ஆன்ம விளக்கங்களும் ஆபாசக் கதைகளும்

எல்லா மொழியிலும் உயிர் என்னும் சொல் இருக்கிறது. ஆனால் எந்த மொழியிலும், அறிவியல், உயிரின் தோற்றம்-அழிவுபற்றி ஏதும் சொல்லவில்லை! 

உயிரின் தோற்றம் எங்கிருந்து தொடங்குகிறது?
இரண்டு கருமுட்டைகள் ஒன்று சேரும் கணத்தில் தோன்றுவதை உயிரென்று சொல்வதற்கில்லை. அது சில வாரம் கழித்தே இயங்கத் தொடங்குகிறது. இயங்கத் தொடங்குவதுதான் உயிரின் தோற்றம் எனில், இயக்கம் நின்றபின் அது அழிந்துபோய் விட்டது என்பதை ஒப்புக்கொள்வதாகப் பொருள்.
உயிரின் அழிவு எங்கு நடக்கிறது
உடலின் இயக்கம் –இதயத்துடிப்பு- நின்றபின் உயிர் போய்விட்டது என்று சொல்லப்பட்டாலும், அதன் பின் சிலமணி நேரம்வரை சிறுநீரகம், கண்கள் போலும் மனித உறுப்புகள் செயலிழப்பதில்லை, அப்படியெனில் அவை உயிருடன் இருப்பதால்தானே எடுத்து மற்றவர்க்குப் பயன்படுத்த முடிகிறது? அதிலும் ஒருவரின் கண்ணில் இருக்கும் சிற்றுறுப்புகள் நான்குபேர்க்குப் பார்வை கிடைக்கச் செய்கின்றன என்னும் போது, உயிரின் அழிவு எதில் நடக்கிறது? என்னும் கேள்விக்குப் பதில் தெரியவில்லை.
இயக்கத்தின் முடிவுதான் உயிரின் அழிவு எனில் ஒரு கடிகாரம் நின்று போவதை அது செத்துப் போய்விட்டதாகச் சொல்ல முடியுமா? அது மீண்டும் இயங்க பேட்டரி போட வேண்டுமென்றால் அந்த பேட்டரியில்தான் கடிகாரத்தின் உயிர் இருக்கிறது என்று சொல்லலாமா? பேட்டரி போட்டும் பழுதிருந்தால் அந்தக் கடிகாரம் இயங்காமல் போனால் அந்த பேட்டரியிலும் உயிர் இல்லை என்றாகிறது.
சக்தியை உயிர் என்று சொன்னால், சக்திக்கு அளவு உண்டு. சக்திக்கு மாற்றமும் உண்டு. அப்படியெனில் சக்திக்கேற்ப பெரிய உயிர் சிறிய உயிர் இருக்கமுடியுமா?  மின்சக்தி(Electric), மின்காந்த சக்தி(Eectronic), என்பன உயிராகுமா?
ஏன் இந்தக் கேள்வி எழுகிறது என்றால், அறிவியல் வழியில் உயிர் என்று ஒன்று இல்லை. அதற்கு யார் உயிர்எனப் பெயர் தந்தார்களோ, அவர்கள் மதரீதியான விளக்கங்களில்தான் முடிக்கிறார்கள். உயிர் –ஆன்மா (அ) ஆத்மா- பரமாத்மாவிடம் போய்ச் சேர்ந்துவிட்டது என்பது இந்து, கிறித்துவம் முதலான மதங்களின் விளக்கம். இதனால்தான், மனம் என்பது தனி உறுப்புப் போலவே விளக்கப்படுகிறது. ஆனால் மனம் என்பதோ, ஆன்மா என்பதோ தனி உறுப்போ அதற்கு மாற்றமோ கிடையாது. பிறகு எப்படி அதை அறிவுரை கூறித் திருத்த முடியும்?
இதைக் கருத்து முதல் வாதம் என்றனர் சிந்தனையாளர்.
பொருள்களிலிருந்துதான் சிந்தனை என்றவர் பொருள்முதல் வாதிகள்.
கருத்து முதல் வாதத்தின் விளைவு என்ன?
மனத்தைத் தனியாக சுத்தப்படுத்தலாம். அசுத்தமான மனத்தை ஆண்டவனிடம் அடைக்கலப்படுத்தினால் மனம் சுத்தமாகும் என்பதே மதம் சார்ந்த விளக்கமாகும்.
இதன் இன்னொரு பகுதிதான் அறிவுரைகளால் மனதைத் தூய்மைப் படுத்தவும் ஒருநிலைப்படுத்தவும் முடியும் என்னும் கருத்தின் அடிப்படையிலான விளக்கங்கள். இது வியாபார உத்தியே அன்றி, வேறில்லை. தன்னம்பிக்கை நூல்கள், தற்போது உலகம் முழுவதும் அனைத்து மொழியிலும் பெருமளவிற்கு விற்பனையாகும் நூல் பட்டியலில் முதலிடம் பிடிக்கின்றன. ஏன் எனில், இன்றைய சமூகத்தில் இதை எளிதில் புரிந்துகொள்ள முடியாத முரண்பாட்டில், நம்பிக்கை குறைந்து, எப்படியேனும் நாம் வாழ்க்கையில் முன்னேற வழிகிடைக்காதா என்னும் ஏக்கம்தான்.
ஒரே மதிப்பெண் எடுத்தவர்கள், ஒரே சாதியைச் சேர்ந்தவரில் ஒருவனுக்கு வேலை கிடைத்துவிடும்போது, மற்றவன் அதிர்ஷ்டம் கெட்டவனாகிவிடுகிறான். நம் நேரம் சரியில்லை என்று அவன் மனசார நம்பத் தொடங்கிவிடுகிறான். இருவருக்கும் இடையில் நுட்பமான இந்த சமூகத்தின் சிக்கல் ஏதோ ஒளிந்திருக்கிறது என்பதை அவன் ஆய்வு செய்யத் தயாராவதில்லை, மற்றவர் சொன்ன மரபார்ந்த நம்பிக்கை இவனைப் பற்றி விடுகிறது. மனம் இவ்வாறுதான் வடிவமைக்கப்படுகிறது.
மற்றபடி, அவரவர் உள்ள சூழ்நிலைதான் அவரவர் சிந்தனையையும் வேலைத் தன்மையையும் தீர்மானிக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் புரியும். நம்புவது எளிது, சிந்திப்பது கடினம்தானே எளியது மலிவாக விரைவாகப் பரவுகிறது.
நான் காதலுக்காக உயிரையும் தருவேன் என்பவனைத் தூக்கிப் பத்துநாள் பட்டினியில் போட்டுப் பாருங்கள், பத்துநாள் பசியின்போது அவன் காதலியை அலங்கரித்து எதிரில் வைத்து, மாம்பழத்தை தட்டில் வைத்துப் பார்ப்போம். எதை முதலில் தொடுவான்?  மாங்கனிக் கன்னத்தையா மாங்கனிக் கிண்ணத்தையா? பசி என்னும் உணர்வுதான் அவனது செயலைத் தீர்மானிக்கிறது. பசி அடங்கியபின் வேண்டுமானால், காதலியைக் கவிதையாக்குவான் இதுதானே எதார்த்தம்?
பக்தியும் இப்படித்தான். மனித உணர்வின் வெளிப்பாடுகள் அவரவர் சூழலின் வெளிப்பாடுகள்தாம். இதில் மனத்தை ஒருநிலைப்படுத்துதல், மனத்தை அறிவுரைகளால் சுத்தம் செய்தல், சிந்தனையை ஒழுக்கநெறிப்படுத்தல் எல்லாம் இந்த வகைதான். பக்தியை ஒரு பிழைப்பாக்க் கொண்டவர்கள் வாய்ப்புக் கிடைக்காதவரை யோக்கியர்களாகவும் பிறகு மாறிப்போவதும் இதனால்தான்.. பகுத்தறிவு பேசுவோரும் இப்படிப் பகுத்தறிந்து புரிந்துகொள்ளாமல் ஒருவரைப் பார்த்துப் பகுத்தறிவு பேசிவிட்டு வாய்ப்புக் கிடைத்தால் சாதி-மதச் சாயம் பூசிக்கொள்வதும் இதனால்தான்.
எனவே, சிந்தனையைப் பக்தி சார்ந்தும், காதல் சார்ந்தும், கடவுள் சார்ந்தும் வளர்த்துக் கொள்பவர் அவரவர் அனுபவத்தில் தோல்விகண்டால் இதற்கு எதிராக மாறுவதும் இந்தச் சிந்தனையில் ஏற்படும் குழப்பம்தான்.
அதனால்தான் பாரதி, “அறிவிலே தெளிவு“ என்றான்.
இந்தத் தெளிவு ஆழ்ந்த அறிவுபூர்வமான சிந்தனையில்தான் வருமே அன்றி, எந்த ஒரு சார்பின் அடிப்படையிலோ, அறிவுரையாலோ வருவதில்லை. எனவே, மனசைத் தூய்மைப் படுத்துவதாகச் சொல்லும் கதைகள், புராணங்கள், தன்னம்பிக்கை நூல்கள் எல்லாம் ஒருவகையில் அறிவுசார் சிந்தனைக்குப் புறம்பானவையே.
பராசக்தி முதல் பல்வேறு தெய்வங்களை வணங்கிய பாரதி, பாஞ்சாலி சபதம் எனும் பாரதக்கதையை மறுபதிப்புச் செய்த பாரதி,
“மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள் – எதன்                 ஊடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வமென் றோதி அறியீரோ?”  என்றான். அதிலும் பாரதக்கதையில் தனக்கு வேண்டிய பகுதியை மட்டும் சுவைபடப் பாடியவன்
“கடலினைத் தாவும் குரங்கும் - வெங்
கனலிடைப் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்ததி னாலே - தெற்கில்
வந்து சமண்செய்யும் குட்டை முனியும்,
நதியினுள்ளே முழுகிப்போய் - அந்த
நாகர் உலகிலோர் பெண்ணை                    
விதியுறவே மணம் செய்த - திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.  
என்றும் பாடியது பலர் அறியாத பகுதி. (இதில் குரங்கு என்றது அனுமனை, பெண் என்றது சீதையை, முனி என்றது அகத்தியரை, இவ்வாறான புராண-இதிகாசப் பாத்திரங்களை எல்லாம் –பக்திமானான- பாரதியே கற்பனை எனப் பாடுகிறான்)
கதைகள் மிகநல்ல வேனும் நன்மை கூறும் கட்டுக் கதைகள் அவைதாம் என நாம் ஏதும் சந்தேகப்படுவோமோ என்பது போல இறுதியாக வாக்குமூலமும் தருகிறான்.
     எனில், அறிவுரை கூறுவதற்கான கதைகளில் புராணங்களில், அறிவைத் தேடி அலைவதில் அர்த்தமில்லை. வாழ்க்கைச் சிக்கல்களில் அவை போலும் அனுபவக் கருவூலங்கள் உதவும் என்னும் வகையில் எடுத்துக் கொள்ளலாமே தவிர அவற்றைக் கடவுளின் அவதார விளக்கங்களாக ஏற்கும்போதுதான் மதம், சாதி, சார்பு எழுகிறது. “என்சாதிக்கு இவர்சாதி இழிவென்று சண்டையிட்டுப் பஞ்சாகிப் போகும்பாதகமும் நடக்கிறது. சாதி-மதம் இல்லை என்பவர்கள் எந்தக் கோவிலையும் இடிப்பதில்லை!
மனம் சார்ந்த விளக்கங்கள் இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
காட்டில் தனியே அமர்ந்து தவம் செய்யும் முனிவர்களின் விளக்கங்கள், சமூகத்தின் பல்வேறு வாழ்க்கைச் சிக்கல்களுக்கு எவ்வாறு தீர்வு தர முடியும்?
எனவே, திருமூலரில் இருந்து, வாழ்க வளமுடன் மகரிஷி வரை, மனதிற்குத் தரும் அறவுரை மருந்துகள், சமூக  வாழ்விற்குப் பயன்படுவதில்லை. வள்ளுவர் சொல்லும் அறிவுரைகள் வாழ்வியல் சார்ந்தவை. அவற்றை அவரவர் வாழ்க்கை அனுபவங்களுக்கேற்ப்ப் புரிந்துகொள்ளலாம்.
அறிவுரை மட்டும் கூறி மனசைத் தூய்மைப்படுத்துவது வியாபாரமே.
விதி நம்பிக்கையை வளர்த்தால், உடனடி எதிர்ப்பைத் தள்ளிப் போடலாமே?
இதுபற்றி இன்னும் நிறைய விவாதிக்கலாம்.

அடுத்தது ஆபாசம் -
ஆபாசத்திற்கும் ஓர் அரசியல் பின்னணி உண்டு!
இது பலருக்கு ஆச்சரியமாகவும், சிலருக்கு சிரிப்பாகவும் கூடத் தோன்றலாம். சுருக்கமாகச் சொன்னால், பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அதற்குச் சரியான தீர்வுகளைப் பற்றி இளைஞர்கள் சிந்தித்து விடாமல், எழுந்து போராடிவிடாமல், அந்த வயதிற்கேற்ற பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்களைத் திசைதிருப்பும் உள்நோக்கம் ஆபாசப் படங்கள், கதைகளுக்கு உண்டு.. அதனால்தான் தெரிந்தும் தெரியாதது மாதிரி அவை வளர்க்கப்படுகின்றன. இது தெரியாமலே இளையோர் பலர் சீரழிகிறார்கள்.
பக்தியை வளர்ப்பதோ, ஆபாசத்தை வளர்ப்பதோ மிகஎளிது. காதல் கவிதை எழுதுவது போல, கடவுள் கவிதை எழுதுவதும் மிக எளிது. அறிவு பூர்வமான சிந்தனைகளை, நம் சமூக முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளும் விதமான அறிவுசார் விளக்கங்கள் தருவதுதான் கடினம். “செயற்கரிய செய்வார் பெரியர்
நான் காதலுக்கு எதிரியல்லன், ஆனால் காதல் எனும் பெயரில் பெரும்பாலும் காமத்தையே பாடும் கற்பனை வறண்ட சொல்வரிசைகளைக் காதல்கவிதை என்பதும், கடவுள் பெயரில் கதைவிடுவதும் ஒன்றெனவே தோன்றுகிறது, அதையே சொல்கிறேன்.
புத்தியும், பொதுநல நோக்கும் உள்ளவர்கள் விதியை-அதைச் சொல்லும் மூடக்கதைகளை, அதற்கான “மனமாற்ற“ விளக்கங்களை ஏற்கலாமா? 
அதோடு. நமது சமுதாயத்தில், சாதிகள் மதத்தில் கட்டப்பட்டிருக்கின்றன  மதம் மாறலாம், சாதி மாறமுடியாது இந்து மத்த்திலிருந்து கிறித்துவ மத்திற்குப் போனாலும் சாதியை விடாமல்தான் இருக்கிறார்கள் கிறித்துவ உடையார், நாடார் கிறித்துவர், எஸ்சி கிறித்துவர் என்பதை போப்பாண்டவர் ஏற்பாரா?!) மதம் கடவுளோடு கட்டப்பட்டிருக்கிறது. எனவேதான் பெரியார் தலைகீழாய் யோசித்தார். கடவுளை ஒழித்தால் மதம்-சாதி எல்லாம் ஒழிந்து போகும் என்று அதுவரையிலான நம்பிக்கையை உடைத்துப் போட்டார்.
இப்போது சொல்லுங்கள்-
மனித குல முன்னேற்றத்திற்கு, சாதிமத வேறுபாடற்ற உலகுக்கு அறிவுசார் சிந்தனை தேவையா, மனித மனத்திற்குள்ளேயே எல்லாவற்றையும் தேடும் ஆன்மா விளக்கங்கள் தேவையா? 
தன்னம்பிக்கைக் கதைகள் தேவையா? சிந்தனையைத் தரும் வாழ்வியல் விளக்கங்கள் தேவையா? 
“வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்“ – பாரதிதாசன்.

---------------------------------------------

39 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம்.
    மனத்துக்கண் மாசிலன் ஆதலில் அனைத்தும் அடங்குமெனத் தோன்றுகிறது.
    “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்“ என இக்கருத்தாக்கியே மனச்சுத்தம் பேணச்சொன்னான் திருமூலன்.
    “கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
    கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
    கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
    ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே“
    என்கிறான் சிவவாக்கியன். மனமது செம்மையாகா விட்டால் , மற்றெலாம் செம்மையாமோ அய்யா? ஆன்ம விளக்கங்களை அறிவு சார்ந்து ஆராய்ந்திடக் கூடாதா? விளக்க வேண்டுகிறேன்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயிலும், குளங்களும் மனத்துள்ளே இருப்பதை உணர்வார் பெரும்ஞானிகள் மட்டுமே. சாதாரண மக்கள் கோவில் கோவிலாக முக்கியமான திருப்பதி, ராமேஸ்வரம் போனால்தானே திருப்தி அடைகிறார்கள் அப்படித்தான் அவர்களுக்கு மதப் பண்பாடு சொல்லித்தந்திருக்கிறது. மனம் எனும் தோணி பற்றிக் கடக்கும் கடல் இறைவனின் திருப்பாதம் எனும் அவர்களின் புரிதலை வள்ளுவரும் சொல்கிறார். இந்த விளக்கங்கள் எலலாம் போய்ச்சேருமிடம் கடவுளாகத்தானே இருக்கிறது? சூழ்நிலையைவிட்டு மனத்தை மட்டும் தூய்மை செய்வது எப்படி முடியும் என்பதே என் கேள்வி நண்பா. அந்த வடடததிலிருந்து வெளிவந்து, புறஉலகை அதன் பொருளியல் முரண்பாட்டைச் சிந்திக்க வைப்பதுதான் மனத்தை மட்டுமல்ல உடலையும் செம்மைப் படுத்தும் A sound soul in a sound body. இதையே திருமூலரும் “உடம்பார் அழியின் உயிரார்அழிவர்“என விளக்கியுள்ளதையும் சேர்த்துச் சிந்திக்கலாமல்லவா நண்பா?

      நீக்கு
    2. திடம்பட மெய்ஞானம் காட்டியமைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  2. ''..வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்“ ... எனக்கு இது பிடித்துள்ளது.
    தன்னம்பிக்கைக் கதைகள் - சிந்தனையைத் தரும் வாழ்வியல் விளக்கங்கள் தேவை.
    விடயங்கள் நீண்டு பூச்சாண்டி காட்டுகிறது.
    இரத்தினச் சுருக்கமானால் நன்று என்பது என் கருத்து.
    ஆனால் அற்புதமான விளக்கங்களய்யா. சபாஷ் போட வைக்கிறது.
    அருமை!..அருமை!.
    இனிய வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் அல்ல அதிகமாகவே நீண்டுவிட்டதோ என்று நினைத்தும் அப்படியே விட்டுவிட்டேன். அதைச் சரியாகச் சுட்டிக்காட்டிவிட்டீர்கள் நன்றி சகோதரி. அடுத்த பதிவுகளில் தங்களை நினைத்துக் கொண்டே சுண்டக்காய்ச்சிய பாலைத் தருவேன். மீண்டும் நன்றி.

      நீக்கு
  3. அண்ணா, இந்த கட்டுரை என் சின்னச்சிறு மூளைக்கு பெரிய வேலை வைத்துவிட்டது. நீங்கள் இங்கே விவாதத்தை தொடங்கியிருகீர்கள் என்பது புரிகிறது. பாரதிதாசன் சொன்னது போல் வழக்கம் சரியில்லை என்றால் அதனை கைகொள்ளவேண்டாம் என்பதெல்லாம் புரிகிறது. ஆனால் மனரீதியான சிந்தனைகளை தேவையில்லை, அறிவுப்பூர்வமான சிந்தனை மட்டுமே தேவை என்றா சொல்லவருகிறீர்கள் ? எனக்கு அது தான் புரியவில்லை? எனவே எதற்கான எனது கருத்தில் தெளிவு இல்லை. ஆனால் பக்தி மற்றும் ஆபாசம் குறித்த கருத்துக்கள் செம சார்ப். இதே வேலையை தான் N.G.Oக்கள் செய்வதாக, அதாவது அரசாங்கம் செய்யத்தவறிய வசதிகளுக்காக நாம் கோபம் கொள்ளாமல், முனை மழுங்கடிக்கப்பட்டு N.G.Oக்களின் தயவால் நாமே நம் வேலையே முடித்துக்கொண்டு அவர்களின் சேவை மனப்பானமையையும் மெச்சுவது என்று சமீபத்தில் படித்தேன். தெளிஞ்சதுக்கு பிறகு மீதியைச் சொல்லுகிறேன். நன்றி அண்ணா!
    http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “அறிவுப்பூர்வமான சிந்தனை மட்டுமே தேவை என்றா சொல்லவருகிறீர்கள் ? எனக்கு அது தான் புரியவில்லை“ - நானும் இன்னும் சுருக்கமாகச் சொல்லியிருக்கணும் பா. சுருங்கச் சொன்னால், மனத்தைத் தூய்மைப் படுத்துகிறேன் என்று ஆராய்ச்சி செய்வதைவிட, சமூகச் சூழலை மாற்றும் சிந்தனைதான் தேவை என்பதுதான். மனம் என்று தனியாக ஏதுமிலலை. சூழலின் உணர்வு வெளிப்பாடுதான் மனமெனும் கற்பிதம்.அதைத் தனியாக ரிப்பேர்பண்ண முடியாது தட்ஸ்ஆல்

      நீக்கு
  4. புலவர் அவர்களுக்கு, அரிய சிந்தனையைத் தூண்டும் கட்டுரை.
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  5. ///வீமனும் கற்பனை என்பது கண்டோம். ///
    ஆச்சரியமாக இருக்கிறது ஐயா
    இதுவரை பாரதியின் இவ்வரி தெரியாது

    மனித குல முன்னேற்றத்திற்கு, சாதிமத வேறுபாடற்ற உலகுக்கு அறிவுசார் சிந்தனை மட்டுமே தேவை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல பதிப்புகளில் இந்தப் பாடல் இல்லை அய்யா. கண்ணதாசன் முன்னுரையுடன் கூடிய -கவிதா பதிப்பகம் உள்ளி்ட்ட- சில பதிப்புகளில் இருக்கிறது. இந்தக் கவிதை மட்டுமல்லாமல், பாரதியின் பிற கவிதைகளிலும் இந்த தொனியைக் காணமுடியும் வருகைக்கும் கருததிற்கும் நன்றி அய்யா.

      நீக்கு
  6. அறிவுரை அல்லது ஆலோசனை மருந்துகளை நாம் முதலில் உண்டால் எல்லாம் சரியாகி விடும்...! (ஓ... இதுவும் அ... அல்லது ஆ...?)

    நன்றின்பால் உய்ப்பது அறிவு... அவ்வளவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வலைச்சித்தரே! “மெய்ப்பொருள் காண்பது அறிவு“ என்பதை வேறுவேறு விளக்கங்களால் குழப்பியது தமிழறிஞர் குழாம். ஆம்! உண்மைக்குத்தான் எத்தனை எத்தனை பொய் விளக்கங்கள்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அ்யயா.

      நீக்கு
  7. வணக்கம் ஐயா
    தெளிந்த நோக்கத்துடன் எழுதப்பட்ட, அனைவரையும் சிந்திக்க வைக்கும் பதிவு. குறிப்பாக எனக்கு அறிவுரை கூறுவது போல் உணர்ந்தேன். எனது வலைத்தளத்தில் கடந்த பதிவு கதை ஆன்மா சார்ந்தது ஆனால் விளக்கம் வாழ்வியலோடு தொடர்புடையது. கடவுளின் பெயரைச் சொல்லி மூட நம்பிக்கைகளில் மூழ்கித் திரிவது கண்டு நானும் எத்தனை எத்தனை முறையோ வேதனை பட்டிருக்கிறேன். இளைஞர்களைத் தடம் மாற்றுவதில் ஆபாசம் முக்கிய இடம் பிடிக்கிறது நல்ல சிந்தனையாளராக வர கூடிய ஒரு இளைஞனை ஆபாசம் தடம் மாற்றி அழைத்து செல்லும் என்பதை அனைவரும் உணரும்படி சொல்லியமைக்கு எனது அன்பான நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் உங்களின் சொர்க்கம்-நரகம் பதிவுதான் இதன்விதை. ஆனால் உங்களுக்கான அறிவுரை அல்ல, அப்படிச் சொல்வது இந்தக் கட்டுரைக்கே எதிரானது. கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்துமதம்“ படிததிருக்கிறீர்களா பாண்டியன்? அதன் வெற்றி மதம் சார்ந்ததல்ல, எளிய வாழ்வியல் விளக்கம் சார்ந்தது என்று எனது தினமணிக் கட்டுரையிலேயே குறிப்பி்ட்டிருப்பேன். விரைவில் அதைப் பதிவிடுவேன். நன்றி.

      நீக்கு
  8. அறிவுசார்ந்த சிந்தனைதான் வேண்டும்...மக்கள் நல்லது எதையும் கடவுள் பெயரால் பயமுறுத்திச் சொன்னபொழுது ஏற்றுக் கொண்டுள்ளனர்..அங்கு ஆரம்பித்ததோ பிரச்சினை? சொல்லப் பட்ட விசயம் மறந்து கடவுள் சார்ந்ததை மட்டும் பிடித்துக்கொண்டு விட்டனரோ? எது? எதற்கு?ஏன்? என்ற சிந்தனைத் தெளிவுதான் தேவை..உங்களின் சிந்தனையைத் தூண்டும் இப்பதிவு அருமை, நீங்கள் சொல்ல வந்ததை முழுதும் புரிந்துகொண்டேனா என்று தெரியவில்லை, மீண்டும் ஒரு முறை படிக்கவேண்டும். நன்றி ஐயா.
    மதமாற்றத்தில் சாதி பற்றி நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். என் கொள்ளு தாத்தா கிறித்தவராகப் பிறந்திருக்கிறார், அதற்கு முன் எப்பொழுது மாறினார்கள் என்று தெரியவில்லை. என் கொள்ளு தாத்தா பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரும் சேர்த்துத்தான் சொல்வார்கள்..என் தாத்தா அதை விட்டுவிட்டார். ஆனால் அவர் வயதொத்த உறவினர் பயன்படுத்துவர். என்ன செய்வது? சாதி அப்படி ஒரு இடம் பிடித்திருக்கிறது. ஒரு மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால் சாதி என்பது பற்றி என் பிள்ளைகளுக்குத் தெரியாது, எங்கும் அப்படியே ஆகவேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. மக்கள் நல்லது எதையும் கடவுள் பெயரால் பயமுறுத்திச் சொன்னபொழுது ஏற்றுக் கொண்டுள்ளனர்..அங்கு ஆரம்பித்ததோ பிரச்சினை? சொல்லப் பட்ட விசயம் மறந்து கடவுள் சார்ந்ததை மட்டும் பிடித்துக்கொண்டு விட்டனரோ? எது? எதற்கு?ஏன்? என்ற சிந்தனைத் தெளிவுதான் தேவை'' - மிகச் சரியாகப் புரிந்து கொண்டு எழுதிவிட்டீரகள் சகோதரி. கதைகளை வரலாறாகப் புரிந்துகொண்டு நடக்கும் வேறுபாட்டுக் குழப்பங்களில் சிந்தனை தூங்கிவிடுகிறது. “ஒரு மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால் சாதி என்பது பற்றி என் பிள்ளைகளுக்குத் தெரியாது, எங்கும் அப்படியே ஆகவேண்டும்” உங்களின் உயர்ந்த சிந்தனையும் செயலூக்கமும்தான் பெரிது. நன்றி

    பதிலளிநீக்கு
  10. ஐயா வணக்கம் தங்களின ஆழ்ந்த கருத்துகளை எனது சிறிய மூளையால் புரிந்துகொள்ள சிறிது போராடினேன். ஒரு முறைக்கு மூன்று முறை படித்து புரிந்துகொண்டேன். காதல் எனும் பெயரில் பெரும்பாலும் காமத்தையே பாடும் கற்பனை வறண்ட சொல்வரிசைகளைக் காதல்கவிதை என்பதும், கடவுள் பெயரில் கதைவிடுவதும் ஒன்றெனவே தோன்றுகிறது, இதை நானும் உணர்கிறேன் ஐயா. ஆனால் தாங்கள் கூறியிருக்கும் அறிவுரை மட்டும் கூறி மனசைத் தூய்மைப்படுத்துவது வியாபாரமே.எனும் வரிகள் என்னை சிந்திக்க வைக்கிறது. அப்படியானால் அறிவுரை என்பது தேவையில்லை என்று பொருள் கொள்வதா ஐயா? தவறாகக் கேட்டிருந்தால் மன்னியுங்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நா சொல்றேன் நீ கேட்டுக்க“ - எனும் பாணியிலான அறிவுரையை யார், யாருக்குக் கூறினாலும் அது தவறு என்றே நான் கருதுகிறேன் “நான் சொல்வதை சிந்தித்துப் பார்த்து, சரியெனில் ஏற்றுக்கொள்ள தவறெனில் மறுக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு” என்பதே சரியாக இருக்க முடியும். “உங்கள் கருத்தோடு நான் மாறுபடுகிறேன், ஆனால், அதைச் சொல்லும் உங்கள் உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன்“ என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு. “பெரியார் என்றொரு பிற்போக்குவாதி இருந்தான்“ என்று என்கருத்துகளைத் தாண்டி முன்னேறி, அடுத்த நூற்றாண்டின் மனிதர்கள் வாழ்ந்தால் அதுதான் என் மகிழ்ச்சி“ எனும் பொருளில்தான் தந்தை பெரியார் சொன்னார். எனவே, அறிவுரை என்பதை நான் ஏற்கவில்லை. நீயும் இதை ஏற்கவேண்டும் என்று நான் வற்புறுத்தவில்லை என் இளைய தங்கையே! உன் அறிவால் சிந்தித்து, என் கருத்து தவறெனில் தாராளமாகச் சொல்லலாம். சரிதானாப் பா?

      நீக்கு
    2. சரிதான் சார்.. கண்டிப்பாக நானும் சிந்திக்கிறேன் சார்.. உங்களைத் தொடர்ந்து கொண்டே இருப்பேன்...

      நீக்கு
  11. வழக்கம் போல சிந்தனையை நன்றாகவே தூண்டும் கட்டுரை. ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை.ஆண்டாள் நாயன்மார் பாடல்கள் எல்லாம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொன்ன உண்மையான நாகரிகத்திற்கு என் வணக்கம் நண்பரே. ஆண்டாள் நாயன்மார் பாடல்கள் எல்லாம், வடிவமைக்கப்பட்ட மரபுசார் மனநிலை. கடவுளிடம் உரிமையோடு காதல்கொண்டு, காமம் சொட்டச் சொடடக் கவிதை பாடியவர் ஆண்டாள் “கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ?” எனும் பாடல் நாகரிகமானது.நாயன்மார்களில் சிறுத்தொண்டர் தன் கடவுள் கேட்டார் என்று தன் பிள்ளையைத் தானும் தன் மனைவியுமாய் அரிந்து, சமைத்துத் தந்தவர், இயற்பகை நாயனார் தன் மனைவியையே விட்டுத்தந்தவர். இதற்குமேல் நான் என்ன சொல்ல மனநிலைத் தயாரிப்பு வேலையை மதங்கள் பலஆயிரம் ஆண்டுகளாகச் செய்து வருகின்றன, அதன் “ஐடெக்“ பிரச்சாரம்தான் தன்னம்பிக்கை நூல்களும், ரிலாக்ஸ்ப்ளீஸ் கட்டுரைகளும் என்பதே என் கருத்து இவை எதிலும் சூழலை மாற்றும் சிந்தனை இல்லை என்பதே எனது குற்றச் சாட்டும் ஆகும் நண்பரே.

      நீக்கு
  12. அன்புள்ள ஐயா.

    வணக்கம். ஓர் ஆழமான கட்டுரை சிந்தனையைக் கிளறித் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இக்கட்டுரை தொடர்பாக மட்டுமின்றி
    என் மனத்துள் எழுந்திருக்கிற அல்லது ஏற்கெனவே அவற்றுடன் விவாதம் மேற்கொண்டிருக்கிற சிந்தனைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வது எனக்காக விடை தேடலாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

    கடவுள் சார்ந்த கற்பிதங்கள் என்பவை எல்லாம் மனித முயற்சியால் சிலவற்றைக் கட்டுக்குள் ஒழுங்கமைப்புக்குள்ளும் கொண்டு வரமுடியாத சூழலில் சொல்லி உருவாக்கியவற்றை வழக்கம்போலவே மனித இன்ம சரியான புரித்ல் இல்லாமல் ஏற்றுக்கொண்ட இடத்தில் பிரச்சினையும் சிக்கலும் தொடங்குகின்றன.

    2. அன்றைக்குப் பராசக்தியில் கலைஞர் அவர்கள் வசனம் எழுதியதைப்போல பக்தி என்பது பகல் வேஷமாகிவிட்டது என்பது இன்றுவரை தொடர்ந்திருக்கிறது.

    ஒலிபெருக்கிகளும் அந்தணர்கள் மைக் இல்லாமல் மந்திரம் ஓத இணங்காமையும் அவரவர சாதி.இன.பண பலத்திற்கேற்ப பக்தியின் அளவுகோளை அளப்பதும் எங்கேனும் கோயில் திருவிழா எனில் அதுவும் ஒரு பிக்னிக் ஸ்பாட் என்பதுபோனற பாவனையில் செல்வதும் இருக்கிறது. பெரும்பான்மை கோயில் திருவிழாக்களின் உச்ச நிகழ்வே நகைகள் களவாடப்படுதல் கழுத்து செயின் அறுத்தல். நோக்கம் திசைமாறிவிடுகிறது.

    அப்புறம் தமிழர்களின் வேதமாகப் போற்றப்படும் சைவ சித்தாந்தம் தெளிவாக இதைப் படம்பிடிக்கிறது. கடவுள் வேறு உயிர்கள் வேறு என்று. கடவுள் உயிர்களைக் காக்கவோ துன்புறுததவோ தண்டனை வழங்கவோ இல்லை. உயிர்கள் செய்கின்ற செயல்களுக்கேற் வினைப்பயனைக் கொண்டு சேர்க்கும் அஞ்சல்காரர்கள்தான் கடவுளர்கள். அதனை ஒரு மாய இலக்காகக் கொண்டுவிட்டால் மனித இனம முன்னேறிவிடும்.

    அப்புறம் சாதி குறித்தது. பல்வேறு பாகுபாடுகள், சமீபத்தில் திருநங்கைகள் குறித்த ஒரு டிவி நிகழ்வில் ஒரு திருநங்கைப் பேசினார் எங்களால் எந்தவிதமாக சாதிப்பிரச்சினையும் இல்லையென்று. பலவித வேதனைகளுக்கிடையில் கிடைத்த முத்தான கருதது இது, அதற்காக எல்லோரும் திருந்ங்கைகளாக உருவாகவேணடும என்பது அல்ல. தவிரவும் எந்த சாதிப்பிரிவாக இருந்தாலும் அது ஒதுக்கீடு எனும் நிலையில் பெரும்பான்மை தவறான தரமற்ற விளைவுகளை உருவாக்கிக்கெர்ண்டிருக்கிறது என்பதால் சாதிகளற்ற ஒரு சிந்தனைப் போக்கு என்பதும் அறிவுசார்ந்த போட்டியும் தேடலும் அதுகுறித்த சிந்தனையும் நல்ல பயன்களை விளைவிக்கும்,

    குறிப்பாக நாம் பிள்ளைகளை இப்போது திறந்தவெளி விலங்குகளாகவே நீண்ட கயிற்றால் இயக்கிக்கொண்டிருக்கிறோம். இதற்கான உபகரணங்களை தொலைக்காட்சிகள் வழங்கிக்கொண்டிருக்கின்றன. எனவே நீங்கள் குறிப்பிட்ட தன்னம்பிக்கை. அறிவுசார்ந்த சிந்தனைகள் இவற்றை உள்ளடக்கிய கதைகள் என்பன பிறந்து விவரமறியும் வயதிலிருந்து குழந்தைகளிடம் தொடங்கிவிடவேண்டும் என் தாழ்மையான கருத்து. அவர்களைச் சரிசெய்தால் போதும். தற்போது பாழ் பட்டிருக்கிற அசுத்தமாகிக்
    கொண்டிருக்கிற சமுக நிகழ்வுகளில் வாழ்க்கை விளக்கங்களைக் கூட
    கதைகளாகவே சொல்லவேண்டும் என்றே எனக்குத் தோணுகிறது.

    தரமான இதுபோன்ற கட்டுரை பதிவுகளும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதான நம்பிக்கையில் உங்களின்
    கட்டுரையை நான் உள்வாங்கிக்கொள்கிறேன். நன்றிகள். இவை முழுக்க உங்கள் கட்டுரை சார்ந்த என்னுடைய கருத்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா முதலில் உங்களின் தரமான பின்னூட்டத்திற்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள். பெரும்பாலான உட்கருத்தில் நான் உங்களுடன் ஒத்துப்போவதறிந்து மகிழ்கிறேன். கூடுதலாக - “எந்த சாதிப்பிரிவாக இருந்தாலும் அது ஒதுக்கீடு எனும் நிலையில் பெரும்பான்மை தவறான தரமற்ற விளைவுகளை உருவாக்கிக்கெர்ண்டிருக்கிறது என்பதால் சாதிகளற்ற ஒரு சிந்தனைப் போக்கு என்பதும் அறிவுசார்ந்த போட்டியும் தேடலும் அதுகுறித்த சிந்தனையும் நல்ல பயன்களை விளைவிக்கும்,“ என்னும் இடத்தில் சிறிய விளக்கம் தரு விரும்புகிறென். 3000ஆண்டுக்கும் மேலாக அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இனம், இடஒதுக்கீடு காரணமாகக் கிடைத்த சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துவதை நான் ஒட்டுமொத்தத் தவறாக நினைக்கவில்லை. புதுவெள்ளத்தில் நுங்கும் நுரையும் வரத்தான் செய்யும். இன்னும் ஒருசில தலைமுறை கடந்தபின்தான் அது சமநிலைப்படும் என்றே நான் கருதுகிறேன் அய்யா. மற்றபடி குழந்தைகளுக்குச் சொல்ல நம்மிடம் அறிவுசார் குழந்தைக் கதைகள் இல்லை. அதை நாம்தான் உருவாக்க, ஊக்குவிக்க வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, உங்களைப் போலும் அனுபவமும், பின்வரும் பின்னூட்டமிட்டுள்ள சூர்யஜீவா போலும் இளையவர்களின் முயற்சியும் இதைச் சாதிக்கலாம். தங்களின் விரிவான கருத்துகளுக்கு மீண்டும் என் நன்றி அய்யா. தொடர்ந்து விவாதிப்போம், அன்பில் தொடர்வோம்.

      நீக்கு
  13. //நம்புவது எளிது, சிந்திப்பது கடினம்தானே எளியது மலிவாக விரைவாகப் பரவுகிறது.//

    தலைப்புக்கு வெளியே உள்ளடக்கம் பல திசைகளில் செல்கிறது, ஆயினும் உங்கள் ஆதங்கம் விளங்குகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் எனும் கற்பிதத்தை நம்புவது எளிது, அறிவுசார் சிந்தனைகளைத் தருவது கடினம்தானே? எனப் பார்த்தால் தலைப்பி்ல்தான் தந்திருக்கிறேன் ஒருவேளை என் ஆதங்கவழிச் சொற்பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறென் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி அய்யா.

      நீக்கு
  14. சிந்தனையை தூண்டும் பகிர்வு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. சிந்திக்கத் தூண்டும் பதிவு எழுதியதற்கு கை கொடுங்கள். பதிவுலகில் காலடி எடுத்து வைத்தது முதல் எழுத்துக்கள் எண்ணங்களைக் கடத்தவே என்ற நினைவில் எழுதி வந்தேன் . பிறப்பொக்கும் என்று வாய் கிழியக் கூறுவோர் அதனை வாழ்வில் கடைப்பிடிக்காதது கண்டு மனம் வருந்தும். . என் சிந்தனை ஓட்டங்களை பல பதிவுகளில் பரிமாறி கொண்டிருக்கிறேன். ஒத்த கருத்துடைய உங்கள் பதிவினை என் மின் அஞ்சலில் கண்டு வந்தேன் சமுதாயத்தில் நிறையவே மாற்றங்கள் வர வேண்டும் பதிவுலகில் எழுதி மாற்றங்களைக் கொண்டு வருதல் அரிது. இருந்தாலும் ஓரிருவராவதுசிந்திக்கத் தொடங்கினால் நலம் விளையலாமே என்னும் ஆதங்கமே இதுவரை என்னை எழுத வைத்திருக்கிறது தங்களுக்கு மின் அஞ்சலில் சில சுட்டிகளை அனுப்புகிறேன் நேரம்கிடைத்தால் படித்துக் கருத்து தெரிவிக்கவும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம், 74வயதிலும் தங்களின் ஆர்வமான செயல்பாடு என்னை வெட்கமடையச் செய்கிறது. தங்களின் தளராத முயற்சிகளில் நான் இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். தங்களின் எழுத்துகளைப் படித்து அவசியம் பதில்தருவேன். தங்களின் வருகைக்கு என் நன்றியும் வணக்கமும் அய்யா. தொடர்ந்து இணைந்திருப்போம்.

      நீக்கு
  16. ""எல்லா மொழியிலும் உயிர் என்னும் சொல் இருக்கிறது. ஆனால் எந்த மொழியிலும், அறிவியல், உயிரின் தோற்றம்-அழிவுபற்றி ஏதும் சொல்லவில்லை! ""

    முதல் வாக்கியமே கொஞ்சம் என் மனதுக்கு இடறியது... ஆதலால் ஒரு சிறு விளக்கத்தை தர என் மனம் விரும்புகிறது... அணுவை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது... ஆக அந்த அணு ஆக்கப் படவுமில்லை அழிக்கப் படவுமில்லை... நம் உடல் மட்டும் அல்ல ஒவ்வொரு உயிரின் உடலும் எண்ணற்ற அணுக்களால் நிறைந்தவையே... இந்த உடல் அழியும் பொழுது ஒவ்வொரு அணுக்களும் வெவ்வேறு இடங்களில் வேறொரு பொருளாய் இயங்கி கொண்டே தான் இருக்கின்றது,, எந்த பொருளில் உயிர் இருக்கிறது என்று கேக்காதீர்கள்... ஏனெனில் உங்கள் உடல் இயங்கவே உயிரற்ற என்று கருதப் படும் கேல்சியம் மிகவும் அத்தியாவசியமாகிறது... (இருதயம் துடிக்க கேல்சியம் தேவை ).. அறிவியல் விளக்கம் கொடுக்கவில்லை என்று கூறாதீர்கள்... அறிவியல் கொடுத்த விளக்கங்களை பலர் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்று வேண்டுமானால் கூறுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே. உங்களின் சகபயணியாகவே என்னை உணர வைத்த உங்களின் பதிவுகளைப் பார்த்து மகிழ்ந்தேன். அறிவியல் ஏற்கப்படவில்லை என்பதுடன், அறிவியல் மனோபாவமற்ற கல்வியால் சிந்தனையே அற்றுப்போகிறதே என்பதே பெருங்கேடு அறிவியல் விளக்கங்கள் ஆன்மீகத்திற்கு எதிராக இருப்பதால் எண்ணற்ற அறிவியலாளர்களைக் கொன்று குவித்த உலகமல்லவா இது? உண்மை காலில் செருப்பை மாட்டி வாசலைத் தாண்டுவதற்குள், வதந்தி ஒரு சுற்றுச் சுற்றிவி்ட்டுத் திரும்பி விடுமாமே பொறுமையாக, இணைந்து, கற்று, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம். உங்கள்கவிதையும், வலைப்பக்கமும் அழகு! தொடர்வோம்.

      நீக்கு
    2. தோழர் பதில் அளித்தமைக்கு நன்றி... தற்சமயம் நான் எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளேன்.. பலரின் பதிவுகளை படிப்பேன்.. உங்கள் பதிவை படித்ததும் முதல் வாக்கியம் இடறியது ஆகையால் என் மனதுக்கு தோன்றியதை எழுதினேன்... இன்னும் நான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் இருப்பதால், எதுவும் எழுதுவதில்லை... காலம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.. அந்த மாற்றம் வரும் நேரம் நாம் நம் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்... அது வரை உங்கள் பதிவுகளை தொடர்வேன்

      நீக்கு
  17. கவிஞரே,
    காமமும் ஆன்மீகமும் ஒரே தளத்தில் இயங்குவதை சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். இவை இரண்டும்தான் மனிதனை மயக்கும் மாயங்கள் என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரப்பட வேண்டாம் நண்பரே! காமம் என்பது உயிரியல்பு. அதைக் காசாக்க, திசைதிருப்ப முயல்வதுதான் தவறு. காதலில்லாத காமம் வெறியூட்டும், காமமில்லாத காதல் மலடாக்கும். பழைய குமுதம் இதழ் அரசு கேள்விபதிலில் “உடலுறவு என்பதை அசிங்கம் என்கிறார்கள் சித்தர்கள், தெய்வீகம் என்கிறார்கள் பக்தர்கள், எது சரி? ”என்பது கேள்வி. அசத்தலான பதில் என்ன தெரியுமா? “இரண்டும் தவறு, அது இயல்பானது என்பதே சரி” இதுதான் என் கருத்தும். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே இணைந்திருப்போம்

      நீக்கு
  18. அன்புள்ள ஐயா..

    வணக்கம். அந்த சமநிலையில் எல்லாமும் சரியாகும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை. அதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் சிறு தவறுகளால் பாதிக்கப்படும் உள்ளங்களின் காயங்களுக்கு சரியான மருந்தில்லை என்பதை என்னுடைய அனுபவத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதையும் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அன்பு வேண்டுகோள் இதுபோன்ற கட்டுரைகளைத் தாஙக்ள் தொடர்ந்து எழுதவேண்டும. விவாதிப்போம். அப்போதுதான் ஒரு சரியான முடிவை இலக்கை அடைய உதவும்.

    பதிலளிநீக்கு
  19. ஆன்ம விளக்கங்களும் ஆபாசக் கதைகளும் = திரு நா.முத்துநிலவன் அவர்கள் பதிவு.
    பதிவும் அற்புதம், பின்னூட்டங்களும் அருமையான விவாதத்தை தருகின்றது. எனது பதிவில் பகிர்கிறேன். மேலோட்டமாக படிக்கும் பதிவில்லை. நண்பர்கள் ஆழ்ந்து படித்து கருத்தை பகிர வேண்டுகிறேன். மின்னஞ்சல் முகவரி போதும். நன்றி சார் திரு நா.முத்துநிலவன்

    பதிலளிநீக்கு