விடுபட்ட காதல் கவிதைகள் (1)

அவசரப்பட்டு என் இலக்கியத் தங்கையரோ, மகள்களோ என்னைத் திட்டிவிட வேண்டாம், “60வயதிலும் காதல்வரும்“ என்று நான் சமாதானமெல்லாம் சொல்லப்போவதில்லை, 
இவை எனது 20 வயதில் 1976இல் திருவையாறு அரசர் கல்லூரியில் படித்தபோது எழுதி பின்னர் எனது “புதிய மரபுகள்“தொகுப்பு 1993இல் முதல்பதிப்பு வெளிவந்தபோது, “வேண்டாம்“ என்று விட்ட கவிதைகள். 
2014இல் இரண்டாம் பதிப்பு வந்தபோதும் சேர்க்கவில்லை. இப்போது “கவிதையின் கதை“ நூலுக்காகப் புத்தகத் தேடலின்போது பார்த்து, “என் பழைய பனை ஓலை“களைப் பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டதால் அதனைப் பகிர்ந்துகொள்கிறேன்... புரிந்துகொள்வீர்கள் எனும் நம்பிக்கையில். 

இவை ஒவ்வொன்றாக கொஞ்ச(ம்) வரும்.... (1)

நெஞ்சிலே நிறைந்த வஞ்சி
நேரிலே விரைந்து வா என்று
எஞ்சிலா நிறைந்த காத லாலே- எனைக்
கெஞ்சினாள், கடத்துவதோ நாளே?

கொஞ்சநாள் பிரிந்ததால் பின்
கொஞ்சவே நினைந்தென் உள்ளம்
பஞ்சிலே நெருப்பெனக்க ரிந்து – பிரிவு
அஞ்சியே உதிர்த்ததிந்த சிந்து

ஊரெலாம் உறங்கஓசை
ஒன்றிலா தடங்க எண்ணப்
போரெலாம் அடங்கி உள்ளம் தூங்க –கனாத்
தேரிலே நெருங்கினள் நான் ஏங்க!

         (வேறு)

மாலைமணி ஐந்தடிக்க
மங்கையவள் என்மனத்தில்
சோலைக்குயி லாகவந்து பாட – மனச்
சோர்வனைத்தும் துள்ளியெங்கோ ஓட

கூடவந்த மங்கையவள்
கூறவந்த கண்ணசைவில்
பாடலொன்று பைந்தமிழில் பொங்கும் – மனப்
பங்கயத்தில் இன்பமதுப் பொங்கும்

அற்றைவரை நெஞ்சகத்தை
அற்றிடச்செய் தாட்டியெனை
குற்றுயிராய் ஆக்கியதோ ஏக்கம் – அவள்
கொஞ்சுமுகம் கண்டவுடன் ஊக்கம்!

---------------------------------- 
படத்திற்கு நன்றி - கூகுளார்.
---------------------------------- 

10 கருத்துகள்:

  1. ஆஹா... பழைய நினைவுகளா? ஒவ்வொன்றாய் வெளியிடுங்கள்.... ரசிக்க நாங்கள் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. இப்படி ஒரு காதல் கவிதை எழுதி...
    காதலிச்சு...?

    நல்லவேளை...

    இலக்கணக்குறிப்புக்கள் காதலிக்க நினைத்ததன் ...உள்ளம் தெரிகிறது...
    இன்னும் சொல்லுங்கள்...எப்போதும் தேவைப்படும்..

    பதிலளிநீக்கு
  3. உங்களது எழுத்து எங்களை ஈர்ப்பதோடு எங்களின் இளமைக்காலத்திற்கு இட்டுச்செல்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. காதல் அரும்பாமலும் கவிதை விரும்பாமலும் காளைப் பருவத்தை கடந்தவ ருண்டோ காண்?

    பதிலளிநீக்கு
  5. மலரும் நினைவுகளா தம்பி! நன்று! நலமா!

    பதிலளிநீக்கு
  6. வளரும் கவிதையில் மலரும் கவிதைகள் :)

    காதலுக்கு மூபில்லை என்றொரு கவிதை வரைவில் வைத்திருக்கிறேன், விரைவில் வெளியிடுவேன்.

    பதிலளிநீக்கு
  7. காதலுக்கு வயதில்லை ஐயா/அண்ணா. உங்களைத் திட்ட மாட்டோம்...கவிதைகளை ரசிக்கின்றோம்... மற்றவையும் வெளியில் வரட்டும்..!! காத்திருக்கின்றோம். ரொம்ப நாளா மின்அஞ்சல் சப்ஸ்க்ரிப்ஷன் கொடுத்து அது பதியாமல் இன்று பதிந்துவிட்டதே. இனி உங்கள் பதிவுகள் எங்கள் அகத்துப்பெட்டியில் வந்துவிடுமே!!!!

    க்ரேஸ் கூட காதலுக்கு மூப்பில்லை என்று அழகான கவிதை எழுதியிருந்தார்கள்...

    பதிலளிநீக்கு