அவர் ஒரு தொடர்கதை! - கே.பி.க்கு அஞ்சலி.

அவர் ஒரு தொடர்கதை!
 
இயக்குநர் கே.பாலச்சந்தர் காலமான செய்தி தமிழ்த்திரை உலகில் எந்த அதிர்ச்சியையும் தரவில்லை! காரணம், ஒரு வாரம் முன்பே வதந்தியில் அவர் இறந்து விட்டதுதான்!


தமிழின் “பா வரிசை“ இயக்குநர் (பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாக்கியராஜ்) களில் அவர்தான் முன்னோடி என்பது உண்மைதான். என்றாலும் அவரது “வசன“ பாணி காலாவதியான பின்னும் “திரைமொழி“யில் அவர் பலமுறை தோற்றுப்போனதால், ரஜினி-கமல்-நாகேஷ்-பிரகாஷ்ராஜ்-சுஜாதா, சரிதா முதலான தமிழ்த்திரை உலகின் சாதனை நட்சத்திரங்களை அறிமுகப் படுத்தியவர் என்பதில் அவருக்கொரு நிலையான பெருமை என்றும் உண்டு.

மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல் முதலான நாடகங்களிலிருந்து வந்ததாலோ என்னவோ அவரது பெரும்பாலான படங்கள் நாடக பாணியில் (வசனம் தூக்கலுடன்) இருந்ததை அவரால் கடைசிவரை தவிர்க்க முடியவில்லை.(இந்தவகையில் தேவையான இடத்தில்கூட வசனம் வைக்காத மணிரத்னம் ஒரு துருவம் எனில், வசனமாய்ப் பொழியும் கே.பி.எதிர்த்துருவம்தான்)

எதிர்நீச்சலில் மாதுவின் மாடிப்படி, நீர்க்குமிழியின் மருத்துவமனை, அவள்ஒரு தொடர்கதையில் கவிதாவின் வீடு, தப்புத்தாளங்கள், அரங்கேற்றத்தில் நாயகியர் சரிதா, பிரமிளா பாத்திரங்கள், வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் கமல், ஸ்ரீதேவி அறைகள் என அவரது நாடக மேடை பாதிப்புகள் அவரை விடாமல் துரத்திவந்தன என்றே தோன்றுகிறது. அப்படித்தான் அவர் எடுத்த தொலைக்காட்சித் தொடர்கள் “கே.பி“ எனும் வெற்றிப் பின்னணியில் தான் பார்க்கப்பட்டன...

வசனத்தில் எதர்நீச்சல் “நா மாது வந்திருக்கேன்“, அ.ஒ.தொ.க. கவிதா “திருமணத்திற்கு முன்பு, பெண்கள் கர்வமா இருக்கலாம், கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது” , சொல்லத்தான் நினைக்கிறேன்  (?) எஸ்விசுப்பையா “எழுந்திருச்சுப் போங்கடா“ எனும் –புகழ்பெற்ற- “இரண்டு வார்த்தை“ போல அவரது கூர்மையான வசனம் திரைநட்சத்திரங்களை விட கவனிக்கவைத்தது.

கதாசிரியர் ஜெயகாந்தனின் கதைப் பாத்திரங்களைப் படித்தவர்கள் மறக்க முடியாதது போல, திரைப்படக் கதைப் பாத்திரங்களின் பெயர்களை மறக்கவிடாத அளவிற்குச் செதுக்கியவர் பாலச்சந்தர் என்பதற்கு எதிர்நீச்சலில் மாது(நாகேஷ்), அவள் ஒரு தொடர் கதையில் கவிதா(சுஜாதா), அரங்கேற்றத்தில் (பிரமிளா), தில்லுமுல்லு (ரஜினி), சிந்துபைரவியில் சிந்து (சுகாசினி), உன்னால் முடியும் தம்பியில் உதயமூர்த்தி (கமல்) என சொல்லிக் கொண்டே போகலாம்... இந்த வகையில் அவர் ஒரு தொடர்கதைதான்...

அவள் ஒரு தொடர்கதை, ஒருவீடு இருவாசல் படங்களில் இரண்டு கிளைக் கதைகளுக்கு ஒருமுடிவு சொல்வது புதிதாகத் தோன்றியது, ஆனால் அது உள்பட, சில காட்சிகள் (வங்க மற்றும் இந்திப் படங்களின் மேகதகதாரா, தபரணகதாவின்) அப்பட்டமான தழுவல் என்பதை சினிமா விமர்சகர்கள் அப்போதே போட்டு உடைத்து விட்டனர்...

அபூர்வ ராகங்கள், கல்கி, மூன்றுமுடிச்சு, அவர்கள்.. மன்மதலீலை, அ.ஒ.தொ.கதைகளில் முறையற்ற வாழ்க்கை பற்றிய அவரது கதைக்கரு (அ) காட்சிகள் பிட்டுப்பட ரேஞ்சுக்குப் போனதை மறந்துவிட முடியாது.

உன்னால் முடியும்தம்பி, அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி – சங்கீத ஞானமுள்ள இயக்குநரின் படங்கள் என்பதை விட, சங்கீதத்தை எப்படி வெற்றிகரமாக வெகுஜன ரசனையுடன் எடுக்கலாம் என்பதைத் தெரிந்தவரின் கதைகள்தான். அதிலும் சிந்துபைரவி ரெண்டு பொண்டாட்டிக்கான நியாயமே!

சிந்து பைரவியில், “எனக்கு சங்கீதம்னா..“ என்று சிந்து ஒரு காட்சியில் தொடங்க, “கிலோ என்ன விலை?என்று பைரவி இந்தப் பக்கம் கேட்க.. “இயக்குநர் டச்“ என்று விசில் பறக்கும்...இதுபோல கே.பி.டச் வருவதை எரிச்சலாகப் பார்த்தவருக்கு, கே.எஸ்.ரவிக்குமார் பெரும்பாலான படங்களின் கடைசியில் வந்து எரிச்சலூட்டி கே.பி.தேவலாம் என்றே ஆக்கிவிட்டார்!

காவியத்தலைவி, இருகோடுகளில் மேல்தட்டுப் பெண் ஆதிக்கம் வரும்.
சொல்லத்தான் நினைக்கிறேனில் இளவயதுப பெண்கள் (அக்கா தங்கையர் மூவரும் சேர்ந்து) ஒருவனையே துரத்தித் துரத்திக் காதலிப்பதும் வரும்..

நடுத்தர வர்க்கப் பெண் மன உணர்வுகளை, வாழ்க்கைச் சிக்கல்களை எடுத்துக் காட்டிய வகையில் கே.பி. வித்தியாசமானவர்தான்.. ஆனால் அதில் சமூக நோக்கமோ, சமூகவியல் பார்வையோ இருப்பதாகத் தெரியவில்லை. பாரதி ராஜாவின் மண்வாசனையோ, பாலுமகேந்திராவின் கலையழகோ கே.பி.யின் எந்தப் படத்திலும் இருந்ததில்லை என்பதை ஒப்பிட்டால் ஏமாற்றம்தான்!

என்ன துயரப்பட்டாலும் கே.பி.யின் (உன்னால்முடியும் தம்பி, வறுமையின் நிறம் சிவப்பு) ஆண்களைப் போல, பெண்கள் வெளியில் வரமாட்டார்கள். அல்லது, அ.ஒ.தொ. “மீண்டும் முதல் அத்தியாயம்“ வரும், அல்லது (அரங்கேற்றம் படத்தில் தப்புப் பண்ணிவிட்ட நாயகிக்கு பைத்தியம் பிடிக்கும் அவளின் “ப்பூபூ...எனும் சிரிப்புமட்டுமே வித்தியாசமாக இருக்கும்)

எம்ஜிஆர் படம், சிவாஜி படம், ரஜினிபடம், கமல் படம் என நட்சத்திரப் படைகளுக்கிடையே, “கே.பி.படம்“ என்று இயக்குநர் பெயர்பார்த்து ரசிகர்களைத் திரையரங்கிற்கு இழுத்த வகையில் அவர் ஒரு வெற்றிகரமான இயக்குநராகவே கடைசிவரை இருந்ததைப் பாராட்டத்தான் வேண்டும். 

மற்றபடி அவரது வித்தியாச முயற்சிகள் எல்லாம் வியாபார உத்திகளே அன்றிப் பெரிய சமூகநோக்கமுடையவை என்று சொல்வதற்கில்லை. 

ஆனால், எந்தவித வித்தியாச முயற்சியும் இல்லாமல், எதார்த்தம் எனும் பெயரில் பொறுப்பற்ற முறையில் படம் எடுக்கும் இன்றைய இயக்குநர் மத்தியில் கே.பி. ஒரு தொடர்கதையாக இருந்தால் நல்லதுதான்.
---------------------------------------- 
(கே. பாலச்சந்தர் -84    -    09 -07-1930 -- 23 -12- 2014)


45 கருத்துகள்:

  1. டைரக்டர் கே. பாலச்சந்தரின் ரசிகர்களில் நீங்களும் ஒருவர் என்று நினைக்கிறேன். ஏனெனில் இவரைப் பற்றிய இந்த பதிவில் அவரது படங்களை ரொம்பவும் நுட்பமாகவே அலசி காட்டியதுதான். டைரக்டர் கே.பி அவர்கள், இடதுசாரி கருத்துக்களை சில இடங்களில் மையப்படுத்தி இருப்பதை மறுப்பதற்கில்லை. இவர் இயக்கிய கோமல் சுவாமிநாதனின் ”தண்ணீர் தண்ணீர்” படத்தை எப்படி மறந்தீர்கள்?

    எனது கல்லூரி நாட்களில் டைரக்டர் கே. பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய வசனம், காட்சி அமைப்பிற்காகவே படங்களைப் பார்த்ததுண்டு.

    (இப்போது எங்கு இருக்கிறீர்கள்? மலேசிய சுற்றுப் பயணம் முடிந்து விட்டதா?)

    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கலை-இலக்கியம் எங்கிருந்தாலும் நான் அதற்கு ரசிகனே.
      “தண்ணீர் தண்ணீர்“ வெற்றியின் மையம் அதன் கதாசிரியர் திரு கோமல் அவர்கள்தான் என்பதால் அதை கே.பி.படங்களில் சேர்க்கவிலலை. அவர் “வறுமையின் நிறம் சிவப்பு“ என்பதால் அவர் இடதுசாரி என்பதை நான் ஏற்பதில்லை. போராட்டங்கள் பலவற்றை அவர் கொச்சைப்படுத்தியதை மறக்க முடியாது. இவற்றைத் தாண்டியும் அவரது ஆளுமை பாராட்டத்தக்கது. மலேசியப் பயணம் முடிந்து கடந்த 21ஆம் தேதி காலையே புதுக்கோட்டை வந்துவிட்டேன் அய்யா. நலம்தானே?

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா

    சிறப்பான தொகுப்பு.. அறிய முடியாத தகவலை தங்களின் வலைப்பூ வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
    இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. தனியாக தெரிகிறது தனித்துவம்...
    மணிரதினதுடன் கேபியை ஒப்பிட்டதே இல்லை நான் இருவரும் வேறு கால கட்டம் ... அவர் வெளியேறுகிற தருணத்தில் இவர் வந்தார் ஒரு கடந்த தலைமுறை, இவர் இந்த தலைமுறை... இருப்பினும் ஒப்பீட்டுக்கான நியாயம் அருமை.
    Click here.. My Wishes!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் வேறாக இருந்தாலும் கதையைச் சொல்லும் விதம் (இந்த இடத்தில் வசனமா? கேமரா மட்டும் போதுமா என்னும் திரைமொழி) வேறுபாடு இருக்கிறதல்லவா மதூ? நன்றி

      நீக்கு
  4. அழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  5. கே.பாலச்சந்தரைப் பற்றி இவ்வளவு ஆராய்ந்ததில்லை . சிறப்பான பார்வை.
    2013 வலைப் பதிவர் சந்திப்பின்போது எழுத்தாளரும் வலைப் பதிவருமான பாமரன் பாலச்சந்தரைப் பற்றி எப்போதுதான் சினிமா எடுக்கப் போகிறீர்கள் என்று எழுதியதை சொன்னதாக நினைவு. நீங்களும் அந்த விழாவிற்கு வந்திருந்தீர்கள் அல்லவா?
    அவரது கதைகளில் நிறைய இரண்டு பெண்கள் தொடர்புடையதாகவே இருந்திருக்கிறது . இருந்தாலும் அந்தக் காலத்தில் அவரது படங்கள் ரசிகர்களுக்கு வித்தியாசமாக அமைந்திருந்ததை அறிய முடிகிறது.

    சினிமா ரசிகரான பெரியவர் ஒருவர் என்னிடம் கேட்டார்
    எதற்கு கேட்கிறார் என்று தெரியாமல் பதி சொன்னேன்
    உனக்கு பராசக்தி யார் படம் என்று கேட்டார்?
    சிவாஜி படம் என்றேன்
    அபூர்வ ராகங்கள் யார் படம் என்றார்
    பாலச்சந்தர் படம் என்றேன்
    பராசக்தி டைரக்ட் செய்தது யார்தெரியுமா? என்றார்
    திருதிருவென விழித்தேன்
    ஸ்ரீதர்,பாலச்சந்தர் வருகைக்குப் பின்னர்தான் படத்திற்கு இயக்குனர் என்பவர் முக்கியம் என பரவலாக தெரிய வந்தது. இதன் பின்னரே ஸ்ரீதர் படம்,பாலச்சந்தர் படம் என்று பேசப்பட்டது.அதற்கு முன்னர் எம்ஜி ஆர் படம் சிவாஜி படம் ,ஜெமினி படம் என்றே திரைப்படங்கள் அறியப்பட்டன. என்றார்
    பெரியவர் கூற்று உண்மைதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முற்றிலும் உண்மை. பாடல்கள் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றபோதும், வசனம்-மு.கருணாநிதி என்றபோதும் எழுந்த கைத்தட்டல்களை, இயக்கம்-ஸ்ரீதர், கே.பாலச்சந்தர் என்றபோது வாங்கியவர்கள் நம் மரியாதைக்கு உரியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நன்றி முரளி.

      நீக்கு
  6. ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் சேர்ந்தே விடாமல் அவர் படத்தைப் பார்த்தார்கள். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் நாயகனின் திமிரான இண்டர்வியூ காட்சி, புன்னகை படத்தின் கற்பழிப்புக் காட்சியில் அபத்தமாய் வரும் பாடல், இவை போன்ற விமர்சனத்துக்குள்ளாகும் காட்சிகள் அவர் படத்தில் உண்டு.

    அவர் படத்தின் எந்த நாயகிக்கும் அவர் சந்தோஷமான முடிவைத் தந்திருக்கவில்லை. ஆனாலும் பெருமளவு எல்லோரையும் பாதித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஸ்ரீராம். பழமையைப் பாதுகாப்போரும் அவரை (அரங்கேற்றம் முதலான படங்களுக்காக) எதிர்த்தனர். அதற்காகப் புதுமை எனும் பெயரில் அவரது (கல்கி முதலான கதைகளை) ஏற்கமுடியவில்லை தானே? அதுதான் கே.பி. நன்றி

      நீக்கு
  7. அடேயப்பா!! அண்ணா!! எத்தனை தருவுகள்!! எவ்வளவு உழைப்பு!!! கே.பி க்கு என் இரங்கல்கள்....உங்கள் கடும் உழைப்புக்கு என் வணக்கங்கள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைச் சொல்லவா மைதிலி? உழைப்பே இல்லா்மல் அப்படியே மனசில் பட்டதை எழுதிக்கொண்டே வந்தேன். நல்லதும் கெட்டதுமாக அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியவர் கே.பி. கல்லூரிக்காலத்தில் அவள் ஒரு தொடர்கதை பார்த்து மிரண்டு அவரது வசனத்திற்கு ரசிகன் ஆனேன்.. கல்கி பார்த்து வெறுத்துப் போனேன். சிந்துபைரவி பார்த்து ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் மயங்கினேன் என்பதே உண்மை. அந்தப் பாதிப்பு..கடகடவென்று எழுத வைத்தது. படங்களின் பெயர்களை மட்டும் உறுதி செய்ய விக்கிப்பீடியா பக்கம் போய்வந்தது உண்மை. மற்றபடி எனது சில கட்டுரைகளுக்குத் தேவைப்பட்ட கடும் உழைப்பு இதற்குத் தேவைப்பட வில்லை என்பதே உண்மை (அதனாலேயே இதில ்விடுபடுதல்கள் இருக்கலாம், இருக்கின்றன) நன்றிடா.

      நீக்கு
  8. திரைஉலக வியாபாரிகளில் அவர் ஒரு தனி ரகம் ,அப்படித்தானே ?
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றிகரமான நல்ல வியாபாரி. (நல்ல என்பது இன்றைய காலத்தில் மிக அரிதாகிவிட்ட சூழலில்..) ஆனால் வியாபாரி என்பதில் மாற்றமில்லை. இரண்டு நன்றிகள் பகவானே!

      நீக்கு
  9. பாலச்சந்தர், தண்ணீர் தண்ணீர், உன்னால் முடியும் தம்பி போன்ற நல்ல படங்களையும் எடுத்திருக்கிறார். சீரழிந்த குடும்ப உறவுகளை சித்தரிக்கும் படங்களையும் எடுத்திருக்கிறார். பல படங்களில் கலைநுட்பத்தை விட, வியாபார நுட்பமே தூக்கலாக இருக்கும் என்பதே சரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னால் முடியும் தம்பியில் (அமெரிக்க நண்பரான) எம்.எஸ்.உதய மூர்த்திக்கான பாராட்டுப்போல கதாநாயகன் கமல் பெயரை உதய மூர்த்தி என்று வைத்தார். தண்ணீர் தண்ணீர் வெற்றிகரமான மேடைநாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதனின் படைப்பின் மேன்மை கண்டு இவர் இயக்கிய படம். அதை அப்போதைய ஆட்சியாளர்கள் ஓடவிடாமல் செய்த போது, கே.பி.என்ன செய்தார் என்பது தனிக்கதை.

      நீக்கு
  10. அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
    ஆரம்ப காலத்தில் ஸ்ரீதர், பாலச்சந்தர் கே எ.ஸ்.ஜி
    என்கிற மூன்று இயக்குநர்களே
    நடிகரை மீறி இயக்குநர்களுக்காக
    படம் பார்க்க வைத்தவர்கள் என்கிற முறையில்
    நிச்சயம் பாராட்டத் தக்கவர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீதர் நெஞ்சைத் தொட்டுக் கதை சொல்வார் (அது சோகமாயினும் நகைச்சுவையாயினும்), கே.எஸ.கோபாலகிருஷ்ணன் விவாத ருசிகாட்டி வசன மழை பொழிந்துவிடுவார். கே.பி.வித்தியாசமான கதைக்கருவால் மிரட்டிவிடுவார். மூவரும் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தின் கதைவசன கர்த்தாக்களே என்பது என் கருத்து. தங்கள் கருத்தி்ற்கு எனது நன்றி ரமணிஅய்யா.

      நீக்கு
  11. கே.பி.க்கு அஞ்சலி. என்ற தலைப்பை பார்த்ததும் பதிவிற்குள் வரலாமா இல்லையா என்று சிறிது யோசித்தேன் காரணம் அஞ்சலி என்று தலைப்பு வைத்துவிட்டு அவரது இழப்பு பெரும் இழப்பு என்று மற்றவர்கள் சொல்வது போல நீங்களும் சொல்லி இருப்பீர்களோ என்று நினைத்ததுதான் ஆனால் மனது சொல்லியது மிக அனுபவம் வாய்ந்த ஒரு ஆசிரியர் & பேச்சாளராக நீங்கள் இருப்பதால் எதாவது வித்தியசமாக சொல்லிருப்பீர்கள் என்று எனது மனதிற்குபட்டதால் வந்து பார்த்தேன். நான் எதிர்ப்பார்த்து வந்தது வீண் போகவில்லை. மிக அருமையான அலசலோடு நல்ல பதிவை பகிர்ந்து இருக்கிறீர்கள். அருமை அருமை.. காசு கொடுத்டு வாங்கி படிக்கும் வார இதழ்கள் மாத இதழ்களில் கூட இப்படி யாரும் பகிர்ந்து இருக்க மாட்டார்கள் அவர்கள் சில பிரபல நடிகர்கள் அஞ்சலி செலுத்த வந்த போது எடுத்த போட்டோகளை போட்டு மொக்கையாக ஏதாவது ஒரு பக்கம் எழுதி வெளியிட்டு இருப்பார்கள்


    உங்க பதிவை படித்த பின் வலைதளங்கள் ஊடக இதழ்களை விட பிரகாசிக்கின்றன எனத்தான் சொல்ல தோன்றுகிறது

    பாராட்டுக்கள்...பாராட்டுக்கள்...பாராட்டுக்கள்... உங்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கலாம்தான் ஆனால் இப்ப அது எல்லாம் தெருவில் போற வருகிறவர்களுக்கு கொடுக்கும் ஒரு விருது போல ஆகிவிட்டது அதனால் அதை உங்களுக்கு தரமால் பாராட்டி செல்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! உங்கள் எழுத்து நடைக்கு நான் ரசிகன். அனாயாசமாக கிண்டல் கேலி குத்தல் குடைச்சல் எல்லாம் சேர்த்துப் பெரிய செய்தியைச் சொல்லிவிடுவீர்கள்.. ஆனாலும் கே.பி.பற்றிய உங்கள் படைப்பு அளவிற்கு உங்கள் தலைப்பு என்னைக் கவரவில்லை. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றி நண்பரே

      நீக்கு
  12. நல்ல விமர்சனம்...ஆனாலும் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொண்டிருந்தார்...ஆழ்ந்த இரங்கல்...அவருக்கு...கே.பி..ஐ வித்தியாசமா காட்டிய உங்களுக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே.பி அவர்களை நான் வித்தியாசமாகக் காட்டலை சகோதரீ...
      அவரது வேறுபட்ட படைப்புக்கோணங்களை -வித்தியாசமான இயக்கத்தை- எதார்த்தமாகச் சொன்னேன் அவ்வளவே! நன்றி.

      நீக்கு
  13. அரை நூற்றாண்டிற்கும் மேலாக நாடகம், திரைப்படம் தொடர்ந்து சின்னத்திரை என்ற நிலைகளில் அவருடைய பங்களிப்பு தலைமுறைகளைச் சந்தித்த ஒன்று. புரட்சி, புதுமை என்ற சொற்களுக்கு இலக்கணம் அவர். கல்லூரி நாள்கள் தொடங்கி அவரால் ஈர்க்கப்பட்டு தணிக்கைச்சான்றிதழ் (சென்சார் சர்டிபிகேட்) தொடங்கி, திருவள்ளுவரின் அகரமுதல எழுத்தெல்லாம் குறளைத் தொடர்ந்து பட இறுதிக் காட்சி நிறைவுற்று கடைசியாக அவருடைய முத்தான சில சொற்றொடர்கள் வரை ஒவ்வொர காட்சியையும் (பிரேம்) மிகவும் ரசித்தவர்களில் நானும் ஒருவன். அவருடைய பெயர் திரையில் காணும் போது பின்னணி இசை இருக்காது. அதையும் உன்னிப்பாகக் கவனித்தவன். பல நடிகர்களை, தொழில்நுட்பாளர்களை மட்டுமன்றி அதிக ரசிகர்களை உருவாக்கியவர். நடிகர்கள் பெயரை திரையில் பார்க்கும்போது கைதட்டுபவர்கள் உண்டு. ஆனால் நான் அவரது பெயர் போடப்படும்போது கை தட்டியிருக்கிறேன். அவருக்கு மரணமில்லை. பதிவுகளால் வாழ்பவர் அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வேண்டாமய்யா... வெறும் ரசிகராக மட்டும் இருப்பது ரசிகனுக்கும் கலைஞனுக்குமே நல்லதல்ல. வெறும் குறைகாணும் பார்வையில் சொல்லச் சொன்னால் நான் கே.பி.பற்றி நிறையச் சொல்வேன். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லரவர். அ.ஒ.தொ.கதை நாயகி, சாலையில் போகும்போது, போராடும் தொழிலாளிகளை அசிங்கமாகத் திட்டிவிட்டு, நாயின் மீது அன்புகாட்டுவாள்... எனக்குப் பற்றிக்கொண்டு வந்த காட்சியது. மரியாதை கருதி, காலமான கலைஞர் ஒருவரின் நல்ல படைப்புகளை நினைவுகூரத்தான் இந்தப் பதிவை இட்டேன். கேவலமான பக்கம், பக்கம்பக்கமாக கே.பி.யிடமும் உண்டு. அதனால்தான் பாரதிராஜா, பாலுமகேந்திரா உடன் ஒப்பிட்ட சில வரிகளோடு நிறுத்திக்கொண்டேன். அதை அவரது படைப்புகள் பற்றிய முழுவிமர்சனத்தில் எழுதுவதுதான் நாகரிகம். நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் ஐயா!
    சினிமாவில அவ்வளவு ஆர்வம் இல்லை.. ஆயினும்
    குறிப்பாகக் கே.பி அவர்களின் திரைப்படங்களைப் பார்த்திருக்கின்றேன்.
    அவரின் படங்கள் பல அப்படியே மனதில் இன்னும் பதிந்துள்ளது.

    இனிய கலைஞர் இனி இல்லை என்றது வருத்தமே!..
    என் ஆழ்ந்த அஞ்சலியைக் கூறிக்கொள்கின்றேன்!

    நல்ல தொகுப்பு! மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்வையிட்டதற்கும் கருத்தைப் பகிர்ந்தமைக்கும் நன்றி சகோதரி

      நீக்கு
  15. கே.பி அவர்களை பற்றி பாசிட்டிவ்-நெகட்டிவ் விஷயங்களைஅலசி சிறப்பாக எழுதியுள்ளீர்கள்! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்தானே சரியான விமர்சனம்? நன்றி அய்யா.

      நீக்கு
  16. நல்ல அலசல். இன்னும் ஒரு கோணம் தவறிவிட்டதோ என எண்ணுகிறேன். அவர் தேர்வு செய்த கதைக் கரு, வாழ்வியல் முறை, உரையாடல்,முன்னிலைப் படுத்திய நடிகர்கள் அனைத்திலும் ஒரு வர்ணாசிரம வாடை இருப்பதையும் எளிதில் ஒதுக்கிவிட முடியாதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
      வாக்கினிலே இனிமை உண்டாம்“ - பாரதி.

      நீக்கு
  17. மிகச் சிறப்பான பகிர்வு ஐயா...
    திரு. கே.பாலச்சந்தர் குறித்து அலசி ஆராய்ந்து அழகான பகிர்வைத் தந்திருக்கிறீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவே முழுமையற்றதுதான் நண்பரே.
      முழுமையாக எழுதினால் நம் வலைநண்பர்கள் படிக்கச் சலிப்படைகிறார்கள் என்பதால்... சுருக்கியே எழுதினேன்.
      தங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

      நீக்கு
  18. அண்ணா நடுநிலையான பதிவு. உண்மையில் என்மனதில் பட்டதைக் கூறியிருக்கிறீர்கள் நன்றி. துணிச்சல் என்கிற போக்கில் அவர் காட்டிய பெண் கதாபாத்திரங்கள் எனக்கு கொஞ்சமும் பிடித்ததில்லை. இந்த நேரத்தில் உங்களது இந்த அலசல்....அசத்தலண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “இந்த“ நேரத்தில் எழுதியதில் எனக்கும் சங்கடமுண்டு சகோதரி.
      ஆனால், வேறு வழியில்லை.. சுருக்கமாக எழுதினேன். நன்றி.

      நீக்கு
  19. கே.பாலசந்தர் அவர்களைப் பற்றி பகிர்வு அருமை.
    போனவாரம் செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை உங்கள் நேர்காணல் கேட்டேன்.
    நன்றாக பேசினீர்கள்.

    அறிஒளி இயக்க குழந்தைகளுக்கு எழுதிய பாடல் அருமை(, சைக்கிள் ஓட்ட கத்துக்கனும் தங்கச்சி என்று சொல்லி பாடிய பாடல் மிக அருமை.)வாழ்த்துக்கள் சார்.
    பாரதிதாசன் அவர்கள் பாட்டு மழையே மழையே வா வா பாடல் நன்றாக நன்றாக பாடீனீர்கள்.
    கஷ்டப்பட்டு படிக்காதீர்கள், இஷ்டப்பட்டு படியுங்கள் நீங்கள் சொன்னது நல்ல யோசனை.
    முதல்மதிபெண் வாங்க வேண்டாம் மகளே என்ற உங்கள் புத்தகத்தை பற்றி பேசியது , புத்தகம் வாங்கி படிக்க சொன்ன அறிவுரை எல்லாம் மிக சிறப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுபற்றிய உங்கள் கருத்திற்கும், பொதிகையில் வந்த எனது நேர்காணலைக் கவனித்துப் பாராட்டிய உங்கள் அன்பிற்கும், வணக்கம் கலந்த எனது இரட்டை நன்றிகள் சகோதரி.

      நீக்கு
  20. அன்புள்ள ஐயா.

    கேபி ஏற்படுத்திய திரை விளைவு முக்கியமானதுதான். உங்களின் சிப்பிக்குள் முத்து போன்ற சுருங்கிய மிகச் செறிவான கட்டுரை இது.

    பதிலளிநீக்கு
  21. மிக அருமையான பதிவு அய்யா !

    அஞ்சலி என்பதுடன் இல்லாமல் அவரின் படைப்புகளை பற்றிய துல்லியமான தகவல்களையும் தந்துள்ளீர்கள்.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு