தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

அறிவொளி இயக்க வெள்ளிவிழா இன்று!

இதோ நேற்று நடந்ததுபோல் உள்ளது!
ஆனால் 25ஆண்டுகள் ஓடிவிட்டன! சரியான மழையில் பெரும் ஊர்வலம்! அடித்துப் பெய்த மழைக்கு அசராமல், மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த அறிவொளித் தொண்டர்கள், புதிய கற்போர், ஒருங்கிணைப்பாளர்களின் பெரும் ஊர்வலம்! மழையை வரவேற்று ஊர்வல முழக்கம் விண்ணதிர எழுந்தது!
“வானம் எங்களை வாழ்த்துதே! வாழ்த்து மழை தூவுதே!” என்று! ஆண் பெண் குடும்பமாய்.. அலுவலர்களுடன் கலந்து உற்சாகப் பெருவெள்ளம்!
வருக வருக என அழைக்கிறோம்!
11-8-1992அன்று நிறைவுபெற்ற புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கத்திற்கு இப்போது(11-8-2016இன்று) 25வயது! வெள்ளிவிழா நடக்கிறது!
அறிவொளி இயக்கத்தி்ன் தாயான அறிவியல் இயக்கம், புதுக்கோட்டை நகர்மன்றத்தில் இதை எளிய விழாவாக, ஆனால் மகிழ்ச்சி பொங்கும் இனிய விழாவாக இன்று மாலை நகர்மன்றத்தில் ஏற்பாடு செய்துள்ளது!

அறிவொளி வெள்ளிவிழா!
திருமிகு ஷீலாராணி சுங்கத் இஆப
அன்றைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும், அறிவொளி இயக்கத் தலைவரும் தற்போது பணிநிறைவு பெற்ற த.நா.அரசுக் செயலருமான திருமிகு ஷீலா ராணி சுங்கத் அவர்கள் வருகிறார்கள்.

நமது இன்றைய  மாவட்ட ஆட்சியர் திருமிகு சு.கணேஷ் அவர்கள், நமது அறிவொளி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான முனைவர் பேராசிரியர் வெ.பா.ஆத்ரேயா
Dr.Venkatesh Balu Athreya
 அவர்கள், மற்றும் நமது அறிவியல் இயக்க இன்றைய மாநில நிர்வாகிகளான தலைவர் பேரா. மோகனா, பொதுச் செயலர் அமலராஜன், மாநிலச் செயலர் எஸ.டி.பாலகிருஷ்ணன் மற்றும் அன்றைய மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொறுப்போடு, அறிவொளி இயக்கப் பணிகளையும் மிகுந்த ஈடுபாட்டோடு செய்த திருமிகு ஜெகந்நாதன் (வட்டாட்சியர் ஓய்வு), திருமிகு சி.ஸ்டாலின் (வருவாய் வட்டாட்சியர்) ஆகியோர் வாழ்த்துரையாற்றுகிறார்கள்.


Dr. Francis Cody
ஆய்வுநூல் வெளியீட்டு விழா!
முக்கிய நிகழ்வாக, அமெரிக்க ஆய்வாளரும், கனடாவின் தொராண்டோ பல்கலைக்கழக சமூகவியல் பேராசியருமான திருமிகு பிரான்சிஸ் கோடி அவர்கள் –புதுக்கோட்டையில் சுமார் ஓராண்டுக்காலம்- தங்கியிருந்து, அறிவொளி இயக்கம் பற்றி களஆய்வுசெய்து எழுதியுள்ள, “தி லைட் ஆஃப் நாலெட்ஜ்” (THE LIGHT OF KNOWLEDGE ) எனும் ஆங்கில நூல் வெளியிடப் படவுள்ளது.

அன்றைய புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி மற்றும் தொடர் அறிவொளி இயக்கத்தின் மாவட்ட, ஒன்றிய, உதவி ஒருங்கிணைப் பாளர்களாகப் பணியாற்றிய செயல்வீரர் அனைவரும் அறிவொளித் தொண்டில் ஈடுபட்டு இப்போதும் அறிவியல் இயக்கத்தோடு இணைந்து பணியாற்றிவரும் நண்பர்கள் அனைவரும் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ.மணவாளன் தலைமையேற்க, அன்றைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் இன்றைய வேளாண்விஞ்ஞானி மா.சா.சாமிநாதன் ஆராய்ச்சி மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் இரா.ராஜ்குமார் வரவேற்கிறார். மாவட்டச் செயலர் வீரமுத்து நன்றியுரையாற்றுகிறார்.

அனைவரும் வருக! வருக!
அறிவொளி மலர்  11-8-1992
அறிவொளியோடு தொடர்புடைய அனைவரும் அறிவொளி இயக்கத்தில் பயன்பெற்ற கற்போர், ஜெம்கட்டிங் தொழிலில் பயனாளர்கள், பெண்கள் கல்குவாரித் தலைவியர், சைக்கிள் பயிற்சி பெற்று ஓட்டக் கற்றுக் கொண்டு, மிதிவண்டிநிலையம் வைத்து நடத்திவருவோர் உள்ளிட்ட முக்கியமாக அறிவொளியின் ஆணிவேரான தொண்டர்கள் எனப்படும் அன்றைய அறிவொளி ஆசிரியர்கள் அன்றைய அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்துகொள்ள  அழைக்கப்படுகிறார்கள்! 
அனைவரும் வருக வருக!
பட்டா படி!
 ‘பட்டா’, ‘படி’ இரண்டும்தான் அறிவொளி கற்பித்த முதல் வார்த்தைகள். தமிழில் எழுதச் சுலபமான எழுத்து ‘ட’; அடுத்து ‘ப’. எனவே, இதுவரை எழுத்து அறியாதிருந்த வரும், ‘பட்டா’, ‘படி’ ஆகிய இரண்டு வார்த்தைகளையும் ஒரு தவறும் இல்லாமல் எழுதிக் காட்டினர். களைத்த முகங்களில் எழுத்தின் வெளிச்சம் மிளிரத் தொடங்கியது. “ரேகை வச்ச வெரலுக்கு / றெக்கை முளைச்ச சந்தோசம்என்று இந்தப் பரவசத்தைக் கவிதை வரிகளாக்கினார் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி .(அன்றைய அறிவொளி இயக்க எழுத்தாளரான இவர், இன்றைய அப்பா மற்றும் மருது திரைப்படங்களில் மாமன் வேடமேற்றுப் பிரபலமாகியுள்ளார்!)

------------------------------------------------------------
29,000 அறிவொளி வகுப்பு மையங்கள், நடத்திய அறிவொளி ஆசிரியர்கள் பெரும்பாலும்  மாணவர்களே ஆசிரியர்களாய்!
2,90,000 கற்போர் சுமார் 40முதல் 60வயது முடிய!
13ஒன்றியம், 2நகராட்சியில் சுமார் 150ஒருங்கிணைப்பாளர்கள்,
13+2 ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள்,
மாவட்ட மையத்தில் 5பேர் ஒருங்கிணைப்பாளர்கள்!
ஓராண்டுக்கும் மேல் தொடர்பணி! மக்கள் இயக்கம்!
--------------------------------------------------------------------------------
அறிவொளி செய்த மாற்றங்கள்!
“கட்டிடங்களுக்குள் கட்டுண்டு கிடந்த கல்வி வீதிக்கு வந்ததே முதல் பெரிய மாற்றம். வீதியில் ஒரு சுதந்திரம் இருந்தது. புத்தகங்களுக்குள் கட்டுப்படாத பாடத்திட்டம் இருந்தது. பாட்டும் சிரிப்புமான ஒரு வகுப்பறை இருந்தது. கல்வி வியாபாரிகளின் கவனம் விழாத தூரம் இருந்தது. மாற்றத்துக்கான நம்பிக்கை இருந்தது” என்கிறார் கல்வியாளரும், அறிவொளி இயக்க விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் மாடசாமி அவர்கள்.
“ஒரு விதத்தில் ‘அறிவொளி’ என்பது பெண்களின் இயக்கம். படித்தோரும் படிப்பித்தோரும் பெரும்பாலும் பெண்களே! வீதியில் உட்கார்ந்து பலரும் பார்க்கப் படிப்பது ஆண்களுக்கு கவுரவப் பிரச்சினையாக இருந்தது. கற்றுக்கொடுத்த பெண்களில் பெரும்பாலோர் எட்டாம் வகுப்பு வரை படித்து நின்றவர்கள். வீட்டின் தினசரித் தேக்கங்களுக்குள் சிக்கியவர்கள். அங்கீகாரம் அற்றவர்கள். அவர்களுக்கான வாய்ப்பாக அமைந்தது அறிவொளி” என்ற வாசகம் பொய்யல்ல.
பள்ளிப் பிள்ளைகள் கட்டிடங்களுக்குள் கல்வி பெறுவது, ஸ்டவ் தீ பற்றிக்கொள்வது போல; மரத்தடிகளில் உழைப்பாளி மக்கள் கல்வி பெறுவது காடு தீ பற்றிக்கொள்வது போல - என்று அறிவொளியில் பேசுவோம். “புத்தகம் கையில் எடுத்துவிடு; அதுவே உன் போர்வாள்!” என்று கலைப் பயணங்களில் பாடுவோம். ஒரே ஒருநாள் அறிவொளி மையம் வந்து பட்டா, படி எழுதிப் போன கற்போர்; சில நாட்கள் தொடர்ந்து வந்து கையெழுத்து போடக் கற்றோர், தட்டுத் தடுமாறிப் பத்திரிகை வாசிக்க முன்னேறியவர்கள்; தாமே தொண்ட ராக வளர்ந்தவர் என அறிவொளியின் விளைச்சல், பல நிலைகளில், பல வடிவங்களில் இருந்தது.  
இன்றும் தொடரும் அறிவொளியின் நன்மைகள்!
இன்றைய தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி மற்றும் மாணவர் சேர்க்கையை விட தனியார் பள்ளிகளின் தேர்ச்சி மற்றும் மாணவர் சேர்க்கை சற்றே கூடுதலாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், புதுக்கோட்டை உள்ளிட்ட வெகுசில மாவட்டங்களில் மட்டுமே இந்த விகிதம் தலைகீழாக உள்ளது. அதாவது, மற்ற மாவட்டங்களின் கல்விப் புள்ளிவிவரங்களுக்கு மாறாக, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சியும் அரசுப்பள்ளிகளின் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. இதற்கு இன்றைய மாவட்ட ஆட்சியரின் நிர்வாகமும், முக்கியமாகக் கல்வித்துறை சார் அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், நம் ஆசிரியர்களின் தன்னலமற்ற பணியே முக்கியக் காரணம். அத்தோடு, 90களின் துவக்கத்தில் இம்மாவட்டத்தில் ஏற்பட்ட கல்வி விழிப்புணர்வின் தொடர்ச்சியும் ஒரு பங்காகி இருப்பதை மறக்க முடியாது. அதுதான் கல்வி விழிப்புணர்வின் அடித்தளமாக அமைந்த அறிவொளி இயக்கத்தின் இன்றைய பலனாகும்.

1990-92இல் இம்மாவட்டக் கிராமங்களில் பிறந்த பெண்குழந்தைகளில் சிலநூறு குழந்தைகள் “ஷீலா” என்றும் “ஷீலாராணி”என்றும் பெயர்சூட்டப் பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதுதான் இந்த மக்கள் இயக்கத் தலைவருக்கு இம்மாவட்ட மக்கள் சூட்டிய அன்பு மாலை! அன்பு தொடரட்டும்!

விழாவில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
 --------------------------------------------------------- 
(கட்டுரை ஆசிரியர் நா.முத்துநிலவன், மேனாள் அறிவொளி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், நாடகம், பாடல்களோடு, “ஊர்கூடி” பத்திரிகைப் பொறுப்பாசிரியர். முக்கியமாக “சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி” –பாடலை எழுதி இசையமைத்தவர். 
------------------------------------------------------------
 வெளியிட்டமைக்கு நன்றி : 
புதுகை வரலாறு நாளிதழ்-11-8-2016 
---------------------------------------------------------------------------------- 
-----------------------------------------------------------
நிகழ்ச்சி நடந்தபின்னர் எடுத்த
நிழற்படங்கள் மற்றும் செய்திகளைப் பார்க்க வருக-

8 கருத்துகள்:

 1. தங்கள் பணி தொடர
  எனது வாழ்த்துகள்


  குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
  http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

  பதிலளிநீக்கு
 2. விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்.
  ஆங்கில நூல் கூரியரில் அனுப்ப முடிந்தால் மகிழ்வேன்.

  பதிலளிநீக்கு
 3. வெள்ளி விழா
  'வெல்ல ' வாழ்த்துக்கள் ....

  அறிவை ஒழிப்பதையே
  வாழ்க்கையாகக் கொண்டுள்ள
  இந்த உலகில்
  ' அறிவை ஒளி'யாய்ப் பரப்பிய
  அறிவொளிக் காலத்தில்
  வாழ்ந்ததும் பணிசெய்த்ததும்
  மனநிறைவைத் தந்துகொண்டே இருக்கிறது.....

  பதிலளிநீக்கு
 4. அறிவொளி என்றதும் படிக்காத என்தாயார் தன் பெயரை கையெழத்து போடக் கற்றுக் கொண்டதுதான்...

  பதிலளிநீக்கு
 5. அறிவொளி புதுகையில் ஷீலா ராணி சுங்கத்...
  சிவகங்கையில் குத்சியா காந்தி...
  மிகச் சிறப்பாக நடத்திய பெண்மணிகள்...
  அப்போ நான் படித்துக் கொண்டிருந்தேன்... சிவகங்கை பேரணிகள்... கலந்தாய்வுகள் சென்று வந்தோம்...
  நானும் வகுப்பெடுத்தேன் எங்கள் ஊரில்...
  வெள்ளி விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு