காலங்களில் அவன் வசந்தம் (கண்ணதாசன் பிறந்தநாள் கட்டுரை)


கண்ணதாசன் 24-06-1927இல் பிறந்தார், இவரது பாடல்களுக்குப் பொருத்தமான இசையை வழங்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், சரியாக ஓராண்டுக் கழிந்து, 24-06-1928இல் பிறந்தார். பாடல் பிறந்தபின் இசைபிறந்தது! இருவருக்கும் நம் இதய நன்றியை இசைவரிகளால் அர்ப்பணிப்போம். 
ஆனாலும் இது கண்ணதாசனனைப் பற்றி மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை. எம்.எஸ்.வியின் இசைபற்றி எழுத எனக்கு ஞானம் போதாது. என்றாலும், பொருத்தமான இன்னொரு சூழலில் அவர்பற்றியும் எழுதுவேன் என்னும் உறுதியோடு, இப்போது கண்ணதாசனை வாசிக்க அழைக்கிறேன்.
-----------------------------------------------------------------------
 புதுக்கோட்டையை அடுத்த ராமச்சந்திரபுரத்தில் “திருமகள்“ பத்திரிகையில் சேர்ந்தபோது, அவனுக்கு வயது பதினேழு!
  அங்கு அவனது பெயரைக் கேட்டபோது, சட்டென்று தோன்றிய ஒரு கற்பனையான புனைபெயரைச் சொல்லி வைத்தான். 
  பின்னாளில் தமிழ்த்திரைப்படப் பாடல்உலகில் முப்பதாண்டுக் காலம் முதலிடத்தில் இருக்கப் போவது “கண்ணதாசன்”எனும் அந்தப் பெயர்தான் என்பது முத்தையாவுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் அது நடந்தது 1944ஆம் ஆண்டில்!

     இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, அவன் உச்சப் புகழில் உட்கார்ந்திருந்த போது, ஒருநாள் ஏதோ பேசுவதற்காக, தினமணிக்கதிர் பத்திரிகைக்குப் பேசினான்.
     அப்போது அதன் ஆசிரியராக இருந்த “சாவி“யே பேசினார்.
     பேசவந்ததைப் பேசிமுடித்த பிறகு, “நமக்கு ஏதாவது எழுதுங்களேன்?“ என்று கேட்கிறார் சாவி. “ஓ! எழுதுகிறேனே!” என்கிறான் இவன்.
     “இப்போதே டைட்டில் சொல்லுங்கள், விளம்பரம் செய்துவிடலாம்” என்கிறார் சாவி. என்ன தோன்றியதோ தெரியவில்லை, சட்டென்று “அர்த்தமுள்ள இந்துமதம்” என்று கூறிவிட்டான்.
     என்ன எழுதப் போகிறோம் என்று திட்டமிடாமலே கூறிவைத்த தலைப்பில் பல பாகங்கள் எழுதி, அவை நூலாக வெளிவந்து, இன்றுவரை வெளிவந்த தமிழ்க்கட்டுரை நூல்களில் மிக அதிகப் பிரதிகள் விற்றுக்கொண்டிருக்கும் நூலாக அர்த்தமுள்ள இந்து மதமே விளங்குகிறது. ஐம்பது பதிப்புக்கும் மேல் விற்றுக் கொண்டே இருக்கிறது. (இந்த 2014இல் இது நூறு பதிப்பைத் தாண்டியிருக்கலாம்)
     ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு, முதற்பதிப்பு விற்கவே மூன்றாண்டுக்கும் மேலாகும் தமிழ்ச்சூழலில்,  முப்பது ஆண்டுகளுக்குள் ஐம்பது பதிப்புகளை – ஐம்பது ஆண்டுக்குள் நூறு பதிப்புகள் வரை – தொட்டிருக்கும் அதிசயம், அவனது தமிழின் அழகின் அடையாளம். எவ்வளவு பெரிய விஷயத்தையும் சின்ன வார்த்தைகளுக்குள் செதுக்கிவிடும் சிறப்பு.
     கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் உள்ளிட்ட  எழுத்துகளை, வெறும் மதப்பிரச்சாரமாக அல்ல, வாழ்க்கை அனுபவவிளக்காக- ஆற்றாமைக்கு ஓர் ஆறுதல் மொழியாகவே தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
இதிகாசங்களில் வருகிறவர்கள் மனிதர்கள்தான். ராமன் என்ற மனிதன் தன் நடத்தையால் தெய்வமானான். ராவணன் என்ற மனிதன் தன் நடத்தையால் மிருகமானான்“ என்பன போன்ற எளிய விளக்கங்களில் கண்ணதாசன் எனும் மனிதன் படிக்காத மேதையாக ஏற்கப்பட்டான். 
ராமனைக் கூட மனிதனாக அவதரித்த திருமால் என்னும் அளவில் ஏற்கும் மதவாதிகள், அரக்கனான ராவணனைக் மனிதன் என்று கண்ணதாசன் சொல்வதை ஏற்பார்களா தெரியவில்லை. இதுபோலும் விளக்கங்களைத்தான் மதம் கடந்த மனிதவாழ்வின் நுட்ப விளக்கம் என்கிறேன்
கைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா தொழில்நுட்பக் கல்லூரியில்
24-06-2014 அன்று நடந்த கண்ணதாசன் விழாவில்..
கல்லூரித் தலைவர் கவிஞர் கதிரேசன், தாளாளர் பி.எஸ்.கருப்பையா,
முதல்வர் கலியபெருமாள் ஆகியோருடன்...நா.மு.
(நன்றி தினமணி செய்தியாளர் இரா.மோகன்ராம்,
புகைப்படம் - டீலக்ஸ் ஞானசேகர், புதுக்கோட்டை)

----------------------------------------------
நீங்கள் நடுத்தரவயதுக்காரர் எனில், சென்னை வானொலி வாரம் ஓரிருநாள் இரவு பத்து மணிக்கு ஒலிபரப்பும் பழைய தமிழ்த்திரைப்படப் பாடல்களைக் கேட்டது உண்மையெனில், உங்களால் அந்நேரத்து அழுகையை அடக்க முடியவில்லை எனில், நிச்சயமாக நீங்கள் கேட்ட பாடல்கள் கண்ணதாசன் பாடல்கள்தாம் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை. அவன் நிம்மதியில்லாமல் எழுதிய பாடல்களையே நாம் நமது நிம்மதிக்காகவும் நிம்மதியாவும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்!
சுற்றியிருந்தவர்களால், அவன் மனம் இற்றுக் கிடந்தபோது, பல்லவிகள் அவனிடம் சரணமாகி விழுந்தன... அவன் அழுதுகொண்டே எழுதினான். அப்படி அவன் அழுது, மூன்று தலைமுறை இதயங்களில் மூச்சுக்காற்றாக வெளிவந்த பாடல்தான் –
“எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றதே,
எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றதே
கையில் காசுஇருந்தால் எப்படியும் அனுபவிப்பான், எல்லார்க்கும் உதவி செய்வான், எவரையும் எளிதில் நம்பி ஏமாந்து போவதே அவனது வாடிக்கையான வாழ்க்கை. சுய ஆற்றாமை மேலெழும்போது சொற்கள் சுதியோடு வந்து சூடாக விழும்.
     “எல்லோரும் நலம்வாழ நான்பாடுவேன் நான்வாழ யார் பாடுவார்?
     “கலைமகள் கைப்பொருளே! உன்னைக் கவனிக்க ஆளில்லையோ?” என்பன போலும் வரிகள், கதைப்பாத்திரத்தோடு ஒட்டிவந்து விழுந்த இவனது கண்ணீர்தான்.
   அவனது வாழ்க்கை முழுவதும் அவலமும்,ஆனந்தமும் அவனே வரவழைத்துக் கொண்ட அனுபவங்கள்தாம்! ஆனந்த உலகின் உச்சத்தில் இருந்தபோது எழுதிய வரிகள் – “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”  என்று எழுதியது போலவே இன்றும் நிற்கிறானே!
   இன்றைய தேதியில் காதலிப்போரும் ஏற்கெனவே காதலித்தோரும்கூட “காதல் சிறகைக் காற்றினில் விரித்து, வான வீதியில் பறக்க வா!(பாலும் பழமும்), “காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்“(பாவ மன்னிப்பு), வரிகளைக் கேட்டுக் கறுகிறுத்து நிற்பது இன்றும் என்றும் சாதாரணம், அல்லது, காதலில் தோல்வியுற்றோர் – இதுதானே பெரும்பான்மை!
     “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
 பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?“ என்று கேட்டு விம்முவதையும், “பூ உறங்குது பொழுதும் உறங்குது, நீ உறங்கவில்லை நிலவே!” என விசும்புவதையும் தலைமுறை தாண்டியும் அனுபவித்து அழுவதையும் அவனது தமிழின் வெற்றியென்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?
     இன்றைக்கும் உலகின் எந்த மூலையிலும் தமிழர்களின் திருமணத்தின்போது, ஒலிபெருக்கி வைக்கப்பட்டால், அங்கு –
     “வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ” என முதலில் வந்து வரவேற்பது காலத்தை வென்ற இந்தக் கவிஞன்தானே?
     கவிஞரை நேரடியாக அறியாத இளைய தலைமுறைகூட, பள்ளியிறுதி வகுப்பையோ கல்லூரி றுதியாண்டையோ விட்டுப்பிரியும்போது, விடைபேற்றுவிழா (Sent off function)  நடைபெறும்போது அவர்களின் அழுகையை அதிகப்படுத்துவதும் இவன்தானே? 
              “பசுமை நிறைந்த நினைவுகளே!
பாடித் திரிந்த பறவைகளே!
              பழகிக் களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம் - நாம் பிரிந்துசெல்கின்றோம்!
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ” 
எனும் வரிகளில்அழாதவர்கள் சேர்ந்து வாழத் தகுதியற்றவர்களே!
எட்டாம் வகுப்பு வரையே படித்த ஒருவன், ஏராளமான ஆய்வாளர்க்கு டாக்டர் பட்டங்களைப் பெற ஆய்வுப்பொருள் ஆனதற்குக் காரணம் அவனது வளமான தமிழும், நலமான சொல்அழகுமே! அவன் தமிழில் பாதி பழந்தமிழின்  பரம்பரை வரவு எனில், மீதி அவனது அனுபவ நெருக்குதல்!
யார்யாரையோ நம்பிக் கையெழுத்துப் போட்டுவிட்டு, கடனில் மூழ்கி ஜப்தி நோட்டீஸ் வந்துவிட்டது, ஏழை முத்தையா இருபத்திரண்டு வயதில் செட்டிநாட்டு வழக்கப்படி லட்சாதிபதித் தம்பதியர்க்கு சுவீகாரப் புத்திரனாகி நாராயணன் ஆனபிறகும் இந்த நிலை!
பாவ மன்னிப்பு படத்திற்குப் பாடல் கேட்டார்கள். கவிஞன் அழுதுகொண்டே எழுதினான் – அனுபவத் தமிழ் சிரித்த்து –
“சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்“ கோர்ட் நோட்டீஸ் வந்துவிட்டது. சொத்தெல்லாம் போய்விட்டது, சுற்றி இருந்தவர்கள் அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகளானார்கள். பாலும் பழமும் படப்பாடல் பிறந்தது –
“போனால் போகட்டும் போடா -இந்த
பூமியில் நிலையாய் வாழ்பவர் யாரடா?”  என்றாலும் நம்பிக்கையை விடாமல் தமிழ் இருக்கும் தைரியத்தில் அவன் மற்றவர்க்கு ஆறுதலானான்!
“மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா வாழ்கையில் நடுக்கமா?  
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு
இவ் வரிகளில் ஆறுதல் பெற்று மீண்டும் முயன்று வென்றவர் வாலிபோல் ஏராளம்!
     எதிலும் வெறித்தனமான ஈடுபாடு, அதே வேகத்தில் குறைகண்டு வெறுப்பும் மாறுபாடும் வேறுஇடமும் அவனுக்குத் தவறாகவே படவில்லை.
     “தலைவர் மாறுவார், தர்பார் மாறும், தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
    அண்ணா,காமராசர்,இந்திரா,கருணாநிதி,எம்ஜிஆர் என யார் யாரையெல்லாம்    விண்ணுக்குப் புகழ்ந்தானோ அவர்களை மறுத்து வெளியேறும்போது மண்ணுக்குள் தள்ளி மறம் பாடிவிடுவான்
     அவ்வளவு பெரிய அற்புதக் கவிஞனுக்கு அரசியல் தெளிவும் அழுத்தமான கொள்கைப் பிடிப்பும் இல்லாமல் போனது தமிழின் நல்லகாலம் தான்!
       “உதவாத பாடல்பல உணராதார் மேற்பாடி
    ஓய்ந்தனையே பாழும் மனமே!– என்று தன்னையே நொந்து எழுதினாலும், இன்றைய கவிஞர்கள் பலரும் கற்றுக்கொள்வதற்கு அவனிடம் ஏராளம்உண்டு!
     “வனவாசம்“முன்னுரையில் கவிஞனே கூறியதுபோல, “எப்படி வாழவேண்டும்  என்பதற்கு இது நூல் அல்ல, எப்படி வாழக்கூடாது என்பதற்கும் இதுவே வழிகாட்டி” என்று கொண்டாலும் கூட, அனுபவச் சுரங்கத்தில் எதை எடுத்துக் கொள்வது என்பது அவரவர்க்குத் தெரிந்திருக்க வேண்டும் –
     அது, சுரங்கம் என்பதை முதலில் உணர வேண்டும். 
        ------------நன்றி “தினமணி“ நாளிதழ் ---------

நன்றி -(1) தினமணி நாளிதழுக்கு இந்தக் கட்டுரையை 
சுமார் பத்தாண்டுக்கு முன்பு வெளியிட்டமைக்காக, 

நன்றி-(2) தினமணியில் வந்த கட்டுரைகளை , 
“நினைக்கப்பட வேண்டியவர்கள்“ எனும் தலைப்பில் 
பெரு நூலாகத் தொகுத்து அதில் 
இந்த எனது கட்டுரையையும் சேர்த்து வெளியிட்ட 
INTERNATIONAL TAMIL LANGUAGE FOUNDATION -
WOODRIDGE, ILLINOIS, USA-JAN.2002.

நன்றி-(3) இந்த நம் தளத்தில் இக்கட்டுரை மீள்பதிவாயினும் மீண்டும் படிக்க வந்த உங்களுக்கு.. 
கண்ணதாசனின் பாடல்களை மட்டுமல்ல, 
அவனைப் பற்றிய கட்டுரைகளையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம், படிக்கலாம்தானே?
--------------------------------------------------------------

-------------------------------------------- 

7 கருத்துகள்:

  1. மீள் பதிவாக இருந்திட்ட போதிலும், கவிஞர் கண்ணதாசனின் கவிதைச் சாறை தந்திடும் போதினில் யாருக்கு அய்யா கசக்கும்? பொதுவுடைமை கொள்கையர் என்ற போதிலும், அந்த அர்த்தமுள்ள இந்துமதத்தின் தமிழ் நடையை பாராட்டிய உங்கள் தமிழ் உணர்வினுக்கு எனது பாராட்டுகள். சென்னையிலிருந்து தவழ்ந்து வரும், அந்த இரவு பத்துமணி பாடல்களுக்காகவே தவம் கிடந்தது, இன்றும் பசுமை நிறைந்த நினைவுகளே அய்யா. தொடர்ந்து வலைப்பக்கம் வந்திடுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. காலத்தால் என்றும் அழியாத நம் கவிஞர் கண்ணதாஸன் அவர்கள் பற்றி மிக அழகான + அருமையான கட்டுரைத் தொகுப்பு.

    மீள் பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி, ஐயா.

    பதிலளிநீக்கு
  3. நான் அதிகம் நேசித்த நூல்களில் ஒன்று அர்த்தமுள்ள இந்து மதம் தொகுப்பு. மனதுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அத்தொகுப்பு தந்ததை நான் உணர்ந்துள்ளேன். நான் நிரந்தரமானவன் என்று பெருமையுடன் கூறிய கவிஞனுக்கு அருமையான புகழஞ்சலி. மறுபதிவாயினும் அருமை. எக்காலத்திற்கும் பொருந்தும் பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அவர் அவரது படைப்புகளால் நிரந்தரமானவர். எந்த நிலையிலும் அவருக்கோ அவரது படைப்புகளுக்கோ மரணமில்லை.
    மீள்பதிவாக இருந்தாலும் எழுத்துகள் காட்சிகளோடு இணைந்தே மனதை வருடுகின்றனவே அய்யா. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. காலங்கள் கடந்தும் வாழும் நம் கவிஞருக்கு அழகான புகழஞ்சலி ஐயா...

    பதிலளிநீக்கு
  6. மீள் பதிவாக இருந்தாலும் அருமையான கட்டுரை. அவரது பாடல்கள் மூலம் என்றும் உயிர் வாழ்வார் கண்ணதாசன்.....

    பதிலளிநீக்கு
  7. வெகுச் சிறப்பான கட்டுரை என்றால் மிகையல்ல. காலங்களில் அவன் வசந்தம்தான். இன்றும் வாழ்கின்றார் பலரது இதயத்திலும்!! இனியும் வாழ்வார்! அருமை..

    பதிலளிநீக்கு