பதிவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்!





நான் எனது பதிவுகளை இடும் போதெல்லாம் யார்யார் அதை வந்து பார்த்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புவேன். அது முடியா தென்பதால் யாரெல்லாம் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பேன் 


அடுத்து-

யார் யார் புதிதாக நம் “பின்பற்றாளர்” (ஃபாலோயர்) பட்டியலில் சேர்ந்திருக்கிறார்கள் என்றும் பார்ப்பேன். அவர்களுக்கு நன்றிசொல்ல அவர்கள் தளத்தைச் சென்று பார்த்து, பெரும்பாலும் நானும் அவர்களைப் பின்பற்றும் பட்டியலில் உடனே இணைந்துவிடுவேன்.

ஆனால், கட்டக்கடைசியாக  வந்து சேர்ந்திருந்தால்தான் அவர்களைக் கண்டு பிடிக்கமுடியும். கடைசியாக வந்து ஃபாலோயர் பட்டியலுக்கு உள்ளே போய் உட்கார்ந்துவிடும்(?) நண்பர்களை அடையாளம் காண என்னால் முடிவதில்லை.

 இதற்கு என்ன வழி என்று வலைச்சித்தரும் எங்கள் வலையுலக மகாவித்வானுமான அய்யா திண்டுக்கல் தனபாலன்தான் பதில் சொல்லவேண்டும்...

அடுத்து-

யார்யாரெல்லாம் தனது வலைப்பக்க இணைப்பில் நம்வலைப்பக்கத்தைச் சேர்த்திருக்கிறார்கள் என்றுபார்த்து உடனடியாக அவரது வலைப்பக்க இணைப்பை என்வலையின் “நட்பு வலைப்பட்டியலில்” சேர்த்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இது இன்றும் தொடர்கிறது. (முன்னர் எனக்கு நல்லதென்று என்கண்ணில் படுகிற வலைப்பக்க இணைப்பையெல்லாம் இணைத்திருந்தேன். ஆனால், சிலபல மாதம் கடந்து பார்த்தால் அவர்களில் பலர் அப்படியெதுவும் இணைப்புத் தந்திருக்கவில்லை என்பதைக் கண்டேன்...)

ஆனால், அவர்களில் சிலரோ அந்த இணைப்புத்தரும் பிரிவையே எடுத்துவிட்டிருக்கிறார்கள். அய்யா கரந்தையார் பெரிய பட்டியலையே வைத்திருக்கிறார் “மனசு” குமாரும் அப்படியே! ஆனால், நமது பிரபலபதிவர் “மூங்கில்காற்று” முரளிதரன் தனது இணைப்புப் பட்டியலை  ஏனோ இப்போது எடுத்துவிட்டார்!  
அவரது வலைப்பக்கத்தில் காணோம்!

முன்னர் ஒருமுறை திரு குமார், திரு முரளிதரன் ஆகியோர் தம் தளத்தில் என் பதிவு ஒன்றை அறிமுகம் செய்ததும், எனக்கு நூற்றுக்கணக்கில் அன்றே புதுப்புது வாசகர்களும் பின்பற்றாளரும் வந்து குவிந்தனர். இதை அவர்களிடமே நன்றியுடன் தெரிவித்திருக்கிறேன். இதேபோல தமிழ்மணம், தமிழ்வெளி மற்றும் வலைச்சரம் அறிமுகமும் இப்படித்தான் என் வலைப்பதிவுகளைக் கொண்டுசேர்த்ததில் பெரும்பங்கு வகித்ததை நன்றியுடன் எப்போதும் நினைத்துக்கொள்வேன்.

இப்போது எனது வேண்டுகோள் -
வலைநண்பர்கள் நல்ல வலைப்பக்கங்களைத் தமது பக்கத்தில் இணைப்பாகத் தந்து புதியவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நல்ல பணியைத் தொடரவேண்டும். இது தனிப்பட்ட எனக்கான வேண்டுகோள் அல்ல, வலையுலகில் அக்கப்போர்கள் அல்லது ஆபாசங்களே கிடப்பதான பொதுக் கருத்தை மாற்ற நாம்தான் நல்லவற்றை அறிமுகப்படுத்தி உதவ வேண்டும் இல்லையா? 

எனது வலைப்பக்கத்தில் என்தளததை அறிமுகப்படுத்திய நண்பர்களின் வலைஇணைப்பை நானும் தந்திருக்கிறேன். 


இதுமட்டும் போதாது என்பது எனக்குப் புரிகிறது. என் வலைக்கு வரும் அனைவரும், நல்ல வலைப்பக்கம் அனைத்தையும் பார்க்கநான் தூண்டுதலாக இருக்கவேண்டும். அதே நேரம் என்வலைப்பக்கத்தையும் அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும என்றுநான் எதிர்பார்ப்பது தவறா?சரியா? எனக்குத் தெரியவில்லை. இதுபற்றிய நண்பர்களின் கருத்தறிந்து அவ்வாறே செய்ய நினைத்திருக்கிறேன்.


இது சரிதான் எனில் சொல்லுங்கள் அனைவரும் சேர்ந்தே இப்பணியைத் தொடர்வோம்.தொடரவேண்டுகிறேன். அல்லது வேறு என்ன செய்து புதியவர்களுக்கு நமது தளத்தை இன்னும் அதிகமானோர் பார்வைக்குக் கொண்டுசெல்லலாம் என்பதை எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுமாய்த் தொழில்நுட்பம் அறிந்த நம் வலைநண்பர்களை அன்போடு வேண்டுகிறேன்.


இப்போது தமிழ்மணம், தமிழ்வெளி ஆகிய இரண்டே வலைத் திரட்டிகளில்தான் எனது இணைப்பு உள்ளது. கல்விச்சோலை தமிழ்நாடுடீச்சர்ஸ்ஃப்ரண்ட்ஸ் .சிறுகதை, கட்டுரை மற்றும் சில ஆசிரியர்களுக்கான அமைப்புகள் முதலான கல்வி தொடர்பான தளங்களில் எனது சில கட்டுரைகளை எடுத்துப் போட்டுக் கொள்கிறார்கள். மற்றபடி இன்னும் மேலதிக வீச்சில் கொண்டுசெல்ல என்ன செய்யலாம் என்று தெரிவித்து உதவ வேண்டுகிறேன் - 

அன்பின், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை

59 கருத்துகள்:

  1. என்னுடைய வலையில் புதிய பதிவர்களின் சுட்டியை கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.. ஒரு சின்ன சோம்பேறித்தனம் காரணமாக அதனை கடந்த ஒரு வருடமாக அப்டேட் செய்யவில்லை :-), சீக்கிரம் அதனை வேறுபல நண்பர்களின் பெயர்களின் கொண்டு புதுப்பிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றுதான் உங்கள் வலையில் பின்பற்றாளர் ஆனேன்.
      மதுரை நிகழ்வை அழகாகத் தொகுத்துவிட்டீர்கள் நன்றி.
      புதியவர் அறிமுகம் நல்ல யோசனை... நானும் செய்வேன் அந்தத் தொழில்நுட்பத்தை விரைவில் கற்றுக்கொள்வேன். (கஸ்தூரீ..வேர் ஆர் யூ?)

      நீக்கு
  2. தங்கள் முழுமையான எண்ணம் நன்று.
    தங்கள் விருப்பப்படி சிறந்த பதிவுகளை நானும் அறிமுகம் செய்ய, பதிவர்கள் சிலர் எனது பதிவுகளையும் அறிமுகம் செய்கிறார்கள்.
    இந்த நல்லுறவை எல்லோரும் தொடர்ந்தால் கீழ்த்தரத் தளங்களை ஓரம்கட்டலாம்.
    தங்கள் மதியுரையை வரவேற்கிறேன்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “இந்த நல்லுறவை எல்லோரும் தொடர்ந்தால் கீழ்த்தரத் தளங்களை ஓரம்கட்டலாம்” அதுதான் நண்பரே அதுவே தான்!
      இருளைப்பற்றி வருத்தப்படுவதைவிட ஒரு சிறு விளக்கை ஏற்றுவதுதானே சரியானது என்பார்களே அதுதான். செய்வோம், தொடர்ந்து செய்வோம். இணைந்து செய்வோம். நன்றி

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஐயா தங்களின் நல்லஉள்ளத்தை மதுரையில் கண்டேன். (அனைவருக்கும் பொன்னாடைகளாக அள்ளிவழங்கிக்கொண்டே இருந்தீர்களே? தங்களின் ஆர்வம் இளைஞர்களையும் தொற்றிக் கொள்ளும் வகையில் இருக்கிறது அய்யா, வணக்கமும் நன்றியும்

      நீக்கு
  4. நல்ல முனைப்பு தான் ஐயா. நானே பெரும்பாலும் வலைச்சரத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் எனக்குப் பிடித்தவர்களைத் தொடருகிறேன். நல்ல எழுத்துக்களை என் முக நூலில் அறிமுகமும் செய்து வைக்கிறேன். என் வலைப்பக்கம் வருபவர்கள் குறைவென்பதால் நீங்கள் சொன்ன யோசனை எனக்கு வரவில்லை... நமக்கு நாமே நல்ல பதிவர்களை அறிமுகம் செய்து வைப்பதும் இல்லை பதிவுகளை அறிமுகம் செய்து வைப்பதும் கூட நல்ல முயற்சியாய் அமையும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நமக்கு நாமே நல்ல பதிவர்களை அறிமுகம் செய்து வைப்பதும் பதிவுகளை அறிமுகம் செய்து வைப்பதும் கூட நல்ல முயற்சியாய் அமையும்“ - ஆமாம் சகோதரி. நல்லது செய்வோம், நன்றி.

      நீக்கு
  5. நல்ல பதிவர்களை அறிமுகம் செய்தல் சிறப்பான ஒன்றுதான்! நானும் இனி அவ்வப்போது எனக்கு பிடித்த பதிவுகளையும் பதிவர்களையும் அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கின்றேன். முக்கியமான ஒன்று இதற்கு பதிவர்களின் அனுமதி பெறுதல் வேண்டும். இல்லையேல் ந்ம்மை அவர்கள் தவறாக நினைக்க வாய்ப்புள்ளது. நம் தளத்திற்கு நிறைய பேர் வாசிக்க வேண்டுமெனில் நாமும் நிறைய தளங்களுக்குச் சென்று வாசித்து கருத்திட வேண்டும். நானும் முதலில் யாரும் வரவில்லையே என்று வருந்தினேன். பின்னர் பல தளங்களுக்கு சென்று இணைந்து கருத்திட்டேன். இப்போது என் தளம் முன்னைவிட நிறைய பேருக்குத் தெரிகிறது. பழைய நண்பர்கள் பலர் கருத்திட முன்பு போல வருவதில்லை எனினும் நாம் மனம் தளராமல் நாம் தொடரும் தளங்களுக்குச் சென்று ஊக்கப்படுத்தினால் நமக்கும் வருகை அதிகரிக்கும். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர்களை அறிமுகம் செய்ய அனுமதி எதற்கய்யா? அவர்களைப் பற்றிய அறிமுகத்தோடு அவர்களின் தளமுகவரி (யூஆர்எல்) தரப் போகிறீர்கள். அல்லது நன்றி என்று அவர்களின் தளப்பெயர் தரப்போகிறீர்கள் இதற்கு அனுமதி எதற்கு? தெரிவித்தால் போதும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  6. உங்களைப் போன்ற பலர் வரவால் தமிழ்ப் பதிவுலகம் உயர் தரமாகிக்கொண்டு வருகிறது.

    அதை இன்னும் மேலே கொண்டு போக முயலும் உங்க முயற்சியைப் பாராட்டுகிறேன்.

    மற்றபடி வலையுலக நட்பில் எதிர்பார்ப்புகள் அதிகமாக ஆக ஆக மனவருத்தம் தரும் நிகழ்வுகளும் அதிகமாகும்..

    ஒருவர் தொடர்பவராகக் காட்டிக்கொண்டு உங்க பதிவை தொடராமல் இருக்கலாம். இன்னொருவர் தொடர்பவராகக் காட்டாமல் தொடரலாம். இதில் யாரு "உயர்ந்தவர்" அல்லது யாரை உங்களுக்குப் பிடிக்கும் என்பதெல்லாம் தனிப்பட்டவரைப் பொறுத்தது..

    என்னைப் பொறுத்தவரையில் வலையுலக நட்பில், எதிர்பார்ப்புகளை தவிர்க்க முடியாது. எதிர்பார்ப்புகள் மனவருத்தத்தையும் அதிகமாக்கும்.
    வலையுலகில் "சகிப்புத்தன்மை" என்பதும் நமக்கு வளரவேண்டும்..

    ஒரு சிலர் "சகிப்புத்தன்மை"னு எதையுமே கேள்வி கேட்காமல் போய் விட்டு மனதுக்குள் வைத்து க்கொண்டு வருந்திக்கொண்டு இருப்பார்கள்.
    ஒரு சிலர், மாற்றுக்கருத்தை, அல்லது எதிர் கருத்தை சொல்லிவிட்டு அதோடு போய் நிம்மதியாக தூங்குவார்கள்..

    Pay it forward என்பார்கள். நமக்கு உதவியவர்களுக்கு நாம் திருப்பி உதவுவதைக் காட்டிலும், நமக்கு உதவியருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, நாம் கஷ்டப்பட்டது போல் கஷ்டப்படும் பல பதியவர்கள், அனுபவம் குறைந்தவர்களுக்கு நமக்கு இன்னொருவர் உதவியது போல் உதவுவது நல்லது...என்பது என் கருத்து..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட..இது நல்லா இருக்கே! “நம்மை மறந்தாரையும் நாம் மறக்க மாட்டேமால்“ “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!” மாதிரி கொஞ்சம் இருக்கோ? இது கொஞ்சம் உயர் பெருந்தன்மையான மனநிலை போலத் தெரிகிறதே! ரெண்டும் சேர்த்து யோசித்து ஏதாவது செய்யலாமோ? பார்ப்போம் நன்றி உங்கள் சிந்தனைகளே வித்தியாசமாக இருக்கின்றன.அதைச் சொல்வதிலும் தெளிவாக இருக்கிறீர்கள். வாழ்த்துகள் நண்பா.

      நீக்கு
  7. நல்ல முயற்ற்சி ஐயா நானும் முன்னர் வைத்து இருந்தேன் இப்போது கொஞ்சம் சோம்போறியும் நேரமின்னையும் இனி மீண்டும் துளிர்விடச்செய்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது மதுரைவிழாப் பேச்சில் குறிப்பிட்டேனே?
      “நல்ல எழுத்தாளர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள” அய்யோ சாமீ அடிக்க வராதீர்கள். இது பிரபல எழுத்தாளர் காலச்சுவடு சு.ரா. சொன்னது. நான் எடுத்துச் சொன்னேன் அவ்ளோதான். நன்றி.

      நீக்கு
  8. நிறைய திரட்டிகளில் இணைத்தால் சில சமயம் திறக்க நேரம் ஆகும் பிரச்னை போன்ற பிரச்னைகள் வந்த நேரத்தில் நாங்கள் அதை எடுத்து விட்டோம். இப்போது தமிழ்மணம் மட்டும்தான்.

    யார் யார் படித்தார்கள் என்று அறிய வாய்ப்பில்லை. பின்னூட்டம் இட்டால் தெரிந்து கொள்ளலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அந்தச் சிரமம் வேறு இருக்கிறதோ? அப்படியானால் நல்ல திரட்டியாகப் பார்த்து சிலவற்றில் மட்டும் இணைத்துவிட்டு, நல்ல தரமான பதிவுகளைப் போட யோசிக்கணும்ங்கிறீங்க.சரிதான்,நன்றி

      நீக்கு
  9. நல்லதொரு எண்ணப்பாடு. நம்முடைய வெள்ளை மனதுக்கு நாம் பலரை அறிமுகப்படுத்தலாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மைப் பகிர்ந்தாரை நாம் பகிர வேண்டாமோ? (பகிராரையம் புதியவராயின் பகிரலாம்?)

      நீக்கு
  10. தங்களின் எண்ணம் போற்றுதலுக்கு உரியது ஐயா
    ஒவ்வொருவரும் , மற்ற பதிவர்களை, தங்களின் தளத்திற்கு வருபவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, புதிதாய் எழுத வருகிறவர்களை ஊக்குவிக்க வேண்டும் ஐயா
    வலைப் பூவிற்கு வந்து வாசிப்பவர்கள் கூட, கருத்துரை வழங்க ஏனோ தயங்குகிறார்கள்,
    அனைத்துப் பதிவர்களும், தாங்கள் வாசிக்கும் அனைத்துப் பதிவுகளிலும், தங்களின்கருத்தினைப் பதிவு செய்தால், அக்கருத்துரை, அப் பதிவருக்கு ஊக்கத்தினையும், உற்சாகத்தினையும் அளிக்கும்.
    என்னால் முயன்ற வரை இப்பணியினைச் செய்து வருகின்றேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பணி பின்பற்றற்குரியது அய்யா. அதனால்தான் எனது பதிவிலேயே உங்களை எடுத்துக் காட்டிவிட்டேன். என்றாலும் இங்கேயும் வந்து பின்னூட்டமிட்டதற்கும் சேர்த்து நன்றி அய்யா

      நீக்கு
  11. அய்யா,
    வணக்கம். தாங்கள் கூறிய கருத்துகள் உண்மையே. ஆனால் நாம் மதிப்போரையும் நம்மை மதிப்போரையும் என இரு திறத்தாரையும் நம் நட்பு வலைத்தளங்களில் கொள்ளலாம் என்பது என் எண்ணம்.
    நாம் மதிப்போர் நம்மை மதிக்காமல் இருக்கும் இடத்தும்!
    இதில் இன்னொரு பிரச்சனையையும் காண்கிறேன். என்னைப் போல முறையான தொழில் நுட்ப அறிவு இல்லாமை.
    எனவே சில வலைத்தளங்களை இணைக்கப் பலமுறை முயன்றும் முடியாமல் சோர்ந்து பின்வாங்க நேர்கிறது.
    தற்போது வலைத்தளம் தொடங்கிய என் நண்பர் ஒருவரே நட்பு வலைப்பூப்பட்டியலை இணைக்க வேண்டும் என்று பல முறை சொல்லி இருக்கிறார். ஆனால் அது குறித்து அவருக்கு போதிய அறிவில்லை.
    எனது அரைகுறை அறிவைக் கொண்டு முயன்று ஏதேனும் பிரச்சனை ஆகிவிடக் கூடாது என்பதற்காக நானும் முயலத் தயங்குகிறேன்.
    இது இன்னொரு பார்வை மட்டுமே!
    “ நம்மை நினைந்தாரை நாம் மறக்க மாட்டோமால்“
    அருமை!!!
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் அய்யா. புதியவர்களை வேறொரு தனிப் பட்டியலாக இணைக்கவும் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கொரு நல்ல தலைப்புத் தந்தீர்கள். என் வலைப்பக்க இணைப்பில் போடடுக்கொள்கிறேன் அய்யா...நன்றி

      நீக்கு
  12. பொதுவாகவே வலைகளைப் படிப்பவர்களது taste வித்தியாசப் படுகிறது. யார் நம் வலைப்பக்கம் வருகிறார்களோ நாம் அவர்கள் வலைப்பக்கத்துக்குப் போகிறோம். பின்னூட்டமிடுபவர்களில் பலர் தங்களது வலைப்பக்கத்துக்கு வருகை வேண்டும் என்று கருதியே பின்னூட்டமிடுகிறார்கள். சில நேரங்களில் பதிவைப்படித்தார்களா என்றுகூட சந்தேகம் வ்ருகிறது. நான் என் மனக் கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்ளவே பெரும்பாலும் எழுதுகிறேன். பலருக்கு அதில் உடன் பாடு இல்லாமலும் போகலாம்., பொழுது போக்குக்குக்காக எழுதுபவர்களே அதிகம். வலைப்பதிவுகளை மேம்போக்காக வாசிப்பவர்களே அதிகம். இந்நிலையில் மற்றவரது பதிவுகளை மேற்கோள் காட்டி எழுதுவது என்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போலிருக்கும் என்பதே என் எண்ணம்.என் எழுத்துக்களை நான் ஒவ்வொரு ரகத்திலும் எழுதி வாசகர்களைக் கவர முயற்சி செய்கிறேன். உங்கள் பதிவை நான் சரியாகப் புரிந்து கொண்டுதான் நான் இதை எழுதுவதாக நினைக்கிறேன். புரிதலில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பின்னூட்டமிடுபவர்களில் பலர் தங்களது வலைப்பக்கத்துக்கு வருகை வேண்டும் என்று கருதியே பின்னூட்டமிடுகிறார்கள்“ இது உண்மைதான் என்றாலும் அய்யா, நான் பின்னூட்டம் இடும்போது ஏனோ தானோ என்று இடுவதே இல்லை. ஒவ்வொரு பதிவுக்கும் எடுத்துக்கொள்ளும் அக்கறையைப் பின்னூட்டம் இடும்போதும் எடுத்துக் கொள்வேன். கொஞ்சம் சிரமம்தான். தாங்கள் சரியாகத்தான் எழுதியிருக்கிறீர்கள அய்யா. மிகுந்த நன்றியை வணக்கத்துடன் தெரிவிக்கிறேன்

      நீக்கு
  13. நல்லவிசயமாருக்கே...நல்லபதிவர்களை அனைவரும் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்..செய்யலாம்...சகோ..

    பதிலளிநீக்கு
  14. 1) ஐயா முதலில் உங்களின் தளம் ,in என்பதை .com என்று மாற்ற வேண்டும்...

    2) தாங்கள் சொல்லும் ஃபாலோயர் பட்டியல் எப்படி பார்ப்பது, சேர்ப்பது, இன்னும் பல விவரங்களை தனி பதிவாக வெளியிடுகிறேன்...

    3) // நட்பு வலைப்பட்டியலில் // :

    பட்டியல் 300 பேர்கள் தானா....? இதைப்பற்றி காண்க : http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html

    மேலும்... தொடர்கிறேன் எனது வலைப்பக்கத்தில்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம். முரளி அய்யா செய்து தந்தார். பிறகு எப்படியோ மாறிவிட்டது எப்படி என்றும் தெரியவில்லை.
      தங்களின் தனிப்பதிவை எதிர்பார்க்கிறேன் நன்றி அய்யா. (விரைவில் புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கத்தினரின் அடுத்த பயிற்சிக்குத் தங்களை அழைப்போம்) நன்றி.

      நீக்கு
  15. இவர் எழுத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்று எண்ணும் எண்ணத்தில் உள்ள எழுத்துக்களை தனிப்பதிவாக போட்டு ஒவ்வொரு சமயத்திலும் அறிமுகம் செய்து வைத்து விடுவதுண்டு. அப்படித்தான் இதுவரையிலும் செய்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எல்லாம் முறையாகச் செய்கிறீர்கள் அய்யா.
      உங்களிடம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்.
      முன்னொரு கட்டுரையில்உங்கள் பதிவை மேற்கோளிட்டு நன்றியும் தெரிவித்திருந்தேன் அந்தக் கட்டுரை “காக்கைச் சிறகினிலே“ இதழில் வெளிவந்தது.நினைவிருக்கிறதா அய்யா?

      நீக்கு
  16. நான் தொடர்பவர்களை எல்லாம் நட்புப்பட்டியலில் சேர்த்து விடுவேன். சிலரது எழுத்துக்களைப் படித்து விட்டு பிடித்திருந்தால் புக்மார்க்கில் போட்டு வைத்து விடுவேன். அதிலிருந்து எடுத்துப் படிப்பேன்... இன்னும் நிறையப் பேரை நட்புப்பட்டியலில் சேர்க்கும் போது நமது தளம் திறப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதிகம் சேர்ப்பதை தற்போது குறைத்திருக்கிறேன்.

    நல்ல எழுத்துக்கு சொந்தக்காரர்களை எல்லாம் எப்படியும் வாசித்து விடுவேன்.

    நேற்றுத்தான் 'WARRIOR' தேவா அண்ணா போனில் பேசும் போது எழத்து.காமில் பதிவை இணை... நிறையப் பேர் வாசிக்கிறார்கள் என்றார். நேற்று இணைத்துப் பார்த்தேன்... மற்றபடி தமிழ்10-ல் இணையுங்கள். எனக்கு இண்ட்லி இணைப்பு வேலை செய்யவில்லை... தனபாலன் அண்ணாவிடம்தான் கேட்க வேண்டும்.

    தாங்கள் சொல்வது போல் இன்னும் புதியவர்களைச் சேர்க்க முயற்சிக்கிறேன் ஐயா...

    உங்கள் மனதில் இடம் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வலைப்பக்கதில் ஏராளமான பதிவர்களின் இணைப்பைத் தந்து ...“வியூ மோர்“ என்று வேறு வைத்திருக்கும் நேர்த்தி மிகவும் சிறப்பு அய்யா. அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் முதலில். நன்றியை நானல்லவா சொல்ல வேண்டும்? நன்றி நன்றி நன்றி.

      நீக்கு
  17. முதற்கண் நேரம் கிடைத்தால் தான் என்று இல்லை.
    வேறு எதுவும் செய்ய இல்லை எனும்போழுதுதான்
    தமிழ் வலைப்பக்கம் பெரிதும் திரும்பிப் பார்க்கின்றனர் அதிக வலைப்பதிவாளர்கள்.

    இதை விடுத்து, தினமும், வலைப்பக்கங்களில் ஒரு பத்தாவது தினம் படிக்க வேண்டும் என்று எல்லா பதிவர்களும் ஒரு மன உறுதியுடன் படிக்கவேண்டும் என்று சொல்ல மாட்டேன், பதிவின் ஒவ்வொரு வாக்கியம், வார்த்தை அவற்றினையும் நன்றாக கவனிக்க வேண்டும்.
    எதோ, நானும் வந்தேன் என்று ஆஜர் ஐயா என்று வகுப்பில் மாணவன் சொல்வது போல, வந்து போகக் கூடாது.
    அவ்வண்ணம் ஒவ்வொரு பதிவையும் ஊன்றி படிக்கவேண்டும்.
    அப்பொழுதுதான், பதிவாளரின் சிறப்பு இயல்புகளை உணர முடியும்.
    அது மட்டுமல்ல, பதிவாளர் சுட்டிக் காட்டி இருக்கும் பதிவுகளுக்கும் செல்ல வேண்டும்.

    பின்னூட்டம் இடவேண்டும். என்று மட்டும் இல்லை. அந்த பின்னூட்டம் அந்த பதிவுக்கு வரும் நண்பர்களைக் கவரும் விதத்தில் அமைய வேண்டும். ஒருவரை இன்னொருவர் சாடுவதையும், ஏசுவதையும் தவிர்க்கவேண்டும். அதே சமயம்,

    நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்
    மேற்சென்று இடித்தல் பொருட்டு

    எனும் வள்ளுவன் வாக்கை நினைவு கொள்ளவேண்டும்.

    இனி என்ன சொல்ல லாம். ?

    நிறைய இருக்கின்றன.

    பின்னூட்டம் பதிவை விட ரசிக்கும் படியாக இருந்தாலும் பின்னூட்டப் பதிவாளரின் மதிப்பு கூடும் வாய்ப்பு உள்ளது.

    பின்னூட்டம் என்பது பின் னால் பின் புறம் குத்துவது அல்ல.
    எதிரே நின்று வாய்மையுடன் தூய உள்ளத்துடன் பேசுவது.

    இந்த வழி அதிக நண்பர் குழாத்திடை நம்மையும் சேர்த்துக்கொள்ளும்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com
    www.movieraghas.blogspot.com
    www.Sury-healthiswealth.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம் நன்று சொன்னீர்கள் அய்யா.
      “ஒவ்வொரு பதிவையும் ஊன்றி படிக்கவேண்டும்.“ அதுதானே சிக்கல்? இந்தச் சிக்கல் படிப்பவரிடம் மட்டுமல்ல, எழுவோரிடமும் இருக்கிறது. “படிக்கும்படி“ எழுதுவதும் முக்கியமல்லவா? அதோடு நல்லவற்றைப் பாராட்ட ஒரு நல்ல மனமும் வேண்டும். விமர்சனம் என்பது, முளைத்துவரும் குருத்தைக் கிள்ளுவதாக இருக்கக் கூடாது, பழுத்த இலைகளை வலிக்காமல் கிள்ளி, அந்தச் செடிக்கே உரமாக்குவது. இதைப் புரிந்துகொண்டால் எழுத்தும் சிறக்கும் படிப்பும் நிறக்கும். நன்றி

      நீக்கு
  18. ஐயா!
    புதிதாக வலைப்பூ தொடங்கி எழுதுபவர்களுக்கு உள்ளது போன்ற தங்கள் ஆர்வம் என்னை வியப்படைய வைக்கிறது.
    நீங்கள் குறிப்பிட்டது போல இணைப்பு பட்டியலை எடுக்கவில்லை.நான் எனது வலைப் பக்கத்தில் பிடித்த பதிவர்களுக்கான இணைப்பு விட்ஜெட் சேர்த்ததில்லை.
    காரணம்: நமக்கு பிடித்த பதிவர்களின் பட்டியல் மிக நீளமானது. அனைவரும் எனது நண்பர்கள். அதில் இடம் பெற்ற பதிவர்கள் மட்டுமே நான் விரும்பும் பதிவர்களாக மற்றவர்கள் தவறாக நினைக்க வாய்ப்பு உண்டு. மேலும் இது போன்ற விட்ஜெட்டுகள் நமது வலைப்பக்கத்தை திறப்பதற்கு தாமதப் படுத்திவிடும். இதே காரணத்திற்காகத்தான் DD யும் இணைப்புப் பட்டியல் வைக்கவில்லை என்று நினைக்கிறேன்)
    நான் படித்த எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளை( அப்படியானால் மற்ற பதிவுகள் பிடிக்கவில்லை என்று அர்த்தமல்ல. மற்ற பதிவுகளை முக நூல், கூகிள் + போன்றவற்றில் பகிர்வதுண்டு) எனது வலைப்பதிவின் மூலமாக விளக்கங்களுடன் அறிமுகப் படுத்துவேன். தங்கள் பதிவையும் அவ்வாறே எனது பெட்டிகடையில் சிறியவிளக்கத்துடன் இணைப்புடன் குறிப்பிட்டேன்

    மேலும் அவ்வாறு அறிமுகப் படுத்தும் பதிவர் ஒன்று புதியவராக இருப்பார். அல்லது வலை நுட்பம் அதிகம் அறியாதவராக இருப்பார். அவர்களுக்கு நானே வலிய சென்று உதவி இருக்கிறேன். அதன் பிறகு நம் உதவி அவர்களுக்கு அதிகம் தேவைப் படாது என்பது எனது எண்ணம்.ஆனால் மற்றவர்களிடம் பேசும்போது எனக்குப் பிடித்த பதிவர்களைப் பற்றி கட்டாயம் பேசுவேன். நான் எப்போது எந்த பதிவர்களை சந்தித்தாலும் அவர்களிடம் இரண்டு பேரைப் பற்றி கட்டாயம் பேசுவேன். ஒருவர் கரந்தை ஜெயகுமார் . இன்னொருவர் தாங்கள்.உங்கள் இருவரின் பதிவுகளில் பெரும்பாலானவை எப்போதும் தேடித் பிடித்துப் படிக்கக் கூடிய தன்மை பெற்றவை.
    முதன்முதலில் கரந்தை ஜெயகுமார் அவர்களை வலை சரத்தில் அறிமுகப் படு.த்தியது கடற்கரை விஜயன் என்ற இளம் பதிவர். அவருக்கு கரந்தையாரின் பெயரை பரிந்துரை செய்தது நானே.உஷா அன்பரசு அவர்களிடம் வலைசரத்தில் அவரது தளத்தை அறிமுகம் செய்ய கேட்டுக் கொண்டேன். அது கரந்தையாருக்கு இன்னமும் தெரியாது. அதன் பின்னர் பலரும் அவரை குறிப்பிட்டனர்.
    மற்ற உங்கள் ஐயங்கள் மற்றும் வினாக்களுக்கு சிறப்பாக பதிலளிப்பார் என்று நம்புகிறேன். நானும் எனக்கு தெரிந்த வரை எனது பதிவில் பதில் கூற முயற்சிக்கிறேன்.
    மதுரையில் தங்களை மீண்டும் ஒரு முறை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் அன்புடன் ஈந்த ‘கம்பன் தமிழும் கணினித் தமிழும்” நூலைப் படித்து வருகிறேன்.
    நேற்றே இந்தப் பின்னூட்டத்தை இட்டு சமர்ப்பிக்க முனையும்போது மின் சிக்கலால் தடைபட்டுவிட்டது.
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நானும் எனக்கு தெரிந்த வரை எனது பதிவில் பதில் கூற முயற்சிக்கிறேன்.“ அவ்வப்போது தொழில்நுட்பச் செய்திகளையும் எழுதுங்கள். எழுதுவதே படிக்க மட்டுமல்ல, எப்படி எழுதவேண்டும் என்று காட்டவும் உதவும் என்பது உங்கள் எழுத்தைப் பார்த்து, உங்களுக்குத் தெரியாமலே பலரும் கற்றுக்கொண்டு வருகிறோம்! தொடருங்கள் தொடர்வோம். (இந்த மின்னம்மன் சாபம் என்று தீருமோ? யார் அறிகுவரே? )

      நீக்கு
  19. தற்போது வலைப்பூவிற்கு புதியவரான எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணன் அவர்களின் பதிவை குறிப்பிட்டிருக்கிறேன். எப்போது எந்தப் பதிவரை எனது வலைப்பூவில் குறிப்பிட்டாலும் அவரது பெயரை க்ளிக் செய்தால் அவரது வலை தளத்துக்கு செல்லும் இணைப்போடு குறிப்பிடுவதே எனது வழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் -குறியெதிர்ப்பை நீரதுடைத்து எனும் வள்ளுவனின் வசை நீங்கிய- பணிகளைப் பார்த்துத்தான் அந்தப் பண்பை நானும் கொஞ்சம் முயன்றுவருகிறேன் அய்யா. அந்தவகையில் எழுத்தில் மட்டுமல்ல, வலையுலக வழக்கிலும் நீங்கள் எனக்கு முன்னோடி. இப்படியே தொடருங்கள் அய்யா. தொடர்வோம்.

      நீக்கு
  20. அண்ணா மிக அருமையான ஒன்றை முன்வைத்திருக்கிறீர்கள். முதலில் என் நன்றி. நான் முதலில் எழுத வந்த புதிதில் யார் என் வலைக்கு வருகிறார்கள் போகிறார்கள் என்பது பற்றி நான் பெரிதாக நினைக்கவில்லை. நான் தேடிச்சென்று பலரையும் நட்பாக்கிக்கொண்டேன். அப்படி என் வலைக்கு வந்தவர்கள் தான் அதிகம். அதன் பிறகு வலைச்சரம் மூலமும் பலருக்கு அறிமுகமானேன். அப்போது வசந்தமண்டபம் மகேந்திரன் அண்ணா ஒன்று சொன்னார்கள் "பதிவுலகம் என்பது மொய் விருந்து போல "என்று அது எந்த அளவுக்கு உண்மை என்பதைபோகப்போக தெரிந்து கொண்டேன். நாம் எந்த வலைக்கு போகிறோமோ அவர்கள் மட்டுமே நம் வலைக்கு வருகிறார்கள் என்பதை. இப்போது பல நாட்களாக எனக்கு வலைப்பக்கம் வர இயலவில்லை. இனி வர முயற்சிக்கிறேன். தாங்கள் சொல்வது போல தொழிற்நுட்பம் பற்றி எனக்கும் தெரியாது ஆதலால் புதியவர்களை அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு தொழிற்நுட்ப பகிர்வையும் தந்தால் அதன் படி முயற்சிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பராசக்தீ! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாய்? உப்பு புளி மிளகாய் என்று எனது அன்றாடப் பிரச்சினைகளை நீ பார்த்துக் கொள்வாய் என்றுதானே நான் உலக விவகாரங்களைப் பற்றி எழுதிக் கொண்டு வருகிறேன்...“ - மகாகவி பாரதி தனது பராசக்தி யிடம் வேண்டியது. இந்நேரம் ஏன் எனக்கு நினைவுக்கு வருகிறது? தெரியலயே சசீ? இதெல்லாமா ஒரு பிரச்சினை?

      நீக்கு
    2. ஆமா என்னை ஏன் திட்டுகிறீர்கள் அண்ணா. நான் என்ன தவறு செய்தேன். வெண்பா தவறாக எழுதியது குற்றமா ? அதற்கு ஏன் பராசக்தியை எல்லாம் அழைக்கிறீர்கள்.

      நீக்கு
    3. திட்டவில்லையே தங்கையே! வெண்பா எழுதும் பெண்கள் மிகவும் குறைவு. அதில் நீ சேர்ந்ததை மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வரவேற்கிறேன். ஆயினும் எழுத்துப்பிழை, தளைப்பிழைகளை அறிந்து திருத்திக்கொண்டால் எவ்வளவு நல்லது? தனிச்சொல் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
      திருச்சி ஜோசப் விஜூ, மதுரை சிவகுமாரன் மற்றும் இளமதி முதலான நமது வலைவெண்பா வல்லோரைத் தொடர்ந்து பார்ததுவர வேண்டுகிறேன்.

      நீக்கு
  21. வணக்கம் ஐயா!

    தங்களின் அருமையான தமிழ்ப் பணியும், இங்கிடும் பதிவுகளும்,
    பலருக்கும் நீங்கள் தரும் ஊக்குவிப்புக் கருத்துப் பகிர்வுகளும்
    மிக மிகச் சிறப்பானவை!
    முதற்கண் உங்கள் நற்பணிக்கு என் வாழ்த்துக்கள் ஐயா!

    தாங்கள் இங்கிட்ட நன்நோக்கப் பதிவு இதுவும் மிகஅருமை!

    நானும் சென்ற வருடத்தில் என் வலைத்தளத்தில் ”பதிவோடு பகிரும் பதிவர்” என என் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு பதிவரைப் பற்றி இணைத்து எழுதிவந்தேன்.
    தொடர்ந்து பதிவுகளை இடுவதிலும் பதிவர்களை இணைப்பதிலும் எனக்கு அதிகரித்த குடும்பச் சூழல் நெருக்கடிகளால் வலையுலகில் அதிக கவனம் செலுத்தமுடியாது போயிற்று...

    இப்பொழுதும் அவ்வப்போது பதிவேற்றமுடன் முடிந்தவரை பதிவர்களின் வலைகளுக்குச் சென்று ஊக்கக் கருத்துப் பதிவிட்டு வருகிறேன். அதற்கும் ஆழ்ந்து படித்து அதற்கேற்ப கருத்து வழங்க நேரம் கிடைக்காமற் போய்விடுகின்ற நிலைகளும் உண்டு ஐயா!
    மனம் வருந்துகிறேன்...!
    ஏனோதானோ என என்னால் கருத்துப் பகிர முடிவதில்லை... இருப்பினும் கிடைக்கும் பொழுதில் முடிந்தவரை எனது ஊக்கக் கருத்துப் பகிர்வு சக வலைப்பதிவர்களுக்கு இருக்கும் ஐயா!

    எனது வலைத்தளத்தில் பல விடயங்களை இணைப்பதற்கு எனக்குப் போதிய தொழில்நுட்ப அறிவு இல்லை என்பதால் நீங்கள் குறிப்பிடும் சில விடயங்களை என் தளத்திலும் நிரந்தரமாக இணைத்துவிட வழிகள் தெரியவில்லை...:(
    பார்ப்போம்! முயல்கிறேன்!

    நல்ல பதிவு தந்து அனைவரையும் ஒருங்கிணைத்த உங்கள் அன்பு என்னை நெகிழ்த்தியது ஐயா!
    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பால் இயலாதது அகிலத்தில் ஏது என் கவித்தங்கையே? இணையத்தில் குப்பைகள் பெருகிவிட்டன என்று சொல்வதிலேயே நமது நேரம் விரயமாவதாகப் பட்டது அதுதான் இந்தப் பதிவு. ஆக்கபூர்வமாக யோசித்தால் நம்மால் முடியாதது ஏதுமில்லை. நம்மிடையே ஒருங்கிணைப்பு இல்லை அது ஒன்றே பெரும் குறையாகப் படுகிறது. தொடர்வோம்...

      நீக்கு
    2. உங்களின் ஆற்றல்மிக்க வெண்பாத்திறனைப் பார்த்து வியந்தேன். ஒரு வேண்டுகோள் - மனிதர்களைப் பாடுங்கள் அதுதான் இன்றைய தேவை.இது என் தனிப்பட்ட கருத்து.

      நீக்கு
  22. எதைபற்றியும் கவலைப்படாமல் உருப்புடியா எழுதவேண்டும்..பலன் தானே கிடைக்கும்.

    வில்லவன் கோதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்”- ப.கோ.க.சு. பாடல்.
      “நான் வந்தால் மாற்றுவேன் என்பது புதிய பொய்” - கந்தர்வன்.
      நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் முடியும் என்பதே எனது நம்பிக்கை. எங்கே நம்மை ஒன்றிணைக்கும் கயிறு?

      நீக்கு
  23. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வலைத்தளத்தில் இணைப்புகள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு உங்கள் வலைத்தளம் சீக்கிரம் மற்றவர்கள் க்ம்ப்யூட்டரில் திறந்திடும். இணைப்புகள் அதிகம் இருந்தால், வலைத்தளம் திரையில் வர நேரமாகும் போது, வாசகர் வேறு பதிவுக்கு தாவி விடுவார். எனவே தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு போன்ற திரட்டிகளே உங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் சேர்த்திட போதுமானது.

    வலைச்சரத்தில் வரும் அறிமுகம் போன்று, மாதம் ஒருமுறை அல்லது இருமுறை ”இந்த மாத புதிய அறிமுகம்” என்று நீங்களே உங்கள் வலைத்தளத்தினுள் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி எழுதலாம். அவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! இப்படி ஒரு தொழில் நுட்பச் சிக்கல் இருக்கிறதா? தெரியலயே! உங்கள் யோசனை நல்லா்த்தான் இருக்கு. இப்படி அதிகமான நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்திய மூத்த பதிவர்களைத் தேர்ந்தெடுத்து அடுத்த வலைப்பதிவர் விழாவில் பாராட்டலாமா? அல்லது சிறந்த கவிதை, கட்டுரை, சமூக விமர்சனம், முதலான சிறந்த பதிவுக்கான (அ) பதிவர்க்கான விருதுகளை வழங்கலாமா? சொல்லுங்கள் அய்யா, செய்வோம்.

      நீக்கு
  24. பதில்கள்
    1. இந்த ஒரு வரி பின்னூட்டம்தான் பெரிய சிக்கல்... விரிவாக உங்களின் முழுமையான யோசனைகளை எழுதுங்கள் கில்லர்ஜி.(அபுதாபி போயாச்சா? எங்கிருந்தால் என்ன? இணையத்தில் நாம் என்றும் இணைந்தே இருக்கிறோம அல்லவா?,) தேவகோட்டை குமார் வேறு உங்களை எங்க ஊர்க்காரர் என்று சொந்தம் கொண்டாடி இருக்கிறார்....

      நீக்கு
  25. பூக்கடைக்கு எப்படி விளம்பரம் தேவையில்லையோ
    அது போல் உள்ளது உங்கள் வலைத்தளம்.
    ஓர் ஆசிரியையாக உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.உங்கள் தீர்க்கமும் தெளிவும் நிறைந்த
    மேடைப் பேச்சுக்களை நான் ரசித்துக் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் சரி... இப்போது வலைப்பக்கத்தில் நல்ல தமிழை, நமது பெருமை மிக்க பண்பாடடு விழுமியத்தைத் தொடர, இன்றைய தலைமுறையைக் கவர்ந்து “இழுப்பது” எப்படி என்பதுதான் எனது இன்றைய கவலை! அதற்கு வழி சொல்லுங்கள் ஆசிரியரே!

      நீக்கு
  26. அய்யா. தங்களின் வேகம் கண்டு வியக்கிறேன். சுந்தரபாரதி, கந்தர்வன் போன்ற மகா கவிகளோடு இணைந்து இயங்கிய தாங்கள் இன்றைய தலைமுறைக்கு ஈடாய் இயங்குவது வியப்பளிக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் மரபுத் திறன், இன்றைய இளைய திறனாளிகளை நம் பக்கம் இழுப்பதற்குப் பயன்படுமானால் அதுதான் இன்றைய வரம். அதை நோக்கி உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள் சிவகுமாரன். மரபு, புதுமையை வரவேற்க வேண்டும். மாறுவது மரபு இல்லையேல் மாற்றுவது மரபு. இல்லையேல் இரண்டும் அழிவதைத் தவிர்க்க முடியாது என்பதுதானே நடைமுறை?

      நீக்கு
  27. அய்யா, மடிக்கணினி இல்லாமை , நேரமின்மை, வேலைப்பளு, இல்லறக் கடமைகள், பிரச்சினைகள் போன்றவற்றால் அடிக்கடி வலைப்பக்கம் வர இயலாத என்னைப் போன்றோர்கள். மாதமிரு முறை அல்லது வாரம் ஒருமுறை வலைப்பக்கம் வருவதே பெரிய சாதனையாய் இருக்கிறது. பின்னூட்டம் இட்டவர்களின் தளத்திற்கு சென்று வருவதே இயலாமல் இருக்கையில் புதியவர்களை அழைக்க பயமாக இருக்கிறது. இயன்றவரை இணைந்து செயலாற்ற விழைகிறேன். நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பராசக்தீ! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாய்? உப்பு புளி மிளகாய் என்று எனது அன்றாடப் பிரச்சினைகளை நீ பார்த்துக் கொள்வாய் என்றுதானே நான் உலக விவகாரங்களைப் பற்றி எழுதிக் கொண்டு வருகிறேன்...“ - மகாகவி பாரதி தனது பராசக்தி யிடம் வேண்டியது. இந்நேரம் ஏன் எனக்கு நினைவுக்கு வருகிறது? தெரியலயே சிவகுமாரன்? இதெல்லாமா ஒரு பிரச்சினை? நிரந்தரமான தீர்வுகளை நோக்கியல்லவா உங்கள் நடை தொடரவேண்டும்? நொண்டிச் சாக்குகள் எதற்கு?
      “... சொல்லடீ சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்?“ என்று உங்கள் பராசக்தியிடமே கேளுங்கள்! கேட்பதற்குத் தகுதியானவர் நீங்கள்! “ பல வேடிக்கை மனிதரைப் போலே நீர் வீழ்வீர் எனநினைத்தீரோ?” - பாரதி மன்னிக்க.

      நீக்கு
  28. நான் மற்றவர்களை எனது தளத்தில் கலாய்து எழுதுவதன் மூலம் பல பதிவர்களை அறிமுகப்படுத்தி வந்தேன் அப்படி கலாய்க்கும் போது அவர்களின் தளத்திற்கான லிங்குகளையும் அதில் இணைத்தே வழங்கியுள்ளேன் அது போல எனது தள அவார்டு மூலம் பலரையும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் http://avargal-unmaigal.blogspot.com/2012/02/blog-post_09.html ரமணி சாரையும் சாகம்பரி மேடத்தையும் அறிமுகப்படுத்தினேன் ஆனால் சோம்பேறி காரணமாக அதை தொடரவில்லை இப்போது உங்களின் இந்த பதிவை படித்ததும் மனதில் ஒரு ஐடியா தோன்றியது அதை இந்த வாரம் என் தளத்தில் அறிமுகப்படுத்துகிறேன் அது ஒரு வித்தியாசமான முயற்சி நிச்சயம் நீங்கள் அதை பாராட்டுவீர்கள் என நினைக்கிறேன் யாருக்கும் அவார்டு எல்லாம் தரப் போவதில்லை

    பதிலளிநீக்கு