”நடிகர் திரு சூர்யாவும் நானும் கலந்துகொண்ட விழா“ (அல்லது) “கல்லூரி விழாக்களில் சினிமாக்காரர்கள்“ என இரண்டு தலைப்புகள் கொண்ட பதிவு இது...


நான் கல்லூரிகளில் படித்த காலத்தில் பெரும்பாலும் புகழ்பெற்ற அரசியல் தலைவரின் இலக்கியப் பேச்சுக்காகவே கல்லூரி விழாக்களுக்கு அழைப்பார்கள். ஆனால் இப்போது?....  எல்லாம் சினிமாக்காரர்கள் ... இதில் என்போலும் பேச்சாளரையும் சேர்த்து அழைத்து சிக்கல் பண்ணுகிறார்கள்...

நான் படித்த திருவையாற்று அரசர் கலலூரியில் -
எனக்கு முந்திய ஆண்டு மாணவர்களான திரு செந்தலை கவுதமன், திரு.மு.இளமுருகன் முதலான -அன்றைய தமிழியக்கதலைவர்கள், தந்தை பெரியாரை அழைத்திருந்தார்கள்.தேவநேயப் பாவாணர் அய்யாவை அழைத்திருந்தார்கள். பிறகு நெ.து.சு அவர்களை அழைத்திருந்தோம். சினிமாக்காரர்கள் யாரும் எங்கள் கல்லூரிக்கு வந்ததில்லை....

எங்களைப் போலவே எங்களுக்கு முந்திய-1960களின்-  தலைமுறைக் கல்லூரி மாணவர்களும் திராவிட இயக்கத் தலைவர்களையே கல்லூரிகளுக்கு அழைத்துப் பேசவைத்தார்கள் என்றே அதன் தாக்கம் அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் ஆட்சி அரசு மாறியது...

அப்படியானால் --

இப்போது அநேகமாகக் கடந்த 25 ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசவும் நடிக்கவும் தெரிந்தவர்களை அழைக்கத் தொடங்கி... இப்போது பேசவும் தெரியாத சும்மா நின்று கையசைத்துபோகிற சினிமாக்காரர்களை யெல்லாம் கல்லூரிகளில் அழைப்பது வாடிக்கை யாகிப்போனதே... இதன் தாக்கம் என்னவாக இருக்கப் போகிறது...?
பத்தாண்டுக்கு முன் -சூர்யாவுடன்
புதுக்கோட்டையின் பழம்பெருமை மிகுந்த சமஸ்கிருதஓரியண்டல் வித்யாலயாவின் மாணவர் இலக்கியமன்றத் தொடக்க விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். எங்கள் புதுக்கோட்டையின் புகழ்மிகுந்த தொண்டைமான் மன்னர் குடும்பத்தினரின் பள்ளிக்கூடம் அது. மதிப்பிற்குரிய ராணியார் ரமாதேவியாரும் வந்திருந்தார்கள். (அவர்கள் விளையாட்டுத் துறையில் ஆர்வம் மிகுந்தவர்கள், பல விளையாட்டு வீரர்களுக்குப் பற்பல உதவிகளும் செய்திருக்கிறார்கள்)  அதன் பின் சிலமாதம் கழித்து ஆண்டுவிழாவிற்கும் என்னையே அழைத்தார்கள். நான்தான் தொடக்கவிழாவிற்கு வந்தேனே?!” என்று தயக்கம் காட்டினேன்.

ராணியார் சொன்னதாக எனக்குச் சொன்னதென்ன தெரியுமா?
ராணியாரின் மகனுடன் படித்த நடிகர் சூர்யா ஆண்டுவிழாவிற்கு வருகிறார். அவர்தான் அதிகம் பேசமாட்டாரே! எனவே பேச நான்வர வேண்டும் என்று ராணியாரே அழைத்ததாக என்னிடம் சொல்லப்பட்டது.

நடிகர் திரு சூர்யா, புகழ்பெற்ற நடிகரான திரு.சிவக்குமாரின் மகன் என்பது எல்லாருக்கும் தெரியும். சூர்யாவும் விஜய்யும் நடித்த நேருக்கு நேர்படம் வந்து வெற்றிகண்ட பின் சூர்யா தனி நாயகனாகக் காலூன்றிவந்த காலம்து. இளம் கதாநாயகன்!!

பள்ளியில் இடம் போதாதென்று புதுக்கோட்டை நகரின் மையமான நகர்மன்றவளாகத்தில் வெளியில் பெரிய மேடைபோட்டு பள்ளிவிழா... சரியான கூட்டம்!  அதிலும் இளம்பெண்கள் கூட்டம் அலைமோதியது...

சூர்யா வந்திருந்தார். சிக்கென்று... ஜீன்ஸ் போட்டு... சின்னப் பையனாய்...மேடையில் என்னருகில் அமர்ந்திருந்தவரிடம் அவரது மாரக்கண்டேயஅப்பா பற்றியும், “நேருக்கு நேர்அறிமுகப் படத்தில் சூர்யாவின் நடிப்புப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் என்னைப் பேச அழைத்தார்கள்...  நானும் கொஞ்சநேரம் இடமறிந்து நகைச்சுவை கலந்து பேசிவிட்டு உட்கார்ந்தவுடன்... அடுத்து மாணவர்களுக்குப் பரிசு தந்து நடிகர் சூர்யா பேசுவார்என்றார்கள்... மக்கள் ஒரே ஆரவாரம்! சூர்யா என்னிடம் மெதுவாகக் குனிந்து, “சார்... நீங்க சூப்பராப் பேசிட்டீங்க... எனக்கு உங்க மாதிரிப் பேச வராது... நான் என்ன சார் பேச..?” என்று வெகு இயல்பாக ---புகழ்மகுடம் சூடிய பலருக்கு இல்லாத இயல்புத் தன்மையுடன் --சாதாரணமாகக் கேட்கவும் நான் உடனே சொன்னேன்...உங்க பேச்சக் கேக்கவா வந்திருக்காங்க...சும்மா பாக்கத் தானே வந்திருக்காங்க என்னவாச்சும் பேசுங்க... இல்லன்னா சமீபத்துல வந்த ஒரு படத்துல நீங்க 99மல்ர்களின் பேரை வரிசையாச் சொல்வீங்களே அதச் சொல்லுங்க...என ஒரு யோசனை சொல்லவும்...  ஆகா நல்ல் யோசனை சார்... ஆனா 99ம் வரணுமே! நடுவுல மறந்திட்டா...?” என்று கேட்டார். அட சும்மா சொல்லிட்டே வாங்கசார்... என்ன பரிச்சையா நடக்கப்போகுது? மறந்தா ஒண்ணும் சொல்ல மாட்டாங்கஎன்று தைரியப் படுத்தி அனுப்பினேன்...  
மக்களின் தொடர்ந்த ஆரவாரத்திற்கிடையே கொஞ்ச நேரம் பேசிய சூர்யா பிறகு மலர்கள் பெயரை வரிசையாகச் சொல்லத் தொடங்கினார்.. ஒரு 40, 45 சொல்லியிருப்பார்... அவ்வளவுதான்.. கூட்டம் மகிழ்ந்து போய் ஒரே கைதட்டல்தான்...  சூர்யாவும் மகிழ்ந்து போய் உட்கார்நதவுடன் எனக்கும் நன்றி சொன்னார்... இது ஒரு நிகழ்வு.
எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியான நிகழ்வும் கூட...

ஆனால் அதன்பின் திரைக்கலைஞர்களுடன் ஓரிரு நிகழ்வுகளும் உண்டு சுமார் 7,8 வருடங்களுக்கு முன்- கோவை பி.எஸ்.ஜி.யில், சுற்றிலும் உள்ள சுமார் 20பொறியியற் கல்லூரிகளில் இருந்து வந்திருந்த சுமார் 400 மாணவ-மாணவியர் பங்கேற்ற பேச்சுப் போட்டியில் 6பேரைத் தெரிவு செய்து வைத்துக் கொண்டு, அவர்கள் ஆறுபேரும் கலந்து கொண்டு பேசிய பட்டிமன்றத்திற்கு என்னை நடுவராக்கி அதில் சிறந்த பேச்சாளரைத் தேர்வு செய்து தரச் சொன்னார்கள்... பசங்க சும்மா கலக்கி எடுத்தாங்க... என் பேச்சையும் ரசித்துத் தான் கேட்டார்கள்... ஆனால் அடுத்து அப்போது புகழ்பெற்றிருந்த ஒரு நடிகர் பேச வந்தார்..(பேர்சொல்ல விரும்பவில்லை) என்னென்னமோ உளறினார்... ஒரே விசில்... சத்தம் கூக்குரல்தான்...  அவர் பேச்சை யார் கேட்டார்கள்...?!

இயக்குநர் வசந்த் உடன்..

3ஆண்டுகளுக்கு முன் திருச்சி மகளிர் கல்லூரி ஒன்றில் இயக்குநர் வசந்துடன் நான் பேசவேண்டியிருந்தது...  அறிவிப்பாளர்... இயக்குநர் வசந்த் பேச வருகிறார் அதற்குமுன் கவிஞர் முத்து நிலவன் 5நிமிடம்என்று சொன்னார். எனக்கோ தன்மானம் தலைதூக்கியது பேசாமலே கிளம்பிவிடலாமா என்று பார்த்தேன்... அதைவிட “5நிமிடம்என்பதை நினைவுறுத்தும் வகையில், என்பேச்சின் துவக்கத்திலிருந்து மாணவிகளின் சிரிப்பும் மகிழ்ச்சிக் கைத்தட்டலுமாகத் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருக்கும்போதே “5நிமிடம் ஆகிவிட்டது நன்றி வணக்கம் என்று முடித்துவிட்டு உட்கார்நது விட்டேன்.

பின்னர் பேசிய இயக்குநர் திரு வசந்த், “எனக்கு முன் பேசிய கவிஞர் முத்துநிலவன் நகைச்சுவையாக நலல பல விஷயங்களைச் சொன்னார்... அவரை இன்னும் பேச வைத்திருக்க வேண்டும்.என்று வெளிப்படையாகச் சொல்லி அந்தக் கல்லூரி நிர்வாகிகளை வெட்கப்பட வைத்தார்...
இதுபோலவே தஞ்சைக் கல்லூரி ஒன்றில் இயக்குநர் திரு முருகதாசுடன் பேச அழைத்திருந்தார்கள் ஆனால் அவர் வரவில்லை...
திரு பாரதிராஜாவுடன் பேசிய கூட்டம் இருக்கிறதே! மறக்க முடியாதது.திண்டுக்கல்லி்ல் 3நாள் விழா.1996-ஜனவரி-5,6,7 முதல்நாளிரவு நடந்த சுழலும் சொல்லரங்கம் அவரை மிகவும் கவர்ந்து விட்டதுபோல...

மேடைக்கலைவாணர் -பின்னாளில் மதுரை சட்டமன்ற உறுப்பினரான- திரு நன்மாறன் நடுவராக,  நான், மதுக்கூர் ராமலிங்கம், நந்தலாலா, காந்திமதிஅக்கா, மற்றும் பின்னால் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக 3ஆவது முறையாக இருக்கும் பாலபாரதி எல்லாம் சுழன்று சுழன்றுதலா 2முறை பேசினோம்.  சுமார் 20,000பேர்! பெரும் கூட்டம்.

அப்போது திரு.பாரதிராஜா என்னிடம் சொன்னபடி நான் சென்னைக்கு வந்தபோதும் அவரைப் பார்க்கப் போகவி்லலையாம்... அடுத்த ஆண்டு திருப்பரங்குன்றத்தில் பார்த்தபோது ஞாபகமாய்க் கடிந்து கேட்டார் என்ன முத்துநிலவன் சென்னைக்கு வந்திருக்கீங்க என்னைப் பார்க்க வரல...?”

சரி அவர் அன்பாலும் மரியாதைக்காகவும் அழைக்கிறார்... நாம் போய் அவர் வேலையைக் கெடுக்கலாமா என்ன? அதுநடந்து 16ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது மறந்தும் இருப்பார்...  

இது போல, பலப்பல நிகழ்வுகள்... பசங்க படத்திற்குப் பரிசுதந்த சென்னை தமுஎச விழாவில் இயக்குநர் திரு பாண்டியராஜ் என் பேச்சைக் கேட்டுவிட்டு, அதில் வந்த ஒரு கருத்தைத் தன் அடுத்த படத்தில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டார் (பயன்படுத்தியதாகத் தெரியல)

இப்படிப் பலப்பல நிகழ்வுகள்...(திரு பாரதிராஜாவுடனும் திரு. பாண்டிராஜ்உடனும் கலந்துகொண்ட விழாக்கள் கல்லூரி விழாக்கள் அல்ல என்பதால் இங்கு அவற்றை விவரிக்கவில்லை)

ஆனாலும் தமிழ் பேசவே தெரியாத நடிகர் மற்றும் நடிகைகளை அழைக்கும் கல்லூரி நிகழ்ச்சிகளில் என்னதான் செய்வார்கள்...? மாணவர்கள் விரும்புவதாகச் சொ்ல்லுவதெல்லாம் சும்மா...  
இதுபற்றிய நம் நண்பர்களின் கருத்தறிய ஆவலாக இருக்கிறேன். எழுதுவீர்களா?
-------------------------------------------------------

20 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா
    இரண்டு தலைப்புகள் கொண்ட பதிவு. நடந்தவற்றை இவ்வளவு நினைவு வைத்து பகிர்ந்து விட்டீர்களே ஐயா! திரைநட்சத்திரங்கள் என்பவர்கள் பெரும்பாலும் நிஜ வாழ்வில் ஜொலிக்கிறார்களா என்பது கேள்விக்குறியே! பேசுவதைச் சொல்லவா வேண்டும்? திரு சூர்யா போன்ற கதாநாயகர்கள் நல்ல வளர்ப்பின் காரணமாக நிஜ வாழ்விலும் மக்கள் மனங்களைத் தங்கள் பணிவாலும் திறமையாலும் கொள்ளை கொண்டுள்ளார்கள். இருப்பினும் இன்று திரைப்பட பக்கம் அறிவார்ந்த சிந்தனைகள் குறைந்து வெறும் மாயை என்பதை மறந்து மக்கள் செல்வதும் கல்வி நிறுவனங்களே அதை செய்வது வருத்தமளிக்கிறது. சூர்யா அவர்களுக்கு நீங்கள் கூறிய யோசனை தங்கள் சமயோசித புத்தியால் தகுந்த நேரத்தில் கூறியது மிக சிறப்பு ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துப் பகிர்வுக்கும் கூகுள்+ பகிர்வுக்கும் நன்றி பாண்டியன்

      நீக்கு

  2. வணக்கம்!

    நடிப்பின் மயக்கத்தில் நாடிருக்க, வாடித்
    துடிக்கும் மனமோ தொடர்ந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெண்பாக் கருத்தை விரைந்து வழங்கிய
      நண்பரேஉம் அன்புமிக நன்று.

      நீக்கு
  3. சமீபத்தில் புதுக்கோட்டையில் வையாபுரியை அழைத்து பேச வைத்தார்கள். காரணம் யாராவது ஒரு சினிமாகாரர் வரவேண்டும் என்று மாணவர்கள் விரும்புகின்றார்களாம். என்னத்தச் சொல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வையாபுரி நல்ல மனிதர். ஆனால், வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் “நடித்த“ ஆட்டை ரயிலில் ஏற்றி ஊர்ஊருக்கும் கொண்டுபோய் விழா நடத்தினார்கள்... மக்களும் அதியசமாய்ப் பார்க்க வந்து கூடி, பாடாய்ப் படுத்தினார்கள்.. என்ன சொல்ல?

      நீக்கு
  4. திரை உலகிலும் அத்தி பூத்தார்போல் தமிழிறிஞர்கள் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். தஞ்சையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் போது, ஒரு நாள் கும்கி திரைப்படத்தில் நடித்த மல்லூரி என்னும் நடிகர் வந்திருந்தார்.
    பேசத் தொடங்கியதும், அவரிடமிருந்து வெளிப்ட்ட தமிழை, தமிழ் உள்ளத்தை நான் கொஞ்சமும் எதிர்ப்ர்க்கவில்லை ஐயா. தமிழ் அருவியாய் கொட்டியது.
    கல்வி நிறுவனங்களே நடிகர்களை அழைத்து, அதுவும் பேசத்தெரியாத நடிகர்களை அழைத்து, தங்களைப் பெருமைப் படுத்திக் கொள்வது என்பது விரும்பத் தகாத மாற்றம் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “கல்வி நிறுவனங்களே நடிகர்களை அழைத்து, அதுவும் பேசத்தெரியாத நடிகர்களை அழைத்து, தங்களைப் பெருமைப் படுத்திக் கொள்வது என்பது விரும்பத் தகாத மாற்றம் ஐயா“ இதுதான் ஐயா என் கருத்தும்.. நன்றி

      நீக்கு
  5. உண்மையில் சுவாரஸ்யமான பேச்சை மாணவர்கள் ரசிக்கத்தான் செய்வார்கள். சினிமா பிரபலங்கள் பேசினாலதான் மாணவர்கள் கூடுவார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. திரைப் பிரபலங்களின் முன்னிலையில் பேச்சுமழை பொழிந்த உங்களின் அனுபவங்கள் சுவாரஸ்யம். மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடும்... பார்க்கும் ரசிப்பதென்னவோ சரக்கு உள்ளவர்களின் பேச்சைசத்தான் என்பதைப் பலமுறை நான் கண்டிருக்கிறேன். இதுபோலும் அனுபவங்கள் இன்னும் நிறைய உள. சொன்னால் சுயபுராணமாகிவிடும் என்பதால் சிலவற்றை மட்டுமே சொன்னேன் . தங்கள் கருத்து மிக நன்று, நன்றி அய்யா

      நீக்கு
  6. திரைப்படத் துறையிலேயே நல்ல பேச்சாளர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.அவர்களை அழைக்கலாம்.நீங்கள் சொல்வது போல ஒன்று சினிமாக்காரர்களையே கூப்பிட வேண்டும் அல்லது நல்ல தமிழ் பேச்சாளர்களை அழைக்க வேண்டும்.
    கவர்ச்சிக்காக அவர்களையும் கருத்துக்காக உங்களையும் அழைக்கிறார்கள் போல் இருக்கிறது.
    கம்ப ராமாயணத்தை ஆய்வு செய்த தமிழ் அறிஞர்கள் சொல்வதை விட
    சிவகுமார் பேசுதற்குத்தானே அதிக வரவேற்பு இருக்கிறது?
    அந்த சினிமாக்காரர்களையும் சிந்திக்க வைத்துவிட்டது அல்லவா தங்கள் பேச்சு.
    நல்ல பகிர்வு ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே.
      விரைவில் நேரில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறோம்.

      நீக்கு
  7. சூர்யா அவர்களுக்கு பதட்டமான நேரத்தில் சரியான யோசைனையை சொன்னீர்கள்...

    உண்மை தான்... மாணவர்கள் விரும்புவதாகச் சொ்ல்லுவதெல்லாம் சும்மா தான்... (அதுவும் பல லட்சங்கள் கொடுத்து அழைப்பு...?) விளம்பர உலகம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே.
      விரைவில் நேரில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறோம்.

      நீக்கு
  8. தேருதல் பிரச்சாரமாய் இருக்கட்டும் இப்படியான விழாக்களாய் இருக்கட்டும்
    எங்குமே நடிகர்களை அழைப்பதற்குக் காரணம் கூட்டம் அலை மோதும் ,விசில்
    அடிக்கும், கை தட்டும் அவ்வளவு தூரம் சினிமாக் காரர்கள் மீது மக்களுக்கு உள்ள
    மோகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டே பணத்தை வாரி இறைத்து வரவளைக்கின்றனர் மொத்தத்தில் இவை யாவும் வெறும் விளம்பரங்களையே விரும்பிச் செய்யும் செயலாகும் .வாழ்த்துக்கள் ஐயா இதுவரைத் தங்களின் பேச்சை ஒரு போதும் நாங்கள் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கவில்லை இருப்பினும் பற் பல மேடைகளில் தங்களின் திறமைக்கு வரவேற்பு அதிகரிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்கு உரியவனாக வளர முயல்வேன் சகோதரி. நன்றியும் வணக்கமும்.

      நீக்கு
  9. நடிகர்களின் கவர்ச்சி மக்களை இழுப்பதுதான் அவர்களை அழைப்பதற்கான காரணமாக இருக்கும். சூர்யாவிற்கு தாங்கள் சொன்ன யோசனை சூப்பர்! சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. உங்களின் இந்த பகிர்வு நிறைய பிரபலங்களின் மறு பக்கத்தை பார்க்க முடிந்தது.

    எனக்கும் கல்லூரிகளில், நடிக நடிகையரை அழைப்பதில் உடன்பாடில்லை தான். எல்லாம் விளம்பரம் செய்யும் மாயம்.

    பதிலளிநீக்கு
  11. பல கல்லூரி விழாக்களில் திரை நட்சத்திரங்களை அழைத்து பேச வைப்பது தான் 'லேடஸ்ட் டிரெண்ட்'.. எல்லாமே ஒரு விளம்பரம் தான்.. "போன ஆண்டு எங்கள் கல்லூரி விழாவிற்கு சூர்யா வந்து பேசினார், பவர் ஸ்டார் வந்தார், விஜய் வந்து பேசினார் " என்று கல்லூரிகள் விளம்பர படுத்தி கொள்ளதான்.. சரி அந்த கல்லூரியில் சேர்ந்தால், சினிமா ஹீரோவை பார்க்கலாமே என்று மாணவர்களும் நினைக்கின்றனர்...

    பதிலளிநீக்கு