அப்பா! – திரைப் பாடம்!


அப்பா! – திரைப் பாடம்! 
தன் மகன் மதிப்பெண்ணைக் கடந்து இந்த உலகைப் புரிந்து தன் திறமையை வளர்த்து இயல்பாகக் கற்கவேண்டும் எனும் அப்பா ஒருவர்.
தன்மகன் முதல்மதிப்பெண் வாங்கி டாக்டராகி, செட்டிலாகி என்று கருவிலிருந்தே மகனைத் திட்டமிட்டு வளர்க்கும் தந்தை இன்னொருவர்.
“எதிலும் மாட்டிக்காம இருக்குற இடம்தெரியாமே இருக்கணும்டா“ என்று தன் மகனை, பத்தோடு பதினொன்றாக வளர்க்க நினைக்கும் தந்தை! – என மூன்று இயல்பான இன்றைய –பாசமுள்ள- அப்பாக்களின் வாழ்வில் அவர்களின் பிள்ளைகள் என்ன, எப்படி ஆகிறார்கள் என்பதே கதை!

மகனை  ப்ளே ஸ்கூலில் சேர்க்க வேண்டுமென்று ஆசைப்படுவதும்,
“பெரிய பள்ளிக்கூடத்தில்” தன் மகன் படித்தால்தான் நாலுபேர் நடுவுல கௌரவமா வாழமுடியும் என்று நம்புவதும்,
மிஸ் வி.குட் போடணும் அதுக்குத் தன் பிள்ளையே ப்ராஜெக்ட் செய்வதை விட ரெடிமேடாகக் கடையில் வாங்கிக் கொடுப்பதே சரிஎன்பதும்,
சொந்தமாக மாணவன் செய்து வந்த மாதிரிக்கு very poor போட்டுவிட்டு, கடையில் வாங்கி வரும் மாதிரிகளுக்கு v.good போடும் பள்ளிக்கூடமும்
பெரிய மருத்துவ மனையை நடத்துபவரே, தொடர்ந்து மாநில முதல் மதிப்பெண் பெறும் பள்ளிக்கூடத்தையும் நடத்தும் கல்வித்தந்தையும்
தங்கையே தவறு செய்தாலும் மாப்பிள்ளையை மிரட்டும் அண்ணன்களும்
என இன்றைய இயல்பான பாத்திரங்கள் ஒருபுறம்.
இவற்றுக்கு மாறாக -
தன்னியல்பில் படிக்கவிரும்பும் பிள்ளைகள், அவர்கள் விரும்பும் அப்பா,
குடும்பநிலை, சாதி-மதம், உருவநிலை, வசதிகளைக் கடந்த நட்பு,
பருவவயது மாணவரின் பாலியல் ஈர்ப்பை எப்படிக் கையாள்வது என்று புரியாமல் ஆசிரியப் பயிற்சியில் “கல்விஉளவியல்” படித்த ஆசிரியர்களே தடுமாறும் இடத்தை, வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் அப்பா!
அவர்களியல்பில் படிப்பதே சிறந்தது என்று நம்பிச் செல்லும் அப்பா
மருமகனைப் புரிந்துகொண்டு அவரியல்பில் செல்லவிடும் மாமா,
--- என்றிவ்வாறுள்ள ரத்தமும் சதையுமான இன்றைய கல்விச் சூழலில் பெற்றோர் எப்படி யோசிக்க வேண்டும் என்று பாடம் நடத்துகிறது ”அப்பா!”
சமுத்திரக்கனியின் “சாட்டை” பார்த்த போதே, பெற்றோரின் பங்கும் இதில் சொல்லப்பட வேண்டும் என்பது நல்ல ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருந்ததை இப்போது நிறைவேற்றியிருக்கிறார் சமுத்திரக்கனி “அப்பா”
நான் எனது “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” நூலின் ஒரு கட்டுரையில் “ஆசிரியர்கள் என்போர் பள்ளியில் இருக்கும் பெற்றோர், பெற்றோர் என்போர் வீட்டிலிருக்கும் ஆசிரியர்” எனும் நிலை வந்தால் நல்ல கல்விமட்டுமல்ல நல்ல சமூகமே உருவாகும் என்று எழுதினேன்.
சாட்டை, அப்பா என இரண்டு படங்களைத் தந்த சமூத்திரக்கனி நல்ல ஆசிரியர்-நல்லஅப்பா (இரண்டிலும் தயாளன் எனும் கதாபாத்திரப் பெயரே) என்பது, நல்ல அப்பாவே நல்ல ஆசிரியராகவும் இருக்க முடியும் என்பதைச் சொல்லாமல் சொன்ன கவிதைபோல் உள்ளது!
வில்லன் என்பவன் பல படங்களில் வருவதுபோல வேறெங்கோ இருந்து வருவதிலலை, நம்மோடு இருக்கும் மனோபாவம்தான் என்பதையும் இந்தப் படத்தில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சமுத்திரக்கனி!
படத்தில் கவர்ச்சியில்லை, குத்தாட்டப் பாட்டு இல்லை, நாயகனுக்குக் குடிகார நண்பன் இல்லை! ஏன், பின்னணியில் அன்றிப் படத்தில் யாரும் வந்து பாட்டுப் பாடவும் இல்லை! ஒத்த ஆள் பத்தாளை அடிக்கும் சண்டைக் காட்சிகள் ஏதுமி்ல்லை! இப்படிப்பல இல்லை களுடன் கூடிய “அப்பா”படத்தில் நம் வாழ்க்கை எதார்த்தமுண்டு!எடுத்துக்கொண்ட கதை தவிர இவற்றுக்காகவும் பாராட்டவேண்டும்!
வீட்டைவிட குழந்தை விளையாட சிறந்த இடம் எது? விளையாடுகிற வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாமே என்கிற  சமுத்திரக்கனியை படுத்தி எடுத்து கையைக் கிழித்துக் கொள்கிறார் அவரது மனைவி.
மனைவி சொன்ன பள்ளியில் மகனை சேர்க்க,  அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு தயாளனைத் தட்டிக் கேட்க வைக்கிறது,
அங்கிருந்து டி.சி.வாங்கி மகனை அரசுப்பள்ளியில் சேர்க்கிறார்.
அதனால் கோபித்துக் கொண்டு அப்பா வீட்டுக்குப்போய்விடுகிறார் மனைவி.
 தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என நான்கு வேலைகளில் இறங்கி விளையாடி சும்மா எகிறி அடிக்கிறார் “அப்பா” சமுத்திரக்கனி!
மகன் பெயர் வெற்றி ஈஸ்வரன் நீச்சல்வீரன், குற்றாலீஸ்வரனையும் நினைவுபடுத்தும் நயம்...
 “மிஸ்டர் சக்கரவர்த்தி சிங்கப்பெருமாள் என்று தன் மகனை “வடித்து எடுப்பதாக நினைத்துப் படுத்தி எடுக்கும்” பாத்திரத்தில் சும்மா அல்வா சாப்பிடுவது போல அலப்பறை பண்ணும் தம்பிராமையாவிற்கும் சாட்டை படத்தில் வந்த சிங்கப்பெருமாள் பெயர்! (எதிர்மறை ஒற்றுமை!)
சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் ப்ரீத்தி ஒரு புதுமுகம் என்பதே தெரியாத அளவிற்கு முன்பாதி,பின்பாதி இரண்டிலும் அருமை! மருமகனின் சமூகப் பார்வையை முற்றிலும் புரிந்து கொண்ட மாமனாராக தமுஎச எழுத்தாளர் வேல ராமமூர்த்தி இயல்பான நடிப்பு!
அவர் குடும்பத்து “மீசைக்காரர்கள்” பற்றிய வசனங்கள் நெற்றியடி! (இந்த இடத்தில், ஆதவன் தீட்சண்யாவின் “மீசைஎன்பது வெறும்மயிர்” நாவலை நினைக்காமல் இருக்க முடியவில்லை!) காமெடியாக ஒரு கனத்த சேதி!
கனியின்நண்பா” வசனத்திலும், திலீபனின் முதிர்காதலிலும் தான் கொஞ்சம் சினிமாத்தனம் எட்டிப் பார்த்துவிட்டது. கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில், ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பில்,இசையப்பா” இளையராஜாவின் பின்னணி இசையில் காட்சிகள் உயிர்பெற்று நகர்கின்றன. பாத்திரப்பாடல் இல்லாத படத்தில் இசையின் முக்கியத்துவ மறிந்து தந்திருக்கும் இசைஞானிக்கு, இதைவிடப் பெருமை வேறில்லை!
நெய்வேலியில் தயா என்ன வேலை பார்க்கிறார் என்பது கடைசிவரை சரியாகப் புலப்படவில்லை, அதுவும் புலப்பட்டிருந்தால் இன்னும் இயல்பாக அப்பாவைப் புரிந்து கொண்டிருக்கலாம் தானே கனி?
குழந்தைப் பிறப்புக்கு, மருத்துவமனைக்குக் கொண்டுபோகாமல் –நார்மல் டெலிவரிக்காக- வீட்டிலேயே வைத்துக் கொள்வது அறிவியல் பார்வை அல்லவே? பல இடங்களில் மைக் இல்லாத குறையாக மேடைப் பேச்சு பாணியில் தயா பேசுவதைக் கொஞ்சம் இயல்பாக்கியிருக்கலாம்.
முக பாவனைகளிலும் கொஞ்சம் முன்னேறவேண்டும். ஆனால் இதெல்லாம் படத்தின் வெற்றியைப் பாதிக்கவில்லை என்பதும் உண்மை. அந்தளவிற்கு கல்வி கடைச்சரக்காய்ப் போனதைத் தோலுரிக்கும் வசனங்களும், தம்பி ராமையா பேசும் எதிர்நிலை வசனங்களும் மற்றும் சிறுவர்களின் எதார்த்த நடிப்பும் கைதட்டலை அள்ளுகின்றன!
“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளல்ல” எனும் புகழ்பெற்ற கலீல்ஜிப்ரான் கவிதையைக் கடைசியாகத் தனி அட்டையில் போட்டும், அப்துல் ரகுமானின் “புத்தகங்களே சமர்த்தாக இருங்கள், குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்” எனும் கவிதையைப் படித்துக் கொண்டிருக்கும் அப்பாவின் பின்னணி அட்டையிலும் காட்டியிருப்பது தனிச்சிறப்பு 
அம்பேத்கர் நகர் சிறுமி தன்னைத் தவறாக அடித்தவரிடம் காட்டும் அன்பு கூடுதல் நுட்பம்! சமுத்திரக் கனி சமத்துவக்கனியாகும் இடமிது!
சமுத்திரக்கனியின் மகனாகபெரிய காக்கா முட்டை” விக்னேஷ், தம்பி ராமய்யாவின் மகனாக ராகவ், நமோ நாராயணனின் மகனாக நஷாத், மற்றும் சிறுமிகள் -அம்மா கணக்கு- யுவலஷ்மி, கேப்ரியல்லா...என வரும் அனைவரும்  சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதோடு, கடைசியில் திரையரங்கை விட்டுப் போகும்போது அழவும் வைத்து விட்டார்கள்!
தேர்வு முடிவுகளால் உலகளவில் அதிகமான தற்கொலைகள் நடைபெறுவது நம் நாட்டில் தான். அதிலும் முதலிடம் தமிழ்நாடு தான் எனும் சூழலில் இந்தப் படத்திற்கு, வரிவிலக்களித்து, அனைத்துப் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர், ஆசிரியர்களையும் பார்க்கச் செய்ய வேண்டும்.

மதுக்கடைகளை மூடுவது உடனடித்தேவை, எனில் கல்விக்கடைகளை மூடுவது எதிர்கால நன்மைக்கான அவசரத்தேவை என்பதை இதைவிடச் சொல்ல முடியாது! இந்த அப்பாதான் உண்மையான கல்வித்தந்தை! 

8 கருத்துகள்:

  1. நான்கு இலட்சம் பக்கப் பார்வையாளர்களைக்
    கடந்தமைக்கும் இவ்வாண்டுக்குள்
    பத்து இலட்சம் தாண்டவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    நல்லதை ,உள்ளதை
    மட்டுமே சொல்லும்
    தங்கள் பதிவுகள் அதிகமாகப்
    பார்க்கப்படுவது மிக்க மகிழ்வளிக்கிறது

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல விமர்சனம்.....
    உங்கள் பாணியில் வலிக்காமல் அடித்தும் அணைத்தும் நீங்களும் நல்ல அப்பா என மிளிர்ந்துள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
  3. மிகவும் ஆழமான அலசல்....நாங்களும் பார்க்க வேண்டும் என்று எண்ணி இருக்கும் படம்....


    பதிலளிநீக்கு
  4. பார்த்துவிட்டோம் அப்பா திரைப்படம் சாட்டை பார்த்து மிகவும் பிடித்துப் போக இப்போது அதே ஆசிரியர் அப்பாவாக!!! பார்த்துவிட்டோம்....முதலில் ஆசிரியராக இப்படத்தில் பஅப்பாவாக இரு பொறுப்புகளும் அழகுறச் சொன்ன விதம் அருமை.உங்கள் விமர்சனம் அதை விட...

    பதிலளிநீக்கு
  5. தரமான படத்தைப் பற்றிய தங்களின் மதிப்புரை ஓர் ஆய்வுரையாக உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு திரைப்படம். பார்க்க நினைத்திருக்கும் படம். தில்லியில் திரையிடப்படவில்லை.... கபாலி அலை தான் இங்கே!

    டிவிடி கிடைத்தால் பார்க்க வேண்டும். இல்லை எனில் தொலைக்காட்சியில் போடும் வரை காத்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல விமர்சனம்.....அப்பாக்கள் பார்க்கவேண்டிய பாடம்

    பதிலளிநீக்கு
  8. உங்கள் கவிதை படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் சில கவிதைகள் இதில் கொடுத்துள்ளார்கள்.. படியங்கள்...அப்பா பாசம் கவிதைகள் தமிழ்..
    https://www.kavithaigalintamil.xyz/2021/06/amma-pasam-kavithai-in-tamil.html

    பதிலளிநீக்கு