கம்பனிடம் ஸ்ரீராமன் கேள்வி

1)            கம்பா! கவியரசே!  என்
                                    கதையெழுதித் தந்தவனே!
உன்பாடு தேவலப்பா! - இப்ப
                                    என்பாடு திண்டாட்டம்!

2)             மனிதர்களாய் வாழ்ந்தவரில் - நல்ல
                                    மனசோடு வாழ்ந்தவரைப்
புனிதர்களாய்ப் போற்றுகிறார்-கோவில்
                                    பூசையெல்லாம் நடத்துகிறார்!

3)            நானும் அப்படித் தான் - நபிகள்
                                    நாயகமும் அப்படித் தான்
வாழும் வகைதேடி  தத்தம்
                                    வழிகண்டார் வழிபட்டார்!

4)            இப்பஎன் பெயராலே  மசூதிய
                                    இடிங்கிறாக! , ‘அடிங்கிறாக!
அப்படியா நான் சொன்னேன் - என்
                                    அருங்கவியே பதில் சொல்லு!

5)            சகமனிதர் இன்பதுன்பம் - கூடச்
                                    சார்ந்திருக்கும் மனிதருடன்
பகிர்ந்துகொள்ள வேணுமல்லோ?- இது
                                    பாமரனும் செய்வதல்லோ?

6)            சகோதரத் துவமிருந்தால்
                                    சங்கடங்கள் ஏதப்பா?
இதைத்தானே என்கதையில்
                                    எடுத்தெடுத்து நீ சொன்னாய்?

7)            குகனொடும் ஐவரானோம்
                                    முன்பு, பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவரானோம்
                                    நின்னொடும் எழுவரானோம்

8)            என்று, நான் வேடனொடு
                                    குரங்கினமும் அரக்கர்களும்
ஒன்றுதான் மனிதநேய
                                    உணர்விருந்தால் என்றேனே!

9)            அனுமனின் உளம்போன்ற
                                    அன்புள்ளம் என்கோயில்!
மனிதரிடை அன்பிருந்தால்
                                    மட்டுமே நான் மதிப்பேன்!

10)         என்நாட்டை பரதனிடம் - மகிழ்வாய்
                                    எடுத்துக் கொடுத்தவன் நான்.
என்கோயில் கட்டுதற்கா  மசூதியை
                                    இடியென்று நான் சொல்வேன்?

மெய்த்திருப்பதம் மேவென்ற போதிலும்
இத்திருத்துறந்து ஏகென்ற போதிலும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகம்”- 
11)         உடையவன்தான் நான்என்றால் - நீ
                                    உரைத்ததுமெய் தான்என்றால்
உடையென்றா நான் சொல்வேன்? – அட
                                    உயர்கவியே பதில்சொல்லு!
---------------------------------------------------------------------------------------
இன்றைய செய்தித்தாளின் தேர்தல் பிரச்சாரச் செய்திகள், 1992 பாபர் மசூதி இடிப்பை நினைவூட்ட அப்போது எழுதிய கவிதையை எடுத்து இப்போது போடவேண்டும் என்று தோன்றியது போட்டுவிட்டேன். இதே உணர்வில் எழுதப்பட்ட எனது “கம்பனும் காரல் மார்க்சும்கட்டுரையைப் படிக்க, சொடுக்க - 
http://valarumkavithai.blogspot.in/2013/03/blog-post_754.html

12 கருத்துகள்:

  1. //என்நாட்டை பரதனிடம் - மகிழ்வாய்
    எடுத்துக் கொடுத்தவன் நான்.
    என்கோயில் கட்டுதற்கா – மசூதியை
    இடியென்று நான் சொல்வேன்?///
    அருமையான கேள்வி ஐயா

    பதிலளிநீக்கு
  2. கவிதை நல்லாயிருக்கு ஐயா...

    பதில்கள் தான்..........

    பதிலளிநீக்கு
  3. உயர்கவியைச் சிந்திக்கவைக்குமளவு அமைந்துள்ள கவிதை எங்களையும் சிந்திக்கவைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  4. அசத்திட்டீங்க போங்க! தமிழும், கவிதையும், கருத்தும் ஒன்றோடொன்று இணந்து போட்டி போடுகின்றன!

    மிகவும் ரசித்தோம்! நம்க்கெல்லாம் இந்த புலமை இல்லையே என்று!!!

    பதிலளிநீக்கு
  5. அப்போ எழுதியது இப்போவும் எதிரொலிக்கும் இன்றைய அரசியல் சூழலை..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா
    கம்பனுக்கு கேள்வி எழுப்பி அனைவரையும் சிந்திக்க வைத்த அற்புதமான வரிகளை உள்ளடக்கிய கவிதை சிறப்பு ஐயா. இலக்கியங்கள் சொல்லிச் சென்ற செய்தி மறந்து ஒவ்வாத வேலைகளில் இறங்கி மனிதநேய சமத்துவத்தை குழி தோண்டிப் புதைப்பவர்களுக்கு தங்கள் கவிதை சாட்டையடியாக விழுந்துள்ளது. பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  7. என்நாட்டை பரதனிடம் - மகிழ்வாய்
    எடுத்துக் கொடுத்தவன் நான்
    >>>
    நிஜம்தானே!

    பதிலளிநீக்கு


  8. தங்கள் சிறந்த எண்ணங்களை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. ஆணித்தரமான கேள்விகள். அருமையான கவிதை அண்ணா. பாவம் அந்த ராமர் இன்றைய அரசியல் விபரம் என்னவென்றால் இப்படி முன்னிருத்தபடுபவர்கள் முன்மாதிரி என்பது மக்களின் கண்களுக்கு தான், மற்றபடி இவரை போல அண்ணா, காமராஜர், பெரியார் எல்லாம் வெறும் லேபிள். மற்றபடி புலிமார்க் சீயக்காய்க்கும், புலிக்கும் உள்ள தொடர்பு தான் இவர்களுக்கும்,இவர்களை லேபிலாய் கொண்ட கட்சியின் கொள்கைக்கும். (உவமை உபயம் சகோ ஆவி). இதைதான் நான் கூட நகரத்து நரித்தனங்கள் கட்டுரையில் புலம்பினேன்.
    திராவிடர்களை அரக்கர்கள் என்ற ராமனுக்கு இதுவும் வேணும், இன்னனும் வேண்டாம் ,ஏன்னா நாம் பாவம் இல்லையா அண்ணா! ஏதாவது தப்பா சொல்லிட்டேனா அண்ணா. மன்னியுங்கள்!

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராமன் கேட்பது போன்ற கேள்விகள் அருமை......

    பதில் சொல்ல கம்பனும் இல்லை.... இப்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் பொறுமை/விருப்பம் இல்லை.... அதை வைத்து தானே அரசியலே நடக்கிறது!

    பதிலளிநீக்கு
  11. //உடையவன்தான் நான்என்றால் - நீ
    உரைத்ததுமெய் தான்என்றால்
    ‘உடை’யென்றா நான் சொல்வேன்? – அட
    உயர்கவியே பதில்சொல்லு!//

    உடைச்சவன் மூக்கையெல்லாம் உடைக்கும் வரிகள்.
    அருமை ஐயா!

    பதிலளிநீக்கு