எனக்குப் பிடித்த கவிதைகள் –2/100 -முதலிரவுக் காதல்!

எனக்குப் பிடித்த கவிதைகள் 
–2/100 - முதலிரவுக் காதல்!
“என்ன அழகு நீ! 
சுத்தத் தங்கம் மாதிரி 
சும்மா தகதகனு மின்னுற!
உன் பல்வரிசை 
முத்துக் கோத்த மாதிரில்ல இருக்கு!
ஆமா என்ன உன் உடம்புல இருந்து 
கும்முனு ஒரு வாசம் வருது?
கரும்பு, தேன் ரெண்டையும் சேர்த்தா 
சுவையா இருக்குமோ என்னமோ இந்த ரெண்டும் சேர்ந்தே உன்கிட்ட இருக்கே!
மாணிக்கம் மலையிலயா கிடைக்கும் 
நீ அத விட மேலானவ..
அமுதம் என்ன கடலிலயா இருக்கும் 
நீ அத விட உயர்ந்தவ...
இனிய இசை யாழ்ல இருந்தா பிறக்கும்? 
உன் மெல்லிய சிரிப்பு அதவிட...
அடடா... உன் நீண்ட கூந்தல் அழக 
என்ன சொல்ல...போ..“
இப்படி ஒருவன் தன் காதல் மனைவியை முதலிரவில் வர்ணித்தால் அவள் என்ன பேச முடியும்? ஒரு வார்த்தை கூட அவள் பேசவே இல்லை!
ஆனால், அவனது ஒவ்வொரு வரிக்கும் வர்ணனைக்கும் அவள் உள்ளம் குளிர்ந்து, உள்ளே குழைந்து கொண்டே வந்ததை அவளது அடுத்தடுத்த செயல்கள் அவனுக்கு உணர்த்தின.. அதையே அவனும் அடுத்தடுத்த வர்ணனையாக வார்த்தைகளாக அடுக்கிக் கொண்டே போனான்..
இது... தமிழின் புகழ்பெற்ற 
இலக்கிய வர்ணனை – எது தெரியுதா?


சரீ... அடுத்தவங்க முதலிரவ எட்டிப் பார்க்கலாமா? சே..அசிங்கம்ல? அதை வர்ணிக்கிறது எப்படி நாகரிகமாகும்? ஆனா.. ஒருத்தர் மட்டும் எட்டிப பாக்கலாம்...அவர்தான் நேர்மையான படைப்பாளி.
படைப்பாளிக்கு மட்டும்தான் உரிமை உண்டு!

எட்டிப் பார்த்தவர் பெயர் இளங்கோவடிகள்.
அவர் எழுதிய இலக்கியம் சிலப்பதிகாரம்.
இந்த வர்ணனை --
கண்ணகி-கோவலன் முதலிரவில் நடந்தது!

பாடலைப் பாருங்கள்-
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமுதே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னை
ஆனால் இதற்கான பொருள் மேற்சொன்னது மட்டுமல்ல,
மேலும் மூன்று அழகான பொருள்களும் உண்டு!
அதாவது
நன்கு சிந்தித்தால் நான்கு பொருள் வரும் !
சில கவிஞர்களின் பாடல்களில் இருபொருள் வருவதுண்டு
ஆனால், இந்த வரிகளுக்கு நான்கு பொருள்கள் உண்டு!
முதற் பொருள் மேலே சொன்னது 
அது சாதாரணமானது.

இரண்டாவது பொருள்
நான்கு நிலமாய் வர்ணிக்கும் நயம்
நால்நிலத்திற்குரிய(கரு)பொருள்தான் அவை!
பொன்–நிலத்தில் கிடைக்கும்–குறிஞ்சி
முத்து–கடலில் கிடைக்கும்–நெய்தல்
விரை–காட்டில் கிடைக்கும்–முல்லை
கரும்பு–வயலில் கிடைக்கும்–மருதம்
தங்கம் குறிஞ்சியில் மட்டும்தான் கிடைக்குமா?
அதே போல முத்து கடலில்மட்டும்தான் கிடைக்குமா?
இவை இரண்டும் வேறு இடங்களிலும் கிடைக்குமே என்று யாரோ கேட்டது போல இந்தா வச்சிக்க என்று பதில் தருகிறார் இளங்கவிஞர் இளங்கோ!
மாணிக்கம் மலையில்தானே கிடைக்கும்,
அமுதம் கடலில்தானே கிடைக்கும் அவையும் இவளிடம் உண்டு. அதேபோல் தேன் மலையில்தானே கிடைக்கும் இந்தா வச்சிக்க... சரியா?
(இலக்கணத்தில் ஐந்து நிலம் இருந்தாலும், தமிழ் நாட்டில் ஐந்தாவதான பாலை இல்லை, அதற்கான விளக்கத்தையும் இளங்கோவடிகளே பின்னர் தருகிறார் இன்றுவரை பாலைக்கான விளக்கம் அதுதான்!)

சரி, இனி 
மூன்றாவது பொருள் –
மூன்றாம் தமிழால் விளக்கும் முயற்சி
காதல் கணவன் தன்னை வர்ணிக்க வர்ணிக்க, வெட்கப்படும் தமிழ்மகளாம் கண்ணகி ஒரு வார்த்தையும் பதில் பேசவில்லை. காரணம் இரண்டு, ஒன்று அவளின் இயல்பான நாணம். இரண்டு அவள் சிரிப்பதைக் கூட வாயிதழ் கொண்டு காட்டுவதில்லை, கண்ணால் மட்டுமே காட்டுபவள் அதனால் தான் அவள் கண்ணகி! (கண்ணால் சிரிப்பவள், நகுதல்-சிரித்தல்)
(பொதுவாக முதலிரவில் பெண்கள் அதிகம் பேசுவதில்லை என்றும் ஆண்கள்தான் உளறிக் கொட்டுவார்கள் என்றும் கேள்வி! பின்னர் இது அப்படியே தலைகீழாய் மாறிவிடுவதுதான் தெரியுமே?!)
ஆனாலும் கண்ணாலேயே சிரிக்கக் கூடியவள், தன் முகபாவத்தாலும் செயல்களாலுமே தன் மன உணர்வைக் காட்டுகிறாள். எனவே, மௌன நாடகத்தையே ஒவ்வொரு வரிக்கும் பதிலாகத் தருகிறாள் கண்ணகி.

எப்படி? இதோ... இப்படி –
“மாசறு பொன்னே!“ என, பார்த்தவுடன் தன்னை வர்ணிக்கும் கோவலனின் சொற்கள் தந்த நாணத்தில் அவள் இலேசாகப் புன்னகைக்கிறாள் (இது எங்கயுமே உள்ளது தானே?!!) அவளது பல்வரிசை இலேசாகத் தெரிய “வலம்புரி முத்தே“ என்கிறான்.. இதழ் பிரிந்தவுடன் நறுமணம் வீசுகிறது (அருகில் நெருங்கி இருப்பதால்), உடனே அந்த வாசத்தை உணர்ந்து, “காசறு விரையே“ என்கிறான்.அதன் பின் முதலிரவில் காதல் இணையர்க்குள் நடக்கும் முதல் முத்தம் நடக்கிறது... “கரும்பே..தேனேஎன்று இதழ் நுகர்ச்சியைப் புகழ்கிறான் (பாலொடு தேன்கலந்தற்றே – குறள்-1121) தழுவல் தொடர... யாழ், அமுது எல்லாம் 
அடுத்தடுத்து வருகின்றன...

முதல் வார்த்தைக்கே நாணியவள், இவ்வளவு வர்ணனையும் கேட்டபின் என்ன செய்வாள்...? தலை குனிந்து நிற்பவளின் கூந்தல் அழகைப் பார்த்த கோவலன் அதையும் வர்ணிக்கிறான் – “தாழிருங் கூந்தல் தையால் (நீண்ட கருங்கூந்தலை உடைய பெண்ணே!)
ஆக, கோவலன் வர்ணிக்க வர்ணிக்க கண்ணகியின் செயல்களை ஒரு நாடகம்போல் காட்டும் நயம்.. சிலப்பதிகாரம் ஒரு முத்தமிழ்க் காப்பியமல்லோ..?!!

இனி நான்காவது பொருள் – 
ஐம்புலன் நுகர்ச்சியை உணர்த்தும் அழகு
இந்த விளக்கத்தை வெளிப்பட விளக்குவது அக இலக்கணத்தை மீறுவதாகும் (உணரக்கூடியதே அன்றி உரையால் உரைத்து முடிவதல்ல அகம். எனவே தான் அது அகம்! இதைப் படிக்கும் சின்னப் பசங்க ஓடிப்போங்கப்பா...)
இதை நாகரிகமாய் விளக்க நம் தாத்தன் திருவள்ளுவன் போதும். வேறு விளக்கம் தரவேண்டிய அவசியமே இங்கு எழாது.
“கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள“ (குறள்-1101-அதிகாரம் புணர்ச்சி மகிழ்தல்)
கண்ணால் அவளைக் கண்டு...பொன்னே என்கிறான்,
காதால் அவளின் புன்சிரிப்பை-சிறுமுணகலைக் கேட்டு..முத்தே..,
மூக்கால் அவள் உடல்மணத்தை மோந்து ..சந்தனமே...,
அதன் பின் எதுஎதையோ(?) உண்டு கரும்பே...தேனே...என்கிறான்
அட போங்கப்பா இத இனிமேல் எழுத முடியாது உய்த்து உணர்ந்து கொள்க.

அவ்வளவு தாங்க... இனியும் விளக்கலாம் அது பொதுநாகரிக எல்லையைக் கடந்ததாகிவிடும்... எனவே, உணர்ந்தவர் உணர்வாராக...!

ஒரு கவிதைக்குள் எவ்வளவு நுட்பங்களை 
வைக்க முடியும் என்பதற்கு 
இதைவிடவும் சான்று காட்ட முடியுமா என்ன?
இந்தக் கவிதையின் 
செறிவும் அழகும் நுட்பமும் எங்கே...!
இப்போது நம் காதுகளில் நம் விருப்பமின்றியே நறகலாய் வந்து விழும் சில திரைப்படப் பாடல்களின் நாலாந்தர வறண்ட வரிகள் எங்கே..!
சரி நாம் நல்லவற்றைக் கண்டு, கேட்டு, உய்த்துணர்ந்து மகிழ்வோம்.
பின் குறிப்பு - 
இவற்றின் இடையே,
அரும்பெறல் பாவாய் ஆர்உயிர் மருந்தே 
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே“ எனும் வரிகளும் சேர்ந்திருந்தாலும் நயம் பாராட்டும் நோக்கில் இவ்வரிகள் எளிதில் சிலப்பதிகாரம் என்று கண்டுபிடித்துவிடக் கூடியவை என்பதால் படிப்போரின் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு இவ்வரிகளை விட்டுவிட்டேன்.. வேறொன்றுமில்லை
---மீண்டும்,
இன்னொரு நல்ல கவிதையோடு சந்திப்போம்---
------------------------------------------------------------- 

21 கருத்துகள்:

  1. ஐயா, நீங்கள் இப்படி பாடம் நடத்தியதால்தானே தமிழ் மீதும், புத்தகத்தின் மீதும், சக மனிதர்கள் மீதும் எங்களுக்கு காதல் பிறந்தது.. பொருள் தேடி ஓடிக்கொண்டிருக்கும் எங்களுக்கெல்லாம் இத்தனை பொருள் சொன்னால் தாங்குமா? தேனீல் விழுந்த ஈயாவோம். அகம் புரியாத அகங்கொண்டவர்களுக்கு அதையும்தானே சொல்ல வேண்டியிருக்கிறது. அகம் கொண்டவளின் அகம் புரியாதவர்கள் இதையெல்லாம் பாடமாக அல்லவா படிக்கவேண்டும் . மீண்டும் ஒருமுறை உங்களிடம் தமிழ் படிக்க வாய்ப்பு. அனிமேஷன் சேர்ப்பதில் கூட அசத்துகிறீர்களே.. அடுத்த கவிதைக்கு ஆவலாக இருக்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உனது “இந்தியாவின் மகள்“ கட்டுரையில், கொடுமை கண்டு குமுறிய வார்த்தைகளின் அனல் எனக்கு மிகவும் பிடித்தது. http://awarefrauds.blogspot.in/2015/03/blog-post_5.html “என் இலக்கிய மகன்“ என்று உன்னைச் சொன்னது இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது வரது. ரொம்பவும் பெருமைப் படுகிறேன்.. கொஞ்சநாள் உன்மீதும் எனக்குக் கோபம் இருந்தது, இப்பத்தான் அது பறந்தது. ரொம்ப மகிழ்ச்சிப்பா.

      நீக்கு
  2. என்னா விளக்கம்.ஒரு பாட்டுக்குள்ள இவ்வளோ சங்கதிகளா? அருமை ஐயா இப்படிப் பாடம் நடத்தினா தமிழ் இலக்கியம் தவிர வேறு எதுவும் பிடிக்காம போயிடும் என்பது உண்மை
    //பொதுவாக முதலிரவில் பெண்கள் அதிகம் பேசுவதில்லை என்றும் ஆண்கள்தான் உளறிக் கொட்டுவார்கள் என்றும் கேள்வி! பின்னர் இது அப்படியே தலைகீழாய் மாறிவிடுவதுதான் தெரியுமே?!)//
    இதற்கு சகோதரி மைதிலி சண்டைப்- போடப் போவது நிச்சயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை இல்லை அய்யா... என் தங்கை உண்மையைப் புரிந்தவர். பெண்களின் சில பிரத்தியேக உண்மை. இது ஆண்-பெண்சமத்துத்திற்கு சம்பந்தமில்லாத சில செய்தி. நம் வீட்டிலும் அதுதானே? எங்கே நீங்க இல்லன்னு சொல்லுங்க?

      நீக்கு
  3. அடடா...! என்னவொரு வர்ணனை... உங்களின் படிப்படியான விளக்கத்தை சொன்னேன் ஐயா... மாசறு பொன்னே வலம்புரி முத்தே - திரைப்பட பாடல் கண்முன்னே தெரிந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் எது சிலம்பு வரி, எது திரைவரி என்று தெரியாத அளவிற்கு அருமையாகக் கலந்திருப்பார்கள்.. நல்ல இசை.. நான் அந்த வரிகளைச் சொல்ல நேரும்போது அந்த இசையில் பாடுவேன்.

      நீக்கு
  4. எட்டிப் பார்த்தவர் பெயர் இளங்கோவடிகளாக இருந்தாலும் அதை அழகாக இந்த காலத்திற்கு ஏற்ப எடுத்து சொன்னவர் முத்துநிலவன் அவர்கள்தானே அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நல்லாருக்கே? கவிதை எழுதினவர் குடிசையிலேயே குடியிருக்க, அதை எடுத்துஎடுத்துப் பேசினவர் மாடிவீடு கட்டும் கதை சமூகத்தில் நடப்பதுதான் என்றாலும்.. நியாயமில்லை அல்லவா நண்பரே? எனவே பாராட்டு ஃபார்வேர்டட் ... நன்றி.

      நீக்கு
  5. அண்ணா தாங்கள் ரசித்து எழுதியிருப்பது இலக்கிய வர்ணனை எத்தனை! எத்தனை அழகா இருக்கு .. இப்போது கேட்கும் திரைஇசைப்பாடல்கள் ?சரி வேண்டாம். நிகழ்வினை ரசித்துவிட்டு அடுத்த பகிர்விக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நவில்தோறும் நூல்நயம் என்று தங்களைப் போன்ற பெருமக்களின் தொடர்பை வள்ளுவன் சொன்னதன் பொருத்தத்தை எண்ணிப்பார்க்கிறேன்.
    வியக்கிறேன்.
    தொடருங்கள் அய்யா!

    பதிலளிநீக்கு
  7. ஒரு பாடலுக்கு இவ்வளவு பொருளுண்டா !!!....அருமை.தம+1

    பதிலளிநீக்கு
  8. அடேங்கப்பா இவ்வளவு நுணுக்கங்கள், விளக்கங்கள்!!!! மிகவும் ரசித்தோம் கவிதையையும், விளக்கங்களையும் ஐயா!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஜயா
    கவிதை படித்து காதல் ரசம் குடித்தேன். அடைப்புக் குறி அசத்தல் ஜயா. ரசித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க ஜயா.

    பதிலளிநீக்கு
  10. ஒரு பாட்டுக்கு இப்படி விதவிதமா பொருள் கொள்ள (சொல்ல)முடியுமா!!
    சூப்பர் அண்ணா!! நூறு நவீன கவிதைகள் தரப்போகிறீர்கள் என நினைத்தேன். இப்படி சங்கத்தமிழில் வீடுக்கட்டி அடிக்கிறீங்க:)) தொடருங்க!! நாங்களும் நாலு விஷயம் தெரிஞ்சுக்கிறோம்:)

    பதிலளிநீக்கு
  11. அண்ணா......... தங்களின்தமிழை நான் வகுப்பறையில் இருந்து கற்கும்
    பாக்யம் கிட்டாமல் போய்விட்டதே........எனதுமாணவன் தங்களின்
    மாணவனாக3வருடங்களுக்குமுன் இருந்திருக்கிறான் அவன் கூறக்கேட்டிருக்கிறேன் இன்று அந்தவாய்ப்புகிடைக்கப் பெற்றேன்
    சில ஆண்கள்தான் அவ்வாறு அன்றுமட்டும் அதிகமாகப்பேசுவார்கள்போலும்(அவர்களை நம்பாதே என்பதற்கு
    கோவலனைவிட எ.கா யாரையும் கூறமுடியாது)பிறகுஅவர் மாதவியிடம் தானே அதிகம் பேசினார்.

    பதிலளிநீக்கு
  12. முத்தமிழ்க் காப்பியம் படைத்த இளங்கோவடிகள்கூட இப்படி நான்கு நிலையில் பொருள்கொள்ள நினைத்து எழுதியிருக்க மாட்டார். ஆழ்ந்தமிழ்ந்து நுணுகித் திறனாய்ந்து சுவைப்போரைக் கிரங்க வைத்திருக்கிறது தங்களது பொழிப்பு. இடையி்ல் ஏன் அடைப்புக்குள் ” முதலிரவில் பெண்கள் அதிகம் பேசமாட்டார்கள்... பின்னர் இது அப்படியேத் தலைகீழாய் மாறிவிடுவதுதான் தெரியுமே” என்னும் ஒப்புதல் வாக்குமூலம்?

    பதிலளிநீக்கு
  13. ஆஹா ஒரு பாடலுக்கு நான்கு பொருள்!! அருமை அண்ணா!

    பதிலளிநீக்கு
  14. இப்படியெல்லாம் என் தமிழாசான் பாடம் நடத்தியிருந்தால் நானும் சில கவி பாடியிருப்பேன் நீங்களும் படித்திருப்பீர்கள். உங்கள் இலக்கியம் படித்ததிலிருந்து இன்னும் அதிகமாய் மனைவியை காதலிக்கதான் தெரிந்தது...கவியெல்லாம் செவிக்குள்ளே! செம்மேனியோ சித்ததில்! முடிந்தது மொத்ததில்! விடிந்தது யுத்ததில்!

    பதிலளிநீக்கு
  15. அற்புதமான விளக்கம் ஐயா...
    தமிழ் இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது

    பதிலளிநீக்கு