நவகவியின் பாட்டிசைப் பெருவெள்ளம்!




வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாமல், கேட்கும் போதெல்லாம் பரவசப்படுத்தும்  அல்லது அவஸ்தைப் படுத்தும் பாடல்கள் சில எல்லாருக்கும் இருக்கும்தானே? அப்படியானவை, கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் மட்டுமல்ல! நவகவியின் பாடல்களும்தான் என்பதைக் கம்பீரமாய்ச் சொல்ல வந்திருக்கும் பாடல் தொகுப்பு ”நவகவி1000”!



இலைகள் அழுத ஒரு மழை இரவு,
     எலும்பும் உறைந்துவிடும் குளிர்பொழுது
  கண்டேன் ஒரு காட்சி, கண்டெனது
    கண்ணில் இறங்கிவரும் நீர்விழுது
இந்த வரிகளை 25வருடமுன்பே முதன்முதலாகக் கரிசல் கிருஷ்ணசாமியின் காந்தக் குரலில் கேட்டபோது ஏற்பட்ட உணர்வு இப்போதும் மாறாதிருக்கிறது!
நிலவை மூட,கரு முகிலைப் போர்வையென
       வானம் வழங்குகிற நேரம்..
ஒருவர் உடலை எடுத்தொருவர் போர்த்தி இரு
       சிறுவர் அதோ தெரு ஓரம்!  என, அடுத்தடுத்து வந்த வரிகள் குளிர்க் கம்பிபோல இதயத்துள் ஊடுருவின! இதயம் நடுநடுங்கத் தொடங்கியது... அனாதைக்குழந்தைகளின் தீராத துன்பங்களைக் காட்சிப்படுத்தும் அந்தப் பாடல் தந்த வலி, என்னை முழுவதும் ஆட்கொண்டது! பதற்றத்துடனே பாடலுக்குக் காதுகொடுத்தேன் … கிருஷ்ணசாமியின் குரலில் நவகவி தொடர்ந்தார்..
கூட்டுக் குருவிகளின் சூட்டுக் கதகதப்பில்
                     குஞ்சுக் குழந்தைகளும் தூங்கும் – இந்த
              நாட்டுப் பாதையில் வாட்டும் வாடையில்
                     அனாதைக் குழந்தைகள் ஏங்கும்!     
பின்னணி புரியப் புரிய செயலிழந்து பாடலில் குவிந்து நின்றது மனசு!
உடலில் ஊறிவரும் உதிரம் முழுவதும்என்
          விழியில் ஊறிவரும் தோழா! – அந்த
இரவில் கடுங்குளிரில் கண்ட காட்சியில்என்
          இதயம் நோகுது வெகுநாளா!
பாடல் வரிகள் முழுவதும் புரிய, அந்தக்காட்சி மனக்கண்முன் விரிய, இதயம் விம்மத் தொடங்குவதையும், “தோழா!” எனும் கிருஷ்ணசாமியின் ஓங்கரிப்பில் இன்றுகூடக் கேட்கும்போது, முடிகள் சிலிர்த்துக் கொள்வதோடு, ஆற்றாமை மேலெழ, கண்ணீர் பெருகுவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை!  
கரிசல்  கிருஷ்ணசாமியின் இசைத்திறனின் உச்சம் இந்தப்பாடல் எனில், கவிஞர் நவகவியின் பாடற்கலை நயத்துக்கோர் எடுத்துக் காட்டும் இதுதான்! 

கேட்போரின் மனிதாபிமானத்தைத் தூண்டி, இந்தநிலை மாற ஏதாவது செய்தாக வேண்டும் எனும் செயல்திசைகாட்டியுமான பாடல் என்பதன்றி வேறென்ன?

மானத்துச் சந்திரன் மன்மதன் இந்திரன்
வாழ்கின்ற பூமியடா! – நாம்பொறந்து
வளர்ந்த தேசமடா! – அன்ன
தானத்தின் தர்மத்தின் சாஸ்திர வேதத்தின்
                     சங்கம பூமியடா! – ஆனா, சோத்துச்
                     சட்டிதான் காலியடா!
இந்தப் பாடல்தான் எத்தனை ஆயிரம் முறை தமிழக மக்களின் காதுகளில் ரீங்கரித்திருக்கும் என்பதற்குக் கணக்கேதும் உண்டா என்ன? இப்போதும் என் மேடைப்பேச்சின் துவக்கத்தில் பாட முயன்றாலும், இன்றுவரை அந்த கம்பீரத்தை முழுவதுமாகக் கொண்டுவருவதில் நான் வெற்றி பெறவில்லை, எனவே என் மேடை முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது மீண்டும் மீண்டும்!
கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக, தமிழகம் முழுவதிலும் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கலைஇரவுகளிலும், இடதுசாரி இயக்க மேடைகளிலும் லட்சக்கணக்கிலான மக்களை ரசிக்கவும், சிரிக்கவும், அழவும், எழவும், ஆடவும் மட்டுமல்ல பாடத் தெரியாது என்றவரைப் பாடவும் வைத்த பாடல்களை “நவகவி-1000” எனும் பெரும்தொகுப்பாக பாரதி புத்தகாலயம் அழகாக வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது!

“புதுயுக நாயகரே! இந்தியப் புரட்சியின் தூதுவரே!                          வந்தே மாதரத் தாரக மந்திரம் மறுபடி இசைத்திட வாருங்கள்!”  எனும் வரிகளை எவரும் எழுதிவிட முடியும்தான்! இதன் இறுதிப் பத்தியைப் படிக்கும்போதுதான் “தேசபக்த”வேடத்தைக் கிழித்தெறிந்து சத்திய ஆவேசத்தோடு பாடக்கூடிய பெருமையும் உரிமையும் நம் இடதுசாரிகளுக்கு மட்டுமே உண்டென்பது புரியும். இது போலும் இடங்களில்தான் மற்ற கவிகளிலிருந்து வித்தியாசப்பட்டு விஸ்வ ரூபமெடுத்து நிற்கிறார் நமது வர்க்கக் கவி நவகவி! 
இதோ அந்த வரிகள் –
சுரண்டிக் கொழுக்கிற முதலா ளித்துவத்
துரோகிகள் இன்று எந்திரமாய்
சும்மா சும்மா முணுமுணுப் பதனால்
தூய்மை இழந்த மந்திரமாம்!
புதைகுழிக் குள்ளே விடுதலைத் தியாகிகள்
புல்லரிப் படையும் விதத்தினிலே
போய்அவர் காதில் பாய்ந்திட நாமினி
முழங்கிடுவோம் அந்த மந்திரமே!
--வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தேமாதரம்!   
இதுதான் நவகவியின் முத்திரை!
சாதாரணமாக இரக்க குணம் பெரும்பாலார்க்கு இருப்பதுதான்! அதையே “செண்டிமெண்டாக” பயன்படுத்தி ஏமாற்றும் முதலாளித்துவ கலை-இலக்கிய வாதிகளிடமிருந்து தமுஎகச வேறுபட்டு நிற்பதை உள்வாங்கி நவகவி எழுதுவதே போர்க்குணமிக்க மனிதாபிமானம்! இன்றைய நம் தேவையும் இதுதானே?!

தொகுப்பைக் கொண்டுவர முன்னெடுத்த தோழர் கரிசல் கிருஷ்ண சாமி, தனக்குப் பாடல் எழுதித்தந்த பலரையும்விட அதிகமாகவும் தாம் விரும்பும் வண்ணமும் எழுதித்தந்த நவகவிக்குச் செய்த நன்றிக்கடனாகவே இதனைச் செய்திருக்கிறார்!
இதை இந்த மக்கள் கலைஞர்களின் தோழமைப் பகிர்வெனப்புரிந்தபோதும் நெஞ்சம் நெகிழவே செய்கிறது! ஏறி வந்த ஏணிகளை எட்டி உதைத்துப் போகும் இன்றைய உலகில் இப்போது எத்தனை பேருக்கு இருக்கிறது இந்தப்பண்பு? என்று நினைக்கும்போது, இதனைக் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டியிருக்கிறது! வளர்க வாழ்க, இந்தக் கலைத்தோழர்களின் இடதுசாரிப் பண்பும் பக்குவமும்!

நவகவி எழுதிய பத்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளிலிருந்து இவற்றைத் தலைப்புவாரியாகத் தொகுக்க, கவிஞர் ஏகாதசி நிரம்பவே சிரமப்பட்டிருப்பார் என்பது இத் தொகுப்பை முழுவதும் படிப்போர்க்கு நிச்சயமாகப் புலப்படும்!

இன்று பலரும் செய்யத் தயங்கும் –உ.வே.சா. பாணி- பாடல்முதற்குறிப்பைத் தந்து, பாடலை சிரமப்படாமல் தேடி எடுக்கும் வகையில் 1000பாடலைத் தொகுக்க, எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தவரே உணரமுடியும்
இந்த உழைப்பு வீண்போகாது கவிஞர் ஏகாதசி! 
இடதுசாரிக் கலையுலக வரலாறு இந்தப் பணிக்காக, உங்களை என்றும் நினைவில் வைத்திருக்கும் தோழா!

இன்றைய சமூகத்தின் “விடாத கருப்பு”களான சாதியக் கொடுமைகள், விவசாயப் பிரச்சினைகள், தொழிற் தகராறுகள், பெண்ணடிமைத்தனம், கல்வியி்ன்போதாமை, படித்தவர்க்கு வேலைவாய்ப்பின்மை மட்டுமின்றித் தகுதிக்கேற்ற வேலையின்மை (NOT ONLY UN-EMPLOYMENT AND ALSO UNDER EMPLOYMENT), ஊழலின் முடைநாற்றம், மூடநம்பிக்கையின் எரிநாற்றம், ஏழைகளை அலட்சியப்படுத்தும் சுயநல அரசியல், தேசப்பற்றின்றி ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளாகும் போலி தேசியவாதம், அதனால் மக்கள் படும் பலதுறை அல்லல்கள் என்பனபோல அனைத்தையும், பாடுபொருளாக்கியிருக்கிறார் கவிஞர் நவகவி!

அருமையான முன்னுரையில் தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன் சொல்கிறார்- “கடந்த 40ஆண்டுகளாக இந்தப்பூமியில் இந்த நாட்டில், இந்தத் தமிழ்மண்ணில் பொதுவெளியில் நடந்த எல்லாவற்றுக்கும் ஒவ்வொன்றுக்கும் முகம்கொடுத்துப் பாடியிருக்கும் ஒரே கவி நவகவிதான்” இதை நானும் வழிமொழிகிறேன்!

ஏற்கெனவே கலைஇரவு மேடைகளில் புகழ்பெற்ற பல பாடல்களோடு, இன்னும் கிராமங்கள்தோறும் போய்ச் சேரவேண்டிய அரிய பாடல்களும் ஏராளமாக இத்தொகுப்பிலுள்ளன!
“சரஸ்வதியின் தாமரையில் வாசம்இல்லை- அவள்                                     
வீணையிசை குப்பத்திலே கேட்கவில்லை” (பாடல்எண்-356),

சுடச்சுட போண்டா சினிமாக் கவிஞனுங்க- பாட்டு                          துட்டுக்கு ஏத்தபடி பொட்டலம் கட்டுவேங்க!”(268)

“ராஜகிரீடம் பாரு தலையிலே 
எங்க கூத்துக் கலைஞரு வீட்டிலே                         
அரிசிக்குப் பதில் தவிடு பொங்குது உலையிலே (8)

“கிழிச்சுப்புட்டான் வறுமைக் கோடு! 
இதைக் கேக்காதடா வெக்கக் கேடு!”(101)
எனவரும் கிண்டல்பாணியில் வெளுத்துவாங்கும் கவிஞர்,
“மண்ணுலகில் உயர்ந்த தீர்த்தம் 
என்ன தீர்த்தம்? – அது                                   
மனிதனது வேர்வையெனும் 
புனிதத் தீர்த்தம்!” (465)என மனசைத் தொடுகிறார்!

அழகியல் ததும்ப, “எங்கெங்கே அழகு இருக்கும்?” எனத் தொடங்கி, “கேளுங்கள் கேளுங்கள் என்ன தயக்கம்?” எனத் தொடரும் பாடல் அழகின் ஆராதனை!(665)
“கண்ணில் பூப்பூக்கும் நான் உன்னைத் தொட்டால்,                     
கார்முகில் தேன்வார்க்கும் உன் பார்வை பட்டால்” (710) எனக் காதலைப்பாடுகிறார்

“சும்மாக் கிடந்த சொல்ல எடுத்து 
சூட்சும மந்திரம் சொல்லிக் கொடுத்து 
கம்மாக்கரையின் மண்ணைப் பிசைந்து 
கவிகளில் அந்த வாசம் பிழிந்து             
பாமர ஜாதியின் தமிழ்முகந்து, 
பட்டறிவை அதில் கொட்டிக் கலந்து           
பாட்டுப் பொறந்திருக்கு – நாடே கேட்டு மகிழ்ந்திருக்கு – நம்ம                           
பட்டுக் கோட்டையின் பாட்டு – அது – பதினெட்டுச் சுவைக் கூட்டு!” என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு நவகவி எழுதிய வரிகள் நவகவிக்கும் பொருந்தும்.. எப்படி பாரதிதாசன் பாரதியைப் பற்றிப் பாடிய “கற்பனை ஊற்று” எனும் கவிதை பாரதிதாசனுக்கும் பொருந்துகிறதோ அப்படி! வேறென்ன சொல்ல?

எல்லாவற்றையும் வெறும் கலை-இலக்கியமாகப் பார்க்காமல் அரசியலாகவும் அதற்கான தீர்வாகவும் பார்க்கின்ற பார்வை கைவரப்பெற்ற கவிஞர் நவகவி தமிழின் மரபுசார்ந்த அழகையும், வீறார்ந்த சொற்களையும் இணைப்பதில் பெருவெற்றி பெற்றதன் அடையாளமாகவே இந்தத் தொகுப்பு காணப்பெறுகிறது!
எவ்வளவுதான் எடுத்து எழுதினாலும் இன்னும் மிச்சமிருக்கும் கற்பனைஊற்று, கவிதைப்புதையல் இந்நூல், இளைய கவிஞர்களும், கலைஞர்களும் வாங்கிப் படித்தும் வாய்விட்டுப் பாடிப்பார்த்தும் உணர்ந்தால்தான் உள்வாங்க முடியும்!!
-----------------------------------------------------------------------
நூல்-“நவகவி 1000” 
தொகுத்தவர்-கவிஞர் ஏகாதசி,  
வெளியீடு-பாரதிபுத்தகாலயம், சென்னை.
தொலைபேசி-044-24332924  
பக்கம்-1072, விலை ரூ.745 
-------------------------நன்றி - செம்மலர், ஜூன்,2017 ---------------------------

5 கருத்துகள்:

  1. சிலிர்ப்பூட்டும் கவிதைகள்! இப்பேர்ப்பட்ட கவிஞரைப் பற்றி இப்பொழுதுதான் முதன் முறையாக அறிகிறேன் என்பதை மிகுந்த வெட்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பொழுதாவது தெரிந்து கொண்டதற்காக, தெரிய வைத்த தங்களுக்கு நன்றி நவில்கிறேன்!

    பதிலளிநீக்கு

  2. சிறந்த எடுத்துக்காட்டுகளாக
    சிறந்த பாவடிகளை அழகுபடுத்தி
    அறிமுகம் ஆக்கினீர் - அந்த
    'நவகவி 1000' என்ற நூலையே!

    பதிலளிநீக்கு
  3. நவகவி அவர்களைப் பற்றி தங்கள் பதிவு மூலமாக அறியும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி. அவரது கவிதைகளை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பகிர்ந்த விதம் அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. அருமை ஆனால் ஒரு குறை உங்கள் குரலில் கேட்டகவேண்டிய பதிவு

    பதிலளிநீக்கு