தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

செவ்வாய், 12 ஜூலை, 2016

குருமூர்த்தியின் ஆபத்தான கட்டுரை - ச.தமிழ்ச்செல்வன்

கோவை விஜயா பதிப்பகத்தின் சார்பில் “ஜெயகாந்தன் நினைவு விருது” வழங்கப்பட்ட விழாவில் ஏற்புரை நிகழ்த்துகிறார் ச.தமிழ்ச்செல்வன்
-------------------------------------------------------------------------------- 
( மாதொரு பாகன் நாவலைத் தடைசெய்யக் கூடாது என்று நீதிமன்றம் சென்றவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர், “நெல்லுச்சோறு” உள்ளிட்ட நாற்பது நூல்களின் ஆசிரியர் மற்றும்,  “பூ”திரைப்படக் கதாசிரியர்
மற்ற பத்திரிகைகள் எல்லாம் பெருமாள்முருகன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று கருத்துரிமையை இத்தீர்ப்பு நிலைநாட்டியுள்ளதாகக் கட்டுரைகளும் தலையங்கங்களும் எழுதிக்கொண்டிருக்கும்போது தினமணி மட்டும் சங் பரிவார அறிவாளியான திரு.எஸ்.குருமூர்த்திஜியிடம் இரண்டு கட்டுரைகளை வாங்கி தொடர்ந்து நேற்றும் இன்றும் வெளியிட்டு தன்நடுநிலையை நிலை நாட்டியுள்ளது.
இத்தீர்ப்பு கொங்கு வட்டாரத்தின் ஒரு சாதி மக்களின் / பெண்களின் புண்பட்ட உணர்வுகளை கணக்கில் கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டுள்ளதாக ஜீ எழுதியுள்ளார். 2010 இல் மாதொருபாகன் வெளியாகி 2012 இல் இரண்டாம் பதிப்பும் வெளியாகி 2013 இல் மூன்றாம் பதிப்பும் வெளியாகி 2014 இல் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாகி பத்தாயிரம் பேர் வாசித்து யாருடைய மனமும் புண்படவில்லை.ஆர்.எஸ்.எஸ் திருச்செங்கோடு கிளை துவக்கி வைத்து பிறகு அவ்வட்டார சாதி அமைப்புகளும் இணைந்து கொண்டு புண்படுத்திட்டாரு புண்படுத்திட்டாரு என்று தெருத்தெருவாக நோட்டீஸ் போட்டு மக்களைக் கிளப்பி விட்ட பிறகுதான் மக்களுக்கே தெரிந்து மக்கள் புண்படத்துவங்கினார்கள். அவ்வட்டாரப் பெண்மணி ஒருவர் வரட்டிக்கல் சுற்றி விரதம் இருந்து தனக்குப் பிறந்த குழந்தையைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?என்று கண் கலங்கியதாகவும் பெருமாள் முருகனிடம் இதற்கு என்ன பதில் இருக்கிறது என்றும் இக்கதைக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான பெயிண்ட் அடித்துக் கட்டுரையை முடித்துள்ளார் குருமூர்த்திஜி.
அப்படி அந்தப்பெண்மணியைப் புண்பட வைத்ததே ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்து முன்னணியும் சாதிச்சங்கங்களும்தான்.
பெண்களின் பாலியல் மன உளைச்சல்கள் பற்றியெல்லாம் காலம் தோறும் ஆயிரமாயிரம் புத்தகங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றை இலக்கியத்தை இலக்கியமாகத்தான் மக்கள் இதுகாறும் புரிந்துகொண்டு வந்திருக்கிறார்கள். இதை வைத்து அரசியல் பண்ண வேண்டிய தேவை உள்ள சங் பரிவாரம், சாதி அமைப்புகள், இஸ்லாமியப் பேரில் இயங்கும் சில தீவிரவாத அமைப்புகள் பிறந்து தலையெடுத்த பிறகுதான் கலை இலக்கியப் பிரதிகளெல்லாம் பிரச்னையாக்கப்படுகிறது. குந்தியின் வயிற்றில் கர்ணன் பிறந்த கதையையும் பாஞ்சாலி ஐவருக்கு மனைவியாக இருந்ததையும் தினமணி 2015 ஜனவரியில் அப்போது தலையங்கத்தில் எழுதியதுபோல பாலியல் மீறல்கள் குறித்த பல புராணங்களையும் மக்கள் இலக்கியமாகத்தான் பார்த்தார்கள். மகாபாரதத்தைக் கொளுத்த வேண்டும் என்று கிளம்பவில்லை. மக்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். அன்றைய தினமணியின் அற்புதமான தலையங்கத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துப்பாருங்கள்.
உங்கள் சாதிவாத,மதவாத அரசியலுக்காக மக்களையும் எழுத்தாளர்களையும் எதிரெதிராக நிறுத்தாதீர்கள். இப்போதும் அவ்வட்டார மக்களின் புண்பட்ட மனம் குறித்துப் பேசுவதே எதற்காக?அப்பகுதி மக்கள் பாவம். வன்முறையில் ஈடுபடவில்லை. அமைதிப்பேச்சு வார்த்தைக்குத்தான் போனார்கள் என்றெல்லாம் எழுதி எதை மீண்டும்கிளப்பிவிடப் பார்க்கிறீர்கள்? பெருமாள் முருகன் சாஷ்டாங்கமாக மக்களின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்ட பிறகும் (7.1.2015 அறிக்கை) பந்த் நடத்திப் போராட்டத்தைத் தொடர்ந்தது ஏன்?அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததும் புத்தகத்தை எரித்ததும் அவருடைய வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பி ஒட்டு மொத்த ஊரையே ஒரு எளிய பேராசிரியருக்கு எதிராக திட்டமிட்டுத் திரட்டி நிறுத்தியதும் தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத மிகப்பெரிய வன்முறை..சங் பரிவாரத்தின் அகராதியில் வன்முறைக்கு வேறு அர்த்தம் இருக்கலாம்.அதை எல்லோர் மீதும் திணிக்காதீர்கள்.
மத நம்பிக்கை உள்ள மக்களையும் மதவாத அரசியலை முன்னெடுப்பவர்களையும் நாங்கள் ஒருபோதும் ஒன்றாகப் பார்ப்பதில்லை.எங்களுக்கு மத நம்பிக்கை இல்லாமலிருக்கலாம்.ஆனால் நம்பிக்கையுள்ள மக்களின் மதச் சுதந்திரத்திற்காக எங்கள் உயிரையும் கொடுப்போம். இதுதான் நாங்கள் புரிந்து கொண்டிருக்கும் மதச்சார்பின்மை.
இந்த வழக்கில் ஒருதரப்பில் எழுத்தாளரும் காலச்சுவடு பதிப்பகமும் இருந்தது. இன்னொரு தரப்பில் இருந்ததெல்லாம் யார் என்று தயவுசெய்து வாசகர்கள் பார்க்க வேண்டும். கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகியிருக்கும் தீரன் சின்னமலை பேரவைத்தலைவர் திரு.யுவராஜ், இந்து முன்னணியின் உள்ளூர் தலைவர்கள் இரண்டுபேர் மற்றும் சில சாதி அமைப்புகளின் தலைவர்கள். யார் பக்கம் அரசு நிர்வாகம் நின்றது? யார் பக்கம் குருமூர்த்திஜி நிற்கிறார்?
நீங்கள் சும்மா இருந்தால் போதும். மக்களும் எழுத்தாளர்களும் சண்டையோ சமாதானமோ சேர்ந்து பயணிப்பார்கள். வாசிப்பார்கள். விவாதிப்பார்கள். ஒருவருக்கொருவர் மன்னிப்பும் கேட்டுக்கொள்வார்கள். பரஸ்பரம் காலத்தில் புரிந்துகொள்வார்கள். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டது போல காலம் இருதரப்பிலும் கசப்பை குறைக்கும். சமாதானம் உண்டாகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாத, மதவாத அமைப்புகள் ஏற்படுத்திய காயங்களையும் தலைக்குனிவையும் மறந்து இத்தீர்ப்பைப் பற்றிக்கொண்டு மீண்டும் உயிர்த்தெழ முயற்சிக்கும் பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளனை மீண்டும் சாகடிக்காதீர்கள். மக்களையும் எழுத்தாளர்களையும் நிம்மதியாக வாழ விடுங்கள். தீர்ப்பை மதியுங்கள். அதை அவமதிப்பதுபோலக் கட்டுரைகள் எழுதாதீர்கள் எனப் பணிவோடு வேண்டுகிறோம்.
படைப்பாளியின் கருத்து சுதந்திரமும் சமூகப்பொறுப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை தமிழ்ப் படைப்பாளிகள் ஆழமாகப் புரிந்துதான் வைத்திருக்கிறோம். சாதி-மதவாத அரசியல்வாதிகள் வந்து பஞ்சாயத்துப் பண்ண வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் தமிழ்ப்படைப்பாளிகள் இல்லை.
கட்டுரையாளர் -
. தமிழ்ச்செல்வன், 
மாநிலத் தலைவர்                                                       
 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். 
நன்றி -தமிழ்இந்து(10-07-16), தீக்கதிர்(11-07-16) நாளிதழ்கள் .                                                          --------------------------------------------------------------------------------------------------------
இக்கட்டுரை எனக்கு முழுவதும் உடன்பாடானது என்பதால் ஓரெழுத்தையும் மாற்றாமல் அப்படியே வெளியிட்டிருக்கிறேன் - நா.முத்துநிலவன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------- 

5 கருத்துகள்:

 1. செமை விளாசல்
  அதுகளுக்கு புரியாது...

  மனுதர்மத்தில் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது ..
  உண்மையில் எல்லோரையும் விட தாழ்த்தப் பட்டவள் பெண் தானே.. மனுதர்மப்படி ..

  தொடர்க

  முதல் போணி இங்கே நான் தான் ..
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. அப்போ ஏனைய மதங்களில் பெண்கள் போற்றப்பட்டுள்ளார்களா ?
   மனு தர்மம் மனிதனால் எழுத பட்டது . ஆனால் கடவுளால் வழங்க பட்ட்து என்று கருதபப்டும் ஆபிர காமிய மதங்களில் பெண்களின் நிலை என்ன ?

   நீக்கு
  2. எல்லா மதங்களுமே பெண்களை தாழ்த்தியுள்ளது. மத சட்டத்தை பாவித்தே பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் பெண்களை சட்டபூர்வமாக அடக்கி ஒடுக்கி மூடிவைத்தள்ளன.

   நீக்கு
 2. நல்ல கட்டுரை... பகிர்வுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு