொதுச் செயலாளர்கள்: கே.வேலாயுதம், எஸ்.கருணா, உதயசங்கர், பிரகதீஸ்வரன், லட்சுமிகாந்தன், களப்பிரன்,  
துணைச் செயலாளர்கள்:கி.அன்பரசன், ஸ்ரீரசா, ஆர்.நீலா, சுந்தரவள்ளி, நாறும்பூநாதன், உமா
மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் - அருணன், எஸ்..பெருமாள், மயிலைபாலு, பிரளயன், .குமரேசன், நா.முத்துநிலவன், ஈஸ்வரன், சைதை ஜெ., மணிமாறன், வெண்புறா சரவணன், மருதுபாரதி, கரிசல் கருணாநிதி, மு.ஆனந்தன், உமா மகேஸ்வரி, காமுத்துரை, ஸ்ரீதர், இராஜேந்திரகுமார், ஏகாதசி, தமிழ்மணி.  
சிறப்பு அழைப்பாளர்கள்:கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ், தி.வரதராசன், சோலை சுந்தரபெருமாள், தேனி சீருடையான்

புதிய நூல்கள் வெளியீடு
நாவல், நாடகம், சிறுகதை, கவிதை, கட்டுரைகள், சிறார் இலக்கியம், ஆய்வுூல்கள் என 42 நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன. நா.முத்து நிலவன், களப்பிரன், ஆனந்தன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்


இதுதவிர, இந்த மாநாட்டில் கடந்த 2014-17 மூன்றாண்டுகளில் தமுஎகச எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களின் பட்டியலும் தரப்பட்டது. விருதுநகரில்2012இல் நடந்த 12ஆவது மாநாட்டில் சுமார் 180நூல்களும், அடுத்து திருப்பூரில் 2015இல் நடந்த 13ஆவது மாநாட்டில் சுமார் 240நூல்களும் வெளியிடப்பட்டிருக்க, இப்போது புதுச்சேரி மாநாட்டின்போது, கடந்த 3ஆண்டுகளில் தமுஎகச எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களின் எண்ணிக்கை 400ஐத் தாண்ிவிட்டதாகப் பேரா.அருணன் நிறைவுரையில் மகிழ்ச்சி ொங்கக் குறிப்பிட்டார்!
--------------------------------------------------
அருணன் நிறைவுரை - மாநாட்டில் நிறைவுரையாற்றிய அருணன், கடந்த 13 மாநாடுகளைவிட இம்மாநாடு மகிழ்ச்சியளிக்கிறது. ஏனென்றால் பலதுறை சார்ந்த பெரிய அறிஞர்களை இம்மேடையை நோக்கி அழைத்து வந்து சிவப்பு, நீலம், கருப்பைப் பற்றி பேச வைத்துள்ளது. கருத்துரிமையைப் பாதுகாக்காவிடில் எழுத்துலகம் எழுந்திருக்க இயலாது. நாக்பூரிலிருந்து லண்டன் அனில் அகர்வால், அம்பானி வரை இந்தக்கள்ளக் கூட்டணியை எதிர்க்கவேண்டும். இதற்குக் காந்தியவாதிகளையும் நாம் இணைத்து முற்போக்கு என்ற புள்ளியிலிருந்து விரிவான ஒற்றுமையை தமுஎகச கட்ட வேண்டும். சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகத்தை அடைய இந்த ஒற்றுமை தேவை.  கலை இலக்கிய அமைப்பு என்றவகையில் ஆவேசமிக்க கோபத்தைப் படைப்புகள் மூலம் நாம் வெளிப் படுத்த வேண்டும்.தான் இறக்கப்போவது தெரியாமலேயே அக்காவுக்கு ஆறுதல் சொன்ன தூத்துக்குடி ஸ்னோலினின் அந்த ஒற்றைவரியே இலக்கியம் படைக்கப் போதும். 8 வழிச்சாலைக்கு என் நிலத்தைத் தரமாட்டேன் என வெகுண்டெழுந்த மூதாட்டியை எழுதாமல் யாரைப்பற்றி எழுதப் போகிறோம்கவுசல்யாவை விட்டு விட்டு வேறு எந்தக் கதாநாயகியை இலக்கியவாதி தேடுகிறான்?
கருத்துரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம்

மாநாட்டை ஒட்டி, புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்துரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம்வெகு சிறப்பாகவும் உணர்ச்சிகரமாகவும் நடந்தது. சரியாகச் சொன்னால் இந்நிகழ்ச்சி, தமுஎகச வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு மைல்கல்!
தமுஎகச கௌரவத் தலைவர் பேரா.அருணன் தலைமையேற்க, வரவேற்புக்குழுச் செயலர் சு.இராமச்சந்திரன் வரவேற்புரையாற்ற, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நயமாக வாழ்த்துரை வழங்கி அமர்ந்தார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன், தான் எழுதிய மாதொரு பாகன்நாவலுக்காக, இந்துத்துவ வெறியர்களால் பட்ட அவமானங்களிலிருந்து வெளிவர, தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தனிப்பட்ட முறையிலும் தமுஎகச சார்பில் வழக்குப்போட்டு வெற்றியை ஈட்டித்தந்ததும் தமக்குப் பெரும் நம்பிக்கையை தந்திருப்பதாகவும் அந்த நன்றியுணர்வுடனே இம்மேடையில் நிற்பதாகவும் சொன்னது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவையே கலங்கிநின்ற சமயத்தில், “ஒரு படைப்பாளிக்கு அமைப்பு எவ்வளவு முக்கியம் என்பதைத் தம்மை உணரவைத்த தமுஎகசவுக்கு நன்றிஎன்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டது மறக்க முடியாததாக அமைந்தது.
அடுத்துப் பேச வந்த கவிஞர் வைரமுத்துவை, தொகுப்பாளர் அ.குமரேசன்,  இப்போது கவிஞர் வைரமுத்து, ஆண்டாளுக்காகப் பேசுவார்என்று வம்புக்கு இழுத்து மேடையில் விட்டாலும், வைரமுத்து இதமான தென்றலாகவே தொடங்கினார், போகப் போகப் புயலாகப் பொங்கி அவையையே ஆட்கொண்டார்!
கருத்துச் சுதந்திரத்திற்காகத் தமிழிலக்கியங்களிலிருந்து ஏராளமான மேற்கோள்களை ஆவேசமாக எடுத்துவைத்த வைரமுத்து, இடையே எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன் மீதும், வெங்கடேசன் மீதும் நான் பொறாமை கொள்கிறேன்! வைரமுத்து பொறாமை கொள்வதையே நான் அவர்களுக்குத் தரும் மரியாதையாகவும் உணர்கிறேன்!” என்றவர், அடுத்து, “பேச்சு வாக்கில் மறந்தாலும் மறந்துவிடுவேன், எனவே நினைவிருக்கும்போதே சொல்லிவிடுகிறேன், இங்கே மேடையில் இருக்கிறாரே, இந்தக் கருத்தரங்கத் தலைவர், அருணன், இவர் நம் காலத்தின் மிகப்பெருமைக்குரிய தமிழறிஞர்! இவரை நாம் போற்றிப்பாதுகாக்க வேண்டும்! எங்கே இதன் அடையாளமாக அனைவரும் எழுந்து, அவருக்குக் கையொலி எழுப்பி மரியாதை செலுத்துங்கள்என்று கேட்க, பேரொலியோடு அனைவரும் எழுந்து நின்று எழுப்பிய கையொலி அடங்கச் சிறிது நேரமானது!

  
மாநாட்டுச் சிறப்பு வெளியீடாக தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 17வயது சிறுமியான ஸ்னோலின் நாட்குறிப்புகள்எனும் சிறுநூல் வெளியிடப்பட்டது. சிறுநூலை மனசால் எடுத்துக்கொண்டு மேடையேறிய மாநிலத்தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், அட்டைப்படத்தைப் பார்த்து, கண்கலங்கி வார்த்தையின்றி நிற்க, கூட்டம் மொத்தமும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அதையும் உள்வாங்கி, நூலை வெளியிட்டார், ஆனந்தவிகடன் அரசியல் கட்டுரை எழுத்தாளர் திருமாவேலன்... 
நாம் எல்லாருமே குற்றவாளிகள் தான், யாரும் தப்பமுடியாது.. இந்தச் சிறுபெண் என்ன குற்றம் செய்தாள்?” என்று அவர் பேசிய சத்திய ஆவசப் பேச்சு கூட்டம் மொத்தத்தையும் குற்றவுணர்வுக்கு ஆட்படுத்தி எழுச்சிபெற வைத்தது.. பூவுலகின் நண்பர்கள் சுந்தர ராஜன் நூல் பெற்றுக்கொண்டு உரையாற்ற, நூல்விற்பனை முழுவதும் ஸ்னோலின் குடும்பத்திற்கே என அறிவிப்பு வந்தது, கூட்டத்தில் 1000 படிகளும் விற்றுத் தீர்ந்தன!  
 ஸ்னோலின் கவிதைகள் பெட்டிச் செய்திகளில் பார்க்க
--------------------------------------------------
ஸ்னோலின் கவிதைகள்
நீ என்னை மறந்தாலும்,
என்றாவது ஒரு நாள்
நினைவில் இருப்பேன்,
உன் கண்ணில் கண்ணீராக..
(இதனை அவருடைய தோழி 
எம்.மேகலாவுக்காக எழுதியதாகக் 
குறிப்பிட்டுள்ளார்)
-------------------------------------------------------
காந்தி பிறந்தநாள்
சுதந்திரம் கிடைத்தது,
பெண்ணாகப் பிறந்த நாள்
சுதந்திரம் பறிக்கப்பட்டது
----------------------------------------------------
உயிர் கொடுத்த தந்தையை நினைப்பேன்,
உதிரம் கொடுத்த தாயை நினைப்பேன்,
என்னால் முடியும் என்ற மனநிலை கொள்வேன்.
உயர்வாய் உலகில் வாழ்வேன்,
முடியும் என்னால் முடியும்!
என்னால் மட்டுமே முடியும்,
தேர்வை நன்றாக எழுத முடியும்!
----------------------------------------------------
எப்போதும் சிரித்துக்கொண்டிருந்த என் நண்பன்
ஒருமுறை அழுதுகொண்டிருந்தான்,
நான் எழுந்து துடைக்க நினைத்தேன்,
நான் இறந்து கிடந்ததை மறந்து
-------------------------------------------------------- 

மாநாட்டில் வந்து கலந்துகொண்டு பெருமைப்படுத்திய முதுபெரும் எழுத்தாளர் கி.ரா., கவிஞர் சுகுமாறன், கலைஇலக்கியப் பெருமன்றப் பொதுச் செயலர் பேரா.காமராசு, மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்களின் உரைகளையெல்லாம் இணையத்தில் இப்போதும் பார்க்கலாம் –
-----------------------------------------------------

மாநாட்டு அழைப்பிதழ் மற்றும்

முழுமையான நிகழ்ச்சி நிரலைப் பார்க்க
--------------------------------------------------------
படங்கள், தகவல்களுக்கு...
தீக்கதிர் நாளிதழ் செய்தியாளர்களுக்கு
நன்றி நன்றி நன்றி நன்றி
-------------------------------------------------

11 கருத்துகள்:

  1. முற்றும் முழுமையான அரிய தொகுப்பு அய்யா....

    பதிலளிநீக்கு
  2. Complete narration ..takes us to the actual scene of the venue

    பதிலளிநீக்கு
  3. விரிவான, உணர்வுநிலைப் பதிவு தோழர். நன்று.

    பதிலளிநீக்கு
  4. விழாவின் சிறப்பு ஒவ்வொரு வரிகளிலும் புரிகிறது ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. அருமை.மாநாட்டுக்கு வர இயலாதவர்க்கு
    பொறுப்போடும் கரிசனத்தோடும் செய்திகளைத் தந்தமைக்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஓர் ஆவணப்படம் பார்த்ததுபோல் பெருமகிழ்வு அண்ணா

    பதிலளிநீக்கு
  7. அருமை..அருமை...முழுமையான ...நிறைவான தொகுப்பு தோழர்.

    பதிலளிநீக்கு
  8. மாநாட்டு நிகழ்வுகள் என் கண்கள் முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது
    மகிழ்ச்சி நன்றி

    பதிலளிநீக்கு
  9. முழுமையான ஒரு பதிவு தோழர் முத்து நிலவன்...

    பதிலளிநீக்கு
  10. தீர்மானங்கள் பற்றிய முழுத் தொகுப்பாக அமைந்ததுள்ளது. மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் மிகச்சிறப்பாகப் பதிவில் கொண்டு வந்துள்ளமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. தமுஎகச மாநில மாநாட்டு நிகழ்வுகளின் அருமையான தொகுப்பு. கலந்து கொள்ளாதவர்கள் நேரில் காண்பது போன்ற உணர்வளிப்பதாக உள்ளது. பாராட்டுகள். புதிய மாநில பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு