எதுகை மோனையை விரும்பாத வள்ளுவர்!!!



ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பில் தலைப்புக்கேற்பக் கவிதை எழுதுதல், பாதிச் சிறுகதையில் மீதி எழுதி முடித்தல் எனும் படைப்பிலக்கியத்திற்கு 5மதிப்பெண் உண்டு. இது “மாணவரிடையே படைப்புணர்வை வளர்க்க வேண்டும்“ எனும் பல்லாண்டுக் காலக் கல்விக் கோரிக்கை. சமர்சீர்க் கல்வித்திட்டப் பாடநூல் தந்திருக்கும் வாய்ப்பு.
   நான் நடத்திவரும் பத்தாம் வகுப்பில், (பல ஆண்டுகளாக நான் நடத்திவரும் கவிதை வகுப்புகளை நினைவில்கொண்டு) இந்த வகுப்பை மாணவர்க்காக நடத்த முயற்சியெடுத்தேன். அவர்கள் நிலையில் டி.ஆர்.போல “இந்தியாவின் தலைநகரம் டில்லி, செவுத்துல ஓடுறது பல்லி, பசங்க வெளையாடுறது கில்லி, செத்தா வைக்கிறது கொள்ளி, அ டண்டணக்கா அ டணக்குணக்காஎன்பதுதான் கவிதை என்னும் கருத்து ஆழமாகப் பதிந்திருப்பதை அப்போது உணர்ந்தேன்.
       எதுகை மோனை இயல்பாய் வந்தால் அழகுதான். அதற்காக வலிந்து எதுகை மோனை இயைபு(டி.ஆர்.பாணி)வந்தால்தான் கவிதை என்றில்லை என்றால் அவர்கள் என்கருத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை.என்மீதுள்ள மரியாதைக்காக (?) மௌனமாக இருந்தனர் போல. இதை அவர்களைக் கவிதை எழுதச் சொன்னபோதுதான் நான் புரிந்துகொண்டேன்.
       எழுதிய கவிதைகள் அனேகமாக எல்லாமே இயைபு (டில்லி,கொள்ளி,பல்லி அல்லது பள்ளி) என்பதாகவே இருந்தன. இதை –அதாவது எதுகை மோனைதான் கவிதை என்பதில்லை என்பதை- அவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது என யோசித்தபோது வள்ளுவர் கைகொடுத்தார்.
       அப்புறம் வகுப்பில் நம்பிக்கையோடு பேசத்தொடங்கினேன்.
       “அவரவர் கண்ணும் மூக்கும் வாயும் அமைந்திருப்பதெல்லாம் தனித்தனி அழகுதான். நம்மல நாமே ரசிச்சு ரசிச்சு கண்ணாடியில பாக்கும்போதெல்லாம் புதுசாத் தெரியுதுல்ல? ஒரே வண்ணத்துல எல்லாப் பூக்களும் இருந்தா பாக்க நல்லாவா இருக்கும்? ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வண்ணம் வடிவமா இருக்கும்போதுதானே நாம ரசிச்சிப் பாக்குறோம்? அது மாதிரித்தான், கருத்துக்கூட ஒன்னா இருக்கலாம், சொல்ற விதத்துல அழகு சேர்க்கலாமில்ல?  அன்பைப் பத்தியும் அழகைப் பத்தியும் பாடாத கவிஞனில்ல.இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேல அதைப் பாடும்போதும், இப்பவும் எப்படிப் புதுசா சொல்ல முடியுது? சொல்ற கோணம்...!
எதுகை மோனைக்காக தவம் கிடக்கக் கூடாது. அதுவா அமைஞ்சா நல்லதுன்னு விட்றணும். இன்னும் சொல்லப் போனா, நல்லா இருக்குற நம்ம முகத்துலயே பவுடர் போடத் தானே செய்றோம்? அதையே திட்டுத்திட்டா அப்பிக்கிட்டா திரியிறோம்? இல்ல சினிமாக்காரி மாதிரி லிப்ஸ்டிக்க பூசிக்கிட்டுத் திரியிறமா? அளவா மேக்கப் போட்டுக்கிட்டா அது அழகுதான? இல்லாட்டி அதுவே கண்றாவியா ஆயிடாது? அதுமாதிரித்தான் கவிதையிலயும்...
மாணவரிடையே பலத்த மௌனம். ஏதோ அவுங்களுக்குப் புரிஞ்சமாதிரி சொல்லிட்டதா நான் நினைச்சுக்கிட்டேன். பிறகு அவர்கள் எழுதிய கவிதைகளில் எதுகை மோனைகளைத் தூக்கலாக் காணோம்! ஆனாலும் முன்பு கவிதை எழுதிய பலர் இப்போது ஏனோ தயக்கம் காட்டியதாகத் தெரிந்தது.  மீண்டும் எனது உரையை விடாமல் தொடர்ந்தேன்...
“எதுகை மோனையோ இலக்கணமோ இருந்தால் மட்டும் அது கவிதையாகிவிடாது. நல்ல கற்பனையும், சிறந்த சிந்தனையும் இருந்தால் மட்டுமே கவிதை நிற்கும் என்ற நான், வள்ளுவரை எடுத்துக் கொண்டேன். “வள்ளுவரை விடவா நாம் எழுதிவிடப் போகிறோம்? உலகில் நமக்குத் தெரியாத நூற்றுக்கணக்கான மொழிகளில் வள்ளுவரின் திருக்குறள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. ஆனால் அவரோ “தமிழ்“என்னும் சொல்லைக்கூடத் தனது திருக்குறளில் எழுதவில்லை. நாம் தமிழ்வாழ்த்துப் பாடுறோமே தவிர தமிழை வளர்க்கல! சரி அவர் வழியிலயே போவோம்... திருக்குறளில் எதுகை மோனை இல்லாத குறள் ஏதாவது சொல்லுங்க பாப்போம் என்றவுடன், “பெரும்பாலான திருக்குறள்ல இருக்கே அய்யா“ என்னும் கருத்து வந்தது. அதிலும் மாணவிகள் முதல்குறள் உட்படச் சில குறள்களைச் சொன்னார்கள்.
நானும் விடவில்லை.
“குறளில் சரியான எதுகை மோனை வரக்கூடிய இடத்தில் கூட வள்ளுவர் அதைப் பெரிதாக நினைக்காமல் எழுதிய குறள் ஒன்று சொல்லுங்கள்“ என்றவுடன் மீண்டும் மௌனம். நானே தொடர்ந்தேன்...
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
நாவினால் சுட்ட வடு --என்னும் குறளையே,
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
வாயினால் சுட்ட வடு”  ---என்று  எழுதினால் 
எதுகை-மோனை (அடியெதுகை, சீர்மோனை) சரியாகத் தானே வருகிறது? 

அதாவது...
தீயினால் - நாவினால் என்பதைவிட,
தீயினால் - வாயினால் என்பது நல்லாத்தானே இருக்கு? அதே போல,
நாவினால் சுட்ட வடு என்பதை விட
வாயினால் சுட்ட வடு என்பதில் எதுகை,மோனை இரண்டும் உள்ளதே? 

பிறகு ஏன் வள்ளுவர் எழுதவில்லை? 

அங்குதான், நம்ம காலத்துக்குப் பிறகு இதுபோல பிற்காலத்துப் பிள்ளைகள் கவிதை எழுதிப் பாக்கும்போது, எதுகை மோனைக்காக அலையாதீங்கப்பா... அதைவிடக் கவிதை, பொருள்தான் முக்கியம் னு புரிஞ்சிக்கட்டும்னு சொல்லாமச் சொல்லிட்டுப் போயிருக்காரு போலத் தெரியுதுல்ல..? என்று சொல்லிவிட்டு எல்லார் முகத்தையும் பார்த்தபோது முன்பு இல்லாத தெளிவு இப்ப இருந்தது போலத் தெரிந்தது...

இதுபோலவே தக்கார் தகவிலர் என்பது அவரவர் மக்களால் காணப் படும் என்று பொருள் சொல்லப்படும் குறளில் அவர் எச்சத்தால் காணப்படும் என்று எழுதியிருப்பதும்...
முன்னதில் எதுகை மோனை இருந்தாலும், அதைவிடவும் பின்னதில் பொருள்ஆழம் சற்றுக் கூடுதலாக இருப்பது உண்மைதானே? ஆங்... அதுதான் வள்ளுவர்! வள்ளுவர்தான்! அவர் தெய்வப் புலவர் இல்ல... மனித மகா மேதை! என்ன நாஞ்சொல்றது சரிதானுங்களா?
       
    ஆமா... இதைப் படிக்கிற நீங்க என்ன நினைகிறீங்க?

12 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    பதிவை மிக ஆழமாக சிந்தித்து எழுதியுள்ளிர்கள் முதலில் வாழ்த்துக்கள்.

    எதுகை -மோனை அமையும் போதுதான் ஒரு கவிதை எழுச்சி வடிவம் பெறுகிறது....இது என்னுடைய கருத்து ஐயா.... பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ஆஹா...

    மாணவர்களுக்கு அழகான விளக்கம்...
    நாங்களும் அறிந்து கொண்டோம் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. நல்ல கற்பனையும், சிறந்த சிந்தனையும் இருந்தால் மட்டுமே கவிதை நிற்கும்”//
    அப்படிங்களா ஆசிரியரே .நான் எழுதுவதைக்கூட சிலபேர் குறைசொல்லுவதால் சில நேரம் வருந்தியதுண்டு இப்போது நான் மகிழ்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. "பொருள்தான் முக்கியம்" மட்டுமா... இன்னும் எவ்வளவோ...! கொடுத்த வைத்த மாணவர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. தாங்கள் சொல்வது உண்மைதான் ஐயா, அலங்காலம் முக்கியமில்லை, சொல்ல வந்த கருத்துதான் முக்கியம், அலங்கால வார்த்தைகளில் சிக்குண்டால் கருத்து காணாமல் போகும் அபாயம் இருக்கின்றது ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
  6. ஐயாவிற்கு வணக்கம்
    தாங்கள் கூறிய கருத்து முற்றிலும் உண்மை. நீங்கள் கூறியது எனக்கு சொல்லியது போலவே இருந்தது ஏனெனில் தங்கள் முன் நானும் மாணவன் தான். அலங்காரச்சொல்லை விட கவிதைக்கு கருத்தாளம் தான் முக்கியம். எதுகை, மோனை கூடுதல் சுவை அளிக்கும் இருப்பினும் அதிலேயே கவனம் செலுத்துவதை விட கருத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனும் தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  7. உண்மை.கவிதை, உணர்வு கடத்தலே. பொருளே முக்கியமென நக்கீரர் கூற்றுள்ளதே.தருமி நாடகத்தில்.நன்றி

    பதிலளிநீக்கு
  8. நாமும் ஒரு ரெண்டு கவிதை அப்படி முயன்று பார்த்தோமே ?அண்ணன் நம்மை கொட்டுரரோ னு நெனச்சேன் !!!!!!!!!
    சும்மா அண்ணா எங்க பிள்ளைகள் கூட இப்படி கவிதை எழுதி கொல்றாங்க >ப்பா தாங்க முடியல

    பதிலளிநீக்கு
  9. இனிய வணக்கம் ஐயா...
    அழகான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்..

    உங்கள் விளக்கங்களுக்கு நான் உடன்படுகிறேன்.

    எதுகையும் மோனையும் அணிகலன்கள் போல...
    அணிகலன் இல்லாத மனித அழகில்லை என்றில்லை
    அணிகலன்கள் அழகுக்கு மேலும் அழகு கூட்டும் அவ்வளவே..
    அதுபோலவே எதுகையும் மோனையும்..
    இயல்பாக அமைந்தால் அருமை..
    இல்லையேல் அழகில்லை என்றில்லை...

    எப்படி இலக்கணங்களை மீறி தற்காலக் கவிதைகள்
    காலத்தை கடந்து நிற்கும் அளவுக்கு இருக்கின்றனவோ
    அதுபோலவே எதுகை மோனையற்ற கவிதைகளும்
    காலம் கடந்து நிற்கும்..

    சிறந்த படைப்புகள் என்பதே நமது எண்ணத்தில் இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. கவிதைக்கு எதுகை, மோனை
    அழகு தரும்
    பொருள் சிறந்த கவிதை
    சுவை தரும்
    நல்லெண்ணம் கொண்ட கவிதை
    விருப்பைத் தரும்
    இதுவே என் கருத்து!

    பதிலளிநீக்கு
  11. ethughai monai patriy unghal vilakkam mighaum kachchitha manadu

    பதிலளிநீக்கு
  12. அருமை ஐயா! மிக தெளிவாக சொல்லி விட்டீர்கள். எதுகை மோனை மட்டுமே கவிதையாகி விடாது . இப்படி ஒரு ஆசிரியர் இருந்தால் நிறையக் கவிஞர்கள் கிடைப்பார்கள். இளைய தலை முறையினருக்கு தமிழார்வம் ஏற்படுத்த நீங்கள் செய்யும் முயற்சிகள் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு