நள்ளிரவில் ஸ்டேட் வங்கி செய்தது குளறுபடியா? அடாவடியா?

   


இன்று விடிகாலை 2.58க்கு எனது வங்கிக் கணக்கிலிருந்து பெருந்தொகை எடுக்கப்பட்டு, வெறும் 25,000 ரூபாய் மட்டுமே இருப்பில் இருப்பதாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. (அதை நான் காலையில்தான் பார்த்தேன் என்பது வேறுசெய்தி) நள்ளிரவில் இப்படி ஒரு செய்தி வந்தால்-பார்த்திருந்தால்- பிறகு தூக்கம் வருமா?
 
   “இது என்னடா புதுக்குழப்பம்.. என்று அருகில் இருக்கும் ஏ.டி.எம். சென்று பண இருப்பைப் பார்த்தால் அதே செய்தி பதிவாகியிருந்தது!
  விழுந்தடித்து வங்கிக் கிளைக்கு ஒடினால் அங்குப் பெருங்கூட்டம் என்னைவிடவும் பெருந்தொகை எடுக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட கண்ணீரும் கம்பலையுமாய் புலம்பிக்கொண்டு, யாரிடம் கேட்பது என்றும் தெரியாமல் திரிந்த வண்ணமிருந்தனர்..இன்று சனிக்கிழமை! அண்மையில்தான் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை என வந்த செய்தி நினைவுக்கு வந்தது.
     அதற்குள் “யாரோ நேத்து ராத்திரி ஸ்டேட் பேங்க் பணத்தை ஆட்டையப் போட்டாய்ங்களாம்.. விடிகாலையிலயே பேங்க் வாசல் ல எஸ்.பி.யோட போலிசு கூட்டமா இருந்துச்சு.. என்னான்னு தெரியல..என்று அருகில் இருந்தவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்க ஏரியாவே கலவரமாகிவிட்டது...! கூட்டம் சேர்ந்துவிட்டது!
     நண்பர் கவிஞர் செல்வா மற்றும் சிலருக்குத் தொடர்புகொண்டு, கணக்கு வைத்திருப்பவர்களை உடனே நேரில் அங்கு வரச்சொல்லி நானும் அருகில் இருந்தவர்களிடம் விசாரிக்கத் தொடங்கினேன்...
      வங்கியில் கொள்ளை நடந்ததா?
     வங்கியே கொள்ளை அடித்ததா?
     என் குழப்பம் அதிகமாகிவிட்டது!
  எல்லாரிடமிருந்தும் திரட்டிய செய்தியில் ஓர் ஒற்றுமை இருந்ததைப் பார்த்தேன். ரூ.25,000 மட்டும் இருப்பில் வைத்துவிட்டு, மீதித் தொகை முழுவதும் எடுக்கப்பட்டிருந்ததே அந்த ஒற்றுமை!
      இதில் ஏதோ ஒரு செய்தி கிடைத்தது போல இருந்தது!
     சிறிது நேரம் கழித்து தகவல் பலகை ஒன்றைக் கொண்டு வந்து வங்கிஊழியர் வைக்கவும், செய்தியாளர் நண்பர் திரு.மோகன்ராம் அவர்களைத் தொடர்பு கொண்டு நான் கேட்டறிந்த தகவலும் ஒன்றாக இருந்தது. கிடைத்த தகவல் இதுதான்-
“சம்பளதாரர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தை அதிக வட்டி கொடுப்பதற்காக MOD என்ற (FIXED DEPOSIT) தங்களது பெயரிலேயே மாற்றி சேமிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் தங்களது கணக்கில் உள்ளது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. (MODயில்) உள்ள தொகையை எப்போது வேண்டுமானாலும் வங்கியிலோ, ATM மூலமாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
முதன்மை மேலாளர்,
பாரத ஸ்டேட் வங்கி,
புதுக்கோட்டை
(தேதி 13-2-2016, ஆனாலும் போடவில்லை)
--------------------
உடனே நான் எனது ஏடிஎம் அட்டையைக் கொண்டு அங்கேயே பணம் எடுத்துப் பார்த்தேன். ரூ.40,000வரை எடுக்க முடிந்தது.. (ஏற்கெனவே குறுஞ்செய்தி வழி வந்த கடைசி இருப்பு ரூ.25,000 தான்! இப்போதும் என் கணக்கில் பணம் இருந்தும் “0“என்றே தகவல்சீட்டு வருகிறது)

அப்போதுதான் வங்கியின் நடைமுறை தெளிவானது.
இப்போது எனக்குள்ள சில கேள்விகள் –
(1)  என் கணக்கில் உள்ள தொகையை நான் எப்படிக் கையாள்வது என்பதை வங்கியே முடிவுசெய்யலாமா?
(2) அப்படியே –அதிக வட்டிகிடைக்கும்(?)-என்றாலும் அதனைப் பற்றி வாடிக்கையாளர்க்குத் தெரிவிக்காமல் இப்படி அடாவடி மாற்றத்தை வங்கியே மேற்கொள்வது சரிதானா?
(3) இதற்கென்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பக்கூட முடியாத அளவிற்கு அப்படி என்ன அவசரம்?
(4) கணக்கு மாற்றிய தொகைக்கான பற்றுச்சீட்டு எதையும் வாடிக்கையாளர்க்குத் தரவேண்டியதில்லையா?
(5)   நள்ளிரவில் –அதுவும் சனிஞாயிறு விடுமுறை தொடங்கிய நள்ளிரவில்- இப்படிச் செய்தால் வயதான வாடிக்கையாளர் குறிப்பாக எழுதப்படிக்கத் தெரியாத நிலைமை என்னவாகும்? (வங்கியின் இன்றைய செயல்பாட்டால் அப்படி ஏதும் நடந்திருந்தால் வங்கி இதற்குப் பொறுப்பேற்குமா) 
இது சரியா?

இதையெல்லாம் யாரிடம் கேட்பது?
மிஸ்டர் மோடி எந்த நாட்டில் இருக்கிறாரோ தெரியலயே?
-------------------------------------------------- 

30 கருத்துகள்:

  1. உங்கள் ஆதங்கம் சரியே....வாடிக்கையாளர்களின் பணத்தை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய யார் கொடுத்தது அதிகாரம்?
    கல்விக்கடனுக்கு புகைப்படத்துடன் விளம்பரம் செய்யும் இவர்கள்...முதலைகளின் முன்னே மண்டியிடுவார்கள்.
    அதிலும் இந்த அரசுடைமை வங்கிகளும்..அதில் வேலை பார்க்கும் வானத்திலிருந்து குதித்தவர்களும் வாடிக்கையாளர்களை கேவலமாக மதிக்கும் பார்வை..?
    இவ்வளவு நடந்திருக்கு ஒரு ஆபிஸராச்சும் வந்து பதில் சொன்னார்களா? சொல்ல மாட்டார்கள்..இந்திய நாட்டின் வங்கிசேவைகள் முழுவதும் திருத்தமைக்கப்பட வேண்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வங்கி ஊழியர் நண்பர்கள் தமக்கே தெரியாமல் இது நடந்ததாகச் சொல்வதால், நடப்பு மேலிடத்துக்கு மட்டுமே வெளிச்சம் !

      நீக்கு
    2. வங்கிகள் எல்லாமே பொறுக்கிகள்தான்.வேண்டுமென்றே மேனேஜரின் கையொப்பமிடாமல் ஒரு தேர்வூ எழுதுவதற்கான கட்டணத்திற்காக கொடுக்கப்பட்ட டிமான்ட் டிராஃப்ட் செல்லாமல் போனதால் தேர்வூ எழுத முடியவில்லை என்று சென்று கேட்டதற்கு சாதிப்பெயரைச் சொல்லித் திட்டுவதாக பொய்புகார் கொடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று மிரட்டிய பொதுத்துறை வங்கியூம் உண்டு.
      அந்த "வேண்டுமென்றே செல்லாததாக" கொடுக்கப்பட்ட டிமான்ட் டிராஃப்ட்டை ஈபேயில் (Ebay) ஏலம் விடுவதாக இருக்கிறேன்.

      நீக்கு
  2. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நமது அனுமதியில்லாமல் அவர்கள் எந்த ஒரு மாற்றத்தையும் நமது கணக்கில் செய்யக்கூடாது. வங்கிகளின் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிக்கும் மக்கள் குறை தீர்க்கும் வங்கிகளுக்கான ombudsman-னிடம் புகார் செய்யலாம். இது மிகப் பெரிய தவறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த விவரம் தெரியாமல் என்னைப் போன்றோர் இருப்பதுதான் இவர்களைப் போன்றோரின் பலம்! அந்த விவரத்தைச் சொல்லுங்களேன் நண்பரே!

      நீக்கு
  3. நம் பணத்தில் வங்கி ஓடுகிறது...இப்பொது நம்மை ஓட விடுவது மிக பெரிய தவறு...

    நம் பணத்தை வைத்து வியாபாரம் நடத்த சொன்னால்...நம்மை வைத்து வியாபாரம் செய்வது மிக மிக தவறான செயல்...

    ஒட்டு மெத்தமாக பதிக்க பட்ட அனைவரும், வேறு வங்கியில் கணக்கை தொடங்க முயற்சி செய்யலாம்...இது அவர்களுக்கு ( SBI) நெருக்கடியை தரும்....தனியார் வங்கி வேண்டாம்....க.பகுத்தறிவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியார் வங்கி வேண்டாம் என்று நம்பி வரும் நம்மைப் போன்றவர்க்கு இவர்கள் செய்யும் குளறுபடி, தனியாரை நோக்கி விரட்டுவதற்கான சதியன்றி வேறென்ன தோழரே! இதுவும் மேலிடத் தனியார்ஆதரவுக் கொடுக்குகளின் யோசனையாகவே தோன்றுகிறது..

      நீக்கு
  4. தவறு தவறுதான். ஆனால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோத முடியாதுதான், முணகக் கூடவா முடியாது. நான் செய்திருப்பது அதைத்தான். வாய்ப்புகள் வந்தால் மோதி வெல்லவும் செய்வோம். மக்களைவிடப் பெரிய அதிகாரம் நாடாளுமன்றத்திற்கும் கிடையாதே!

      நீக்கு
  5. முதலில் ,இது நல்லதுக்குத்தான் என்று சொல்வார்கள் ,நாளை ,கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய தொகை என்று நம்மைக் கேட்காமல் பிடிக்கக்கூடும் !
    ஏனென்றால் ,பல மாதங்களுக்கு முன்பே நான் கிரெடிட் கார்டை வேண்டாமென்று சொல்லி ,பயன்படுத்துவதே இல்லை ,பலமுறை கூறியும் கேன்சல் செய்யாமல் ,மாதாமாதம் ஸ்டேட்மென்ட்டுடன் செலுத்த வேண்டிய தொகை என்று அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள் !
    என்ன நிர்வாகமோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய கார்டு இருந்து செயல்படாமல் இருந்தால் அதற்கும் பணம் பிடிப்பார்கள் பகவானே! சொல்லி கேன்சல் பண்ண வேண்டும். நம் அறியாமை, சோம்பல் இரண்டும் அவர்களின் வளர் செல்வம்!

      நீக்கு

  6. இதேபோல் எனது ஸ்டேட் பாங்க் வங்கிக் கணக்கிலும் நிகழ்ந்தது - 2 ஆண்டு முன்பே ! இணையம் மூலம் கணக்கை சரிபார்த்துக் கொண்டேன். அடுத்த நாள், வங்கி சென்று உறுதிசெய்தும் வந்தேன். அதற்கு சில நாட்கள் பின்னர் வங்கியில் 1500 ரூபாய் எடுக்க முயன்ற போது, "போதிய பணம் இல்லை" என்ற சீட்டு வந்து அதிர்ச்சி கொடுத்தது. நான் இன்னும் வெவ்வேறு இரு ஏ.டி.எம்களில் முயன்று பார்த்தேன். அதே தகவல்தான் கிடைத்தது. வீட்டிற்கு வந்து இணையம் மூலம் பார்த்த போது, ஒவ்வொரு முறை நான் பணம் எடுக்க முயன்றதற்கும் ஒருமுறை என மூன்று முறை 17 ரூபாய் என் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது - அதற்கான காரணம்: "வைப்பு இல்லாமல் பணம் எடுத்ததற்கான அபராதமாம் !" . உண்மையில் நடந்தது என்ன என்றால், என்னுடைய கணக்கில் வெறும் 700 ரூபாய் இருப்பு வைத்து, அவர்களே மற்ற பணத்தை அந்த அதிக வட்டிக்கான கணக்கில் மாற்றியுள்ளனர். இது போன்று பலமுறை இருந்தும், பணம் எடுக்கும் போது ப்ரச்சனை நேர்ந்ததில்லை. ஒருமுறை இதுபோல் ஆனது. மறு
    ​ நாள் நேரடியாய் வங்கி சென்று, மேலாளரிடம் புகார் செய்து, கடிதம் எழுதிக் கொடுத்து ஒருவழியாய் ​நிலைமை சரிசெய்தேன். இதையெல்லாம் எங்கே போய் சொல்வது ஐயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றும் நாளையும் வங்கி விடுமுறை அய்யா. எப்படி நாள் நட்சததிரம் பார்த்து முகூர்த்தம் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.. எனினும் எப்படியோ அது வெளியில் வந்தே தீரும்தானே? வந்திருக்கிறது.. தங்கள் கருத்திற்கும் அனுபவப் பகிர்விற்கும் நன்றி

      நீக்கு
  7. அவர்களாகவே ஒரு முடிவு எடுத்து அனைவரையும் படுத்துகிறார்கள்.... அதிலும் இந்த வங்கி படுத்தும் பாடு கொஞ்சம் அதிகமே! மற்ற வங்கிகள் வேறு விதமாய் படுத்துவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! ஐசிஐசிஐ படுத்துகிறது என்றுதான் நான் இதற்கு மாறினேன்.. இவர்கள் படுத்துவது போதும் போதுமென்றிருக்கிறது.. இது மொனாபொலியாகி விட்டதால் வந்த வினை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  8. நாமெல்லாம தனியார் மயத்துக்கு எதிராகவும்
    அரசுத்துறைக்கு ஆதரவாகவும்
    போராடிக் கொண்டிருப்பவர்கள்
    இது போன்ற நிகழ்வுகள் நம் சிந்தனையில்
    தடுமாற்றத்தினை ஏற்படுத்தி போவது நிஜம்

    (நம் பக்கமும் வந்து செல்லலாமே
    அதில் புதுகைப் பதிவர்களின் பின்னூட்டங்களை
    அதிகம் எதிர்பார்த்தேன்... )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா. ஊரெல்லாம் இவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறோம் நாம்..இவர்களோ தனியார்மயத்தை நோக்கி நம்மைத் தள்ளப்பார்க்கிறார்கள்..என்ன செய்ய? (2)நான் (அவ்வப்போது) வருகிறேனே அய்யா...

      நீக்கு
  9. திரு. மோடி அவர்களிடம் கேட்டு, அவர் சொல்லும் பதிலையும் பதிவு செய்யுங்கள் ஐயா...!
    (நடந்துட்டாலும்?!)

    பதிலளிநீக்கு
  10. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஓன்று தான். உடனே போய் வங்கி கணக்கை close செய்து விட்டு வேறு வங்கியில் தொடங்க வேண்டியது. நாட்டில் தடுக்கி விழுத்தால் ஒரு பேங்க் இருக்கிறது. மொத்தமாய் பாதிக்க பட்ட எல்லோரும் அப்படி செய்தால் தான் அவங்களுக்கு புத்தி வரும்.

    பதிலளிநீக்கு
  11. Sir

    Bank staffs are working very hard with low staff. Pl don't critic their behavior.

    They need only every year pay raise with low work

    Seshan

    பதிலளிநீக்கு
  12. அதிக வட்டி தரும் பிக்சட் திட்டத்தில் இருந்து நீங்கள் பணம் எடுக்கும் போது அதற்கு அபதார தொகை என்று ஒரு சிறு தொகையை வங்கி எடுத்துக் கொள்ளும். அதை பற்றி விரிவாக சொல்லமாட்டார்கள். இந்த திட்டம் ஆரம்பித்த நாளிலே நீங்கள் பணம் எடுத்ததால் உங்களிடம் அந்த தொகையை எடுக்காமல் விட்டு இருக்கும் ஆனால் இப்ப நீங்கள் எடுக்காமல் பல மாதங்களுக்கு பின் எடுக்கும் போது உங்களுக்கு தெரியாமலே அந்த திட்டத்திற்கு இப்படிபட்ட விதிமுறைகளை சைலாண்டாக அமுல் படுத்தி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை கறந்துவிடுவார்கள். வங்கி ஒன்றும் சும்மாவே அதிக வட்டி கொடுத்துவிடமாட்டார்கள் அதில் மறைமுகமாக கேட்ச் வைத்து இருப்பார்கள்

    பதிலளிநீக்கு
  13. உங்களின் பணம் பாதுகாப்பாக இருக்க என்னிடம் டெபாசிட் பண்னிவையுங்கள் அதன் பிறகு நீங்கள் நினைத்தாலும் மீண்டும் எடுக்க முடியாதபடி மிக பாதுகாப்பாக என்னிடம் இருக்கும் முடிந்தால் உங்களின் புதுகை நண்பர்களின் பணத்தையும் என்னிடம் கொடுத்து பாதுகாப்பாக வைக்க சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  14. மிகவும் கண்டனத்திற்கு உரிய செயல் ஐயா
    ஆனால் என் போன்றோருக்கு பாதிப்பே இல்லை
    பணமிருந்தால்தானே ....

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் முத்துநிலவன் !
    உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் பணத்தை வேறொரு கணக்கில் அதிக வட்டி தருவதாக இருந்தாலும் வைப்பில் இடுவது என்பது மிகப் பெரிய தவறு .இதற்கு நீங்கள் முறைப்பாடு செய்யமுடியும் .எங்கு என்று விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் .உங்களுக்கு மன உளைச்சல் ஒரு பக்கம்.நேர விரயம் மறுபக்கம் .பணம் மாற்றிய கணக்கு எப்படியானது என தெரிந்துகொள்ளுங்கள் . தேவை இல்லை என்றால் எழுத்து மூலம் நடவடிக்கை எடுக்க கேளுங்கள் .
    அவர்கள் உண்மைகள் என்னிடம் கொஞ்சம் கள்ளப் பணம் இருக்கு வைப்பில் இட தரலாமா?

    பதிலளிநீக்கு
  16. ஆசிரியர் அவர்களின் ஆதங்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். பொதுவாக வங்கிகளில் சேவைக் கட்டணம், கடன் சம்பந்தப்பட்ட வசூல் மற்றும் பொதுவான அபராதம் போன்றவைகளுக்கு முன்னறிவிப்பு செய்வது கிடையாது. உங்கள் கணக்கிலும், மற்றவர்கள் கணக்கிலும், ஒரு பெருந்தொகையை அந்த வங்கி, ஒப்புதலும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி MOD கணக்கில் மாற்றியது தவறுதான். இந்த தவறு மற்ற கிளைகளில் நடந்ததாகத் தெரியவில்லை. புதுக்கோட்டை கிளையில் மட்டுமே நடந்து இருப்பதால், அந்த கிளையில் கம்ப்ப்யூட்டர் புரோகிராமில் ஏதோ மாற்றம் செய்தபோது, ஏற்பட்ட தவறு என்றே நினைக்க வேண்டி உள்ளது. இந்த இரண்டுநாள் விடுமுறையில் பாதிக்கப்பட்டவர்கள், நாளை (திங்கள் கிழமை) வங்கியில் வந்து சொல்லும்போதுதான் முழுவிவரம் அறியக் கூடும்.

    (ஆன் லைனில் விகடன் இதழிலும் இந்த செய்தியை வெளியிட்டு இருப்பதைக் காணலாம்)

    பதிலளிநீக்கு
  17. அதிர்ச்சியாக இருக்கிறது ஐயா..ஏதோ நம்மை போன்றோர்கள் படித்து இருப்பதால் நாம் இது குறித்து விசாரித்து செயல்பட இயலும்..ஆனால் படிக்காத மக்கள்,கல்வி கடன்,விவசாயி போன்றவர்கள் என்ன செய்வார்கள்..??
    இப்படி செய்தால் எப்படி முதலீடு செய்வது எப்படி சேமிப்பது..??

    சிந்திக்க வேண்டிய ஒன்று தான் ஐயா..இதற்கு தீர்வு இல்லையா..??

    பதிலளிநீக்கு
  18. இன்று காலை உங்களுக்கும் மோட் ஒ எம் ஜி
    யப்பா மாநில வங்கிப் புண்ணியவான்களா விட்டா ஐ.சி.ஐ.சி.ஐ பிச்சை வாங்கணும் போலவே...
    பாத்துப் பண்ணுங்கப்பா ..
    யாரப்பா கேட்டு இப்படி பண்றீங்க?
    ரொம்பத் தப்புப்பா ...
    மோட் கதையை நான் நம்பலை ....உண்மையில் என்னப்பா பண்ணீங்க...?
    ஆடிட்டில் வெளியில் வந்துடும்..
    ஐ ஆம் வைடிங் ..

    பதிலளிநீக்கு
  19. அடேங்கப்பா.. சேமிப்பு கணக்கில் 25000 உள்ளதா? அதே தவறு. தானே. அதை தூக்கி .. பங்கு சந்தையில் போட்டு டபிள் பண்ணி இருக்க வேண்டாமா?
    என்னதான் நடக்குது இங்கே.?

    பதிலளிநீக்கு
  20. இப்படியுமா???!!! அதிதாரம் உண்டு வங்கிக்கு? வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் அனுமதி இல்லாமல்? என்னவோ நடக்குற மாதிரி மணம் தெரியுதே! குட்டு வெளியில் வராமல் போய்விடுமா என்ன? ஆனால் மக்கள் அப்பாவிகள்! யாருமே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முறையீடு செய்யவில்லையா? அநியாயம்.

    பதிலளிநீக்கு
  21. ஆசிரியர் அவர்களே இறுதியில் இந்த பிரச்சினை என்ன ஆயிற்று என்று நீங்கள் சொல்லவே இல்லை.

    பதிலளிநீக்கு