வெள்ளி, 3 ஏப்ரல், 2015கார்த்திக்கு இது இரண்டாவது பருத்தி வீரன்! 

அதே வீறாப்புடன் மெட்ராஸ் படத்தின் பகுதிவாழ்க்கையை மெருகேற்றி, தென்தமிழகத்தின் கொம்பையா பாண்டியன் (எ) கொம்பனாக அருமையாக இயல்பாக மீசையை முறுக்கிக் கொண்டே நடித்திருக்கிறார்.

ஏற்கெனவே குட்டிப்புலியில் எட்டடி பாய்ந்திருந்த இயக்குநர் முத்தையா இதில் பதினாறு அடி பாய்ந்திருக்கிறார்! 


ஆரம்ப கட்டத்திலேயே வாசலுக்கு ஓடும் குழந்தையை மடக்கிப் பிடிக்கும் தாய், "ஏலேய் ஒழுங்கா நீ பள்ளிக்கூடத்துக்குப் போடா.. இல்லன்னா... ந்தா.. வெள்ளையும், சொள்ளையுமா மீசைய பெரிசா வச்சிட்டு வெட்டியாத் திரியிராய்ங்க பாரு.. அவிங்களப்போல உருப்படாம போயிருவடா.." வசனத்தில் தொடங்கிய கைத்தட்டல், படம் முழுவதும் தொடர்வது கவனத்திற்குரியது! கிராமத்து மண்வாசம் வீசும் வசனங்கள்!

அரிவாளை விட அன்பு நல்லது என்பதுதான் கதை! அதை அரிவாளுடனே சொல்லியிருக்கிறார்கள்!

"முடியை வெட்டினா வலிக்காது. பிடுங்கினாதான்யா வலிக்கும். அப்படித்தான் ஒரு பொண்ணோட வாழ்க்கை!" 
"என் பையன் இருக்கானே, அவன் கொல்லையில இருக்கிற சாணி மாதிரி. அவனை இந்த ஊர்க்காரங்க எருவா மாத்திட்டாங்க. நீதான் அந்த சாணியைப் பிடிச்சுப் பிள்ளையார் ஆக்கணும்"  கார்த்திக்கின் தாயாக.. மேக்கப் இல்லாத வித்தியாசமான கோவை சரளா ! வசனம் மற்றும் இயக்கத்தோடு வெற்றி பெற வைத்திருக்கிறார் முத்தையா.

கும்கியில் மலைவாழ் பெண்ணாக வந்த லட்சுமி, இதில் பழனியாக வாழ்ந்திருக்கிறார். தந்தைப்பாசத்தையும் விடாமல் கணவன் காதலையும் காப்பாற்றி, “டிபிகல்“ தெக்கத்தித் தமிழ்ப்பெண்ணாக நடிப்பிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.

ராஜ்கிரண், வேட்டியை அண்ட்ராயருக்கு மேல் தூக்கிக் கட்டி கிளம்பினால் பத்துப்பேராவது பறப்பது உறுதி என்பதை மறக்க வைத்து, 'சாதி சனமெல்லாம் கோயிலுக்குப் போகுது.. நீயும் வாப்பா..' என்று ஊரார் அழைக்க,  'சனம் இருக்கிற இடத்துக்கு வரலாம், கூடவே சாதியும்ல வருது அங்க எதுக்கு நா வரணும்!' எனும் அவரது முதல் வசனமே இவர் ஒரு வித்தியாசமான ராஜ்கிரண் என்று காட்டிவிடுகிறார். அருமை!

மாமனாக வரும் தம்பி ராமையா வழக்கம்போல கிராமத்து அப்பாவி ப்ளஸ் கதாநாயகத் தோழன் பாத்திரத்தில் மைனாவில் தொடங்கியதை தொடர்ந்து இதிலும் அருமை!

தெக்கத்திக் கதைகளை ஏராளமாகத் தேக்கிவைத்திருக்கும், மிகச்சிறந்த கதைசொல்லியான எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி (தமிழ் இந்துவில் வாரந்தோறும் எழுதியவர்) இதில், கிராமத்துப் பஞ்சாயத்தாக போலியும் வீறாப்பும் கலந்து கரகர குரலும் நடிக்க, பாத்திரம் உணர்ந்து நடித்து ஜெயித்திருக்கிறார்.

ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், வில்லனாக வந்து பயமுறுத்தி நெஞ்சில் நின்றுவிட்டார்.. வில்லர்கள் எல்லாருமே தெக்கத்திக்கார நடிப்பு! (மூஞ்சிகள்... அடடா!)

புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,“இரு சமூகங்களுக்கு எதிரான வசனங்கள், காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன. இந்தப் படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே, படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்“ என வழக்கு மன்றம் போயிருந்தார். வழக்கு தள்ளுபடியாகி வெளியாகிவிட்டது. 

படத்தில் அப்படி ஒன்றும் இல்லை.. வன்முறை வேண்டாம் என்கிற செய்தியை வழக்கமான தமிழ்ச்சினிமாவின் வழக்கப்படி வன்முறையோடு சொல்லியிருக்கிறார்கள்.. அது ஒன்றுதான் அடிப்படை மாற்றமில்லாத தமிழ்ச்சினிமா என்று காட்டியிருக்கிறது. எனினும் வழக்கமான தெக்கித்தி கிராமத்துப் பிரச்சினைகளை சுவையோடு சொன்னதே வெற்றிதான்.

வித்தியாசமான கார்த்திக், வித்தியாசமான ராஜ்கிரண், வித்தியாசமான கோவை சரளா, வித்தியாசமான கருணாஸ், வித்தியாசமான வசனம், வித்தியாசமான பாடல்கள், வித்தியாசமான இறுதிக்காட்சியின் விறுவிறுப்பு! ஆனால், கதைமட்டும் வழக்கமான கதை! எனினும் வித்தியாசமான அணுகுமுறையால் படம் வெற்றி பெற்று விசில்பறக்க நன்றாக ஓடுகிறது! ஓடவேண்டிய படமும் கூட!

புதிய கவிஞர் எங்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த அற்புதக் கவிஞர் இரா.தனிக்கொடி நான்கு பாடல்களை எழுதி, முதல் அறிமுகத்திலேயே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். 
அவரது “கருப்பு நிறத்தழகி“ அரங்கில் விசில்! பிரபலமாகி, கேட்ட எல்லாரையும் முணுமுணுக்க வைத்திருக்கிறது.  
ஜனரஞ்சக இசை ஜி.வி.பிரகாசுக்கும் பாராட்டுகள்.

இனியநண்பர் கவிஞர் இரா.தனிக்கொடிக்காகவே, நீண்டநாள் கழித்து, -இணையவழி சீட்டுப் பதிந்து- குடும்பத்துடன்
திரையரங்கில்போய்ப் பார்த்து மகிழந்தோம்! முதல்படத்தில் முத்திரை பதித்துப் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துகள் நண்பா!

வழக்கு மன்றத்தில் மட்டுமல்ல, 
திரையரங்கத்திலும் 
ரசிகர்களின் ஆரவார ஆதரவோடு, 
வெற்றிபெற்றுவிட்டான் கொம்பன்!
-----------------------------------------

9 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  படம் பற்றி சொல்லிய விதம் பார்க்க தூண்டுகிறது.. நிச்சயம் சனிக்கிழமை பார்க்கின்றேன்..கவிஞருக்கு வாழ்த்துக்கள். ஐயா த.ம1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. சொல்லப்பட்ட வசனங்களே நல்லாயிருக்கு... பாத்திடுவோம்...

  பதிலளிநீக்கு
 3. இது வெளியிட வேண்டாம் எனபது என் விருப்பம்...

  கிரிக்கெட் பற்றிய பதிவு : அனாமதேய பின்னூட்டகள் பல வரலாம்... அதற்காக ஒரு பதிவு வேண்டாம்...

  பதிலளிநீக்கு
 4. /// 'சனம் இருக்கிற இடத்துக்கு வரலாம், கூடவே சாதியும்ல வருது அங்க எதுக்கு நா வரணும்!' ///
  அருமை ஐயா அருமை
  புதுக்கோட்டைக் கவிஞருக்கும் வாழ்த்துக்கள்
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 5. தலைப்பைப் பார்த்ததும் சினிமா பதிவாக இருக்காது என்றே நினைத்தேன்
  முத்து நிலவன் ஐயா திரைப்படம் பார்த்ததன் காரணம் புரிந்தது.
  தங்களுக்கு உரித்தான நடையில் விமர்சனம் அமைந்திருக்கிறது.
  கவிஞர் தனிக்கொடி அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. வசனம் எல்லாம் அருமையா இருக்கு போல!

  புதுக்கோட்டைக் கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. வசனமெழுதியவர் இயக்குனர் முத்தையாவே. ஆனால்...//சாதி சனமெல்லாம்....// என்று முதல் வசனத்தைப்பேசி தன்னை வித்தியாசமாகக் காட்டிவிட்டார் என்று கிரணுக்கு கிரடிட் கொடுத்துவிட்டீர்கள். பாவம் முத்தையா?

  தம்பிராமையா, அப்பாவியாக படத்தில் காட்டப்படவில்லை. நாயகனுக்குத் துணையாக வரும் கட்டங்களில் அப்பாவியாக அவர் வேண்டுமென்றே நடித்து நாயகனை பல இன்னல்களிலிருந்து காப்பாற்றவும், அவனுக்கு அறிவைப்புகட்டும் வகையிலும் வருவதாக முத்தையா சித்திரிக்கிறார். அப்பாவி என்றெழுதியிருக்கிறீர்கள்.

  வேல இராமமூர்த்தி படத்தில் வில்லானாகப் பார்க்கப்பட‌வில்லை. ஊர்மக்களின் ஒரு குறிப்பிட்ட நபராகவும் நாயகனை நன்கு புரிந்துவைத்து அவனை ஆதரிப்பவராகவும் காட்டப்பட்டிருக்கிறார். அவரின் அற்புதமான நடிப்பைப்பார்க்க ஒரு முறை, மதயானைக்கூட்டம் என்ற படத்தைப் பார்த்துவிடுங்கள். கொம்பனின் கதைதான் அது. ஆனல் இதைவிட பன்மடங்கு சிறப்பானது. தமிழ் இந்துவில் எழுதுவதற்கு முன்பே அவர் மாபெரும் சிறுகதை எழுத்தாளர். அவர் சிறுகதை இல்லாமல் தமிழில் சிறந்த சிறுகதைகள் என்ற தொகுப்பை எவராலும் போடமுடியாது.

  கொம்பனில் வில்லன் குண்டன் இராமசாமியாக வரும் சூப்பர் சுப்பராயனே.

  நீங்கள் குறிப்பிட்டது போல படம் ஜாதியைப் பற்றியன்று. ஆயினும் நாம் பார்த்த படம் தணிக்கை செய்யப்பட்டதொன்றே! தணிக்கை செய்யப்படும் முன் அதில் வந்த சில காட்சிகளும் வசனங்களும் ஜாதிக்கலவரத்தைத் தூண்டலாம் என எடுக்கப்பட்டுவிட்டன‌. எனவே மரு. கிருஷ்ணசாமியின் எதிர்ப்பு சரியே.

  முத்தையாவின் வசனங்களில் உள்ள தவறு தென்மாவட்ட மக்கள் அனைவரும் மதுரைத்தமிழில்தான் பேசுவர் என்ற நினைப்பு. (அடுத்த மடல் பார்க்கவும்)

  பதிலளிநீக்கு
 8. கதையின் பிற்புலம் இராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் கடற்கரைச்சாலையில் உள்ள சாயல்குடி என்ற ஊரும், அதைச்சுற்றியுள்ள சிற்றூர்களுமாகும். சாயல்குடி இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்குமூர்; ஆனால் தூத்துக்குடி எல்லையையொட்டிவரும் ஊர். சாயல்குடியில் இறங்கியதுமே தேவரின் பிரமாண்டமான சிலையைப்பார்க்கலாம். முக்குலத்தோரில் ஓரினத்வரால் நிரம்பிய ஊர்ப்புலம். இவர்கள் பேச்சு, தூத்துக்குடி வட்டாரப் பேச்சே. எனவே ...ஏலே... என்று வசனஙகள் வருவன சரியே (Varun may note this!) மற்றபடி அவிங்க்..இவிங்க என்ற மதுரைப்பாசையில் வசனங்கள் வந்தது பிழை. அங்கிட்டு...இங்கிட்டு...நிக்கி (-நிற்கிறது).ஏலே...வாலே...போலே...பிள்ளவுள்ள...பெண்டுக (பெண்கள்) அவிக...இவிக...இன்னும் ஏராளாமான தூத்துக்குடி வட்டாரச்சொற்களைப்போடாமல் கலந்து விட்டார். மேலும், வசனங்கள் செந்தமிழிலும் வருகின்றன. நீங்கள் காட்டும் வசனங்கள் பொதுத்தமிழ்.

  ஆனால் உங்களைப்போல அந்நியர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. அவர் குழப்புகிறார் என்பதை உங்களால் அறிய முடியாமல் போகிறது. ஆயினும் வசனங்கள் முத்தாய்ப்புக்களாக கவர்கின்றன என்பதில் எவருக்கும் ஏற்புடைத்து.

  புலவரே! மாதொருபாகனில் கொங்கு வட்டாரச்சொற்களைக் கற்றோம். கி.ராஜநாராயணின் நாவல்களிலும் சிறுகதைகளிலும் கரிசல் காட்டு வட்டாரச்சொற்களைக் கற்றோம். ராஜம் கிருஸ்ணனின் கரிப்பு மணிகளிலும் சிரிதர கணேசனின் உப்பு வயலிலும் தூத்துக்குடி வட்டாரச்சொற்களைக் கற்றுவிடுங்களேன்!

  இதையே சினிமா வசனமெழுதுவோரும் செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 9. Muthunilavan,

  Tamil makkal naasamaaha poha vaikkum cinemavai, thaliyil thooki vaithu adiyirukureergal!

  Ungal pani sirakkatum.
  Tamilin peyar solliye makkalai cinima, srilanka endru mukka vaithu mugthi adaiyattum!

  Vekkam illaya endru ketpathai thavira enna solvathu?

  பதிலளிநீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...