கவிதைப் பயிற்சிமுகாம் - படமும் செய்தியும் - நா.முத்துநிலவன்.

 தொடக்கவுரையின் முன்னுரையில்,
 வந்திருந்த சான்றோரை  வணங்கிவிட்டு
 நான் சொன்னது -

“தென்னை இளங்குருத்தே! தேன்சொரியும் மாந்தருவே!
  வண்ணப்பூஞ் செடியழகே! வான்கோழி நடையழகே!
  சன்னக் குயிலிசையே!  சக்திப்போர்ப் பறைமுழங்கும்
  பண்பாட்டு மையமே! பணிவாக வணங்குகிறேன்”
சரிதானே? பாடவைத்த சூழல் அப்படி!  திண்டுக்கல் சக்தி போர்ப்பறை பண்பாட்டு மையம் இருக்கும் தென்னந்தோப்பு!
அதில் நாள்முழுவதும் வெயில் விழாத ஒரு மாமரத்தின் நிழல் வீழும் காலடிதான் வகுப்பு நிகழ்ந்த இடம்!

தலைவரை முன்மொழிகிறார் ஒருங்கிணைப்பாளரும் தமுஎச திண்டுக்கல் மாவட்டத் தலைவர்களில் ஒருவருமான இரா.சு.மணி... அருகில் நிற்பவர் மாவட்டச் செயலரும் மரபுக் கவிஞருமான பழனி சோ.முத்துமாணிக்கம். பயிற்சிபெற வந்திருப்போர் - திண்டுக்கல் அருகில் உள்ள கலை-அறிவியல்-தொழில்நுட்ப-பொறியியல்-கல்லூரிகளில் B.A., B.B.A., Diploma., & B.E.,  மற்றும் தமிழில் M.A., M.Phil., Ph.D., படித்துவரும் தமிழார்வமும் கவிதைத் தொடர்பும் உடையோர். கல்லூரிக்கு அதிகபட்சம் ஐந்துபேர் வீதம் வந்திருந்த சுமார் 75மாணவ-மாணவியர் மற்றும் தமுஎச தலைவர்கள், உறுப்பினர்கள்.

வானும் அதிர,
மண்ணதிர,
வந்து கேட்டோர் மனமதிர,
தப்பாட்டப் பறைமுழங்கும்
சக்தி குழுவினர்.
“அடிபட
அடிபட
அதிரும் பறை
தலைமுறைக் கோபம்”
கவிஞர்-மித்ரா.
------------------------


 இவர்களின் கால்களில் மிதிபடுவது-

யுகம் யுகமாய் நமைத்தொடரும்
சாதி ஆதிக்கமும்,
ஆணாதிக்கமும் மட்டுமல்ல,
இருப்பவன் -இல்லாதவன் எனும்
ஏற்றத்தாழ்வும்தான்!
சவட்டி மிதியுங்கள்
சகோதரிகாள்!
--------------------------------------------------------------------------------                         மாவட்டத்தலைவர் திரு சிவக்குமார் தலைமையேற்க, மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், பழனிநகராட்சியின் முன்னாள் பெருந்தலைவருமான எழுத்தாளர் கவிஞர் வரத.ராஜமாணிக்கம் (இடது ஓரம்)  வரவேற்புரையாற்ற, “தமிழ்க்கவிதை வரலாறும் வகைப்போக்குகளும்” என உரையாடுபவர்- நா.முத்துநிலவன்                                                                        
முற்பகல் வகுப்பின் முடிவில், 
1.இன்றுபுதிதாய்ப்பிறந்தோம்,
2.கல்பனா சாவ்லாவின் கடைசிநிமிடங்கள்,
3.மருத்துவ மாணவியை பாலியல்வன்கொடுமைசெய்து கொன்றவர்களுக்குத் தூக்கு தண்டனை பற்றிய உங்கள் கருத்தைக் கவிதையாகத் தருக.
4.புதியன விரும்பு 
எனச் சில கவிதைத் தலைப்புகள் 
மற்றும் சூழல்கள் எழுதத் தரப்பட்டன 



மாணவர்கள் எழுதிக்குவித்து 4மணிவரை தந்ததை ஒரு பருந்துப் பார்வை பார்த்துவிட்டு தொகுப்புரை தந்தார் நா.மு. 
அருகில் 
வாழ்த்துரையாற்றி,  பயிற்சியில் கலந்துகொண்டோர்க்குச் சான்றிதழ் தந்த காந்திகிராமப் பல்கலைக்கழகத்  தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் குருவம்மாள். 
நிறைவுரையாற்றிய 
தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலரும் 
கூரிய விமர்சகருமான   
தோழர் கே.வேலாயுதம்(நடுவில்) 
நன்றியுரையாற்றினார் மாவட்டப் பொருளர்
தோழர் ராஜேந்திரன்.
------------------------------------------------- 
இதில் உலகப் புகழ்பெற்ற
 “திண்டுக்கல் சக்தி தப்பாட்டக்குழு”வினர்க்குப் பயிற்சிதந்து, குருகுலம் போல ந்து வழிநடத்தும்
 “சக்தி பண்பாட்டுமைய”த்தின் இயக்குநர் சகோ.சந்திரா அவர்களின் ஈடுபாடும், அந்தச் சகோதரிகளின் 
உழைப்பும் மறக்கமுடியாதது.
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும் கவிஞருமான க.பாலபாரதி அவர்கள் அவசர அழைப்பின் பேரில் சென்னை சென்றுவிட்டதால் கலந்துகொள்ள இயலாமல் போனதற்காக வருந்தி,  அலைபேசியில் தொலைபேசினார்.

தோழர் கே.வேலாயுதம் அவர்களின் நிறைவுரை

முனைவர் குருவம்மாள் அவர்கள் மாணவ-மாணவியர்க்குச் சான்றிதழ் வழங்குகிறார் அருகில் மாவட்டச் செயலரும் கவிஞருமான பழனி சோ.முத்துமாணிக்கம் அவர்கள்.

 தமுஎச மாவட்டச் செயற்குழு உறுப்பினரும் பழனிநகராட்சியின் முன்னாள் பெருந்தலைவருமான எழுத்தாளர் வரத.ராஜமாணிக்கம் அவர்களின் வரவேற்புரை

அதிரவைத்த பறையிசையுடன் பயிற்சிவகுப்பு ஆரம்பம்...


நன்றியுரை மாவட்டப் பொருளர் தோழர் இராஜேந்திரன்

தலைப்புகளிலும், சூழலுக்கேற்பவும் எழுதிய இளைய கவிகளின் கவிதைகள் வேகமாகத்தான் இருந்தன... அந்தக் கொடியவர்களுக்குத் தூக்குத்தண்டனை போதாதாம்! தலைகளைத் துண்டாக வெட்டி எடுத்து எல்லாரும் பார்க்க வைக்கணுமாம்!... எல்லாவற்றையும் படிக்கவும், தொடர்ந்து தொடர்பில் வைக்கவும் அவற்றையெல்லாம் மாவட்டக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கிறேன் 

சில (க)விதைகள் பண்ப(ா)ட்டு  மண்ணில் தூவப்பட்டிருக்கின்றன... பார்க்கலாம்... எது முளைத்து, கிளைத்து, வளர்ந்து வருகிறதென்று... காத்திருப்போம்...

தண்ணீர்விட்டோ வளர்த்தோம்? - இப்பயிரை,
கண்ணீரால் காத்தோம்... கருகத் திருவுளமோ? - பாரதி.
------------------------------------------------ 
கவிதை முகாம் ஏற்பாட்டுப் பணிகளில் தோள்கொடுத்ததோடு, சுற்றிச்சுழன்று புகைப்படங்களையும் எடுத்து வழங்கியவர் -
Ramasamysomasundarabose Bose <rsbose1336@gmail.com
---------------------------------------------- 
பின்னூட்டத்தில் நண்பர் குமார் போல வேறுசில நண்பர்களும் தனியஞ்சலில் கேட்டிருந்தார்கள் - 
“அந்தத் தப்பாட்டத்தை விடியோக் காட்சியாகத் தந்திருந்தால் நாங்களும் கேட்டிருப்போமே”  என்று
உலகை அதிரச் செய்யும் “சக்தி போர்ப்பறை தப்பாட்டம்” கேட்கவும் அவர்களது இணையம் பார்க்கவுமான இணைப்பு -http://charityforindia.org/ 
---------------------------------------

கல்லூரி மாணவர்கள்கவிதை எழுத பயிற்சி முகாம்

First Published : 16 September 2013 01:02 AM IST
கல்லூரி மாணவர்கள் சிறந்த கவிதைப் படைப்புகளை உருவாக்குவதற்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில், திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள சக்தி கலைப் பண்பாட்டு மையத்தில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர்கள் வரத ராஜமாணிக்கம், தா. முத்துநிலவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கவிதை படைப்பு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்த தா. முத்துநிலவன் பேசியது:
 உலகின் பழமையான மொழிகளில் தமிழ் மட்டுமே, தற்போது கணினியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழமையானதாக இருந்தால் மட்டும் போதாது, தொடர்ந்து செயல்பாட்டிலும் இருக்க வேண்டும்.
 கற்பனைத் திறன், தகவல் அறிவு, சொல்லாட்சி, வடிவமைப்பு ஆகிய 4 நிலைகளிலும் ஒருவர் புலமைப் பெற்றால்தான் சிறந்த கவிதைகளை உருவாக்க முடியும். இதில் கற்பனை வளம் கவிதைக்கு எந்த அளவிற்கு அவசியமோ, அதேபோல் தகவல் அறிவும் முக்கியமாக உள்ளது. 
 ஒவ்வொரு 1000 ஆண்டுகள் இடைவெளியிலும் ஒரு மகாகவி தமிழ் மொழியில் தோன்றியுள்ளனர். அதன்படி முதலில் வந்தவர் திருவள்ளுவர். 2 ஆவதாக கம்பனும், அவரைத் தொடர்ந்து பாரதியும் வந்தனர்.
 தாய்மொழி குறித்த வழிபாட்டு மனப்பான்மை தமிழர்களுக்கு மட்டுமே உள்ளது. கவிஞர்களின் படைப்பாக இருந்த கவிதை தற்போது, பொதுமக்களின் படைப்பாக மாறிவிட்டது. மனதில் தோன்றும் எண்ணங்களை கோர்வையாக எழுதுவதன் மூலம், யாரும் கவிதை எழுதிவிட முடியும் என்ற நிலை வந்துவிட்டது என்றார்.
 அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கவிதை எழுதுவதற்கான பயிற்சி அளித்தார்.
 முகாமில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் சோ. முத்துமாணிக்கம், துணைத் தலைவர் க. மணிவண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் ராசு. மணி உள்பட பலர் பேசினர். 
--நன்றி தினமணி-16-09-2013(மதுரை-திண்டுக்கல் பதிப்பு) 
----------------------------------------------------- 

12 கருத்துகள்:

  1. முத்து நிலவன் அய்யா,

    ஊருராக போய் (க)விதை தூவி வளர்க்க்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

    //வண்ணப்பூஞ் செடியழகே! வான்கோழி நடையழகே!//

    வான் கோழி நடை அழகா இருக்குமா, கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அது போல நடக்குதா :-))

    "வ"னாவுக்கு "வா"னு போட்டுட்டிங்க போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. தண்ணீர்விட்டோ வளர்த்தோம்? - இப்பயிரை,
    கண்ணீரால் காத்தோம்... கருகத் திருவுளமோ? - பாரதி.

    பண்ப(ா)ட்டு மண்ணில் தூவப்பட்ட
    (க)விதைகள் முளைத்து, கிளைத்து, வளர்ந்து பயன் தர வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  3. அய்யாவிற்கு வணக்கம், //சில (க)விதைகள் பண்ப(ா)ட்டு மண்ணில் தூவப்பட்டிருக்கின்றன... பார்க்கலாம்... எது முளைத்து, கிளைத்து, வளர்ந்து வருகிறதென்று... காத்திருப்போம்...// கண்டிப்பாக அனைத்து (க)விதைகளும் வேறுன்றி விருட்சக மரமாக வளரும். இன்றைய இளைஞர்கள் அபார சக்தி கொண்டவர்கள். இப்படியொரு வழிகாட்டுதல் கிடைத்திருக்கும் போது ’’வளரும் கவிதை’’.. கவிதைப் பயிற்சி முகாம் குழுவிற்கும் தங்களுக்கும் எனது அன்பான நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  4. மிகவும் பயனுள்ள பட்டறையை நடத்தி இளம் கவிஞர்களுக்கு வழி காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் . கவிதை எழுதத் தரப்பட்ட தலைப்புகள் அருமை.
    அந்த துன்ப நிகழ்வின்போது எழுதப்பட்ட எனது கவிதை
    அந்நியன் வருவானா?தண்டனை தருவானா?
    நேரம் கிடைக்கும்போது வாசிக்கவும்

    பதிலளிநீக்கு
  5. அய்யா வணக்கம். ஆச்சரியமாக இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றது. நம்ம ஊர்லயும் எங்கள் திருக்கோகர்ணம் கிளையில் நடத்தலாமா? வருவீர்களா? நான் ரமா தோழரிடம் கேட்கலாமா?

    பதிலளிநீக்கு
  6. வவ்வால் அய்யா வணக்கம். உங்க ஃபேவரிட் அவ்வ்வ் வ காணோமே ன்னு நினைச்சேன் கேட்டீங்களே ஒரு கேள்வி?
    என்னமோ தெரியலய்யா அங்க மயில் எதையும் காணல... வான்கோழியாத் திரிஞ்சிது... மயில் ஆடும், குயில் பாடும் என்றே சொல்லிச்சொல்லிப் பழகிட்டோம்ல...
    காக்கான்னு சொன்னாலே அது கத்தும்னும், குயில்மட்டும்தான் கூவும்னும்
    பசுவின் பாலை சிலாகித்தும் எருமைப் பாலை இகழ்ந்தும் பழகிட்டோம்ல... அதுதான் காரணம்னு நினைக்கிறேன்.
    நா அப்படி நினைக்கிறதில்ல.. கழுதை கூட அழகுதான் காக்கை தன் இனத்தைக் கூப்பிடக் கரைவதும் அழகுதான், வான்கோழிக் குஞ்சுகள் நடந்து பழகுவதும் அழகுதான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து... கவிதை வந்தது!

    பதிலளிநீக்கு
  7. கவிதை முகாம் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் வவ்வால் அய்யா, சகோ.இராஜேஸ்வரி, நண்பர் பாண்டியன், இனிய தோழர் முரளி, மற்றும் கவிஞர் சுவாதி ஆகியோர்க்கு நன்றிகள்.. கவிஞர் சுவாதி பாராட்டுக்கு நன்றி. ஆனால், அந்தக் கேள்வியை இங்குக் கேட்டிருக்கவேண்டியதில்லை. தனியஞ்சலில் அவருக்குப் பதில் சொல்வேன்.

    பதிலளிநீக்கு
  8. முதலில் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா...

    பறை அடிக்கும் படத்தைவிட வீடியோவைப் பகிர்ந்திருந்தால் நாங்களும் கேட்டு ரசித்திருப்போம்...

    படங்களுடன் பகிர்வு அருமை..

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள்;மகிழ்ச்சி தருகிறது.உங்கள் உரையையின் சுருக்கம்,கெ.வி.உரைச் சுருக்கம் இடுக.75 பேர் பங்கேற்பு மகிழ்ச்சி தருகிறது

    பதிலளிநீக்கு
  10. அன்புத்தோழர்.முத்துநிலவன் அவர்களுக்கு,இளம் தலைமுறைக்கு கவிதை குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. மாவட்டம் தோறும் இப்பணியை விரிவு படுத்துவோம். வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. தம் கருத்துகளை நேர்மையாகப் பகிர்ந்து கொண்ட
    சே.குமார்,
    தோழர் இரா.தெ.முத்து,
    மருத்துவர் உமர்பாரூக் ஆகிய நண்பர்களுக்கு நன்றி.
    தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  12. புதுகையில் இதுபோன்ற பயிற்சிகள் நடக்க வழி என்ன ?

    பதிலளிநீக்கு