“பெருமாள் முருகன் துணிவோடு பயமின்றி எழுதட்டும்”

பிடித்தெழ முயல்கிறேன்.. எழுந்துவிடுவேன் 
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன்நாவலுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம்,
ஆசிரியர் பெருமாள்முருகன், புதைக்கப்பட்ட விஷயங்களில் இருந்து எதையெல்லாம் சிறந்ததாக எழுத முடியும் என நினைக்கிறாரோ, அதை துணிவோடு பயமின்றி எழுதட்டும் 
எனக் கூறியுள்ளது

இதைத்தொடர்ந்து உயர் நீதி மன்றத் தீர்ப்பு குறித்து பெருமாள் முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில்...

நண்பர்களே,
வணக்கம்.
தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உள்ளொடுங்கிப் புகைந்தமனத்திற்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது. ‘எழுத்தாளர்உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும் என்னும் இறுதி வாசகத்தின்ஒளியைப் பற்றிப் பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன்.
ஒன்றுமில்லை, மகிழ்ச்சிப் பரவசம் காரணமாக இன்னும் கொஞ்சம்அவகாசம் கேட்கிறது மனம். துணைநின்ற நண்பர்களுக்கு நன்றி.
எதிர்நின்ற நண்பர்களுக்கும் நன்றி.
பூ
பெருவெடிப்புக்குப் பின்
ஒரு பூ மலர்கிறது
கூர்மணம்
நறுந்தோற்றம்
மின்பொலிவு
எல்லாவற்றையும்
எடுத்து நிறுத்துவிடும்
பூ
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
------------------------------------------------------------------------------
வழக்கில் நீதிபதிகளின் கருத்து:
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட அமர்வு, 150 பக்கத்துக்கும் அதிகமான மிக நீண்ட உத்தரவை கடந்த செவ்வாயன்று பிறப்பித்தது. அந்த உத்தரவில்நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். ஆனால் நீ சொல்வதுதான் சரியென வாதிட்டால் அதற்காக எதிர்த்துப் போராடி சாகவும் தயங்கமாட்டேன்என்ற தத்துவஞானி வால்ட்டரின் வார்த்தைகள்தான் இந்த வழக்குக்கு பொருத்தமாக இருக்கும்.

இப்போது காலங்கள் மாறுகிறது. முன்பு எது ஏற்கப்பட வில்லையோ, அதுதான் பின்னாளில் ஏற்கப்படுகிறது. ஒரு நாவலை படிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது அதைப் படிக்கும் வாசகர்களின் விருப்பம். பிடித்தால் படிக்கட்டும். இல்லையெனில் அதை தூக்கி எறியட்டும். அதற்காக ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும், என்ன எழுதக்கூடாது என்பதை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் தீர்மானிக்க முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமைக்கு குந்தகம் ஏற்படாத வண்ணம் அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
ஆனால், இந்த வழக்கில் அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து தவறியுள்ளது

சமுதாயத்தில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் கலாச்சாரத்தைத்தான் ஆசிரியர் தனது நாவலில் பிரதிபலித்துள்ளார். இதில் எந்த தவறும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.

எனவே, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது. யாரையும் கட்டுப்படுத்தாது. மேலும் பெருமாள் முருகன் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த நாவல் விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

எந்தவொரு படைப்பாளிக்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காக வழக்கறிஞர் சுரேஷ், சில வழி காட்டுதல்களை அரசு பின்பற்றலாம் என ஆலோசனைகள் சமர்ப்பித்துள்ளார்.

படைப்பாளிகளின் கருத்துரிமை, பேச்சுரி மையை அரசு பாதுகாக்க வேண்டும். சட்டம்ஒழுங்கை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வெளிநபர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிடுவதை அரசு தவிர்க்க வேண்டும்.

படைப்பாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக கலை, இலக்கியம் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் குழுவை தமிழக அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும். இதுபோன்ற அசாதாரண சூழல்களில் பாதிப்புக்குள்ளாகும் படைப்பாளிகளுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்

இந்த பிரச்சினைகளை கையாள அரசு அதிகாரிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்இந்த வழக்கை பொறுத்தமட்டில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டமாதொரு பாகன்நாவலை திரும்பப்பெற வேண்டிய அவசியமில்லை

ஆசிரியர் பெருமாள்முருகன், புதைக்கப்பட்ட விஷயங்களில் இருந்து எதையெல்லாம் சிறந்ததாக எழுத முடியும் என நினைக்கிறாரோ, அதை துணிவோடு பயமின்றி எழுதட்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பெருமாள் முருகனின் நூல்கள்
நாவல்கள்-
1.     ஏறுவெயில்-1991[1]
2.     நிழல்முற்றம்-1993[2]
4.     கங்கணம்-2007[4]
5.     மாதொருபாகன்-2010 [5]
6.     ஆளண்டாப்பட்சி - 2012[6]
7.     பூக்குழி - 2013
8.     ஆலவாயன் - 2014
9.     அர்த்தநாரி - 2014
சிறுகதைத் தொகுப்புகள்-
1.     திருச்செங்கோடு-1994
2.     நீர் விளையாட்டு-2000
3.     பீக்கதைகள்-2006
4.     வேப்பெண்ணெய்க் கலயம் - 2012
கவிதைத் தொகுப்புகள்-
1.     நிகழ் உறவு-1991
2.     கோமுகி நதிக்கரைக் கூழாங்கல்-2000
3.     நீர் மிதக்கும் கண்கள்-2005
4.     வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - 2012
அகராதி-
1.     கொங்கு வட்டாரச் சொல்லகராதி 2000
கட்டுரைத்தொகுப்புகள்-
1.     ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை-2000
2.     துயரமும் துயர நிமித்தமும்-2004
3.     கரித்தாள் தெரியவில்லையா தம்பி-2007
4.     பதிப்புகள் மறுபதிப்புகள்-2011
5.     கெட்ட வார்த்தை பேசுவோம்-2011
6.     வான்குருவியின் கூடு - 2012
7.     நிழல்முற்றத்து நினைவுகள் - 2012
8.     சகாயம் செய்த சகாயம் - 2014
மொழிபெயர்ப்பில் -
1.     SEASONS OF THE PALM 2004 (கூளமாதாரி ஆங்கில மொழிபெயர்ப்பு: .கீதா)
2.     CURRENT SHOW 2004 (நிழல்முற்றம் ஆங்கில மொழிபெயர்ப்பு: .கீதா)
3.     ONE PART WOMAN 2013 (மாதொருபாகன் : அனிருத்தன் வாசுதேவன்)
பதிப்பித்த நூல்கள்-
1.     கொங்குநாடு (தி..முத்துசாமிக் கோனார்)
2.     பறவைகளும் வேடந்தாங்கலும் (மா.கிருஷ்ணன்)
3.     சாதியும் நானும் (அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு)
4.     கு..ரா. சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)
தொகுத்த நூல்கள்-
1.     பிரம்மாண்டமும் ஒச்சமும்
2.     உடைந்த மனோரதங்கள்
3.     சித்தன் போக்கு (பிரபஞ்சன்)
4.     கொங்குச் சிறுகதைகள்
5.     தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள்
6.     .வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்
7.     தீட்டுத்துணி (அறிஞர் அண்ணா )
பெற்ற விருதுகள்-
1.     விளக்கு விருது 2012
2.     கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது 2013
3.     கதா விருது 2000
4.     கனடா இலக்கியத் தோட்ட விருது - அபுனைவுப் பிரிவு 2011
5.     சிகேகே அறக்கட்டளை விருது
6.     அமுதன் அடிகள் விருது
7.     மணல் வீடு விருது
8.     களம் விருது
9.     திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
10.  லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது
11.  தேவமகள் விருது

கடந்த மாதம், இவரது மாணவர்கள் 42 பேர் இவரைப்பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக “எங்கள் ஐயா”எனும் நூல் வந்துள்ளது.

பெருமாள் முருகன் அவர்கள் தொடர்ந்து எழுதவும், இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் வேண்டும். அவர் வீட்டில் இலக்கியவாதிகள் மாதந்தோறும் கூடி இலக்கியம் பேசிவந்த ”கூடு” எனும் இலக்கியக் கூட்டம் 100ஆவது கூட்டத்துடன் நின்றுவிட்டதாகத் தெரிகிறது (நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதை என்றும் மறவேன் கவிஞர் சகாரா!) நியாயமான நமது விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன். 

இவருக்காக நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்து, நியாயம் கிடைக்கச் செய்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன்-நா.முத்துநிலவன்.

தகவல்களுக்கு நன்றி
விக்கிப்பீடியா மற்றும்
07-07-2016 நாளிட்ட தினமணி, தி இந்து தமிழ், தீக்கதிர் நாளிதழ்கள்
-------------------------------------------------------------------------------

13 கருத்துகள்:

  1. பெருமாள் முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
    கையூட்டு கலாச்சாரத்திற்கு அடிமையானவர்களில் நீதித்துறையும் விதி விலக்கல்ல என்ற இன்றைய நிலையில் நீதியரசர் "சந்த்ரு "போல் சில விடிவெள்ளி தோன்றக்கூடும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.ஆனால் சிந்திக்க மறுத்து மிருகத்தனமாக செயலாற்றும் இன்றைய சமுதாயத்தில் "பெருமாள் முருகன்" போன்றவர்கள் பாதுகாக்கப் படவேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது

    பதிலளிநீக்கு
  2. படித்தேன். என்ன சொல்வதென்று தோன்றவில்லை. ஒரு படைப்பாளி தான் வசிக்கும் சமுதாயத்திலிருந்து விலகி படைப்புகளை உருவாக்கினான் என்றால் அதன் விளைவுகள் எப்படியாகும் என்று பார்த்தோம். ஒவ்வொருவரும் இவ்வாறு சட்டத்தின் உதவியை நாட முடியுமா என்பது ஒரு கேள்விக்குறியாகும்.

    திரு.பெருமாள் முருகன் பழைய நிலைக்குத் திரும்புவாரா? அவரால் முன்பு போல் மனத் தடங்கல் இல்லாமல் எழுத முடியுமா? அவர் பட்ட அவமானத் தழும்பு மறையுமா?

    இந்த விவகாரத்தில் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் போராட்டமே வாழ்க்கை என்று இருக்க முடியாது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  3. பெருமாள்முருகன் அவர்கள் விரைவில் எழுத வேண்டும்...
    நீதிமன்றம் கொடுத்த அடி எதிர்ப்பாளர்களுக்கு மரண அடிதான்...

    பதிலளிநீக்கு
  4. புதைக்கப்பட்ட விசயங்களை மீட்டு எழுக்க பெருமாள் முருகன் மீண்டும் எழுதுகோலைப் பற்ற வேண்டும்

    பதிலளிநீக்கு
  5. சலனமற்று ஓடிக்கொண்டிருக்கும் நதி, தடையைக் கடக்கும்போது முன்னிலும் வேகமாகவே ஓடும். சமூக இலக்கியப் படைப்பாளி பெருமாள் முருகனும் அதற்கு விதிவிலக்கல்ல. சீறிப்பாயும் முன்னிலும் மேலாய்.

    பதிலளிநீக்கு
  6. கண்டிப்பாக தொடர வேண்டும்... அவருக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  7. பெருமாள் முருகன் அதிர்ஷ்டசாலி. இதுபோல் தடை செய்யப்பட்ட வேறு பல எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத பெரும் பரிசாக,கருத்து சுதந்திரம்வ பற்றியும் அதைக் காக்க மாநில அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமானதொரு தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. மனப்புண் நீங்கி அவர் மீண்டும் எழுதவரவேண்டும். அது மட்டுமல்ல, 'மாதொருபாகன்' இன்னும் குறைந்தவிலையில், மலிவுப்பதிப்பாக உடனே வெளிவந்து நிலைமையை normalise செய்யவேண்டும். காலச்சுவடு கவனிக்குமாக. -இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  8. நானும் இதையேதான் விரும்புகிறேன் ஐயா. பெருமாள் முருகள் திரும்பவும் எழுதுவார் என்கிற நம்பிக்கையுடன்.

    பதிலளிநீக்கு
  9. தங்கள் சிறந்த பதிவுக்கு எனது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  10. எழுத்தாளனுக்கு என்றும் தாழ்வில்லை என்பதை அவரின் மறுபிரவேசம் உணர்த்தட்டும்!

    பதிலளிநீக்கு
  11. கடந்த வீதி இலக்கிய கூட்டத்தின் எனது கட்டுரை வாசிப்பில்....
    "பெருமாள் முருகனின் பேனா முனையை முறித்தாலும், துரை குணாவின் பேனாவினை பறித்தாலும், எழுத வேண்டும்...எழுத்துக்களை கொண்டாட வேண்டும்...வீதியில் நின்று கூக்குரலிட வேண்டும்." - இன்று முத்தாய்ப்பாக நீதியும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல...
    அதற்கும் மேல...

    பதிலளிநீக்கு
  12. நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மாதொரு பாகன் படித்தேன். சிறப்பு . அவர் மீண்டும் எழுதவேண்டும். ஒரு கூர்நோக்கு சமுதாயத்தின் எழுத்தாளன்.

    பதிலளிநீக்கு