“மேதை’ – மாதமே!


'மேதை’ – மாதமே!


“எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு,
        எட்டுமணி நேர உறக்கம் - இதை
கெட்டமன மூலதன வர்க்கமே! தருக”எனக்
        கேட்டெழுந்த போரின் தொடக்கம்     (1)

வேர்வையில் நனைந்த உடல், வேதனை சுமந்த மனம்
        வீதியில் வெடித்த முழக்கம் - அந்த
ஊர்வலம் உழைக்கும் வர்க்கம் கேவலக் கடல்கடக்க
        ஓங்கு கலங்கரை விளக்கம்.                (2)

மேதினி முழுதும்இந்த மேதினம் நினைவில் எழும்
        மெய்சிலிர்த்துக் கைஉயர்த்து மே! – தமிழ்
மாதத்தில் உழவனுக்கும் ஓர்திங்கள் நினைவில் எழும்
        மாதம்உண்டு தை-மாத மே!                 (3)

சேற்றிலே கிடந்துழன்று நாற்றிலே உடன்துயின்று
        காற்றிலே உயிர் வளர்த்தவன் - புதிய
ஏற்றத்தை அவன்கரத்தில் மாற்றத்தை அவன்கருத்தில்
        என்று, 'தை'யை மாற்றிவரும் மே!  (4)

‘ரெண்டு காலிலே நடந்து’ சென்றுநாம் சமர்புரிந்து
        வென்றுமீள மே உணர்த்து மே! – அன்று
குண்டு போட்டழிக்க வந்த கூட்டமே நடுங்க ரத்தக்
        கொடியெடுத்த தை,உணர்த்து மே!  (5)

முன்புபோல அல்ல இன்று,’மூண்டெழுந்த போர்கள் வென்று
        முன்நடக்கும் மே முழங்கு மே! – அந்த
நன்மையை உணர்ந்து மே-தை ரெண்டையும் இணைத்தெழுப்ப
        நமதுவர்க்கப் போர்தொடங்கு மே!  (6)

பாரதத்து வர்க்கசமர்த் தேரினை நடத்தவரும்
        படைவியூக மே! தை-மாதமே! – ‘இந்த
ஈரெழுத்து நமதுநாட்டுப் போரெழுத்து’ என்றஞானம்
        ஈந்தமாதம் ‘மேதை’ மாத மே!         (7)

------------------------------------------------------- 
மே – உலகத் தொழிலாளர் தினம்,
தை – தமிழ் உழவர் தினம்.
தொழிலாளரும் உழவரும் இணைந்து நடக்கவேண்டும். (இதைரெண்டுகாலில்நடப்பது என்பார் சீனப்புரட்சித் தலைவர் மாஓ.) இந்தியாவில் அப்படி நடந்தால்தான்  இந்திய-தமிழ்ச் சமூக மாற்றம் சாத்தியமாகும் என்பதே சத்தியமாகும். 
அந்த நோக்கில் இந்தக் கவிதை..
எனது “புதிய மரபுகள்“ தொகுப்பிலிருந்து...
கவிதை பழசுதான்... ஆனால் நிலைமை பழசைவிடப் பழசாக இருக்கும் போது...உழைப்பாளர் பிரச்சினைகள் புதுசைவிடப் புதுசாக வந்துகொண்டே இருக்கும்போது... மறுபதிவு.

படத்திற்கு நன்றி - http://www.mathavaraj.com/ (இவர் எழுத்தாளர் மாதவராஜ், அண்மையில் காலமான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மருமகன் என்பதும் மற்றொரு செய்தி)

6 கருத்துகள்:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமை ஐயா...

    தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

    புதிய செய்திக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் !

    தங்களின் பொன்னான பா வரிகள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா !
    தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள் உழைக்கும் மக்கள்
    அனைவருக்கும் இங்கே உரித்தாகட்டும் .

    பதிலளிநீக்கு
  4. உழைப்பாளர்கள் தின நல் வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான சந்தக் கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு