விஜய் டிவி மகாபாரதத்தில் “சகுனி“யின் அற்புத நடிப்பு!

       

தொடர்ந்து பார்க்க வில்லை என்றாலும்,வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நான் பார்க்கும் இரண்டு தொடர்களில் ஒன்று விஜய் டிவியில் வரும் மகாபாரதம். தமிழில் நாமறிந்த கதைகளில் சிற்சில மாற்றங்களோடு, வாழ்வியல் உண்மைகளை அள்ளித் தெளித்துவரும் வசனம் ஒரு காரணம் என்றால், அதில் நடிக்கும் கிருஷ்ணன் மற்றும் சகுனியின் நடிப்புக்கு நான் ரசிகனாகிவிட்டேன்.
      எதிர்நாயகன் எனும் வில்லனாக நடிப்பது நடிகர்களுக்குப் பெரிய சவால். அதில் பெருவெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர் எம்.ஆர்.ராதா. மக்களுக்குச் சொல்ல நினைக்கும் கருத்துகளையே எதிர்நிலையில் நின்று நடிக்கும் ராதாவுடன், ஒரு “ஃபிரேமில்“ வந்தால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எச்சரிக்கையாக இருப்பாராம். “கொஞ்சம் அசந்தாலும் மனுசன் நம்மள சாப்பிட்டுருவாம்பா“ என்பாராம் சிவாஜி! தன் கருத்துகளில் சமரசம் செய்துகொள்ளாமலே தனது நடிப்பாற்றலால், எப்படி ஒருவன் இருக்கக் கூடாது என்பதைத் படத்தின் கதைகளில் வாழ்ந்து காட்டியவர் எம்ஆர்.ராதா.
      மகாபாரத்த்தில் வரும் சகுனிப் பாத்திரத்தில் நடிப்பவரின் உண்மையான பெயர் எனக்குத் தெரியவில்லை (தெரிந்தவர்கள் அவரைப்பற்றிச் சொன்னால் மகிழ்வேன்) அவரது வித்தியாசமான முகபாவம், ஒருகண்ணை அவ்வப்போது சுருக்கிக்கொண்டு பார்க்கும் மாற்றுப்பார்வை, நொண்டி நடக்கும நடை, தேவையான இடங்களில் அந்த –கஞ்சிபோட்டு அயர்ன் பண்ணியது போன்ற- கூர்மீசையைத் தடவிக்கொண்டே, வசன உச்சரிப்பில் ஏற்ற இறக்கம் காட்டுவது, வித்தியாசமாக கெக்கென்று சிரிப்பது என ஒவ்வொரு விடயத்திலும் கவனப்படுத்தி, நம்நம்பியார் பாணியில் கைகளைக் கசக்கி, உடல்மொழியிலும் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறார் அந்த மகாநடிகர். வசனம் மொழிமாற்றுத்தான் (டப்பிங்) என்றாலும், குரலை அவரது நடிப்பின் சிறப்பறிந்து கொடுத்து வெற்றிபெறும் அந்த மொழிமாற்றுத் தமிழ்க்குரலும் பாராட்டுக்கு உரியதே. அவரது நடிப்புச் சிறப்பு எனக்கு நம் எம்ஆர் ராதாவை நினைவூட்டுகிறது. அற்புதம்!
      “வாசுதேவக்கிருஷ்ணன்“, “அன்பு மருமகனே!என்னும் வசனங்களை அவர் உச்சரிக்கும்போது முகபாவத்தை, குறிப்பாக கண்களைக் கவனித்துப் பாருங்கள். சகுனி பாத்திரத்திற்கே உரிய சூழ்ச்சியின் மொத்த உள்ளடக்கமும் ஒருபார்வையில் வெளிப்படும் விந்தையைக் காண்பீர்கள்! வேறு மகாபாரதக் கதைகளில் சகுனி நொண்டியாக இருந்ததை நான் பார்த்ததில்லை. இதுவும் அவரது கற்பனையின் ஒரு சிறப்பம்சம் என்றே தோன்றுகிறது.
“அறிவொளி“ இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாக நான் செயல்பட்ட போது, நாடகத் தயாரிப்பு மற்றும் நடிப்புக்காக டெல்லி, சென்னையில் போய்ப் பயிற்சியெடுத்து வந்து, புதுக்கோட்டையில் சுமார் 40 குழுக்களுக்குப் பயிற்சி தந்தபோது, கதைக்கேற்ப நடிகர்களின் கற்பனையைத் தூண்டி நானும் சில மாற்றங்களைச் செய்வேன். கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் தயாரித்தளித்த முகாமில், “சென்னைக் கலைக்குழு“வின் நண்பர் பிரளயனுடன் சேர்ந்து நாங்கள் தயாரித்த நாடகங்களைத் தமிழ்நாடு முழுவதும் –குறுக்கு நெடுக்காக- இரண்டுமுறை சென்று நாங்கள் தெருநாடகங்களை நடத்திய போது, அவற்றில் ஒன்றான “காலரா“வில் வந்த எதிர்நாயகனான கோவில் பூசாரியாக நான் நடித்தேன். அப்போது அந்தப் பூசாரியை வெற்றிலை எச்சில் குதப்பிக்கொண்டு நொண்டி நொண்டி வருபவனாக நான் காட்டியது இப்போது நினைவிற்கு வருகிறது...
      அடுத்து பாரதக் கதையின் நாயகனாக வரும் பகவான் கிருஷ்ணனின் அந்தப் பாத்திரத்தின் தன்மையைப் புரிநதுகொண்டு, அதை அப்படியே முகபாவத்திலும் அடக்கம் மிகுந்த வார்த்தைப் பிரயோகங்களிலும் கொண்டுவரும் கிருஷ்ணரின் நடிப்பும் அருமை. கடபச் சிரிப்பும், கண்களில் காட்டும் விஷமமும் மிகவும் அருமை! ஆந்திரத்தில் நடிகர் என்.டி.ராமராவ்தான் கிருஷணன் மற்றும் இராமன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர் எனும் கருத்தை மாற்றும் வகையில் இந்தச் “சிவப்புக் கிருஷ்ணனின்“ மூக்கும் உதடுகளும், அதிகமாகக் கண்களும் கூட அருமையாக நடிப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இளைய கிருஷ்ணராக வந்தவர் ஊகூம்!
      மற்ற நடிகர் நடிகைகளின் நடிப்பு என்னைக் கவரவில்லை. கொஞ்ச நேரமே வந்தாலும், சிறையில் கிருஷ்ணனைப் பெற்ற அம்மாவாக வந்த பெண்ணின் நடிப்புக் கவர்நத அளவிற்குப் கதைமுழுவதும் வரும் பாஞ்சாலியோ குந்தியோ, கர்ணனின் தாயோ ஏனோ கவரவில்லை என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். பாண்டவர்களில் யாரும் வேடத்திற்குப் பொருந்தியவராகத் தெரியவில்லை. துரியோதனன் பரவால்ல. சகுனி, கிருஷ்ணனின் அற்புத நடிப்பில் இவர்கள் எல்லாம் சிவாஜியோடு நடிக்கும் சிம்பு மாதிரி ஆகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
      “விதியை வலியுறுத்தி, ஆண்டவனும் அந்த விதிக்குத் தப்பமுடியாது என்னும் அநியாயத்தை அற்புதக் கலையால் எம் மக்களிடம் விதைக்கிறார்களே இந்த மகா கலைஞர்கள்“ என்று நான் அவ்வப்போது நினைத்துக் கொள்வேன். என்றாலும், கருத்து மாறுபாட்டுடன் கூட, என்னைப் போலும் லட்சக்கணக்கிலான ரசிகர்களைக் கட்டிப்போடும் அந்தக்கலைஞர்களுக்கு நம் வாழ்த்துகளைச் சொல்லிவைப்போம்.
      பி.கு.தமிழ்த்தொடரோ வடக்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படும் தொடரோ டிவி தொடர்களில் மகன்களை விடவும் அம்மாக்கள் இளமையாக இருப்பது ஏனோ?

-------------------------------------------------------

7 கருத்துகள்:

  1. தொலைக் காட்சி பெட்டியின் முன் அமர்வதே எப்பொழுதோதான் ஐயா
    ஆனாலும், சில சமயங்களின் பார்ப்பேன்
    சகுனி பாத்திரத்தைச் செய்பவர் அருமையாகச் செய்கிறார்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. yes.true.very good review.
    http://bullsstreetdotcom.blogspot.in

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    தாங்கள் சொல்வது உண்மைதான் நானும் இடைவிடாமல் பார்க்கும் தொடர்தான் மற்ற தொலைக்காட்சிகளில் போகும் தொடரை விட விஜய தொலைக்காட்சியில் போகும் தொடர் சிறப்பாக உள்ளது குறை சொல்ல ஒன்றுமில்லை...பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. அண்ணா! மாங்குமாங்குன்னு ஒரு பெரிய கமெண்ட் டைப் பண்ணினேன் அண்ணா! ஆனா PUBLISH பண்ணுறதுக்கு முன்னாடி மோடம் சொதபிடுச்சு! இப்போ திரும்ப ட்ரை பண்றேன்:)) அத்தையோட சேர்ந்து நானும் ஒரு நாள் பார்த்தேன். எனக்கும் பிடிச்சுருந்தது! ச்சே என்ன மைதிலி பிரகாஷ்ராஜ் மாதிரி வில்லன்களுக்கு மட்டுமே fan ஆகுராணு நானே நினைச்சுகிட்டேன்:)) இப்போ அண்ணாவுக்கும் பிடிச்சிருக்கு!! சந்தோசம். எனக்கு கிருஷ்ணர் வேஷம் யார் போட்டாலும் பிடிக்கும். நான் வளர்ந்த சூழலுக்கு மிக நெருக்கமான விஷயம் என்பதால் மட்டும்:) அப்புறம் அண்ணா //வடக்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படும் தொடரோ டிவி தொடர்களில் மகன்களை விடவும் அம்மாக்கள் இளமையாக இருப்பது ஏனோ?// பெண்களுக்கான ஒப்பனை முன்னேறிய அளவு ஆண்கள் ஒப்பனை முன்னேறவில்லை என்பது you TUBE கற்ற பாடம்:)) நீங்களும் நேரம் கிடைக்கும் போது make over இல்லாத ஹிந்தி நடிகைகள் படங்கள் ஒரு முறை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே புரியும். அட! அந்த கொடுமை அண்ணனுக்கு எதற்கு:))))

    பதிலளிநீக்கு
  6. பி.கு.தமிழ்த்தொடரோ வடக்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படும் தொடரோ டிவி தொடர்களில் மகன்களை விடவும் அம்மாக்கள் இளமையாக இருப்பது ஏனோ?// ஹாஹா முத்துநிலவன் ஐயா! இதற்கு மைதிலி சகோதரி சொல்வதைச் சொல்கின்றோம். மேக்கப் இல்லாத வட இந்தியப் பெண்கள் நடிகைகள் நடித்த சீரியல்...படங்கள் காட்டிக் கொடுத்துவிடும் உண்மையை. மட்டுமல்ல....அங்கு பெண்கள் தினமுமே மேக்கப் போட்டுத்தான் செல்கின்றார்கள்...நடுத்தரவயது அம்மாக்களும்...வயதான அம்மாக்களும்.....

    பதிலளிநீக்கு