ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயசு எது?



      இங்குள்ள அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் நேரு இளையோர் மையம் நடத்திய கருத்தரங்கில் பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், இளைஞர்கள், ஓடுகிற பாம்பை மிதிப்பவராக இல்லாமல் பிடிப்பவராக இருக்க வேண்டும்“ என்றார்.
    மத்திய அரசின் நேரு யுவக்கேந்திராஅமைப்பு, மாவட்டம் முழுவதும் இயங்கிவரும் இளைஞர் குழுக்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குவதோடு, இளைஞர்-மகளிமன்றங்களுக்கு விளையாட்டுப் பொருள்களை வழங்கியும், வழிகாட்டி இளைஞர் மன்றத்திற்கு நிதிஉதவி வழங்கியும் ஆக்கப்புர்வமான மாற்றங்கள் எனும் தலைப்பில்  இளைஞர்களுக்கு  வழிகாட்டும்   கருத்தரங்கத்தை நடத்தியது.
      விழாவிற்கு அரசுக் கல்வியில் கல்லூரியின் முதல்வர் சிவ.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நேரு யுவக் கேந்திராவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் சடாட்சரவேல் தொடக்கவுரை ஆற்றினார். அவர் தனது உரையில் பல்வேறு சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியதோடு, இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கக்கூடிய வீரவாஞ்சிநாதன் போன்ற இளைஞர்களின் தியாகம் பற்றி எடுத்துரைத்தார்.
விழாவில் சிறந்த இளையோர் மன்றமாகவும், வழிகாட்டி நற்பணி மன்றமாகவும் தேர்வு செய்யப்பட்ட பல்லவராயன்பத்தை மற்றும் திருவப்பாடி மன்றங்களுக்கு தலா ரூ.10,000 ரொக்க பரிசுத்தொகை வழங்கப்பட்டது.. மூத்த இளைஞர்மன்றத் தலைவர்களான நார்த்தாமலை முத்து. சேனாதிபதி, குளமங்கலம் மோகன், முத்துக்குடா ஆறுமுகம், வெண்ணாவல்குடி ராமதாஸ், அன்னவாசல் குழந்தைவேலு ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
      கைவினைப் பொருள்கள் கண்காட்சியைத் துவக்கி வைத்து, மாவட்ட சிறந்த இளைஞர் மன்ற விருது, வழிகாட்டி இளைஞர் மன்றத்திற்கான நிதி உதவி, மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான் சிறப்புரையாற்றினார். காந்திய சிந்தனையாளர் தளபதிமாணிக்கம், பேராசிரியர்கள் க.வைரவன், ரிச்சர்டுஜெகதீசன், முருகையன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். 
   விழாவில் நிறைவுரையாற்றிய கவிஞர் நா.முத்து நிலவன் மேலும் பேசியதாவது 
இளைஞர்கள் வேகமானவர்கள். அதற்காக இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு, செல்பேசியில் பேசிக்கொண்டே பறக்கக் கூடாது. உங்கள் வேகம் மட்டுமல்ல விவேகமும் கூட உங்கள் கையில்தான் இருக்கிறது. ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு என்பது இளைய வயதல்ல, எண்பது வயது, கண்தெரியாமல் மிதிப்பது. இளைய வயதில் ஓடுகிற பாம்பை கவனத்தேர்டு  பிடிக்க வேண்டும். எனவே ஓடுற பாம்பை பிடிக்கிற வயசுஎன்பதுதான் சரி அந்தவயதில் செய்யும் எந்தச்செயலும் வாழ்நாள் முழுவதும் பாதிக்கும் என்பது இப்போது புரியாது! ஆனால் புரிந்து கொள்ள முயற்சியாவது செய்ய வேண்டும்.
     நாம் பார்க்கும் மரங்கள் எல்லாவற்றுக்கும் வேர்கள் உண்டு. ஆனால் வேர்களே இல்லாத நம் தேசியக் கொடிமரம்தான் நம் வாழ்க்கையை நமக்குத் தந்தது. அதற்கும் வேர்கள் உண்டு! நம் தேசத்தை காப்பாற்றுவற்காகத் தம் உடல், பொருள், ஆவி அனைத்தும் தந்த தியாகிகளின் செந்நீரில்தான் அந்தக் கொடிமரம் நிமிர்ந்து பறக்கிறது. அவர்கள் வாழ்க்கைதான் அதன் வேர்கள் அந்த வேர்களை இந்த விழுதுகள் மறந்துவிடாமல் நன்றி  பாராட்ட வேண்டும். இன்றைய நம் வாழ்க்கை வசதிகளுக்காக பலலட்சம் தொண்டர்கள் போராடியிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் செய்யும் நன்றி இன்று நம் வீட்டையும் நாட்டையும் முன்னேற்றும்படி வாழ்ந்து காட்டுவதுதான்
திரைப்படங்களும் தொலைக்காட்சி விளம்பரங்களும் இளைஞர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதுபோலவே பெரும்பாலும் காட்டுகின்றன. ஆனால், நமது பெரும்பாலான இளைஞர்கள் வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டே நாட்டுநலனிலும் அக்கறை செலுத்தவே விரும்புகிறார்கள்
   வாழ்க்கைத் துணைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்ல, தமக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் உங்கள் வீட்டுவாழ்வும் நாட்டு முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது என்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
   ஒருவன் கொலைசெய்தான், 
  அவனைக் கொலைகாரன் என்றார்கள்! 
  ஒருவன் கொள்ளை யடித்தான், 
  அவனைக் கொள்ளைக்காரன் என்றார்கள்!
  ஒருவன் கற்பழித்தான், 
  அவனைக் காமாந்தகன் என்றார்கள்! 
  இந்த மூன்றையும் செய்பவனைத் 
 தலைவா என்றார்கள்!!!? என்றொரு கவிதை உண்டு. ஆனால் அது உண்மையாகிவிடக் கூடாது. நல்லவர்கள் யார், வல்லவர்கள் யார் என்று தெரிந்து அவர்களையே பின்பற்றி வாழ்வை அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டும்.
    எப்படி ஆறுநாட்களில் சிவப்பழகுஎன்பனபோலும் விளம்பரங்கள் பொய் சொல்கிறதோ, அதுபோல பொய் பேசுபவர்களைக் கண்டுபிடித்து விலக்கிவைத்து, நல்ல தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பின்பற்ற இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காமராசர், அம்பேத்கர், பெரியார், பகத்சிங் எல்லாம் உங்களுக்குள்தான் இருக்கின்றனர் நீங்கள் அவர்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதுதான் வீட்டுக்கும் நாட்டுக்குமாக நீங்கள் செய்ய வெண்டிய பணியாகும். உங்கள் சமூகப் பணிகள் இந்தியா முழுவதும் பரவட்டும் என்றார்.
       முன்னதாக நேரு யுவக்கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் வரவேற்றார். பாவலர் பொன்.க விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இளைஞர படைத் தொண்டர் அப்பாவு நன்றிகூறினார். மாவட்டமுழுவதுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட முந்நூற்றுக்கும் மேலான இளைஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
------------------------------------------------------------------
செய்தித் தொகுப்பு திரு மோகன்ராம்
புகைப்படம் திரு ராஜ்குமார், புதுக்கோட்டை

--------------------------------------

6 கருத்துகள்:

  1. // இன்று நம் வீட்டையும் நாட்டையும் முன்னேற்றும்படி வாழ்ந்து காட்டுவதுதான்... //

    சிறப்பான உரை ஐயா...

    பதிலளிநீக்கு
  2. நல்லது ஐயா... ஊக்கமான வார்த்தைகள்..

    பதிலளிநீக்கு
  3. அண்ணா, உணர்வுப்பூர்வமான அருமையான உரை!!! :-)

    பதிலளிநீக்கு
  4. நாட்டுகோழி மாதிரி வளர்க்க வேண்டிய குழந்தைகளை பிராயலர் கோழி மாதிரி பணம் பணம் என்ற தீவனத்தை மட்டும் ஊட்டி வளர்த்தால் கறிக்கும் உதவாது.

    பதிலளிநீக்கு
  5. வாழ்க்கைத் துணைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மட்டுமின்றி நாட்டுத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற அருமையான கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு