ஆசிரியர்கள் – பள்ளியிலிருக்கும் பெற்றோர்கள், பெற்றோர்கள் – வீட்டிலிருக்கும் ஆசிரியர்கள்!

சென்னை அண்ணாநகர் SBIOA பள்ளி
கல்விக்கருத்தரங்கில் எனது பேச்சு 31-05-2016

--------------------------------
ஆசிரியர்களுக்கான இக்கருத்தரங்கில்,
சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள இப்பள்ளிகளின் ஆசிரியர்கள் -சுமார் 1200பேர் வந்திருந்தனர்
அதில் எனது பேச்சை அச்சிட்டு அனைவர்க்கும் வழங்க முன்கூட்டியே கேட்டிருந்தபடி இதோ...
(அப்புறம் கொஞ்சம் கூடக்குறையப் பேசினேன்... அவர்கள் கேட்ட கேள்விபதில் பகுதியும் சுவையானதாக அமைந்தது.
அந்த யூட்யூப் இணைப்புக் கிடைத்ததும் அதனை நம் நண்பர்கள் பார்க்கத் தருவேன் - நா.மு.)
"உங்கள் குழந்தைகள், உங்களின் குழந்தைகள் அல்ல
அவர்கள் எதிர்கால வாழ்வின் பிள்ளைகள்!
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்;
ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை
 அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம் -
உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனென்றால் அவர்களுக்கென்று
அழகான சிந்தனைகள் உண்டு
 அவர்களின் சரீரத்தை நீங்கள்                                                                                                      வீட்டுக்குள் வைத்திருக்கலாம் - ஆன்மாவை அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா
வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில்கூட
சென்றடைய முடியாது 

நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்;
ஆனால் அவர்களை உங்களைபோல ஆக்கிவிடாதீர்கள்
வாழ்க்கை பின்னோக்கியோ
நேற்றைக்கோ செல்வதில்லை
நீங்கள் உங்கள் பிள்ளைகள் எனும்
வாழும் அம்புகள் அனுப்பப்படும் வில் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்!" 
 -- கலீல் ஜிப்ரான்.
இது பெற்றோர்களுக்குச் சொல்லப்பட்டதே என்றாலும் ஆசிரியர்களுக்கும் பொருத்தமுடையதே! ஏனெனில், நம் பிள்ளைகள் பகலில் பெற்றோரிடம் இருக்கும் நேரத்தை விடவும் ஆசிரியர்களிடம்தானே அதிக நெரம் இருக்கிறார்கள். அதோடு, 
 ஆசிரியர்கள் – பள்ளியிலிருக்கும் பெற்றோர்கள்          
பெற்றோர்கள் – வீட்டிலிருக்கும் ஆசிரியர்கள்,  என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணர்ந்துகொண்டால் பிள்ளைகள் எக்காலத்திலும் திசைமாறிப் போகமாட்டார்கள். ஏனெனில் நாம்தான் பள்ளிநேரம், பாடநேரம், விளையாட்டு நேரம், சாப்பாட்டு நேரம், தூங்கும் நேரம், என்று பிரித்து, அப்படியே குழந்தைகளையும் பழக்க நினைக்கிறோமே தவிர, குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு இதுபோலும் நேரப்பிரிவு கிடையாது.
குழந்தைக்கு எல்லா நேரமும் கற்கும் நேரமே! ஆக, பாடம் நடத்தும் நேரம் தவிரவும், ஆசிரியர்களின் பேச்சு, செயல், நடை உடை பாவனை அனைத்திலிருந்தும் குழந்தை கற்றுக்கொள்கிறது என்பது முக்கியமாக ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
அன்புதான் கல்வியின் அடித்தளம்!  பாவ்லோ பிரையரே 1997இல் இறப்பதற்கு சற்று முன்னதாக சொன்னார்- அன்பில்லாமல் கல்வியினை என்னால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது, நான் அன்பினைஉணர்கிறேன், பகிர்ந்தளிக்க நினைக்கிறேன், அதனாலேதான் நான் கல்வியாளனாக இருக்கிறேன்” 
ஆசிரியரைப் பிடித்தால் அவர் நடத்தும் பாடத்தைப் பிடிக்கும்,                                                 ஆசிரியரைப் பிடிக்காவிட்டால் அந்தப் பாடத்தையும் பிடிக்காமல் போகும் இது மாணவ உளவியல்! எனவே தான், தன் அறிவால் மாணவரை அணுகுவதைவிட, அன்பால் அணுகும் ஆசிரியரே வெற்றிபெறுகிறார்!                                                                                                              

எனக்கு நேர்ந்த அனுபவம் – புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில், எனது ஆசிரியப் பணியின் -34ஆம்ஆண்டு- நிறைவாண்டில் என் பாடத்தில் ஒருமாணவன் தோல்வியடைந்துவிட்டான். மற்றப்பாடங்களில் வெற்றிபெற்றிருந்த அவன் என்பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தது கண்டு என் சக ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்காக அவன் வெட்கப்பட்டு ஊரைவிட்டே ஓடி, பெற்றோரிடம்கூடப் பேசாமல், என்னைத் தொடர்புகொண்டான். நான் கேட்டேன் “என் பாடம் தவிர மற்ற நான்கு பாடங்களில் வெற்றிபெற்ற நீ ஏன் ஊரைவிட்டுப் போனாய்? மீண்டும் எழுதினால் நான் சொல்லித்தர மாட்டேனா?” அதற்கு அவன் சொன்ன பதில் என் நெஞ்சைத் தொட்டது –   “அய்யா, அரைப்பரிச்சையில எல்லாப் பாடத்துலயும் ஃபெயிலாப்போன எனக்கு நீங்கதான்யா ஆறுதல் சொன்னீங்க, எங்க அப்பா அம்மாவப் பாத்துப் பேசி, என்ன எப்பிடியாவது பள்ளிக்கொடத்துக்கு வர வைக்க முயற்சி எடுத்திங்க! அப்படி முயற்சியெடுத்த உங்க பாடத்துல நா ஃபெயிலாப் போயி, உங்களுக்குக் கெட்ட பேர் ஏற்படுத்திட்டேன்யா! அதான்யா எனக்கு வேதனையா இருக்கு! மத்தவுங்க பாடங்கள்ல ஃபெயிலாயி, உங்க பாடத்துல மட்டும் பாஸாயிருந்தாக் கூட சந்தோசமா இருந்திருக்கும்யா, இப்ப நா எப்படிய்யா உங்க முகத்துல முழிக்க?” என்று அழுதான்! இதில் அவன் “மற்ற பாடம்” என்பதை “மத்தவுங்க”பாடம் என்று சொன்னதை, மிக முக்கியமான உளவியலாகக் கருதுகிறேன்!  
                                                                                                                    
 நான் நெகிழ்ந்து போனேன். அவனிடம் மீண்டும் கேட்டேன். “மற்ற தேர்வுகளை நல்லா எழுதியிருந்த நீ, தமிழில் மட்டும் எப்படிப்பா தோல்வி அடைந்தாய்? என்ன ஆச்சு? என்னிடம் உண்மையைச் சொல்லாம்தானே?” என்றவுடன் அவன் மீண்டும் அழத் தொடங்கிவிட்டான்! “இல்லிங்கய்யா.. முதல்நாள் தமிழ்ப் பரிச்சைங்கிறதால தேர்வுபயத்துல தெரிஞ்ச கேள்விகளக் கூட சரியா எழுதாம விட்டுட்டேன்.. அடுத்த நாள் எவ்வளவோ முயற்சிபண்ணியும் சரியா எழுதமுடியல! நீங்க கேட்டப்ப, எழுதியிருக்கேன்“னு என்று சொல்லிட்டு, அடுத்தடுத்த பரிச்சைகளை பயம் தெளிஞ்சி எழுதினதால அதுல எல்லாம் பாஸாயிட்டேன். திரும்ப எழுதி நா பாஸாயி, இங்கயே வேலை தேடிக்குவேன்யா…” என்றான்.

அதன்பிறகு அவன் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. நான் நம்புகிறேன்… ஆசிரியரைப் பிடித்தால் பாடமும் பிடிக்கும் என்று நான் சொன்னது இந்த உளவியலைத்தான். இந்த ஒரு பாடத் தேர்வில் அவன் தோல்வியடைந்திருக்கலாம், இனி அவன், வாழ்க்கையில் முட்டிமோதிப் பிழைத்துக்கொள்வான் எனும் நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது! இந்த நம்பிக்கையை விதைத்த வகையில் நான் வெற்றிபெற்று விட்டேன். நூறு சத வெற்றிகள் தராத மகிழ்ச்சியை இந்த ஒரு தோல்வி எனக்குத் தந்தது!

 பத்தாம் வகுப்பு ஆசிரியரையே தேர்வெழுதச் சொன்னால்…?   
இந்தக் கேள்வியைப் பத்தாம்வகுப்புத் தமிழாசிரியராகிய என்முன் வைத்தால் என் பதில் –“நான் நிச்சயமாகத் தோல்வியடைந்துவிடுவேன்” என்பதாகத்தான் இருக்கும்! “நான், இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதினால், கணக்கில் 05மதி்ப்பெண் எடுப்பேன், அறிவியலில் 45%, ஆங்கிலத்தில் 50%, வரலாற்றில் 65%, நான் நடத்தும் தமிழ்ப்பாடத்தில் 90 மதிப்பெண்தான் என்னால் பெறமுடியும்” என்பதே என் பதிலாக இருக்கும்!(தமிழில் முழு மதிப்பெண் பெறத் தகுதியான மொழியறிவு இருந்தும் எழுதும் வேகம் இந்த வயதில் இவ்வளவுதான் இருக்கும் என்பதே என் கருத்து. வயதும், எழுதும் வேகமும் முக்கியமல்லவா?)

இப்படி ஒரு அபத்தமான கேள்வியை ஆசிரியர்முன் வைக்கக் காரணம், மாணவர்களின் பன்முக ஆற்றல் எந்தப் பாட ஆசிரியருக்கும் இருக்காது என்பதை உணர்த்தவே! (புதிதாக டிஇடி தேர்வெழுதி வரும் ஆசிரியர்க்கு வேண்டுமானால் ஒருசில ஆண்டுவரை பன்முக ஆற்றல் இருக்கலாம்…) ஆக, “எல்லாம் தெரிந்தவர் எவரும் இருக்க முடியாது என்ற சூழலில், மாணவரிடம் அதை எதிர்பார்க்கும் ஆசிரியர் அவர்களின் கற்றல் குறை பெரிதல்ல என்பதைப் புரிந்து, அவர்களிடம் இருக்கும் ஆற்றலைக் கண்டு அதை வளர்க்க உதவுவதே முதல்நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

 “நமது இன்றைய கல்வி, தேர்வுமுறை மாணவர் திறனைச் சரியாக அளவிடுவதில் தோற்றுவிட்டது” என, ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சொன்னதை ஒவ்வோர் ஆசிரியரும் நினைவில் கொள்ளவேண்டும். அவர் கேட்டார் - “நாம் என்ன செய்கிறோம்? 
யானை, கரடி, குரங்கு, சிறுத்தை, மான் எனப் பல்வேறு திறன் கொண்ட விலங்குகளை ஒரே வரிசையில் நிற்கவைத்து ஓட்டப்பந்தயம் விடுகிறோம்! சிறுத்தை முதலில் வந்துவிட்டதாக அதைப் பாராட்டுகிறோம்! கடைசியாக வந்த, யானை தோல்வியடைந்துவிட்டது என்று அதற்குத் தகுதியின்மைச் சான்று தருகிறோம்! 
இது சரிதானா?”

ஓடுவது மட்டுமே திறமை என்ற அளவீடு வேறுபட்ட விலங்குகளுக்குச் சரிதானா? மரம்ஏற விட்டால் குரங்குதான் முதல்மதிப்பெண் எடுக்கும். மரங்களை முறித்து அடுக்கும் வேலைதந்தால் யானை மட்டும்தானே வெற்றிபெறும்?  எனில், நமது கல்விமுறை இப்படித்தானே இருக்கிறது? ஆம்! எத்தனை யானைகளை நம் ஊர்களின் பேருந்து நிலையங்களில் பிச்சையெடுக்க வைத்துக்கொண்டிருக்கிறோம்? 
இது சரிதானா?

எனில், மாணவர்களின் பன்முகத் திறமையைக் கண்டு, அதில் எந்தத் திறன் அவரிடம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, அவருக்கும் உணர்த்தி, அதைவளர்க்கும் வழியைச் சொல்லித்தருவதுதான் ஒரு நல்ல ஆசிரியர் செய்ய வேண்டிய பணியாக நான் கருதுகிறேன். பள்ளியில் மட்டும்தான் அனைத்துப் பாடத்திலும் தோல்வியடையும் மாணவரைப் பார்க்க முடியும். தோல்வியென்று சொல்லப் பள்ளிக்கூடம் எதற்கு?

கல்வியே பெண்ணுக்குச் சிறந்த சீதனம்!                                            
“பெண்களின் கைகளில் இருக்கும் கரண்டிகளைப் பிடுங்கிக்கொண்டு, புத்தகங்களைக் கொடுங்கள்! பெண்ணுரிமையை அவர்களே எடுத்துக் கொள்வார்கள்!” என்று தந்தை பெரியார் எளிமையாகச் சொன்னார்.
முதலில் உங்கள் பெண்களுக்குக் கல்வி அளியுங்கள். பிறகு என்னென்ன  சீர்திருத்தங்கள் தங்களுக்குத் தேவை என்பதை அவர்களே கூறுவார்கள் என்று சுவாமிவிவேகானந்தர் கூறினார். விவேகானந்தரின் இந்த அறிவுரையை, 15 வயது சிறுமி மலாலா, ஐ.நா. சபையில் உணர்ச்சிகரமாக முழங்கினாரே?
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றது யார்? புத்தகங்களல்லவா? ஆனால், இன்னமும் இந்தியாவில், கணவன் மனைவி இருவரும் ஐ.ஏ.எஸ்.படிப்புப் படித்து ஆட்சிப்பணியில் இருந்தாலும், குடும்பஅட்டை குடும்பத்தின் தலைவராகப் படம்போடப் படுவது பெண்ணுக்கல்ல, ஆணுக்குத் தானே?
படிப்பு விளையாட்டு பாட்டு ஓவியம் பேச்சு கட்டுரை என பள்ளிகளில் முதல்பரிசுகளை அள்ளிக்குவித்த பெண், திருமணமான பிறகு எப்படி ஏன் யாரால் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்படுகிறாள்? இதுதான் நம் சமூகம்!
நம்முடைய தமிழ்ச்சமூகத்தின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் சாதி ஒளிந்திருப்பதுபோலவே பெண்ணடிமைத்தனமும் பொதுப்புத்தியில் மிக ஆழமாகவே பதிந்து கிடக்கிறது! பெண்களின் மண்டையில் அது இன்னும் ஆழமாக –யுகம் யுகமான- கதை,காவியம்,புராணங்கள் தந்த பரிசு அது!
இந்தப் பாலினப் பாகுபாடு, நமது சமூகத்தில் விதைக்கப்படடு, பள்ளிகளின் வகுப்பறைகளில் தொடர்வதே நமது நாட்டு வளர்ச்சிக்கும் தடையாகும்!  இதை ஆசிரியர்கள் உணர்ந்து பெண்குழந்தைகளுக்குப் பிரத்தியேக முயற்சியெடுத்து அவர்களுக்கான கற்பித்தலில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகமிக அவசியம்.
சமூக நீதிக்கான கல்வியில் கூடுதல்கவனம்                                
நம் சமூகத்தில் உள்ள பாலின சமத்துவமற்ற நிலையே ஆண்பெண் இருவருக்குமான சமூகத்திலும் உள்ளது என்பதும் முக்கியமாக ஆசிரியர்களின் கவனத்திற்குரியதாகும். பொருளாதார ரீதியாகவும் சமூகநிலையிலும் இதில் கவனமாயிருப்பது அவசியம்.தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் இருந்தே பலவற்றையும் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன என்பதால், பள்ளியில் உள்ள சமத்துவத்தை அவர்தம் வீடுகளில் பார்க்க இயலாது என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு மிகவும் பிடித்ததுஎது?                                                                            
குழந்தைக்கு மிகவும் பிடித்தது விளையாட்டா? இனிப்பா? நண்பர்களா? அம்மாவா? மிஸ்ஸா? என்றால் அனைத்தும்தான். ஆனால் இவர்கள் அனைவரிடமும் குழந்தை மிகவும் விரும்புவது “புதியன காணல்” எனும் ஆர்வமே! பழைய செய்தியோ புதிய செய்தியோ புதிய முறையில் சொல்லப்படுவதைத்தான் குழந்தைகள் விரும்புவார்கள்.
சிலநேரம் குழந்தைகள் பேசுவதைப் பார்த்து “இந்தக் குழந்தை எதிர்த்துப் பேசுகிறதே?” என்று கோவமடைவது பழைய கற்பித்தல் முறையில் உள்ள ஆசிரியர்க்கு இயல்பு! ஆனால் அது, எதிர்த்துப் பேசுவதல்ல … சுதந்திரமாகப் பேசுவது, அப்படிப் பேசக் குழந்தைக்கு உரிமை உண்டு என்று அனுமதித்து, அதில் ஏதும் தவறிருந்தால் சரி செய்யலாமே அன்றி மாற்றுக் கருத்தைச் சொல்ல அனுமதிக்கும் வகுப்பில்தான் சுதந்திரமான கற்றல் நிகழும்.

குழந்தை சொல்வது பொய் அல்ல, போலச் செய்தல்!           என்ன இந்தக் குழந்தை இப்படிப் பொய்சொல்கிறதே! என்று வியப்படைவார்கள் சிலர். ஆனால், பெரும்பாலான குழந்தைகள் பொய்சொல்ல விரும்பிச் சொல்வதில்லை! வேறுவிதமாக மாற்றிச் சொல்லும் புதிய முயற்சி. அதில் உள்ள தவறைக் குழந்தைக்கு உணர்த்துவதும் ஆசிரியரின் கடமையே!  
“அறஞ்செய விரும்பு என்பது குழந்தைக்கான  இலக்கியமல்ல” என்பார் கல்வியாளர் ச.மாடசாமி. இதுவும் எனக்குச் சரியென்றே படுகிறது. 
                                                                                                                                              
புதிய ஆசிரியரின் புதுமையான கற்பித்தல் நெறிகள்-                                              
பழைய பாடல் ஒன்று – கல்வியின் சிறப்பைச் சொல்லும்போது,“வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது வேந்த ராலும் கொள்ளத்தான் ஆகாது, கொடுத்தாலும் குறையாது..” என்று வரும் இதில் கொடுத்தாலும் குறையாது என்பதோடு, கொடுக்கக் கொடுக்க வளர்வது கல்வி என்பது சொல்லப்படவில்லை! மாணவர்களிடம் கேளுங்கள்! மாணவர்க்கு நமது அறிவைக் கொடுக்கக் கொடுக்க நம் அறிவும் வளர்வதை நாமே கண்கூடாகப் பார்க்க முடியும் 

கேள்வியின் நாயகர் மாணவரே!                                    இன்றைய பள்ளிகளில் ஆசிரியர் கேட்கும் வினா அறிவினா என்றும், மாணவரின் வினா அறியாவினா என்றும் இலக்கணம் சொல்கிறது. இதை மாற்றி யோசிக்க வேண்டும். 3வயது முதலான குழந்தைகளின் உலகமே கேள்விகளால் ஆனாது. அவர்கள் கேட்க, பெற்றோரும் ஆசிரியரும் பதில்களைச் சொல்ல அதுவே கற்றலின் நியாயம்.

ஆனால், துரதிருஷ்டமாக, மாணவர்களைக் கேள்விகேட்கும் கல்விமுறையே இன்று உள்ளது. இதை மாற்றியாக வேண்டும். முன்னரே சொன்னது போல, பாடத்திட்டம் எல்லாம் நாமாக வைத்துக்கொண்டதுதான். குழந்தைகளின் கேள்விகள் எந்தப் பாடத்திட்டத்திலும் அடங்காதவை! குழந்தைளைக் கேள்வி கேட்கப் பழக்க வேண்டும்! உரிமயாக, தயக்கம் ஏதுமின்றி அவர்களைக் கேள்வி கேட்க அனுமதிக்கும் கல்விமுறையே சிறப்பானதாகும். இதில் அதிர்ச்சியடையும் ஆசிரியர் ஒவ்வொருவரையும்கல்வியாளர் இரா.நடராசன் அவர்கள் எழுதிய   ஆயிஷா குறுநாவலை படிக்கச் சொல்ல வேண்டும். அதன் பின் எந்த ஆசிரியரும் குழந்தைகளின் தாயாகி விடுவார்! கேள்விகளால் உலகம் புதியதாக மாறும்! 

இதோ இந்தக் கவிதையைப் பாருங்கள் –
 “சார்
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.
சார்
உடனே மற்றொருவன். . .
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.
 
பழ. புகழேந்தி
(“
கரும்பலகையில் எழுதாதவை”)
ஐம்பது விழுக்காடு ஆசிரியராகவும், ஐம்பது விழுக்காடு மாணவராகவும் இருக்க வேண்டும் --  என்ற பாவ்லோ பிரைரே  கருத்தை உள்வாங்கிக் கொண்டால் மாணவரோடு ஆசிரியரும் சேர்ந்து கற்கலாம். கற்பது கற்கண்டே என்பதறிந்து, கல்வி இருவருக்குமே இனிக்கும்.
“ஆசிரியர்கள் கல்வி கற்றுத் தரும் முறை மாற்றப்பட வேண்டும். இவர்கள் மாணவர்களுக்கு ஸ்டேண்ட் போட்டு சைக்கிள் ஓட்ட சொல்லித் தருகிறார்கள். மாறாக, அவனைசைக்கிள் ஓட்டச் சொல்லி, அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டு உடன் ஓடிக் கொண்டே சொல்லித் தருபவர்களாக ஆசிரியர்கள் மாற வேண்டும்” -- பேராசிரியர் . மாடசாமி
 “ஆசிரியர்களுக்கு நூறு கண்கள் வேண்டும். அப்போதுதான் ஆற்றலுள்ளவர்களைத் கண்டுபிடித்து ஆசிரியர்கள் ஊக்குவிக்க முடியும். ‘நல்ல மார்க் வாங்கினால், ஒரு பத்துபேர் ஆசிரியர் கண்ணுக்குத் தெரிவார்கள். விளையாட்டில் முன் நிற்கும் ஒரு ஐந்து பேர், பாடக்கூடியவர்கள், வரையக் கூடியவர்கள் என்று ஒரு ஐந்து பேர் தெரிவார்கள். இந்தஇருபது பேர்களைத் தவிர மிச்சமிருக்கும் நாற்பது மாணவர்கள் வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. அதற்கு உரிய வாய்ப்பினைத் தருவது மிகவும் முக்கியம். வகுப்பிலிருக்கும்படிக்கக் கூடியவன், பாடக் கூடியவன், ஓடக் கூடியவனைத் தவிர விடுபட்டவர்களை, மற்ற ஆற்றல்கள் பெற்றிருந்தும் வெளிச்சத்திற்கு வரக் கூசுபவர்களை இனம் கண்டு,அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்குத் தேவையான கண்களும், காதுகளும் இருக்க வேண்டும்.” என்று பேராசிரியர்மாடசாமி தனது எனக்குரிய இடம் எங்கே” நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கல்வியில் மறதி என்பது என்ன? ஈடுபாடு இல்லாத கற்றலே மறதி என் வகுப்பில் கடவுள்வாழ்த்துப் பாடலை மனப்பாடமாகச் சொல்ல முடியாமல் சுமார் ஒருவாரம் பலபாடு பட்டும் முடியாமல் திகைத்து நின்றவன் பெரியசாமி. எட்டாம்வகுப்பு மாணவன். அதேவாரம் நடந்த பள்ளி இலக்கியமன்றத் தொடக்கவிழாவில் இசைப்போட்டியில் முதல் பரிசுபெற்று அதை என்னிடம் பெருமையோடு கொண்டுவந்து காட்டினான். நானும் அவன் பரிசுபெற்ற பாடலை வகுப்பில் பாடிக்காட்டச் சொன்னேன்-அப்போது பிரபலமாக இருந்த “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” பாடலை மிக அருமையாகப் பாடினான் (அந்தப் பாடலின் வரிகள் 80க்கு மேல்!) அப்போதுதான் எனக்கு  -
இஷ்டப்பட்டுப் படித்தால் 80வரியும் மனப்பாடமாகும்,                                                 கஷ்டப்பட்டுப் படித்தால் 4வரிகூட மனப்பாடமாகாது! எனும் உண்மை புரிந்தது –
“குழந்தைகளுக்கு தங்களது அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்ட தொலைக்காட்சியில் கண்டதை, ரசித்ததை வகுப்பறையில் திறந்த மனதோடு கலந்துரையாட நேரம் ஒதுக்கி இருக்கிறோமா நாம்? நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை தினசரிகளில் வாசித்து, செய்திகளை விமர்சிக்க வீட்டிலோ பள்ளியிலோ அவர்களுக்கு எத்தனை பேர் வாய்ப்புகள் தருகிறோம்? –ஆயிஷா இரா.நடராசன்(06-10-2015 திஇந்து-தமிழ்) இதைத்தான் நான் எனது கட்டுரை ஒன்றில் தெரிவித்திருந்தேன் – பார்க்க “பாடத்திட்டத்தில் ஊடகம்” 01-01-2009 தினமணி நாளிதழ்க் கட்டுரை எனது வலைப்பக்கம் பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2014/01/blog-post_21.html

நிறைவாக,
மாதவி, கோவலன் மீது கொண்ட காதல் மிக உயர்ந்தது என்பதற்கான ஆதாரமாக நான் நினைப்பது, அவள் கோவலனுக்கு எழுதிய கடிதத்தை ஒரு சொல்லைக் கூட மாற்றாமல் அப்படியே தன் பெற்றோர்க்கு அனுப்பினான் கோவலன் என்று இளங்கோவடிகள் சொல்கிறார்!
இப்போதைய காதலர் கடிதம் ஏதும் அப்படி இருக்குமானால் அதுவே உயர்ந்த காதல்

அதுபோல இப்போது ஒரு கடிதம்-
ஆப்ரகாம் லிங்கன் தன் மகனின் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தோடு நிறைவு செய்கிறேன் – அது நம் மகனின் ஆசிரியர்களுக்கு நாம் அனுப்பக் கூடிய கடிதமாகவே இப்போதும் பொருத்தமாக உள்ளதால்…
நன்றியுடன் - http://pandianpandi.blogspot.com/2015/02/abiraham-lincon-letter-to-his-sons-teacher.html வலைப்பக்கத்திலிருந்து... (கூகுளில் தேடக்கிடைத்தது!)

“அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள்.
ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்    

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது , கோழைத்தனம் என புரியவையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடிலா அதிசயத்தை ரசிக்கவும் கற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும்,சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும் ,பசுமையான மலை யடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என அறிவுறுத்துங்கள் .எனினும் உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள் ..

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள் ;.

போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.

அவனை கனிவாக நடத்துங்கள்.
அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள்.

இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள்.

அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரஹாம் லிங்கன்.
------------------------------------------------- நன்றி வணக்கம். ------------------------------  

4 கருத்துகள்:

  1. அனைத்துக் கருத்துகளும் மதிப்பிடமுடியாத அளவிற்கு மிக மிக மதிப்பிற்குரிய கருத்துகள்!

    முதலில் தலைப்பே அருமை! குழந்தைகளுக்கு எல்லா நேரமும் கற்றல் நேரமே!!

    பத்தாம்வகுப்பு ஆசிரியருக்குத் தேர்வு வைத்தால்...ஆஹா அருமையான இரு பத்திகள் அதிலும் இரண்டாவது பத்தி நச்!!! அது போன்று மாடசாமி ஐயா அவர்களின் கருத்துகள் அனைத்தும் மிக மிக அருமையான கருத்துகள்.

    ஆசிரியரைப் பிடித்துவிட்டால் அந்தப் பாடம் மாணவர்க்கு எளிதுதான். என்ற உளவியல் கருத்து 100 சதவிகிதம் சரியே! ஒரு பாடம் மாணவர்களின் மனதில் பதிவது என்பது அந்த ஆசிரியரின் திறமையில்தான் இருக்கின்றது. எப்படி ஒரு தாய் தன் அன்பு முழுவதையும் அளித்து தன் குழந்தைக்கு உணவு ஊட்டிவிடும் போது நல்ல கருத்துகளைக் கதைகளின் மூலம் குழந்தைகளின் மனதில் பதிய வைக்கிறாளோ அது போலவே ஆசிரியர்களும் இருக்க வேண்டும்...
    தங்களின் அனுபவம் அந்த மாணவன் சொன்னது உண்மை ஆனால் பல ஆசிரியர்களும் இப்படி இல்லையே! மாணவர்களின் கற்றல் குறைபாட்டைக் கவனிப்பது இல்லையே. நல்ல மனிதனாக, இந்தச் சமுதாயத்தின் நல்ல அங்கமாகக் கொண்டுவரும் முயற்சி இல்லையே. தாங்கள் ஒரு மிகச் சிறந்த ஆசிரியர் என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது ஐயா/அண்ணா! பெருமைப்படுகின்றோம்.

    அப்ரஹாம் லிங்கனின் கடிதத்தை நாங்கள் பள்ளிக் காலத்திலேயே வாசித்ததுண்டு. இப்போதும் அது பொருந்துகிறது என்ற உங்கள் கருத்தும்தான் எங்களுக்கும்.

    மனதிற்கு மிகவும் நிறைவான ஒரு பதிவு மட்டுமல்ல இது எல்லா ஆசிரியர் மற்றும் பெற்றோர்களிடத்தும் இருக்க வேண்டிய ஒரு பதிவாகக் கருதுகின்றோம்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கருத்துக்கள்! குறிப்பாக பெயில் ஆன மாணவன் சொன்னது மனதை தொட்டது!

    பதிலளிநீக்கு
  3. ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் உறவு நல்லபடியாக அமைந்தால், கல்வி கற்கண்டாக, கற்பவை கனிச்சுவையாக அமையுமென்னும் கருத்தினை அடிநாதமாகக் கொண்ட தங்களின் சொற்பொழிவு அருமை.
    ஆசிரியர் பள்ளியிலிருக்கும் பெற்றோராக மாறக்கூட எண்பது விழுக்காடு வாய்ப்பிருக்கிறது.
    ஆனால் பெற்றோர் வீட்டிலிருக்கும் ஆசிரியராக மாறும் வாய்ப்புகள் எனக்கென்னவோ மிக அரிதானதாகவேத் தெரிகிறது.
    பெரும்பான்மை கிராமங்களில் வாழும் பெற்றோர் விவசாயப் பொருளாதாரத்தையே நம்பி இருப்பவர்கள். அது பொய்த்துப் போகும்போது தங்களின் வயிற்றுப்பாட்டிற்கும் பிள்ளைகளின் ஆவை தேவைகளுக்கும் பொருளீட்டப் பிழைப்புத் தேடுதலிலும், தேடிய பிழைப்பைத் தக்க வைத்துக் கொள்வதிலுமே அவர்களின் நோக்கும் போக்கும் கரைந்து போகும்போது அவர்களால் வீட்டில் ஆசிரியர்களாக இருக்க முடியவில்லையே என்னும் எதார்த்தத்தை அத்தனை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியவில்லையே அய்யா.

    ஆபிரகாம் லிங்கனுடைய ஆசிரியருக்கான மடலும் அதைத்தானே காட்டுகிறது.
    பொருளாதாரச் சமநிலை உருவாக வேண்டும். நமது எண்ணம் ஈடேற அதை நோக்கி நமது பயணம் அமைய வேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. புனிதமாக நேசிக்கப் படக்கூடிய தொழில் ஆசிரியர் தொழில். மாணவர்களை எப்படிக் கையாளவேண்டும் என்கின்ற அற்புதங்களையும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். "எந்தக் குழந்தையும் நல்ல. குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே"

    பதிலளிநீக்கு