சமயச் சார்பற்ற தமிழ் மரபு தழைக்கட்டும்.

இன்றைய புதுமை எல்லாவற்றுக்கும் சிறிதளவேனும் ஒரு மூலம் இருக்கும். சிந்தனையோ செயலோ, பொருளோ அடுத்தடுத்துத் தொடர்வதுதான் பரிணாமம்! இன்றைய பழமை நேற்றைய புதுமை, இன்றைய புதுமை நாளை பழசாகிவிடும்! முந்திய பழமையின் நல்லனவற்றை நாடி எடுத்துக் கொள்வதும் சொல்வதும்
அடுத்து வரும் புதுமையை வளர்ப்போரின் அரிய கடமையாகும். 
     ஆய்வுகள், நாட்டு வரலாற்றை அறிவதில் மட்டுமல்ல, நம் வீட்டு வரலாற்றை அறிவதிலும் கொண்டுபோய் விட்டால் நல்லதுதான்! இந்த முன்கதைகளில் –நம் தாத்தாக்களின் கதைகளில்- நம் பாசத்திற்குரிய “பாட்டிகள்“ தாமாய்ச் சேர்த்தது என்ன? தெரிந்தோ தெரியாமலேர் நீக்கியது என்ன? என்று, தெரிந்து பயன்கொள்ள, நமக்கும் சாமர்த்தியம் வேண்டும் அப்போதுதான் நாளைய வெற்றி நம் வசமாகும்.
நீண்ட நெடிய பாரம்பரியமுள்ள நம் தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சி, சங்கிலியாகக் கோக்க முடியாமல் கிடக்கிறது. அறுபட்ட கண்ணிகளின் அழகே நம்மை மட்டுமின்றி உலகையும் ஈர்க்கிறதெனில் நம் கடமை பெரிதாகிறது! அதன் சிறு முயற்சியாக, கிடைத்த கண்ணிகளை வரிசைப்படுத்திப் பார்க்கும் முயற்சியே இன்றைய வரலாற்றுத் தேவை! தவறுகள் நிகழலாம். முயல்வதில் தவறில்லையே!
முற்போக்கு மரபுகளின் தொடர்ச்சியே இன்றைய முயற்சி!
வெற்றுப் பழம்பெருமை பேசுவதில் பயனில்லை, உண்மையான பெருமையை அறிந்து அதனைத் தொடர்வதில்தான் உண்மையான பலன் இருக்கும். பழுமரத்தின் பழுத்த இலைகளை, மரத்துக்கு வலிக்காமல் கிள்ளி எறிந்துவிட்டு, இன்றைக்கும் சுவைக்கும் கனிகளை, அவற்றில் ஒட்டியிருக்கும் குருவி எச்சங்களைக் கழுவி, கிளிகள் வைத்த மிச்சங்களைக் கடிப்பதில் இருக்கும் சுவையே தனியல்லவா?
“தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும் – இவள்
 என்று பிறந்தனள் என்றுண ராத  
இயல்பின ளாம் எங்கள் தாய் -என்பது நம்நாட்டுப் பழம் பெருமைபற்றிய
பாரதி கவிதை எனினும், இவ்வரிகள் சமூகத்துக்கும் தமிழுக்கும் பொருந்தும்தானே?
பெருமைக்குரிய நமது மரபுகள் என்னென்ன?
தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா – இன்று
 தோன்றியதாம் எனும் எதுவும் தீதாகா  எனும் உமாபதியாரின் தெளிவான பார்வையை எளிமைப் படுத்திய பாரதிதாசன்,
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம் என்பார். இன்று புறந்தள்ள வேண்டிய “மண்மூட வேண்டிய கண்மூடி வழக்கங்கள்“ பலவும் பழந்தமிழ் மரபில் கலந்தே கிடக்கின்றன. அவை, எவையெவை எனத் தெளிந்து, ஏற்கவேண்டியவற்றை ஏற்க “முற்போக்குத் தமிழ்மரபு“எனும் “அறிவிலே தெளிவுநமக்குத் தேவைப்படுகிறது.
அப்படியான நமது நன்மரபுகளைத் தொகுக்கும் முயற்சியே இக்கட்டுரை.
நல்ல அரசியலுக்கான நமது மரபுகள் -
     திருக்குறள் தெளிவாகச் சொல்லும்.  “அரசியல் தலைமையில் உள்ளோர், காட்சிக்கு எளியராக, கடுஞ்சொல் சொல்லாதவராக இருக்க வேண்டும்“ (குறள்-386) அது மட்டுமல்ல,“அரசியலில், தலைமையைக் குறைகூறும் சொற்களையும் பொறுமையாக் கேட்கும் பண்பு மிக்க அரசுதான் உலகோரால் பாராட்டப்படும் என்றும் குறள் (389)கூறுகிறது. இன்று எளிமை என்றால் என்னவிலை? என்று மட்டுமல்ல, “மாற்றுக் கருத்தா பிடி! அல்லது ஆள்வைத்து அடி!“ எனும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் குறளின் முற்போக்குத் தமிழ்மரபிலிருந்து பாடம் படிக்க வேண்டும்.
இதோடு, பழந்தமிழ் மரபில் நேரடியாக அரசவைக்கே சென்று - கவனியுங்கள் சட்டமன்ற உறுப்பினரையோ, அமைச்சரையோ அல்ல, நேராக அரசவைக்கே சென்று அரசனையே பார்த்து – தனது குறைகளை ஒரு பெண்ணால் கூறமுடிந்ததாக நற்றிணை இலக்கியம் நவில்கிறது! 90, 400 எண்ணுள்ள பாடல்கள் இவற்றைக் கூறுகின்றன! இவற்றைப் பார்க்கும்போது, அரசனைச் சாதாரண மக்கள் சென்று காண்பது கடினமல்ல என்பது மட்டுமின்றி, அவன் அரச சபைக்கு நிகரான “சான்றோர் அவை“ ஒன்றையும் வைத்து, தனது நல்லாட்சி தொடர அதன் ஆலோசனையைப் பெற்றிருக்கிறான் என்பதும் புரியவரும். இதனைச் சங்க இலக்கியத்தின் பல்வேறு பாடல்கள் தெரிவிக்கின்றன. சான்றாக ஒன்று-
“நல்லோர் குழீஇய நாநவில் அவையம்“ – மலைபடுகடாம் (வரி-77)
இவற்றை விட்டால்கூட, கண்ணகியின் வழக்குரை காதை நமக்குத் தெரிந்ததுதானே? அரசனைப் பார்த்து -வணக்கம்கூடச் சொல்லாமல் எடுத்த எடுப்பில்- “தேரா மன்னா”  எனச் சொன்ன திடீர்த் தாக்குதல் உலகப் புகழ்பெற்றதே! 

“வாயில் வந்து கோயில் காட்ட ...
“நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்!
யாரையோ நீ மடக்கொடியோய் என,
“தேராமன்னா!செப்புவது உடையேன்“  
நெருப்பு வரிகளை மறக்க முடியுமா?
அதன்பின், உண்மையறிந்து, தன் ஆட்சியில் நடந்த தவறுக்காக வருந்தி,
“தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்,
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்!
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
ன்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள் 
என்று, உயிர்விட்ட பாண்டியன் நெடுஞ்செழியன், வரலாற்றில் வாழ்கிறானே? 
(சிலம்பு–வழக்குரை காதை)
சான்றோரைச் சமூகமே மதிக்கும் ஒரு நல்ல மரபு!
“சங்க இலக்கியம்“ என்பதே இருபதாம் நூற்றாண்டுப் பெயர்தான்.  காலத்தாலும் வாழிடத்தாலும் வேறுபட்ட 473 புலவர்களின் பெயர்தெரிந்துள்ளது. பெயர்தெரியாத புலவர்கள் எழுதிய 102 பாடல்களும் சேர்த்து, மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றின் தொகுப்பே முன்னர்ப் “பாட்டும் தொகையும்“ எனப்பட்டு, இப்போது “சங்க இலக்கியம்“ என வழங்கப்படுகிறது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னர் எழுதப்பட்ட எட்டுத் தொகை பத்துப்பாட்டு எனப்பட்ட பதினெண்மேற்கணக்கு நூல்கள் எனும் சங்க இலக்கியப் பதினெட்டு நூலையும், சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்னர்த் தொகுத்தார்கள். பாடலின் பொருளை விளங்க யாரை யார் பாடியது? பாடிய சூழல் என்ன? என வரும் அடிக்குறிப்பு ஒவ்வொரு பாட்டுக்கும் உண்டு! அந்தக் குறிப்புகளில் சில நுட்பம் உண்டு
ஒருபாடலை எழுதியவரே அடுத்த பாடலையும் எழுதி, அதே மன்னரைப் பாடியிருந்தால் அந்தக் குறிப்பு இப்படி இருக்கிறது – “அவனை அவர் பாடியது”!  அதாவது அதே அரசனை அதே புலவர் பாடியது என்பது இதன் பொருள். இதனுள் சொல்லப்படாத ஒரு நல்ல முன்னுதாரணம் உள்ளது. அரசின் தலைவனை அவன் எனவும், அவனைப் பாடிப் பரிசுபெற்ற புலவனை அவர் எனவும் சொல்லக் காரணமென்ன? அரசன் பெரும்பாலும் தற்காலிகப் புகழைப் பெற்றவன், புலவரோ அழியாப் புகழ்பெற்றவர், ஆக அவருக்கே முதல் மரியாதை என்பதுதானே அது?!
இதனை விளக்கமாக, “அறிவுடையோன் ஆறு(வழியில்), அரசும் செல்லும்“என (புறநானூறு எண்-183) பாண்டியன் நெடுஞ்செழியன் எனும் அரசனே எழுதினான் எனில், சான்றோர்க்கு அன்றைய சமூகம் தந்த மதிப்பு நல்லதொரு மரபல்லவா? அந்தப் பெருமைக்கு அந்தப் புலவர்களும் தகுதியுடையவராய் இருந்திருக்கின்றனர் என்பதும் ஒரு மறக்கக் கூடாத உண்மை! இதனையும் ஒரு குறள் சொல்லும்-
“உதவி வரைத்தன்று உதவி, உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து (எண்-105)
சமத்துவ சமூக –சமயச் சார்பற்ற- மரபு
சங்க இலக்கியம் முழுவதுமே, நடந்த செய்திகளின் தொகுப்பா? கற்பனை ஊரின் கதைகளா? எனில் இரண்டும் கலந்துதான் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. அரசனைப் பாடிய பாடல்களில் அவனது புகழ் மிகையாகவே காணப்படும் என்றாலும், அதில் உண்மையில்லாமலும் இல்லை. பாடியோர், பாடப்பட்ட அரசர் பெயர்களும் வகைகளும் அரிதாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை – சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு-1973, ஏ4அளவு பக்கம்-408)
சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களில் மூவேந்தரைப் பற்றிய பாடல்களைக் காட்டிலும், சாதாரண மக்களை -அல்லது மக்கள் குழுவின் சாதாரணத் தலைவர்களை – பாடிய பாடல்களே அதிகமுள்ளன. அதோடு, அந்த சாதாரண மக்களின் சிறு தெய்வங்களே –நிறுவனமான பெருந்தெய்வங்களைவிட- அதிகமாகப் பாடப்பட்டுள்ளன என்பதும் மிகுந்த கவனத்திற்குரியது. இதனை இன்றைய பொருளில் “மதச்சார்பற்ற  வாழ்க்கை“ என்று சொல்ல முடியாவிட்டாலும், அன்றைய தமிழக மக்கள் பெரியஅளவில் சிவன், விஷ்ணு முதலான இந்துக் கடவுள்களையோ, பௌத்த சமண சமயத்தையோ சார்ந்திருக்கவில்லை என்பதும் தொடர் ஆய்வுக்குரியதாகும்.
இதுபற்றி ஆய்வுசெய்த பேராசிரியர் அருணன், சில அரிய கருத்துகளைச் சொல்கிறார் – “பிரமம்–வேத நம்பிக்கையாளர்கள், திரமம்-வேத எதிர்ப்ப்பாளர்கள் எனும் பிரிவினர், புத்தர் சமணருக்கு முன்பே தமிழ்ச்சமூகத்தில் இருந்திருக்கின்றனர். சாங்கியம், லோகாயதம் இரண்டுமே கடவுள் மறுப்பில் வளர்ந்த கருத்துகள். இந்தக் கருத்தூட்டங்களும் “சங்க காலத்தில்“ காணப்படுகின்றன. சார்வாகர், சமணர், புத்தர், ஆசீவகர் அன்றைய வேத வைதீக சடங்குகளை எதிர்த்துக் கிளம்பினர். அதோடு, ஆதிமரபுத் தத்துவமும், வேதமரபுத் தத்துவமும், வேதமறுப்புத் தத்துவமும் கூட சங்க இலக்கியத்தில் உண்டு என்கிறார் அருணன்.
அதோடு, “நீர்மிகின் சிறையுமில்லை“ என வரும் ஐயூர் முடவனாரின் புறநானூற்று பாடலை ஆதிமரபுத் தத்துவம் சார்ந்தது எனவும் குடபுலவியனாரின் “உண்டி முதற்றே உணவின் பிண்டம்“, கோதமனாரின் வாழ்வு உண்மையென்ற பொருளில் “மடங்கள் உண்மை மாயமே அன்றே“ பாடலும் அன்றைய “இயல்பான இயற்கை வாதச் சிந்தனைகள்“ என்றும் சொல்வது முற்போக்காளர்களுக்கு மிகுந்த நம்பிக்கை யளிக்கும் ஆய்வாகும் (மதுரை தமுஎச செம்மொழிக் கருத்தரங்கில் “சங்க இலக்கியத்தில் தத்துவம்“ எனும் தலைப்பில் ஆற்றிய நிறைவுரை-08-10-2007)
இதுபற்றி ஏற்கெனவே ஆய்வுசெய்த, இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் பி.மார் என்பார், “சங்க இலக்கியங்களை மதச்சார்பற்ற இலக்கியம் என்றும், இதன் தொடர்ச்சியை அன்றைய பிறபகுதி இந்திய இலக்கியங்களிலோ, பிற்காலத் தமிழ் இலக்கியங்களிலோ கூடக் காண முடியவில்லை“ என்று புகழ்கிறார். (‘A CULTURAL HISTORY OF INDIA’ – Edited by A.L.BASHAM, CLARENDON PRESS, OXFORD-1975-Page-36) இவர் கூறும் சான்றின் படி, சிவன் விஷ்ணு போலும் பெருந்தெய்வங்களை விடவும் சாத்தன் சாத்தி முதலான சாதாரண கிராமக் கோவிலின் சாமிகளே அதிகம் பாடப்பட்ட –வழிபடப்பட்ட- சங்க இலக்கியத்தின் “மதச்சார்பற்ற மரபு“ இன்றும் தேவைப்படுகிற முற்போக்குத் தமிழ் மரபல்லவா?
தமிழ்ச் சமூகத்தின் பழங்குடிகள் பற்றிய குறிப்போடு, அவர்கள் வழிபட்ட உருவமற்ற கல் பற்றியும் சங்க இலக்கியத்தில் காணக் கிடைக்கிறது. அது வருமாறு-
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை ...
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவுமோர் கடவுளும் இலவே (புறநானூறு – 337
இந்நிலை பின்வந்த ஆயிரம் ஆண்டுகளில் (கி.பி.2-12ஆம் நூற்றாண்டுகளில்) பெரிதளவுக்கு மாறி, மதவாதிகளால் பெருத்த மோதல்கள் நிகழ்ந்தன. இதற்காக எழுந்த பக்தி இலக்கிய இயக்கங்கள் மக்களைக் கவர –வேறுவழியின்றி- சாதி ஒற்றுமை பேசிக்கொண்டே மதச்சார்பை காட்டிநின்றன. இதற்கான சான்றுகள் -
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோய ராகி,    
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்...
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்,
அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே!”   - திருநாவுக்கரசர் தேவாரம்.
“சாதியாவது ஏதடா மதங்களாவது ஏதடா?“ – சித்தர் பாடல்.
இந்த மதமோதல்களைப் பற்றி அறிந்தும் அறியாமலும், சாதாரண உழைக்கும் மக்கள் இன்றுபோலவே அன்றும், கிடைத்த சாமிகளைக் கும்பிட்டுக் கொண்டு, தவித்த வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு ஒற்றுமையாகவே இருந்திருக்கிறார்கள்! என்பதும் நம் கவனத்திற்குரியது.

சமயச் சார்புடன் எழுதப்பட்ட நூல்களைக் காட்டிலும் ,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“என்ற வள்ளுவர், மற்ற சமயங்களைத் தூற்றாமல் –சமமாக பாவித்து- எழுதிய இளங்கோவடிகள் போன்றோரே, சமயச் சார்புடைய ஆழ்வார் நாயன்மாரைவிட அதிகம் பேசப்பட்டனர். இதன் தொடர்ச்சி கம்பன் வரை வருவதும் இவர்போல பிற மதத்தாரை இகழாமல் தமது மதக்கருத்துகளைப் பாடியோரே  இன்றுவரை மக்களால் போற்றப் படுவதும் கவனிக்கத் தக்கது.
கம்பர், ஆழ்வார்களைப் போல திருமாலை மட்டுமே புகழ்ந்து பாடவில்லை. ஞானசம்பந்தரும்,  நாவுக்கரசரும்,  சேக்கிழாரும் திட்டித் தீர்த்ததுபோலத் திட்டவில்லை என்பது மட்டுமல்ல, சைவத்திற்கும் வைணவத்திற்கும் தீராப்பகை வளர்த்துப் பக்தி இலக்கியம் எழுதப்பட்ட காலத்திலேயே திருமாலுக்கான இராமாவதாரத்தில் சிலநூறு இடங்களில் சிவனைப் புகழ்ந்தும் எழுதியிருக்கிறார் (இதுபற்றியே ஒரு நூலுமுண்டு!) 
“அரன் அதிகன் உலகளந்த அரிஅதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்”  என்று, ஏதோ பக்திக்கு அப்பாற்பட்டுப் பாடுவதுபோலவே கம்பர் சொல்வதைக்கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. இதுதானே நமது சமயச்சார்பற்ற மரபின் அழகு!
 தத்தம் சமய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே -இன்றைய –சமயச் சொற்பொழிவுகள் போலவே- அன்றும் சமயப் பிரச்சாரங்கள் நிறைய நடந்துள்ளன. அதில் பிறசமயத் தாக்குதலும் தவறாமல் இருக்கும். ஞானசம்பந்தர் எழுதிய ஒவ்வொரு பத்துப்பாட்டிலும் ஒருபாட்டு சமணரை இழிவுபடுத்தியே இருக்கும்! அவர்தான் “திராவிடசிசுவாம்! சிவனின் திருவிளையாடல்களை, “பெரியபுராணம்“ எனப் பாடிய சேக்கிழார், சமணரை “குண்டர் என்றே பலஇடங்களில் சொல்வார்!
உண்மையில் சங்க இலக்கியத்தைத் தொகுத்ததே சமயச் சார்பு நோக்கில்தான்!
அதனால்தான் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் இருந்திருக்க வாய்ப்பற்ற “பாரதம்பாடிய பெருந்தேவனார்“, சங்க இலக்கியத்தில் உள்ள எட்டுத் தொகை நூல்கள் எட்டில், ஐந்தினுக்கு தான் ஒருவராகவே கடவுள் வாழ்த்துப்பாடலை (சிவ வழிபாடாக)எழுதியிருக்கிறார்! இப்படித்தான் கடவுள் கருத்துகள் நிறுவனமயமாகி முன்வைக்கப்டுகின்றன என்பதை இப்போதும் நம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆக, சங்க கால “மதச்சார்பற்ற“ முற்போக்குத் தமிழ் மரபின் தொடர்ச்சி, பிறகு பெருந்தெய்வ வழிபாடுகளைக் கொண்ட சமய நிறுவனங்களால் மாற்றம் கண்டது. இன்றைய நம் இந்தியாவிலும், தமிழகத்திலும் அமைதியான மதச்சார்பற்ற வாழ்க்கை வாழ, நமது “சங்ககால“முற்போக்குத் தமிழ்மரபின் தொடர்ச்சி தேவைப்படுகிறது.
இன்னும் கோக்கவேண்டிய முற்போக்குத் தமிழ்மரபின் கண்ணிகள் பலஉள-
1.      தாவரத்துக்கும் ஓரறிவு உண்டு -என அறிவியல் பாடும் தொல்காப்பியர்.
2.    யாதும் ஊரே யாவரும் கேளிர் – சர்வதேச மனிதனைப் பாடும் பூங்குன்றன்
3.    யாயும் யாயும் யாரா கியரோ – சாதி மறந்த சமத்துவக் குறுந்தொகை
4.    மனத்துக் கண் மாசிலனாதலே அறம் –என்று புதிய அறம்கண்ட குறள்
5.    ஒன்றே குலம் ஒருவனே தேவன் –மதம் கடந்த மனிதர் திருமூலர்.
6.   மானுடம் வென்றதம்மா – மனித குல வெற்றியைப் பாடும் கம்பன்.
7.  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி – அன்பில் முதிர்ந்த வள்ளலார்.
8.   தையலை உயர்வு செய் – வையம் புதுமை செய்த பாரதி
9.   உலகம் உண்ண உண் உடுத்த உடு – என்ற பாரதிதாசன்
10.சந்திரனைத் தொட்டதின்று மனிதசக்தி –பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
--இவற்றின் தொடர்ச்சியே நாம் காணவேண்டிய முற்போக்குத் தமிழ்மரபு! 
அறுந்துபோன கண்ணிகளை, நம்ஆய்வால் -மதம்கடந்த மனிதநேயத்தினால்
- ஒட்டச் செய்து அனைத்து மதத்தினரோடும் தோழமையோடு வாழ்வோம்!
--------------------------------------------- 
(இன்று 29-11-2015 மதுரையில் நடைபெறும் தமுஎச 40ஆவது ஆண்டு சிறப்புமாநாட்டில் வெளியிடப்படும் தமிழ்மரபு மலருக்காக எழுதியது
சகிப்புத்தன்மை...ஆமீர்கான்...கமல்..எனத் தொடரும் சர்ச்கைகளுக்கிடையே இந்தக் கருத்துகளின் முக்கியத்துவம் கருதி எழுதப்பட்டது.)

15 கருத்துகள்:

  1. ஐயா வணக்கம்.
    படித்துக் கொண்டு வரும்பொழுதே ஓர் ஆய்வுக் கட்டுரையாக எழுதப்பட்டிருக்கின்ற பதிவு என்ற எண்ணம் மிகுந்தது.
    அது உண்மையுமாயிற்று.

    தங்களது பரந்த வாசிப்பிற்கும் எழுத்தோட்டத்திற்கும் சான்றாக இக்கட்டுரை விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.

    தமிழ் ஆசீவக மரபிற்கும் கருத்திற்கும் சான்றாகச் சங்க இலக்கியத்தில் உள்ள பாடலாக “ யாதும் ஊரே யாவரும் கேளிர் “ எனும் பாடல் விளங்குகிறது.

    தங்களின் கட்டுரை பார்க்கத் தோன்றுவன குறித்துப் பின்னூட்டம் இட்டால் அது பதிவின் அளவிற்குப் போய்விடும்.

    இது போன்ற கட்டுரைகள் படித்து நாளாயிற்று.

    தொடர வேண்டுகிறேன்.

    “ மண்பதை காக்கும் தென்புலங் காவல்“ என்ற வரியைச் சரிபார்க்க வேண்டுகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஐயா... உங்களின் பார்வையே தனி...! கற்றுக் கொள்ள வேண்டும் - இனி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களிடமல்லவா நாங்கள் கற்றுக்கொண்டு வருகிறோம் வலைச்சித்தரே! நன்றி

      நீக்கு
  3. அற்புதமான பதிவு அறிவுப்பசியை ஆற்றுகின்ற பதிவு. இத்தளம் வாசிக்க கிடைத்தமை பெரும் பாக்கியம்.பழுத்த இலைகளை மரத்துக்கு வலிக்காமல் கிள்ளி எறிந்து விடும் பண்பே உயர் பண்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி உங்கள் தளத்தையும் பார்த்து வருகிறேன்.
      கட்டுரைகள் நன்றாகவே இருக்கின்றன. தொடருங்கள்.

      நீக்கு
  4. அண்ணனின் கனவு மெய்ப்படும்

    பதிலளிநீக்கு
  5. விரிவான தேவையான கருத்துகள் ஐயா.... நிறைய தெரிந்து கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  6. ஐயா.
    எச் சமயத்தையும்,வேறு எதனையும் சாராமல் ,முற்போக்கான அறிவு மரபினை உடையவர்கள் நாம் என்பது தங்களின் கட்டுரை மூலம் தெளிவாகிறது. தொக்கி நிற்கும், அந்த இடைவெளிக் கண்ணிகளையும் இணைத்து,தொடர் அறிவுமரபின் வரலாறை வெளிபடுத்தவேண்டிய பணியையும் உடன் தொடங்குங்கள்..!

    பதிலளிநீக்கு
  7. // சாதியாவது ஏதடா மதங்களாவது ஏதாடா? -- சிவவாக்கியர் எழுதிய சிவவாக்கியம். என் நண்பர் ஒருவர் எனக்கு சிவவாக்கியத்தை அறிமுகப் படுத்தினார். MP3 தமிழிசைப் பாடல்களாக இணையத்தில் கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இந்தப் பாடல்களை ஒலி வடிவில் கேட்டுப் பார்க்கலாம். என் நண்பரும் நானும் இந்த பாடலை செல்பேசியில் ஓடவிட்டு திருநீற்றுடன் தூங்கும் போது அப்படியொரு தூக்கம் வரும். இப்படித்தான் இப்பாடல் எனக்கு அறிமுகமாகியது.

    ஆன்மிகத்தில் கொஞ்சம் ஆர்வம் கொண்ட எவரும் ஆழமான தத்துவங்களைப் பொதித்த சிவவாக்கியப் பாடல்களைப் படிக்கலாம். ஓரிரு பாடல்கள் பிற்காலத்தில் திட்டமிட்டு சேர்த்த இடைசெறுகல்கள் என்றே எண்ண வேண்டியிருக்கிறது (நன்றி: திருவான்மியூர் கோவில் சொற்பொழிவுகள் மற்றும் http://madhavipanthal.blogspot.in ). அவரவருக்கு வேண்டியவைகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அப்படித்தான் நடைமுறையிலும் இருக்கிறது. "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்" தெரியாமலா சொல்லி வைத்தார் நம் வள்ளுவர். முழு சிவவாக்கியப் பாடல்களுக்கும் எளிய தமிழில் ஒரு பதிவர் விளக்கம் எழுதியிருக்கிறார். அவரது புனைப்பெயர் ஞானவெட்டியான். அவர் புதுக்கோட்டை மாவட்ட பதிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    http://siththan.com/archives/category/சித்தர்-இலக்கியம்/சிவவாக்கியர்-பாடல்கள்

    என் அனுபவத்தில் சிவவாக்கியம் குறித்த ஒரு பார்வையை இப்பதிவில் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்குமென்றே கருதுகிறேன். நான் பதிவாக எழுத எண்ணியிருந்ததை ஒரு நல்ல சமூக இலக்கியப் பதிவில் பின்னூட்டமாக எழுத வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி.

    சென்னை - திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் இரவு பூசையின்போது கூட்டாக சிவவாக்கியம் பாடுவார்கள். கண்களை மூடி ஓதுவார்களுடனும் அடியார்களுடனும் பாடும்போது கண்களில் நீர் வந்துவிடும். "ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்...". அடடா இவ்வளவுதானா ஆன்மிகம், இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்.
    சிவன் கோவிலில் இப்பாடலைப் பாடுவது ஒன்றும் ஆச்சர்யமில்லை. நான் வளர்ந்த காரைக்கால் கோவில்பத்து பகுதியில் இருக்கும் பார்வதீஸ்வரர் கோவிலுக்கு (தேவார பாடல் பெற்ற திருத்தலம் - திருத்தெளிச்சேரி) எதிரில் உள்ள கோதண்டராமர் வீற்றிருக்கும் வரதராஜப் பெருமாள் கோவில் பிராகர சுவற்றில் சிவவாக்கிய பாடலின் வரி எழுதப்பட்டிருக்கும். "நாமத்தில் சிறந்த நாமம் ராம நாமமே - சிவவாக்கியர்" என்று குறிப்பிருக்கும்.

    திராவிட பகுத்தறிவு இதழ்களிலும் சிவவாக்கியப் பாடல்களின் மேற்கோள்களை மிக எளிதாகக் காண இயலும். (நன்றி - பொறையார் நூலகம்). பணத்தியாவதேதடா? பறைச்சியாவதேதடா? இறைச்சிதோர் எலும்பினுள் இலக்கமிட்டிருக்குதோ? இதுபோன்ற ஆன்மிக பாடல்களல்லவா நம் இல்லங்களில் ஒலிக்க வேண்டும்!

    புதுக்கோட்டை பதிவர் விழாவில் திரு கர்ணல் பாவாடை கணேசன் அவர்கள், கலந்து கொண்ட அனைவருக்கும் சிவவாக்கியப் பாடல் குறிப்பு கொண்ட சிற்றேடு அளித்திருந்தார். "நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே..." - சித்தர் பாடல் என்று குறிப்பிருக்கும் இந்த வரிகளும் சிவவாக்கியமே.

    தங்கள் பதிவில் உள்ள கடைசி படம் அருமையிலும் அருமை. இம்மண்ணில் பிறந்ததற்காக எண்ண தவம் செய்தேனோ?!!!.

    பதிலளிநீக்கு
  8. சமயம் சார்ந்து இருந்தாலும் சார்பற்ற தன்மையை பெயரளவுக்காவது வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் அந்தந்தக் காலக் கட்டங்களிலும் இருந்து வந்திருக்கிறது போலும்.
    சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு