விண்ணப்பித்து வாங்குவதா விருது? - நல்லாசிரியர் விருதுபற்றிய கட்டுரை



தினமணியின்  தலையங்கப்பக்கத்தில் வெளிவந்த  எனது கட்டுரை - நா.மு.
------------------------------------------------------------
(செப்டம்பர் 5 - ஆசிரியர் தின நினைவாக)
------------------------------------------------------------- 
          தமிழக அரசு தரும் நல்லாசிரியர்’ விருது ஒவ்வோராண்டும் செப்டம்பர்-5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த விருது மட்டுமன்றி,  கலைமாமணி   விருது பற்றிய செய்திகளும் வரும்போதெல்லாம் அட இவருக்கா இந்த விருது?’ எனச் சிலர் பெயர்களைப் பார்த்து ஆச்சரியப் படுவதும்சில பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவதும் தொடர்கதையாகிவிட்டது! இதனால்இவ்விருதுகள் வரவர கேலிக்கூத்தாகிவிருது பெற்றவர்க்கும்,-ஏன்விருதுக்குமே கூட- மரியாதையற்ற நிலை உருவாகி வருகிறது! அரசுகள் மாறலாம்கட்சி-அரசியல் மாறலாம்ஆனால் மரபுசார்ந்த சிலமாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு.
                       சொல்லப்போனால்திரைக் கலைஞர்க்கும் ஆசிரியர்க்கும் அரசு விருது தருவதுபோலஎடுத்துக்காட்டான உழவர்களுக்;கும்,பொதுநோக்கில் சேவைபுரியும் அரசு ஊழியர்-மருத்துவர்க்கும்,புதுமைசெய்யும் இளைஞர்க்கும்நல்லவற்றைத் தரும் இதழ் மற்றும் செய்தியாளர்க்கும் நமது அரசு விருது வழங்கி கௌரவம் செய்தால் பல துறைகளிலும் உற்சாக ஊற்றுக் கிளம்பாதா என்ன
                       அரசியல்கடந்துமக்களால் மதிக்கப்படும் சான்றோர்புனிதமான பணிகளில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டோர் ஆகிய பெருமக்களைஅரசு தானே முயன்று தகவல் சேகரித்து,தகுதியானவரை அடையாளம்கண்டுஅழைத்துப்பாராட்டிவிருதுபெறும் அவரது தகுதிகளை அனைவரும் அறியச்சொல்லிஅவரது பணிதொடர வாழ்த்தி பின்னர் விருது தந்து அனுப்ப வேண்டும்.
                          ஆனால் இன்றுள்ள நிலை? ‘நல்லாசிரியரோ, ‘கலைமாமணியோ அவரே தனது தகுதிகளை எடுத்து விளம்பி --அவற்றுக்கான சான்றுகளையும் இணைத்து-- விண்ணப்பித்த பிறகு, ‘சிபாரிசுகளின் அடிப்படையில் தேர்வுசெய்துநூற்றுக் கணக்கானோரை வரிசையாக வரச்சொல்லி இலவச விநியோகம் போல விருது’ கொடுத்து அனுப்புவதில் என்ன கௌரவம் இருக்கிறதுஇதன் பலன்தான் என்ன?
             கடந்த ஆண்டு தமிழே தெரியாத தமன்னாவுக்கும்ஸ்ரேயாவுக்கும் தமிழ்நாடு அரசு கலைமாமணி’ விருது தந்தது நகைப்புக்கு இடமானது. கலைக்கு மொழிகிடையாது எனும் பொத்தாம் பொதுவான விளக்கம் போதாது. மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் தகுதி’ என்றால்,சர்க்கஸ் கோமாளிகளுக்குக் கொடுப்பதுதான் சரியானது! அவர்கள்படும் பாட்டுக்கு அங்கீகாரமாவது கிடைக்கும்!
           சிலர்-பலரின் சிபாரிசுகளால்தகுதியற்றவர்க்கும் வாரிவழங்கப்படும் விருதுகளால்சான்றோர் பலரும் விருதுகளைப் பார்த்து எள்ளி நகைப்பதும் சற்றே தள்ளி நடப்பதும் நடக்கும் தானே
முதலில் ஒரு கேள்வி: எனக்குக் கடன் வேண்டும்உரியமுறையில் திரும்பக் கட்டிவிடுவேன்“ என்று ஆசிரியர் அரசிடம் விண்ணப்பம் செய்யலாம், “எனக்குப் பணிஇடமாறுதல் வேண்டும் இந்தஇடம் கிடைத்தால் நல்லது” என்று அரசிடம் விண்ணப்பிக்கலாம். இவற்றை விட்டு, ‘எனக்கு விருது கொடுங்கள்’ என்று சுயமரியாதை உள்ள யாரும் விண்ணப்பம்’ போடுவார்களா என்னஏன் இது நமது அரசுகளுக்குப் புரிவதில்லைஇப்போதுஇந்த விருதுகளைப் பெற விண்ணப்பம் போடும் பலரும்,அதை எப்படியாவது வாங்கிவிடச் செய்யும் செலவு-உள்ளிட்ட செயல்கள்’ விருதுகளே வெட்கப்படும்படியல்லவா உள்ளன?
          அப்படியானால், “இதுவரை விருதுபெற்ற யாருக்கும் சுயமரியாதை கிடையாதா?” என்றுகேள்வியைத் திருப்பினால்அப்படி எல்லாரையும் சொல்லிவிட முடியாது. பெரும்பாலோர் அப்படி இருந்தாலும்,சுயமரியாரை உள்ள சிலர்தம் மீது அன்பு கொண்டவர்களின் தொந்தரவு தாங்காமல்கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டு விருதுவாங்க மட்டுமே மேடைக்கு வந்ததும் உண்டு! இப்படியான விருதை அவர்கள் பெரிதுபடுத்தாமல் நண்பர்களின் மகிழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. அப்படியானவர்களைச் சந்திக்கும்போது --விருதாளர்களைத் தேர்வுசெய்யும் முறை மற்றும் விருதுவழங்கும்-- முறை சரியல்ல என்றே அவர்களும் மனம் கசந்து சொல்கிறார்கள்.
           இலக்கியத்தில் இன்றும் எல்லாராலும் மதிக்கப்படும் -இந்தியஅரசின் கௌரவம் மிகுந்த இலக்கிய விருதான-- சாகித்திய அகாதெமிவிருதுக்கான தேர்வுக் குழுவில் நான் சில முறை இருந்திருக்கிறேன். அவர்கள் பல படிகளை வைத்திருக்கிறார்கள். முதல்கட்டத் தேர்வின் போதுபத்துப்பேர்களைக் கேட்பார்கள். பரிந்துரைக்கான புத்தகங்களை அனுப்பிவைப்பதோடு, ‘இந்த நூல்கள் தவிரவும்உங்கள் பார்வையில் பட்டவிருதுக்குத் தகுதியான நூல் என்று கருதுவதை நீங்களே வாங்கிக்கொண்டுஅந்த நூலின் தகுதிகளை எங்களுக்குத் தெரிவியுங்கள் அந்த விலையை நாங்கள் தந்துவிடுவோம்’ என்றும் நடுவர்களுக்குத் தெரிவிக்கப்படும். அறிவிக்கப்படும் வரை எழுத்தாளருக்குத் தெரியாமலே இது நடக்கும்! பலகட்டத் தேர்வு செய்தோரை அவர்களுக்குத் தெரிய வழியுமில்லை!
          இதேமுறையில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் என் தலைமையி லான தேர்வுக்குழு, 1997ஆம் ஆண்டின் சிறந்தநாவலாக சாய்வு நாற்காலி’ நாவலைத் தேர்வுசெய்தது. மதுரை - திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட விழாவில் நானே என் கையால் அந்த விருதை எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவர்களுக்கு வழங்கியபோது விருதுபெற்றவரைப் போலவே விருது தந்தவர்களும் மகிழ்ந்தோம். ஆதன்பின்னரே சாகித்திய அகாதெமி விருதும் அதே நாவலுக்காகக் கிடைத்ததை மதிப்பிற்குரிய படைப்பாளியான அவரே கூறி மகிழ்ந்தார்!
          இதேபோல 1993இல் வெளிவந்த எனது புதிய மரபுகள்’ கவிதை நூலுக்கு அந்த ஆண்டின் சிறந்த கவிதைத்தொகுப்புக்கான விருதை வழங்கிய தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றம் என்னிடம் எந்தவிதமான விண்ணப்பத்தையும் கேட்கவில்லை. அவர்களாகவே அழைத்துத் தந்தார்கள்.
தனி அமைப்புகளே தகுதியானநூல்தகுதியான ஆசிரியர்தகுதியான இலக்கியவாதிமுதலான பல விருதுக்குரிய தகவல்களைத் திரட்டிவிடும்போதுநமது அரசால் திரட்ட முடியாதா என்ன?நிச்சயமாக முடியும்.. தேர்வுக்குழுவினர் கொஞ்சம் விவரமானவர்களாகவும்சிரமம் பாராத வராகவும் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவராகவும்’ இருக்கவேண்டும். அவ்வளவே! விருதுக்குத் தேர்வுசெய்யும் குழுவை முதலில் சரியாகத் தேர்வு செய்துவிட்டால் எல்லாம் சரியாக நடக்க வழியண்டு

இன்னொன்று விருதுபெறுவோரின் வயது சார்ந்தது
           ஆசிரியப் பணியில் ஓய்வுபெற ஒன்றிரண்டு ஆண்டுகளே உள்ள,அல்லது ஓய்வு பெற்றுப் பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கே பெரும்பாலும் நல்லாசிரியர்விருது என்று புகழ்பெற்றுவிட்ட மாநில அரசின் சிறந்த ஆசிரியர்க்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுவிண்ணப்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது. இந்த விருதை நாற்பது வயதுக்கும் முன்னதாகத் தர முடிந்தால்அவரதுநல்லாசிரியப் பணியை’ மீதமுள்ள ஆண்டுகளில் பள்ளிக்குழந்தைகளும் பயன்பெற உதவியிருக்காதா என்ன?  நிச்சயம் அதற்கொரு பாதிப்பு அவர்களிடம் இருக்கும். இதைவிட்டு முதியோர் உதவித்தொகை’ போல விருதுகளை ஓய்வுபெறும் வயதில் தந்து வீட்டுக்கு அனுப்புவதால்அவர்வேண்டுமானால், ‘ஓய்வுபெற்ற-மற்றும்-விருதுபெற்’ என்று சாகும்வரை போட்டுக் கொள்ளலாமே தவிர,விருதுபெற்ற முதியவரால் சமுதாயத்துக்கு -பணிபுரிந்த துறைக்கு- என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?
             பொள்ளாச்சியில் இருந்துகொண்டுகவிஞர் சிற்பிஅவர்கள்மூத்தபடைப்பாளி ஒருவருக்கும் இளைய படைப்பாளி ஒருவருக்குமாக -இரு பிரிவுகளாக- விருதுடன் கூடிய ரொக்கப்பரிசுகளை ஆண்டுதோறும் தந்து கௌரவிப்பது போல தமிழகஅரசும் கலைமாமணிநல்லாசிரியர் விருதுகளை இளையவர்க்குத் தனியாகவும்மூத்தவர்க்குத் தனியாகவும் கூட வழங்கலாமே
             சான்றோரை கௌரவிப்பது தேவை அதைவிடவும் அவரதுபணி விருதுபெற்;ற பின்னரும் சமூகத்திற்கும் பள்ளிக்குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு அரசு யோசிக்கவேண்டாமாஇளைஞர்க்குக் கொடுத்து,ஒருவேளை அவர் தவறு செய்துவிட்டால்...விருதுக்கு அவமரியாதையாகிவிடுமே! என்றால்இப்போது விருதுபெற்றோரில் -விருதுபெற்ற பிறகும்-- தவறுசெய்து தண்டனை பெற்றவர்களும் உண்டே! குற்றப் பட்டியலில் பெயர் இடம்பெற்ற ஒருவருக்கு மத்திய அரசுபத்மஸ்ரீ’ விருது தந்ததும் நடந்ததே!
            அதோடுஅரசு விருதுபெற்றோர் காலமாகும் போதுஅந்தந்தத் துறைசார்நத அரசு உயர் அலுவலர்கள்-- ஏன் மாவட்ட ஆட்சியரே கூட-- வந்துஅஞ்சலி செலுத்திஅரசின் சார்பாக கௌரவிப்பது,அல்லது அரசின் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடுவது விருதுபெற்றவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல விருதுக்கே கௌரவமாக இருக்குமே! இதையும் அரசு யோசிக்கலாமே?
           பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனைத் தொடர்ந்து எஸ்.பி.பால சுப்பிரமணியனும் பத்மஸ்ரீ விருது பெற்றுவிட்டார். சுசிலாம்மா பத்மப+ஷன் விருதே பெற்றுவிட்டார். இவர்களின் தகுதியறிந்து அந்த விருதுகளைத் தந்த மத்தியஅரசுஇவர்களுக்கு முன்னோடியான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஏன் இன்னும் பத்மஸ்ரீ விருதுகூடத் தரவில்லை எனும் கேள்வி எழுவது நியாயம் தானேபாவம், அவர் இந்த விருது வாங்கும்“ தொழில் நுட்பம் தெரியாதவரோ என்னவோ?
            அரசுவிழாக்களில் பாடப்படும் நீராரும் கடலுடுத்த’ எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மட்டுமல்லாமல் பல்லாயிரம் திரைப்பாடல்களுக்கு இசையமைத்துத் தந்த இசைமேதை ஏம்.எஸ்.வி. போலும் எண்ணற்ற மேதைகளும்நல்ல ஆசிரியர்களும் மட்டுமல்ல,விருதுக்கத் தகுதிவாய்ந்த உழவர்களும்;, அரசு ஊழியர்-மருத்துவர்களும்எடுத்துக்காட்டான இளைஞர்களும்இதழாளர் மற்றும் செய்தியாளர்களுமாய்ப் பற்பலர் விளம்பர வெளிச்சமே இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்விருதுகளுக்காக ஏங்கி அல்ல,விருதுகளை அலட்சியப்படுத்தி விட்டு!
           தான் தரும் விருதுகளின் கௌரவத்தைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை!அரசின் கடமையை உரிமையோடு எடுத்துச்சொல்ல வேண்டியது நம் கடமை! 
-------------------------------------
நன்றி : தினமணி – நாளிதழ் - 02-8-2011  
------------------------------------------------------------- 

ஆயிற்று... இதோ 34ஆண்டுகள் உருண்டோடி விட்டன...

என்னால் இயன்றவரை -தமிழாசிரியராகவும் பள்ளியின் துணை முதல்வராகவும் வாங்கும் சம்பளம் அதிகம்தான் என்றாலும்- எனது ஆசிரியப் பணியை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நிறைவாகவே ஆற்றிவருவதாகத்தான் நினைக்கிறேன். இந்தக் கல்வியாண்டின் இறுதியில் முழுநேர எழுத்தாளராகப் போகிறேன்... அதாங்க.. மே-2014-இல் பணி ஓய்வு பெறப் போகிறேன்...

ஆனால் நமது தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும்தான் சங்கப்புலவர்போல -
“பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!“ என்றிருக்கிறார்களே!

என் நண்பர்கள் -குறிப்பாக ஆசிரியர்கள் என்னைச் சந்திக்கும் போது குறிப்பாக செப்டம்பர் முதல்வாரம் என்னைப் பார்க்கும்போதெல்லாம - “உங்களுக்கு அடுத்த வருடம் நல்லாசிரியர் விருது கிடைக்கும் பாருங்க“ என்னும்போது நான் மனசுக்குள் சிரித்துக்கொள்வேன் -- எனக்கு விருது குடுங்க என்று விண்ணப்பித்து வாங்கும் அந்த விருது எனக்கு என் ஆயுள்முழுவதுமே கிடைக்காது எனும்-- ரகசியம் பற்றித் தெரியாதவர்கள் என்று ! எனது 'விண்ணப்பித்து வாங்குவதா விருது?“ எனும் எனது தினமணிக் கட்டுரையே, இப்படியான  ஆசிரியர் தின விளைச்சல்தானே...

ஆனால்.. பாருங்கள்.. 
அரசு தரலன்னா என்ன? 
நாங்க தர்ரோம் -என்று 
என் மாணவர்கள் சொல்வதுபோல ஒரு நிகழ்வு... 
அதைத்தான் இந்த எனது வலையின் நூறாவது பதிவாக இடுகிறேன்...

அட, ஆமாங்க... விஜய் தொலைக்காட்சியில் “ஏழாம்வகுப்பு சி பிரிவு“ அப்படின்னு ஒரு தொடர் வருதுல்ல..? அதுல மாணவர்களுக்கு “என்னைக் கவர்ந்த ஆசிரியர்“ எனும் தலைப்பில் வைத்த போட்டியில் கலந்து கொண்டு, என் மாணவன் - இப்போது என் வகுப்பில் (10-ஈ பிரிவு) படிக்கும் சையது எனும் மாணவன் - என்னைப்பற்றி எழுதிய குறிப்போடு தேர்வுசெய்யப்பட்டிருக்கும் சுட்டிவிகடன் விளம்பரத்தைக் கொண்டுவந்து காட்டினான்.

அதில் அவன் எழுதியிருந்தது தான் என்னை நெகிழ வைத்தது -
எனக்குப் பிடித்த ஆசிரியர் எனும் இடத்தில் என்பெயர். அதற்காக அவன் சொல்லியிருக்கும் காரணம் - “நகைச்சுவையாகப் பாடம் நடத்துவார், உலக விஷயங்களை யெல்லாம் பாடத்தோடு சேர்த்துச் சொல்வார், மாணவர்களின் திறமைகளை அறிந்து ஊக்கப் படுத்துவார், அனைத்து மாணவர்களையும் ஏற்றத்தாழ்வு பாராமல் சமமாக நடத்துவார்..” என்று 
இன்னும் சில தொடர்களையும் எழுதியிருந்தான்...

இதைவிட அரசு தரும் “நல்லாசிரியர்“ விருது பெரிதா என்ன?

இது போதும்பா... 
நாம் விதைத்த விதைகள் வீணாவதில்லை... 
சரியான நிலத்தில் விழுந்தது ஆங்காங்கே வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது...  
நம் உழைப்பு வீணாகிவிட வில்லை என்று மனசின் ஓரத்தில் சிறு கசிவு...  
என் பிள்ளைகள் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்... 
வேறுயாரும் புரிந்துகொண்டால் என்ன? புரியாவிட்டால் என்ன?
நம் கடன் பணிசெய்து கிடப்பதே..
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பி.கு. - 
நான் ஒவ்வோராண்டும் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதப்போகும் என் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று  அவர்கள் வீட்டில் இருக்கும் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரைப் பார்த்துப் பேசி வருவது வழக்கம். 
கடந்தஆண்டு 
நான் சென்றுவந்தது பற்றிய என் கட்டுரையைப் பார்க்க இங்கே சொடுக்கவும் - http://valarumkavithai.blogspot.in/2012/12/blog-post_4.html

அதற்கும் முந்திய ஆண்டு அனுபவம் படிக்க இங்கே சொடுக்கவும் -  http://valarumkavithai.blogspot.in/2012_02_01_archive.html
----------------------------------------------------------------------------------------------------------------------------- 
எனது வலையின் நூறாவது படைப்பின் மறுபதிப்பு -

அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்கவேண்டும்
கல்வி வழியாக 
அனைவருக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கவேண்டும் 
என நினைத்துச் செயல்படும் அனைவருக்கும் 
எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
இன்று ஆசிரியர் தினம்.
 05-09-2013  

18 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா...

    இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்...

    நேரம் இருக்கும் போது சென்று பாருங்கள்...

    அதற்கான இணைப்பு கீழே...

    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_4.html

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மாணவர்கள் போற்றும் ஆசானே ஆசான், அப்புறம் என்ன நீங்க தான் "நல்லாசிரியர்" ,அதுக்கு தனியா பட்டயம் எதுக்கு, வாழ்த்துக்கள்!

    # //அறிவிக்கப்படும் வரை எழுத்தாளருக்குத் தெரியாமலே இது நடக்கும்! பலகட்டத் தேர்வு செய்தோரை அவர்களுக்குத் தெரிய வழியுமில்லை!//

    அய்யா இப்படிலாமா சாகித்ய அகதமி நடக்குது ,நம்பவே முடியலை அவ்வ்!

    அங்கும் பரிந்துரை, அதன் பின்னர் கவனிப்பு என்றே ஓடுது, சும்மா பேருக்கு தேர்வாளர்களே சில நூல்கள் வாங்கி சேர்க்கலாம்னு ஒரு ஆப்ஷன் வச்சிருக்காங்க, அதுக்காக அதன் படியா விருது கொடுக்கிறாங்க?

    முதல் மற்றும் ஒரே நாவல் எழுதிய வெங்கடேசனின் காவற்கோட்டம் எப்படி விருதுக்கு போச்சுனு நீங்களாவது சொல்லுங்களேன் :-))

    போன வருடம் ஒரிய மாநில சாஹித்ய அகதமி விருது(மொழி பெயர்ப்பு) மேல கேஸ் போட்டு பிரச்சனையே ஆச்சு,காரணம் விருப்பப்பட்ட ஆளுக்கு கொடுத்ததே.

    பத்ம சிரி, முதல் நோபல் பரிசு முதல் விண்ணப்பம் பரிந்துரைக்கப்பட்டே தேர்வுக்கு போகுது, பரிந்துரைக்க சம்பந்தப்பட்டவர்களே "முயற்சி" எடுக்கிறாங்க என்பதே நிதர்சனம்!

    பதிலளிநீக்கு
  3. நன்றி திரு குமார் அய்யா. வலைப்பக்கம் போய்ப்பார்த்தேன்.. அடேயப்பா வெகுநாளாக, வெகுசிறப்பாக இயங்கும் தளத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. அங்கும் எனது நன்றியைப் பதிவி்ட்டு தொடர்பர் ஆகவும் பதிந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. அய்யா வவ்வால் அய்யா, எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொன்னேன். பெரியாரிடம் ஒருவர் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்கிறீர்களே, ஒரு வேளை கடவுள் உங்கள் எதிரில் வந்துவிட்டால் என்ன செய்வீர்கள என்று கேட்டாராம் எல்லாரும் ஆகா பெரியார் மாட்டிககொண்டார் என்று மகிழ்ந்தார்களாம். ஆனால் பெரியார் எளிமையாகச் சொன்னாராம் வந்தால உண்டு என்று சொல்கிறேன் வரச்சொல்லுங்கள் என்றாராம். அதுமாதிரி என்னளவில் தெரிந்த உண்மையைத்தான் நான் பேச முடியும்... மற்றபடி பெரும்பாலான விருதுகள் பரிசுகள் பரிந்துரை மற்றும் முயற்சியின் பின்னரே என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை..
    தங்கள் பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  5. அய்யாவிற்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். ஆசிரியர் என்பவர் மாணவர்களின் உளவியல் அறிந்து, அன்றாடம் உலக நடப்புகளைப் படித்து பாடம் கற்பித்து பாடப்பகுதியைத் தாண்டி மாணவர்களை சிந்திக்க வைப்பவராக, அவர்களின் மனதில் மணம் பரப்புவராக இருப்பின் மாணவர்கள் அளிப்பார்கள் ஆயிரம் நல்லாசிரியர் விருதுகள். அப்படிப்பட்ட விருதுகளைத் தாங்கள் தினம் தினம் வாங்கிக் கொண்டேயிருக்கிறீர்கள். அது போதுமே அய்யா. விருது வழங்கும் இடத்தில் அவர்கள் இருப்பதே பொருத்தமாகும். இதைத் தாண்டி வேறு எந்த விருதும் உண்மையான மகிழ்ச்சியை அளிக்குமா என்பது கேள்விக்குறியே. நமது அரசுகள் விருது வழங்கி விளம்பரம் தேடிக் கொள்ளப் பார்க்கிறதே தவிர விருது வழங்குவதின் நோக்கம் மற்றும் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை. தலைவர்கள் மறைந்த பின்பே நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நம் இந்தியத் திருநாட்டின் எழுதப்படாத தலையெழுத்து. பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  6. விருதுக்கே மதிப்பு இல்லாம போச்சுன்னுன்னுதான் சொல்லனும். விருது 100 ரூபாயிலிருந்து ஸ்டார்ட் ஆகிறது. எனக்கு தெரிஞ்ச ஒரு பதிப்பாளர் வருடா வருடம் எதாவது ஒரு தலைப்பில் நூறு கவிஞர்களை எழுத சொல்லி ஆளுக்கு 250 ரூபாய் வாங்கி பாரதி பணி செல்வர், இலக்கிய செம்மல் அப்படி... இப்படி என்று எதாவது ஒரு விருது சான்றிதழ் கொடுத்து விடுவார். எனக்கும் கூட எதோ ஒரு அமைப்பு போனில் உங்களுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கலாமுன்னு இருக்கோம் என்று சொல்லி விழா நன்கொடையாக நீங்க ஐந்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என்றனர். நான் திட்டி போனை வைத்து விட்டேன். இப்படி ஒரு கும்பல் ஐம்பது அறுபது பேரிடம் வசூல் பண்ணி எதோ ஒரு இடத்தில் சொற்ப காசை செலவு பண்ணி எதோ ஒரு பட்டத்தை கொடுத்து விட்டு மீதி காசை அபேஸ் பண்ணி கொள்கிறார்கள். இப்படியும் நிறைய பேர் பிழைப்பு நடத்துறாங்க. இதே போல் பள்ளிகளில் நேதாஜி மன்றம், ஜவஹர் மன்றம் என்று எந்தெந்த ஊரிலிருந்தோ வந்து மாணவர்களிடம் கட்டுரை, கவிதை.. ஓவிய போட்டி வைக்கின்றனர். அதற்கு கலந்து கொள்ள ஒவ்வொரு மாணவரிடமும் 30 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை வசூல். கடைசியில் ஒரு சான்றிதழ் இப்படி ஒவ்வொரு மாவட்டமும் வசூல் வேட்டை. போட்டி நடத்துவதே திறமைக்காகத்தானே இதில் குழந்தைகளிடம் ஏன் வசூலிக்க வேண்டும்? நிறைய பெற்றோர்கள் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். ஆர்வமுள்ள குழந்தைகள் அடம்பிடித்து காசை வாங்கி செல்லும். என் குட்டீஸ் அது போல் நிறைய வசூல் போட்டிகளில் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான சான்றிதழ்கள் வைத்துள்ளது. இதில் எக்கச்சக்கம் பட்டம் வேறு.. போன வாரம் கூட பரத நாட்டியத்திற்காக மதுரையிலிருந்து எதோ ஒரு நிறுவனம் 500 ரூபாயை வாங்கி கொண்டு யுவகலா ஸ்ரீ என்ற விருது சான்றிதழ், பெரிய புகைப்படம் தந்துள்ளது. இதெல்லாம் காமெடியாத்தான் இருக்கு! துண்டு துக்கடாவில் ஆரம்பிச்சு இப்ப விருதுக்கே மதிப்பு இல்லாம போனதால் எந்த பெரிய உயர் விருதுகளும் கூட உண்மைக்கு அணிவிக்க படுதான்னு கேள்விக்குறியாத்தான் இருக்கு! விருது கொடுத்து கௌரவ படுத்த வேண்டிய எத்தனையோ உண்மையான மனிதர்கள் சரித்திரம் வெளியில் வராமயே போயிருக்கு. எங்க மாவட்டத்தில் டாக்டர்.ஜெயராமன் என்ற எம்.பி.பி.எஸ் மருத்துவர் தன் வாழ் நாள் பூரா வெறும் மூன்று ரூபாய்க்கு மட்டும் வாங்கி கொண்டு மருத்துவம் பார்த்தார். தினமும் காலையில் தர்மாஸ்பத்திரிக்கு சென்று இலவசமாக வைத்தியம் பார்ப்பார். அவரால் எத்தனையோ ஏழை எளிய மக்கள் பயன் பெற்றார்கள். 87 வயது வரை தளராமல் பலருக்கு கடவுள் போல் தொண்டாற்றினார். அவர் மறைந்து ஆறு வருடங்கள் இருக்கலாம். அவர் இருக்கும் போதே அவரை பற்றி பத்திரிக்கை ஒன்றில் அவரை பற்றி நான் எழுத டி.வி சானல்கள் அவரை பேட்டி எடுக்க நேரில் வந்து விட்டது. அவரோ இது என் பணி, என்னை தயவு செய்து விளம்பர படுத்த வேண்டாம் என்று புகைப்படம் எடுக்க கூட மறுத்துவிட்டார். என்னையும் செல்லாமாக கடிந்து கொண்டார். இன்று மருத்துவ தொழிலில் நடக்கும் வியாபாரங்களுக்கிடையே அப்படி ஒரு மாபெரும் மனிதரை அடையாள படுத்தி எந்த அரசு விருதும் தேடி வரவில்லை என்பது இன்று வரை எனக்கு ஆதங்கம். விருது உரியவரை அடையாள படுத்தி தேடி வர வேண்டும். விண்ணப்பம் வேண்டாம். மன்னிக்கவும் நீண்டு விட்டது....

    பதிலளிநீக்கு
  7. அண்ணா மெய்சிலிர்க்கிறது!!!!!!!!!

    ஒரு உழவனை போல் விதையிடுளோம்

    நம் மாணவர்கள் வளர்ந்து நிற்கும் போது

    ஒரு தாயை போல் மகிழ்ச்சி கொள்கிறோம்

    அவர்களே நமை உணர்ந்து கொண்டால்

    அதைவிட பெரும் பேறு ஏது?

    விண்ணப்பித்து வாங்குவது பற்றி

    எனக்கும் இருந்த வருத்தத்தை

    மிக சரியாக விளாசி இருக்கிறீர்கள்.

    ஒரு நல்லசிரியர்க்கு இந்த சிறியவளின்

    வாழ்த்துக்கள் ,,,,,,,,,,,,,,மைதிலி கஸ்தூரி ரெங்கன்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் நண்பர்களே... தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

    நன்றி...

    பதிலளிநீக்கு
  9. தம் கருத்தைப் பகிர்ந்துகொண்ட அய்யா திரு பாண்டியன அவர்களுக்கும், என் கவித்தங்கை திருமதி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும், நண்பர் திரு தனபாலன் அவர்களுக்கும் எனது நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பகிர்வுக்கு நன்றி. தங்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  11. பல்வேறு தொல்லைகள் வந்தாலும் நாம் இது போன்ற மாணவர்களுக்காக தான் எல்லாவற்றையும் பொறுத்துப்போக வேண்டி இருக்கிறது. மிக மிக தேவையான நேரத்தில் தேவையானவர்களுக்கு எடுத்துரைக்கும் கட்டுரை. உங்களுடைய சிறப்பே அது தான். நீங்கள் புதுக்கோட்டைக்கு கிடைத்த பொக்கிக்ஷம். உங்களுக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்றுதான் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். என்னைப் போன்றவர்களுக்காகவாவது நீங்கள் விண்ணப்பம் கொடுத்துருக்கலாம். அதனால் என்ன? அந்த் மாணவனைப் போல் உங்களை, உங்கள் பேச்சை,உங்கள் மனிதாபிமானத்தை,நீங்கள் பழகும் விதத்தை ஊக்கப்படுத்துவதை நேசிக்கும் பலரில் ஒருத்தி நான்.வாழ்த்துக்கள் அய்யா.

    பதிலளிநீக்கு
  12. நல்லாசிரியர் விருதுக்கு உண்மையில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. அதற்குரிய படிவத்தை உயர் அலுவலர் நிரப்பி தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பரிந்துரைக்க வேண்டும். இது அந்த ஆசிரியர்க்குக் கூட தெரியக் கூடாது. ஆனால் இவை எதுவும் நடைமுறையில் இல்லை. பரிந்துரைக்கப்படுவதற்கான காரணங்களுக்கு தேவையான ஆதாரங்களை திரட்டு வதற்கு அலுவலர் செலவு செய்வாரா? அதனால் கருத்துருக்கள் விருப்பப் படுபவர்களிடம் இருந்து கேட்டுப் பெறப படுகிறது. 100. 200 பக்கங்களுக்கு மேல் பல்வேறு புகைப்படங்களோடு கருத்துருக்கள் தயாரிக்கப் படுகின்றன. எம்.எல் ஏ. எம். பி கடிதங்களும் இணைக்கப்படுவது உண்டு. இப்படி செய்தும் ஒரு ஃபோன் கால் தேர்வையே மாற்றி அமைத்துவிடும்.

    நீங்கள் சொல்வது போல் மாணவர் வழங்கும் விருதே சிறந்தது
    விரிவான பதிவிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  13. "விண்ணப்பித்து வாங்குவதா விருது?" என்ற தலைப்பில் எல்லோரையும் சிந்திக்க வைத்துவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  14. கட்டுரையைப் படித்துத் தங்கள் கருத்தைப் பதிவு செய்த நண்பர்கள் ஆர்வி சரவணன், செ.சுவாதி, ஜீவலிங்கம் காசிராஜலிங்கம், மற்றும் விரிவாக எழுதியிருக்கும் நண்பர் திரு முரளி ஆகியோர்க்கு எனது நன்றி.

    பதிலளிநீக்கு
  15. முதலில் நல்லாசிரியரான உங்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கம். உங்கள் கவிதைத் தொகுப்பிற்குக் கிடைத்த விருதிற்கு வாழ்த்துகள்!
    விருது வழங்குதல் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான்..நீங்கள் சொல்வது போல முறையுடன் செயல்பட்டு விருது வழங்கினால்தான் அந்த விருதிற்கு மதிப்பு.
    உங்கள் மாணவனிடமிருந்து பெரிய விருது கிடைத்துவிட்டதே..அவன் எழுதிய வரிகள் கண்டு மகிழ்ந்தேன்..உங்களை ஆசிரியராகக் கொண்ட மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்..நல்ல விதைகளை விதைத்துவிட்டீர்கள் ஐயா..பள்ளிப் பணியிலிருந்து ஓய்வு பெற்று முழுநேர எழுத்தாளராகப் போவதற்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்,, :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிம்மா. நான் அலுவலர்களையோ தலைமை ஆசிரியரையோ மையப்படுத்தி என் பணிகளைச் செய்வதில்லை. (சொலலப் போனால், எனது 34வருடப் பட்டதாரி-தமிழாசிரியர் பணிமூப்புக்கு, 15ஆண்டுகளுக்கு முன்பே உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகி இப்போது மாவட்டக் கல்வி அலுவலராக வந்து, முதன்மைக் கல்வி அலுவலர் பணிக்கான பணிமூப்புப் பட்டியலில் சேர்ந்திருக்க வேண்டும் (தமிழகப் பள்ளிக் கல்வித்துறை நடைமுறை தெரிந்தவர்களுக்கு இது புரியும்) ஆனால், நான் மாணவர்களை மட்டுமே விரும்பி இருப்பவன். பாடம் நடத்துவதில் மாணவரோடு பழகுவதில் உள்ள திருப்தி வேறெங்கும் கிடைப்பதில்லை. இனி நீங்கள் சொல்வதுபோல முழுநேரமாக எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் இயங்குவேன்... எனது பல கட்டுரைகளைப் பார்த்துக் கருததிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றிம்மா. உங்களுக்கு என் வணக்கமும், வாழ்த்துகளும்.

      நீக்கு
    2. இப்ப என்ன நீங்க CEO இல்ல என்கிறீர்களா. இந்த ப்லோக்க்கு நீங்க தானே CEO

      நீக்கு