வலைப்பதிவர் திருவிழா - பத்திரிகைச் செய்தி

கணினியில் இலக்கியப் போட்டிகள், பரிசு ரூ.50,000!
புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாக்குழு அறிவிப்பு!
புதுக்கோட்டை-செப்.16.    கணினியில் தமிழ்க் கட்டுரை, கவிதை, எழுதிவரும் எழுத்தாளர்களுக்கான போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதற்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000எனவும் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

  கணினியில் தமிழில்  எழுதிவரும் எழுத்தாளர்கள் தமக்கென இணைய “வலைப்பூ“ எனும் பக்கங்களை உருவாக்கி எழுதி வருகிறார்கள். இதில் அரசியல், சமூகம், நகைச்சுவை, அறிவியல், ஆன்மீகம் என, தமக்குப் பிடித்த துறைகளில் கட்டுரை,கதை,கவிதை எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களும் பரிமாறப் படுகின்றன. இவர்கள் தம்மை “வலைப்பதிவர்“ என்று அழைத்துக் கொள்கிறார்கள். உலகமுழுவதும் உள்ள இவ்வகைத் தமிழ் வலைப்பதிவர்கள் ஆண்டு தோறும் ஏதாவது ஓர் ஊரில் 5ஆண்டுகளாகச் சந்தித்து வருகிறார்கள்.

 2011இல் ஈரோட்டில் சிறிய அளவில்  தொடங்கிய இந்தச் சந்திப்பு, அடுத்தடுத்து மாநில அளவிலும் உலகஅளவிலும் தொடர்பு கொள்வதாகவும் ஆண்டுதோறும் ஓரிடத்தில் சந்திப்பதாகவும் மாறிவருகிறது. இதன் தொடர்ச்சியாக 2012,13இல் சென்னையிலும் கடந்த 2014இல் மதுரையிலும் இந்த “வலைப்பதிவர் சந்திப்பு“ நடந்துள்ளது. தற்போது 2015ஆம் ஆண்டுச் சந்திப்பு புதுக்கோட்டை நகரில், அக்டோபர் 11ஆம்தேதி நடைபெறவுள்ளது.

 புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாப் பற்றி அந்த விழாக்குழுவினர் அதன் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நா.முத்துநிலவன் தலைமையில் கூடி பல புதிய முடிவுகளை அறிவித்தனர். இது தொடர்பாக நா.முத்துநிலவன் கூறியதாவது-

 “உலக மொழிகளில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக கணினி இணையத்தில் பயன்படுத்தப் படும் மொழி தமிழே என்று பத்தாண்டுக்கு முன்னரே மறைந்த எழுத்தாளர் சுஜாதா பெருமிதத்தோடு தெரிவித்தார். புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இரண்டு முறை வலைப்பதிவர் பயிற்சி வகுப்புகளை நடத்தினோம், அதன் நீட்சியாக, வரும் அக்டோபர் 11ஆம் தேதி- ஞாயிற்றுக் கிழமை, புதுக்கோட்டை ஆலங்குடிச் சாலையில் உள்ள ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் “தமிழ்-வலைப்பதிவர் திருவிழா ஒருநாள் முழுவதும் காலை 9மணி தொடங்கி மாலை 5மணிவரை நடத்திடத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சங்களாவன-

தொடர்ந்து படிக்க வருக -
http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_18.html
-----------------------------------------------------


  (1)வலைப்பதிவர் கையேடு வெளியீடு - உலகம் முழுவதும் உள்ள தமிழ் வலைப் பூக்களில் யார்யார் எழுதுகிறார்கள்? என்னென்ன எழுதிவருகிறார்கள்? எனும் விவரங்கள் அடங்கிய “தமிழ்வலைப் பதிவர் கையேடு-2015எனும் நூல் வெளியிடப் படவுள்ளது. அதில் பங்கேற்க,  உலகத் தமிழ்ப் பதிவர்கள் தம்மைப் பற்றிய விவரக்குறிப்பு தந்துவருகிறார்கள். விழாவில் கலந்து கொள்ளும் பதிவர்களுக்கு இலவசமாக வழங்ப்படவுள்ளது.

(2)மின்-தமிழ் இலக்கியப் போட்டிகள், பரிசு ரூ.50,000! – ஏற்கெனவே தமிழில் இணையத்தில் கட்டுரை, கவிதை எழுதிவரும் தமிழ்ப் பதிவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதத்திலும், வலைப்பக்கம் இல்லாமலே எழுதிவரும் தமிழ்  எழுத்தாளர்களை வலைப்பக்கம் உருவாக்கத் தூண்டும் விதத்திலும் மின்-தமிழ் இலக்கியப் போட்டிகள் இந்தப் பதிவர் சந்திப்புக்காகவே அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் தமிழ்ப் பதிவர் எழுத்தாளர்களை உற்சாகப் படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் இணைய வளர்ச்சிக்கான நிறுவனமான “தமிழ் இணையக் கல்விக் கழகம்“ (TVA எனும் Tamil virtual Academy) இதற்கான பரிசுத் தொகை ரூ.50,000ஐ வழங்க முன்வந்துள்ளது. ஐந்து வகைப் போட்டியில் ஒவ்வொன்றிலும் மூன்று பரிசுகள் வீதம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும், ரொக்கப் பரிசோடு, “தமிழ்க்களஞ்சியம்“ எனும் இணையம் வழங்கும் மதிப்புமிகு வெற்றிக்கேடயம் ஒன்று விழாவின் சிறப்பு நிகழ்வாக வழங்கப்படவுள்ளது.

விக்கிப் பீடியா எனும் கட்டற்ற உலகத் தகவல் களஞ்சிய இணையத்தின் இந்தியப் பொறுப்பாளரும் புதுக்கோட்டையைச் சேர்ந்தவருமான முனைவர் இரவிசங்கர் அவர்கள் விழாவில் கௌரவிக்கப்பட உள்ளார்.

 போட்டி விவரங்கள், விதிமுறைகளை விழாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள http://bloggersmeet2015.blogspot.com எனும் வலைப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். இளைஞர்கள், மாணவர்கள், நடுத்தர வயதினர் மூத்தோர் ஆண்கள் பெண்கள் என யார் வேண்டுமானாலும், உலகின் எந்த இடத்தில் இருந்தும்  இணையத்தில் தமிழ் வளர்க்கும் முயற்சியில் பங்கேற்று பரிசும் பெறலாம், ஒருங்கிணைப்பாளரின் செல்பேசி 9443193293 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு, விவரம் அறிந்து கொள்ளலாம் என நா.முத்துநிலவன் தெரிவித்தார். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஃபிரான்சு, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, அரபுநாடுகள், ரஷ்யா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து கையேட்டில் இடமபெற தமிழ் வலைப் பதிவர்கள் தகவல் அனுப்பி வருவது  உற்சாகமளிப்பதாகவும் விழாவில் கவிதை-ஓவியம் மற்றும் புத்தகக்கண்காட்சி, நூல்வெளியீடு, விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் விழாக்குழுவைச் சேர்ந்த மு.கீதா, கஸ்தூரிரெங்கன், இரா.ஜெயலட்சுமி, பொன்.கருப்பையா, வைகறை, கு.ம.திருப்பதி, குருநாதசுந்தரம், ஆர்.நீலா, மீரா.செல்வக்குமார், மதியழகன், ஸ்டாலின்சரவணன், மகா.சுந்தர், ஸ்ரீமலையப்பன், ரேவதி, மாலதி, சுரேஷ்மான்யா, தூயன், மைதிலி, உள்ளிட்ட கணினித் தமிழ்ச்சங்கத்தினர் தெரிவித்தனர்.
----------------------------------------------
இந்தச் செய்தியினைச் -சற்றே சுருக்கி- வெளியிட்ட தமிழ் நாளிதழ்கள்  தினமணி(16-09-2015 திருச்சிப்பதிப்பு), மற்றும் தீக்கதிர் (17-09-2015 அனைத்துப் பதிப்புகள்),  தி இந்து தமிழ் (20-09-2015 திருச்சிப்பதிப்பு) ஆகியவற்றின் நிர்வாகம் மற்றும் செய்தியாளர்க்கு நன்றி.  மற்ற பிற நாளிதழ்களுக்கும் அனுப்ப்ப் பட்டுள்ள செய்தியும் வெளிவரும் என்று எதிர்பார்த்து முன்னதாகவே நன்றிதெரிவிக்கிறோம்.    

--------------------------------------------------- 

8 கருத்துகள்:

  1. நம்பவே முடியல நம்ப விழா இவ்ளோ சிறப்பாக நடக்கப்போகுதான்னு...அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி உங்களை நம்பித்தான் எல்லாமே...
      உங்கள் உழைப்பும் முன்னெடுப்பும் நம் குழுவின் ஆதாரம்
      நிதிகுழு பொறுப்பாளர் என்பது சாதரணமா என்ன

      நீக்கு
  2. என்ன உழைப்பு! என்ன திட்டம்! அண்ணா, தமிழ் வலைத்தளங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டீர்கள்! உளமார்ந்த நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    நிகழ்வு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் நான் வரா விட்டாலும் எனது உதவிகள் நிச்சயம் வந்து சேரும் தங்களின் வங்கி கணக்கில்... பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா !

    விழா மிகவும் சிறப்பாக நடக்கும் என்று இப்போதே தெரிகிறதே
    அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் வாழ்க தமிழ் !

    பதிலளிநீக்கு
  5. அடடகாசம் சகோ வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான திட்டமிடலோடு விழாப் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருப்பதை அனைவரும் அறிய தந்தமைக்கு நன்றிகள் அய்யா.

    பதிலளிநீக்கு