லீனாமணிமேகலைக்கு என்ன பிரச்சினை?

திரைப்பட இயக்குநர் லீனாமணிமேகலை


கவிஞராக அறிமுகமாகி, ஆவணப்படங்கள் எடுத்து, பின்னர் திரைத்துறையில் நுழைந்த
பெண் இயக்குநர் லீனாமணிமேகலை பற்றிய சர்ச்சை வலைதளங்களில் இப்போது வலம் வருகிறது.

அவரது “வெள்ளைவேன் கதைகள்” 90நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படத்தை இலங்கைராணுவத்தின் கடுமையான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பயணம்செய்து, முஸ்லிம்,சிங்களப் பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்தித்து, “கொரில்லா படப்பிடிப்பு” முறையில் உயிராபத்து-அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வெள்ளைவேன் கதைகளை எழுதி-இயக்கி-தயாரித்திருக்கிறார் லீனாமணிமேகலை - என்கிறது ஜனசக்தி19-01-2014 நாளிதழ்

கடந்த ஆண்டு கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு நடந்தபோது லண்டனிலிருந்து சேனல்4 தொலைக்காட்சி இந்தப் படத்தை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியதையும் செய்திகளில் அறிந்தோம். விரைவில் சென்னையில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிகிறோம். நல்லது.


நமது கேள்வி -
அண்மையில் (ஜனவரி3,4) சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஈழம், தமிழகம், புகலிடம் சார்ந்த பெண்களின் கருத்தரங்கம் திட்டமிட்டபடி நடந்துகொண்டிருக்கும்போது இடையில் புகுந்த லீனா, தனக்கும் பேச அனுமதி வேண்டும் என்று கேட்டு பிரச்சினை செய்ததாக அறிகிறோம்.

பல்லாண்டுகளாகப் பெண்ணியப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவரும் “ஊடறு” தோழியரின் பேச்சில் குறுக்கிட்டு இப்படிப் பேச வேண்டிய அவசியம் லீனாவுக்கு ஏன்வந்தது?

அவரது வெள்ளை வேன் படம் பற்றிய ஊடறு தோழியரின் கருத்தென்ன என்பது பற்றித் தெரியவில்லையே?

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரான பிரபல தமிழறிஞர் முனைவர் வீ.அரசு, அவரது துணைவியாரும் பிரபல பெண்ணிய நாடக இயக்குநருமான முனைவர் அ.மங்கை தம்பதியினர் தன்னைப் பேச விடாமல் மாணவர்களைக் கொண்டு விரட்டியடித்ததாக கருத்தரங்கிற்குத் தலைமையேற்ற புதியமாதவியின் வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார் லீனா. எனக்குத் தெரிந்து அரசுவும் மங்கையும் கோபக்காரர்களே  அன்றி அநியாயக் காரரல்லர், ஜனநாயக உணர்வுகொண்டவர்களும்கூட.

லீனாவின் ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் ஒரு சர்வதேசக் கருத்தரங்கைத் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருப்பவர்களிடம் பேசாமல், நேராக “என்னைப்பேசவிடு” என்று கேட்பதில் நியாயமில்லை.

லீனாவுக்கு என்ன பிரச்சினை?
-------------------------------------------------------------------------

மேலும் தகவல்களுக்கு -
http://puthiyamaadhavi.blogspot.in/2014/01/blog-post_16.html

25 கருத்துகள்:

  1. படைப்பாளிகள் உணர்வுவயப்படுவது புதிதல்ல...

    எல்லோர்க்கும் இருக்கும் ஓர் நியாயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணர்வு வயப்பட்டால் நல்ல படைப்பு வரும்.
      உணர்ச்சி வசப்படடாலதான் கன்னா பின்னான்னு ஏதாவதுவரும். முதல்வகைப்பட்டிருக்கவேண்டிய லீனாவின் இந்தச் செயல் இரண்டாவதாகப் படுகிறது. அதுதான் பிரச்சினை. இரண்டு வழக்கறிஞர்கள் வாதிடும்போது ஒருபக்கம்தான் நியாயம் இருக்க முடியும் நடுநிலை என்று ஒன்றில்லையே மது?

      நீக்கு
  2. என்ன தான் பிரச்சனை !சில சமயம் நிகழ்வு நடந்த இடத்தில் இருந்தால் கூட எனக்கு பல விஷயங்கள் புரியாது !?ஏதோ அரசியல் போல!அண்ணா என்ன இன்று பதிவு மழை?!சாவி சிறுகதை எதார்த்தவாழ்வில் அரசியல் (பாலிடிக்ஸ்)அதர்மங்களை தோழுரித்திருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கென்னவோ ஈகோவாகத்தான் படுகிறது. உயர்ந்த கலைஞர்களுக்கு இருக்கக் கூடாத -பெரும்பாலும் நிறைததும்பும் கலை-இலக்கிய வாதிகளுக்கு இல்லாத- ஒன்று இந்த ஈகோ. ஊடறு தோழியரைத் தெரியுமோ மைதிலி? புதியமாதவியின் தளத்தின் வழியாகப் போய்ப் பார். உனக்கு மிகவும் பிடிக்கும்.

      நீக்கு
  3. லீனாவின் செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்லவே.

    பதிலளிநீக்கு


  4. தொடர்புடைய சுட்டிகள்

    http://ulaginazhagiyamuthalpenn.blogspot.in/2014/01/blog-post_3541.html

    http://www.shobasakthi.com/shobasakthi/?p=1087

    http://ulaginazhagiyamuthalpenn.blogspot.in/2014/01/blog-post.html

    http://www.shobasakthi.com/shobasakthi/?p=1095

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி லீனா.
      நானும் உங்கள் வலைப்பக்கம் போய்ப் பார்க்கிறேன்.
      நண்பர்களும் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
    2. படத்தைப் பார்க்காமல் விவாதத்தில் இறங்குவது முழுமையாக இராது என்றாலும், முதல் இணைப்பைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது -“பொது இலக்கிய அரங்கொன்றில் ஒருவரோ ஒரு குழுவோ இடையீடு செய்து தங்களது கோரிக்கையை வைப்பதையோ பேசுவதற்கு ஐந்து நிமிடங்கள் கேட்பதையோ ஜனநாய நெறிமுறைகளுக்கு எதிரான செயலாகவோ பொறுப்பற்ற கலாட்டாவாகவோ நாங்கள் கருதவில்லை” எனும் கருத்தை ஏற்கவியலாது. ஜனநாயகம் என்பது இன்னொரு நிகழ்வில் நேரடியாகத் தலையிடுவதன்று. அத்தோடு ஒரு பெரும் எழுத்தாளர் பட்டியலைத் தந்திருக்கும் லீனா, அந்த அறிக்கையை வாசித்தவர்கள் கருத்தைஇடுவதற்கு வழி ஏற்படுத்தவில்லையே ஏன்? இங்காவது பதில் இடுவார்களா?

      நீக்கு
    3. இரண்டாவது இணைப்பில் ஷோபா சக்தியின் கட்டுரை ஆதாரங்களுடன் இருக்கிறது. ஆனால், அதற்கும் கருத்துத் தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லையே ஏன்? என்பதோடு, படம்பார்க்காமல் விமர்சனத்திற்கான விமர்சனத்தை வைக்க இயலாது என்பதையும் மீண்டும் தெரிவிக்க வேண்டியுள்ளது.
      மற்ற இரண்டு சுட்டிகளும் இவற்றின் தொடர்ச்சியாகவே உள்ளன. அரசு, மங்கை, புதிய மாதவியோ சுகிர்த ராணியோ என்ன சொல்கிறார்கள் என்று கேட்பதும், ஊடறு தோழியரின் கருத்து என்ன என்பதும் தெரியாமல் இதில் கருத்துச் சொல்ல இயலாது என்பதை நம் வலைப்கக்கநண்பர்கள் அறிவார்கள். எனவே...

      நீக்கு
  5. என்னமோ நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது! பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  6. இதுபற்றி வீ.அரசுவிடம் பேசினேன். அவர் வலைப்பக்கக் குப்பைகளுக்குப் பதில்சொல்ல் நேரமிலலை என்று சொல்லிவிட்டார். கவின்மலர் உள்ளிட்ட பல எழுத்தாளர் பெயரிலான அறிக்கை தொடர்பாகக் கேட்டவுடன், கவின்மலர் லீனாவின் கருத்துகளுக்குக் கடுமையான எதிர்ப்பைக் காட்டிவருகிறார் இதிலிருந்து லீனாவின் அறிக்கை பொய்யானது என்று தெரிநதுகொள்ளலாம் என்றும் தெரிவித்தார். வலைப்பக்கங்களை சுத்தமாக ஒதுக்குவது சரியான கருத்தல்ல என்று அவரிடம் சொல்லியிருக்கிறேன் பார்க்கலாம்..

    அந்தக் கருத்தரங்கிற்குத் தலைமையேற்றிருந்த புதியமாதவி தன் வலைப்பதிவில் “பேச வேண்டும் என்றும் அதற்கு நான் நேரம் தருவேன், கட்டாயம் வாய்ப்பு தரப்படும் என்று என் தரப்பிலிருந்து உறுதி தரப்பட்ட பிறகும் தோழர் லீனா தன் இருக்கையில் அமர்ந்திருக்கலாம், பேசி இருக்கவும் முடியும், ஒருவேளை அந்த மேடையில் வெள்ளைவேன் குறித்து பேச வேண்டும் என்ற நோக்கமே அவருக்கு இல்லையோ என்னவோ?தனக்குத் தரப்பட்ட வாய்ப்பை அவர் நிராகரித்ததை எப்படித் தான் புரிந்து கொள்வது?

    லீனாவின் விளம்பர உத்திகளையும் வெள்ளைவேன் கதைகளை எல்லாம் புறம்தள்ளிவிட்டு அதிகார துர்வாசனை என்று கூவம் நதிக்கரையில் நின்று கொண்டு அவர் அலறும் குரலும் அதன் வீச்சும் டில்லி, கேரளா என்று பறந்து கொண்டிருக்கிறதாம்.
    மும்பை டில்லி நண்பர்கள் என்னிடம் சொல்லி சொல்லி
    கவலைப்படும் தொனியில் துக்கம் விசாரிக்கின்றார்கள்!“ - என்று புதியமாதவி தன் வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார்...
    இந்தப் பக்கத்தை நண்பர்கள் பார்ககலாம் -
    http://puthiyamaadhavi.blogspot.in/2014/01/blog-post_16.html

    பதிலளிநீக்கு
  7. என்ன நடந்தது... ஏன் நடந்தது என்பதெல்லாம் இது போன்ற பதிவுகளையும் இணைப்புக்களையும் படிக்கும் போது ஓரளவு எங்களைப் போன்ற வெளிநாட்டில் இருப்பவர்களுக்குத் தெரியவருகிறது. இருப்பினும் நடந்தது என்ன என பதிவிட்டால் நன்றாக அறிந்து கொள்வோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லீனா எடுத்திருக்கும் படம் சரியான பார்வையில் எடுக்கப் பட்டிருக்கிறதா என்பதே படத்தைப் பார்த்தபிறகுதான் தெரியும். அதற்குள் ஏன் இவர் இத்தனை ஆர்ப்பாட்டம்? “உள்ளே பேசுகிறவர்கள் என்னையும் என்படத்தையும்விட பிரபலமிலலை என்று சொன்னவர அந்த இடத்தில் நின்று -உட்கார்ந்து- ஆர்ப்பாட்டம் பண்ண என்ன தேவை? ரஜினி தன் படங்கள் வரும்பொழுது சில சர்ச்சைகளைக் கிளப்பிவிடுவாரே அது நினைவுக்கு வருகிறது.. கிடைக்கும் தகவல்களை நான் கொடுத்துக்கொண்டே வருகிறேன் குமார்... பார்க்கலாம்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஓடி ஆடி எடுத்திருந்தாலும் விளம்பரம் போதவில்லையே என்னும் ஆதங்கமாக இருக்கலாம். சரியான படைப்பாளிக்கு, சரியான விமர்சனத்தை மக்கள் தருவார்கள் எனும் நம்பிக்கை வேண்டும்

      நீக்கு
  9. வணக்கம் ஐயா
    என்ன நடந்தது எதற்காக நடந்தது என்பதை இனி தான் நீங்கள் கொடுத்துள்ள ஒவ்வொரு சுட்டியாக படிக்க வேண்டும். நீங்கள் கூறியது போல் எல்லாம் தன் படத்திற்கான விளம்பரமாக இருக்கலாமோ எனவும் சந்தேகிக்க வைக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கிய என் தோழியும் கவிஞருமான புதிய மாதவியிடமும் பேசினேன். தன் வலைப்பக்கத்தில் விரிவாகவே எழுதியிருக்கிறார். நீங்களும் பாருங்கள் பாண்டியன்.

      நீக்கு
  10. எதற்காக இந்தப் பெண்ணிய உரையாடல் நடந்ததோ அது பேசு பொருளாகாமல் இதெல்லாம் ஓடிக்கொண்டிருப்பது என்னை தனிப்பட்ட
    முறையில் மிகவும் அதிகமாக காயப்படுத்தி இருக்கிறது. என் பதிவில் ஏற்கனவே சொல்லப்பட்டதிலிருந்து ஒரு புள்ளி கூட கூட்டவோ குறைக்கவோ என்னிடம் எதுவுமில்லை. அதிகாரத்தின் மையத்தை நோக்கி கலகக்குரலாய் எழ வேண்டிய பெண்ணிய முகங்கள் இங்கே சிதறிக்கிடக்கின்றன. தனக்கான ஆளுமையை அங்கீகாரத்தை அதிகார மையத்தை நோக்கி திருப்பி இருக்கும் அருந்ததிராயாக இவர்கள் எப்போதும் மாறப்போவதே இல்லை. ஏனேனில், இவர்கள் எதிர் எதிராக நிற்பது கோட்பாட்டின் அடிப்படையில் எழுந்த பிரிவினைகள் அல்லவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் புதிய மாதவி. ”அதிகாரத்தின் மையத்தை நோக்கி கலகக்குரலாய் எழ வேண்டிய பெண்ணிய முகங்கள் இங்கே சிதறிக்கிடக்கின்றன” நம் தமிழினமும், பெண்ணினமும் இதன் பொருள் அடிவாங்கிக்கொண்டே இருப்பதை நோக்கி நீளவேண்டிய விரல்கள் நம்மை நோக்கியே நீள்வதுதான் . இந்த நோய் தீராதவரை தீர்வும் இல்லை. நம் வேலை இன்னும் கூடுதலாகிறது. ஊடறு தோழியர் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளக் கூடிய சுட்டி இருந்தாலேர், மங்கை வெளியிட்டிருப்பதாகச் சொல்லும் அறிக்கை கிடைத்தாலோ அதன் சுட்டியைத் தர வேண்டுகிறேன். என் வலைப்பக்கம் வந்து பதிவிட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  11. லீனா மணிமேகலைக்குக் கோபம் வரும்படி அப்படி என்னதான் செய்தது ஊடறு இதழ் என்று புதியமாதவியிடம் கேட்டிருந்தேன். அவர் ஊடறு இதழில் வெளிவந்த இணைப்பைத் தந்திருக்கிறார். அவருக்கும், நேரடியாக எனது மின்னஞ்சலுக்கு இதையே அனுப்பிய ஊடறு தோழியர்க்கும் எனது நன்றிகள் -
    ---------------------------------------------------------------
    இதைத்தான் ஊடறு பிரசுரித்தது

    ஜீவன் says:
    November 6, 2013 at 8:33 pm
    இந்த பக்கத்தில் சம்மந்தப்பட்ட பெண்களின் படங்கள் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.
    http://www.whitevanstories.com/film.php
    திவயின என்ற சிங்கள கடும் போக்கு இணையத்தளம் இந்த படம் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில் சமந்த்தப்பட்ட பெண்களின் தகவல்களை வெளியிடுவது மிகவும் ஆபத்தானது.
    http://www.divaina.com/2013/10/27/defence.html
    வெள்ளை வான் என்ற படம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர். உளவுத்துறைக்கு தமது கருத்துக்கள் போய்விட்டது என்றும் தமது போட்டோக்களை தாங்கள் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டும் அப்படத்தை எடுத்த லீனா மணிமேகலை என்பவர் அதை கணக்கு எடுக்காமல் பிரசுரித்திருப்பதாகவும் உளவுத்துறையாலும் இராணுவத்தினராலும் தமது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்றும் அஞ்சுகின்றனர். தமது பேட்டியை நீக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். அவை நீக்கப்பட்டதா இல்லாயா என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லையாம்.
    http://www.oodaru.com/?p=6747&cpage=1#comment-18073
    மீராபாரதி பிரக்ஞை
    Leena Manimekalai யின் White Van Stories பார்த்தேன்.
    முக்கியமான பதிவு. ஆனால் மனதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
    குறிப்பாக ஈழத்த தமிழர்கள் இருவரின் நேர்காணல்கள் பிரச்சனைக்குரியவை.
    முதலாவது ஒரு தாயினது... இவர் பல உண்மைகளை வெளிப்படையாக கதைக்கின்றார். ஆகவே இவரது முகம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
    இரண்டாவது வெற்றிச் செல்வியனது. இவரும் பல உண்மைகளை வெளிப்படையாக கூறுகின்றார். அதேவேளை இவரது முகம் மறைக்கப்படாமல் விட்டமையானது இவருக்கு பாதகமாகவும் இருக்கலாம். சாதகமாகவும் இருக்கலாம்.
    இவருக்கு ஏதுவும் நடந்தால் அதற்கு இராணுவமே பொறுப்பு என நிறுவப்படலாம். ஆனால் நடந்த பின் என்ன பயன்? ஈழத்தின் குறிப்பான பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக உரையாடுவதினால் இந்த ஆவணப்படம் கவனத்திற்குரியது.
    ஆனால் "பாதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்றவர்களின் பாதுகாப்பு பிரச்சனை பற்றி உரையாடுவதால் அவர்களின் பாதுகாப்பும் மற்றும் மீளவும் பாதிக்கப்படாதிருப்பதும் கருத்தில் எடுத்திருக்க வேண்டும்." இது அடிப்படை ஊடக அறம். இது இந்தத் திரைப்படத்தில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகின்றது.
    மற்றபடி லினாமணிமேகலையின் முயற்சி பாராட்டுக்குரியதும் முக்கியமானதுமாகும்.
    -----------------------------------------------------------

    பதிலளிநீக்கு
  12. இந்த விவாதம் தொடர்பாக, pl. read என்ற குறிப்புடன் எனது தனியஞ்சலுக்குப் புதிய மாதவி அனுப்பியிருக்கும் மேலும் இரண்டு இணைப்புகள் -
    http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=f7dc9c2d-fbd3-4a81-bf45-d1850e1e0cc6
    http://www.oodaru.com/?p=6747&cpage=1#comment-18073

    பதிலளிநீக்கு
  13. இந்த விவாதத்தில், சென்னைப் பல்கலைக் கழக நிகழ்வுகள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முனைவர்.வீ.அரசு அவர்களிடம் நான் கேட்க, ஊடறு தோழியர் அனுப்பிய மின்னஞ்சல் - from: oodaru udaru@bluewin.ch
    to: muthunilavanpdk@gmail.com

    date: 22 January 2014 04:55
    subject: Fwd: pls read

    Rajini Mahi
    13. Januar
    சென்னை பல்கலைக்கழக நிகழ்வுகள் தொடர்பாக....

    வக்கீலுக்கு படிக்காமலேயே குற்றவியல் வழக்கு விசாரணை நடத்திக்கொண்டிருக்கும், ஷோபா சக்தி அவர்களுக்கு, “ஒரு பொது அரங்கில் நிகழ்ந்த உண்மைகளை அவ்வளவு சுலமாக யாரும் மறைத்துவிட முடியாது” என்ற உங்கள் கூற்றுக்கிணங்க அந்த நிகழ்வில் கலந்து கொண்டவள், சம்பவத்தை நேரில் பார்த்தவள் என்ற அடிப்படையில் சில பதிவுகள்.. கேள்விகள்..

    ஊடறு.காம் ஆசிரியர் றஞ்சி, லீனாவுக்கு பரிச்சயம் இல்லாதவர் அல்ல (ஸ்விஸ் சென்ற போது றஞ்சி வீட்டில் தங்கியிருக்கிறார், லீனாவினது குறும்பட வெளியீட்டிற்கும் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டிருக்கிறார்). ஜனநாயக உரையாடல்களில் அதிக ஈடுபாடும் நம்பிக்கையும் உள்ளவராக தம்மை காட்டிக்கொள்ளும் லீனா.. றஞ்சியையோ, ஊடறு.காம் பிரதிநிதிகளையோ அந்த அரங்கில் அவர்கள் தங்கியிருந்த வளாகத்திலோ சந்தித்து விளக்கம் கேட்டிருக்கலாம். ஆனால், வேறு பல தலைப்புகளில் திட்டமிடப்பட்ட கருத்தரங்கு நடந்து கொண்டிருக்கும் அரங்கினில் நுழைந்து தனக்கே உரித்தான பதாகை பரிவர்த்தனைகளுடன் எடுத்த எடுப்பில் தர்ணா பண்ணுவது, பெண்ணிய ஜனநாயக உரையாடலின்.. நீட்சியா? மீட்சியா?

    சரி, முதல்நாள் ஏதோ தனக்கே உரித்தான ஜனநாயக பாணியில் தனது எதிர்ப்பை தெரிவிக்க விரும்பினார், தெரிவித்தார். அதை அதிகபட்ச புகைப்படங்கள் எடுத்து சமூக வளைதளங்களில் மிதக்கவிட்டார். பாவம் அவரது விளம்பர வேட்கைக்கு அது தீனி போடவில்லை போலும்.

    பொது அமர்வு என்பது கருத்தரங்கின் இறுதி நிகழ்ச்சி. “கருத்தரங்கிலா கலாட்டா பண்ணினார்? பொது அமர்வில்தானே கலாட்டா பண்ணினார்” என்பது என்ன நியாயம்? கருத்தரங்கிற்கும், பொது அமர்விற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்களாக எல்லோரையும் நினைக்கிறீர்களா?

    அதிகாரத்தை எதிர்த்த கலகம் என்பது வேறு. ஜனநாயக ரீதியான கலந்துரையாடல்களில் நுழைந்து கலாட்டா பண்ணி சிதைப்பது என்பது வேறு. இந்த சம்பவம் “ஆரோக்கியமான எதிர்ப்பு” என்ற வரையறைக்குள் எப்படி வரும். அ. மார்க்ஸை பார்த்து “இது நீங்கள் பேசும் பேச்சல்ல” என்று கூறியது கண்டனத்துக்கு உரியது. பொது அமர்வின் ஒருங்கிணைப்பாளர் புதிய மாதவி, “உங்களிடம் பேசுவதற்கு எங்களுக்கும் நிறைய இருக்கிறது. இந்த அமர்வு முடிந்ததும் நிச்சயமாக பேசலாம், உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்” என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாக கூறியும், அதற்கு பொறுமை காக்கவில்லை ‘Zero-Tolerance’ லீனா, அங்கு எதிர்பார்த்து வந்தது ஆரோக்கியமான உரையாடலையா? தனக்கே உரித்தான கவன ஈர்ப்பு விளம்பரத்தையா?
    (பின்னூட்டத்தில் பெரிய கட்டுரைகள் வெளியிட முடியாதில்லையா? எனவே அறிக்கையின் முதல்பாதி இதில் உள்ளது. மீதி அறிக்கையைப் படிக்கத் தொடருங்கள்...நா.மு,)

    பதிலளிநீக்கு
  14. “சென்னை பல்கலைக்கழக நிகழ்வுகள் தொடர்பாக....”
    ஊடறு தோழியரின் அறிக்கை நிறைவுப் பகுதி தொடர்கிறது...

    இதில் மற்றுமொறு திட்டமிடப்பட்ட திசைதிருப்பல் தொடர்ந்து நடைபெற்று வந்திருப்பதாக நினைக்கிறேன். லீனாவை வெளியேற்ற உதவியது “மாணவர்கள்” என்றே எல்லா பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுவாக இருபாலாரையும் குறிக்க நாம் “மாணவர்” என்று குறிப்பிட்டாலும் உடல் ரீதியான தாக்குதல் வன்முறைகள் என்று சொல்லாடல்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் இதில் “மாணவியரே” ஈடுபட்டனர் என்பதை வேறுபடுத்தி அழுத்தமுடன் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    கவின்மலர் தனது பதிவில் பிரேமா ரேவதி, மங்கை இவர்கள் மீது உள்ள காயங்கள் பற்றி கூறியது முற்றிலும் உண்மை. இதற்கு எலக்ட்ரானிக் எவிடென்ஸ் தேவையில்லை. அரங்கிற்கு வெளியே பிரேமா ரேவதியை கையை ஓங்கி லீனா தாக்கியதை நானே நேரில் பார்த்தேன். லீனாவின் பாணி யாருக்கும் புதிதல்ல.

    செங்கடல் படப்பிடிப்பின் போது சம்பளம் கேட்ட தொழிலாளர்களை உடல் ரீதியாக தாக்கியாக அவர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளது.கலாட்டா பண்ணி கவன ஈர்ப்பு விளம்பரம் தேடிக்கொள்வது உடல் ரீதியான தாக்குதல்களில் ஈடுபடுவது எல்லாம் அவருக்கு கைவந்த கலை என்பது தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு தெரியும்.
    டாட்டா-விற்கு ப்ராஜக்ட் பண்ணுவது சர்வதேச அளவில் ஆவணப்படங்கள் வெளியிடுவது என்று International Network வைத்திருக்கும் லீனா தன்னை எப்போதும் “உதிரி.. உதிரி” என்று கூறி கழிவிறக்கம் தேடிக்கொள்வது எதனால்?
    அ. மார்க்ஸ்க்கு தான் அளித்த பதிலில் “என் வயிற்றில் அடித்தது போல்.....” என்று கூறியுள்ளார். அப்போ ஈழத்தமிழர் பிரச்சனையில் உண்மையான அக்கறை இல்லையா? தனது தொழிலாகத்தான் இவற் செய்கிறாரா?
    மேலும் “இதற்கு பதில் கூறியே ஆகவேண்டும், றஞ்சி! ஏன் மவுனம் காக்கிறீர்கள்?” என்று றஞ்சிக்கு ஆணையிட்டு நிர்ப்பந்திப்பது வேறுவிதமான வன்முறையில்லையா? றஞ்சிக்கு அவருக்கே உரிய காரணங்களின் பேரில் “மௌனம் காக்க” உரிமை (Right to silence) இல்லையா?
    சாதாரண பேட்டி கொடுத்த வ.ஐ.ச.ஜெயபாலன், பத்திரிகை செய்தி சேகரிக்க சென்ற தமிழ் பிரபாகரன் ஆகியோரை கைது செய்து நாடுகடத்திய ராஜபக்சே அரசு 10 நாட்கள் தங்கி அவருக்கு எதிரான ஆவணப்படத்தை எடுக்க லீனாவையும் படக்குழுவினரையும் அனுமதித்ததன் பின்னணி என்ன?
    சரி, ஒரு ஆவணப்படம் எடுப்பதில் சர்வதேச மற்றும் இந்திய மனித உரிமை செயல்பாடுகளின் அளவுகோல் என்ன? பாதிக்கப்பட்ட பெண்களின் முகங்களை - அடையாளங்களை வெளியிடக்கூடாது என்பது தானே. இது Sexual abuse முதல் எல்லாவற்றிற்கும் பொருந்தும். Channel 4 வரை சென்று தனது படங்களை வெளியிட்ட லீனா மணிமேகலைக்கு இது தெரியாதா? இதற்காக ஊடறு.காம் ஒரு கண்டன கடிதத்தை வெளியிட்டதில் என்ன தவறு? ஆனால் பிரச்சனையின் கருப்பொருள் முற்றிலுமாக திசை திருப்பப்பட்டு விட்டது. ஆவணப்படத்தில் அடையாளப்படுத்தப்பட்ட ஈழப்பெண்களின் பாதுகாப்பு/ பரிதவிப்பு/ தலைவிதியை பற்றி கவலைப்படுவது யார்?

    இன்று லீனா மணிமேகலை நடத்தும் “வெள்ளை வேன்” டி.வி.டி. வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் யாருடனாவது யாருக்காவது பிரச்சனை இருந்து கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அந்த வெளியீட்டு நிகழ்வில் தகராறு செய்தால் ‘Zero-Tolerance’ லீனா அதை எப்படி எதிர்கொள்வார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

    அ.மார்க்ஸால் “வளர்த்தெடுக்கப்பட்ட” ஷோபாவே! எப்போது தொலைந்து போணிர்கள்?
    --------------------------------------------

    பதிலளிநீக்கு
  15. மின்னஞ்சல் நகல் --

    அன்புத் தோழி புதியமாதவிக்கும், ஊடறு தோழியர்க்கும் வணக்கம்.
    சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருக்கும் பெண்ணியக் கருத்தரங்க அழைப்பிதழைப் புதியமாதவியின் வலைப்பக்கத்தில் பார்த்து மகிழ்ந்து உடன் என் மகிழ்வை அந்தப் பதிவின் பின்னூட்டத்திலேயே இட்டவன் நான். எனது நீண்டகால நண்பரான வீ.அரசுவின் இந்த ஏற்பாடு சிறப்பாக நடக்கும் என்று தெரியும். அதன்படி சிறப்பாகவே நடந்தது. இடையில் புதியமாதவி வருத்தப்பட்டிருப்பதுபோல லீனாவின் விளம்பர வேலைதான் சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது. அது வலைப்பக்கங்களில் வந்தபோது இதை நம் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றுதான் நான் எனது வலைப்பக்கத்தில் இதை எழுதினேன். எனது நண்பர்கள் பலரும் உண்மையைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
    “லீனா மணிமேகலைக்கு என்ன பிரச்சினை?” எனும் இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் கடைசியாகப் புதிய மாதவி தந்த சில சுட்டிகளையும், ஊடறு தோழியரின் சுட்டிகளையும் இணைத்திருக்கிறேன்.
    இந்த விளக்கத்துடன் இந்த விவாதத்தை நிறைவு செய்யலாம்.

    எனது கவலையெல்லாம், கொடுமையின் உச்சத்திலிருக்கும் ஈழத்தமிழர் க்கு உதவிசெய்வதான பெயரில், வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சிவிடக் கூடாதே என்பதுதான்.

    நல்லமனம் கொண்ட நம் நண்பர்கள், சரியான புரிதலுக்கு வரவேண்டும் என்று சுட்டிகளைத் தெரிவித்து உதவிய ஊடறு தோழியர்க்கும், புதிய மாதவிக்கும், தகவல் உதவிய தோழர் வீ.அரசுவுக்கும் நம் நன்றி.

    மற்றபடி லீனா மேல் நமக்கென்ன பகை? லீனாவே சொல்வதுபோல, “உலகப்புகழ் லீனா”, “தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாமல் கிடக்கும்” ஊடறு தோழியருக்கு விளம்பரம் தருவதற்காகவே இதைச் செய்தார் என்று நம்புவோம். ஊடறு தோழியரே இம்மாததிரம் என்றால் நம் வலைப்பக்கம் எம்மாத்திரம்? அவரது உலகப் புகழுக்கு முன் “ஜூஜூபியான” நம்மையும் மதித்து ஒரு சுட்டியை அனுப்பிய அவருக்கும் என் நன்றி.

    “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு” - குறள் 355.
    (புதியமாதவிக்கும் ஊடறு தோழியர்க்கும் அனுப்பிய மின்னஞ்சல்)

    பதிலளிநீக்கு