காதல் - நட்பு - காமம்


கோவை பூ.சா.கோ. பொறியியற் கல்லூரியில்
(PSG Engineering College Coimbatore) 
என்னைப் பேச அழைத்திருந்தார்கள். 

அது, தமிழகத்தின் 7 பொறியியற் கல்லூரிகள் 

இணைந்து நடத்தும் கலைவிழா!
அனைத்துப் பொறியியல் கல்லூரிகளின் பேச்சுப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த
6 மாணவ-மாணவியர் பேசும் பட்டிமன்றம் !

நான் நடுவராகத் தீர்ப்பு வழங்குவதோடு,
அந்த 6 பேரில் பரிசுக்குரிய முதல் மூவரை வரிசைப்படுத்தித் தரவும் வேண்டும்!


பட்டிமன்றத் தலைப்பு என்ன தெரியுமோ?
"கல்லூரிக் காதல் –
 கலக்கலா? கண்ணீரா?"...!





மாணவ மாணவியருடன், 
பேராசிரியர்களும் நிறைந்திருந்த அந்தப் பட்டிமன்றத்தில்,
தீர்ப்பை இப்படிச்சொன்னேன்:
"நண்பர்கள் பிரியலாம், நட்பு பிரியாது.
காதலர் தோற்கலாம், காதல் தோற்காது.
உறுதியான  காதலெனில் இறுதிவரை நிற்கும்!
'முழுமை பெற்ற காதலென்றால்  முதுமை வரை ஓடிவரும்' எனும்
கண்ணதாசனின் வரிகள்தான் என் தீர்ப்பு"

என்ன? என் தீர்ப்பு சரிதானே?

நட்பு - காதல் - காமம்
இவற்றிடையே உள்ள மிகவும் நுட்பமான  வேறுபாடுகளைப் புரிந்துகொண்ட எவரும்,
வாழ்க்கையைப் புரிந்துகொள்வதோடு அதை  வெற்றி கொள்வதும் உறுதி. 
ஆனால், கத்திமேல் நடக்கும் காரியம்தான் இது! 
நட்புக்கொள்ளாமலும், காதலிக்காமலும் இருக்க முடிந்தோர்- 
இரண்டேவகையினர்தாம்!.
(1)இன்னும் பிறக்காதவர்கள்,
(2)பொய் சொல்கிறவர்கள்!


நண்பர்கள், காதலர்களாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை,
காதலர்கள் நண்பர்களாகவும் இருப்பதைத் தவிர்க்கவே முடியாது!

ஒரு நேரத்தில், ஓரிடத்தில்தான்
உண்மையான காதல் பூக்கும்,
ஒரே நேரத்தில் பலரிடத்திலும்
உண்மையான நட்பு ஜெயிக்கும்!

இதோ, இந்தச்சிறு பெண் –
என் மகளைவிடவும் இளையவர் -
கிருத்திகாவுக்குள்தான்
எவ்வளவு பெரிய அன்பு, நட்பு, காதல் உலகம்!

இந்தச் சிறுவயதில் இவரால், நட்பையும் காதலையும் பிரித்துப்பார்க்கத் தெரிகிறதா  என்று 
எனக்குத் தெரியவில்லை. இரண்டின் மேன்மையையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதுமட்டும் இவரதுகவிதைகளால் தெரிகிறது!

அமீரக (துபாய்) இணைய நண்பர்கள் வெளியிட்ட இலக்கிய மலரில் 
நான் எழுதியிருந்த "தமிழில் பெண்கவிகள்" எனும் கட்டுரையிலும், 
எனது இணைய நட்புமண்டலக் கவிஞர் மும்பை புதியமாதவியின் 
"ஹே ராம்!" கவிதைத் தொகுப்புக்கு நான் தந்திருந்த முன்னுரையிலும், 
புதுக்கோட்டையைச் சேர்ந்த இந்த- பள்ளிமாணவியின்
 சின்னக் கவிதையை மேற்கோள் காட்டியிருந்தேன்:

தலைப்பு:  'நட்பு'
"வேறிடத்தில் -
உண்மை பேச வேண்டியவர்களும்
ஊமைகளாய் இருப்பார்கள்,
இங்குமட்டும்தான் -
ஊமைகளும் உண்மை பேசுபவர்களாய்
இருப்பார்கள்"

அந்தச்'சிறுமி'தான்-இன்று கல்லூரி மாணவியாகி - தனது கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்து காட்டி, முன்னுரை கேட்கிறார்!

‘உனக்கு என்னைப் பிடித்திருப்பதால்,
எனக்கும் பிடித்திருக்கிறது –
என்னை!’ எனும் கவிதையில்,
இந்தக் குழந்தைக்கு வயது இரண்டு!

'பென்சில் சீவ வேண்டும் -
கொஞ்சம் கொடேன் உன்
கூரிய விழிகளை' எனும் கவிதையில்,
20 வயது வாலிபக் குறும்பு தெரிகிறது.

இந்தக் கவிதையில் மட்டுமன்றி,
'உடலின் முழு ரத்தம்
என்றாலும் தருகிறேன் -
உனக்குப் பொட்டிடும் அளவு மட்டும்
வைத்துக்கொண்டு' எனும் கவிதையில்
ஆண்குரல் கேட்கிறது!


'சின்னதொரு ஞாபகமோ
சீரழிக்கும் சஞ்சலமோ' எனும் கவிதையில் 
இந்தக் கிழவிக்கு வயது 80!
(குறுந்தொகைஎண்: 28 காண்க!)

கவிகள் 'கூடுவிட்டுக் கூடுபாயும்' வித்தை தெரிந்தவர்கள் 
ஆதலால், இதுவொன்றும் ஆச்சரியமல்ல! 
இந்தவித்தை,
கிருத்திகா போலும் 'பயில்வா'னுக்குக் கைவந்ததுதான் ஆச்சரியம்!

இந்தத் தொகுப்பில் இருப்பவை 
பெரிய உலகத் தத்துவங்கள் இல்லைதான்,
ஆனாலும், உலகத்தை யெல்லாம் தமக்குள் அடக்கிய 
அன்பை, காதலை, நட்பைப் பாடியிருப்பதால் 
இவை உலகக் கவிதைகள்தாம்!

அந்த வகையில் -
இவரது கவிதைகளில் நிறைந்து கிடக்கும்
 அன்பெனும் அமுத சுரபியை 
இந்த உலகம் அள்ளிப் பருகி,  
இதயம் நெகிழ்வதாக!

என் இலக்கிய மகளின் -
அன்பிற்கு என் ஆசிகள்!
நட்பிற்கு என் கைகுலுக்கல்கள்!
காதலுக்கு என் மரியாதைகள்!
நாகரிகத்திற்கு என் நன்றிகள்!
கவிதைக்கு என் வணக்கங்கள்!
                                                                                        
அன்புடன்,
நா.முத்து நிலவன்
புதுக்கோட்டை - 622 004

16 கருத்துகள்:

  1. கவிதைகள் அருமை .கீர்த்திகாவிற்கு என் வாழ்த்துகள் . புதிய முயற்சிகளை பாராட்டுவதிலும்,ஊக்குவிப்பதிலும் தங்கள் always mass .great na

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தச் சிறுமி என்னை ஆச்சரியப்பட வைத்தாள். என்ன ஒரு வருத்தம் என்றால், பெண்களின் பெரும்பாலான திறமைகள் திருமணத்திற்குப்பின் மறைந்து (மறைத்து?) விடுவதுதான்...

      நீக்கு
  2. இளசுகளின் இளமைக் கலகலப்பு நிறைந்த சிறந்த பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெகளைதான் போங்கள்... கலக்கிவிட்டார்கள் மாணவர்கள். எனக்குப் பின்னால் திரைப்பட நடிகர் (ஸ்ரீகாந்த் என்று நினைவு) பேச வந்திருந்தார். அவரைக்கூட கலாட்டா பண்ணிவிட்டார்கள். நம் நிகழ்ச்சி ரகளையாக நடந்தது...!

      நீக்கு
  3. கவியரசின் முத்தான வரிகளை முத்தாய்ப்பாய் கூறி சொன்ன தீர்ப்பு அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன எளிமையான வரிகள், அதில்தான் என்ன வலிமையான கருத்து அய்யா... என்னையறியாமலே அந்த வரிகள் தான் வந்து விழுந்தன... நம் காலங்களில் அவன் வசந்தம்!

      நீக்கு
  4. வணக்கம் ஐயா
    கிருத்திகாவின் கவிதையில் மூழ்கடித்து விட்டீர்கள். திறமைகள் எங்கு இருப்பினும் வயது வித்தியாசம் காட்டாமல் தட்டிக் கொடுப்பதில் உங்கள் கைகள் தான் முதல் வரிசையில் இருக்கும் என்பதை புதுக்கோட்டையைச் சார்ந்த நண்பர்கள் அறிவார்கள். அழகான பட்டிமன்றத் தீர்ப்பும் கவியும் மனம் கவர்ந்தது. கிருத்திகாவிற்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு தங்களுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மாணவரில் ஒருவன் எடடாம் வகுப்புப் படிக்கும்போதே என்வீட்டிற்கு வந்து, கூட்டங்களுக்கு வந்து, பின் கூட்டங்களை நடத்தப் பயிற்சி எடுத்து இப்போது பெரிய அளவில் தினமலரை வைத்து, “ஜாலியாகப் படிக்கலாம் ஈசியாக ஜெயிக்கலாம்” என்று லட்சக்கணக்கில் வரவுசெலவு பார்த்து பெரிய பெரிய நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.. அவர் பெயர் கிருஷ்ண.வரதராஜன். நமக்கு வயசு வித்தியாசம் எப்பவுமே கிடையாதுங்க அய்யா... இப்பவும் எனக்கு 15வயது முதல் 85வயது வரை நண்பர்கள் உண்டு. உடம்பு வயது வேறு, அறிவு வயது வேறு என்று நம்புகிறவன் நான். சரிதானே நண்பா?

      நீக்கு
  5. கிருத்திகாவின் கவிதைகள் அருமை... வாழ்த்துக்கள்...!
    அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே.. எப்படி இப்புடி ஒரு பேர தேர்ந்தீங்க அய்யா? (சந்திரபாபு பாடல் மாடல்?)

      நீக்கு
  6. மிக நுட்பமான அலசல்

    ஆண்குரல்,
    கிழவியின் புலம்பல்
    இருபதின் குறும்பு
    என நீங்கள் சுவையை எடுத்து தர
    சுவைக்க இனிக்கிறது அண்ணா

    நல்ல கவிஞர் ஒருவரை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்
    புலவருக்கும் வாழ்த்துக்கள்... ஔவை போல் புகழ் பெற

    பதிலளிநீக்கு
  7. தீர்ப்பு அருமை ஐயா! கிருத்திகாவின் கவிதைகள்: அருமை! பாராட்டுகள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. i still remember student krithika. I have mentioned her above poem in surya@nadpumandalam.com pages. my best wishes to her.

    பதிலளிநீக்கு