பதிவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்!





நான் எனது பதிவுகளை இடும் போதெல்லாம் யார்யார் அதை வந்து பார்த்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புவேன். அது முடியா தென்பதால் யாரெல்லாம் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பேன் 


அடுத்து-

யார் யார் புதிதாக நம் “பின்பற்றாளர்” (ஃபாலோயர்) பட்டியலில் சேர்ந்திருக்கிறார்கள் என்றும் பார்ப்பேன். அவர்களுக்கு நன்றிசொல்ல அவர்கள் தளத்தைச் சென்று பார்த்து, பெரும்பாலும் நானும் அவர்களைப் பின்பற்றும் பட்டியலில் உடனே இணைந்துவிடுவேன்.

ஆனால், கட்டக்கடைசியாக  வந்து சேர்ந்திருந்தால்தான் அவர்களைக் கண்டு பிடிக்கமுடியும். கடைசியாக வந்து ஃபாலோயர் பட்டியலுக்கு உள்ளே போய் உட்கார்ந்துவிடும்(?) நண்பர்களை அடையாளம் காண என்னால் முடிவதில்லை.

 இதற்கு என்ன வழி என்று வலைச்சித்தரும் எங்கள் வலையுலக மகாவித்வானுமான அய்யா திண்டுக்கல் தனபாலன்தான் பதில் சொல்லவேண்டும்...

அடுத்து-

யார்யாரெல்லாம் தனது வலைப்பக்க இணைப்பில் நம்வலைப்பக்கத்தைச் சேர்த்திருக்கிறார்கள் என்றுபார்த்து உடனடியாக அவரது வலைப்பக்க இணைப்பை என்வலையின் “நட்பு வலைப்பட்டியலில்” சேர்த்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இது இன்றும் தொடர்கிறது. (முன்னர் எனக்கு நல்லதென்று என்கண்ணில் படுகிற வலைப்பக்க இணைப்பையெல்லாம் இணைத்திருந்தேன். ஆனால், சிலபல மாதம் கடந்து பார்த்தால் அவர்களில் பலர் அப்படியெதுவும் இணைப்புத் தந்திருக்கவில்லை என்பதைக் கண்டேன்...)

ஆனால், அவர்களில் சிலரோ அந்த இணைப்புத்தரும் பிரிவையே எடுத்துவிட்டிருக்கிறார்கள். அய்யா கரந்தையார் பெரிய பட்டியலையே வைத்திருக்கிறார் “மனசு” குமாரும் அப்படியே! ஆனால், நமது பிரபலபதிவர் “மூங்கில்காற்று” முரளிதரன் தனது இணைப்புப் பட்டியலை  ஏனோ இப்போது எடுத்துவிட்டார்!  
அவரது வலைப்பக்கத்தில் காணோம்!

முன்னர் ஒருமுறை திரு குமார், திரு முரளிதரன் ஆகியோர் தம் தளத்தில் என் பதிவு ஒன்றை அறிமுகம் செய்ததும், எனக்கு நூற்றுக்கணக்கில் அன்றே புதுப்புது வாசகர்களும் பின்பற்றாளரும் வந்து குவிந்தனர். இதை அவர்களிடமே நன்றியுடன் தெரிவித்திருக்கிறேன். இதேபோல தமிழ்மணம், தமிழ்வெளி மற்றும் வலைச்சரம் அறிமுகமும் இப்படித்தான் என் வலைப்பதிவுகளைக் கொண்டுசேர்த்ததில் பெரும்பங்கு வகித்ததை நன்றியுடன் எப்போதும் நினைத்துக்கொள்வேன்.

இப்போது எனது வேண்டுகோள் -
வலைநண்பர்கள் நல்ல வலைப்பக்கங்களைத் தமது பக்கத்தில் இணைப்பாகத் தந்து புதியவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நல்ல பணியைத் தொடரவேண்டும். இது தனிப்பட்ட எனக்கான வேண்டுகோள் அல்ல, வலையுலகில் அக்கப்போர்கள் அல்லது ஆபாசங்களே கிடப்பதான பொதுக் கருத்தை மாற்ற நாம்தான் நல்லவற்றை அறிமுகப்படுத்தி உதவ வேண்டும் இல்லையா? 

எனது வலைப்பக்கத்தில் என்தளததை அறிமுகப்படுத்திய நண்பர்களின் வலைஇணைப்பை நானும் தந்திருக்கிறேன். 


இதுமட்டும் போதாது என்பது எனக்குப் புரிகிறது. என் வலைக்கு வரும் அனைவரும், நல்ல வலைப்பக்கம் அனைத்தையும் பார்க்கநான் தூண்டுதலாக இருக்கவேண்டும். அதே நேரம் என்வலைப்பக்கத்தையும் அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும என்றுநான் எதிர்பார்ப்பது தவறா?சரியா? எனக்குத் தெரியவில்லை. இதுபற்றிய நண்பர்களின் கருத்தறிந்து அவ்வாறே செய்ய நினைத்திருக்கிறேன்.


இது சரிதான் எனில் சொல்லுங்கள் அனைவரும் சேர்ந்தே இப்பணியைத் தொடர்வோம்.தொடரவேண்டுகிறேன். அல்லது வேறு என்ன செய்து புதியவர்களுக்கு நமது தளத்தை இன்னும் அதிகமானோர் பார்வைக்குக் கொண்டுசெல்லலாம் என்பதை எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுமாய்த் தொழில்நுட்பம் அறிந்த நம் வலைநண்பர்களை அன்போடு வேண்டுகிறேன்.


இப்போது தமிழ்மணம், தமிழ்வெளி ஆகிய இரண்டே வலைத் திரட்டிகளில்தான் எனது இணைப்பு உள்ளது. கல்விச்சோலை தமிழ்நாடுடீச்சர்ஸ்ஃப்ரண்ட்ஸ் .சிறுகதை, கட்டுரை மற்றும் சில ஆசிரியர்களுக்கான அமைப்புகள் முதலான கல்வி தொடர்பான தளங்களில் எனது சில கட்டுரைகளை எடுத்துப் போட்டுக் கொள்கிறார்கள். மற்றபடி இன்னும் மேலதிக வீச்சில் கொண்டுசெல்ல என்ன செய்யலாம் என்று தெரிவித்து உதவ வேண்டுகிறேன் - 

அன்பின், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை

முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா?

THE FACE BOOK......? 
      நேற்று மதுரையில் நடந்த வலைப்பதிவர் திருவிழாவிற்குச் சென்றுவந்தோம். (நாங்கள் புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக 25பேருக்குத் திட்டம் போட்டு, 14பேர்தான் போகமுடிந்தது) கடந்த ஆண்டு சென்னையில் நடந்த விழா அளவிற்கு வலைப்பதிவர் வருகையும் இல்லை. முக்கியமாக சென்னைப் புலவர் இராமானுசம் அய்யா, மதுமதி, கவியாழியார் , தென்றல் சசிகலா, பெரம்பலூர் இரா.எட்வின் முதலான முக்கியமான நமது நட்புப் பதிவர்களைத் தேடித் தேடி அசந்துபோனோம். நல்லவேளை மூங்கில் காற்று முரளிதரன் அவர்கள் மட்டுமாவது வந்திருந்தார்கள்.) 
DESTROYS  BLOGS....?????
     அந்த விழாவைப்போல் மதுரையில் திட்டமிடுதல் இல்லையா, அல்லது திட்டமிட்டது நடக்கவில்லையா?.... 
வருவதாக ஒப்புக்கொண்டு பதிவுசெய்த (சுமார் 130) பதிவர்களில், பாதிப்பேர் கூட வரவில்லை என்பது தெரிந்தது. எங்கோ இருந்துகொண்டு எதையும் விமர்சனம் செய்வது எளிது. ஆனால் அதற்குரிய பணிகளைச் செய்து பார்த்தால் தான் அதனதன் கஷ்ட நஷ்டம் புரியும் என்பதால் எவ்வளவொ குறைகள் இருந்தாலும், வலைப்பதிவர் திருவிழாவைக் கடந்த சில மாதங்களாகவே பலபாடு பட்டு சிறப்பாகவே நடத்தி முடித்த மதுரைக் குழுவினர் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த இனிய பாராட்டுகளைத் தெரிவித்து  வணங்குகிறேன். 
இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம்.
ஏன் சென்னைக்கு வந்திருந்த அளவிற்குப் பதிவர் பலர் மதுரைக்கு வரவில்லை என்ற முக்கியமான கேள்விக்கு நம் வலை நண்பர் ஒருவர் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது -
“முகநூல், வலைப்பதிவர்களை விழுங்குகிறது“
யோசித்துப் பார்த்தால் அவர் சொன்னதை என்னால் மறுக்க ஆசை இருந்தும்உண்மை உறுத்துவதால்-முடியவில்லை...

ஆனால், முகநூல் வேறு, வலைப்பக்கம் வேறு என்பதை ஆரஅமர யோசிப்பவர் சரியாகவே புரிந்து கொள்ளலாம்.

முகநூலுக்கும் வலைப்பூவுக்கும் ஆறுவித்தியாசம் உண்டு- 
(இன்னும் நூறு வித்தியாசம் சொல்லக்கூடிய அனுபவஸ்ர்களும் இருக்கலாம்)
(1)     முகநூலில் உடனுக்குடன் “லைக்“ கிடைக்கும், வலைப்பக்கத்தைப் படித்துப் பார்த்து, பிடித்தால் பின்னூட்டம் இடுவார்கள். இல்லனா வுடு ஜூட் தான். (ஆனாலும்.. எனக்கு இன்று உடல்நிலை சரியில்லை என்று போட்டால்கூட அதற்கும் நாலுபேர் லைக் போடுவார்கள்... என்பது வேறு!)
(2)     முகநூலில் பெரும்பாலும் “ஷேர்“ பண்ணுவதுதான் நடக்கிறது. அது எளிதும் கூட. ஆனா, ஷேர் பண்ணியது என்பதைக் காட்டாமலே சுட்டபழம் விற்கும் பழனியாண்டிகள் தான்அதிகம்! ஆனால் சுவாரசியமா இருக்குல்ல... பதிவு போடுறதுன்னா ஒன்னு புதுசா யோசிக்கணும் அல்லது எங்காவது யாராவது யோசிச்சு போட்டதை எடுத்துப் போட்டு நன்றின்னு போடணும்.
(3)     ஒற்றை ரெட்டை வரிகளில் உலகத்தையே (?) புரட்டிவிடக்கூடிய நெம்புகோல் வரிகளைச் சொல்லிவிட முடியும் (என்று நம்புகிறார்கள்). வலைப்பக்கம் குறைந்த்து அரைப்பக்கம் முதல் 10,15பக்கம் வரை கூட எழுதவேண்டியிருக்கும் - எடுத்துக் கொள்ளும சப்ஜெக்டைப் பொறுத்து.
(4)     படங்களே பெரும்பாலும் பகிரப்படுவது முகநூல். படங்களாக மட்டுமே இருப்பதும் உண்டு! வலையில் படங்கள் பொருத்தமாகக் கிடைத்தால்தான்
(5)     பழசைத் தேடி எடுப்பது முகநூலில் சாதாரண வேலையல்ல... அல்லது கிடைப்பதும் அரிது. அந்தந்த வலைப்பக்கத்தில் (அல்லது கூகுளம்மன் அருளிருந்தால் பொதுவாகவும்) தேடினால் எப்படியும் கிடைத்து விடும்.
(6)     முகநூல் பெரும்பாலும் நேரக்கொல்லியாகவே நேர்கிறது. வலைப்பக்கம் காலம் கடந்தும் நிற்கும் ஆவணமாக மாறும் வாய்ப்பு உள்ளது. (ஸ்ஸ்ஸ்...)

ஆகவே, 
முகநூலில் மயங்கிக் கிடப்போர் 
வலைப்பக்கம் எழுத வருக.
அப்போதுதான் உங்கள் 
எழுத்தாற்றல் வளரும் மிளிரும் 
வலைப்பக்க பதிவுகள் எழுதுவோர் அவற்றை முகநூலில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு (திரும்பிப் பார்க்காமல்) ஓடி வந்துடுங்க. சாமியோவ்..

ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது-
திரைப்படம் வந்தபோது 
நாடகம் அழிந்துவிடும் என்றார்கள்! அழியவில்லை. 
தொலைக்காட்சி வந்த போது 
திரைப்படம் அழியும் என்றனர் அழியவில்லை.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பிறகும் 
குரங்குகள் அதுபாட்டுக்குக் 
குதித்துக் கொண்டுதானே திரிகின்றன!? 
அழிந்தா விட்டன?

அதுமாதிரி, 
அதுபாட்டுக்கு அது, 
இதுபாட்டுக்கு இது! 
என்பதே பரிணாமம்!

இதனால் சகலமானவர்களுக்கும் 
நான் தெரிவிப்பது என்னவென்றால், 
முகநூலால் 
ஒருக்காலும் 
வலைப்பக்கத்தை 
அழிக்க முடியாது.
அப்படி இருப்பவர்கள் 
சோம்பேறித்தனத்தைத்தான் வளர்க்கிறார்கள்.
காலம் முடிவு செய்யும்.

நாம் வலைப்பக்கப் பதிவுகளைத் தொடர்வோம் நண்பர்களே!
 ----------------------------------------------------- 

இன்றைய “நீயா நானா“வில் பாராட்டுக்குரிய இளம்பெண்கள்!

நீயா நானா - கோபிநாத்   சபாஷ்! சரியான கேள்வி!
மதுரை வலைப்பதிவர் திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்தபோது இரவு மணி பத்து. விஜய் தொலைக்காட்சி யில் நீயா நானா ஓடிக்கொண்டிருந்தது

ஏழாண்டுகளுக்கு முன் இதே நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு 25இல் 3பேர் தான் தங்கள் பெண்ணின் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது அதே கேள்விக்கு அதே 25இல் 3பேர்தான் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்... நாங்கள் இதை ஒரு சமூகநிலையின் மாற்றமாகக் குறிப்பில் எடுத்துக் கொள்கிறோம்“ - என்ற கோபிநாத்தின் குரலில் மகிழ்ச்சி பொங்கியது! நமக்கும்தான். இருக்காதா பின்னே? 

அது என்ன மகிழ்ச்சியான மாற்றம்- கோபியின் கேள்வி-

யார்யாரெல்லாம் தனக்கு வரும் கணவன், படித்த நல்ல சம்பளம் வாங்குகிற தலித்தாக இருந்தால் அதுபற்றிக் கவலை இல்லாமல் திருமணம் செய்துகொள்வீர்கள்?”

பெரும்பாலான இளம்பெண்கள் கைஉயர்த்தினார்கள்...!!!
மகிழ்ச்சியோடு அவர்களைப் பாராட்டி, அப்படியே திரும்பிய திரு.கோபிநாத், அந்த இளம்பெண்களின் எதிரில் அமர்ந்திருந்த அவர்களின் தந்தையர் முன் இந்தக் கேள்வியை வீசினார் -
உங்கள் பெண் எடுக்கும் இம்மாதிரியான முடிவை யார்யார் ஒப்புக்கொள்வீர்கள் ” 

வந்திருந்த 25பேரில், இந்தக் கேள்விக்கு  என் பெண்ணின் முடிவுக்கே விட்டுவிடுவேன்என்று சொன்னவர்களின் எண்ணிக்கையைப் பார்த்துவிட்டுத்தான் நாம் முதலில் சொன்ன கருத்தை மகிழ்வோடு சொன்னார் திரு கோபிநாத்.

எப்படி இந்த மாற்றம்? என்பதை ஆய்வு செய்யவேண்டும்!
ஆய்வு செய்வதற்கு முன் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிப் பதிவு செய்ய வேண்டும் என்றே பதிவிடுகிறேன்...

மதுரையில் வலைப்பதிவர் திருவிழா அற்புதமாக நடந்தது!
(அதுபற்றிய பதிவுகள் இன்னும் ஒருவாரம் தொடரும்ல..?) அதைவிட மகிழ்ச்சி... அடுத்த ஆண்டு வலைப்பதிவர் திருவிழாவைப் புதுக்கோட்டையில் நடத்துவது என்று ஒப்புக்கொண்டு வந்திருக்கிறோம்.............உங்களை நம்பித்தான்!!!

வேலை நிறையக் கிடக்கு..
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தைக் கூட்டி
2015ஆம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழாவை
அனைவரும் பாராட்டும்படி சிறப்பாக நடத்த வேண்டும்.... 
என்றாலும்.... 
கோபிநாத்தின் நியாயமான இந்த மகிழ்ச்சியை நாமும் பகிர்ந்து இன்றைய இளம்பெண்களின் இனிய மாற்றத்தை முதலில் பாராட்டிவிடுவோம் என்றுதான் இந்தப் பதிவு!
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லைகாண் என்று கும்மியடி!” - பாரதி.
---------------------------------------------------------------------------- 
இதோ அந்த விஜய் தொலைக்காட்சியின்
நீயா நானா 26-10-2014 இணைப்பு - 
(வெட்டி ஒட்டுக) நன்றி யு-ட்யூப் -
https://www.youtube.com/watch?v=8Tinea4QOgY
------------------------------------------------------------------ 
கூடுதல் இணைப்பாக, தூத்துக்குடி நண்பர் குருநாதன் அவர்களின் இந்தப் பழைய பதிவையும் பாருங்கள் - இந்தப்பெண் எவ்வளவு தெளிவாகத் தனது “சாதிபற்றிய பார்வை”யை முன்வைக்கிறார் -
(வெட்டி ஒட்டுக) இணைப்பிற்கு - நன்றி யு-ட்யூப்
http://rsgurunathan.blogspot.in/2014/10/blog-post_27.html 
------------------------------------------------------------------------------- 
(நீண்ட நாளைக்குப் பிறகு, பதிவிட்ட அடுத்த நாளில், தமிழ்மணத்தில் முதலிடமும், தமிழ்வெளியில் இரண்டாமிடமும் பிடித்திருக்கிறது இந்தப் பதிவு (27-10-2014 மாலை 7 மணிமுதல், இரவு 11.30 வரை )
“நல்ல செய்திகளை  எப்போதும் வரவேற்போம்” என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய வாசகர்களுக்கும், வாசகர்களிடம் இதனைக் கொண்டு சேர்த்த தமிழ்மணம், தமிழ்வெளி திரட்டிகளின் அன்பான நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. இந்தப் பெருமை திரு கோபிநாத் அவர்களையே சேரும். அவருக்கு ந்ன்றி. பணிதொடர்வோம்)

“மு.ம.எ.வே.மகளே!” விமர்சன அறிமுகம்.

     சன் செய்தி தொலைக்காட்சியில் பேராசிரியர் அருணன், கலைஞர் தொலைக்காட்சியி்ல் பேராசிரியர் சுப.வீ அய்யா இருவரும் விமர்சனம் செய்து, அழகாக அறிமுகப்படுத்திய நூலுக்கு எழுத்துப் பூர்வமாக வந்த முதல் விமர்சனம் எனது அன்பிற்குரிய சகோதரி ஆலங்குடி ஆர்.நீலாவிடமிருந்து... 

    இவரது 'வீணையல்ல நான் உனக்கு' எனும் கவிதைத் தொகுதிக்கு நான் தந்த முன்னுரையில் இவரை 'கிராமத்து மூலிகைச் செடிபோலும் இயல்பான எழுத்தாளர்' என்று பத்தாண்டுக்கு முன் எழுதியது நினைவிலிருக்கிறது.
(இடமிருந்து) கவிவர்மன், நா.மு., ஆர்.நீலா, மு.கீதா,
மைதிலி,கஸ்தூரி, தமிழ்இளங்கோ மற்றும் மகிக்குட்டி
    ஆனந்தவிகடன் பொன்விழாவை ஒட்டி நல்ல கவிதைகளை விகடனில் தொடர்ந்து வெளியிட்டு, அறிவுமதி தொகுத்து பிறகு ஒரு சிறு நூலாகவும் வந்த 75கவிதைகளில் ஆர்.நீலாவின் இரண்டு கவிதைகள் உள்ளன. சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் கட்டுரைத் தொகுப்பு ஒன்றும் வெளியிட்டிருக்கிறார்...தமுஎகச மாநிலத் துணைத்தலைவர்.
    எனது 3நூல்கள் வெளியீட்டு விழாவில் ஆர்.நீலா பேசும்போது... என்னை, “தாய், குரு, ஆசான், தோழன்என்றெல்லாம் சொன்னது அவரது அன்பின் மிகையன்றி வேறல்ல...
        இந்த நூல்-அறிமுகம் மற்றும் விமர்சனத்தில் அவரது அன்பின் நுட்பத்தை மட்டுமல்ல சமூகப் பார்வையின் கிண்டலையும் எழுத்தின் நுட்பத்தையும் பார்க்கலாம்...  ஒரு சொல் ஒரே ஒரு சொல்... அற்பம்எனும் சொல்லை அவர் பயன்படுத்தியிருக்கும் இடத்தைக் கவனியுங்கள்...

சரி இப்போது அவரது விமர்சனத்தைப் பார்ப்போம் -
--------------------------------------------------------------------------------------- 
“முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” நூல்விமர்சனம் : ஆர். நீலா.
ஒரு கவிதைப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிடலாம். ஒரு கதைப் புத்தகத்தைக் கூட கைமாற்றாமல் படித்து முடித்துவிடலாம். ஒரு கட்டுரைத் தொகுப்பை படிக்கத் தொடங்கியதிலிருந்து, கீழே வைக்க மனமின்றி படித்துவிட்டு, பின்னும் அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் ஒருவாரமாக அவதிப்பட முடியுமா? முடியும் என்கிறது, கவிஞர் நா.முத்துநிலவனின் கட்டுரைத் தொகுப்பான “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!நூல்.
மகராஜ் மகால் போகும் வழியில் உள்ள ஒரு சுவரில், ஒரு தனியார் பள்ளி இப்படி விளம்பரம் செய்திருந்தது. “இங்கு +1 படிக்கும்போதே +2 பாடங்கள் நடத்தப்படும்“ அதைப் படித்தவுடன், கவிஞர் நா.மு. நினைவுக்கு வருகிறார்...
  பள்ளிக்கல்வி இதுவரை இல்லாத அளவிற்கு சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சமச்சீர்க் கல்வி குளறுடிகள், போதிய வருகையின்றி ஆங்காங்கே மூடப்படும் அரசுப்பள்ளிகள், அதே இடத்தில் திறக்கப்படும் தனியார் பள்ளிகள், தாய்மொழிக் கல்வி புறக்கணிப்பு, ஆங்கிலக் கல்வி திணிப்பு, அதையும் சரிவர போதிக்கப் பயிற்றுவிக்காத ஆசிரியர்கள், எகிறும் தனியார் கல்விக் கட்டணங்கள் மதிப்பெண்ணைத் துரத்தும் மாணவர்கள், அதை ஊக்குவிக்கும் பெற்றோர்கள் இன்னும்... இன்னும்...
    இந்த இக்கட்டான சூழலில் தமிழகப் பள்ளிக் கல்விச் சூழலை அதன் ஊற்றுக்கண்ணை ஆராயும் விதமாக வந்திருக்கிறது நா.முத்துநிலவன் அவர்களின் முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே...நூல்.
    கல்வி சம்பந்தமான கட்டுரைகளை இவ்வளவு சுவராஸ்யப் படுத்தி எழுத முடியுமா என்று வியக்க வைக்கிறது அதன் உள்ளடக்கம். இனிய நடை, எளிய பதம், அறிவார்ந்த வாதங்கள், செறிவான கருத்துகள், புதுமையான முயற்சிகள் என செழுமையான கருத்துப் பெட்டகம். உள்வாங்கி வினையாற்றத் தூண்டும் அறிவார்ந்த ஆயுதம். அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் படித்த இக்கட்டுரைகளை ஒருசேர கோவையாக வாசிக்கும்போது பிரச்னைகளின் ஆழ அகலம் நமக்குத் தெளிவாக விளங்குகிறது.
    மாற்றுக்கல்விச் சிந்தனைகள் நமக்குப் புதிதில்லை. வசந்தி தேவி, எஸ். எஸ். ராஜகோபாலன், ச.மாடசாமி, பேரா.மணி, பிரின்ஸ் கஜேந்திர பாபு, இரா. நடராஜன் ஆகிய கல்வியாளர்கள்... மன்னிக்கவும்... முதலிய கல்வியாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் கருத்துகளை காத்திரமாகப் பதிவு செய்தும் வருகிறார்கள். ஆனால் பிரச்னைகளின் பிரம்மாண்டத்திற்கு முன்னால் இதெல்லாம் போதாது. ஆசிரிய சமுதாயமே வீறுகொண்டு  எழவேண்டும். அவர்களுக்குப் பின்புலமாய் பெற்றோர்களும் கமூக ஆர்வலர்களும் நிற்கவேண்டும். கல்வி குறித்த சரியான புரிதலை அரசுக்கு ஏற்படுத்துவதை முதல் இலக்காகக் கொள்ளவேண்டும். இன்றைய கல்விமுறையின் குழப்பங்களுக்கும் குளறுபடிக்கும் காரணமானவை என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டும் குற்றவாளிகளில் பிரதான குற்றவாளியாக நிற்பது அரசுதானே?
   நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென் சொன்னார். அரசுப் பள்ளிகளில் எவ்வளவு குறைகள் இருப்பினும் அரசுப்பள்ளிகளுக்கு மாற்றாக  வேறு பள்ளிகளைப் பொருத்திப் பார்க்க முடியாது.அவர் சொல்வதில் யாருக்கேனும் மாற்றுக்கருத்து இருக்க முடியுமோ?

   ஆனால் மத்திய மாநில அரசுகள் என்ன செய்கிறது?
நாடு சுதந்திரமடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டமே வந்தது. அதை முறையாக அமுல்படுத்த முதல் ஐந்தாண்டுகளுக்கு 1,71,00,000 கோடி தேவையென வல்லுனர் குழுவால் மதிப்பிடப்பட்டது அந்த சொற்பத் தொகையில் சரிபாதித் தொகை கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குழந்தைகளுக்கான கல்வி உரிமை சட்டமாக்கப்பட்ட பிறகு அந்த கட்டாய இலவசக்கல்வி அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்பது நமது கல்விக்குப் பெரிய அளவில் பணஉதவி கடனுதவி செய்யும் யுனெஸ்கோ, யுனிசெப் அமைப்புகளின் நிர்ப்பந்தம். கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் அமலான பிறகும் புதிதாக தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்க யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது?
   தனியார் பள்ளிகள் புற்றீசலாய்ப் பல்கிப் பெருகி தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலக் கல்வியை முன்னுறுத்துகின்றன.
    எல்லோருக்கும் கல்வி என்பதும் தாய்மொழிக்கல்வி என்பதும் ஒன்றுதானே? இயல்பான  கற்றல் தாய்மொழியில்தானே இருக்கமுடியும்? தாய்மொழியில் கற்பதுதானே சுயசுந்தனையை உருவாக்கும்? சுய சிந்தனைதானே சுயசார்பிற்கு வழிவகுக்கும்?

  இத்தனை கேள்விகளையும் தன்புத்தகத்தில் எழுப்புகிறார் நா.முத்துநிலவன். அரசின் கல்வி விரோதப் போக்கு இப்படி என்றால் பாடத்திட்டங்களின் மாணவ விரோதப் போக்கு எப்படி இருக்கிறது?
  இரண்டு வரிகளில் இப்புத்தகத்தில் உள்ள விடை - 
      “வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை
      மருந்து போலத் தருகிறோம். 
      கல்வி சுமையாகிறது. 
      வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை
      விருந்து போலத் தருகிறோம். 
      வாழ்க்கையே சுமையாகிறது“
  ஒவ்வொரு கட்டுரையுமே வித்தியாசமான தலைப்புகளோடு கல்வியின் பல பரிமாணங்களை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அலசி ஆராய்கிறது. அது மட்டுமல்ல கல்வித்துறைக்கு யார் ஒரு துரும்பை நல்லவிதமாகக் கிள்ளிப் போட்டிருந்தாலும் அதைக் கவனமாகப் பதிவுசெய்து  பாராட்டுகிறது. மொழி வெறியை மொழிஅலட்சியத்தை துலாக்கோலாய் நின்று விவாதிக்கிறது.பொருந்தாத பாடத்திட்டத்தையும் போலி ஆசிரியர்களையும் தனது இயல்பான எள்ளலோடு கிண்டலடிக்கிறது
                                “பாடமே இது பொய்யடா - வெறும்
                                மார்க் அடைத்த பையடா“

    விண்ணப்பித்து வாங்குவதா விருது? சுயமரியாதை உள்ள எவரும் லைக் போடும் கட்டுரை. இதை இவர் எழுதாவிட்டால்தான் ஆச்சர்யம்.
   பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளை படித்த ஆசிரியரிடம் ஒப்படைக்காதீர்கள். படித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் ஒப்படையுங்கள் என்றார் கலீல் ஜிப்ரான். இவரிடம்  கல்வி கற்ற மாணவர்களை நினைத்து ஒரு சின்ன பொறாமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
    ஒவ்வொரு கட்டுரையிலும் சாராம்சமாய் இருப்பது ஒரேயொரு ஒற்றை வரிதான்.  பூக்க வைப்பது கல்வி. ஆம். சமூகத்தின் மீதும் எதிர்காலச் சந்ததியின் மீதும் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் சொல்வது அதுதான். இப்புத்தகத்தில் நா.மு. சொல்வது போல் தமிழ்த் தாயை நாம் செயல் மறந்து வாழ்த்த வேண்டாம். செயல் புரிந்து வாழ்த்துவோம்.
   எஸ்.எஸ்.ராஜகோபாலன் திறமையாக மதிப்பீடு செய்திருக்கிறார். தங்கம்மூர்த்தியின் அணிந்துரை புத்தகத்தை மீறிவிடாமல் அடக்கமாக அணிசெய்கிறது. பொருத்தமான அட்டை;படத்தோடு அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ.120.

------------------------------------------ 
இதே நூல்குறித்து நமது பிரபல வலைப்பதிவரும் என் அன்புத் தங்கையுமான மைதிலி கஸ்தூரிரெங்கன் எழுதியதை நண்பர்கள் படித்திருப்பீர்கள் என்றாலும் அவரது அன்பிற்கு நன்றி கூறி அதை எனது வலைப்பக்கத்தில் மறுபதிவு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் - இதுதான் எனது நூல்குறித்து வந்த முதல் அறிமுகம் என்பதில் இரட்டை மகிழ்ச்சி.
------------------------------ 
இனி மைதிலியின் நூல்அறிமுகம் -
    ஒரு ஆசிரியராக எனக்கு மிகவும் பிடித்த நூல் இது. தலைப்பில் சொல்லப் பட்டிருக்கிற கட்டுரை தான் இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை. 
    லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய ஆசிரியர்கள் தவறாது படிக்கவேண்டிய கடிதத்தைப் போல், நேரு தன் மகளுக்கு எழுதியதைப் போல கல்வித்துறையால் பரிந்துரைக்கப்படவேண்டிய, தவிர்க்க முடியாத ஒரு கட்டுரை. 
    மார்க்கு மாயை ஆட்டிப்படைக்கும் தமிழகப் பெற்றோர்கள் தவறாது படிக்க வேண்டிய கட்டுரை.     
    எனவே தயவுசெய்து பெற்றோர்களே தாங்கள் இதை  படித்து குழந்தைகளை குழந்தைகளாக நினைக்க, நடத்தப் பழகுங்கள். பாவம் அந்த மொட்டுகள் அவை மலர வாய்ப்புக் கொடுங்கள். 
   இந்த கட்டுரை மட்டும் அல்லாமல் இந்த தொகுதி முழுக்கவே கல்வியியல் கட்டுரைகளால் நிரம்பித் ததும்புகிறது. பாடத்தைப் புகட்டலாமா? ஆசிரியர் உமா படுகொலை குறித்த கட்டுரை, கோடை விடுமுறை தேவையா ? போன்ற கட்டுரைகள் ஆசிரியப் பணி குறித்த, பள்ளிகுறித்த, இன்றைய கல்வி நிலை குறித்த, ஆழமான அலசலாக இருக்கிறது. 
   விண்ணப்பித்து வாங்குவதா விருது? எனும் கட்டுரை நல்லாசிரியர் விருதுகளை வாங்கிய(!?) சிலருக்குக் கண்டிப்பாய் மனசாட்சி உறுத்தும்படி அமைத்திருக்கிறது.    கட்டுரைகள் அண்ணாவின் வலைப்பூவில் வெளிவந்தவை என்பதால் அதன் இறுதியில் வாசகர்கள் இட்ட கருத்துக்களையும் சேர்த்துப் பகிர்ந்திருக்கிறார். 
   தமிழ் கற்பித்தல் தொடர்பான அற்புதமான அலசல்களும் இதில் அடங்கியுள்ளன. மொத்தத்தில் ஆசிரியர்கள் தவறவிடக்கூடாத அற நூலாக இருக்கிறது இந்த புத்தகம்.
------------------------------------------------------------------------------- 

குமுதம் தீபாவளி சிறப்பிதழில் கமல்ஹாசனின் அசத்தல் பதில்கள்

“குமுதம் தீபாவளி சிறப்பிதழில் வி.ஐ.பி.கேள்விகளுக்கு உலகநாயகன் பதில்கள்” என்று போட்டிருந்ததால்
ரொம்ப நாள் கழித்து குமுதம் வாங்கினேன்.
கமல் ஏமாற்றவில்லை.
அசத்தல் பதில்கள்.


வி.ஐ.பி.கேள்வி, உலகநாயகன் பதில்கள் -22-10-2014 குமுதம்

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கேள்வியும், கமல் பதிலும்-
0 ''அக்ஷரா ஹாசனின் நடிப்பில் கமல்ஹாசன் தெரிகிறாரே? இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?''
00 ''கமல் ஹாசன் நடிப்பில் சிவாஜி, நாகேஷ், திரு.கே.பாலச்சந்தர் தெரியும்போது அக்ஷராவில் கொஞ்சம் கமல் தெரியாமல் போய்விடுவாரா?...
...கலையில் யாரும் சுயம்பு இல்லை. ஏன் யாருமே சுயம்புவல்ல, நாம் படைத்த கடவுளர் கதைகளில் அன்றி!''

எப்புடீ? ... பெரியவுங்க பெரியவுங்கதான்...

வெவ்வேறு துறைகளைச் சார்ந்த வெவ்வேறு அறிஞர்கள் கேள்வி கேட்க, ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் கமல் சொல்லியிருக்கும் விதம் அவர் திரைக்கலைஞர் மட்டுமல்ல
பல்துறை அறிவுஜீவி என்பதை உறுதிப்படுத்தியது.

அதில் மேற்கண்டது ஒருபானைச் சோறு பதம்தான்...
வாழ்க கமல், வளர்க அவர்தம் பல்துறைப் பணி.
---------------------------------------------------------------------------
இரு சிறு பின் குறிப்பு-
(1) 22-10-2014 குமுதம் இதழ் அட்டை இணையத்தில் ஏற்றப்படவில்லை. எனவே இதற்கு முந்திய குமுதம் இதழை எடுத்துப் போட்டதற்கு என்னைமன்னிக்க வேண்டுகிறேன்
(2) இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர், தனது 
ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி தாமே அதற்குத் தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே இந்திய நடிகர்
நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர்  என்பதால் எனக்குக் கமல் என்னும் பல்துறைக்கலைஞனை மிகவும் பிடிக்கும். அதனாலும் இந்தப் பதிவு.
----------------------------------------------------------------------------

மாமதுரை வருக! மற்றவை நேரில்

வலைப்பக்க 
நட்பு வளர்ப்போம்! 
மாமதுரை வருக!
மற்றவை நேரில்


மதுரை நண்பர்களின் 
அயராத உழைப்பில் உருவான நிகழ்ச்சிநிரல்...இதோ...! 
நமது வருகையை எதிர்பார்த்து...

பதிவு செய்யாதவர்கள் 
உடனே 
உடனே 
பதிவு செய்யுங்கள்!

நண்பர்களுடன் வாருங்கள்...
அகம் மட்டுமே கண்டவர்களின் முகம் காண
முகம் கண்டவர்களின் நட்பு வளர வாருங்கள்...
நிகழ்ச்சி நிரல் காண்க..
அவரவர் வலைப்பக்கத்தில் பகிர்க..
அவரவர் நண்பர்களை அழைத்து வருக!

விஜய் டிவியின் “மகா கேவலமான நிகழ்ச்சி”





தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மிகச்சிறந்த நிகழ்ச்சிகளோடு, மிகமிகக் கேவலமான நிகழ்ச்சிகளையும் தருவது விஜய் தொலைக்காட்சிதான் என்று நினைக்கிறேன். ஒரே நேரத்தில் எப்படி இப்படி?
நீயா-நானா, மகாபாரதம் போலும் நல்ல சில நிகழ்ச்சிகளை நடத்திவரும் விஜய் டிவியில் இப்போது (அக்டோபர்-2014) ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர்-4 கிட்டத்தட்டக் கேவலத்தின் உச்சத்தை நோக்கிப் போய்விட்டதைக் கேட்பாரில்லையா?
அப்பாவும் மகளும் காதல்பாட்டுடன் நடனமாடும் காட்சி!?!
வேறு எந்த்த் தொலைக்காட்சியிலாவது கண்டதுண்டா?
யாராவது பொதுநல வழக்குப்போட மாட்டார்களா?
நல்ல நிகழ்ச்சி, குழந்தைகளின் இசைத்திறனை உலகறியச் செய்யும் உற்சாக நிகழ்ச்சி என்று பேரெடுத்துவிட்ட “சூப்பர் சிங்கர்-4“ இப்போது கேவலத்தின் உச்சத்தை நோக்கிப் போய்விட்டது.

நூல்வெளியீட்டுவிழா - நிகழ்ச்சிப் படத்தொகுப்பு


புதுக்கோட்டையில் நடந்த கவிஞர் நா.முத்துநிலவன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா - நிகழ்ச்சிப் படத்தொகுப்பு

வாசலில் வரவேற்புப்பூ
செல்வி லட்சியாநிலவன்,  திருமதி மல்லிகா நிலவன்
தமிழ்த்தாய் வாழ்த்து செல்வி சுபாஷினி சுந்தர்


மண்ணின் பாடல்களை வந்தோர் மனம்குளிரப் பாடிய நெல்லை கரிசல்குயில்
கிருஷ்ணசாமிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறர் சிறப்பு விருந்தினர் ஜி.ராமகிருஷ்ணன்
வரவேற்பு மற்றும் விழா ஒருங்கிணைப்பு
கவிஞர் தங்கம் மூர்த்தி
(“இந்த அரங்கில் சால்வைகள் தடைசெய்யப் படுகின்றன!”)

 நூல்கள்  வெளியீடு

வாழ்த்துரையை எழுச்சியுடன் தொடங்கிவைத்த கவிஞர் கவிவர்மன்

தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் ஆர்.நீலா வாழ்த்துரை


 தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றப் பொதுச் செயலர்
பேராசிரியர் முனைவர் இரா.காமராசு வாழ்த்துரை


 மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் சமூக விமர்சகர்
மா.சின்னத்துரை நூல் அறிமுகவுரை


 மார்க்சிஸ்ட் கட்சியின் சடடமன்ற உறுப்பினரும்
கவிஞருமான திண்டுக்கல் க.பாலபாரதி நூல் அறிமுகவுரை


ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் பா.கிருஷணமூர்த்தி
“புதியமரபுகள்“ நூல் வெளியீட்டுரை

மதுக்கூர் இராமலிங்கம் “கம்பன் தமிழும் கணினித்தமிழும்“
நூல் வெளியீட்டுரை


தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா தலைமையுரை

பார்வையாளர் இடதுபக்கம்


கவிச்சுடர் இரா.சு.கவிதைப்பித்தன் மேனாள்எம்எல்ஏ
கம்பன் கழகச் செயலர் இரா.சம்பத்குமார்

தமிழாசிரியர் கழகத் தலைவர்கள் விலைதந்து
நூல்களைப் பெற்றுச்செல்கிறார்கள்


இராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் விலைதந்து
நூல்களை வாங்கிச் செல்கிறார்கள்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் விழா நிறைவுரை

 பார்வையாளர்கள் வலப்பக்கம்


 சிறப்பு விருந்தினர்க்கு நினைவுப்பரிசுளிக்கிறார் மல்லிகா நிலவன்

 உணவக உரிமையாளர் சங்கத்தலைவர் சண்முக பழனியப்பன் அவர்களுக்கு
நினைவுப் பரிசளிக்கிறார் பாரதிதாசன் பல்கலையின் தமிழ்த்துறைத் தலைவர்
பேரா.முனைவர் பா.மதிவாணன் அவர்கள் (வலைப்பதிவர்)


தமுஎகச மாவட்டப் பொருளர் சு.மதியழகனுக்கு
நினைவுப்பரிசளிக்கிறார் கவிஞர் மகா.சுந்தர் (வலைப்பதிவர்)


 கவிஞர் கவிவர்மனுக்கு நினைவுப் பரிசளிக்கிறார்
முனைவர் அய்யாவு அவர்கள்


நூலாசிரியரைப் பாராட்டுபவர்-
தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  வெ.தமிழரசு அவர்கள்

 விழாக்குழு கவிஞர் மு.கீதாவுக்கு நினைவுப் பரிசளிக்கிறார்
சட்டமன்ற உறுப்பினரும் கவிஞருமான திண்டுக்கல் பாலபாரதி


 விழாத்தலைவர் நந்தலாலாவுக்குப் பரிசளிக்கிறார்
வலைப்பதிவரும் கவிஞருமான ஸ்டாலின் சரவணன்


 மகிழ்வும் நெகிழ்வுமான ஏற்புரை


நினைவுப்பரிசாகத் தமிழாசிரியர்கழக நிர்வாகிகளின் அன்போவியம்


 நன்றியுரை - மல்லிகா நிலவன்



நன்றிக்கு நன்றி பாலபாரதி
-------------------------------------------------------------------------------
வெளியூரிலிருந்தும் வந்திருந்த வலைப்பதிவர்கள்..
இவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது?
திருச்சியிலிருந்து  திரு.தி.தமிழ்இளங்கோ
தஞ்சையிலிருந்து திரு கரந்தை ஜெயக்குமார்
(நடுவில் என் தங்கை மைதிலியும் குட்டீஸ் மகி-நிறையும்)
பெங்களுரிலிருந்து வந்திருந்த
தேன்மதுரத்தமிழ் கிரேசும் அவரது துணைவர் திரு வினோத்தும்..


புதுக்கோட்டை எழுத்தாளர் பட்டாளத்தின் ஒரு பகுதி..
கவிவர்மன், நா.மு, ஆர்.நீலா, மு.கீதா,மைதிலி, கஸ்தூரியுடன்
திருச்சியிலிருந்து வந்து அனைவரையும் சுட்டுத் தள்ளிக்கொண்டே இருந்த 
சகோதரர் தி.தமிழ்இளஙகோ...
இவரிடமிருந்து அய்யா மதிவாணன் அவர்களும், 
நண்பர் விஜூவும் எப்படித் தப்பினார்கள் என்று  
26-10-2014 அன்று மதுரையில் கேட்கவேண்டும்
அதுக்குத் தனீ  விளம்பரப் பதாகை வச்சிருந்தோம்ல..?
அந்தப்படத்துடன்,
விழாவின் ஒலி-ஒளிக் காட்சித் தொகுப்பு
 நாளை வெளியிடப்படும்...டும்..டும்..டும்..
----------------------------------------------------------------------------------------

வலைச்சரத்திலேயே அறிமுகப்படுத்தி வரவேற்று
விழாத்தொகுப்பையும் பதிவிட்ட சகோதரி மு.கீதா-

படங்களோடு பதிவுசெய்த சகோதரர் மணவை ஜேம்ஸ்-

விழாவின் செய்திப்படங்களை வெளியிட்டிருக்கும்
திருச்சி சகோதரர் தமிழ் இளங்கோ -

வலைப்பதிவர்களின் “மினி“ சந்திப்பு பற்றி 
எழுதியிருக்கும் தங்கை மைதிலி -
வலைப்பதிவர்களின் “குடும்ப விழா“ என்றே எழுதிவிட்ட
அருமைச் சகோ.மது கஸ்தூரிரெங்கன் - http://www.malartharu.org/2014/10/muthunilavans-book-release.html 


வந்து சிறப்பித்த அனைவர்க்கும்...நன்றிங்க.. 
நம் பயணம்  தொடரும்.
வேறென்ன சொல்ல?
------------------------------------------------------------------------------------ 
பி.கு. மூன்று நூல்களின் மொத்த விலை ரூ.330 எனினும் விழாவில் ரூ.250க்குக் கிடைக்கும் என்று அகரம் ப திப்பகம் அறிவித்ததை யொட்டி விழா அன்று மட்டும் சுமார் 300செட் (அதாவது 300X3ஆக 900நூல்கள் ரூ.75,000க்கு) விற்பனையாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். நிறைய விற்பனையாவதெல்லாம் நல்ல நூல் என்று சொல்ல முடியாதுதான், நீங்கள் படித்துவிட்டுச் சொல்ல வேண்டுகிறேன்... 
வலைப்பதிவர் திருவிழா மதுரைச்சந்திப்பில் விழாக்குழுவினர் அனுமதி தந்தால் அங்கேயும் இதே விலைக்கு நூல்களை விற்பனைக்கு வைக்கலாம் என்று நினைத்திருக்கிறேன், அகரம் பதிப்பகத்தாரிடம் கேட்க வேண்டும். நன்றி.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------