இளைஞர் படை இப்படித்தான் செயல்படணும்!


கூடுநூலகத்தைத் திறந்து வைத்து நான் பேசியது!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகிலிருந்தாலும் தஞ்சை மாவட்ட எல்லையிலிருக்கும்      இடையாத்தி (வ) கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில்,  முன்னாள் மாணவர்களும், சிங்கப்பூரில் வாழும் இடையாத்தி இளைஞர்களும் சேர்ந்து, இளந்தென்றல் சமூகநல அமைப்பு, அய்யனார் சமூகநல அமைப்பு உதவியோடு, “கூடு” எனும் பெயரில் கிராமப் பொதுநூலகம் ஒன்றை அமைத்துள்ளனர். அரசுகள் கிராம முன்னேற்றத்திற்கு செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டே ஆயிரத்தெட்டு சடங்கு சம்பிரதாயங்களைச் சொல்லி பலவற்றையும் தள்ளிப் போட்டுக்கொண்டிருக்கும் பொழுது, இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் ஊர் முன்னேற்றத்திற்கு எதையும் செய்ய முடியும் என்று காட்டியிருக்கிறார்கள் இடையாத்தியின் இளைஞர் படையினர்!
      இதற்கான விழா, கடந்த வியாழன் (03-5-2018) மாலை, ரெ.பெ.கருப்பையா தலைமையில் பள்ளியருகிலுள்ள நூலகத்தின் வாசலில் நடந்தது.   நூலகத் தொடக்க விழாவில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெ.துரைராஜ், முன்னால் ஒன்றியக்குழு உறுப்பினர் சரோஜா முத்துச்சாமி, கறம்பக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சிச் செயலர் அன்பழகன், ரோட்டரி சங்கத் தலைவர் தி.ஞானசேகரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் மா.ஸ்டாலின்சரவணன், சு.மதியழகன், அரிபாஸ்கர், எழுத்தாளர்கள் அண்டனூர் சுரா, துரை.குணா, அம்பேத்கர் வேலைவாய்ப்புப் பயிற்சி  மைய இயக்குநர் மு.முத்துக்குமார், பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் க.ரெங்கசாமி, தலைமை ஆசிரியர் சி.விஜயலலிதா, ஆசிரியர் முனியையா, ரெ.அப்பு, பிரபாகரன், புதுக்கோட்டை ஆசிரியர் ஸ்ரீமலையப்பன் எனப் பலரும் வாழ்த்துரை வழங்கினர்.
சமூக ஆர்வலர் பலரும் நூல்கள் வழங்கினர், கவிஞர் மா.ஸ்டாலின் சரவணன் உள்ளிட்ட சிலர் மேடையிலேயே நூலகப் புரவலராகி, நூல்கள் வாங்கிக் கொள்ளத் தொகை வழங்கினார்கள்.

சென்னை மேன்மை மாதஇதழ் ஆசிரியர் மற்றும் பதிப்பக நிர்வாகி மு.மணி, புதுக்கோட்டை வாசகர் வட்டம்நிர்வாகி பேரா.விஸ்வநாதன், எழுத்தாளர் சத்தியராம்ராமுக்கண்ணு, வீதி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா, கவிஞர் மீரா.செல்வக்குமார், மற்றும் நண்பர்கள் வழங்கிய நூல்களோடு, எனது 50 நூல்களையும் சேர்த்து, மொத்தமாக  100 நூல்களை வழங்கி, “கூடுகிராமப்புறப் பொது நூலகத்தைத் திறந்துவைத்து உரையாற்றினேன். அப்போது -

     நூலகம் திறக்கப்படுகிற போது, சிறைச்சாலை மூடப்படுகிறது என்பார்கள். பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டி யாகவும், படிக்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு வாழ்க்கையின் திசை காட்டியாகவும் திகழ்வது நூலகமே. 

      காமராசர்,எம்ஜிஆர்,கருணாநிதி உள்ளிட்ட பெரும்தலைவர்கள், பெரியார் போன்ற சிந்தனையாளர் பலரும் பள்ளிப் படிப்பைத் தொடராதபோதும், மக்களிடம் செல்வாக்குப் பெற்ற தலைவர்களாக, மறைந்த பின்னும் புகழோடு இருக்கக் காரணம் அவர்களது தொடர் வாசிப்புப் பழக்கமே! பயணநேரத்தில் படிக்கவே விமானத்தைத் தவிர்த்து ரயில் பயணத்தை விரும்புவார் அண்ணா! இவர்கள் ஏராளமான நூல்களைப் படித்துக் கொண்டே இருந்தார்கள்!
      இரண்டாயிரமாண்டுக்கால உலக மேதைகளின் சிந்தனைகளை மாற்றிப் போட்ட காரல்மார்க்ஸ், இந்திய அரசியல் சட்ட வரைவை உருவாக்கிய சமூகவிஞ்ஞானி அண்ணல் அம்பேத்கார், இந்திய சுதந்திரப் போருக்குத் தலைமையேற்ற அண்ணல் காந்தி, முதல் பிரதமர் நேரு உள்ளிட்டவர்கள் எல்லாம் தமது சொந்த நூலகத்தில் வைத்திருந்த நூல்களாலேயே பெரும் சிந்தனை வளம்பெற்றனர்.
      பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்ட, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், ஜெயகாந்தன், சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன் போலும் தமிழிலக்கியத்தில் மறக்கமுடியாத  எழுத்தாளர் பலரும் நூலகப் பள்ளியில் பெற்ற நுண்ணிய அறிவாலேயே புகழ்பெற்றனர்! எட்டாம் வகுப்புக் கூடப் படிக்காதவரின் நூல்கள், உயர்கல்வியான பி.எச்.டிக்குரிய பாடநூல்களாக ஆனது நூலக வாசிப்பின் கொடை!
      பள்ளிப் பாடங்களில் ஓரளவுக்குத்தான் அறிவுபெற முடியும். உலக அறிவைப் பெற நூலகப் படிப்பு மாணவர்களுக்கும் அவசியம். வேலை வாய்ப்புக்கான நேர்காணலில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ள இரண்டு மாணவர் களில் ஜி.கே. எனும் பொதுஅறிவு பெற்றவரையே தேர்ந்தெடுக்கிறார்கள்! ஜி.கே.என்பது பல தனியார் பள்ளிகளில் வைத்திருக்கும் ஒற்றைநூல் போன்றதல்ல! அது பலநூறு நூல்கள் தரும் அறிவின் தொகுப்பு! அதை நூலகம் மட்டுமே தரமுடியும்!
      இந்திய சுதந்திரதின விழாவின்போது, –ஆகஸ்டு 15, 1947 அன்று- டெல்லி செங்கோட்டையில் இங்கிலாந்தின் யூனியன் ஜேக் கொடியை இறக்கிவிட்டு, முதன்முதலாக இந்திய தேசியக் கொடியை ஏற்றிய தலைவர் யார் என்னும் கேள்விக்கு எந்தப் பாட நூலிலும் பதிலிருக்காது! இதற்கு, ரஜனி பாமி தத் என்னும் வரலாற்றறிஞர் எழுதிய இன்றைய இந்தியாஎனும் நூல்தான்  விடைதருகிறது! இந்நூல் எல்லா நூலகத்திலும் கிடைக்கிறது!
      இன்றைய தொலைக்காட்சி ஊடகம், படிப்பவர்களையெல்லாம் பார்ப்பவராக்கி ஊமையாக்கி விடுகிறது! ஒவ்வொரு நூலும் ஒரு வாழ்க்கையைப் படிப்பவர்க்கு வழங்குவதால், நூல் வாசிப்போர் மட்டுமே தம் வாழ்நாளைவிடவும் அதிக காலம் வாழ்ந்துவிட முடிகிறது! வாசித்து வாசித்து வசப்பட்ட சிந்தனை, நூல்களை எழுதவைத்து, இறப்பில்லா வாழ்வைத் தந்துவிடுகிறது! பெரும் விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் இப்படித்தான் மரணமிலாப் பெருவாழ்வுவாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
      சுய முன்னேற்றத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் உதவும் நூலக வாசிப்பு, இளைஞர்கள்-மாணவர்க்கு மிகவும் அவசியம். நேர வீணடிப்பில் திளைக்கும் இன்றைய வாலிபர் பலரின் ஆற்றல், நூலக வாசிப்பால் மட்டுமே நேர்படும்! இந்தப் பணியில் இறங்கிய இடையாத்தி(வ) இளைஞர்கள் இரண்டாம் சுதந்திரப் போராட்ட தளபதிகள்! இவர்கள் திறந்திருக்கும் கூடுஅர்த்தம் பொதிந்த சொல்!
      இளைஞர்களைப் பார்த்து உன் நேரத்தை வீணாக்காமல் இங்கு வந்து கூடு என்றும், இந்தக் கூட்டில் அமர்ந்து, உன் ஆற்றல் சிறகை வளர்த்துக் கொண்டு, உலகம் முழுவதும் சிறகடிக்கும் பறவையாக இந்தக் கூட்டுக்கு வா!வா!! என்றழைக்கின்ற அர்த்தமும் அழகியலும் இணைந்த அழகான பெயரைச் சூட்டியிருக்கும் இந்த இளைஞர்கள் இணைந்து காணும் கனவு இந்தக் கிராமத்தை வளர்த்தெடுக்கும்!
கிராம மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இதனைஇந்த இளைஞர்களின் சிந்தனை, உழைப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தக் கிராம முன்னேற்றத்திற்கும், படிப்படியாகப் படிக்கும் புதிய இந்தியா உருவாகவும் உறுதியேற்க வேண்டும்என்று பேசினார்.  
நிகழ்ச்சியில் ஏராளமான கிராமத்துப் பெரியோர்களும் பெண்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். நிறைவாக, நூலக அமைப்புக் குழு சார்பில் சி.புண்ணிய மூர்த்தி நன்றி கூறினார். 
உண்மையிலேயே மனநிறைவான விழாவாக இருந்தது!
எத்தனையோ இளைஞர்கள், படித்துமுடித்து, வேலைவாய்ப்புக் கிடைத்தபின்னர் ஊரையே மறந்து, (அ) ஊரிலேயே இருந்தாலும் ஊர்வளர்ச்சி பற்றிய அக்கறையில்லாமல் இருக்கும் இக்காலத்தில், இந்த இளைஞர்கள் –இவர்களை விழாவில்  ஒருங்கிணைத்த-“துருவேறிய தூரிகைகள்” எனும் அருமையான கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் கவிஞர் சாமிகிருஷ் போலும் இளைஞர்கள் – விவேகானந்தர் போலவும், இன்னொரு பக்கம் பகத்சிங் போலவும் எனக்குப் படுகிறார்கள்! 
அவர்கள் எனக்குப் போர்த்திய பொன்னாடையை, அந்த இளைஞர் படையை அழைத்து, அனைவர்க்குமாகப் போர்த்தி மகிழ்ந்தேன்.
முத்துராமன், ராமகிருஷ்ணன், சாமி கிரிஷ், அய்யப்பன், கருப்பையா, குமரேசன், புண்ணியமூர்த்தி, ரெ.பெ.கருப்பையா, வெங்கடேஷ், பழனிச்சாமி, அருள்பாண்டி, ராமமூர்த்தி, அஸ்வின், லெ.பெ.கருப்பையா, கோவிந்தராசு, முனியப்பன் எனும் நிர்வாகக் குழுவொன்றை உருவாக்கியிருக்கிறார்கள்
இவர்களோடு, இளந்தென்றல் சமூகநல அமைப்பு, அய்யனார் சமூகநல அமைப்பு மற்றும் சிங்கை வாழ் நண்பர்கள், இன்னும் இளைஞர்-மாணவர் பலரும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். 
பார்க்கலாம், 'இப்படித்தான்  இருக்கவேண்டும் இளைஞர்கள்' என்பதற்கு முன்னுதாரணமாக இவர்கள் திகழ்வார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது!
இவர்கள் வாழ்க! இவர்களின் வளர்ச்சியில் இந்த நாட்டின் ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சியும் அடங்கியிருப்பதால், மனதார இவர்களை வாழ்த்துகிறேன்...
எனது முக்கியமான வேண்டுகோள் -
இதனைப் படிக்கும் புத்தகப் பிரியர்கள், சமூகஆர்வலர்கள், நண்பர்கள், பின்வரும் முகவரிக்கு நூல்களை அனுப்பிவைத்தால், அவர்களை நான் நெஞ்சார வணங்குவேன் – 

கூடு கிராமப் பொது நூலகம்,
இடையாத்தி (வடக்கு) அஞ்சல்
பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
அஞ்சல் குற்றெண்- 614 628
செல்பேசி 98659 51142

      -----------------------------------------------

17 கருத்துகள்:

  1. உண்மையில் பாராட்ட பட வேண்டியவர்கள் அந்த இளைஞர்கள்,தான் பிறந்த ஊரை மறக்காதவர்கள் .அதோடு உங்களுக்கும் எனது பாராட்டுக்குள் .

    பதிலளிநீக்கு
  2. ஆஹா அருமையாக வழிகாட்டியுள்ளீர்கள். திறக்க, சிறைக்கதவுகள் மூட சிந்தனை ஒன்றை அறிவித்துள்ளீர்கள். என்னிடம் உள்ள நூல்களை எல்லாம் வாசகப் பரப்பில் பகிர்ந்து கொள்ள நூலகம் ஒன்றே சிறந்த வழி. நாங்களும் முயற்சிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல வழிகாட்டல் ஐயா. இவ்வாறான இளைஞர்களே இன்றைய சமுதாயத்திற்குத் தேவை. உங்களுடைய ஊக்குவிப்பு பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  4. புத்தக வாசிப்பின் சிறப்பை தங்களை தவிர வேறு யாரால் இவ்வளவு சிறப்பாக சொல்ல முடியும்...? அனைவருக்கும் பாராட்டுகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  5. மகிழ்ச்சி மிகச் சிறப்பு அண்ணா

    பதிலளிநீக்கு
  6. உண்மையில் இதுபோன்ற வரவேற்கத்த வீசயங்களை செய்வது மிக மகிழ்ச்சி அளிக்கின்றதண்ணா. நானும் சில தோழர்களும் இணைந்து இரு நூலகங்களை உருவாக்கியுள்ளோம் அண்ணா.
    கூடு போன்று பல கூடுகள் உருவாகனும்.
    அன்ன சதரதிரம்..
    ஆலயம் பதினாராயிரம்.
    அன்ன யாவினும்
    புண்ணியமாக
    கூடுகள்..

    பதிலளிநீக்கு
  7. கூடு நூலகம்பற்றி தெரிவித்தமைக்குப் பாராட்டுகள் நூலகம் வளர வாழ்த்துகள் இருண்டாலும் ஒரு சந்தேகம் எழுகிறது உங்களைஇந்த விழாவுக்கு அழைத்திராவிட்டால் இப்பதிவுவந்திருக்குமா மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அய்யா, உங்களை அழைத்திருந்தால் நீங்களும் என்னைவிட நன்றாக எழுதியிருப்பீர்கள் அய்யா! அந்த இளைஞர்களின் பணி அப்படி! அவர்கள் தான் எழுத வைத்திருக்கிறார்கள். இதில் மன்னிப்பு எதற்கு?

      நீக்கு
  8. திறன்களைத் திரட்டி வழிநடத்துவோர் வாய்க்கப்பெறின் இளைய தலைமுறை அல்வழி தவிர்த்து நல்வழிப் படுவர் என்பதற்குத் தங்களின் அரும்பணியே சான்றாகும்.பாராட்டுகள் பல.

    பதிலளிநீக்கு
  9. அருமையான விழா தொகுப்பு..வரவில்லை என்றாலும் கலந்துகொண்ட திருப்தி வருகிறது அய்யா

    பதிலளிநீக்கு
  10. மகிழ்ச்சி மிகச் சிறப்புங்க அண்ணா

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள் நண்பரே.
    நூலகம் அமைத்துள்ள இளைஞர்களுக்குப் பாராட்டுக்கள்.திருவாரூர்
    மாவட்டம் சன்னாநல்லூர் கிராமத்தில் சுமார் பதினைந்து லட்ச ரூபாய்
    செலவில் நான் அமைத்துள்ள அறிவுத்திருக்கோயில் மற்றும் அகத்தூண்டுதல் பூங்கா
    முக்கிய நான்கு வழி சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதும்
    எனது இதுநாள் வரை வாழ்ந்த வாழ்க்கையின் சாரமாக உள்ளது அந்த இடம்.
    கொட்டிக்கிடக்கும் வைரமணிகளை அள்ளிச்செல்வோரை இன்று வரை தேடிக்கொண்டிருக்கிறேன்.
    இடையாத்தி நூலகம் வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல செயல். பலர் பயன்பெறுவாங்க. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு