“கக்கூஸ்” – ஆவணப் படம் தந்த அதிர்ச்சி!


பீ வருது” என்று நம் குழந்தை சொல்லக்கூட நாம் அனுமதிப்பதில்லை. அதுக்கு, “ஆய்” அல்லது மராட்டி மொழியிலிருந்து வந்த, தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கும் “கக்கா” என்று தான் சொல்லப் பழக்கிவிடுகிறோம்! (கக்கன் எனும் நம் தமிழகத் தலைவர் ஒருவரின் பெயர் இதிலிருந்து வந்ததுதான் என்றும் ஒரு குறிப்புண்டு!)
அல்லது தமிழிலக்கணம் சொல்லும் “இடக்கரடக்கல்” முறைப்படி “ரெண்டு” என்று ஒரு எண்ணின் பெயரைச் சம்பந்தமில்லாமல் வைத்து நாம் மட்டும் நாகரிகமாகிவிடுகிறோம்! 
ஒன்னுக்கு- மூத்திரம், ரெண்டுக்கு – பீ என்று “நாகரிகமாக” சொல்லப் பழக்கியிருக்கிறோம்தானே?

என்ன அசிங்கமாப் போகுதேன்னு பாக்குறீங்களா?

ஓரிரு நிமிடம் படிக்கவே முடியாம மூக்கப் பொத்திக்கிறீங்களே.........?

அதுவும் நம்ம குழந்தையோட கழிவையே சொல்லத் தயங்குறோமே? அள்ளத் தயங்க மாட்டமா?

ஆனால்...
ஊரார் பீயெல்லாம் அள்ளும் ஒரு மனிதக் கூட்டம் நம்மைச் சுற்றிச் செத்துச் செத்துப் பிழைக்கிறதே அதுபற்றி யாராவது யோசித்தோமா?

இத்தனைக்கும் “மனிதக் கழிவை மனிதனே எடுக்கும், சுமக்கும்” இந்த அசிங்கத்தைச் சட்ட ரீதியாகத் தடுத்துவிட்டதாகப் பீற்றல்வேறு!

அந்தச் சின்னப் பெண் திவ்யாபாரதி (வயது-25!)
ஓர்ஆவணப்படம் எடுத்திருக்கிறார்-

படத்தின் பெயர் “கக்கூஸ்”! 

என்ன அதிர்ச்சியா? அருவெறுப்பா?

ஒன்றரை மணிநேரம் 
நம்மை முடியைப் பிடித்திழுத்துச் 
சப்சப்பென்று அறைந்து தள்ளி 
மூச்சுத் திணர வைத்து விடுகிறார்!

இப்படி என்னை 

உலுக்கிய படத்தை 

இதுவரை நான் பார்த்ததில்லை!

      கடந்த 25-02-2017 சனிக்கிழமை, புஸ்தகா மின்னூல் சந்திப்புக்காகச் சென்னை சென்றிருந்த நான் அடுத்த நாள் காலை முனைவர் வீ.அரசு அழைப்பின் பேரில் அவரைப் பார்க்கக் கிளம்ப, அவர் “ஒரு ஆவணப் பட முன்னோட்டம் இருக்கு வந்திருங்க” என்றதால் அங்குப் போனால்… அரங்கு நிறைந்த கூட்டம்! 
வெகுசிலர் தவிர மற்றவர் அனைவருமே நேரில் சந்தித்திராத முகநூல் நண்பர்களாம்!
“மேன்மை” ஆசிரியர் மணியும் நானும் அமர்ந்தோம். படம் தொடங்கியதிலிருந்து உணர்ச்சிவசப்பட்டே தொடர நேர்ந்தது –
இயக்குநர் திவ்யா கைகட்டிப் பார்க்க,
கடலாடி, ஈரோடு, மதுரையிலிருந்து வந்திருந்த
“நகரசுத்தி”தொழிலாளர் குடும்பங்களோடு
வடஇந்திய எழுத்தாளர் பாசா சிங்
படத்தை வெளியிடுகிறார்!
(படத்திற்கு நன்றி - கூகுள்)

(மற்ற படங்கள் -
“மேன்மை” மாதஇதழாசிரியர் திரு மணியின்
செல்பேசியிலிருந்து எடுத்தவை)
இயக்குநர் திவ்யபாரதி படக்குழுவினர்
(எங்கள் ஊர்க்கவிஞர்) தனிக்கொடியின் பாடல்
கடைசியாக வந்து அறைகிறது 

அளவான பின்னணி இசை மதுரை பிரபாகர்
வெறும் கையில் மலம் அள்ளிய பலரின் கைகள் இப்படி


வெறும் கையில் மலம் அள்ளிய பலரின் உடல்கள் இப்படி


பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படாமல்
வெறும்கையும் வெறும்காலுமாய்...

செத்தும் நிவாரணம் கிடைக்காத பலப்பல உயிர்கள்
(கிடைத்த சிலரிடமும் லஞ்சப் பேய்களின் பிடுங்கல்)

கழிவறையில் “தவறிவிழுந்து” மரணித்த அப்பாவிகள்!

ஊரார் மலத்துடனே ஒவ்வொரு நாளும்

படத்தைப் பார்த்த சிலரின் உடனடிக் கருத்தில் வெளிப்பட்டது போல இது “மலம்” சம்பந்தப் பட்டதல்ல… நம் மனம் சம்பந்தப் பட்டது என்பதை மிகச் சரியாக மையப்படுத்தியிருந்தார் திவ்யா!

ஈரோடு, கடலாடி, மதுரை, விருதுநகர் என்று பல்வேறு ஊர்களிலும் உள்ள –- நமது கழிவறைகளை அன்றாடமும், வெறும் கையால் சுத்தப்படுத்தும் --நகரசுத்தித் தொழிலாளர்களை அவர்கள் “பணியிலிருக்கும்போதே” போய்ப் படம்பிடித்து, பேட்டி கண்டு,அவர்களின் வாழிடம் (வாழிடமா அது, நமது கக்கூஸ்களை விடவும் கேவலமாக இருக்கிறதய்யா! என்ன சொல்ல!) மற்றும் பிணத்தை, கழிவை அகற்றும் இடங்களுக்கே போய் அள்ளிவந்த அனைத்தையும் வெள்ளித் திரையில் இறைத்து நாற்றம் பிடித்த இந்தச் சமூகத்தைச் சுத்தம் செய்பவரை நாம் எப்படி எப்படி வைத்திருக்கிறோம் என்று காட்டியிருக்கிறார்!

குற்றவுணர்வால் நெஞ்சைக் குறுக வைத்த திவ்யா குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
இன்னும் நாலைந்து நாளில் டி.வி.டி வந்துவிடுமாம்.
திவ்யா குழுவினரை இந்த முகநூலில் தொடர்பு கொள்ளலாம். 

இப்படம் பற்றிய தோழர் சிந்தன் பதிவையும்
அவசியம் பார்க்க வேண்டுகிறேன் -

ஒன்று மட்டும் எனக்குத் தோன்றியது -
தமிழகப்பெரியாரிய,  மார்க்சியத் தோழர்கள் இன்னும் வெகுதூரம் இணைந்து பயணிக்க வேண்டிய நிலையில்தான் இன்றைய தமிழகம் உள்ளது, அதை இன்றைய மத்திய மாநில ஆட்சியாளர்கள் அவ்வப்போது நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்! நமக்குத்தான் புரியல!

படம் விற்பனைக்கு வந்ததும், 
மேலுள்ள திவ்யாவின் முகநூலில் தொடர்புகொண்டு வாங்குவோம்,
பலரும் பார்க்க உதவுவோம் நண்பர்களே!

31 கருத்துகள்:

  1. விழிப்புணர்வு தான்
    படத்தின் வெற்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழிப்புணர்வுதான். ஆனால், அது, நகரசுத்தித் தொழிலாளர்களை விடவும் அவர்களை நரகக் குழியில் தள்ளும் நாம் உணரவேண்டும் என்பதே! இதிலிருக்கும் சாதி-பொருளாதார-சமூக தீண்டாமை மற்றும் அடிநாதமாகக் கிடக்கும் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்வதே முக்கியம்

      நீக்கு
  2. மனதை உருக்குகிறது .
    அவர்களை பாதுகாக்க சட்டங்களும் உண்டு.
    அதை செயல்படுத்த அதிகாரிகளும் உண்டு.
    அரசு நிதியும் உண்டு.
    ஆனால் ஏன் இந்த அவலம். தொடர்கிறது.?
    தவறுகளுக்கு உடந்தையாக அநீதிகளைக் கண்டும் காணாமல் உள்ளம் மரத்துப்போன ,உளுத்துப்போன இந்த சமூகமும்தான்.



    மலம் பற்றி 2012 ஆம் ஆண்டு நான் வெளியிட்ட பதிவை காண வேண்டுகிறேன்.

    http://kankaatchi.blogspot.in/2012/10/blog-post_6264.html
    திங்கள், 1 அக்டோபர், 2012
    மலங்களே ..மலங்களே இது என்ன நிஜமா ?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டமா? அது சாதியவாதிகளின் சட்டையில் அல்லவா கிடக்கிறது! ஊடகங்களில் “மலக்குழியில் விழுந்து” அல்லது “தவறிவிழுந்து” என்பதெல்லாம் அந்தக் குடும்பத்தின் மீது வீசப்படும் கொலைவன்முறையன்றி வேறென்ன? உங்கள் படைப்பைப் பார்க்கிறேன். நன்றி

      நீக்கு
  3. நாம் வெட்கப்படவேண்டிய வேண்டியனவற்றில் இதுவும் ஒன்று. நம் மலத்தை கையால் அள்ளும் அவர்களைப் பற்றி பார்ககும்போது, படிக்கும்போது வேதனையாக உள்ளது. முன்னேறிவிட்டோம் என்றெல்லாம் பீற்றிக்கொள்கிறோம். விளம்பரப்படுத்திக்கொள்கிறோம். ஆனால் உண்மை நிலையோ....இதற்கு நல்ல தீர்வு வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயர்நீதி மன்ற நீதியரசராக இருந்த அம்மையார் இதுபற்றி தினமணியில் எழுதிய கட்டுரை எனது நினைவில் இருக்கிறது. வேறு என்ன? சமூகம் தான் சட்டத்தை மாற்ற வேண்டும்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பார்த்த ஒருமணிநேர வேதனையே என் வாழ்நாள் முழுவதும் இருக்க, அதிலேயே வாழும் மனிதர்களை எப்போது வெளியே கொண்டுவரப் போகிறோம்? அப்போதுதான் வேதனை மாறும்.

      நீக்கு
  5. வேதனை...
    இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும்.
    தைரியமாக படம் பிடித்திருக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னப்பெண்தான் என் மகள் வயதுதான்!
      இவர் பெரிதாக சாதிப்பார் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  6. சொன்னாலே நாறிவிடுமாம் தனக்கு..அடுத்தவனுக்கு?!!?
    :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் ஒரு வசனம் (எழுதிக் கொடுக்கப்படாதது என்பது பேசிய முறையில் தெரிந்தது) -
      “எங்க புள்ளையுவ இப்படியே கெடந்து சாகணும் உங்க புள்ளையுவ மட்டும் டாக்குட்டரு, கலெக்கட்டரு ஆகணும்? எங்க சனத்துக்கு என்ன தலையெழுத்தா?”

      நீக்கு
  7. ஐயோவென்று மனம் அரற்றுகிறது.. அவர்களும் மனிதர்கள்தானே.. ஏன் இப்படி... ஏன் இந்த அவலம்... மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? என்று பாடினார் பாரதி.. மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் வாழ்க்கை இனியுண்டோ என்று நாம் பாடும் காலம் என்றோ..

    பொதுக்கழிப்பறைகளில் போதுமான தண்ணீர் இருந்தாலும் கூட சிலர் அசுத்தப்படுத்திவைத்துவிட்டு வருவதைப் பார்க்கிறோம்.. இவர்களை எல்லாம் என்ன சொல்வது.. அந்தக் கழிப்பறையை சுத்தம் செய்வோர் பற்றி நினைக்கவே மாட்டார்களா...

    சமூகத்தில் பேசத்தயங்கும் ஒரு விஷயத்தைப் படமாக்கி வெளிச்சம்போட்டுநம் முகத்திலறையும் வண்ணம் படமாக்கியிருக்கும் திவ்யாபாரதி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர் உணவைப் பறித்தது பழசும்மா!

      இவர்களின் வாழ்க்கையே அல்லவா பறிக்கப்பட்டு விட்டது! அதுதான் வெளிச்சத்திற்கு வரும்போது நம் கண்களில் கண்ணீரும்..நெருப்புமாய்.. தெரிகிறது.. உங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி

      நீக்கு
  8. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு மதுரையில் ஒரு நண்பர் இத்தகைய படம் எடுத்திருந்தார். வைகை ஆற்றின் வடக்குக்கரையில் திருவாப்புடையார் கோயில் என்ற பாடல் பெற்ற தலம் இருக்கிறது. அந்தக் கோயிலின் சுற்றுப்பிரஹாரம் எல்லாம் அந்தப் பகுதி மக்கள், குறிப்பாக சிறுவர் சிறுமியர் கழிப்பிடம் போகும் இடமாக மாற்றியிருந்தார்கள். அங்கு மலம் இல்லாத தரைப்பகுதியை கண்டுபிடித்து கால் வைத்து நடப்பது கழைக்கூத்தாடி கயிற்றின் மேல் பேலன்ஸ் செய்து நடப்பதற்கு சமமாக இருக்கும்.

    அங்கு நிறைந்திருக்கும் மலத்தை மாரியம்மாள் என்ற மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் காலையும் மாலையும் கூடை கூடையாக அள்ளி, தலையில் சுமந்து, கொண்டு போய் கொட்டுவது. என்று அவரைச் சுற்றியே படம் வரும். மனதைப் பிழிந்த ஆவணப் படம். படத்தின் பெயர், "பீ..". அதன் பாதிப்பில் இருந்து விடுதலைப் பெறவே எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், தங்கள் குறிப்பிட்டிருக்கும் 'கக்கூஸ்' என்ற இந்தப் படம் அதைவிட கொடுமையாக இருக்கிறது. மனதை கல்லாக்கிக்கொண்டுதான் வாசிக்க வேண்டியிருந்தது.

    பீ பட அனுபவம் பற்றி அதன் இயக்குனர் அமுதன், "இந்தப் படத்தில் ஏகப்பட்ட கழிப்பறைகளுக்குப் போனேன். தொழிலாளர்கள் வேலை செய்வதைப் படம் பிடித்தேன். வேறு ஆட்களுடன் போயிருந்தால் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஏனெனில் கழிப்பறைகளுக்குள் நுழைய முடியாது. பாதையெங்கும் மலம் நிறைந்திருக்கும். அதில் ஒரு தொழிலாளி வேலை செய்து கொண்டிருப்பார். அதைப் பார்த்ததும் குமட்டும். தலை சுற்றும். கால்களில், கைகளில் மலம் ஒட்டிக்கொள்ளும். தொண்டைக்குழியில் அதன் மணம் தங்கிவிடும். எச்சிலைத்துப்பிக்கொண்டே இருக்க வேண்டும்." என்று தன் அனுபவத்தை ஒரு பத்திரிக்கை பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

    அமுதனின் பேட்டியை அவசியம் படியுங்கள் அய்யா! இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். மனதை பாதித்த சில பதிவுகளில் 'கக்கூஸ்' முதன்மையானது. அவசியமான பதிவை தந்ததற்கு மிக்க நன்றி அய்யா!

    http://rpamudhan.blogspot.in/2013/05/blog-post_7.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனக்குத் திரைப்பட அனுபவம் கிடையாது என்று சொன்ன திவ்யா, ரத்தமும் சதையுமாக என்பது போல மலமும்,மலக்குழியுமாக ஓராண்டுக்காலம் அலைந்து திரிந்து எடுத்ததைப் பார்க்கும் நமக்கே இப்படி இருக்கிறதே! எடுத்தவர் நெஞ்சில் எவ்வளவு கோபம் இருக்க வேண்டும். அதைச் சற்றும் குறையாமல் திரையில் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார். மிகச்சிறந்த விழிப்புணர்வுப் பட விருது நிச்சயம். அதைவிட அந்த மக்களின் வாழ்க்கை மாற்றம்தான்முக்கியம் என்பதாக அவரது படபடப்பான பேச்சில் புரிந்து கொண்டேன். டிவிடி வாங்கிப் பார்த்துவிட்டு நீங்களும் எழுத வேண்டும் செந்தில் அய்யா!

      நீக்கு
    2. நீண்ட பின்னூட்டத்திற்கும், இணைப்புத் தந்தமைக்கும் நன்றி செந்தில்!

      நீக்கு
  9. பதில்கள்
    1. ஆவணப்படம் ரூ.100க்கு விற்பனைக்கு வந்ததும், வாங்கித் திரையிட்டு, விற்பனைக்கு உதவி பார்த்த பதிவர் அனைவரும் அது பற்றியும் ஒரு பதிவு போட வேண்டும் அய்யா!

      நீக்கு
  10. அழைப்பு இருந்தும் என்னால் இந்த ஆவண படத்தை பார்க்கமுடியவில்லை என வருத்தம்தான். அதை பார்த்து எடுத்துரைத்தற்கு என் வணக்கம்.
    பரிதாபகரமான நிலைதான் மலம் அள்ளும் தொழிலாளர்களுடையது. எந்த ஒரு வசதிகளும் இல்லாமல் வாழும், போராடும் அவர்களுக்கு விடிவு காலம் சமூகம் காட்டும் என நாம் காத்திருப்பது வீணோ..அரசின் கவனத்திற்கு இட்டுச்செல்லவேண்டும். திவ்யாவின் இம்முயற்சி பாராட்டுக்குரியதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் செய்ய முடியாததை திவ்யா செய்திருக்கிறார். நாம் செய்ய முடிந்தது - அந்தப் படம் வந்ததும் உலகின் பார்வைக்குக் கொண்டு செல்ல உதவுவதே

      நீக்கு
  11. அப்பா...மனத்தை வதைக்கிறது...அவர்களுக்கு தீர்வேதும் இல்லையா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீர்வில்லாத பிரச்சினை ஏதுமில்லை.
      இந்த வலியை மற்றவரும் - அதாவது அந்தத் தொழிலில் இருப்பவர்க்கான மாற்றுப் பணிகளைச் செய்ய - அவர்களைத் தவிர்த்த மற்ற அனைவரும் இதில் கவனம் குவிக்க வேண்டும். தீர்வு வரும்.

      நீக்கு
  12. பெரிய நகரங்களில் இந்த 'மனிதர் கழிவை மனிதர் சுமக்கும்' வேலை ஓரளவு இல்லை என்றே தோன்றுகிறது. சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இன்னும் இருக்கிறது. அரசாங்கம் இதை ஒழித்துவிட முடியாது. இன்று கையில் பணமுள்ள சாதியினராக இருக்கும் பெரிய மனிதர்கள் தாம் முன்வந்து இத்தொழிலை அகற்றவேண்டும். என் இளம் வயதில் பொதுவுடமைக் கட்சியினர்தான் இததகைய மக்கள் முன்னேற்றச் செயல்களை முன்னெடுப்பார்கள். ஆனால் காலம் போகப்போக, பணம் பண்ணும் கட்சியினரோடு கூட்டணி வைத்துக்கொண்டு தங்கள் பிழைப்பைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டதால் இம்மாதிரி கீழ்நிலை மக்களுக்கு இன்று நாதி இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கு அரசு என்னமாதிரியான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தினாலும், அவர்களுக்கு அடுத்த உயர்நிலையில் உள்ள சாதியினர், அந்த வாய்ப்புகள் அவர்களுக்குச் சேராதவண்ணம் தடுத்துவிடுகிறார்கள். இரண்டு திராவிடக் கட்சிகளும் இந்தக் குற்றத்திற்கு உடந்தையே.
    -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி அய்யா.
      இரண்டு செய்திகள்- (1) சென்னை, மதுரை, ஈரோடு, முதலான பெருநகரங்களில்தான் இந்த இழிவு மிக மோசமாக நடக்கிறது என்பதை, இப்படத்தைப் பார்க்கும் போது உணர முடியும்.
      (2)அடுக்கு மூட்டையில் அடிமூட்டையாகக் கிடக்கும் இவர்களில் பலசாதியினர் உள்ளனர். ஆனால், உள்ஒதுக்கீடு பற்றி அறியாமலும், அறிந்தவர்களும் வேறு வழியின்றியும் உள்ளனர். பள்ளிப் படிப்பை முடித்தால் அல்லவா மேல் படிப்புக்கு உள் ஒதுக்கீடு உதவும். பள்ளியில் படிப்பை முடிக்காமலே இந்த வேலைக்குத் துரத்தப் பட்ட இளைஞர்கள் பலரின் பேட்டி உள்ஒதுக்கீடு தாண்டிய கோரிக்கைகளை எழுப்புகிறது அய்யா!

      நீக்கு
  13. மனம் வலிக்கிறது அண்ணா.தூப்புக்காரி என்ற நாவல் மலர்வதி எழுதியது...இவர்களை பற்றியது ......இன்னும் மனதில் உறைந்தபடி...

    பதிலளிநீக்கு
  14. இதனினும் கொடுமை இவர்களை கீழ்ச்சாதி என்று ஒதுக்குவதுதான் ஆனால் இவர்கள் வேண்டும் மலம் அள்ள. சிறு வய்தில் பாலக்காட்டில் இதை நிறையவே பார்த்திருக்கிறேன் ஸ்வச் பாரத் என்று ஓங்கி முழக்கமிடுபவர்கள் வெறும் வாய்ச்சவுடால் பேர்வழிகள் தானோ என்னும் ஐயம் எழுகிறது

    பதிலளிநீக்கு
  15. அறிவியல் வளர்ச்சியால் சமூகப் பொருளாதார முன்னேற்றமடைந்துள்ளது எனப் பீற்றிக்கொள்ளும் மேல்தட்டு ஆதிக்கவர்க்கம் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவல நிலையை மாற்ற என்ன தீர்வைச் சொல்லப்போகிறது?

    பதிலளிநீக்கு
  16. கக்கூஷ் ஆவணப்படம் குறித்த பதிவு அப்படத்தை அவசியம் பார்த்தாக வேண்டும் என்னும் எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. மனம் பதைத்துவிட்டது. இப்படி மனதில் தாக்கம் ஏற்படுத்தும் அளவிற்கு எடுத்த குட்டிப் பெண் திவ்யாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நாற்றத்தை வெளிப்படுத்திய அதாவது சமூக நாற்றத்தை வெளிப்படுத்திய திவ்யாவிற்கு மலர்ப்பூங்கொத்துகள்! எப்பேர்ப்பட்ட படம்! மனதை உலுக்கியது! அரசு இதற்கு ஒருமுடிவு கட்ட வேண்டும்...ஹும் அரியணை மாந்தர்களுக்கு இதைப் பற்றிக் கவலை ஏது..என்னென்னவோ சொல்லத் தோன்றுகிறது.....

    பொருளாதாரம் முன்னேறியுள்ளது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சி எங்கிறார்கள் எங்கு என்றுதான் தெரியய்வில்லை...

    அருமையான படம்...திவ்யாவிற்கு மன்மார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள் தைரியமாக எடுத்தமைக்கு மற்றும் மேன் மேலும் பல படைத்திடவும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  18. சுடுகாட்டுக்கூரைகள் வேய்வதிலும் கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்களால், இத்தகு தொழிலாளர்கள் பயன்படுத்த வாங்கப்படவேண்டிய பாதுகாப்பு உபகரணங்களில் கொள்ளை அடிக்க வாய்ப்பு இருப்பதால் மாற்று நவீன வழிமுறைகளை வழிமொழியாமல் இறுகின்றரோ என்ற கேள்வி எழுகிறது.

    பட இயக்குனரின் துணிச்சலும் மனிதாபிமானமும் அவர்தம் உள்ளத்தின் ஆதங்கமும் வணக்கத்துடன் அங்கீகரிக்கப்படவேண்டியாவை.

    கோ

    பதிலளிநீக்கு