“முகமது சிங் ஆசாத்!“ -இப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


அது, 1940ஆம் ஆண்டு...
உண்மையைச் சொன்னால் உலகம் ஆங்கிலேய வெறித்தனத்தைத் தெரிந்து கொண்டு காறித்துப்பிவிடுமாம்! அதனால், ஜெனரல் டயர் என்னும் ஆங்கிலப் பிரபுவை நேருக்கு நேராக நின்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்காக லண்டன் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்த அந்த 40வயது இந்தியரைப் பைத்தியம் என்றனர் ஆங்கிலேயர்.
இந்திய விடுதலைப்போராட்ட வீரர்களில் சிலர் லண்டனில் நடந்த அந்த வழக்கிலிருந்து இவரை விடுவிக்க வேண்டுமென்று அன்றைய இந்தியாவின் பிரபல வக்கீல் கிருஷ்ண மேனனை அணுகினர். அவரும், “அவரைப் பைத்தியம் என்று சொல்லிவிட்டால் வழக்கு நிற்காது!என்றார்.
ஆனால், அந்த தேசபக்தர் இதற்கு ஒப்புக்கொள்ள வில்லை! வழக்கு நடந்தது

லண்டன் நீதிமன்றத்தில் அந்தச் சிங்கம் முழங்கியது –
“நான் பைத்தியமல்ல 
என்பெயர் முகமது சிங் ஆசாத்!

ஆங்கில நீதிபதிக்குப் புரிந்தது இப்படி ஒரு பெயர் இந்தியாவில் இருக்க முடியாதென்று! ஏனெனில், இந்தியப் பெயர்களில் ஏதாவதொரு மதத்தின் பெயரும், உள்ளே சாதியின் பெயரும் கூட இருக்குமென்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதோடு, முகமது என்பது இசுலாமியப் பெயர்! சிங் என்பது சீக்கியப் பெயர்! ஆசாத்(சுதந்திரம்)என்பது இந்துப் பெயர்! இப்படி மும்மதங்களின் சேர்க்கையாக ஒரு இந்தியப் பெயர் இருக்க முடியாதே!?!

“சொல் உன் உண்மையான பெயர் என்ன?
“நான் மதமற்றவன், இந்தியன்திரும்பவும் சொன்னார் அந்த வீரர்! “ஆங்கில நாய்களை இந்தியாவிலிருந்து விரட்டுவதே என் நோக்கம்! 1919 ஏப்ரல்-13 அன்று, எனது ஜாலியன் வாலாபாக் மண்ணில் எந்தத் தவறும் செய்யாத சுமார் 20,000 இந்தியர்களைக் காக்கை குருவிகளைச் சுடுவதுபோல் சுட்டுக்கொல்ல ஆணையிட்டான் அந்த மைக்கேல் டயர் எனும் ஆங்கிலேயன். அந்த அழகிய பூங்கா, மதம்கடந்த எமது மக்களின் ரத்தத்தால் சிவந்துபோனது அப்போது -எனது 20வயதில்-- கண்ணெதிரில் பார்த்த இந்தப் படுகொலைக்கு பழிவாங்கவே 20ஆண்டுகளாகக் காத்திருந்தேன். 1940 மார்ச்-13 அன்று லண்டன்  மன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த ஜெனரல் டயரை நான் என் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பழிதீர்த்துக் கொண்டேன். ஜாலியன் வாலாபாக்கில் இந்துக்களும் இசுலாமியர்களும் சீக்கியர்களும் அன்று இந்தியர் எனும் பெயராலேயே கூடியிருந்தனர். நான் மதம்கடந்த அந்தத் தியாகிகளின் அடையாளம்! எனக்கு மதமில்லை நான் இந்தியன்! முகமது சிங் ஆசாத்!“

என்ன ஒரு தேசப்பற்று! மதம் கடந்த தேசப்பற்று! தூக்குத் தண்டனையை நிறைவேற்றியதும் சீக்கிய மத இறுதிச் சடங்குகளைக் கூட அனுமதியில்லை!

அந்த மாவீரனின் உண்மைப்பெயர் உத்தம்சிங் என்பது! 

அவர்பிறந்த பஞ்சாபின் அன்றைய ஆங்கிலஅரசு, அவரது தியாகத்தை தேசபக்தியாக ஏற்க மறுத்த்து மட்டுமல்ல, டயரின் மனைவிக்கு அனுதாபச் செய்தியும் அனுப்பியது!
காந்தியும் நேருவும்கூட “உத்தம் சிங்கின் வழிமுறை தவறு“ என்றனர்!
ஆனால், விஷயம் தெரிந்த பஞ்சாப் மக்கள், அடுத்தமாதம் நடந்த ஜாலியன் வாலாபாக் -20ஆம் ஆண்டு- நினைவாஞ்சலியில் ஆயிரக்கணக்கில் கூடிநின்று, முழக்கமிட்டனர் 
“உத்தம்சிங் வாழ்க! பாரத் மாதாகீ ஜே!” 

நெடுநாள் கழித்து, சுதந்திரம் பெற்றுப் பல்லாண்டுகள் கழித்தே அந்த உத்தமரின் தியாகம் இந்திரா அரசால் ஏற்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது.
ஆனால்-
மக்கள் முன்னரே மரியாதை செலுத்திவிட்டனர்!
ஏனெனில்,
“விதைத்தவன் தூங்கலாம்!
விதைகள் தூங்குவதில்லை“அல்லவா?

நாம் உத்தம்சிங்கின் விதையில் முளைத்த-கிளைகள்-மரங்கள் -விழுதுகள்!
நம் தேசபக்தப் பூங்காவைக் குரங்குகளிடமிருந்து காப்போம்!
வாழ்க உத்தம்சிங்குகள்! வளர்க மதம் கடந்த இந்திய தேசபக்தி!
---------------------------------------------------------------  
பி.கு. (1) “ஜாலியான் வாலாபாக் படுகொலையில் ஈடுபட்டவன் ஜெனரல் டயர் ( Reginald Edward Harry Dyer ). முகம்மது சிங் சுட்டுக் கொன்ற Michael O'Dwyer என்பவர் அப்போது பஞ்சாபின் கவர்னராக இருந்தவர். ஜெனரல் டயரை காப்பாற்ற முயன்றவர். இவர் தான் சுட்டுக் கொல்லவும் தயங்காதே என்ற உத்தரவை ஜெனரல் டயருக்கு வழங்கியதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த தகவல் களையும் இணைத்துச் சொல்வது சில தெளிவுகளையும் பெயர் குழப்பங்களையும் தவிர்க்கும்“-  --என்று பின்னூட்டத்தில் தெளிவுறுத்திய எழுத்தாளர் நீலன் அவர்களுக்கும்,
“ஒரு சின்ன திருத்தம் மட்டும் சொல்ல விழைகிறேன். உத்தம் சிங் கொல்வதற்கு முன்பே நோய் வாய்ப்பட்டு இறந்து போனான் கொடுமைக்காரன் ஜெனரல் டயர் . உத்தம் சிங் கொன்றது டயரின் கொடுமைக்கு துணைபோன அன்றைய பஞ்சாப் துணை நிலைய ஆளுநர் மைக்கேல் ஓ டயர்(michael o'dwyer). கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பின் லண்டனில் ஒரு கூட்டத்தில் அந்தக் கயவன் சொன்னான் " வாய்ப்பு கிடைக்குமானால் இன்னொரு ஜாலியன் வாலாபாக் படுகொலையை இன்று ஆப்ப்ரிக்காவில் நடத்தவும் தயங்கமாட்டேன் என்று" சொல்ல,
"
அந்த வாய்ப்பு உனக்கு கிடைக்காது மைக்கேல்" என்று அவனெதிரில் தோன்றி முழங்கிக்கொண்டே அவனை தனது துப்பாக்கியால் தீர்த்துக் கட்டியது பஞ்சாப் சிங்(கம்)“ – என்று பின்னூட்டத்தில் கூடுதல் தகவல் தந்த எழுத்தாளரும் உதவிக்கல்வி அலுவலரும், வலைப்பதிவருமான நண்பர் தி.ந.முரளிதரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இத இத இதத்தான் நான் எதிர்பார்க்கிறேன். தகவல்களில் தவறுஇருந்தால் திருத்திக்கொள்வது அவசியம்தானே? நான் ஒன்றும் குமாரசாமியில்லயே(?)
நன்றி நண்பர்களே!
-----------------------------------
பி.கு. (2) 31-05-2015 -  “மறைக்கப்பட்ட இந்திய வரலாறு”
இன்றைய  வகுப்புக்காக எடுத்த குறிப்புகளிலிருந்து... நன்றி -திருப்பூர் - DYFI

இவர் யார் தெரிகிறதா?

இவர் யார் தெரிகிறதா?


தமிழ்நாட்டு மக்களில் 
லட்சத்தில் 
ஒருவருக்காவது 
இவரைத் தெரிந்திருந்தால் 
அதுகூட வியப்புத்தான்! 
ஏனெனில் 
இன்றைய 
நம் நாட்டு நிலைமை 
அப்படி இருக்கிறது! 

நாம் இன்று வாழும் “சுதந்திர“ வாழ்க்கைக்காகத் 
தன் கணவரைத் 
தியாகம் செய்தவர் இவர்!

இந்தியச் சுதந்திரப் போரில் கணவரை இழந்த இவர், 1998இல் காலமானார்.

இவரது கணவரின் தியாகம் உலகமெங்கும் வாழும் இந்தியர்களால் முக்கியமாகத் தமிழர்களால் 
நன்கு அறியப்பட்டது.
2004இல் அந்தத் தியாகத் திருமகனின் நூற்றாண்டுவிழாவை ஒட்டி, சிறப்புத் தபால்தலை வெளியிடப்பட்டது

இவரைத் தெரிவது இருக்கட்டும்.

அண்மையில் இவரது கணவரால் புகழ்பெற்ற அவ்வூருக்குப் போயிருந்தேன். அந்த வீரத்திருமகனின் நினைவிடத்திற்கும் போயிருந்தேன். மாமனிதனின் நினைவிடம் இருந்த இன்றைய இருப்பைப் பார்த்து நொந்து திரும்பினேன் –

ஆம்! அந்த மாவீரனின் நினைவுச் சின்னம், இந்திய விடுதலைப் போரின்  நூற்றாண்டு விழாவின்போது --ஆகஸ்டு,15, 1957ஆம் ஆண்டே-- அன்றைய தமிழக அரசால் திறந்துவைக்கப்பட்ட பெருமைக்குரியது! ஆனால்...
தொடர்வண்டி நிலையத்தின் அருகில் நகரின் நடுவில் நினைவுச் சின்னமும் அருகிலேயே நினைவுமண்டபம் ஒன்றும் இருக்கிறது! அங்கு அந்தத் தியாக சீலனின் வாழ்க்கை வரலாறு அரங்கும் இருக்கிறது அதாவது இருந்திருக்கிறது வாழ்க்கை வரலாறு ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டுள்ள போதிலும் இப்போதெல்லாம் திறக்கப்படுவதே இல்லையாம்! இதேபோல் எதிரிலுள்ள- அதாவது முன்னர் இருந்த- படிப்பகமும் பாழடைந்து குப்பையாகக் கிடக்கிறது!

அந்த நம் சுதந்திரப்போராட்ட வீரன் இறந்த இடத்தில் ஒரு சிறிய மேடை கட்டி சுற்றிலும் இரும்புச் சங்கிலி போட்டிருக்கிறார்கள்! அதைச் சுற்றித்தான் குப்பைகள் கொட்டப்படுகின்றன!

தேசத்தியாகிகளை மறந்து, தேசத்துரோகிகளின் காலடிகளை நத்திக்கிடக்கும் --இன்றைய அரசியலில் தலைவர்களாகத் திரியும்—பலஜென்மங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நான் சிலநேரம் யோசிப்பதுண்டு. நீதிமன்றங்களையே கூட ஏமாற்றிவிடக் கூடிய இவர்களை மக்கள் மன்றங்களின் தீர்ப்பாக இதுபோலும் தியாகிகளின் இருப்பிடத்தைத் தினமும் தன் கையால் விளக்குமாறு கொண்டு கூட்டிச் சுத்தப்படுத்துவதையே தண்டனையாக்க் கொடுக்க வேண்டும் எனத்தோன்றுகிறது

தியாகிகள் பதற
துரோகிகள் செலுத்தும்
அரசியல்”  என நான் எழுதி 30ஆண்டுகளாகிவிட்டன. (கல்கி–1986) ஆனால், நிலைமை முப்பதாண்டுக்குப் பின்னும் இன்னும் மோசமாகியே இருக்கிறது!

அந்தத் தியாகி –             
இந்திய சுதந்திரப்போரின்போது, நம் தேசியக் கொடியைக் கீழே போடச் சொல்லி, ஆங்கில அரசின் அடிவருடிக் காவலனால் அடித்து அடித்து மண்டை உடைபட்டும் கொடியை விடாமல் தன் உயிரைவிட்டுக் கொடிகாத்த குமரன்! அக்டோபர்4,1904இல் பிறந்து, ஜனவரி-11,1932இல் 28வயதில் மறைந்த
கொடிகாத்த குமரன் தான் அவர்!

இந்தப் படத்திலிருக்கும் நம்தாய் அவரது துணைவியார் ராமாயி அம்மாள்.
தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்! கருகத் திருவுளமோ? மகாகவி பாரதியின் இவ்வரிகளை வாய்விட்டுப் பாடிப்பாருங்கள்.. பெருமூச்சு வரும். நாடு வாழ்க!
---------------------------------------------------  

நேற்று திருச்சி இன்று அருப்புக்கோட்டை நாளை விருதுநகர் மறுநாள் திண்டுக்கல்!

நேற்று திருச்சி 
இன்று அருப்புக்கோட்டை
நாளை விருதுநகர் 
மறுநாள் திண்டுக்கல்!

மேமாதம் என்றாலே நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். பங்குனி – சித்திரை முழுவதையும் விழாக்களுக்காக ஒதுக்கிய தமிழர்களின் நிலவியல் மற்றும் உளவியல் நோக்கை நினைத்தால் வியப்புத்தான்...
அரசுப் பணி ஓய்வு பெற்றாலும் எழுதுவதையும் பேசுவதையும் நிறுத்த முடியாத நிலையில் நானும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்...


மே-3ஆம் தேதி கந்தர்வன் நூலகத்தில் புத்தக்க் கொடையுடன் சொற்பொழிவுகள்.. அதோடு, “கொம்பன்“ திரைப்படத்தில் பாடல்கள் எழுதிய நம் தனிக்கொடிக்கு ஒரு பாராட்டுவிழா! (படம்)
“கொம்பன்“ பாடலாசிரியர் தனிக்கொடியை நூல்கள் வழங்கிப்
பாராட்டுகிறார் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்

உன் கனவு நினைவாகும் பாரதிராஜா!

உன் கனவு நினைவாகும் பாரதிராஜா!

இந்த ஆண்டு வெளிவந்த பத்தாம்வகுப்புத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று 41பேர் மாநில அளவில் முதலிடம் 
இதில் ஒரு தனிச்சிறப்பான செய்தி என்னவெனில் -

முதல்மதிப்பெண் எடுப்பவர் முதல்தர மாணவரா?



பத்தாம்வகுப்புத் தேர்வுமுடிவு – மாநில முதலிடம் 41பேர்! மற்ற திறமை, பங்கேற்பையும் பார்த்து, “முதல்“ இடங்களைத் தீர்மானிக்கலாமே!

உதாரணமாக  மதிப்பெண் தவிரவும் இதர திறமைகள், ஈடுபாடுகளைக் கணக்கிடலாம் அவற்றையும் ஆண்டுமுழுவதும் பார்த்து தொடர் மதிப்பிட்டு “மாணவரதரத்தை“ நிர்ணயம் செய்யலாமே!

ஸ்ரீராமனும் – தவளையும் - ஒரு நீதி(பதி)க்கதை



ஆற்றில் குளிக்கப்போன ஸ்ரீஇராமன், தனது வில்லை ஆற்றங்கரை அருகில் மணலில் ஊன்றி நிறுத்திவிட்டுக் குளித்தானாம்!
குளித்து முடித்து வந்து, வில்லை எடுக்கும்போது பார்த்தால்...!
வில் ஊன்றிய இடத்தில், வில்லில் குத்துப்பட்டு ஒரு தவளை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததாம்!

பதறியபடி ஸ்ரீராமன் தவளையிடம் கேட்டானாம் -
“அடப் பாவி தவளையே! என்ன இப்படிக் கிடக்கிறாய்? என் வில்லிலா குத்துப் பட்டாய்...?“
“ஆமாம் பிரபோ.. நான் என்ன செய்வேன்?“ என்றதாம்!

“அடடா.. நான் வில்லை ஊன்றும்போதே கத்தியிருக்கக் கூடாதா? இப்படி அநியாயமாகக் குத்துப்பட்டு விட்டாயே??

“மன்னிக்க வேண்டும் ஸ்ரீராமா... வேறு யாராவது குத்தியிருந்தால் ஸ்ரீராமா என்னைக் காப்பாற்று என்று உன்னைக் கூப்பிட்டிருப்பேன்.. நீயே குத்தும்போது நான் யாரைக் கூப்பிடுவேன் ராமா?என்றதாம்!
------------------------------------------
Judge Gunha 

Judge Kumarasamy
நாறிக்கிடக்கும் 

இந்திய அரசியலில் 
யாராவது தவறுசெய்தால் 
நீதிமன்றத்தில் முறையிடலாம்... 

அந்த நீதி மன்றமே 
மாற்றிமாற்றி 
 நீதிசொன்னால் 
யாரிடம் போய் முறையிடுவது?

இராமனாவது.. 
நீதிமன்றமாவது! 
மக்களுக்கு 
நியாயம் கிடைக்க வேண்டுமெனில், 
இனி மக்களே முடிவுசெய்தால்தான் உண்டு!

---------------------------------

இன்றுஎன் வயதோ அறுபது, எனினும் மனமோ இருபது!

இன்றென் வயதோ அறுபது 
        எனினும் மனமோ இருபது


செய்ய நினைத்ததில் ஒருசிறு பகுதியும்
    செய்யாப் பொழுதே பெரும்பொழுது! - காலம்
பைய நடந்தது, வயிறு வளர்ந்தது,
    பயணப் பயனோ வெறும்பழுது! –    (இன்றென் வயதோ 

நன்றென்ன செய்தேன்? என்று நினைந்தால்
    நகைப்பே மிஞ்சும்! பகைமிஞ்சும்! – சில
நன்றென எண்ணிய சில,பின் னாளில்
    நஞ்சென மாறிய தொகைவிஞ்சும்! - (இன்றென் வயதோ 

நல்லஎன் துணைவி நல்லஎன் பிள்ளைகள்
    நண்பர்களாலே இருக்கின்றேன் – இனி
அல்லஇவ் வுலகில் ஆயிரம் தழும்புகள்
        அனைத்தும் கடந்தே நடக்கின்றேன் - (இன்றென் வயதோ 

பாரதி, பட்டுக் கோட்டையர் போட்டநல்
    பாதையில் தான்என் பயணவழி – எம்
சாரதி மார்க்சுடன் பெரியார், அம்பேத்கர்
    சார்ந்தே தொடரும் மரணம்வரை - (இன்றென் வயதோ 

ஆவியைக் கண்டு,அதை “வெளிச்ச“ உலகினுள்
    ஆற்றுப் படுத்திடும் “பைரவி“கள் – பல
பாவியைக் கொண்டும் பதறா உலகில்என்
    பலதிறன் கண்டது வெறும்பதர்கள்! - (இன்றென் வயதோ 

சாதி மதங்களில் சுயநலப் பேய்களின்
    சாகச நாடகப் பொழுதுகளில் –என்
ஆதி மொழித்திறன் ஆற்றிய தென்?என
    ஆழ்ந்து நினைந்தால் பழுதுகளே! - (இன்றென் வயதோ 

இன்னும் சிலபல வருடமிருந்தால்(?)
    ஏதேனும் சில செய்வேன்நான் – என
எண்ணும் இன்றே புதிதாய்ப் பிறந்தேன்
    இனியன செய்தே உய்வேன்நான்! - (இன்றென் வயதோ 

நல்ல கல்வியொடு நல்ல வாழ்வினை
    நாடு நலம்பெற உழைத்திடுவேன் – இனி
உள்ள நாள்களை யேனும் உருப்படி
    ஆகப் பயனுறப்  பிழைத்திடுவேன்! - (இன்றென் வயதோ 

ஐந்தில் வளையா உளத்தை வளைத்தே
    அறுபதில் வளைக்க முயல்கின்றேன் – இனி
நைந்து முடங்கும் உடலைப் பேணிடும்
    நல்வழி உழைப்பே அயர்கில்லேன்! - (இன்றென் வயதோ 

நன்றி நன்றி!என் பிழைகளை மறந்த
    நட்பால் உயிருடன் இருப்பதனால் – இனி
என்றும் மறவாப் பண்பொடும் பணிகளை
    இனியும் தொடர்வேன் இருபதென! – ((இன்றென் வயதோ 

------------------11-05-1956 -- -- 11-05-2015 ------

தண்ணீர்ப்பஞ்சம் - குறும்படம்

“தண்ணீர்ப் பஞ்சம்“ – குறும்படம்

நான்காம் உலகப்போர் வந்தால் 
அது, அனேகமாகத் தண்ணீர்ப்பஞ்சம் காரணமாகவே வரக்கூடும் என்று அறிவியல் உலகம் அலறுகிறது...

குறும்படம் ஓடுவது ஒன்றரை நிமிடம்தான்.

ஆனால் இது நடந்தால்... உலகப்போர் என்ன? உள்நாட்டுப்போருடன் குடும்பமே குத்து, வெட்டு என்று மனித இனமே அழிந்துபோவது உறுதி.

நீங்களும் பாருங்கள்.. முடிந்தால் பகிருங்கள்.
அந்த நண்பருக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுங்கள்.
குறும்படம் காணச் சொடுக்குக -

நன்றி – யாழ் மதிசுதா
மின்னஞ்சல் mathi sutha 

கக்கன் அவர்களின் மகனுக்கா, இந்தக் கதி?

கக்கன் மகன் கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் 30வருடங்களாக இருக்கிறார் எனும் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.


காமராசர் ஆட்சியில் நேர்மையான அமைச்சராக இருந்தவர் என்று இன்றும் மக்களால் புகழப்பெறும் கக்கன் அவர்களின் மகனுக்கே இந்தக் கதியா என்று எரிச்சலாகவும் கோபமாகவும் வந்தது!

எனது வாட்ஸ்-அப் குழுவொன்றில் வந்த செய்தியிது!

இந்தச் செய்தி உண்மைதானா?
உண்மையாக இருக்குமானால்,
இது நாடா, இல்லை சுயநலப் பேய்களின் சுடுகாடா?
 ------------------------ 

படிக்க வேண்டிய இலக்கிய இதழ்கள்..(1)

அண்மையில் நான் எழுதிய எழுத்தாளர்க்கு அவசியமான சில குறிப்புகள்பதிவில் எழுதியிருக்க வேண்டிய நல்ல இதழ்களைப் பற்றிய அறிமுகம் தனித்தொடராக வரவேண்டும் என்பதால் அப்போது விவரித்து எழுதவில்லை. அந்த வரிசை இப்போது..
கவிதை ரசனையும், 
இலக்கிய விவரங்களும் ததும்பும் இதழ்! 

“கவிதை உறவு” விருதுகள் அறிவிப்பு!

நம் நண்பர் புதுக்கோட்டைக் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு 
விக்கிரமன் நினைவு விருது! அவரை வாழ்த்துவோம்! 

நமது, “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” - நூலுக்கு கல்வியியல்-இளைஞர் நல நூலுக்கான முதல்விருது! 

என்னை எழுதத்தூண்டிவரும் நமது வலை நண்பர்களுக்கு இவ்விருதை அர்ப்பணித்து மகிழ்கிறேன்.

விருதுக்குத் தேர்வு செய்த “கவிதை உறவு” நிர்வாகியர்க்கு 
எனது அன்பின் நன்றி.

இதர விருதுகள் விவரம் - இணைப்பில் காண்க. 

“தப்பித்த குரங்குகள்!“--பேரா.ச.மாடசாமி. தமிழ்இந்துவில் வந்த அருமையான கல்விக் கட்டுரை



வடிவமைக்கப்படாமல் தப்பித்தது எதுவோஅதுவே உன் ஜீவன் மிக்க சாராம்சம் என்று சிந்தனையாளர்கள் சொல்வதுண்டு. நாங்கள் கல்வி உரையாடலில்வேடிக்கையாக இதைத் தப்பித்த குரங்குகள்’ என்று குறிப்பிடுவோம். யார் கைகளும் படாமல்யார் கைகளிலும் சிக்காமல் தப்பித்தவைதான் அசல்வடிவமைக்கப்பட்டதெல்லாம் நகல்தான்! பள்ளிக்கூடம் - உலகின் மிகப்பெரிய நிறுவனம் - தப்பிப்பது சுலபமாஅசல் முகத்தைத் திட்டமிட்டுக் கரைக்கிற இடம்!

“வாட்ஸ்-அப்“ ரசனை வரவுகள்...

“வாட்ஸ்-அப்“ ரசனை வரவுகள்...

இவற்றை எழுதியவர் யார் என்று தெரியவில்லை... பெரும்பாலும் பிறர் அனுப்பியதை அடுத்தவருக்கு அனுப்பும் நண்பர்களே..என்பதால்.. 

ஆனாலும் நான் ரசித்த சிலவற்றை நண்பர்களிடம் பகிர்கிறேன்..

“மேதை’ – மாதமே!


'மேதை’ – மாதமே!


“எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு,
        எட்டுமணி நேர உறக்கம் - இதை
கெட்டமன மூலதன வர்க்கமே! தருக”எனக்
        கேட்டெழுந்த போரின் தொடக்கம்     (1)

வேர்வையில் நனைந்த உடல், வேதனை சுமந்த மனம்
        வீதியில் வெடித்த முழக்கம் - அந்த
ஊர்வலம் உழைக்கும் வர்க்கம் கேவலக் கடல்கடக்க
        ஓங்கு கலங்கரை விளக்கம்.                (2)

மேதினி முழுதும்இந்த மேதினம் நினைவில் எழும்
        மெய்சிலிர்த்துக் கைஉயர்த்து மே! – தமிழ்
மாதத்தில் உழவனுக்கும் ஓர்திங்கள் நினைவில் எழும்
        மாதம்உண்டு தை-மாத மே!                 (3)

சேற்றிலே கிடந்துழன்று நாற்றிலே உடன்துயின்று
        காற்றிலே உயிர் வளர்த்தவன் - புதிய
ஏற்றத்தை அவன்கரத்தில் மாற்றத்தை அவன்கருத்தில்
        என்று, 'தை'யை மாற்றிவரும் மே!  (4)

‘ரெண்டு காலிலே நடந்து’ சென்றுநாம் சமர்புரிந்து
        வென்றுமீள மே உணர்த்து மே! – அன்று
குண்டு போட்டழிக்க வந்த கூட்டமே நடுங்க ரத்தக்
        கொடியெடுத்த தை,உணர்த்து மே!  (5)

முன்புபோல அல்ல இன்று,’மூண்டெழுந்த போர்கள் வென்று
        முன்நடக்கும் மே முழங்கு மே! – அந்த
நன்மையை உணர்ந்து மே-தை ரெண்டையும் இணைத்தெழுப்ப
        நமதுவர்க்கப் போர்தொடங்கு மே!  (6)

பாரதத்து வர்க்கசமர்த் தேரினை நடத்தவரும்
        படைவியூக மே! தை-மாதமே! – ‘இந்த
ஈரெழுத்து நமதுநாட்டுப் போரெழுத்து’ என்றஞானம்
        ஈந்தமாதம் ‘மேதை’ மாத மே!         (7)

------------------------------------------------------- 
மே – உலகத் தொழிலாளர் தினம்,
தை – தமிழ் உழவர் தினம்.
தொழிலாளரும் உழவரும் இணைந்து நடக்கவேண்டும். (இதைரெண்டுகாலில்நடப்பது என்பார் சீனப்புரட்சித் தலைவர் மாஓ.) இந்தியாவில் அப்படி நடந்தால்தான்  இந்திய-தமிழ்ச் சமூக மாற்றம் சாத்தியமாகும் என்பதே சத்தியமாகும். 
அந்த நோக்கில் இந்தக் கவிதை..
எனது “புதிய மரபுகள்“ தொகுப்பிலிருந்து...
கவிதை பழசுதான்... ஆனால் நிலைமை பழசைவிடப் பழசாக இருக்கும் போது...உழைப்பாளர் பிரச்சினைகள் புதுசைவிடப் புதுசாக வந்துகொண்டே இருக்கும்போது... மறுபதிவு.

படத்திற்கு நன்றி - http://www.mathavaraj.com/ (இவர் எழுத்தாளர் மாதவராஜ், அண்மையில் காலமான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மருமகன் என்பதும் மற்றொரு செய்தி)