நீயா-நானா நிகழ்ச்சியில் கோபிநாத்தும் பெண்ணியவாதிகளும்!


20-10-2013 ஞாயிறு இரவு விஜய் தொலைக்காட்சியில் “பெண்ணியவாதிகளும், பெண்ணியவாதம் வேண்டாம் என்னும் –இளம்-பெண்களும்பங்குபெற்ற விவாதம் வழக்கம்போலவே சூடுபறக்கவும் சுவையாகவும்தான் இருந்தது.



முன்னொருமுறை, இடஒதுக்கீட்டில் பயன்பெற்றுப் படித்துவந்த மாணவன் ஒருவன், “நான் கல்லூரிக் கட்டணத்தைக் குறைச்சுக் கட்டுறேன். ஆனா... என்கூட படிக்கிறவன் அதிகமாக் கட்டுறது எனக்குக் கஷ்டமா இருக்குன்னு சொன்னபோது என்ன உணர்வு வந்ததோ அதே உணர்வைத்தான் இந்த இளம்பெண்கள் தம் இளைய வயதுக்கே உரிய -கண்களை உருட்டி, கைகளை ஆட்டிஆட்டிப்பேசும்- உடல்மொழியோடும் படபடப்போடும் பேசிய பேச்சு ஏற்படுத்தியது.
   பிரபல எழுத்தாளர்களாகவும் பெண்ணியவாதிகளாகவும் அறியப்பட்டிருக்கும் ஓவியா, புதியமாதவி, குட்டிரேவதி, சல்மா, வெண்ணிலா, கவின்மலர், கவிதாமுரளிதரன் முதலானோருடன் பிரபலமாகாத பெண்ணியத் தோழியர் சிலரும் “இளம்பெண்களின் மனம் புண்படாதவாறு பேச வேண்டுமே, எதார்த்த நிலையைப் புரியவைக்க வேண்டுமே என்று பலபாடு பட்டது தெரிந்தது.
  முதலில் சமாதானமாக நிதானமாகப் பேசிப்பார்த்த குட்டிரேவதி பிறகு நிலைமையை மீறி கடுப்பாகிவிட்டார்! கோபிநாத் அவ்வப்போது தனக்கே உரிய பாணியில் மாறி மாறி உசுப்பேத்தி உசுப்பேத்தி  (வாயப் புடுங்கி) பேசவச்சது நன்றாகவே தெரிந்தது .அதற்குத் தேவையும் இருந்தது
       ஓவியாவும், குட்டிரேவதியும் அதிக நேரம் எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு பாணியில் தன் கருத்துகளை வைத்தாலும், புதிய மாதவியும் வெண்ணிலாவும் சொன்ன சில அடிப்படையான பெண்ணிய வாதங்கள் எதார்த்தமாகவும் முக்கியத்துவம் மிக்கவையாகவம் தோன்றின. 
    ஆனாலும் விவாதம் கணவன், குழந்தை, குடும்பம் என உள்முகப் பார்வையாகவே இருந்த்தைத் தவிர்த்து சமூகத்தில் பெண்களைப் பற்றிய பார்வை, பெண்களுக்கான சமூகஇடம் என்று கடைசிவரை போகவே இல்லை. பாய்பிரண்டு, குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளிப்போடும் உரிமை, காதலில் சாதி பற்றி இருந்த அளவுக்கு சமூகத்தில் பெண்களுக்கான பஙகு அதற்கு இந்த இளம்பெண்களும் ஆற்றவேண்டிய பங்கு பற்றிப் பேசப்படவில்லையே ஏன்?!
       ஓரளவுபடித்த, வசதியான இளம்பெண்களிடம் “நீங்கள் இந்த இடத்திற்கு வந்திருப்பதற்கு இவர்களின் பெண்ணியப் போராட்டங்கள்தான் காரணம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்என்று கோபிநாத் சொன்னதும் ஓவியா, வெண்ணிலா இருவரும் பெரியாரை நினைவுபடுத்தியதும் சரியாகவே இருந்த்து. ஔவையார் /vs/  பாரதி பற்றியும் நம் கவிஞர்கள் எளிமையாக ஒப்பிட்டுச் சொல்லியிருக்கலாமோ என்றும் தோன்றியது.
       ஆனாலும்... இந்த வசதியும் படிப்பும் வருவதற்குக் காரணமான இடஒதுக்கீடு பற்றியோ, ஆட்சியதிகாரத்தில் மறுக்கப்படும் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றியோ, இன்னும் “மனமுவந்து“ தரப்படும்(?) வரதட்சணை பற்றியோ, இளம்வயதில் கணவனும், அண்ணன் தம்பியரும் ஒருபெண்ணிடம் காட்டும் பாசம் கடைசிவரை ஒரு ஆணுக்குக் கிடைக்குமளவுக்கு பெண்ணுக்குக் கிடைப்பதில்லையே என்பது பற்றியோ, சட்டரீதியாகப் பெண்களுக்கு இருக்கும் சொத்தில் சமபங்கு என்பது சமூக நடைமுறையில் இலலையே ஏன் என்பது பற்றியோ யாரும் பேசவில்லையே ஏன்?

பெண்ணடிமைக்கும் நம் பண்பாட்டிற்கும், 
பெண்ணடிமைக்கும் நம்இலக்கிய-புராணக் கதை, கவிதைகளுக்கும்,
பெண்ணடிமைக்கும் நம் சமூக (சாதி) நடைமுறைகளுக்கும்,
பெண்ணடிமைக்கும் நம் பொருளாதார-அரசியலுக்கும் 
--- என நீளும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய கண்ணிகளின் தொடர்ச்சியாகவே நமது கல்வியும், வேலைவாய்ப்பும், “பெண்ணழகு“, மற்றும் கற்பு பற்றிய பார்வையும் கூட இருப்பதைச் சொல்வார்கள் என்றும்,  பத்தினி கன்னி பரத்தை விதவை எனும் இதுபோலும் பற்பல தமிழ்ச் சொற்களுக்கு ஆண்பால்சொல் இல்லையே ஏன்? பஞ்சாயத்துத் தலைவராக பெண்கள் இருக்கும் பெரும்பாலான இடங்களில்  அவர்களது கணவன்மார்களே ஆதிக்கம் செலுத்துகிறார்களே ஏன்?  இந்திய-தமிழ்நாட்டுக் குடும்பங்களில் மாமியார்-மருமகள் சண்டை வருமளவுக்கு மாமனார்-மருமகன் சண்டை வருவதில்லையே ஏன்?  என்றும் நமது பெண்ணியக் கவிஞர்கள் கேள்வி கேட்டு விவாத்தைக் கிளப்புவார்கள் என்று எதிர்பார்த்துக் கிடந்தேன். ஏமாற்றம் அடைந்தேன்.
       
        “பிதா ரட்ஷதி கௌமாரே,
         பர்த்தா ரட்ஷதி யவ்வனே,
         புத்ரோ ரட்ஷதி வார்தக்யே,
         ந-ஸ்த்ரீ ஸ்வதந்தர்ய மர்கதி”  
என்னும் வடமொழி ஸ்லோகத்தை 1989-91இல் புதுக்கோட்டையில் நடந்த அறிவொளி இயக்க நாடகம்-பாடலுக்காக நான் பின்வருமாறு மொழிபெயர்த்தேன் -  
        ஒலிநாடாக்களில் வந்தது இது-
        “தந்தைக் கடிமை சிறுவயதில்,
        கணவர்க் கடிமை இளவயதில்,
        மகனுக் கடிமை முதுமையிலே
        எந்நாளும் பெண் அடிமைதான்” இதுதானே இன்றும் பெண்களின்  நிலைமை!

“பெண் விடுதலைபெற அவ கையில இருக்குற கரண்டிய புடுங்கிட்டு புத்தகத்தக் குடுங்க” - என்ற தந்தை பெரியாருக்கு இன்னும் இங்கே வேலையிருக்கிறது!

        “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை,
        ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை“ - கந்தர்வன்

  மனைவியை இழந்தவன் கிழவனே ஆனாலும்
        மறுமணம் பண்ணிக்கிட உரிமை உண்டு - இளம்
        மங்கையை மணப்பதுண்டு மண்டை வறண்டு
  கணவனை இழந்தவள் கட்டழகி ஆனாலும்
        கடைசியில் சாகமட்டும் உரிமை உண்டு - இதில்
        கதைகளும் கட்டிவிடும் ஊர் திரண்டு  
                     -- பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரனார்

44 கருத்துகள்:

  1. நான் அந் நிகழ்ச்சியை இன்னம் காணவில்லை, தங்கள் சுட்டிக்காடியுள்ள விரிவடைந்த சமூகத்தில் பெண்களின் பங்கைப் பற்றி அந் நிகழ்ச்சி தொட்டுச் செல்லாமல் போயிருந்தால், நிச்சயம் அது கோபிநாத்தின் தோல்வியே எனலாம், நிகழ்ச்சியை கண்டபின் மிச்சக் கருத்தைத் தர முயல்கின்றேன். நன்றிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொது ஊடகங்களின் பின்னணி அறியாமல், கோபிநாத்தைக் குற்றம் சொல்ல முடியாது. அவர் இதுபோலும் விவாதங்களை நடத்துவதும், உரியவர்களை அழைத்து விவாதிக்க வைப்பதும் பெரிய விஷயம். அவரே பலஇடங்களில் சைடு எடுத்துத் தான் பெண்ணியத்தைக் காப்பாற்றினார். அழைக்கப் பட்ட பெண்ணியத்தில் ஊறிய தோழியர் இன்னும் திட்டமிட்டுப் பேசியிருக்கலாம் என்பதே என் கருத்து. அதனால் தான் பார்த்தவுடன் எழுதிவிட்டேன். நீங்களும் பார்த்துவிட்டுக் கருத்துக் கூறுங்கள் நீலவண்ணன். நன்றி.

      நீக்கு
  2. தங்களுடைய கருத்துக்கள்அனைத்தும் சிந்தனையைத் தூண்டுபவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “எழுதுவது அல்ல எழுந்து செயல்படும்படி எழுப்புவதே எழுத்து“ என்பார் சமூகவியல் ஆய்வறிஞர் மதுரை அருணன். நூறு பூக்கள் மலரட்டும்! எப்படியாவது சமுதாயத் தோட்டம் மணம்வீசத் தொடங்காதா என்றுதான் எழுதிப் பயணிக்கிறோம். நன்றி அய்யா.

      நீக்கு
  3. பதிவைப்பற்றி அல்ல எனது கருது எப்படி இப்படி நடு நிசியிலும் அதிகாலையிலும் பதிவிடுகிறீர்கள் .... உங்கள் உடல்நிலையை பார்த்துக்கொள்வது புதுகையின் தமிழ் வளர்ச்சிக்கு அவசியம்...

    பதிலளிநீக்கு
  4. நானும் பார்த்தேன் ஐயா! ஒரு குறிப்பிட்ட வலையத்துக்குள்தான் சுற்றி வந்தது .தாங்கள் சொன்னது போல இன்னும் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.
    அதற்குள் எழுதி விட்டீர்களே! எப்படி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விடயங்களை எழுதுவோம் எழுதுவோம் என்று நினைத்தும் தள்ளிக்கொண்டே போகும். சில விடயங்கள் நம்மை வேறுவேலை பார்க்க விடாமல் பாடாய்ப் படுத்தும். அப்படியான நேரங்களில் வேறுவேலை பார்க்கவோ தூங்கவோ கூட முடியாது இல்லயா? அதில் ஒன்றுதான் இது. கஸ்தூரீ உங்களுக்கும் இதுதான் பதில்.கருத்துக்கு நன்றி தி.ந.மு.அய்யா

      நீக்கு
    2. நானும் அனுபவித்திருக்கிறேன்...
      பின்னர் அப்படி எழுதியது தான் நிசாதகன் என்ற ராட்சசன் ....
      உங்களுக்கும் அய்யா அருணனுக்கும் நன்றிகள்..

      நீக்கு
  5. இந்த நீயா-நானா நன்றாகவே இருந்தது... தங்களின் அலசலும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  6. சிந்தனையத் தூண்டும் கருத்துக்கள் அய்யா. பெண்களின் மீதான வன்கொடுமைகளும், ஆணாதிக்கமும் என்று ஒழிகிறதோ அன்று தான் சுதந்திரம் கிடைத்ததாகக் கருதப்படும். இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு அசாத்திய துணிச்சல் இருப்பதை காண முடிகிறது. அவர்கள் பெண் இனம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும். அப்போது உண்மை புரியும். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்ணுரிமையை பெண்கள் மட்டும் போராடியோ, அல்லது பெண்களுக்காக ஆண்கள் மட்டும் போராடியோ பெற்றுவிட முடியாது பாண்டியன், இரட்டைக்குழல் துப்பாக்கியாகி, பெண்ணுரிமைக்கு ஆதரவான ஆண்களுடன் இணைந்து, ஆணாதிக்கத்தில் கிடக்கும் பெண்களையும் எதிர்த்து நடத்த வேண்டியிருக்கும். அது நான் சொன்னதுபோல பல கண்ணிகளின் தொடர்புடையது... இன்னும் பலதொடர்புடையது. ஆனாலும் சாதிக்க முடியாததல்ல! நன்றி.

      நீக்கு
  7. சொத்துரிமை பற்றி முதிய பெண்கள் (பெண்ணியவாதிகள்) பேசினார்கள். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் விளக்கமாக பேச முடியாது. கோடிட்டுதான் காட்ட வேண்டும்.

    வெள்ளைக்காரர்கள் அடைந்த அளவு வெற்றிகள் பெண்களுக்கு நம் நாட்டில் இல்லையே என்ற கேள்வியை எவரும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் பல கசப்பான உண்மைகளை அம்முதிய பெண்கள் எதிர்நோக்க் வேண்டிவரும். சிங்கிள் மதர், தகப்பன் பெயர் தெரியா குழந்தைகள், பணத்திற்காகவும் செக்ஸுக்காகவும் மணம், லிவ் இன் டுகெதர், என்றெல்லாம் நம் சமூகம் எதிர்நோக்கவேண்டி வரும். அதை முதிய பெண்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனப்தை நிகழ்ச்சி காட்டும்.

    ஒன்றைக்கொடுத்து இன்னொன்றைப்பெறவேண்டும். எதை கொடுக்க முதிய பெண்கள் தயார்?

    பெண்களுக்கு இதுவரை கிடைத்த வெற்றிகள் ஆண்களினாலே பெண்ணியவாதிகளாலல்ல என்ற உண்மையும் சொல்லப்படவில்லை. பொதுவாக தாங்கள்தான் காரணம் என்று இவர்கள் சொல்ல அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

    குட்டி ரேவதி, ஒரு கணவனும் மனைவுக்கும் இடையே நடக்கும் நெருங்கிய உறவை பெண்ண்டிமைத்தனமென்றார். அதை முதிய பெண்ணான ஓவியா மறுத்தார். கவனித்தீர்களா?

    முதிய பெண்களிடம் முதிர்ச்சியான அதாவது நன்கு சிந்தித்த எண்ணங்கள் வெளிவரவில்லை. அவர்கள் - இளைய பெண்கள் ஏதோ ஒன்றும் தெரியா பாப்பாக்கள் அவர்களை நாம் சொல்லித் திருத்த வேண்டுமென்ற அஹங்கார நினைப்போடுதான் பேசினார்கள்.

    எல்லோரும் பொதுவாழ்க்கையில் ஈடுபட முடியாது. எனவே வாக்குரிமையைப்பயனபடுத்துகிறோம். பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு அவர்கள் கொள்கைகள் நமக்கு பிடித்திருந்தால் நாம் ஆதரவு நல்குகிறோம். ஆனால் முதிய பெண்கள் கருத்தென்னவென்றால் அனைத்துப்பெண்களுமே தெருவில் இறங்கி போராடவேண்டுமென்பதாகும்.

    இது தனிமனித உரிமைக்கு எதிரானது என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

    -KULASEKARAN

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அப்படி நினைக்கவிலலை குலசேகரன்! முதலில் உங்கள் “முதிய பெண்கள்“ எனும் சொல்லாடலே சரியில்லை. ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெறவேண்டும்... விளக்கமும் நன்றன்று. எடுத்துக் கொள்ளும் பொருளில் மட்டுமல்லாமல் அதை எடுத்துச் சொல்லும் முறையும் சரியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். மதிப்புக்குரிய நம் தோழியரை விமர்சிப்பது வேறு, அவர்களைச் சொற்களால் சுடுவது வேறு. மன்னிக்கவும்.

      நீக்கு
  8. சரியாகச் சொன்னீர்கள்! இன்னும் அலசல் தேவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஆனந்த்! இது ஒரு நீண்ட பயணமல்லவா? தொடரட்டும். தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. super hot excellent analaise thank you

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பேச்சுகள் நம்மைப் பேசவைக்கும். சில கட்டுரைகள் நம்மை எழுதவைக்கும். சில நிகழ்ச்சிகள் நம்மைச் சிந்திக்க வைக்கும். As you think, my criticism is excellent, because of the excellent prog.! Thank U.

      நீக்கு
  10. வண்க்கம், தோழரே!. நானும் அந்த நிகழ்வைப் பார்த்தேன் . உங்கள் விமர்சனம் அருமை. தோழியர் புதிய மாதவி, மதத்திற்கும் , பெண் அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை மிகச்சரியாக பதிவுசெய்தார்.தந்தை பெரியாரின் பங்களிப்பையும் குறிப்பிட்டார். பெண் ஏன் அடிமையானாள்? என்னும் புத்தகம் விவாதித்தில் வரும் என எதிர்பார்த்தேன். வரவில்லை. தோழியர்கள் ஓவியா, குட்டி ரேவதி, சல்மா எனப் பலரும் அருமையாக கருத்துக்களை எடுத்து வைத்தனர்.அந்தப் பக்கம் கண்ணை உருட்டி ,உருட்டி ஒருவர் பேசினார். அதில் பெரும்பகுதி நாடகம் மாதிரியே இருந்தது. மற்றவர்கள் பலரும் மவுனம் காத்தார்கள். கோபி நாத்- இந்த மாதிரியான தலைப்புக்களை எடுத்து ஊடகத்தில் விவாதிப்பதே நல்ல தொடக்கம்.அவரைப் பாராட்ட வேண்டும். அவருக்கும் பல நெருக்கடிகள் இருக்கும் . அத்தனையையும் தாண்டி, மிக நன்றாகவே நிகழ்ச்சியை நடத்துகின்றார். அதுவும் பொறியியல் ஆசிரியர்கள்- மாணவர்கள் நிகழ்ச்சியில் பெண்ணியம் என்றால் என்ன என்று கேட்டு, அறிவுரைகளாக வழங்கிக்கொண்டிருந்த அந்த ஆசிரியர் முழித்த முழியை ஒளிபரப்பினாரே, அருமை. உடனடியாக கருத்தைப் பதிவு செய்து, விவாதத்தை இன்னும் தொடர்கின்ற தங்களுக்கும் வாழ்த்துக்கள் தோழரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் “தோழியர் புதிய மாதவி, மதத்திற்கும் , பெண் அடிமைத் தனத்திற்கும் உள்ள தொடர்பை மிகச்சரியாக பதிவு செய்தார்.தந்தை பெரியாரின் பங்களிப்பையும் குறிப்பிட்டார்” ஆமாம். அதை நான் இன்னும் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். உங்கள் கருத்துகள் எனக்கு 100விழுக்காடு ஏற்புடையது தோழரே! இணைந்த பயணத்தில் தொடர்ந்து செல்வோம். படித்துப் பதிவிட்டமைக்கும் நன்றி. வணக்கம்

      நீக்கு
  11. வணக்கம்.
    சரியான பார்வையில் உங்கள் விமர்சனம் இருந்தது.உண்மை. ஆனால் பெண்ணியவாதிகள் என்றாலே ஆணுக்கு எதிரிகள் என்கிற எண்ணம் தான் இரு பாலரிடமும் உள்ளது.கோபிநாத் பெண்ணியவாதிகள் என குறிப்பிட்டது கூட அங்கு இருந்தவர்களை மட்டுமல்ல.இந்தியாவில் பெண்ணியம் முதலில் தோன்றியது ஆண்களால் தான் என்பது மறுக்க இயலாத உண்மை.பெண் தன் திறமை ,தன் சுயம்,தெளிவான சிந்தனை,முடிவெடுக்கும் திறமை ,இது பற்றிய கருத்து தெளிவின்மை இன்னும் பெண்களிடம் உண்டாக்கவில்லை நமது கல்விமுறை.பெண் வார்க்கப்படுபவளாகவே இன்றும் உள்ளாள்.இன்றும் தான் ஆணுக்கு சுமையாக இருக்கிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை.தன் பெண்குழந்தைகளையும் சுயமாக சிந்திக்கும் படிவளர்ப்பதில்லைசமூகமும் இதற்கு காரணியாக உள்ளது.அடிப்படையில் புரையோடியுள்ள விசயம்இது .மாற்றம் ஓரளவு மட்டுமே வந்துள்ளது. இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்.தன் மகளுக்கு தரும் உரிமையை மனைவிக்கு தர ஆண்களால் முடிவதில்லை. எதுவாயிருப்பினும் இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒளிப்பரப்பிய விஜய் டி.வி.மற்றும் கோபிநாத் ஆகியோருக்கு நன்றியை இந்த நேரத்தில் கூறிக்கொள்கிறேன்.உங்களுக்கும் எனது நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம். “பெண்ணியவாதிகள் என்றாலே ஆணுக்கு எதிரிகள் என்கிற எண்ணம் தான் இரு பாலரிடமும் உள்ளது“ இது சரியான கருத்தாகப் படவிலலை. அது பெண்ணியத்தைப் புரிந்துகொள்ள முயற்சிகூடச் செய்யாதவர்களின் அவசர முடிவு என்றே நான் நினைக்கிறேன். அதோடு, “இந்தியாவில் பெண்ணியம் முதலில் தோன்றியது ஆண்களால் தான் என்பது மறுக்க இயலாத உண்மை“ என்பதில் என்ன பெருமை இருக்கிறது? இந்திய விடுதலைக்குப் போராடிய(?) காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தவர் ஆலன் ஆக்டேவியன் ஃக்யும் என்னும் ஆங்கிலேயர்தான். தோற்றமென்னவோ ஆங்கில ஆட்சிக்குத் துணை செய்யத்தான்! பின்னால் அதுவே வினை செய்யும் என்று அவருக்குத் தெரியுமா என்ன? உரிமை என்பதை அவரவர் (மற்றவர் உதவியும் பெற்று) தானே வென்றெடுக்க வேண்டுமேயன்றி யாரும் வாங்கித் தருவதல்ல அல்லவா? எனினும் ஆழ்ந்த சிந்தனையின்பாற்பட்ட தங்கள் கருத்துகளுக்குப் பாராட்டும் நன்றியும். தொடர்வோம்!

      நீக்கு
  12. அடடா... அருமையான, இன்றையத் தேவைக்கான விவாத நிகழ்வினை உடல் நலக்குறைவு காரணமாகக் காணத் தவறி விட்டேன். ஆனால் தங்களின் அறிவுப்புர்வமான அலசலைப் பார்க்கும்போது இன்னும் பல பெரியார்கள் பெண்விடுதலை, பெண்சமத்துவம் பற்றிப் பேசப் பிறக்க வேணடும் போல் எண்ணத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  13. ஏன் பாவலரே? உங்களை நான் இன்றைய புதுக்கோட்டையின் பெரியாராகத்தான் நினைத்திருக்கிறேன். தாடிவைத்தால்தான் பெரியாரா? உங்களின் வயதை மீறிய உழைப்பும், பகுத்தறிவுத் தமிழ்ப் பாதையிலான உங்களின் விடாப்பிடியான கடும் பயணமும்... நான் இதைக்கூறும்போது மிகையாகப்படவிலலை. நாம் சரியாக இருந்தால் பெரியார் நம்முடன் இருக்கிறார் என்று பொருள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்முடனிருப்பது பெரிதல்ல..நாம் உயர்வடைய நினைக்கும் பெண்கள் எண்ணங்களில் பெரியார் நீக்கமற நிறைந்தால் எல்லாம் சமப்படும்.

      நீக்கு
  14. திருகோபிநாத்தின் “பெண்ணியவாதிகளும், பெண்ணியவாதம் வேண்டாம் என்னும் –இளம்-பெண்களும்” இந்த விவாதத்தை உங்கள் கண்ணாடியின் வழி எங்களையும் பார்க்கவைத்த விதம் அருமை .அவர்கள் தொட்டதும் ,விட்டதும் என்ற முறையில் விவரிக்கும் முறையும் எதிர்பார்ப்பும்,இப்படித்தான் ஒரு விமர்சனம்இருக்கவேண்டும் ஏற்பும் எதிர்பார்ப்பும் என்ற அணுகுமுறை உங்களுக்குத்தான் வரும் .பாவலரை நீங்கள் சுட்டிய விதம் அவரின் செயல்களுக்கானஉண்மைப்பராட்டு .நெகிழ்ந்துபோனேன் .
    சுந்தரர்.மு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா பொன்.க அவர்களின் மீது இந்தஅளவிற்கு (என்னைவிடவும்) அன்பு வைத்துள்ளவர் - எனக்கு முகம் காட்டா அனாமதேயர்- யார் என்று தெரியவில்லையே?

      நீக்கு
  15. பாவலர் பொன்.க.அவர்கள் பல கலைத் திறன்களுடன் சமூக உணர்வும் மிக்க அரிய மனிதர். அவரது வழிகளைப் பின்பற்றினாலே போதும், பெரியார் நம்முடன் வருவார். தொடர்வோம். அதுசரி சுந்தரரே நீங்கள் ஏன் அனாமதேயப் பெயரில் உலவுகிறீர்கள்? என்னால் அடையாளம் காண இயலவில்லையே?

    பதிலளிநீக்கு
  16. முத்துநிலவன் அய்யா,

    நான் ஒருப்பின்னூட்டம் இட்டேன் காணோம்,ஏற்புடையது அல்ல எனில் தெரிவிக்கவும், நானும் கருத்து சுதந்திரம் இல்லாத இடங்களில் கருத்து சொல்லி நேர விரயம் செய்துக்கொண்டிருக்க மாட்டேன் ,நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே. எடுத்துக் கொள்ளும் பொருள் மட்டுமல்லாமல் அதை எடுத்துச் சொல்லும் முறையும் சரியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். தங்கள் கருத்து எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் வெளியிடுவேன். அது நேர்மையானதானத் தோன்றினால். எனக்குத் தோன்றவில்லை வெளியிடவிலலை. கருத்துச் சுதந்திரம் என்பதும் கட்டற்றதல்ல. அதற்கும் பொதுவான சில சொல்லப்படாத -மரபுசார்ந்த- கட்டுப்பாடுகள் உண்டல்லவா? நான் கட்டற்ற சுதந்திரத்தை ஏற்பதிலலை. தாங்கள் இதை ஏற்கஇயலாதெனில் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  17. உங்கள் வலைபதிவில் விமர்சனத்தை முழுவதுமாக படித்தபின்பு தான் நிகழ்ச்சியை வலையில் கண்டேன்!!!

    நிகழ்ச்சியை முழுவதும் பார்த்தபின்பு தான் புரிந்தது கோபியும், களப்பணியாளர்களும், இந்த விமர்சனத்தை எழுதத்தூண்டிய உங்கள் மனமும் பட்ட பாடு.....

    பதிலளிநீக்கு
  18. பெண்ணியம் என்பதில் ஆணின் நலமும் இருக்கிறது. இருவருமாக இணைந்து காணவேண்டிய இன்பமான வாழ்வுதான் அது! இதைப் புரிந்து கொண்டால் ஆணும் பெண்ணும் ஒன்னு, அறியார் வாயில் மண்ணு!

    பதிலளிநீக்கு
  19. excellent kavingar nanthalalavin kavithai ninaivukku varukirathu . nee araitha maavu kooda pongukirathey pennay nee innum ponaga villayay ?

    பதிலளிநீக்கு
  20. பெண்ணியம் என்பதில் ஆணின் நலமும் இருக்கிறது. இருவருமாக இணைந்து காணவேண்டிய இன்பமான வாழ்வுதான் அது! இதைப் புரிந்து கொண்டால் ஆணும் பெண்ணும் ஒன்னு, அறியார் வாயில் மண்ணு!இந்த முத்தான கருத்தை ஏற்றிட்டால் பிரச்சனையே இல்லையே.ஆண்பாலுக்குப் பெண்பாலும் பெண்பாலுக்கு ஆண்பாலும் முரண்டு பிடித்துக் கவி கோர்ப்பதுதான் இலக்கியத்தின் நோக்கம் போல் அல்லவா நம்முன் பலர் இருக்கின்றார்கள். உங்கள் கருத்தையொட்டிய சமரசக் கவிதையாளர்களையோ ,இலக்கிய வாதிககளையோ நம் சமூகம் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

    பதிலளிநீக்கு
  21. இந்தக் கருத்தைச் சொல்வதற்கா “அனாமதேய“ப் பெயரில் ஒளிந்துகொண்டிருக்கிறீர்கள்? நல்லவர்கள் வல்லவராக இல்லாததாலும், கயவர்கள் துணிந்து எதையும் செய்வதாலும்வரும் கேடு இது. எல்லாம் அரசியல்-சமூக மாற்றத்தில்தான் சாத்தியம்.

    பதிலளிநீக்கு
  22. நானும் அந்த நீயா? நானா? பார்த்தேன் நண்பரே. அதைப் பார்க்காதவர்களும் புரிந்துகொள்ளும்விதமாக அழகாக எழுத்தாக்கம் செய்துள்ளீர்கள்.நன்று.


    பதிலளிநீக்கு
  23. நன்றி நண்பர் குணசீலன், கெட்டவற்றுக்கே முன்னுரிமை கொடுக்கும் ஊடகங்களுக்கு மத்தியில், நல்லவற்றை நம்மால் முடிந்தவரை பரப்புவதுதானே நம் கடன்? தங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  24. நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்ததை விடவும் தாங்கள் பதிவு செய்த விதம் மூஹாவும் அருமை. அந்த நிகழ்வில் காதல், திருமணம், குடும்பம், சமையல், சாப்பாடு என ஒரு குறுகிய வட்டத்திர்க்குள் தான் விவாதம் இருந்தது. அதையும் தாண்டி பேசப்படாத பெண்ணுரிமைகள் பத்தி தாங்கள் குறிப்பிட்ட விசயங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயமாக இருந்தது. பெண்ணுரிமையை பெற காரணமாக இருந்தது பெண்ணியவாதிகள் அல்ல ஆண்கள் தான் என்கிற ஆதிக்கம் நிறைந்த பதிவிற்கு தாங்கள் அளித்த பதிலும் நிறைவாக உள்ளது. இத்தகைய முதிர்வான சிந்தனைக்கு வணக்கத்துடன் கூடிய பாராட்டுக்கள் தோழரே!!

    பதிலளிநீக்கு
  25. நன்றி தோழர் பெர்லின் கனகராஜ்! தங்களைப் போன்றவர்கள் இதைச் சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்றுதான் நானும் பதில் கொடுத்துக் கொண்டே வருகிறேன். விவாதம் தொடரவேண்டும் என்று விரும்பவில்லை, புரிதலுக்கான முயற்சி தேவையல்லவா?
    இந்த விவாதம் பற்றி, தோழர்கள் இந்திரா,பழனிச்சாமி இருவரின் கருத்தையும் நான் கேட்டதாகச் சொல்லுங்கள். நன்றி தோழரே!

    பதிலளிநீக்கு
  26. நானும் அந்த நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்தேன். நீங்கள் சொல்வது போல விரிவாகப் பல விசயங்களைத் தொடவில்லை, எனினும் ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது என்று நினைக்கிறேன். சமூகத்தில் பெண் பற்றிய எண்ணங்கள், திருமணம் ஆனால் பெண்கள் சந்திக்க வேண்டிய சில விசயங்கள், வேலை பார்த்தாலும் அம்மா, அப்பாவிற்கு பண உதவி செய்யமுடியாமை, பெண்ணைப் பெற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை, உரிமை இவை போன்றெல்லாம் பேசவில்லை..
    உங்கள் ஆழமான பதிவிற்கு நன்றி முத்துநிலவன் அவர்களே.

    பதிலளிநீக்கு